பிரபலமான இடுகைகள்

ஞாயிறு, 28 ஜூன், 2015

உடன்பிறப்பே, மெட்ரோ ரயிலை கொண்டாடுவோம் !

அன்பு சகோதரா,

உங்களுக்கு ஒரு அருமையான வாய்ப்பு கிடைத்துள்ளது, பயன்படுத்திக் கொள்ளுங்கள். எங்களுக்கு கிடைக்காத வாய்ப்பு, சென்னையில் இருக்கும் உங்களைப் போன்ற உடன்பிறப்புகளுக்கான வாய்ப்பு.

தலைவர் கலைஞர் ஆட்சிக்காலத்தில் துவங்கப்பட்ட, நமது தளபதி அவர்களின் கனவுத் திட்டமான "மெட்ரோ ரயில்", நாளை தனது பயணத்தை துவங்குகிறது. துவக்கி வைப்பது யார் என்று கவனித்தீர்களா?

"மெட்ரோ ரயில்", தலைவர் காலத்தில் துவங்கிய திட்டம் என்பதால், அதை உச்சரிக்கவே விரும்பாமல், நான்காண்டுகளாக "மோனோ ரயில், மோனோ ரயில்" என்று மந்திர உச்சாடனம் போல் அர்ச்சித்துக் கொண்டிருந்த ஜெயலலிதா தான்.

"மோனோ ரயில்" உலக அளவில் தோல்வியை தழுவிய திட்டம் என்பது ஜெயலலிதாவுக்கும் தெரியும் . இருப்பினும் அதை திருப்பி திருப்பி சொன்னது, மக்கள் கவனத்தை திசை திருப்பவே. அதனால் தான் நான்காண்டுகள் கழிந்தும் மோனோ ரயில் இன்னும் டெண்டர் நிலையிலேயே இருக்கிறது.

மதுரவாயல் - துறைமுகம் விரைவு சாலை, தலைவர் ஆட்சி காலத்தில் துவங்கப்பட்டது தாங்கள் அறிந்ததே. ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தவுடன், அதை முடக்கிப் போட்டு, அந்தத் திட்டத்திற்காக அமைக்கப்பட்ட தூண்கள் இன்றும் "அவல சின்னங்களாக" நிற்கின்றன.

தமிழக சட்டமன்றம், ராணுவத்திற்கு சொந்தமான கோட்டையில் நடப்பதை, அதுவும் நெரிசலான நிலையில் நடப்பதை, மாற்றிடத் தான் புதியத் தலைமை செயலகத்தை கட்டினார் தலைவர் கலைஞர். ஆனால் தலைவருக்கு அந்த அடையாளம் கிடைத்துவிடக் கூடாது என்று தான், அதனை மருத்துவமனையாக்கி தன் வக்கிரத்தை வெளிப்படுத்தினார் ஜெயலலிதா.

இப்படி தலைவர் திட்டங்களை முடக்கிப் போட்ட ஜெயலலிதா, மெட்ரோ ரயில் திட்டத்தை தாமதப்படுத்த தன்னால் ஆன காரியங்களை செய்து பார்த்தார். ஆனால் திட்டம் ஒரு வழியாக உருபெற்று விட்டது. வேறு வழியில்லாமல் துவக்கி வைக்க இருக்கிறார் ஜெயலலிதா.

முதலமைச்சர் என்ற முறையில் இந்தத் திட்டத்தை துவக்கி வைக்கிற வாய்ப்பும், உரிமையும்  வேண்டுமானால் ஜெயலலிதாவுக்கு இருக்கலாம். ஆனால் அதற்கான தகுதியும், திறனும் தலைவர் கலைஞருக்கும், தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் மட்டுமே உண்டு.

துவக்கி வைப்பது வேண்டுமானால் ஜெயலலிதாவாக இருக்கட்டும். கொண்டாடுவது கழகமாகத் தான் இருக்க வேண்டும். அதற்கான உரிமையும், தகுதியும் கழக உடன்பிறப்புகளுக்கே உண்டு. பொதுமக்களுடன் இணைந்து கொண்டாடுவோம்.

இரு வண்ணக் கொடியேந்தி பயணிப்போம், இரு வண்ணக் கொடியேந்தி இனிப்பு வழங்குவோம். இது நம் உரிமை ! இது நம் கடமை !

அன்புடன்
நாளைய கொண்டாட்டத்தை ஆவலோடு எதிர்நோக்கும் உடன்பிறப்பு.
சிவசங்கர்.