பிரபலமான இடுகைகள்

வெள்ளி, 26 ஜூன், 2015

வாயை திறக்காதே, கேள்வி கேட்காதே !

முதலில் ட்விட்டர் முடக்கப்படும். அடுத்து முகநூல். மிச்சமிருக்கும் சமூக வலைத்தளங்கள் ஒவ்வொன்றாய் மூடப்படும். இவற்றை எல்லாம் தனித்தனியாய் ஏன் கை வைத்துக் கொண்டு என, இணையத்தின் மென்னி மொத்தமாய் முறிக்கப்படும்.

பரபரப்பு விவாதம் நடத்தும் தனியார் தொலைக்காட்சிகள் எல்லாம் " ரகுபதி ராகவா ராஜாராம்" தான் இசைக்க முடியும். டீக்கடையில் கூட விவாதம் நடத்த முடியாத நிலையில் தொலைக்காட்சியில் எங்கே ?

நாளிதழ்கள் அச்சிடுவதற்கு முன் அரசின் தணிக்கைத் துறைக்கு அனுப்பி ஒப்புதல் பெற்ற பிறகே, அச்சகங்கள் ஓட்டலாம். சின்ன துணுக்கு செய்தியாக இருந்தாலும், அரசின் மீதான லேசான விமர்சனமாகத் தெரிந்தால் கூட தடை செய்யப்படும்.

என்ன சினிமா கதை போல இருக்கிறதே என நினைப்பீர்கள். இதெல்லாம் நடப்பதற்கான ஒரு வழி இருக்கிறது. அது "எமர்ஜென்சி".

புரியும் படி சொன்னால், "நெருக்கடி நிலை".  அது தான் "மிசா".

இணையமும், தனியார் தொலைக்காட்சிகளும் இல்லாத காலம் அது. அப்போது தான் அன்றைய பிரதமர் இந்திராகாந்தி இந்த எமர்ஜென்சியை அமல்படுத்தினார். அப்போது பத்திரிக்கைகள் மீது, மேலே குறிப்பிட்ட தணிக்கை முறை பாய்ந்தது.

அந்த நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டு நாற்பது ஆண்டுகள் ஆகின்றன. அது ஜனநாயகத்தின் மீது ஏவப்பட்ட கொடூரமான தாக்குதலாக அமைந்தது. எதிர்கட்சித் தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். என்ன வழக்கு என்று யாரும் கேள்வி கேட்க இயலாத நிலை.

அந்த வடு இன்னும் மறையவில்லை.  இந்த நேரத்தில் மீண்டும் அந்த எமர்ஜென்சி வருவதற்கான சாத்தியக் கூறு இருப்பதாக ஒரு தலைவர் பேசி இருக்கிறார். அதுவும் மூத்தத் தலைவர். அதுவும் தேசியக் கட்சியின் தலைவர். அதுவும் ஆளுகின்ற கட்சியின் தலைவர். அந்தத் தலைவர் தான் அத்வானி .

அத்வானியின் வார்த்தைகள் மீண்டும் அந்த ரணத்தைக் கிளறி விட்டிருக்கிறது. அப்படி அந்த எமர்ஜென்சி மீண்டும் வந்தால் ?. துவக்கத்திலே சொன்னது போல் கருத்து சுதந்திரத்தின் குரல் வளை நெறிக்கப்படும்.

இணையத்தில் எழுதுவோர் தான் முதலில் பாதிக்கப்படுவார்கள். அதிலும் கலைஞரை விமர்சிக்கும் அதிஜனநாயகவாதிகள் தான் பாதிக்கப்படுவார்கள்.

அப்படி எமர்ஜென்சி வந்தால், யார் முதலில் எதிர்த்து குரல் கொடுப்பார்கள்? அன்றைக்கு எதிர்த்து குரல் கொடுத்த அதே தலைவர் தான், இன்றைக்கும் குரல் கொடுப்பார். அன்றைக்கு எதிர்த்து நின்ற அதே இயக்கம் தான், இன்றைக்கும் எதிர்த்து நிற்கும். அந்தத் தலைவர், கலைஞர். அந்த இயக்கம், திமுக.

எமர்ஜென்சியால் துரத்தப்பட்ட இந்தியத் தலைவர்களுக்கு தஞ்சம் அளித்த மாநிலம், திமுக ஆண்ட தமிழகம். எமர்ஜென்சியால் இந்தியாவிலேயே அதிகம் பாதிக்கப்பட்ட இயக்கம் திமுக. எமர்ஜென்சியை எதிர்த்ததால், திமுக ஆட்சி கலைக்கப்பட்டது. திமுக தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.

திமுக தலைவர்கள் மீது சிறைச்சாலையில் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. ஆற்காடு வீராசாமி அவர்களின் ஒரு காது கேட்கும் திறனை இழந்தது. முரசொலி மாறனின் இதயம் பாதிக்கப்பட்டது.

தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டது. குறுக்கே விழுந்து அடியைத் தாங்கிய சிட்டிபாபு மாண்டே போனார். தளபதி அவர்களின் உடலில் இன்னும் அடையாளங்கள் மிச்சம் இருக்கின்றன. ஆனாலும் கடைசி வரை திமுக எதிர்த்தே நின்றது. நாளை வந்தாலும் எதிர்த்தே நிற்கும்.

எமர்ஜென்சிக்கு பிறகு, இந்திராவுக்கு மக்கள் பொதுத் தேர்தலில் பாடம் புகட்டினர். எந்த இந்திரா?, இந்திரா தான் இந்தியா, இந்தியா தான் இந்திரா எனப் புகழப்பட்ட இந்திரா.

தமிழகத்தில் ஜெயலலிதாவின் பதவியேற்பும், அரசு நடைபெறும் முறையும் ஒரு வகையில் மினி எமர்ஜென்சி தான். மத்தியில் நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை கொண்டு வர கையாளப்படும் முறையும் எமர்ஜென்சியை தான் நினைவுப் படுத்துகிறது.

# இந்திராவுக்கே அந்த நிலை என்றால், இவர்கள் எல்லாம் எம்மாத்திரம் ?