பிரபலமான இடுகைகள்

வியாழன், 15 அக்டோபர், 2015

விடியல் மீட்பு பயணம் 1

பேரிகை முழங்கியது, சங்கநாதம் ஒலித்தது, சோழப் படைகள் அணிவகுத்தன.  இப்படி சரித்திர நாவல்களை படிக்கும் போது லேசான சந்தேகம் எழும், போர்களத்தில் இசைக்கருவிகளுக்கு என்ன வேலை என.

அந்த சந்தேகம் நேற்று தீர்ந்தது, தளபதி அவர்களின் 'விடியல் மீட்பு
வாகனத்தில்' ஏறியவுடன்.

தளபதி அவர்கள் முன்னிருக்கையில் அமர, பின்னிருக்கைகளில் மாநில இளைஞர் அணி துணை செயலாளர் மகேஷ் பொய்யாமொழி, பெரம்பலூர் மா.செ குன்னம் இராஜேந்திரன், மாநில இளைஞர் அணி துணை செயலாளர் சுபா.சந்திரசேகர், முன்னாள் அமைச்சர்கள் செல்வகணபதி, அண்ணன் கே.என்.நேரு ஆகியோருடன் நானும்.

ஓட்டுனர் குமார் வாகனத்தை நகர்த்தும் முன்னே இசைக் கருவியை ஒலிக்க செய்தார். இசை துவங்கியது. உடல் லேசாக அதிர்வதை உணர்ந்தேன். பாடல் துவங்கியது.

"முடியட்டும்,  விடியட்டும்" பாடல். தளபதி அவர்களை வாழ்த்தி வழியனுப்ப குழுமியிருந்த கழகத் தோழர்கள் முகங்களை பார்த்தேன். பாடலின் தாக்கம் தெரிந்தது. அவர்களும் உணர்ச்சியோடு கையசைத்துக் கொண்டிருந்தனர்.

பாடலில் துந்துபி ஒலிக்கும் இசை. உடலை முறுக்கேற்றியது இசை. பாடலுக்கான வீடியோக் காட்சி ஏற்கனவே பார்த்திருந்ததால் அது மனக்கண்ணில் விரிந்தது. சில் அவுட் காட்சியில் பின்புற வெளிச்சத்தில் நிழலாக இரண்டு, மூன்று குதிரைகள் விரையும். அதன் மீது அமர்ந்திருப்பவர் கையில் கருப்பு, சிவப்பு கழகக் கொடி அலைபாயும்.

வாகனம் அண்ணன் ராசா அலுவலகத்தில் இருந்து வெளியே வந்து சாலையில் ஏறியது. இருமருங்கிலும் கழகக் கொடிகள் படபடத்தன. என் காதுகளில் துந்துபி ஒலித்தது போல் இருந்தது. பாடல் "இரவு முடியட்டும், விடியல் ஒன்று விடியட்டும்" ஒலித்தது.

வாகனம் பாலக்கரையை தாண்டியது. தளபதி வருகையையொட்டி அதிமுகவினர் பெரம்பலூர் நகரை ஃபிளக்ஸ் பேனர்களால் நிரப்பி இருந்தனர். எங்கு திரும்பினும் பெரிய, பெரிய அம்மா முகங்கள்.

ஜெ முகத்தை பாக்கும் போது அடுத்த வரி ஒலித்தது,"தீமை முடியட்டும், நல்ல நன்மை நாளை விடியட்டும்". இப்போது நமக்கு நாமே பேனரில் தளபதி முகம் கண்ணில் பட்டது.

வாகனம் நகர, நகர குதிரையில் பயணிப்பதை போன்ற உணர்வை பாடலும், இசையும் கொடுத்தன.

(பயணம் தொடரும்...)