பிரபலமான இடுகைகள்

திங்கள், 19 அக்டோபர், 2015

விடியல் மீட்பு பயணம் 4

தளபதி பொறுமையாக கேட்கிறார் என்ற உடன் பெண்கள் விலாவாரியாக அரசின் தவறுகளை, தங்கள் தேவைகளை எடுத்துக் கூற ஆரம்பித்தனர். சிலர் பேருரையே ஆற்றினர்.

தளபதி நடைக்கு ஈடு கொடுத்து ஓடி வந்ததில், வியர்வை மழையில் நனைந்து, சட்டை தொப்பலாக ஈரம். பரிதாபப்பட்டு, மண்டப முதலாளி அறையில் மின்விசிறிக்கு கீழே இருக்கை கொடுத்தனர் எனக்கு.

மகளிர் பிரச்சினையில் முதலிடம் டாஸ்மாக் தான்.  அடுத்து ரேஷன் கடைப் பிரச்சினை, சுய உதவிக்குழுவுக்கு அரசு உதவி இல்லை என அரசு மீது குற்றப் பத்திரிக்கை வாசித்தார்கள் பெண்கள்.

குறை கேட்டு முடித்து தளபதி உரையாற்ற ஆரம்பித்தார். உணர்வுப்பூர்வமான, யதார்த்தமானப் பேச்சு. வந்திருந்த தாய்குலத்தின் புண்பட்ட மனதிற்கு ஆறுதல் அளிக்கும் பேச்சு.

தலைவர் கலைஞர் தலைமையிலான ஆட்சியில் முதல் நடவடிக்கையே டாஸ்மாக் கடைகளை மூடுவது தான் என உத்தரவாதம் அளித்தார். கரவொலியால்  மண்டபம் அதிர்ந்தது.

மகளிர் உரையாடல் முடித்து கிளம்பினார் தளபதி. வடக்கு மாதவி சாலையில் இருந்து, பைபாஸ் வழியாக திருச்சி-சென்னை நெடுஞ்சாலையை அடைந்தது தளபதி கான்வாய்.

நெடுஞ்சாலையில் மற்ற பயணிகள் வாகனங்களுக்கு இடையே தளபதி வாகனம் பயணித்தது. அந்த வாகனங்களில் இருந்தவர்கள் தளபதி அவர்களை அருகில் பார்த்ததில் வியந்து கையசைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.

அடுத்த நிறுத்தம் வாலிகண்டபுரம். கரும்பு, பருத்தி, சோளம், வெங்காய விவசாயிகளுடன் உரையாடல் நிகழ்ச்சி. இயற்கை சூழலில், சோளக்காட்டிற்கும், நெல் வயலுக்கும்  முன்பாக இருந்த தென்னந்தோப்பில் நிகழ்ச்சி. அங்கு வந்த தளபதி வயலில் இருந்த ரைஸ்மில்லில் நுழைந்தார். ரைஸ்மில் தொழிலுக்கு இப்போது இருக்கும் பிரச்சினையை கேட்டறிந்தார்.

தென்னந்தோப்பிற்கு வந்தார். அங்கு அமர்ந்திருந்த விவசாயிகளுக்கு அருகில் சென்று மனுக்களை பெற்றுக் கொண்டார். அடுத்து அவர்களது கருத்துகளை கேட்டார். விவசாயிகள் மின்சாரப் பிரச்சினையையும், விளை பொருட்களுக்கு சரியான விலை இல்லாததையும் எடுத்துக் கூறினார்கள்.

ஒரு இஸ்லாமியப் பெண்ணும் விவசாயப் பிரச்சினை குறித்து கருத்து சொன்னார். தளபதி அவர்கள் கழக ஆட்சியில் இலவச மின்சாரம் வழங்கியதையும், விவசாய கடனை தள்ளுபடி செய்ததையும் விளக்கி, எதிர்காலத்தில் கழக ஆட்சியில் பிரச்சினைகள் தீர்க்கப்படும் என்றார். பயணம் துவங்கியது.

அடுத்து லப்பைகுடிக்காடு பேரூராட்சி. முழுதும் இஸ்லாமிய சமுதாயத்தினர் வசிக்கும் ஊர். இரண்டு ஜமாத்கள் உண்டு, கிழக்கு ஜமாத், மேற்கு ஜமாத். முதலில் இருக்கும் மேற்கு ஜமாத் நிர்வாகிகளை சந்தித்து விட்டு, அடுத்து கிழக்கு ஜமாத்தில் பெரம்பலூர், அரியலூர் மாவட்டத்தில் இருக்கிற பல்வேறு ஜமாத் நிர்வாகிகளை சந்திக்க ஏற்பாடாகி இருந்தது.

லப்பைகுடிகாடு துவக்கத்தில் பாலத்தின் அருகே நின்று கழகத் தோழர்கள் வரவேற்பளித்தனர். சால்வையை பெறறுக் கொண்டார்.  அடுத்து மேற்கு பள்ளிவாசல் அருகே இறங்க வேண்டும். 100 மீட்டர் இருக்கும். நாங்கள் அந்த பள்ளிவாசலைப் பார்த்துக் கொண்டு இருந்தோம். திடீரென வாகனம் நின்றது. கண்ணிமைப்பதற்குள் தளபதி கீழே இறங்கி விட்டார்.

(பயணம் தொடரும் 4...)