பிரபலமான இடுகைகள்

புதன், 18 செப்டம்பர், 2013

சார், சல்யூட் !

அவர் எங்கள் மாவட்டத்தில் ஒரு அரசு துறையின் தலைமை அதிகாரி. தற்போது மாறுதல் வந்திருக்கிறது. எதேச்சையாக ஒரு தோழர் அவரை சந்தித்திருக்கிறார். உங்கள் பணியை எங்கள் எம்.எல்.ஏ பாராட்டினார் என சொல்லியிருக்கிறார்.

அவர் "நானும் இந்த மாவட்டத்திற்கு வந்ததிலிருந்து அவரை சந்திக்க வேண்டும் என நினைத்தேன், ஆனால் சந்தர்ப்பம் வாய்க்கவில்லை." என்றிருக்கிறார். " தொலைபேசியில் பேசுகிறீர்களா ?" எனக் கழகத் தோழர் கேட்டிருக்கிறார். அவர் சரி என எனக்கு அழைப்பு.

" சார், எனக்கு மாறுதல் வந்திருக்கிறது. உங்களைப் பற்றி உங்கள் நண்பர் ஒருவர் கூறினார். சந்திக்க நினைத்தேன் , வாய்ப்பு கிடைக்கவில்லை. அடுத்த முறை வாய்ப்பு கிடைக்கும் போது சந்திக்கிறேன்"

" நான் உங்கள் பணி குறித்து பாராட்ட வேண்டும் என நினைத்திருந்தேன். இப்போது தான் வாய்ப்பு கிடைத்தது. மகிழ்ச்சி. உங்கள் சிறப்பான பணிக்கு வாழ்த்துக்கள்" என அவரது ஒரு குறிப்பிட்ட பணியை சொல்லி வாழ்த்தினேன்.

அவர் "சார், அந்த வாழ்த்து எனக்கு உரியது அல்ல. மாறுதலாகிப் போன மாவட்ட ஆட்சியர் சொன்ன பணியை செய்தேன்" என்றார். " ஒரு பணியை செய்ய சொல்லி மாவட்ட ஆட்சியர் சொல்லியிருந்தாலும், அதை தட்டிக் கழிக்காமல், சுயலாபம் பார்க்காமல் செய்த உங்கள் பணிக்கு எனது பாராட்டுக்கள்" என்றேன்.

அடுத்து அவர் சொன்னார்...

"சார், உங்கள் மாவட்டத்து மனித வளத்தை உங்கள் மாவட்டத்திற்கே பயன்படுவது போல் செய்தால் தான் உங்கள் மாவட்டம் முன்னேறும். அனைவரும் சென்னை, திருப்பூர், வெளிநாடு என வேலை தேடி செல்வதை விடுத்து உள்ளூரில் உழைத்தால், இந்த மாவட்டம் முன்னேறும்.

அவர்களை உள்ளூர் விவசாயத்தில் ஈடுபடுத்தி தான் அந்த நிலையை உண்டாக்க முடியும்" என சொல்லி ஒரு திட்டத்தை சொன்னார். இது தான் நீண்ட நாட்களாக நானும் யோசித்து வரும் ஒரு விஷயம். சரியாக அதையே தொட்டார்.

இன்னும் சொன்னது தான் முக்கியம். "இந்தத் திட்டத்தை இன்றைய ஆளுங்கட்சியின் ஒரு வி,ஐ.பி இடமும் சொல்லியிருக்கிறேன். அவர்கள் செய்தாலும் சரி, நாளை உங்கள் கட்சி ஆட்சி வந்து செய்தாலும் சரி. யார் மூலமாவது இந்த மாவட்டம் முன்னேறினால் சரி."

இதை நான் எதிர்பார்க்கவில்லை. ஏனெனில் அந்த பதவி அதிகாரம் வாய்ந்த, பணம் புழங்குகிற பதவி. பெரும்பாலும் வேறு சிந்தனைக்கு நேரம் இருக்காது. அடுத்து மாறுதலாகி செல்லும் நேரத்தில் தனக்கு தொடர்பில்லாத ஒரு மாவட்டத்தின் மீது உணமையான அக்கறை.

( வெளிப்படையாக அவர் பெயரை சொன்னால் அவருக்கு பாதிப்பு வரும்)

# சார், சல்யூட் !