பிரபலமான இடுகைகள்

திங்கள், 6 அக்டோபர், 2014

விமான நிலையத்தில் கப்பல் ; மலேசியப்பயணம்‬-1

சிங்கப்பூர் விமான நிலையத்தில் இறங்கியவுடன் வரவேற்பதற்காக ‘அலன்’ அவர்கள் மலேசியாவிலிருந்து வந்து காத்திருந்தார். மகிழ்ச்சியாக கைக்குலுக்கி வரவேற்றார்.

         

“கப்பல் பயணம் சுகமாயிருந்ததா?”அலன் கேட்டார். ஒரு நிமிடம் எனக்கு தலையை லேசாக சுற்றியது. இவருக்கு என்ன ஆயிற்று?, விமான நிலையத்தில் வந்து நின்று கொண்டு இந்தக் கேள்வியை கேட்கிறார்.

“பயணம் சுகம் தான். கப்பல் சீட்கள் தான் சற்று குறுகல், வசதியாயில்லை” செல்வம் பதிலளித்தார். ‘கிர்’ரடித்தது. நான் திரும்பி ஒரு முறை அறிவிப்புப் பலகையை பார்த்தேன். சிங்கப்பூர் விமான நிலையம் தான்.

இப்போது செல்வம் எங்களை பார்த்து சிரித்தார். “என்ன குழப்பமாயிருக்கா? நானும் மலேசியா முதல்முறை வந்த போது சற்று தடுமாறிப் போனேன். மலேசிய தமிழர்கள் விமானத்தை கப்பல் என்றே குறிப்பிடுவார்கள்.”

சரியாதான் இருக்கோம். கிர் கொஞ்சம் நின்றது. “வேறு என்ன வார்த்தைலாம் இப்படி இருக்கு. கொஞ்சம் சொல்லிடுங்க” என்றேன். “பேசும் போது கவனிங்க. நிறைய வரும்” என்றார் செல்வம்.

“கொஞ்சம் காத்திருங்க. ‘காடி’ எடுத்துகிட்டு வந்துடுறேன்.” சொல்லி சென்றார் அலன். காடி, நாமும் உபயோகப்படுத்தும் வார்த்தை தானே. வாகனம் எடுத்து வரப்போகிறார் என்பது தெரிந்தது. பழைய கார் போலும், அதான் காடி.

ஜம்மென்று லேட்டஸ் பென்ஸ் கார் வந்து நின்றது. கண்ணாடியை இறக்கி அலன் அழைத்தார். ஏறினோம். பேச்சு வழக்கில் தான் புரிந்தது, நிறைய வித்தியாசமான வார்த்தைகளும், தூய தமிழ் வார்த்தைகளும் மலேசியத் தமிழர்களிடத்தில் புழங்குவது.

ஆறு வழிச்சாலைகள். பரந்து விரிந்த சாலைகளில் பாகம் ஒழுங்கு (lane discipline) மிகச் சரியாகக் கடைபிடிக்கப்படுகிறது. நம் சாலைகளில் முடியாத வேகம், ஆனால் ஒரே சீரான வேகத்தில் வாகனங்கள் செலுத்தப்படுகின்றன.

பாதை பிரியுமிடத்தில், கொஞ்சம் தவறினாலும் அடுத்த பிரிவில் போய் ஒரு சுற்று வந்து தான் பாதையை பிடிக்க முடியும். நம்ம ஊர் மாதிரி கொஞ்சம் ரிவர்ஸ் போகலாம், இல்ல கொஞ்சம் ஒன்வே போகலாம் கதை இல்லை.

கார் வேகம் பிடித்து விரைந்தது. மலேசிய பண்பலையில் இளையராஜா காலை பொழுதை இனிமையாக்கிக் கொண்டிருந்தார். இடையிடையே மலேசிய நாட்டுச் செய்திகள்.

இந்தியாவிற்கும் சிங்கப்பூர், மலேசியாவிற்கும் 2.30 மணி நேர வித்தியாசம். அப்போது காலை மணி 7.30. “பசியாறலாமா?” என்றார் அலன். “ஒரு மணி நேரம் தானே. மலேசியா போயிடலாம். அங்க பசியாறிக்கலாம்” என்றார் செல்வம்.

பசியாறுவது, நம்ம தமிழில் சாப்பிடுவது. அந்தத் தமிழே பசியாற்றியது.

# நெஞ்சை அள்ளும் மலேசியத் தமிழ் !