பிரபலமான இடுகைகள்

ஞாயிறு, 19 அக்டோபர், 2014

மக்களின் முதல்வரை வரவேற்கிறேன் !

மாண்புமிகு மக்களின் முதல்வர் அவர்களை வருக, வருக என வரவேற்கிறேன்...எப்படி பார்த்தாலும் நம் முதல்வராக இருந்தவர் அல்லவா, 153 எம்.எல்.ஏக்கள், 37 எம்.பிக்கள் கொண்ட, கோடிக்கணக்கான உறுப்பினர்களை கொண்ட அகில இந்தியக் கட்சியின் தலைவர் அல்லவா, அதனால் வரவேற்கலாம்.

தமிழகத்தை ஆளுகின்ற முதலமைச்சர் ஒ.பி.எஸ் தலைமையிலான அமைச்சரவை பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறைக்கே சென்று தாள் பணிந்து, தண்டனிட்டு வரவேற்கும் போது சாமானியனான நானும் வரவேற்கலாம்.

தமிழகத்தை அறிவுப்படுத்துகின்ற பத்திரிக்கைகளான, நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்ட தினத்தந்தி, தினமலர், தினமணி என இன்னும் பல பத்திரிக்கைகள் பூங்கொத்தோடு வரிசையில் நிற்கும் போது நானும் வரவேற்கலாம்.

ஊழலுக்கு எதிர்ப்பான, நேர்மைக்கு பாடுபடுகின்ற மக்களின் ஆயுதமான ஊடக ஜாம்பவான்கள் தந்தி டீ,வி-யும், புதிய தலைமுறை தொலைக்காட்சியுமே நேரலை ஒளிபரப்பி, மண்டியிட்டு வரவேற்பு அளிக்கும் போது நானும் வரவேற்கலாம்.

தமிழகத்தை நல்வழிப்படுத்தி திசைகாட்டியாக இருக்கின்ற திரையுலகமே பூச்சொரிந்து வரவேற்கும் போது, அந்நியன்களும், சிங்கங்களும் உண்ணாவிரதம் இருந்து வரவேற்க்கும் போது, நான் பச்சைக் கொடி பிடித்து வரவேற்கலாம்.

தமிழகத்தின் அறிவுஜீவிக்களான, இந்தியாவுக்கே வழிக்காட்டுகின்ற சோ, ஆவடி குமார் ஆகியோரே புகழ்மாலை பாடி சிவப்புக் கம்பளம் விரிக்கும் போது, நான் ரத்தினக் கம்பளம் விரித்து வரவேற்கலாம்.

மக்களுக்காகவே பாடுபடுகின்ற, மக்களுக்காகவே குரல் கொடுக்கின்ற, மக்கள் தலைவர்கள் சரத்குமார், பண்ருட்டி வேல்முருகன், செ.கு.தமிழரசன், மதுரை ஆதினம் போன்றோர் ஆரவாரித்து ஆதரிக்கும் போது, நான் கைத்தட்டி வரவேற்கலாம்.

நீதிமன்றத்தால் ஏ.ஒன் அக்யூஸ்ட் என்று குற்றம் சாட்டப்பட்டிருக்கலாம், கடும் கண்டிஷன்களோடு ஜாமீன் கொடுக்கப்பட்டிருக்கலாம், மீண்டும் விசாரணையை எதிர் நோக்கலாம், மீண்டும் தண்டனை உறுதிப்படுத்தப்படலாம். ஆனாலும் வரவேற்கிறேன்.

ஆயிரம் இருந்தாலும், முதல்வராக இருக்கும் போதே குற்றவாளி என குற்றம்சாட்டப்பட்டு கைதானாலும், அது குறித்து கவலைக் கொள்ளாமல், நீதித் துறையையே மிரள வைத்து, பரப்பன அக்ரஹாரத்தில் இருந்து போயஸ் அக்ரஹாரத்திற்கு வருகை தரும் மக்களின் முதல்வரே...

# நானும் வரவேற்கிறேன் !