பிரபலமான இடுகைகள்

வெள்ளி, 17 ஏப்ரல், 2015

செண்டை மேளம், பரிவட்டம், அதிர்ந்தது ஏற்காடு

வரும் வழியில் பார்த்த ஒரு விஷயத்தை சொல்ல விட்டு விட்டேன். ஒரே கண்டனக் கணை. ஆமாம், ஒருத்தர் இல்ல பத்து பேர்.

ஏற்காடு உள்ளே நுழையும் போது, ஆங்காங்கே சில கட் அவுட்கள் இருந்தன. அரைத் தூக்கத்தில் சரியாக கவனிக்கவில்லை.

கடைசி கட் அவுட் நம்ம ஸ்ரீதர் மாதிரி இருந்தது. அட, அண்ணனுக்கு கட் அவுட்டா , கனவு போல என விட்டுவிட்டேன். போய் இறங்குன அப்புறம் தான் தெரியுது, பத்து கட் அவுட் இருந்திருக்கு.

சத்யா, வாண்டஸ்.செந்தில், காண்டீபன் என நண்பர்களுக்கு வரவேற்பு கட் அவுட். ராம்ஸ் கொஞ்சம் அரசியல்வாதி போல, இப்படி கட் அவுட் வச்சா, அப்படித் தானே தோணும்.

வெளியே இருந்து மெல்லிய ஓசையாகத் துவங்கி அதிர ஆரம்பித்தது. கேரள இசை. வெளியே வந்தோம். செண்டை மேளக் குழுவினர்.

    

நாட்டியமாக அசைந்து ஆடி அதிரடித்தனர் மேளத்தையும், ஜால்ராவையும். வந்தோர் அனைவரும் வெளியே அழைக்கப்பட்டோம். எல்லோருக்கும் பரிவட்டம் கட்டப்பட்டது

கோவில்களிலும், சினிமாக்களிலும் பார்த்த பரிவட்டத்தை, நேரில் தங்களுக்கு அணிவிக்கப் பட்டது பலருக்கும் மகிழ்ச்சி. வெளிநாடுகளிலும், நகரத்திலும் பணிபுரியும் நண்பர்கள் பலர் இதை பார்த்திருக்கவே வாய்ப்பில்லை.

செண்டை மேளம் முழங்கிக் கொண்டிருந்தது. உள்ளே மற்றொரு அரங்கில் இருந்து வெண்புகையாய் கசிந்தது. மேகம் தான் கீழிறங்கியதோ என்று சந்தேகம்.

உள்ளே நுழைந்தோம். புகை வந்த மர்மம் புரிந்தது. பனிக்கட்டியில் இருந்து புகை. பனிக்கட்டி என்றால் சிறுகட்டிகள் அல்ல, சுவர் போல.

ஐஸ் பார்களாலேயே அமைக்கப்பட்ட மேஜை, ஜில்லென்று . அதன் மேல் வரிசையாக கண்ணாடிக் குவளைகள். அமைப்பு ஸ்டார் ஹோட்டலை மிஞ்சியது.

அடுத்து கண்ணில் பட்டவை தலை சுற்ற வைத்தன. எதை எடுப்பது, எதை சுவைப்பது. பொன்னிறமாக சிக்கன் வறுவல். காரமாக காடை ஃபிரை. மொறு மொறுப்பாக மீன் வருவல்.

பிரியாணி மணக்க ஆரம்பித்தது. பந்தி துவங்கியது. சோறு, மட்டன் குழம்பு எனத் தொடங்கி மோரில் முடிக்கும் போதே அசதியானது.

கண்ணை இழுத்தது, உண்ட மயக்கம். ஓய்வு முடிந்து மீண்டும் மாலை நிகழ்ச்சிகள்.

பெங்களூரிலிருந்து ஈவெண்ட் மேனேஜ்மெண்ட் குழு வந்து இறங்கியது.
(தொடரும்)
(2009-ல் நடந்த அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் சந்திப்பு. ஏற்காடு. பாகம் - 3)