பிரபலமான இடுகைகள்

சனி, 25 ஆகஸ்ட், 2012

செந்துறை இளைஞர்கள் வழிகாட்டுகிறார்கள்...... பாராட்டுக்கள் !


Nhrm sendurai என்ற அமைப்பு, அரியலூர் மாவட்டம், செந்துறை நகரில் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பை சேர்ந்த இளைஞர்கள், பள்ளி கரும்பலகைகளுக்கு வண்ணம் பூசி தருவது, வழிகாட்டும் பலகைகள் அமைப்பது போன்ற பணிகளை செய்து வருகின்றனர். பொங்கல் போன்ற விழாக்களை ஊர்மக்கள் பங்கேற்க சிறப்பாக கொண்டாடினர். 

தற்போது அவர்கள் செய்து வருகின்ற பணி மிகுந்த பாராட்டுக்குரியது. செந்துறை முக்கிய சாலையின் இருபுறமும் சேர்ந்துள்ள மணலை அகற்றி சுத்தம் செய்து வருகின்றனர். இந்த மணல் சறுக்கி விடுவதால் இருசக்கர வாகனங்கள் விபத்துக்குள்ளாகின்றன. இதனை தடுக்கின்ற அக்கறையோடு இந்த பணியை செய்து வருகின்றனர்.

 இன்றைய இளைஞர்கள் சமூக அக்கறை இல்லாமல், தங்கள் முன்னேற்றம் குறித்து மாத்திரமே அக்கறை கொண்டுளனர், அரசியல் கட்சிகளில் சேர்ந்து சுற்றுகின்றனர், இதர பழக்கங்களுக்கு ஆளாகி வாழ்க்கையை வீணாக்குகின்றனர்  போன்ற பிம்பத்தை இந்த இளைஞர்கள் தகர்த்துள்ளனர் . அதற்காகவே பாராட்ட வேண்டும்.
அரசாங்கம் செய்ய வேண்டிய வேலையை இவர்கள் ஏன் செய்ய வேண்டும் ? என்ற கேள்வியை சில நண்பர்கள் எழுப்பக்கூடும். செந்துறை ஒரு பெரிய ஊராட்சி, சுற்றியுள்ள கிராமத்து மக்கள் தாலுக்கா அலுவலகத்திற்கு, ஒன்றிய அலுவலகத்திற்கு, வீட்டுக்கு தேவையானவற்றை வாங்க என இங்கு தான் வர வேண்டும்.எனவே ஊர் அசுத்தமாக அதிக வாய்ப்புகள். ஆனால் இதை சுத்தம் செய்ய ஊராட்சி நிர்வாகத்திற்கு , நிதி நிர்வாக வசதி இருக்காது. எனவே அரசை தான் எதற்கும் எதிர்பார்க்கவேண்டும் என்ற பொதுவான எண்ணத்தை உடைத்து எறிந்துள்ளனர்.

அடுத்து இந்தகைய வேலையை செய்யும் போது அடுத்தவர்கள் செய்கிற கேலி இருக்கிறதே, அது பெரிய வலி. இந்த வேலையை செய்ய அக்கறை இல்லாதவர்கள், அடுத்தவர்கள் செய்தால், இவர் நாட்டை திருத்த போறாரு என்று கிண்டல் செய்வார்கள், இன்னும் சொல்லப் போனால் வீட்டிலேயே எதிர்ப்பு கிளம்பும். இதை எல்லாம் மீறி இவர்கள் பணியாற்றுகிறார்கள். ( கல்லூரி காலத்தில் நாட்டு நலப் பணி இயக்கத்தில் தீவிரப் பணியாற்றிய போது , சக மாணவர்களால் கிண்டல் செய்யப் பட்ட சொந்த அனுபவம் உண்டு ).

இந்தப் பணி இந்த இளைஞர்களுக்கு பெரிய அனுபவத்தை தரும். சகிப்புத் தன்மை வளரும். தலைமைப் பண்பு மேம்படும். உதவும் மனப்பான்மை பெருகும். இதெல்லாம் கண்ணுக்கு தெரியாத பலன்கள்.
அரியலூர் மாவட்டம் என்றால் தீவிரவாத்தின் பால் நாட்டம் கொண்ட இளைஞர்கள் நிறைந்தது, சாதிக்கட்சிகளில் இணைந்து வன்முறையில் ஈடுபடுவார்கள் என்று காவல் துறையினர் ஏற்ப்படுத்தி வைத்திருக்கிற மாயை ,இந்த இளைஞர்களின் தொடர் பணியால் விலகும்.

எனவே இவர்களை வாழ்த்துகிறேன், பாராட்டுகிறேன்.

இவர்களை வாழ்த்துவதன் மூலம் மற்ற ஊர் தோழர்களுக்கும் இந்த எண்ணம் ஏற்ப்பட வேண்டுமென விரும்புகிறேன்.

( அரசியல் நோக்கத்தோடு பாராட்டுகிறேன், என சில நண்பர்கள் என எண்ணலாம். பொறுமை காக்க... நான் இவர்களை தொடர்ந்து பாராட்டி உற்சாகப் படுத்தி வருகிறேன், அவர்களும் எனக்கு சில ஆலோசனைகளை அளித்து வருகிறார்கள். இப்போது வெளிப்படையாக பாராட்டுவதன் நோக்கம் , தொடர்ந்து இவர்கள் பணியாற்ற வேண்டும். இதைப் பார்த்து மற்றவர்களுக்கு இந்த எண்ணம் வரவேண்டும் என்பதுதான். அதை தாண்டி மக்கள் பிரதிநிதி என்ற முறையில் எனது கடமை .)

#  தொடரட்டும் உங்கள் தொண்டு, மற்றவர்களுக்கு பாடமாக  !!!