பிரபலமான இடுகைகள்

திங்கள், 3 பிப்ரவரி, 2014

இப்படி செய்தவதற்கு எனக்கு உரிமையுண்டு....

ஆளுநர் உரையின் ஏட்டினை கிழித்தெறிந்து இருப்பது, அவையில் இது காறும் கடைப்பிடித்து வரும் கண்ணியத்தையும், ஒழுக்கத்தையும், உரிமைகளையும் இழிவு படுத்தும் வகையில் செய்யப்படும் ஒரு செயலாகும்.

இது போன்ற செயல்கள் தடுக்கப்படா விட்டால், ஜனநாயகத்தின் முக்கிய தூணாக விளங்கும் சட்டமன்றத்தின் தரம் பொதுமக்கள் மத்தியில் தாழ்ந்துவிடும். இது போன்ற செயல்கள் தடுக்கப்பட வேண்டியதும், தண்டிக்கப்பட வேண்டியதும் ஆகும்.

எனவே... பேரவையின் அலுவல்களை நடைபெற விடாமல் இடைமறித்து, பேரவை விதிக்கு மாறாக, அவைக்கு இழுக்கு விளைவிக்கும் வகையில், சட்டமன்ற உறுப்பினர் என்ற தனது உரிமையை தவறான முறையில் பயன்படுத்தி, இன்று பேரவையில் குழப்பத்தை விளைவிக்கும் வகையில், அவை விதிக்கு மாறாக நடந்து கொண்ட சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.சிவசங்கர் அவர்களை சட்டப்பேரவை விதி 121 உள்விதி 2-ன்கீழ் இந்த சட்டமன்றக் கூட்டத் தொடர் முழுவதும் பேரவைப் பணியிலிருந்து தற்காலிக நீக்கம் செய்யப்பட வேண்டும் என்ற தீர்மானத்தை முன்மொழிகிறேன்.

- ஓ.பன்னீர்செல்வம், அவை முன்னவர், தமிழக நிதியமைச்சர்.

டொப், டொப், டொப்.......

# கண்ணியம், ஒழுக்கம், ஜனநாயகம், தரம், இழுக்கு, விதி. ம், ஒரு க்ரியா தமிழ் அகராதி வாங்கனும்.
 
--------------------------------------------------------------
 
1957, நவம்பர் 26ஆம் தேதி அரசமைப்புச் சட்ட எரிப்புக் கிளர்ச்சியில் ஈடுபட்டுக் கைது ஆனவர்கள் நீதிமன்றத்தில் கூறவேண்டிய பட்டய வாக்குமூலம் இது 23.11.1957 விடுதலையில் வெளிவந்தது:

நான் ஜாதி ஒழிப்புக் கிளர்ச்சிக் காரன். இந்திய அரசமைப்புச் சட்டத்தில் ஜாதிக்கும், அதை உண்டாக்கிய மதத் துக்கும் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருக் கிறது. அரசமைப்புச் சட்டம் தமிழர் நலனுக்காக வகுக்கப்படவும் இல்லை; அச்சட்டத்தைத் திருத்...தக் கூடிய வசதி தமிழர்களுக்கு இல்லை.

ஆதலால் என் எதிர்ப்பைக் காட்டிக் கொள்ளும் அறிகுறியாக இச்சட்டத்தைக் கொளுத்தினேன். இப்படிக் கொளுத்து வதற்கு எனக்கு உரிமையுண்டு. இதனால் எந்த உயிருக்கும் எந்தப் பொருளுக்கும் சேதமில்லை.

ஆதலால் நான் குற்ற வாளியல்ல. இந்த நீதிமன்ற நடவடிக் கையில் நான் கலந்து கொள்ள விரும் பவில்லை. நான் எதிர் வழக்காட விரும்ப வில்லை. நான் குற்றவாளி என்று கருதப் பட்டால் அதற்குரிய தண்டனையை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ளத் தயாராகயிருக்கிறேன்.

(விடுதலை 23.11.1957)

 .................................

அது பாட்டன் பெரியாரின் காலம். இது அவரது பேரன்கள் காலம், தலைவர் கலைஞரின் உடன்பிறப்புகள் காலம், தளபதியின் தம்பிகள் காலம்.

...................................

நான் ஜனநாயகக் கிளர்ச்சிக் காரன். சட்டபேரவையில் சர்வாதிகாரத்திற்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. மக்கள் நலனுக்காக குரல் எழுப்ப இடம் இல்லை. அரசுக்கு எதிர் குரல் கூடிய உரிமை உறுப்பினர்களுக்கு இல்லை.

ஆதலால் என் எதிர்ப்பைக் காட்டிக் கொள்ளும் அறிகுறியாக கிழித்தேன். இப்படி செய்தவதற்கு எனக்கு உரிமையுண்டு. இதனால் எந்த உயிருக்கும் எந்தப் பொருளுக்கும் சேதமில்லை.

ஆதலால் நான் குற்றவாளியல்ல. நடவடிக்கையில் நான் கலந்து கொள்ள விரும்பவில்லை. நான் எதிர் வழக்காட விரும்பவில்லை. நான் குற்றவாளி என்று கருதப் பட்டால் அதற்குரிய தண்டனையை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ளத் தயாராகயிருக்கிறேன்

# அவ்வளவு தான், அவ்வளவே தான் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக