பிரபலமான இடுகைகள்

திங்கள், 24 பிப்ரவரி, 2014

சேனல்களின் ஓ.பி வேன்கள் வந்தவாறு உள்ளன...

சமத்துவ மக்கள் கட்சியின் அலுவலகம் பரபரப்பாக இருக்கிறது. ஃபோன்கள் தொடர்ந்து ஒலித்தபடி இருக்கின்றன. செக்யூரிட்டிகள் யாரையும் உள்ளே விடாமல் தடுத்தபடி இருக்கிறார்கள். உள்ளே டிவியில், அதிமுக வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு பற்றிய ஜெயா செய்திகள் ஓடிக் கொண்டிருக்கிறது. 

அலுவலகத்திற்கு வெளியே பத்திரிக்கையாளர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். லைவ் ஆக அப் லிங்க் செய்யும் தொலைக்காட்சி சேனல்களின் ஓ.பி வேன்கள் வந்தவாறு உள்ளன. டைம்ஸ் நவ், என்.டி.டி.வி போன்ற வட இந்திய மீடியாக்களோடு தமிழ் சேனல்களின் நிருபர்களும் மைக்குடன் தற்போதைய நிலைமையை அப்டேட் செய்து கொண்டிருக்கிறார்கள்.

                            

"இதோ இன்னும் சிறிது நேரத்தில் பல்வேறு கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களும் வர இருக்கிறார்கள்" என லைவ்விற்காக நிருபர்கள் சொல்லி கொண்டிருக்கும் போதே, சர்ரென்று ஒரு கார் வந்து நின்றது. "வாணி ராணி" ராணி கெட்டப்பில் ராதிகா சரத்குமார் இறங்கி உள்ளே சென்றார். "சரத்தின் கூட்டணி தலைவர் ராதிகா வந்துவிட்டார். அடுத்து ?" என தந்தி டிவி அலறியது.

புதிய இன்னோவா வந்து நின்றது. அதில் இருந்து இறங்கிய செ.கு.தமிழரசன், " இது அம்மா ஒரு இரும்பு மங்கை என்பதை வெளிப்படுத்தும் அறிவிப்பு. இந்தியாவை வழி நடத்த இரும்பு மனிதர் வல்லபாய்படேலுக்கு தவறிய வாய்ப்பை, அம்மா பெறுவார்கள். நான் சரத்தோடு பேச்சு நடத்த வந்துள்ளேன்" என்றார். அலுவலகத்தில் நுழைந்தார்.

ஒரு டெம்போ டிராவலர் வேன் அதிரடியாக வந்து நின்றது. அதில் இருந்து இறங்கிய தொண்டர்கள் கை கோர்த்து பாதுகாப்பு வளையம் அமைத்தனர். தமிழக வாழ்வுரிமை கட்சியின் வேல்முருகன் இறங்கினார். " இது பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, வஞ்சிக்கப்பட்ட மக்களுக்காக போராடும் நேரம். ஈழத்திலும் நியாயம் கிடைக்கும் வரை போராட்டம் தான்" என்று அலுவலகம் உள்ளே சென்றார்.

ஒரு பழைய அம்பாசிடர் கார் வந்து நின்றது. உள்ளிருந்து மார்க்சிஸ்ட் கட்சி தலைவர்கள் இறங்கினர். நிருபர்கள் மைக்கை நீட்டினர். "நாங்க என்ன சொன்னாலும், பிரகாஷ் காரத் வந்து தான் முடிவு. பொலிட் பீரோ கூட்டத்தில் அவர் இருக்கார். நாங்க சரத்தை பார்த்து, அவரது புதிய பட சிடீ வாங்கிகிட்டு போவோம்" யார் பேசியது என்று தெரிவதற்குள் எஸ்ஸாகினர்.

அடுத்து ஒரு வெளிநாட்டு இறக்குமதி கார் வந்தது. மீடியாக்களின் டார்லிங் தா.பாண்டியன். அவரே மைக்கை பிடித்து இழுத்தார். "எந்த மாட்டுல எப்புடி பால் கறக்கனும்னு எனக்கு தெரியும். ஆடியும் கறப்போம், பாடியும் கறப்போம். இல்லன்னா பிளாக் டீயும் குடிப்போம். இல்லன்ன டீயே குடிக்காமலும் இருப்போம். எதுவுமே பிரச்சியினைல்லை. எல்லாமே பிரச்சினை தான்"


             

அப்போது நாடாளும் மக்கள் கட்சி தலைவர் கார்த்திக் வந்து இறங்க, பரபரப்பு. "நீங்க இந்த கூட்டணியிலேயே இல்லையே, இங்க எப்புடி ?" டைம்ஸ் நவ் நிருபர். "ஹாஹா, இது நல்ல டவுட்டு. நான் எந்த கூட்டணியிலயும் இல்ல. ஆனா என்னை இல்லாம யாரும் கூட்டணி அமைக்க முடியாது. அவ்ளோ ஏன், என்னை இல்லாம மத்தியில் ஆட்சியே அமையாது". நிருபர் தலை சுற்றி கீழே விழ, "பழமுதிர் சோலை எனக்காகத் தான்" பாடிக் கொண்டே உள்ளே போனார் கார்த்திக்.

                

நேரம் ஆகிக் கொண்டிருந்தது, இருட்ட ஆரம்பித்து விட்டது. ஒரு பஸ் வந்து நின்றது. சால்வையுடன் ஒரு பெரியவர் இறங்கினார், பண்ருட்டி. கருப்பு துண்டை தலைப்பாகை கட்டி வந்தவர் நாஞ்சில். அடுத்து டைட் பேண்ட்டை சரி செய்து கொண்டே உள்ளே போனவர் பரிதி. இப்படியாக பிடித்து வரப்பட்ட பிள்ளைகள் கூட்டம்.

"அனைத்து கூட்டணிக் கட்சிகளும் திரண்டு விட்டனர். 2011 சட்டமன்றத் தேர்தல் நிலைமை திரும்புகிறதா ?" "இப்போது தீவிர ஆலோசனை நடைபெறுகிறது" "இந்தியாவே எதிர்பார்த்துக் கொண்டிருகிறது" "என்ன நடக்குமோ ?" சேனல்கள் அலறிக் கொண்டிருக்கின்றன.

ஒரு ஓப்பன் லாரி வந்து நின்றது. அதில் மைக் செட் கட்டப்பட்டிருந்தது. அனைத்து தலைவர்களும் திபுதிபு என ஓடி வந்து ஏறினர். சரத் முறுக்கேரிய புஜம் தெரிய ஒரு அட்டைப்பெட்டியை தூக்கிக் கொண்டு வந்தார். லாரியில் வைத்தார். சேனல்களின் கேமராக்கள் லாரியை நோக்கி திரும்பின. தா.பா மைக்கை எடுத்தார். சரத் அட்டைபெட்டியை பிரித்தார், 66 கிலோ கேக்.

சரத் கேக்கை வெட்ட, தா.பா பாடினார்,"அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே" "அம்மாவை வணங்காது உயர்வில்லையே" கோரஸ் ஒலிக்கிறது...

லாரி போயஸ் நோக்கி நகர்கிறது. கோஷம் ஒலிக்கிறது...

# "ஆப்பி பர்த்டே அம்மா"