பிரபலமான இடுகைகள்

செவ்வாய், 4 பிப்ரவரி, 2014

ஒரே நாள்ல தமிழ்நாடு ஆல் எடிஷன் தலைப்பு செய்தி ஆயிட்டப்பா....

ஆத்திரத்தில் ஆளுநர் உரையை கிழித்த போது தெரியாது, அதன் தாக்கம் இவ்வளவு இருக்கும் என. அது எனக்கு வழங்கப்பட்ட நகல், எனக்கானது. அதனால் பயன் இல்லை, பேச்சுக்கும் உரிமை இல்லை என்ற கோபத்தில் நடந்த நிகழ்வு.

வெளியில் வந்த போது, பத்திரிக்கை புகைப்படக்காரர்கள் வளைத்து கட்டி ஃபோட்டோ எடுத்த போதும் தெரியாது.
 
 
தொலைக்காட்சி சேனல்களில் அழைப்பு வந்ததால், செல்லை அணைத்து வைத்தேன், தவறான பதில் சொல்லி கழகத்திற்கு சங்கடம் வந்து விடக்கூடாதென.

மறுநாள் காலையில் பத்திரிக்கைகள் தலைப்பு செய்தியே இது தான். சட்டமன்றம் சென்ற தளபதி அவர்கள், தலைவரை தரம் தாழ்ந்து விமர்சித்ததற்கும், கழக உறுப்பினர்களை பதிலளிக்க விடாமல் வெளியேற்றியதற்கும், என்னை சஸ்பெண்ட் செய்ததற்கும் கண்டனம் தெரிவித்து கூட்டத் தொடரை புறக்கணித்த செய்தி, பிளாஷில்.
அன்று முழுதும் மொபைலில் வாழ்த்துக்கள், பேஸ்புக்கிலும். அரியலூர் கிளம்பி சென்றேன். உள்ளூர் பத்திரிக்கைகளிலும் இதே செய்தி. அடடே, திருச்சி தினமலரில் முதல் பக்க செய்தி.

குன்னம் தொகுதியை சேர்ந்தவர்களின் கருத்து, குன்னம் புதுத் தொகுதி என்பதால், யாருக்கும் தெரியாத ஊராக இருந்தது, இப்போது இந்த செய்தியில் பிரபலமாகி விட்டது. வாழ்த்தோ, வசவோ தலைப்பு செய்தி.

காலையில் கிளம்பி திருமணத்திற்கு போகும் வழியில், விளாங்குடி கைக்காட்டி என்னும் இடத்தில், பத்து கழகத் தோழர்கள் திரண்டு நின்றனர். அதில் எழுபது வயதுக்காரர்கள் இருவர். முகம் கொள்ளா மகிழ்ச்சியில் இருந்தனர். கை பிடித்துக் குலுக்கினர், வாழ்த்தினர்.

"எல்லாம் நீங்க இருக்கற தெம்பு தான்"என்ற போது, "அதெல்லாம் கவலப்படாத" என்று உற்சாகமூட்டினார்கள். திருமணத்திற்கு சென்ற போதும் இதே பேச்சு தான். இதில் ஒரு முக்கிய விஷயம், அனைவரும் அவர்கள் செய்தது போலவே உணர்ந்தது தான்.

மாநாட்டுக்கு நிதி அளிக்க அண்ணன் ராஜா அவர்களுடன் திருச்சி சென்றோம். அண்ணன் நேரு அவர்கள் பார்த்த உடனேயே "ஒரே நாள்ல தமிழ்நாடு ஆல் எடிஷன் தலைப்பு செய்தி ஆயிட்டப்பா. சந்தோஷம்" என்றார்.

ஒரு அதிமுக நண்பரும் வாழ்த்தினார்,"தைரியத்தை பாராட்டுறேன். ஆனா ஆளுநர் உரையை கிழிச்சது தப்பில்லையா ?"

"இல்லண்ணே, நான் ஆத்திரத்தில் தான் கிழிச்சேன். ஆனா அது சரிதான். பேசவும் விடறதில்ல, பேசினாலும் நீக்கம் தான். வெளிநடப்பு செய்திருந்தாலோ, போராடியிருந்தாலோ, திமுக அமளின்னு இன்னொரு செய்தி உங்களுக்கு. இப்போ ஏன் சஸ்பெண்ட் அப்படின்னு படிக்க வச்சது, சபாநாயகர் நடவடிக்கை தான்." இது நான்.

அவர் சொன்னார்,"அவரவர் நியாயம் அவருக்கு"

உண்மையில் அதில் படிச்சு கிழிக்கவும் ஒன்னும் இல்ல....

# மகிழ்ச்சியே....