பிரபலமான இடுகைகள்

செவ்வாய், 25 பிப்ரவரி, 2014

கனவு காணும் வாழ்க்கை யாவும்...

அது என்னவோ பாலுமகேந்திராவின் மரணம் பெரும் பாதிப்பை திரை ரசிகர்களிடம் ஏற்படுத்தியிருக்கிறது. “அது என்னவோ” என்று சொன்னதற்கு காரணம் அவர் எடுத்த படங்களின் எண்ணிக்கை மற்றும் அவைகளின் வெகுஜன வெற்றி இவற்றை கணக்கில் கொண்டே.

மாநாட்டு பணிகளில் தீவிரமாக இருந்ததால், வருத்தத்தை பகிர்ந்து கொள்ள சந்தர்பமில்லை. ஆனால் அந்த பாதிப்பு மனதில் இருந்தது. அதனால், அவரது படப் பட்டியலை பார்ப்போம் என விக்கிப்பீடியாவில் தேடினேன். அவரது மொத்த படங்களே 22 தான். அதில் தமிழ் 15 தான்.

                                   

இதில் அவரது ஆரம்ப கால படைப்புகளான “அழியாத கோலங்கள், மூடுபனி” இரண்டும் அவரது முத்திரைப் படைப்புகள். ஆனால் “மூன்றாம் பிறை” தான் அவரது அடையாளமானது. கமலுக்கும், ஸ்ரீதேவிக்கும் புதிய அடையாளத்தை வழங்கியது. இன்றைக்கும் அந்த “சுப்பிரமணி”யை மறக்க முடியாது.

அடுத்து வந்த “நீங்கள் கேட்டவை” அவரது பாணியிலான கமர்ஷியல் முயற்சி. இதில் பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட். அடுத்து ரஜினியை வைத்து ஆக்சன் படம் “உன் கண்ணில் நீர் வழிந்தால்”. “கண்ணில் என்ன கார்காலம்” பாடல் இன்னும் காதுகளில் ரீங்கரிக்கிறது.

இளையராஜாவுக்கும், பாலுவுக்கும் அப்படி ஒரு உறவு. மனதை மயக்கும் பாடல்கள் தான் பாலுமகேந்திரா படங்களுக்கு. அந்த உறவு தான் பாலுவின் கடைசிப் படமான “தலைமுறைகள்” வரை தொடர்ந்திருகிறது. “வீடு” படத்தில் பாடல்களே கிடையாது. ஆனால் இசையே பாடும்.

நடுத்தர வர்க்கம் வீடு கட்ட எவ்வளவு கஷ்டப்படும் என்பதை உணர்வுப்பூர்வமாக வெளிப்படுத்தியிருப்பார் “வீடு” பட்த்தில். ஒரு வீட்டை உண்மையாகவே கட்டி படம் எடுத்தார். படத்திற்கும், அர்ச்சனாவிற்கும் தேசிய விருது, பாலுவின் உழைப்பு. அதற்கு பிறகு அவர் பாணியில் சில படங்கள்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு “சதிலீலாவதி” மூலம் காமெடி என்ட்ரி போட்டார். பிறகு சில படங்கள் வந்தன, அவ்வளவு தான், ஆனால் அவரது முத்திரைகளோடு. அதிலும் "மறுபடியும், வண்ணவண்ண பூக்கள், அது ஒரு கனாக் காலம்" உண்டு. 


எப்படி பார்த்தாலும் “அழியாத கோலங்கள், மூடுபனி, மூன்றாம் பிறை, வீடு, சந்தியா ராகம்” தான் அக்மார்க் பாலு முத்திரையோடு மனதில் பதிந்தவை.

                                      

ஆனால் அவற்றினை கொண்டே, 25 நூறு நாள் படைப்புகளை கொடுத்த இயக்குநர்களை தாண்டி ரசிகர்கள் மனதில் பதிந்திருக்கிறார், எண்ணிக்கை, வெற்றி தோல்வியை தாண்டி நிலைத்திருக்கிறார் என்றால், அது தான் பாலுமகேந்திரா.

மெல்லிய உணர்வுகளை அழுத்தமாக வெளிப்படுத்தும் இயக்கம். வசனங்களை விட காட்சிகளே பேசி விடும் விதம். மயிலறகாய் தடவிக் கொடுக்கும் பிண்ணனி இசை. கண்ணிலேயே தங்கி விடும் ஒளிப்பதிவு. இவற்றின் உன்னதக் கலவையே பாலுவின் ரசாயனம்.

கடைசியாக அவரே களத்திற்கு வந்தார், நடிகராக “தலைமுறையில்”. நிஜ உலகில் தொப்பியையும் கண்ணாடியையும் கழட்டாமலே இருந்தவர், நிழல் உலகிற்காக அவைகளை துறந்தார். மறைவிற்கு முன் நிஜத்தோடு வெளிப்படுவோமென நினைத்தாரோ ?


                            

# கனவு காணும் வாழ்க்கை யாவும் கலைந்து போகும் கோலங்கள். ஆனால் பாலுவுடையது அழியாத கோலங்கள்...