பிரபலமான இடுகைகள்

ஞாயிறு, 16 அக்டோபர், 2016

வாணாதிராயர் பாண்டியன்

சத்திரம் கிராமம், கங்கைகொண்ட சோழபுரத்திற்கு அருகில் உள்ள ஊர். இராஜேந்திர சோழன் காலத்தில் உருவான பகுதி. படை வீரர்கள் தங்கியிருந்த சத்திரமாக இருக்கலாம் என்பது வரலாற்று ஆர்வலர்களின் கருத்து. அண்ணன் பாண்டியன், சத்திரம் கிராமத்தை சேர்ந்தவர். "எஸ்.கே.பி" என்று எல்லோராலும் அழைக்கப்பட்டார். இராஜேந்திரனின் படைத் தளபதிகளின் பெயரைக் கொண்ட " வாணாதிராயர்" வம்சாவளியை சேர்ந்தவர்.

ஆளும் அப்படித் தான் இருப்பார். ஓங்கி உயர்ந்த உருவம். நீண்டக் கை, கால்கள். அகன்ற நெற்றி. கணீரென்ற குரல். எந்தக் கூட்டத்திலும் திரும்பிப் பார்க்க வைக்கும் தோற்றம். கையில் ஒரு வாளைக் கொடுத்து, ஒரு குதிரை மேல் உட்கார வைத்தால், ஒரு படைத் தளபதி போலவே தோற்றமளிப்பார். சத்திரத்தை சுற்றி இருக்கும் மக்களுக்கு ஒரு தளபதி போலவே வாழ்ந்தார்.

ஆகிருதியை கண்டு மிரண்டு அருகில் சென்றால் வேறு அனுபவம் கிடைக்கும். ஒவ்வொரு சொல்லும் நகைச்சுவை தெறிக்கும். நாம் ஏதும் நகைச்சுவையாக பேசினால், கையை தட்டி ஓங்கி சிரித்து மகிழ்வார். சமயத்தில் யாரிடமாவது கடிந்து கொண்டாலும், சிறிது நேரத்தில் அதை மறந்து அவர்களிடம் பேசி விடுவார்.

கடந்த செப்டம்பர் 15 அன்று காலை 7.00 மணிக்கு எனக்கு அலைபேசியில் அழைத்தார்.  "எத்தனை மணிக்கு ஜெயங்கொண்டம் வருவீங்க?". " அண்ணா, 08.00 மணிக்கு அண்ணா சிலைக்கு மாலை அணிவிப்பதாக துண்டறிக்கை கொடுத்துள்ளார்கள். சரியாக வந்துவிடுவேன்". " நான் இப்பவே வந்துட்டேன்",என்றார். சொன்னது போலவே ஜெயங்கொண்டத்தில் காத்திருந்தார்.

முன்னரே அவர் வந்தது பெரிய விஷயமல்ல. ஆனால் அவர் உடல் நிலைக் குறித்து அறிந்தால் தான் இந்த செய்தியின் முக்கியத்துவம் தெரியும். கடந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்கு பதினைந்து நாட்கள் கழித்து ஜெயங்கொண்டம் நகர செயலாளர் வெ.கொ.கருணாநிதி அலைபேசியில் அழைத்தார். " பாண்டியன் அண்ணன் தஞ்சை மருத்துவமனையில் இருந்து நாளை வருகிறார் ".

" ஏன், என்ன ஆச்சி அண்ணனுக்கு?". "வாக்கு எண்ணிக்கை அன்று, கழகம் ஆட்சி வாய்ப்பை இழக்கும் செய்தி வர, வர புலம்பிக் கொண்டு இருந்திருக்கிறார். மற்றவர்கள் சென்ற பிறகு, துயரம் தாளாமல் காதில் மருந்தை ஊற்றிக் கொண்டிருக்கிறார். இறுதிக் கட்டம் வரை சென்று உயிர் பிழைத்திருக்கிறார்.",என்றார். " ஏன் சொல்லவில்லை" என்று கடிந்து கொண்டேன். "தோல்வி துயரத்தில் வேண்டாம் என்று குடும்பத்தினர் யாரிடமும் சொல்லவில்லை".

மறுநாள் சென்று பார்த்தோம். நாங்கள் ஏதும் கேட்டுவிடக் கூடாது என்பதற்காக,  எதுவும் நடக்காதது போல, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் போல ஒருக்களித்து படுத்து, ஒரு கையில் தலையை தாங்கிக் கொண்டு ஒய்யாரமாக எங்களை வரவேற்றார். " ஏன் இப்படி?" என்றதற்கு, முதலில் "ஒண்ணும் இல்லை" என்றவர், பிறகு "நாடு இப்படி போயிடுச்சே" என்றார். நலம் விசாரித்து திரும்பினோம். அதற்கு பிறகு ஓய்வில் இருந்தவர் தான் அண்ணா பிறந்த நாளன்று கிளம்பி வந்து விட்டார்.

அடுத்த இரண்டு நாட்கள் கழகத் தோழர்களை தொடர்ந்து சந்தித்திருக்கிறார். மூன்றாம் நாள் மீன்சுருட்டி நகருக்கு வந்தவர் கழகத் தோழர்களை அழைத்து டீ வாங்கிக் கொடுத்து உபசரித்திருக்கிறார். நான்காம் நாள் விடியற்காலை தூக்கத்திலேயே உயிர் பிரிந்து விட்டது. சிறு வயதில் துவங்கிய கழகப் பணியை நிறுத்தாமலேயே மறைந்து விட்டார்.

கழகத்தின் துவக்க காலத்தில் இவரது தந்தை கலியமூர்த்தி ஜெயங்கொண்டம் நகர கழக செயலாளர். படிக்கும் காலத்திலேயே கழகப் பணியை துவங்கி விட்டவர் அண்ணன் பாண்டியன். எந்தப் பொறுப்பையும் எதிர்பார்க்காமல் உழைத்தவர். மூன்று முறை மாவட்டப் பிரதிநிதியாக பணியாற்றினார். கேட்டிருந்தால் இன்னும் உயர்வு கிடைத்திருக்கும். ஆனால் மற்றவர்களை உயர்த்தி மகிழ்ந்தவர் இவர்.

ஒரு நாள் அடுத்து இருந்த தனது மகன் வழக்கறிஞர் மனோகரன் இல்லத்தை கவனித்திருக்கிறார். "இது என்ன படம் பழசா இருக்கு?" என்று கோபப் பட்டிருக்கிறார். மறு நாள் காலை மனோகரன் வீட்டு முன் சுவற்றில் "உதயசூரியன் மற்றும் கழகக் கொடி " மின்னி இருக்கிறது. அதே போல மீன்சுருட்டியில் இருக்கும் மூத்த மகன் சங்கர் இல்லத்திலும் புதிய "உதயசூரியன்". இரவு ஒரு ஓவியரைக் கொண்டு இதை வரைய செய்திருக்கிறார் அண்ணன் பாண்டியன். இது இந்த சட்டமன்றத் தேர்தல் தோல்விக்கு பிறகு. வெற்றி, தோல்வி எல்லாம் பொருட்டல்ல, கழகமே எல்லாம்.

# பாண்டியன் போன்றோரே கழகத்தின் மிளிர்வு !