பிரபலமான இடுகைகள்

வெள்ளி, 30 டிசம்பர், 2016

ராஜா துணியில்லாம போறாரு

மன்னர் மெய்காவல் படை சூழ அரண்மனையின் பெருவழி நுழைவாயிலில் நுழைந்தார். வழக்கம்போல் அயல்தேச பயணம் முடித்து வந்தார். இரண்டாம் சுற்று அரண் தாண்டியது படை. மன்னர் மேனியெங்கும் வியர்வைத் திவலைகள். தார்பாய்ச்சு வேட்டி, மேல்துண்டு அணிந்து , அதன் மேல் மார்கவசம் தரித்திருந்தார். விதவிதமான உடை உடுத்துவதில் ஆர்வம் உள்ளவர் மன்னர்.

அந்தப்புரம் நுழைந்த உடன் நெசவுக்காரரை அழைத்து வர உத்தரவிட்டார். "உலகில் வேறு யாரும் உடுத்தாத ஆடை தயாரித்து வா", என உத்தரவிட்டார். அடுத்த நாள் அரசவை கூடியது. நெசவாளி வந்தார், ஒரு ஆடையை கொடுத்தார்," சரியில்லை". மறுநாள் " இன்னும் சன்னமாய் வேண்டும்".  அடுத்த நாள்," உடுத்தியிருப்பதே தெரியக் கூடாது". நெசவாளியால் முடியவில்லை. ஆனால் மன்னரின் கோபம் பயமுறுத்தியது.

அடுத்த நாள் நெசவாளி மிக மகிழ்ச்சியாய் வந்தார். "மன்னா, இது உலகிலேயே இதுவரை தயாரிக்கப்படாத ஆடை. பிரத்தியேகமானது. உடுத்தியிருப்பதே தெரியாது. கண்ணுக்கே புலப்படாது. உத்தமர் கண்ணுக்கு மாத்திரமே தெரியும்", என்று வெறும் கையை  காட்டினார் நெசவாளி. மன்னர் மகிழ்ந்து போனார். " சபாஷ், இதைத் தான் எதிர்பார்த்தேன்", என்றார்.

மன்னரை உடையை களைய சொன்ன நெசவாளி, வெறுங்கை கொண்டு  அலங்கரித்தார். அறைக்கு வெளியே இருந்த மெய்காப்பாளர்கள் இதைக் காதில் வாங்கிக் கொண்டிருந்தார்கள். வெளியில் வந்த உடன் மன்னர் கேட்டார்,"உடை எப்படி?". தெரியவில்லை என்று சொன்னால் உத்தமர் இல்லை என்று விடுவார்களே என அவர்களும் "பிரம்மாதம்" என்றனர்.

சற்று தள்ளிக் காத்திருந்த நிதியமைச்சர், "இது என்ன கோலம்" என கேட்பதற்குள் மெய்காவல் தலைவன் எச்சரித்தான். அவரும், "அருமையான உடை" என சிலாகித்தார். எல்லோரும், தான் உத்தமன் அல்லாத காரணத்தால், தம் கண்ணுக்கு உடை தெரியவில்லை என நினைத்துக் கொண்டார்கள்.

அதற்குள் நகரில் செய்தி தீயென பரவி விட்டது. மன்னர் நகர்வலம் கிளம்பினார். மந்திரி பிரதானிகள் புடைசூழ நடை பயின்றார். மன்னரின் பிரத்யேக உடை காண மக்கள் ரத வீதியின் இருமருங்கிலும் கூடியிருந்தனர். மன்னரின் உடை கண்டு துணுக்குற்றனர். ஆனால் யாருக்கும் வெளியில் சொல்ல பயம். முகமன் கூறி ஒதுங்கி வழி விட்டனர்.

மன்னரின் நகர்வலம் முடியும் தருவாய். ஒரு பாடசாலையை கடந்தார்கள். பாடசாலை வளாகத்துள் இருந்த ஒரு சிறுவன் நாக மரத்தின் மீதேறி மரத்தை உலுக்கிக் கொண்டிருந்தான். கீழே அவன் நண்பர்கள் பழத்தைப் பொறுக்கிக் கொண்டிருந்தனர். எதேச்சையாக வீதியை பார்த்தான். "ஏ, ராஜா துணியில்லாம போறாரு" என்று கூச்சலிட்டான். மன்னர் திரும்பிப் பார்த்தார்,"சின்ன வயதிலேயே உத்தமனாக இல்லாமல் போய் விட்டானே" என வருத்தப்பட்டார்.

மன்னர் அரசவை நுழைந்தார். பேரிகை முழங்கியது. "ராஜாதிராஜ ராஜகுஜராத்த ராஜடிஜிட்டல ராஜகேஷ்லெஸ்ஸ  ராஜதுக்ளக்க ஜாடிராஜா வருகிறார். பராக், பராக், பராக் !".  "ஜெய்ஹிந்த், ஜெய்ஹிந்த், ஜெய்ஹிந்த்" ஜெயகோஷங்கள் முழங்கின.

மன்னர், "பாவம் அந்த சிறுவனை பார்த்தீர்களா. சிறு வயதிலேயே என்ன தவறு செய்தானோ? உத்தமனாக இல்லாமல் போனானே" என்று விசனப்பட்டார். "மன்னா, அந்த சிறுவன் சிவசங்கர். சில்மிஷக்காரன். அவன் ஒரு தேஷ் துரோகி. அவனை சிறையிலடைத்து, அபராதம் விதிக்க வேண்டும்" ,என்றார் நிதியமைச்சர் இட்லீ. "இல்லை. விதியை ஒரு நொடி முன் திருத்தியாகி விட்டது. அவனை நாடு கடத்த வேண்டும்", என்றார் மந்திரி பூண்டையா.

துள்ளிக் குதித்தேன், தலையில் நாட்காட்டி இடித்தது. அய்ம்பது நாட்கள் கடந்திருந்தன. கதறினேன்.

#  எனக்கும் இப்ப தெரியுது - புது இந்தியா !

வியாழன், 29 டிசம்பர், 2016

மனிதர் உணர்ந்து கொள்ள...

அண்ணன் செங்கோட்டையனை நான் நிரம்ப ரசிப்பேன். அப்போது அவர் எதிர்கட்சி சட்டமன்ற உறுப்பினர். நான் ஆளும் திமுக சட்டமன்ற உறுப்பினர். ஆமாம் 2006ம் ஆண்டு. சட்டமன்றத்தில் அண்ணன் உறுமுவார். திமுக அமைச்சர்கள் பேசுவதை அவர் ஒப்புக் கொள்ளவில்லை என்றால் தலையை மறுத்து,மறுத்து ஆட்டுவார். எழுந்தால் கடுமையாக எதிர்த்து பேசுவார்.

அப்போது வேறு சில முன்னாள் அமைச்சர்களின் செயல்பாடுகளையும் கவனித்திருக்கிறேன். கேமரா நோக்குவதால், நின்று பேசும் போது பொங்குவார்கள், பேசி உட்காரும் போதே கண்டித்த அமைச்சர்களை  நோக்கி புன்முறுவல் பூப்பார்கள். ஆனால் அண்ணன் செங்கோட்டையன் அப்படி கிடையாது. பேசும் போதும் கண் பார்க்கமாட்டார், உட்கார்ந்தாலும் பார்க்கமாட்டார்.

முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகமும் அப்படி தான். திமுகவை எதிர்ப்பதென்றால் வெல்லம் சாப்பிட்ட மாதிரி. குலுக்கிவிட்ட சோடா பாட்டில் மாதிரி பொங்குவார்.

2011ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அண்ணன் செங்கோட்டையன் அமைச்சர். நான் எதிர்கட்சி சட்டமன்ற உறுப்பினர். நான் கொஞ்சம் முந்திரிகாட்டு மண்ணுக்கே உரித்தான 'தொட்டால் பற்றிக் கொள்ளும் தயார் நிலையில்' இருப்பேன். அதனால் பலமுறை அன்றைய முதல்வர் ஜெயலலிதாவோடு, ஓ.பி.எஸ்ஸொடு, சபாநாயகரோடு மோதிக் கொண்டிருப்பேன். நான் எழுந்தாலே வெளியே அனுப்புவார்கள்.

எழாத ஒரு நாளும், நான் வம்பு செய்ததாக அண்ணன் ஓ.பி.எஸ் புகார் செய்யுமளவு நிலை. அப்படி ஒரு நாள் சபாநாயகர் அறையில் அண்ணன் செங்கோட்டையன் அவர்களை சந்திக்கும் வாய்ப்பு. "என்ன சிவசங்கர் எப்பவும் பிரச்சினையா?" என்றுக் கேட்டார். "அண்ணா, நேத்து அவ்வளவு இல்லையே அண்ணே", என்றேன். " இல்லை சிவா. சலங்கை கட்டி ஆடறது, சலங்கை கட்டாம ஆடறதுன்னு ரெண்டு வகை இருக்கு. நேத்து கட்டாம ஆடுனிங்க. அவ்வளவு தான்"என்று சிரித்தார்.

அப்போது தான் தெரிந்தது, அவரது வெற்றி ரகசியம். கோபி தொகுதியை ரவுண்டு கட்டி, எல்லோரிடமும் அன்பாக பேசி வென்றிருக்கிறார். ஜெயலலிதா தேர்தல் சுற்றுப்பயணம் கிளம்பினால், இவர் தான் ரூட் போட்டு தருவார். அதிமுகவில் இவர் அளவிற்கு தமிழகத்தையும், அதிமுகவையும் அறிந்தவர்கள் கிடையாது. அதிமுக ஆட்சியில் இருக்கும் போதே இவரது அமைச்சர் பதவியை ஜெயலலிதா பறித்தாலும், இவருக்கு சீட் கொடுக்காமல் இருக்கவில்லை. காரணம், இவரது தாக்கம் கொங்கு பெல்ட்டில் என்ன என்பதை ஜெயலலிதா நன்கு அறிந்தவர்.

சட்டமன்றத்தில் எதிர்கட்சியாக காட்டிய வேகத்தை தான், அமைச்சர் ஆன பிறகும் சி.வி.சண்முகம் காட்டுவார். செங்ஸ் போல் எதிர்கட்சி ச.ம.உ களிடம் பேச மாட்டார். அதே டென்ஷன் போஸ் தான் கொடுப்பார். இன்னும் சொல்லப் போனால் ஜெயலலிதாவை பார்த்தும் பெரிதாக ரியாக்‌ஷன் இருக்காது. ஜெயலலிதா சட்டமன்றத்தில் நுழையும் போதும், ஏதாவது அறிவிப்பு வெளியிடும் போதும் அண்ணன் ஓ.பி.எஸ் வளைந்து வணங்குவது உலகப் பிரசித்தம்.

ஆனால் சி.வி.சண்முகம் அது போல் வணங்கி நான் பார்த்ததில்லை. அதேபோல கடந்த தேர்தலில், இவரை வேறொரு  தொகுதியில் ஜெயலலிதா வேண்டாவெறுப்பாக தூக்கிப் போட்டும் வென்று வந்தார். எடப்பாடி பழனிசாமியும் இவர் போல் தான். அளவோடு வளைந்தே ஜெயலலிதாவை வணங்குவார். உறுப்பினர்கள் கேள்வி கேட்டாலும் "அம்மாவின் பார்வைக்கு கொண்டு செல்கிறேன்" என்று மற்ற அமைச்சர்களை போல் வழக்கமான பல்லவியை பாடமாட்டார். தன்னிச்சையாக பதிலளிப்பார்.

ஆனால் அப்போதே அண்ணன் ஓ.பி.எஸ் பெர்ஃபார்மன்ஸ் வேறு. அவர் போன்று பணிவையும், விசுவாசத்தையும், அன்பையும், பக்தியையும், நம்பிக்கையையும் உடல்மொழியால் வேறு ஒருவரால் வெளிப்படுத்த முடியாது. எல்லோரும் பிரமிக்கக் கூடியது. அந்த நாட்களில் அதை ரசித்து நான் தனி நிலைத்தகவலே போட்டிருக்கிறேன்.

சமீப நாட்களில் தொலைக்காட்சியை பார்க்கும் போது அண்ணன் ஓ.பி.எஸ் மட்டும் தான் மாறாமல் அப்படியே இருக்கிறார்.

அண்ணன் செங்கோட்டையன் தொழுத கரங்களும், இறைஞ்சும் கண்களாய் இருக்கிறார். சி.வி.சண்முகம் வணங்கும் போது, அவர் தலை குனிந்திருந்த பாங்கும், அவர் கைகள் வணங்கி இருந்த இடமும் மெய் சிலிர்க்க வைக்கிறது. எடப்பாடி பழனிசாமி, 'அபிராமி, அபிராமி' என்று இருந்த பக்தி கோலம் கிறங்கடிக்கிறது. இது எல்லாம் அம்மா காலத்தில் காணாதது.

# மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித காதல் அல்ல...

புதன், 28 டிசம்பர், 2016

பதிவிடல் விருப்பமிடல்

நள்ளிரவு கடந்தும் கடமையே கண்ணாக இருந்தேன். வேற என்ன கடமை, முகநூல் தான். அப்போது மெசெஞ்சரில் வந்தார் ராஜேஷ் குமார். "சார், நான் இப்போ பேசலாமா?". மணி 01.00.  அறிமுகம் கிடையாது. முகநூலில் நண்பரும் இல்லை. இரண்டு பேர் மியூச்சுவல் ப்ரெண்ட்ஸ். இரண்டு நாட்களுக்கு முன் பேசுவதற்கு அலைபேசி எண் வாங்கியிருந்தார். இப்போ எதுக்கு பேசனும்ங்கறாரு என்று குழப்பம்.

பேசினார். "சார், பெரம்பலூர் வந்திருக்கேன். காலை அரியலூர் வருவேன். எப்போ, எங்கே சந்திக்கலாம்?". விபரம் சொன்னேன். காலையில் வந்தார். ராஜேஷ்குமார் கும்மிடிப்பூண்டியை சேர்ந்தவர். எம்.இ படித்தவர். பொறியியல் கல்லூரியில் பணிபுரிபவர். +2 மாணவர்களுக்கு தேர்வுக்கு தயார் செய்யும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்திருந்தார்.

"மூன்று வருசமா உங்கள ஃபாலோ பண்றேன் சார். ராஜேஷ் தீனா போட்ட பதிவில் உங்கள பாராட்டி எழுதி இருந்தாரு. அப்புறம் தான் உங்க முகநூல் பக்கத்த பார்த்தேன். எங்க எம்.எல்.ஏ சி.ஹெச்.சேகரோடு, டெல்லி சட்டமன்ற உறுப்பினர்களுக்கான பயிற்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டத பார்த்ததில் சந்தோஷம். அதிலிருந்து உங்க பதிவுகள தொடர்ந்து படிக்கிறேன் ", என்று மூச்சு விடாமல் பேசினார்.

அப்புறம் அந்த இரண்டு சப்ஜெக்டையும் தொட்டார். "செம்பருத்திய நூலகம் திறக்க சொன்னத மறக்க மாட்டேன் சார். அரியலூர் தொகுதி ரிசல்ட் இப்படி ஆகும்னு எதிர்பார்க்கல, வருத்தம்". உடன் வந்தவரை அறிமுகப்படுத்திக் கொண்டதில், அவர் எனது நண்பர் உளுந்தூர்பேட்டை சுப்பையனின் தம்பி. அவர் போன பிறகு யோசித்தேன். தமிழகத்தின் அந்தக் கடைசியான கும்மிடிப்பூண்டியை சேர்ந்த, தொடர்பே இல்லாத இளைஞரை எட்டியிருக்கிறோம் என்றால் முகநூல் தான் காரணம்.

'ஆறு வருடமாச்சி, முகநூலில் இணைந்து' என முகநூல் நினைவூட்டிய போது, நினைத்துப் பார்த்தேன். இது போன்ற பல உறவுகள். நான் 'எழுதுவேன்' என்று எனக்கே தெரிய வைத்து, நக்கீரனில் எழுதி, இப்போது அந்திமழை மாத இதழில் எழுதும் அளவு கொண்டு வந்து நிறுத்தியது முகநூல் தான். இன்னும் பல செய்திகளை சொல்லலாம். சில நேரங்களில் நண்பர்கள் கிண்டலடித்தாலும், இது ஒரு தனி உலகம் தான். நான்கு நாட்களுக்கு முன் நடந்த சம்பவம் முத்தாய்ப்பு.

கும்பகோணத்தில் மறைந்த முன்னாள் அமைச்சர் அய்யா கோசி.மணி அவர்களுடைய படத்தை  தளபதி அவர்கள் திறந்து வைத்த ஆற்றிய உரையும், அண்ணன் துரைமுருகன் ஆற்றிய உரையும் நெகிழ்ச்சியின் உச்சம். அந்த உணர்வோடு, இரவு வந்த உடன் உட்கார்ந்து டைப் செய்து, நிலைத்தகவல் இட்ட போது நேரம் இரவு 12.05.

காலை எழுந்து நாளிதழ்களை புரட்டிக் கொண்டிருந்தேன். அலைபேசி அழைத்தது. புதிய எண், கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது. " அல்லோ, சிவசங்கர்ங்களா". "ஆமாங்க, சிவசங்கர் தான் பேசறன்". " பேஸ்புக்லாம் நல்லா எழுதறீங்கன்னு சொல்றாங்க", பேசியவர் ஒரு இடைவெளி விட்டார்.  ரெண்டு நாள் முன்னர் தான் வைகோ அறிக்கை பதிவிட்டிருந்தேன். அது தொடர்பான யாரோ போல என நினைத்தேன்.

"இந்த கோபால்சாமி பத்தி ஏதோ எழுதி இருக்கீங்கன்னாங்க. அப்புறம் நேத்து கும்பகோணத்தில கோசி.மணி படத்திறப்பு விழாவுல இந்த துரைமுருகன் பேசுனதையும் எழுதி இருக்கீங்களாம். நான் உங்களுத படிக்கல. படிக்கலாம்னு பார்க்கறன். கொஞ்சம் என்னையும் சேத்துக்குறுக்கீங்களா? என் பேரு வந்து" என்று சொல்லும் போது தான், அந்தக் குரலை லேசாக உணர்ந்தேன்.

அவர் பலகுரல் மன்னன் என்பது தெரியும். இதே போல் கலாய்ப்பார் என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் அப்போது எதிர்பார்க்கவில்லை. அவராகத் தான் இருக்கும் என்று என்னும் போதே, என்னால் மகிழ்ச்சியை அடக்க முடியாமல் சிரித்தவாறே "அய்யா", என்றேன்.

அவர் சிரிக்காமல் சொன்னார்,"எம் பேரு துரைமுருகன்ங்கோ". நான் வெடித்து சிரித்தேன்.

முன்னாள் அமைச்சர் துரைமுருகன் அவர்களை பார்க்க சென்றிருக்கிறார் அறந்தாங்கி முன்னாள் ச.ம.உறுப்பினர் அண்ணன் உதயம் சண்முகம். அவரோடு சென்ற முகநூல் நண்பர் கிரி, என் பதிவு குறித்து அமைச்சரிடம் சிலாகித்ததன் விளைவு அது, என பின்னர் தெரிய வந்தது.

#பதிவிடல் விருப்பமிடல் அதுவல்ல
தூதிய மில்லை உயிர்க்கு !

வியாழன், 22 டிசம்பர், 2016

போராட்டமே வாழ்க்கை !

அது 1945. சுதந்திரம் கிடைக்க இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு. தலைவர் கலைஞர் பாண்டிச்சேரி சென்றிருந்தார். அப்போது அவருக்கு வயது 21. அங்கு திராவிட நடிகர் கழகத்தின் "சாந்தா அல்லது பழனியப்பன்" என்ற நாடகம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அதில் தலைவர் 'சிவகுரு' என்ற கதாபாத்திரம் ஏற்று நடித்தார். நாடகம் இருபத்தைந்து நாட்கள் வெற்றிகரமாக நடைபெற்றது.

புதுகை மக்கள் அவரை சிவகுரு என்றே அழைத்தனர். திராவிடக் கழக தோழர்கள் தலைவரை ஊக்கமளித்து, உற்சாகப்படுத்தினர். "தொழிலாளர் மித்திரன்" என்ற வார இதழில் கட்டுரை எழுத சொன்னார்கள். தலைவரும் 'அந்தப் பேனா' என்ற தலைப்பில் கட்டுரை எழுதினார். காந்தி அடிகளின் ஆசிரமத்தில் காணாமல் போன ஒரு பேனா பற்றி எழுதினார். காங்கிரஸார் தலைவரை அடையாளம் குறித்துக் கொண்டனர்.

அடுத்த வாரம் "காந்தி வைஸ்ராயானால்" என்ற கட்டுரை. காங்கிரஸார் கோபம் தலைக்கேறியது. நாள் தேடினர், தலைவரை தாக்க. அப்போது தான் புதுகையில் திராவிடர் கழக மாநாடு நடத்த முடிவானது. பெரியார், அண்ணா, அழகிரிசாமி பங்கேற்றனர்.  காலை பத்து மணிக்கு மாநாடு துவங்கியது. கலகம் செய்ய கும்பலும் கூடியது. "திராவிடத் தலைவர்களே திரும்பிப் போங்கள்" என்ற கோஷம் வேறு.

அண்ணா ஏற்றிய கொடி மரத்தை வீழ்த்தினார்கள் கலகக்காரர்கள். அமளி தொடங்கியது. பெரியாரையும், அண்ணாவையும் பாதுகாப்பாக அனுப்பி வைத்தார்கள். அந்த கும்பலின் கையில் தலைவர் கலைஞர் மாட்டினார். பலத்த அடிக்கு இடையே தலைவர் தப்பி ஓடுகிறார். வழியில் இருக்கும் வீடுகளில், பயந்து கதவை சாத்திக் கொள்கிறார்கள்.

ஒரு வீட்டின் கதவு திறந்திருக்கிறது. முன்னால் நின்ற பெண்கள் வாய் திறக்கவில்லை. அந்த வீட்டினுள் நுழைகிறார், தப்பிக்க. உள்ளே நுழைந்து பார்த்தால் எங்கும் மது பாட்டில்கள். அப்போது தான் புரிகிறது, அது தான் கலகம் நடத்த திட்டமிட்ட இடம் என்பது. அதற்குள் கலகக் கும்பல், தலைவரை பிடித்து விட்டது. ஆளாளுக்கு அடிக்க, தலைவர் மயக்கமுற்றார். இறந்துவிட்டார் என எண்ணி சாக்கடையோரம் தூக்கி வீசி விட்டு சென்று விட்டனர்.

இரண்டு மணி நேரம் கழித்து தான் விழித்து பார்க்கிறார். ஒரு வீட்டு தாழ்வாரத்தில் படுக்க வைக்கப் பட்டிருக்கிறார். ஒரு சிறுமி மற்றும் இளைஞனோடு ஒரு வயதான தாயும் இருக்கிறார். "அய்யோ, யார் பெற்ற பிள்ளையோ ! இப்படி சாகக் கிடக்கிறதே?", என்று அந்த தாயின் கனிவான வாசகம் தலைவர் நெஞ்சில் பதிந்து விட்டது. இதை தனது "நெஞ்சுக்கு நீதி" தன் வரலாற்று நூலில் பதிவு செய்திருக்கிறார்.

தலைவர் கலைஞருக்கு என்ன ஆயிற்று என்று பெரியாரும், அண்ணாவும் துடித்துக் கொண்டிருந்தார்கள். அவரை  ஊர் முழுதும் ஆட்கள் தேடிக் கொண்டிருந்தார்கள். விடியற்காலை தலைவர்களிடம் சென்று சேர கலைஞர் புறப்படுகிறார். கலகக்காரர்களிடம் மாட்டினால் ஆபத்து என, காப்பாற்றிய வீட்டார் அவரை மாறுவேடத்தில் செல்ல சொல்கிறார்கள்.

தலையில் குல்லா, நீண்ட ஜிப்பா, கைலி என இஸ்லாமியர் வேடத்தில் ரிக்‌ஷாவில் ஏறி சென்றார். பெரியார் தூங்காமல் காத்திருந்தார். தலைவர் கலைஞரை கண்டதும் கலங்கிய பெரியார் கட்டி அணைத்துக் கொண்டார். அவரே காயங்களுக்கு மருந்திட்டார். "என்னுடன் வா, போகலாம்" என பெரியார் ஆணையிட்டார். தலைவரும் உடன் சென்றார். ஈரோட்டுக்கு பயணம். "குடியரசு" பத்திரிக்கையில் துணை ஆசிரியர் ஆக்கினார் பெரியார். துணை ஆசிரியரானது, தலைவர் கலைஞரது அரசியல் வாழ்வில் ஒரு மைல் கல்.

இந்த நிகழ்வில் தாக்கப்பட்டு இறந்து விட்டார் என்று முடிவெடுத்து அவர்கள் செல்ல, தப்பியவர் வாழ்வின் அடுத்தக் கட்டத்திற்கு சென்றார். இது போல் விபத்தில், இயற்கை சீற்றத்தில், உடல் நலக்குறைவில் பாதிக்கப்பட்டு இறந்து விட்டார் என்ற வதந்திகள் பரவி , அதை தாண்டி வந்து சாதனைகளை தொடர்ந்தார் கலைஞர்.

இப்போது ஜெயலலிதாவின் மருத்துவமனை செய்திகளுக்கு பிறகு மக்களுக்கும் குழப்பம், கலைஞர் உடல்நலம் குறித்து. இப்போதும் வந்து விட்டார் மீண்டு.

# போராட்டமே வாழ்க்கை, வெல்வதே வாடிக்கை !

திங்கள், 19 டிசம்பர், 2016

தொண்டனுக்கு அடையாளம்

"1967க்கு முன்னால் திமுக பொதுக்குழு கூட்டம். 'சி.பா.ஆதித்தனார் கழகத்தின் சார்பில் போட்டியிட  விருப்பம் தெரிவித்துள்ளார்', என்றார் அண்ணா. பொதுக்குழு நிசப்தமாகி விட்டது. பின் வரிசையில் உட்கார்ந்திருந்த ஒரு இளைஞர் கரம் உயர்த்தி கேள்வி கேட்டார், 'எந்த சின்னத்தில் போட்டியிட போகிறார்'. அவர் தான் கோ.சி.மணி.  அண்ணா, மணியிடத்தில் கொண்டிருந்த உரிமையின் காரணமாக சொன்னார்,'உதயசூரியன் சின்னத்தில் தான் போட்டியிட போகிறார். உட்கார் மணி' என்றார்.

அடுத்து மதுரையில் இன்னொரு பொதுக்குழுவிற்கு சென்றார் மணி. சில நண்பர்கள் விவகாரத்தை ஆரம்பித்து விட்டார்கள், பொதுக்குழு வேறு மாதிரி சென்றது. தலைவர் கலைஞர் கழுத்தைத் தூக்கி அப்படி பார்த்தார். காரணம், மணி உட்கார்ந்திருக்கிற இடம் தலைவருக்கு தெரியும். வில்லிலிருந்து புறப்பட்ட அம்பு போல் பாய்ந்து வந்து கேட்டார்  மணி, 'நான் மூன்று கேள்வி கேட்கிறேன்'. கேள்வி கேட்டவன் இருந்த இடம் தெரியவில்லை. அது தான் மணி.

இன்னொரு முறை வேறொரு சம்பவம். தலைவர் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளா தஞ்சை வந்தார். எதிரிகள் வேல், கம்போடு நிற்கிறார்கள் என்று ஒருவர் நகர்ந்து விட்டார். தலைவர் கோபமாகி, 'என்ன மணி?' என்றார். 'கொஞ்சம் இருங்க,பொறுங்க' என்றார் மணி. பிறகு அங்கு போனால், ஒருத்தரும் இல்லை, எந்த பிரச்சினையும் இல்லை. 'என்ன மணி?' என்றார் தலைவர். 'அவன் அரை பர்லாங் அந்த பக்கம் போயிட்டான்' என்றார் மணி. தலைவர் சொன்னார்,"இது தான் மணி".

இந்த இயக்கம், கொடி, சின்னம் எங்களுக்கு சொந்தம் என்று ஒருவன் சொன்னான். வழக்கு உச்ச நீதிமன்றம் போய்விட்டது. பொதுக்குழு எங்கு நடத்தலாம் என்ற போது, தலைவர் சொன்னார் 'மணி இருக்கும் ஊரில் நடத்துவோம்'. அந்த பொதுக்குழு தான் வழக்கை வெல்ல வைத்தது. அதற்கு பிறகு தான் சின்னம், கொடி, அறிவாலயம் ஆகியவை திமுகவுக்கு சொந்தம். திமுக கலைஞருக்கு சொந்தம் என்று வந்தது. இந்த இயக்கத்தை காத்த பெருமகனை வணங்குகிறேன்", என்று தன் புகழாரத்தில் குறிப்பிட்டார் கழகத்தின் முதன்மை செயலாளர் அண்ணன் துரைமுருகன்.

மறைந்த முன்னாள் அமைச்சர் மரியாதைக்குரிய கோ.சி.மணி அவர்கள் படத்திறப்பு நிகழ்ச்சி இன்று (18.12.2016) மாலை, கும்பகோணம் நகரில் நடைபெற்றது.

தலைவர் கலைஞர் உடல்நலம் குன்றியிருக்கிற நேரத்தில், தளபதி அவர்கள் வர இயலுமா என்ற கேள்வி, தஞ்சை மாவட்டக் கழக தோழர்கள் மத்தியில் எழுந்திருந்தது. ஆனால் வருத்தம் நீக்கும் வகையில் தளபதி வருகை தந்து, அய்யா மணி அவர்கள் படத்தை திறந்து வைத்தார். அப்போது அவர் ஆற்றிய உரை.

" ஒரு ஊராட்சியின் தலைவராக இருந்த ஒருவர், உள்ளாட்சித் துறை அமைச்சராக வந்தார் என்றால் அது அண்ணன் கோ.சி.மணி அவர்களாகத் தான் இருக்கும். நான் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த போது , உள்ளாட்சியில் நல்லாட்சி கண்டவர் என்பார்கள் என்னை. ஆனால் என்னை பொறுத்த வரையில், அதற்கு மிகப் பொருத்தமானவர் அண்ணன் கோ.சி.மணி அவர்கள் தான்.

அண்ணன் மணி அவர்கள் மறைவுற்ற நேரத்தில் மருத்துவமனையில் இருந்த தலைவர் கலைஞர் அவர்களிடம், தயங்கி, தயங்கி சொன்னோம். கலைஞர் அழுது விட்டார்.

கட்சிக்கு சோதனை ஏற்பட்ட போது, பொதுக்குழுவை கூட்ட தஞ்சையை தேர்ந்தெடுக்க காரணம், அண்ணன் கோ.சி.மணி அவர்கள் மாவட்ட செயலாளராக இருந்தது தான்.

ஒரு மாவட்ட செயலாளர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அடையாளம் தான் அண்ணன் கோ.சி.மணி அவர்கள். ஒரு அமைச்சர் எப்படி பணியாற்றிட வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டு அவர் தான். ஒரு இயக்கத்தினுடைய தளகர்த்தர் எப்படி வழி நடத்திட வேண்டும் என்பதற்கும் அண்ணன் கோ.சி.மணி அவர்கள். ஆக தளகர்த்தர், அமைச்சர், மாவட்ட செயலாளர் என்பதை தாண்டி ஒரு கட்சியினுடைய தொண்டன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அடையாளமாக இருந்திருக்கிறார் கோ.சி.மணி.

2001ல் எதிர்கட்சியாக கழகம் செயல்பட்ட நேரம். ஜெயலலிதா முதலமைச்சர். நமது ஆட்சியை குற்றம் சாட்டி பேசும் போது ஜெயலலிதா, 'சோடியம் விளக்குகளை திமுக ஆட்சியில் போட்டதால் மின்சாரம் அதிகமாகிறது. எனவே அதனை மாற்றி டியூப்லைட் போட்டேன்' என்று சாதனை போல் பேசினார். உடனே 'சிக்கனம்னா  அதையும் மாத்திட்டு அரிக்கேன் விளக்கை ஏற்றி வையுங்களேன்' என்று சொன்னவர் அண்ணன் கோ.சி.மணி. நாங்கள் அசந்து போய் உட்கார்ந்திருந்தோம். அப்போது நாங்கள் சிரித்து விட்டோம். ஆனால் இப்போது நினைத்தால் அழுகை வருகிறது.

இதைவிட இன்னொரு செய்தி. அண்ணன் கோ.சி.மணி கூட்டுறவுத் துறை அமைச்சர். அவரது மனைவி இறந்து விட்டார். நான் அஞ்சலி செலுத்த வந்தேன். மாலை வைத்து வணங்கினேன். என்னை கையை பிடித்து சற்று தள்ளி அழைத்து சென்றார். நான் அப்போது உள்ளாட்சித் துறை அமைச்சர். 'கும்பகோணம் தேரோடும் வீதியை சீர் செய்ய வேண்டும். அதற்கு நிதி ஒதுக்கி தர வேண்டும்' என்று என்னிடத்திலே கேட்டார். இப்போது நினைச்சாலும் என் நெஞ்சு பதறுகிறது. அவர் எந்த அளவுக்கு ஏற்றுக் கொண்டிருக்கிற பொறுப்பிலே கவனம் செலுத்தினார் என்பதற்கு இது தான் சான்று".

தளபதியின் இந்தப் பேச்சை கேட்ட நிகழ்வில் இருந்தவர்கள் கலங்கி விட்டோம்.

# இன்னொரு மனிதன் கோ.சி.மணியாக பிறக்கவும் முடியாது, உருவாகவும் முடியாது !