பிரபலமான இடுகைகள்

செவ்வாய், 28 ஏப்ரல், 2015

பெயரை கேட்டால் அனைவரும் மிரள்வார்கள்...

பெயரை கேட்டால் அனைவரும் மிரள்வார்கள். பெயர்: பக்கிரி. சினிமாக்களால் பக்கிரி என்ற பெயர் அப்படி ஆகிப் போனது.

   

அதிலும் திமுக நகர செயலாளர், அதிலும் ஏழு முறை நகர செயலாளர், தலைமை செயற்குழு உறுப்பினர் என்றால், மிரட்சிக்கு கேட்கவே வேண்டாம்.

அவர் பொன்.பக்கிரி. அரியலூர் நகர திமுக செயலாளர். அப்போது அரியலூர் பேருராட்சி தலைவர். அதிலும் மாவட்டத்தில் மூத்த தலைவர்.

அரசு அதிகாரிகள் இப்படி, அவரைப் பற்றி கேள்விப்பட்டு மிரண்டு போயிருப்பார்கள். ஆனால் நேரில் சந்திக்கும் போது தான், தலைகீழாக போய்விடும்.

தான் யாருக்காக சிபாரிசுக்காக போகிறாரோ, அவர்களை விட இவர் கெஞ்சிக் கேட்க ஆரம்பித்து விடுவார்.

"அய்யா, இவங்க ரொம்ப ஏழை. நீங்க தான் பார்த்து காப்பாற்றனும். அதனால தான் நேரில் வந்தேன்" என்று சொல்வதிலேயே வேலை முடிந்துவிடும்.

அப்படிப்பட்ட எளிய மனிதர், அய்யா பொன்.பக்கிரி.

பதின் வயதுகளிலேயே, கழகத்தில் இணைந்து விட்டார். திமுக எதிர்கட்சியாகக் கூட வருமா என நினைத்திடாத காலம் அது. அவரது கழகப் பணி, பதவியை கொண்டு வந்து சேர்த்தது.

1978 -ல் அரியலூர் நகர செயலாளராகப் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப் பட்டார். அதிலிருந்து போட்டியிட்டும், ஒருமனதாகவும் ஏழு முறை நகர செயலாளர். இது வரலாறு.

56-வது வயதில் தான் அரசியல் பதவிக்கு வந்தார். 1996ல் அரியலூர் பேரூராட்சி தலைவர், நீண்ட போராட்டத்திற்கு பிறகு.

அப்போது அரியலூரில் குடிநீர் பிரச்சினை. உள்ளாட்சி அமைச்சர் கோசி.மணி அவர்களை சந்தித்தோம். அவர் சட்டப்படி புதிய திட்டம் வழங்க முடியாது என்று கூறிவிட்டார்.

அய்யா பொன்.பக்கிரி தன் வழியில் போனார். உயர் அதிகாரியை சந்தித்தார். தன் பாணியில் பேசினார். 10 கோடிக்கு புதிய போர்வெல் திட்டம் வாங்கினார். அது தான் பொன்.ப.

ஜெயலலிதா முதல்வராகி, சென்னை கடற்கரையில் கண்ணகி சிலை அகற்றப் பட்ட நேரம். தமிழகம் எங்கும் கண்ணகி சிலை வைக்கப்படும் என்று தலைவர் கலைஞர் அறிவித்தார்கள்.

தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் முதல் கண்ணகி சிலையை அன்பகத்தில் வைத்தார்கள். இரண்டாம் கண்ணகி சிலையை அரியலூரில் நிறுவ பொன்.ப என்னை தயார் படுத்தினார்.

நான் ஒப்புக் கொண்ட நாள் மாலையே, தஞ்சாவூர் சென்று சிலைக்கு ஆர்டர் கொடுத்தார். இரண்டு நாட்களுக்கு ஒரு முறை சென்று சிலை வடிவம் பெற பாடுபட்டார்.

தளபதி அவர்களை அழைத்து வந்து சிலை திறப்பு விழா நடத்தினோம். தமிழகத்தில் இரண்டாவது கண்ணகி சிலையை வைத்த பெருமையை அவர் தான் எனக்குப் பெற்றுக் கொடுத்தார்.

அது மட்டுமல்ல, அமைச்சர்களை, அரசு அதிகாரிகளை அணுகி திட்டங்களை பெறுவதற்கு அவர் தான் எனக்குப் பயிற்றுனர்.

இதைத் தாண்டி, நான் 1999_ல் மாவட்ட செயலாளர் தேர்தலில் போட்டியிட மூலக் காரணமாக இருந்தவர்கள் இருவர். என் தந்தையாருக்கே அந்த எண்ணம் ஏற்ப்படக் காரணமானவர்கள் இருவர்.

ஒருவர் மறைந்த பெரியவர் அய்யா எஸ்.இராமசாமி. இன்னொருவர் அய்யா பொன்.பக்கிரி.

இன்று மறைந்து விட்டார்.

எனது அரசியல் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் அவரது பங்கு இருக்கிறது. என் வாழ்நாளுக்கும் மறக்காது, மறக்க முடியாது.

# அய்யா பொன்.ப புகழும், நினைவும் என்றும் நிலைத்திருக்கும் !

திங்கள், 27 ஏப்ரல், 2015

பாரீஸ், நல்ல பாரீஸ், நம்ம பாரீஸ் !

"பாரீஸ் போயி வில்ஸ் பாக்கெட் வாங்கிகிட்டு வாடா". சரி, இதுவும் ரேகிங்கில் ஒரு பகுதி என நினைத்தேன். என்ன சொன்னால் அடி விழாது என்று யோசித்தேன்.

            

பிளாஷ்பேக் ரிவைண்டினேன். "பேர் என்னா ?", "சிவசங்கர்", பொளிச், கன்னம் உள்வாங்கியது. "அப்பா இல்லாமலா வந்துட்ட, இனிஷியல் சேர்த்து சொல்லுடா"

அடுத்த முறை. "பேர் என்னா?", "எஸ்.சிவசங்கர்", பொளிச். "பெரிய ஜமீன்தார் பரம்பரை. இனிஷியலோட தான் சொல்லுவியா?". "சாரி சார்".

ஜாக்கிரதையாக பதில் சொன்னேன், இப்போது. "என் கிட்ட பாஸ்போர்ட் இல்லிங்க சார்". "அதுக்கு என்னா?". "பாரீஸ் போக பாஸ்போர்ட் வேணுங்களே சார்". இப்போதும் பொளிச்.

"கிண்டல் பண்றீயாடா. பாரிஸ் கார்னர் போய்ட்டு வாடா". கல்லூரியில் சேர்ந்த இரண்டாம் நாள். பாரீஸ் கார்னர் இப்படி தான் அறிமுகமானது.

அட்மினி கட்டிடத்தில் இருந்து சிறிது தூரம் நடந்தால், வழியில் தமிழ்துறை, இசைத்துறை எனக் கடப்போம். அந்த சாலையின் கடைசியில் வேளாண் கல்லூரி. வழியில் இருக்கும் கடைவீதி தான் நம்ம "பாரீஸ் கார்னர்".

போகப்போக பாரீஸ் வாழ்க்கையின் ஓர் அங்கம் ஆகியது. அதுவும் முதலாண்டு ஹாஸ்டலான முல்லை இல்லத்திற்கு அருகில் இருந்ததால், மாலை நேரம் அங்கு தான் கழியும்.

இந்த பாரீஸ் கார்னர் பெயரில் தான் பாரீஸ், பாரீஸ் நகர் போல கேளிக்கை மையமும் கிடையாது, பணக்கார மையமும் கிடையாது. ஏழைக்கேத்த எள்ளுருண்டை மையம்.

கையிருப்பு குறைவாக இருக்கும் நேரங்களில் மாணவர்களின் பொழுதுபோக்கு மையம் அது தான். ஒரு டீயை குடித்துவிட்டு ஒரு மணி நேரத்திற்கு கதை நீளும். இன்னும் கொஞ்சம் காசிருந்தால், ஒரு ஆம்லேட்.

டைப்பிங் , ஜெராக்ஸ் என சிதம்பரம் நகருக்கு செல்லத் தேவை இல்லாமல் இங்கேயே பல பணிகள் முடியும். இப்படி ஒரு மினியேச்சர் சிதம்பரம் நகரம். அங்கேயே ஒரு கோவிலும் உண்டு. பசுபதீஸ்வரர் கோவில். 

இரண்டாம் ஆண்டு. கல்லூரிக்கு அருகில் இருக்கும் விடுதிக்கு ஜாகை மாறிய பிறகு, பாரீஸ் தூர தேசமானது. மெல்ல மெல்ல அவுட் ஆப் போகஸில் போனது.

எப்போதாவது அக்ரி, கலை, அறிவியல் துறை நண்பர்களை சந்திக்கும் மையப் புள்ளியாக மாறிப் போனது.

ஆனால் ஒரு குருப்புக்கு எப்போதும் அது கோடை வாசஸ்தலம் தான். காரணம், ஒரு விதத்தில் அந்த பாரீஸ் நகரை ஒத்து போகும் இந்த பாரீஸ்.

அந்த பாரீஸில் ஃபேஷன் ஷோ பிரபலம். இந்த பாரீஸில் அப்படி இல்லை என்றாலும், அருகில் தான் தாமரை இல்லம். அதனால் சாதாரண காட்சி உண்டு.

தாமரை இல்லம், பெண்கள் விடுதி என்பது அண்ணாமலை பல்கலைக்கழகத்தை அறிந்தவர்களுக்கு தெரிந்த செய்தி.

பாரீஸ் பல ரோமியோக்களை, தேவதாஸ்களை, ஜாக்கிசான்களை, கமலஹாசன்களை, செந்தில்களை உருவாக்கிய இடம்.

# எப்படியோ எல்லோர் மனதிலும் நிறைந்த பாரீஸ் !

சனி, 25 ஏப்ரல், 2015

ஒடுக்கப்பட்டோருக்காக குரல் கொடுத்த "மனிதன்" !

இது அண்ணன் திருச்சி சிவா அவர்களின் வாழ்நாள் சாதனை. திருநங்கைகள் வாழ்வில் ஓர் பொன்னாள். திமுக-வின் சமூகநீதிப் போராட்டத்தில் ஒரு முக்கிய மைல்கல்.

      

பாராளுமன்றத்தில் அரசு கொண்டு வரும் மசோதாக்கள் தான் சட்டமாக வடிக்கப்படுகின்றன. பாராளுமன்ற உறுப்பினர்கள், ஒரு பொதுப் பிரச்சினைக்காக மசோதா கொண்டு வரும் வாய்ப்பும் பாராளுமன்றத்தில் உள்ளது.

ஆனால் இது போன்று தனி நபர் தீர்மானம் 1970-ல் ஒரு முறை நிறைவேற்றப் பட்டிருக்கிறது. அதற்கு பிறகு 45 ஆண்டுகள் கழித்து இந்த தீர்மானத்தை கொண்டு வந்து அனைவர்ஆதரவோடும் நிறைவேற்றியது அண்ணன் சிவா அவர்கள் சாதனை.

அதிலும் அவர் யாருக்காக இந்த முயற்சியை எடுத்துக் கொண்டார் என்பது தான் முக்கியமானது. திருநங்கைகளுக்காக என்பது தான் வரலாறு. தமிழகத்தில் இன்றும் திருநங்கைகளுக்கு பெரிய அளவில் மரியாதை கொடுப்பதில்லை.

ஆனால் வடமாநிலங்களில் திருநங்கைகள் இல்லாமல் எந்த நிகழ்ச்சிகளும் நடத்தமாட்டார்கள். குழந்தை பிறந்த உடன் திருநங்கைகள் ஆசீர்வதிக்க வேண்டும் என்பது இன்றும் மரபாகவே இருக்கிறது. ஆனால் அவர்களுக்காக அந்த வடபுலத்தில் இருந்து குரல் வரவில்லை.

தமிழகத்திலிருந்து கழகக் குரல் தான் ஒலித்திருக்கிறது. அதற்கு காரணம் உண்டு. சமூகநீதி தான் இதற்கு அடிப்படை. சமூகத்தில் யார் எல்லாம் புறக்கணிக்கப் படுகிறார்களோ, அவர்களுக்காக குரல் எழுப்பியவை திராவிட இயக்கங்கள் தான்.

மதரீதியாக, சாதி ரீதியாக ஒடுக்கப்பட்டோருக்கு மட்டும் குரல் கொடுக்கவில்லை திராவிட இயக்கம். மகளிருக்கு சம உரிமை கேட்டதும் திராவிட இயக்கம் தான், தந்தை பெரியார் தான்.

அந்த அடிப்படையில் தான் புறக்கணிக்கப்பட்ட சமூகமாக விளங்கிய மூன்றாம் பாலினத்தனருக்கு முதன் முதலில் அங்கீகாரம் வழங்கினார் தலைவர் கலைஞர்.

குடும்ப அட்டைகள் கூட வழங்கப்படாமல் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தவர்களுக்கு, முதன்முதலில் வழங்கியது தலைவர் கலைஞர் ஆட்சியில் தான். 15.04.2008 அன்று ‘தமிழ்நாடு அரவாணிகள் நல வாரியம்’ தொடங்கப்பட்டது.

அடையாள அட்டைகள், தொகுப்பு வீடுகள், வீட்டுமனைப் பட்டாக்கள், காப்பீடு திட்ட மருத்துவ அட்டைகள் என அனைத்து விதமான உதவிகளும் தலைவர் கலைஞர் ஆட்சிக் காலத்தில் தான் வழங்கப்பட்டன. அது வரை இந்த அடிப்படை உரிமைகள் கூட இல்லாமல் தான் வாழ்ந்திருந்தனர்.

இதன் தொடர்ச்சியாகத்தான் இந்த தனி நபர் மசோதாவை திராவிட இயக்கத்தின் பிரதிநிதியாக நின்று அண்ணன் சிவா அவர்கள் கொண்டு வந்திருக்கிறார்கள். அவரது உணர்வை வணங்குகிறேன். அவரது பணியை நினைத்து பெருமிதம் கொள்கிறேன்.

இனி அவர்களுக்கு “சம உரிமை” கிடைப்பதற்கான சட்டப்பூர்வமானப் பணிகள் துவங்கிவிடும்.

# இந்திய திருநங்கையர்களின் கலங்கரை விளக்கு அண்ணன் சிவா வாழ்க !

செவ்வாய், 21 ஏப்ரல், 2015

இதை தான்யா அவரும் சொன்னாரு...

இதை தான்யா எங்க பகுத்தறிவு பகலவன் சொன்னாரு. நான் சொல்றன்னு அப்படியே எடுத்துக்க வேணாம். எதிர்கருத்து இருந்தாலும் சிந்திச்சி செயல்படு.

        

நீ அவரு படத்துல சிறுநீர் கழிச்சிக்கோ, செருப்பால அடிச்சிக்கோ. ஆனா சுயபுத்தியோட செய். எதிர்ப்பு இருந்தா தெரிவிச்சிக்கோ.

நீ செய்ற செயல் உன் தகுதிய சொல்லுது. இந்த சுதந்திரத்த வாங்கிக் கொடுத்தது அவரு தகுதிய சொல்லுது . அந்தப் படத்தில அவரு சிரிக்கிற சிரிப்பு தான், அவரு உனக்கு கொடுக்கும் பதில்.

வாழ்கன்னு சொன்னாலும், ஒழிகன்னு சொன்னாலும் அவரு பெயர தான் சொல்லி ஆகனும். எங்க கிழக்கு சூரியன் இல்லன்னா தமிழ்நாடு இல்லை. அதுக்கு அவரு உழைச்ச உழைப்பு அவ்வளவு.

அவரு தனக்காக உழைக்கவில்லை. தான் பதவிக்கு வரனுன்னு உழைக்கல. தன் கிட்ட இருந்த பதவிய தூக்கி எரிஞ்சுட்டு தான் இந்தப் பணியில இறங்கினாரு, உழைச்சாரு.

அவரு உழைச்சது இருள் சூழ்ந்த தமிழகத்தில் பகுத்தறிவு வெளிச்சம் பரவனும்னு தான். அடிமைகளாய் இருந்த மக்கள் அறிவோடு வரணும்னு தான் பாடுபட்டாரு.

கடவுள் இல்லைன்னு அவரு சொன்னது மட்டும் தான் உனக்கு தெரியுது. பெண்ணுக்கு சம உரிமை கேட்டது அவரு தான்யா. அது தெரியாம ஒரு பெண்ணே செருப்பு தூக்குவது தான் கொடும.

50 வருசத்துக்கு முன்னால ஆணுக்கு சமமா பெண்கள் நாற்காலியில உட்கார முடியுமா? அதுக்கு முன்பே சொத்தில் சமபங்கு கொடுக்கனும்னு போராடியவர் அய்யா எங்கள் பெரியார்.

தோளில் துண்டு போட உரிமை இல்லை, காலில் செருப்பு போட உரிமை இல்லை. சில தெருக்களில் மற்றோர் நடக்க உரிமை இல்லை என்ற காலத்தில் உரிமைக் குரல் கொடுத்து, புரட்சி செய்தவன் அய்யா எங்கள் பெரியார்.

அவன் வாங்கிக் கொடுத்த சமூக சுதந்திரம் தான் உன்னை தெருவில் நடக்க வைத்தது. அந்த சுதந்திரம் தான் இப்போ அவர் படத்தின் மீது உனக்கு சிறுநீர் கழிக்கும் தைரியத்தையே தந்திருக்கு.

சிறுநீர் கழி, செருப்பு வீசு, இகழ்ந்து பேசு எதுவும் அவன் புகழை குறைக்க முடியாது. அவன் கொள்கைகளை மறைக்க முடியாது.

தாலியில் கட்டி எங்கள் சூரியனையை ஆத்திக நீரில் அமிழ்த்து விட முடியாது. அவர் கடவுள் மறுப்பைத் தாண்டி மனித உரிமைக்கு போராடிய போராளி.

நீ கழிக்கும் சிறுநீர் எம் கொள்கைக்கு உரம் சேர்க்கும், நீ வீசும் செருப்பு எம் அறிவுப் போருக்கு துருப்பாகும்.

# கிழவன் அல்லடா, அவன் கிழக்கு திசை. நெருப்பாய் தகிப்பான் என்றும் !

அப்ப ஒரு வார்த்தை, இப்ப ஒரு வார்த்தை இல்ல

தொலைக்காட்சியில் கார்டூன் சேனல் ஓடிக் கொண்டிருந்தது. சின்ன மகன் ரசித்துக் கொண்டிருந்தார். அவரது பேவரிட். பவர் ரேஞ்சர்ஸ் நிகழ்ச்சி.

         

நான் அலைப்பேசியை நோண்டிக் கொண்டிருந்தேன். முகநூலையும், வாட்ஸ் அப் குரூப்களையும் அலசி ஆராயும் முயற்சி தான்.

அறையில் இருந்து திரும்பி வந்த மூத்த மகன் டிவியை பார்த்தார். டென்ஷன் ஆனார். அவர் பார்த்துக் கொண்டிருந்த T20 கிரிக்கெட் மாட்ச் மாற்றப்பட்டிருந்தது.

மும்பை இந்தியன் வகையறா அவர். மும்பை இந்தியன் அணியினர் விளையாடிக் கொண்டிருந்தார்கள். கேம் நெருக்கடியாகப் போய் கொண்டிருந்தது.

இவரே ஸ்டேடியத்தில் இருப்பது போல பதற்றத்தில் இருந்தார். அப்போது ஓவர் இடைவேளை. அதற்கு அவர் அறைக்குள் போய் வருவதற்குள், ரிமோட்டை கைப்பற்றி இருந்தார் சின்னவர்.

அடுத்த ஓவர் ஆரம்பித்திருக்கும் என்ற ஆர்வம் இவருக்கு. "சேனல் மாத்துடா", பெரியவர். "கொஞ்சம் இருடா" சின்னவர். "ரன் ரேட் பாக்கனும்டா"

வாக்குவாதம் வளர ரிமோட்டை கைப்பற்றும் முயற்சியில் அதிரடியாக இறங்கினார் பெரியவர்.

அப்போது தான் சின்னவர் தனது பிரத்யேகமான பன்ச் டயலாக்கை அவிழ்த்து விட்டார். "How dare you to touch the remote?".

இது அவருக்கே சொந்தமான டயலாக். அடிக்கடி எங்கள் மேல் பிரயோகப் படுத்தப்படும், எந்த சூழ்நிலைக்கும் பொருந்தும் வகையில்.

இப்போது சரியாக எண்ட்ரி கொடுத்தார் இணையர். "என்னப்பா பிரச்சினை?" என்றவர் பார்த்த வினாடியில் புரிந்துக் கொண்டார் சூழ்நிலையை. உடனடி தீர்ப்பு கொடுத்தார்.

"அனேகன் படம் வைப்பா ". செம தீர்ப்பு. மொபைலை புறந்தள்ளி நிமிர்ந்தேன். ஆதரித்தேன் தீர்ப்பை. அண்ணன், தம்பி இருவரும் தடுமாறினர் ஒரு நிமிடம்.

சுதாரித்த தம்பி அம்மாவை பார்த்து, "How dare you to tell this" என்று ஆரம்பித்தார்.

நான் இடைமறித்தேன், "இருப்பா ". அவர் என்னை முந்தினார், "How dare you to " என்பதற்குள் நான் முந்தினேன், "இந்தப் படத்தை எத்தன தடவப்பா ஓட்டுவ. நூறு தடவ ஓடிருக்கும் போல"

டயலாக்கை சொன்னேன். வந்த பதிலில் மிரண்டு போனேன். "ஆமாம் அதையே தான் சொல்லுவேன். இப்ப ஒரு வார்த்தை, அப்ப ஒரு வார்த்தை இல்ல, எப்பவும் ஒன்னு தான்". படிக்கிறது நாலாம் வகுப்பு.

"இரு, இரு ஸ்டேடசா போடறன்", மிரட்டினேன். "அய்யய்யோ, என்ன போடப் போறீங்க ?", என்று துருவினார் இணையர். "பேஸ்புக்கில் காண்க" என்றேன்.

சின்னவர் மேலும், கீழுமாக ஒரு பார்வை பார்த்தார்.

இப்போ ஸ்டேடஸ் போட்டாச்சி. அங்க டயலாக் தயாரா இருக்கும்.

# "How dare you to post this status?"

வெள்ளி, 17 ஏப்ரல், 2015

செண்டை மேளம், பரிவட்டம், அதிர்ந்தது ஏற்காடு

வரும் வழியில் பார்த்த ஒரு விஷயத்தை சொல்ல விட்டு விட்டேன். ஒரே கண்டனக் கணை. ஆமாம், ஒருத்தர் இல்ல பத்து பேர்.

ஏற்காடு உள்ளே நுழையும் போது, ஆங்காங்கே சில கட் அவுட்கள் இருந்தன. அரைத் தூக்கத்தில் சரியாக கவனிக்கவில்லை.

கடைசி கட் அவுட் நம்ம ஸ்ரீதர் மாதிரி இருந்தது. அட, அண்ணனுக்கு கட் அவுட்டா , கனவு போல என விட்டுவிட்டேன். போய் இறங்குன அப்புறம் தான் தெரியுது, பத்து கட் அவுட் இருந்திருக்கு.

சத்யா, வாண்டஸ்.செந்தில், காண்டீபன் என நண்பர்களுக்கு வரவேற்பு கட் அவுட். ராம்ஸ் கொஞ்சம் அரசியல்வாதி போல, இப்படி கட் அவுட் வச்சா, அப்படித் தானே தோணும்.

வெளியே இருந்து மெல்லிய ஓசையாகத் துவங்கி அதிர ஆரம்பித்தது. கேரள இசை. வெளியே வந்தோம். செண்டை மேளக் குழுவினர்.

    

நாட்டியமாக அசைந்து ஆடி அதிரடித்தனர் மேளத்தையும், ஜால்ராவையும். வந்தோர் அனைவரும் வெளியே அழைக்கப்பட்டோம். எல்லோருக்கும் பரிவட்டம் கட்டப்பட்டது

கோவில்களிலும், சினிமாக்களிலும் பார்த்த பரிவட்டத்தை, நேரில் தங்களுக்கு அணிவிக்கப் பட்டது பலருக்கும் மகிழ்ச்சி. வெளிநாடுகளிலும், நகரத்திலும் பணிபுரியும் நண்பர்கள் பலர் இதை பார்த்திருக்கவே வாய்ப்பில்லை.

செண்டை மேளம் முழங்கிக் கொண்டிருந்தது. உள்ளே மற்றொரு அரங்கில் இருந்து வெண்புகையாய் கசிந்தது. மேகம் தான் கீழிறங்கியதோ என்று சந்தேகம்.

உள்ளே நுழைந்தோம். புகை வந்த மர்மம் புரிந்தது. பனிக்கட்டியில் இருந்து புகை. பனிக்கட்டி என்றால் சிறுகட்டிகள் அல்ல, சுவர் போல.

ஐஸ் பார்களாலேயே அமைக்கப்பட்ட மேஜை, ஜில்லென்று . அதன் மேல் வரிசையாக கண்ணாடிக் குவளைகள். அமைப்பு ஸ்டார் ஹோட்டலை மிஞ்சியது.

அடுத்து கண்ணில் பட்டவை தலை சுற்ற வைத்தன. எதை எடுப்பது, எதை சுவைப்பது. பொன்னிறமாக சிக்கன் வறுவல். காரமாக காடை ஃபிரை. மொறு மொறுப்பாக மீன் வருவல்.

பிரியாணி மணக்க ஆரம்பித்தது. பந்தி துவங்கியது. சோறு, மட்டன் குழம்பு எனத் தொடங்கி மோரில் முடிக்கும் போதே அசதியானது.

கண்ணை இழுத்தது, உண்ட மயக்கம். ஓய்வு முடிந்து மீண்டும் மாலை நிகழ்ச்சிகள்.

பெங்களூரிலிருந்து ஈவெண்ட் மேனேஜ்மெண்ட் குழு வந்து இறங்கியது.
(தொடரும்)
(2009-ல் நடந்த அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் சந்திப்பு. ஏற்காடு. பாகம் - 3)

வியாழன், 16 ஏப்ரல், 2015

துறுதுறுப்பான இளைஞர் மணி...

எந்தக் கூட்டமாக இருந்தாலும் பளிச் என்று தெரிவார் மணி. தெரிந்தவர்கள் என்றால் உடனே ஒரு சிரிப்பு, வணக்கம். துறுதுறுப்பான இளைஞர்.

   

திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் ஐ.பி.செந்தில்குமாரின் நண்பர், அவரது நிழலாகவே இருப்பார். அவரது கண்களும், காதுகளுமாக செயல்படுவார்.

சகோதரர் செந்தில் அவசரத்தில் , வேலை நெருக்கடியில் யாரையாவது கவனிக்கத் தவறிவிட்டால், மணி குறிப்பால் உணர்த்துவார். செய்திகளை கொண்டு சேர்த்து விடுவார்.

சகோதரர் செந்தில் அவர்களோடு எப்போதும் ஒரு இளைஞர் பட்டாளம் இருக்கும். அதிலேயே இளையவராக மணி தான் இருப்பார் என நினைக்கிறேன்.

மணி கண்ணில் தட்டுப்பட்டால், சுற்று வட்டாரத்தில் ஐ.பி.எஸ் இருக்கிறார் என முடிவு செய்து கொள்ளலாம். இனி அப்படி கணக்கிட முடியாது. காரணம், மணி இருக்கமாட்டார்.

ஆமாம் மணி மறைந்து விட்டார். விபத்தில் சிக்கி உயிரிழந்து விட்டார்.

மணிகண்டன் , திண்டுக்கல் மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவையின் துணை அமைப்பாளர். மாவட்டம் முழுவதும் பிரபலம்.

சகோதரர் செந்தில் மாநில இளைஞர் அணி துணை செயலாளராக தமிழகம் முழுதும் பயணித்தப் போது, உடன் பயணித்ததால், மாநிலம் தழுவிய தொடர்புகள்.

இணையத்தில் இயங்கியதால் , உலகம் முழுதும் பரவி இருக்கிற கழக உடன்பிறப்புகளோடு உறவு என சிறு வயதிலேயே எல்லோர் மனதிலும் இடம் பிடித்தவர்.

சகோதரர் செந்திலோடு மணியை முன்னரே பல முறை பார்த்திருந்தாலும், சங்கரன்கோவில் இடைத்தேர்தல் போது, நெருக்கமான பழக்கமானார்.

அதற்கு பிறகு எங்கு பார்த்தாலும் உடன் அருகே வந்து, "அண்ணா, நலமா?" என்று விசாரிக்காமல் நகர மாட்டார். இனி அந்த அன்போடு நலம் விசாரிக்க மணி இருக்கமாட்டார்.

இனி சகோதரர் செந்தில் வரும் போது கண்ணில் பட மாட்டார், தம்பி மணி.

# ஆனால் நெஞ்சை விட்டு அகல மாட்டார் !

செவ்வாய், 14 ஏப்ரல், 2015

மன்மத "புத்தாண்டு" வாழ்த்துக்கள் !

நினைத்தது நடக்கவில்லை என்றால் கடவுளிடம் முறையிடுவது இயல்பு தானே. அப்படி தான் நாரதரும் கிருஷ்ண பரமாத்மாவிடம் முறையிட்டார்.

     

“பரமாத்வே இது நியாயமா?” என்றார் நாரதர்.
“எது?” என்றார் கிருஷ்ண பரமாத்மா.
“60,000 காதலி வைத்திருக்கிறீர்களே” நாரதர்.
“சரி, அதற்கென்ன நாரதரே?” கிருஷ்ணபரமாத்மா.
“நான் ஒரு காதலி கூட இல்லாமல் அவதிப்படுகிறேன். எனக்கு ஒரு காதலி அளித்து உதவக்கூடாதா?” நாரதர்.
“ஒன்று செய்யுங்கள் நாரதரே. என்னை மனதில் நினைக்காத பெண் இருந்தால் முயற்சியுங்கள்” கிருஷ்ணபரமாத்மா.

நாரதரும் கிளம்பினார். சுற்றிச் சுற்றி வந்தார். 60,000 வீட்டுக்கும் நேரடியாக போனார். எல்லோரிடமும் வினவினார், “யாராவது கிருஷ்ண பரமாத்மாவை மனதில் நினைக்காமல் இருக்கிறீர்களா?”

எங்கே போனாலும் ஒரே பதில் தான். எல்லா ஸ்திரிகளும் அதையே கூறினார்கள். 

“கிருஷ்ணபரமாத்மா தான் எம் மனம் முழுதும் நிறைந்திருக்கிறார்” என்ற பதில் தான் திரும்ப, திரும்ப ஒலித்தது. அது நாரதர் காதில் எதிரொலிக்க ஆரம்பித்தது.

நாம் பார்த்த 60,000 பெண்களாலும் காதலிக்கப்படுகிறவர் என்றால் கிருஷ்ண பரமாத்மா எத்தகைய ஆண் மகனாக இருக்க வேண்டும் என்ற எண்ணம், நாரதரின் மனதில் வேறு சிந்தனையை உருவாக்கியது.

இப்போது அவர் கிருஷ்ணர் மேல் காதல் கொண்டார். கிருஷ்ணனிடம் சென்றார். 

“இவ்வளவு பேர் உன் மேல் கொண்டுள்ள காதலைக் கண்டு, நானும் மையலானேன். என்னை பெண்ணாக்கி 60,001-வது காதலியாக ஏற்றுக் கொள்” என்று வேண்டினார்.

“யமுனையில் சென்று குளித்து வா, நீ பெண்ணாவாய். ஏற்றுக் கொள்கிறேன்” என்றார் கிருஷ்ண பரமாத்மா. நாரதரும் அவ்வாறே யமுனைக்கு சென்று நீராட, அழகியப் பெண்ணாய் மாறினார்.

பெண்ணான நாரதர் கிருஷ்ணரை சந்தித்தார். காதலனானார். கரம் பிடித்தார். காலம் எல்லாம் வாழ்ந்திட்டார். இல்லறத்தின் நல்லறமாய் 60 ஆண்டுகளில், 60 பிள்ளைகள் பிறந்தன.

முதல் பிள்ளைக்கு பிரபவ என பெயர் சூட்டினர். அடுத்த அடுத்த பிள்ளைகளுக்கு பின்வரும் பெயர்களை சூட்டினர்.

விபவ, சுக்ல, பிரமோதூத, பிரசோற்பத்தி, ஆங்கீரச, ஸ்ரீமுக, பவ, யுவ, தாது, ஈஸ்வர, வெகுதானிய, பிரமாதி, விக்கிரம, விஷு, சித்திரபானு, சுபானு, தாரண, பார்த்திப, விய, சர்வசித்து, சர்வதாரி, விரோதி, விக்ருதி, கர, நந்தன, விஜய, ஜய, மன்மத, துன்முகி, ஹேவிளம்பி, விளம்பி, விகாரி, சார்வரி, பிலவ, சுபகிருது, சோபகிருது, குரோதி, விசுவாசுவ, பரபாவ, பிலவங்க, கீலக, சௌமிய, சாதாரண, விரோதகிருது, பரிதாபி, பிரமாதீச , ஆனந்த, ராட்சச, நள, பிங்கள, காளயுக்தி, சித்தார்த்தி, ரௌத்திரி, துன்மதி, துந்துபி, ருத்ரோத்காரி, ரக்தாட்சி, குரோதன, அட்சய.

அந்த அந்த பிள்ளைகளின் பெயரிலேயே அந்த ஆண்டுகளுக்கும் பெயர் சூட்டினார் கிருஷ்ண பரமாத்மா. இந்த அறுபது பெயர்களிலான ஆண்டுகள்., ‘பிரபவ’-வில் துவங்கி ‘அட்சய’வில் முடிந்தவுடன் மீண்டும் ‘பிரபவ’-வில் துவங்கும்.

அப்படி கிருஷ்ண, நாரத தம்பதிகளின் ஒரு பிள்ளையான “மன்மத” பெயர் தாங்கிய ஆண்டு தான், இன்று பிறக்கின்ற ஆண்டு. இது தான் “மன்மத” புத்தாண்டு.
(ஆதாரம்- இந்து ‘அத்தாரிட்டி’ எழுத்தாளர் “ஜெயமோகன்”, “முதன்மையாக இது ஒரு புராணக் கலைக்களஞ்சியம்” என்று சிலாகிக்கும் “அபிதான சிந்தாமணி” நூல்)
உலகிலேயே 60,000 காதலிகளை கொண்ட “முதல்” கடவுள் “கிருஷ்ணபரமாத்மா”.
பெண்ணாய் மாறிய “முதல்” ஆண், “நாரதர்”.
பெண்ணாய் மாறிய ஆணை மணந்த “முதல்” கடவுள் “கிருஷ்ணபரமாத்மா”.
வேற்று மொழியில் ஆண்டுகளின் பெயர்களை கொண்ட “முதல்” மொழி “தமிழ்”

(“நான் இன்னும் பனை ஓலையிலேயே எழுதுகிறேன், பூமி தட்டை என்பதே சரி, ஆதிகாலமே எனக்கு பிடிக்கும், அந்தப் பாரம்பரியத்தை விடமாட்டேன்” என்று மக்களின் முதல்வர் “அம்மா” மீண்டும் இந்தப் புத்தாண்டை கொண்டாட பணித்திருக்கிறார்)

# கிருஷ்ணபரமாத்மா-நாரத இணையரின் மகன் “மன்மத” புத்தாண்டு வாழ்த்துக்கள் !

திங்கள், 13 ஏப்ரல், 2015

பிறந்தநாளில் மட்டுமல்ல, தினம் தினம் வாழ்த்துவேன் !

பதினைந்து வருடமா எதிர்கட்சி எம்.எல்.ஏ-க்கள் இருந்த தொகுதியில் எம்.எல்.ஏ-வுக்கு நிற்கும் போதே தெரியும், கோரிக்கை நிறைய இருக்கும்னு. ஓட்டுக் கேட்க போகும் போதே, கோரிக்கைகள் குவிய ஆரம்பிச்சுது. எதிர்கட்சி எம்.எல்.ஏ-ன்னா பெரிய அளவில் வேலை நடக்காது.

அது 2006 சட்டமன்றத் தேர்தல். ஆண்டிமடம் தொகுதி. வெற்றி பெற்று ஆட்சி அமைந்து விட்டது. கல்வி, சுகாதாரம், உள்ளாட்சி ஆகிய துறைகளில் தான் முக்கியமாகப் பணி நடக்க வேண்டும். அமைச்சர்கள் யார்,யார்-னு பார்த்தேன். நம்பிக்கை பிறந்தது.

      

பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அண்ணன் தங்கம்.தென்னரசு அவர்கள். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் சீனியர். சற்றே தெம்பு வந்தது. சட்டமன்றத்தில் எனக்கு முன் இருக்கை அண்ணனுடையது. மனுக்கள் கொடுக்க வசதியா போச்சு.

முதல்நாளே பிடிச்சிக்கிட்டேன். “1991-ல் இருந்து 2006 வரை மூன்று முறையா எதிர்கட்சி தொகுதியா போயிடிச்சி. நிறையக் கோரிக்கைகள் தேங்கியிருக்கு. 15 வருடமா நடக்காதத இந்த 5 வருசத்தில் நடக்கனும்னு எதிர்பார்க்கிறாங்க.

நிறைய பள்ளிகள் தரம் உயர்வுக்கு காத்திருக்கு. முடிந்த வரை செய்து கொடுக்க, அண்ணன் மனசு வைக்கனும். நிறைய மனுக்கள் இருக்கண்ணா. அப்பப்போ கொடுக்கிறேன். பார்த்துக்கங்க” என்று சில மனுக்களை முதற்கட்டமாக நீட்டினேன்.

சிரித்தபடியே தட்டிக் கொடுத்தார். “கவலைப்படாத சங்கர் பார்த்துக்கலாம்” என்றார் அண்ணன். அதற்கு முன்பு இடைத்தேர்தலில் வெற்றி பெற்று, சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றிய அண்ணன் தென்னரசு அவர்கள் அப்போது தான் அமைச்சராகிறார். அமைச்சர் பணி புரிபடவே சில காலம் ஆகும்.

ஒரு வாரம் கடந்தது. அண்ணன் என்னை அழைத்தார், “சங்கர் உங்க மாவட்டம் கல்வியில் பின் தங்கிய மாவட்டமா இருக்கே. தர்மபுரி, விழுப்புரம், பெரம்பலூர் (அப்போது அரியலூர் மாவட்டம் அதில் அடக்கம்) மாவட்டங்கள் நிலைமை ரொம்ப மோசம். நீங்க சொன்னது சரி தான். அதுக்கு தனியா கவனம் எடுக்கனும், எடுப்போம்” என்றார்.

ஒரு நிமிடம் ஆடிப் போனேன். அமைச்சரான ஒரு வாரத்தில் வாழ்த்துக்களை பெறவும், அதிகாரிகளுடன் அறிமுகம் ஆகவுமே நேரம் போதாது. இடையில் தொகுதிக்கு வேறு சென்று வர வேண்டும். இதற்கிடையில் எப்படி இதில் கவனம் செலுத்தினார் என ஆச்சர்யம்.

பிறகு தான் தெரிந்தது. அண்ணன் "Straight to Business" என்பது.

இரண்டே மாதம் தான். பெரமபலூர் வந்தார். அதிகாரிகளோடு ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். நானும் பங்கெடுத்தேன். முழு விபரங்களைக் கேட்டறிந்தார். பட்டியலிட்டுக் கொண்டார், என்னென்ன வசதிகள் தேவை, எவ்வளவுக் காலியிடங்கள் என.

அடுத்த அடுத்த அறிவிப்புகளில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டன. அனைத்து மேல்நிலைப் பள்ளிகளுக்கும் நபார்டு திட்டத்தில் கூடுதல் கட்டிடங்கள். ஆய்வக வசதிகள். அடுத்து பள்ளி தரம் உயர்வு பட்டியல் தயாராகியது.

செந்துறை ஒன்றியத்தில் நான்கு நடுநிலைப் பள்ளிகளை, உயர்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்த கோரிக்கை அளித்திருந்தேன். இரண்டு ஊர்கள், பட்டியலில் இடம் பெற்றன. மொத்தம் நூறு பள்ளிகள் (234 தொகுதிகளுக்கு). அதில் இரண்டு (சோழன்குடிகாடு, அங்கனூர்) கிடைத்து விட்டது. மகிழ்ச்சி தான்.

ஆனால் ஊரிலோ நிலைமை சிக்கல். உயர்நிலைப்பள்ளி பெறுவதில் சோழன்குடிகாடுக்கும், மணப்பத்தூருக்கும் போட்டி. அங்கனூருக்கும், சன்னாசிநல்லூருக்கும் போட்டி. இதில் சோழன்குடிகாடும், அங்கனூரும் வந்ததில், மணப்பத்தூரிலும், சன்னாசிநல்லூரிலும் போராட்டம் துவங்கியது.

பள்ளிக்கு குழந்தைகளை அனுப்பாமல் போராட்டம், பள்ளியை இழுத்துப் பூட்டும் போராட்டம், கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம், பேருந்து மறியல் என போராட்டம் உஷ்ணமாகியது.

என் நிலையோ தர்மசங்கடம். இரண்டு பள்ளிகள் கிடைத்ததே அதிகம். அமைச்சரிடம் இதற்கு மேல் கேட்கமுடியாது, நியாயமில்லை. ஆனால் மக்கள் கேட்பதும் நியாயம். அவர்கள் பல ஆண்டுகளாக காத்திருக்கிறார்கள்.

வேறு வழி இல்லை. போராட்டம் நடத்திய ஊர்க்காரர்களை சமாதானம் செய்து, சிலரை அழைத்துக் கொண்டு போய் அமைச்சரை பார்த்தேன். பார்த்தவுடன் கண்டுபிடித்து விட்டார்.

“விட்டுப் போன ஊர்கள் அண்ணா...” என்று ஆரம்பித்தேன். “தெரியும். உன்னை எதிர்த்து கருப்புக் கொடி ஏற்றியவர்கள் தானே இவர்கள். அவங்களுக்கு பரிந்துரையா?” என்று சிரித்தார்.

“பாருங்க சார், அவரை எதிர்த்து போராட்டம் பண்ணீங்க. ஆனால் அப்பவும் அவர் உங்களுக்காகக் கேட்கிறார். இந்த ஆண்டே கொடுக்க முடிந்தால் கொடுக்கிறேன். இல்லை என்றால் அடுத்த ஆண்டு அவசியம் கொடுத்து விடுகிறேன்.” என்றார் அவர்களைப் பார்த்து.

“இனிமே சங்கரை தொந்தரவு பண்ணாதீங்க. ஏற்கனவே அவர் கேட்டார். 234 தொகுதி இருக்கு. 100 பள்ளிகள் கொடுத்தோம், அதில் ஒன்று தான் கிடைக்க வேண்டும். உங்கள் தொகுதி நிலையால் தான் இரண்டாகக் கொடுத்தேன்.” என்று விளக்கினார்.

அடுத்த ஆண்டு அந்த இரண்டுப் பள்ளிகளையும், உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தித் தந்தார்.

அதற்கு அடுத்து மருதூர் உயர்நிலைப் பள்ளியை, மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்திக் கொடுத்தார்.

அடுத்த ஆண்டு செந்துறை ஒன்றியம் சிறுகடம்பூருக்கு உயர்நிலைப்பள்ளி, ஆண்டிமடம் ஒன்றியம் பெரியத் தத்தூருக்கு உயர்நிலைப் பள்ளி என இரண்டு பள்ளிகள்.

ஆண்டிமடத்திற்கு புதிதாக “பெண்கள் உயர்நிலைப் பள்ளி” வழங்கினார்.

ஆரம்பப் பள்ளிகள் கிட்டத்தட்ட 55-ஐ, நடுநிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்திக் கொடுத்தார்.

(மாவட்டத்தில் தரம் உயர்த்தப்பட்ட மற்ற பள்ளிகளின் கணக்கு இதில் சேர்க்கப்படவில்லை.)

ஆண்டிமடம் தொகுதிக்கு பள்ளிக்கல்வியில் அது ஒரு “மறுமலர்ச்சிக் காலம்”. படைத்தவர் அண்ணன் தங்கம்.தென்னரசு அவர்கள்.

அவருக்கு, என்னாளும் (மறு சீரமைப்பில் கரைக்கப்பட்ட) ஆண்டிமடம் தொகுதி மக்கள் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்.

# அவரை பிறந்தநாளுக்கு மட்டுமல்ல, ஒவ்வொரு நாளிலும் வாழ்த்துவோம் நாங்கள் !

ஞாயிறு, 12 ஏப்ரல், 2015

நாளை இது நமக்கும் நடக்கலாம்


அவர்கள் தமிழர்கள் என்பதற்காக மாத்திரம் கொந்தளிக்க வேண்டாம். இது அப்பட்டமான மனித உரிமை மீறல் என்பதற்காக, தங்களை மனிதர்கள் என நினைப்போர் அனைவரும் கொந்தளிக்க வேண்டிய நிகழ்வு.

       

ஆந்திராவின் திருப்பதியில் தமிழகக் கூலித் தொழிலாளர்கள் கொல்லப்பட்ட அதே நேரத்தில், தெலுங்கானாவிலும் என்கவுண்டர் கொலைகள்.

கொல்லப்படுகிறவர்களின் அடையாளம் தான் வெவ்வேறு. ஆனால் கொலை பாதகம் புரிவோரின் அடையாளம் ஒன்று தான்.

அது அரசதிகாரம். ஆளுவோரின் தோல்வியை மறைக்க, மக்களை மறக்கடிக்க கையாளுகிற யுக்தியில் முதன்மையானது இது.

செம்மரக் கடத்தலை தடுக்கக் கையாலாகாத சந்திரபாபு நாயுடு அரசு, மக்களை திசை திருப்ப மேற்கொண்ட நடவடிக்கை தான், 20 தமிழர்கள் கொலை.

செம்மரக் கடத்தலின் முக்கியப் புள்ளி, ஒரு ஆந்திர அரசியல்வாதி தான் என ஆந்திரப் பத்திரிகைகளே எழுதுகின்றன. பல ஆந்திர அரசியல்கட்சிகளும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.

ஆனால் அவன் மீது நடவடிக்கை எடுக்க வக்கற்ற சந்திரபாபு நாயுடு அரசு, அப்பாவி தொழிலாளர்களை கொண்டுள்ளது.

இவர்கள் திருட சென்றது நியாயம் இல்லையே என்ற ஒரு குரலும் உள்ளது.

அப்படி வைத்துக் கொண்டாலும், உயிரை எடுக்க அதிகாரம் கொடுத்தது யார்? திருட்டைத் தடுக்கத் தான் அதிகாரம் கொடுத்திருக்கிறது சிறப்புச் சட்டம்.

பஸ்ஸில் சென்றவர்களை, இறக்கி சுட்டுக் கொலை செய்துள்ளது உறுதியாகி விட்டது. நக்கீரன் வார இதழ் கட்டுரை மிக முக்கியமான செய்திகளைக் கொடுக்கிறது.

       

இதில் கொடுமையானது ஆந்திர அரசுக்கு, தமிழக அரசு வழங்கியுள்ள ஒத்துழைப்பு.

இறந்து போனவர்கள் படத்தை எடுத்துக் கொண்டு, இறந்தவர்களின் ஊர்களுக்கு நேராக சென்றுள்ளது தமிழகக் காவல்துறை.

இறக்கும் முன் ஒவ்வொருவரும் தங்கள் ஊர் பெயரை சொல்லி விட்டா இறந்திருப்பார்கள் ?

அந்த விஷயத்தில் ஆந்திர அரசை, தமிழக அரசு கேள்வி கேட்டிருந்தாலே பல உண்மைகள் வெளி வந்திருக்கும்.

பிடித்து வைத்து, சித்ரவதை செய்து, சுட்டுக் கொன்றது வெட்ட வெளிச்சமாகி இருக்கும்.

வங்கி கொள்ளை வழக்கில் அப்பாவி பிஹாரிகளை, வேளச்சேரி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தவர்களை, சன்னல் வழியாக சுட்டுக் கொன்று திசை திருப்பியவர்கள் தானே இவர்கள்.

ஆட்சி நடத்துபவர்கள் உறுதியானவர்கள், கடுமையானவர்கள் என்று சிலர் பெருமைப் பட்டுக் கொள்வார்கள். உறுதியானவர்கள், கொல்வார்கள் என்பதையும் உணர வேண்டும்.

அதிகாரத்தை தட்டிக் கேட்போர், அரசிற்கு எதிராகக் குரல் கொடுப்போர் மீதும் இந்த உறுதி காட்டப்படும்.

முதலில் வழக்கு பாயும், எதிர்க்காவிட்டால் கைது நடக்கும், அப்போதும் பணிந்து போனால், துப்பாக்கி பேசும்.

ஆட்சி நடத்துபவர்கள் "நிர்வாகிகளாக" இருப்பதை விட "மனிதர்களாக" இருக்க வேண்டும்.

தமிழர்கள் என்பதையும் தாண்டி, மனிதர்கள் என்பதற்காக, இந்த அநியாயக் கொலையை எதிர்க்க மனம் இல்லாதோருக்கு....

குறிப்பாக தமிழர் அல்லாதோருக்கு, மத்திய, மாநில ஆட்சியாளருக்கு...

ஒரே ஒரு செய்தி...

# நாளை இது நமக்கும் நடக்கலாம் !

வெள்ளி, 10 ஏப்ரல், 2015

தலைவர் இருக்கிறார் தயங்காதே !

சற்று மலைப்பாகத் தான் இருந்தது. சின்ன மாவட்டம், அதிலும் வறட்சி மாவட்டம், மூன்று ஆண்டுகளாக மழையும் இல்லை. இப்படி நெகட்டிவ் பாயிண்ட்களாக மனதில் ஓடியது.

ஆமாம், தேர்தல் நிதி வசூல் செய்ய வேண்டும் என்று தலைவர் கலைஞர் அறிவிப்பு வந்த உடன் தான் இப்படி சிந்தனை. ஆனால் தலைவர் சொல்லி விட்டாரே, இது தான் தலையாயப் பணி.

இன்னொரு புறம் தலைவர் சொல்லி விட்டார் என்பதை விட நமக்கே முக்கிய கடமை இருக்கிறதே. மக்கள் விரோத அரசாக செயல்படுகிற, ஒரு குற்றவாளிக்கு புகழ் பாடுகிற ஓ.பி.எஸ் அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டிய கடமை முன்னால் நிற்கிறதே.

இந்த சூழ்நிலையில் மீன்சுருட்டி இளைஞர் எழுச்சி நாள் பொதுக் கூட்டத்திற்கு கிளம்பினேன். அண்ணன் சபாபதிமோகன் அவர்கள் சிறப்புரை. வழக்கம் போல் சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தனர்.

அன்று காலை தான் தலைவர் அறிக்கை அளித்திருந்தார்,"இனி சால்வைக்கு பதில் தேர்தல் நிதியாக அளித்திடுங்கள்". அதையே நானும் மேடையில் அறிவித்தேன்.

சகோதரர் தன.அருள், தேர்தல் நிதி வழங்கி துவக்கி வைத்தார். அடுத்து சேட்டு வழங்கினார். நம்பிக்கை துளிர் விட்டது.

அடுத்த நாள் இரவு தா.பழூர் பொதுக்கூட்டம்.. லப்பைக்குடிகாடு பொதுக்கூட்டதில் முன்னதாக பேசி விட்டு கிளம்பினேன். 80 கி.மீ பயணம்.

ஒன்றிய செயலாளர் க.சொ.க.கண்ணன் தொடர்ந்து போன் செய்து கொண்டிருந்தார். 9.30க்கு மேடை ஏறினேன். கண்ணன் ஒரு பையை பிரித்து ஒரு தாம்பாளத்தில் கொட்டினார்.

"முதல் தவணை தேர்தல் நிதியாக ரூபாய் 50,000/- வழங்குகிறேன்" என்று அறிவித்து கொடுத்தார். தெம்பு வந்தது. காலையிலேயே துணிச்சல் கொடுக்கும் சம்பவம் ஒன்று நடந்தது.

அன்று காலை, அரியலூர் ஒன்றியத்தில், தளபதி அவர்கள் பிறந்த நாளை முன்னிட்டு, பள்ளி குழந்தைகளுக்கு நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார் ஒன்றிய செயலாளர் ஜோதிவேல்.

ஒரு பள்ளிக்கு சென்றோம். பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு, பேனா, பென்சில் வழங்கினோம்.

நிகழ்ச்சி முடிந்து கிளம்பினோம். தலைமை ஆசிரியரை காணோம். விடை பெற தேடினோம். மற்றொரு ஆசிரியர் தேடி சென்றார்.

ஒரு அறைக்குள் அவர் ஏதோ எழுதிக் கொண்டிருந்தார். பார்வையாளர் குறிப்பேடோ என்று பார்த்தால், ஒரு கவரோடு வந்தார். மனுவாக இருக்கும் என நினைத்து வாங்கினேன்.

கொட்டை எழுத்தில் எழுதியிருந்தது,"தேர்தல் நிதி". அரசு பள்ளி ஆசிரியர் கேட்காமலே நிதி தருகிறார். மாற்றம் நிச்சயம். துணிச்சல் வந்தது.

அடுத்து அவர் பெயர் எழுதியிருந்தார். அதை படித்த உடன், புது வேகம் பிறந்தது. அவர் பெயர், கருணாநிதி.

     

# நம் தலைவர் இருக்கிறார் தயங்காதே !

வியாழன், 9 ஏப்ரல், 2015

ஒரு பிரிட்டிஷ் காலத்து பங்களா.....

ஏற்காடு மலைச் சாலை மீது வாகனங்கள் அணிவகுத்தன. ஏற்காடு மீது ஏற்கனவே ஒரு காதல் உண்டு. ஊட்டி, கொடைக்கானல் போல இன்னும் வியாபாரக் கேந்திரம் ஆகவில்லை ஏற்காடு.

  

ஊட்டி, கொடையில் இயற்கை மூச்சு திணறிக் கொண்டிருக்கிறது. ஏற்காடு இன்னும் இயறகை முழுதும் கெடாமல் உள்ளது. ஏற்காடு குளிர் மிதமானது, இதமானது. அந்த இரு இடங்களில் சற்றுக் கூடுதல் குளிர் தான்.


ஏற்காடு உள் நுழைந்தோம். ஏரி கடந்தோம். பேருந்து நிலையம் தாண்டினோம். 

“மாப்பிள்ள, அடுத்த மலைக்கு போறோமா?” லேசாக வடிவேலு ஸ்டைலில் வந்த கேள்விக்கு, “சும்மா வாடா, வழக்கமான இடத்தில தங்கினா எப்படி?. வந்து பாரு, அப்புறம் சொல்லு” என்றார் ராம்ஸ்.


கார் சென்று நின்றது. இறங்கி நின்றோம். 70 mm-ல் காட்சி விரிவது போல் இருந்தது. முன்புறம் செடி,கொடிகள் அடர்ந்து நிறைந்திருந்தன. அதனுள் பொதிந்திருந்தது ஒரு பிரிட்டிஷ் காலத்து பங்களா. சிலருக்கு பூத் பங்களா என்று கூட தோன்றி இருக்கலாம்.


உள்ளே நுழைந்தால் பெரிய பெரிய ஹால்கள். டார்மென்ட்ரி ஸ்டைலில் தங்கும் வசதி. ஆமாம், வரிசையாகக் கட்டில்கள். பல கட்டில்களில் இரண்டு அடுக்காக மேலும்,கீழும் இரண்டு படுக்கை வசதிகள், ரயில் பெர்த் போல.


இங்கு தங்கியதால் ஹாஸ்டலில் ஒரே ரூமில் பல பேர் தங்கிய உணர்வு வந்தது. ரிசார்ட்டிலோ, ஹோட்டலிலோ தங்கி இருந்தால் இரண்டு பேர், மூன்று பேர் என தனித்தனி அறையில் தங்கி இருந்திருப்போம். இங்கு தங்கியதால் பழைய ஹாஸ்டல் போலவே நாட்கள் கழிந்தன இனிமையாக.


கொண்டு வந்த பெட்டிகளை வைப்பதற்குள், “எல்லோரும் சீக்கிரம் வாங்க. டிபன் ரெடி. முடிஞ்சவங்க குளிச்சிட்டு வாங்க, முடியாதவங்க குளிக்காம வாங்க. ஆனா வந்திங்கன்னா, சூடா சாப்பிடலாம்”, என்றார் ராம்ஸ்.


அந்த மூன்று நாட்களும் ராம்ஸ் ஹாஸ்டல் வார்டன் போல, குடும்பத் தலைவன் போல அரற்றி, அணைத்து கொண்டு சென்றார். அவர் அழைத்த இடம் மெஸ். பிரத்தியேக சமையல். ஒரு பேக்டரி போல இயங்கிக் கொண்டு இருந்தது.


காலேஜ் நாட்கள் போலவே இருந்தது. சிலர் முகம் கழுவாமலே வந்து நின்றனர். சிலர் முகம் மட்டும் கழுவி, குளித்தது போலக் காட்டிக் கொண்டு வந்தனர். சிலர் குளித்து, முடித்து சுத்த சுகாதாரவான்களாக வந்தனர்.


போனவர்கள் கையில் தட்டு தரப்பட்டது. பஃபே. இட்லி, இரண்டு சட்னி, சாம்பார். தோசை சூடாக போடப்பட்டு தரப்பட்டது. சிக்கனும் ரெடி காலையிலேயே. அருமையான சுவை. அண்ணாமலை மாணவர்கள் சாப்பாட்டில் என்றும் தனி கவனம் என்பது உலகம் அறிந்தது. காரணம் பல்கலைக்கழக மெஸ்கள் தான். அது மீண்டும் நிரூபணமானது

வயிறு நிறைந்தது. “செவிக்கு உணவில்லாத போது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்”. குறள் சொன்னது. இங்கு வயிற்றுக்கு ஈயப்பட்ட பிறகு, கண்ணுக்கும், செவிக்கும் உணவு தயாராக வைத்திருந்தார் ராம்ஸ்.
(தொடரும்)
(அண்ணாமலை பொறியியல் மாணவர்கள், ஏற்காடு சந்திப்பு-2)
(இது 2009-ல் நடந்தது. 20 ஆண்டுகளுக்கு பிறகான அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் புல மாணவர்களின் சந்திப்பு. வரும் ஜூன் மாதம் நடைபெற உள்ள 25-ம் ஆண்டு சந்திப்புக்கான தயாரிப்பு இது)

எங்கே சென்றாய், எங்களை ஏங்க விட்டு எங்கே சென்றாய்

மாநாட்டு பந்தலுக்குள் ஒரு கூட்டம் என்றால், பந்தலுக்கு வெளியே அதே அளவு கூட்டம் இருக்கும். முக்கிய தலைவர்கள் பேச்சுக்கு உள்ளே வர கூட்டம் முண்டும்.

அதைத் தாண்டி, பேச்சல்லாத இன்னொரு நிகழ்ச்சிக்கு கூட்டம் முண்டும். கடலை கொரிக்க வெளியே போனவர்கள், தண்ணீர் குடிக்க போனவர்கள், இயற்கை அழைப்புக்கு போனவர்கள் அவசரமாக திரும்புவர்.

"அழைக்கின்றார், அழைக்கின்றார், அழைக்கின்றார் அண்ணா" அந்தக் கம்பீரக் குரல் ஆரம்பிக்கும் போதே கட்டி இழுக்கும். கொஞ்சம், கொஞ்சமாக உச்சஸ்தாயிக்கு போகும்போது கட்டிப் போட்டு விடும்.

       

ஆம். அவர் தான் நாகூர் ஹனிபா. கழகத்தின் இசை முரசு. மேடையில் ஏறிவிட்டால், மொத்த நிகழ்வையும் கபளிகரம் செய்துவிடுவார் .

சிறு வயதில், என்னை எல்லாம் ரத்த முறுக்கேற்றியவர், தன் பாடல்களால். கொள்கைகளை படிக்கும் முன், பாடல் வடிவில் என் போன்றோரின் மனதில் பதியமிட்டவர்.

"கல்லக்குடி கொண்ட கருணாநிதி வாழ்கவே, ஓடி வருகிறான் உதயசூரியன், தன்மானம் காக்கும் கழகம், எங்கே சென்றாய், கம்பீரக் கலைஞர், உடன்பிறப்பே ஓடி வா, தொல்லைகளுக்கு இடையே முல்லை சிரிப்பு, தமிழகத்தின் தவப்புதல்வன்"

இவர் பாடிய கழகக் கொள்கைப் பாடல்கள் இவை. இவர் மறைந்திருக்கலாம், ஆனால் இந்தப் பாடல்கள் என்றும் மறையாது. அவை வாழும், கழகத்தை வாழ வைக்கும்.

கழகப் பாடல்கள் மட்டுமல்லாமல், அவர் இஸ்லாத்திற்காகப் பாடிய பாடல்களும் பிரபலமானவை. குறிப்பாக, "இறைவனிடம் கையேந்துங்கள், அவன் இல்லை என்று சொல்லுவதில்லை". மதம் கடந்து எல்லோரையும் முணுமுணுக்க வைக்கும்.

திரைத்துறையில் முத்திரை உண்டு.' செம்பருத்தி' திரைப்படத்தில், இளையராஜா இசையில், "நட்ட நடுக் கடலினிலே" , 'ராமன் அப்துல்லா' படத்தில், "உன் மதமா, என் மதமா" என பாடல்கள்.

பாடல்கள் பாடியதைத் தாண்டி, நேரடி அரசியலிலும் இருந்தவர். வாணியம்பாடி சட்டமன்ற தொகுதிக்கு நடைப்பெற்ற இடைத்தேர்தலில் கழக வேட்பாளராகப் போட்டியிட்டார்.

வெற்றி வாய்ப்பை இழந்தாலும், துளியும் அது குறித்துக் கவலைக் கொள்ளவில்லை. அந்த சமயத்தில் வெளியானப் புகைப்படம் ஒன்று வெகு பிரசித்தி பெற்றது.

தலைவர் கலைஞர் ஒரு புறம் நிற்க, மறுபுறம் பேராசிரியர் நிற்க, நடுவில் ஹனிபா அவர்கள் நின்று தனது இரண்டு கைகளையும் அவர்கள் தோளில் போட்டு அரவணைத்து நிற்பார். அவர்கள் அவர் மீது காட்டிய அன்பின் வெளிப்பாடு அது. அவரது ஆளுமை அஃது.

    

தலைவர் கலைஞர் முதல்வரான போது, வஃக்ப் வாரியத் தலைவராக நியமிக்கப்பட்டு பணியாற்றினார். ஆனாலும் பல நேரங்களில் தன்னைத் தேடி வந்தப் பதவிகளை புறந்தள்ளி இசையையே முதற் பணியாய் கொண்டார்.

அந்த மொட மொடக்கும் வெள்ளை வேட்டி, முரட்டு ஜிப்பா, கழுத்தை வளைத்திருக்கும் சால்வை, கருப்பு நிறத் தொப்பி, மூக்குக் கண்ணாடியை ஊடுரும் பார்வை. இந்த பிம்பம் என்றும் மனதில் நிலைக்கும். அந்தக் குரல் என்றும் காதையும், மனதையும் நிறைக்கும்.

அவர் பாடிய "தொல்லைகளுக்கு இடையே முல்லைச் சிரிப்பு " பாடலின் இரண்டாம் வரி தான் நினைவுக்கு வருகிறது .

# எல்லையே இல்லாதது உன் சிறப்பு !

செவ்வாய், 7 ஏப்ரல், 2015

மேளம் முழங்க, பலமான வரவேற்பு

பத்து நாட்களுக்கு முன்பே அண்ணன் ஸ்ரீதர் கூப்பிட்டு சொன்னார், “சிவா, எந்த வேலை இருந்தாலும் வந்துடு. உனக்கு டிக்கெட் புக் பண்ணிட்டேன். வேற கதைல்லாம் சொல்லக் கூடாது”. “அண்ணே வந்திடுறேன்”. “கமபார்ட்மெண்ட்டே நம்மளுது தான். வந்துடு, கலக்குவோம்”.

இரவு கடைசி நிமிடத்தில் ஸ்டேஷன் சென்றேன். உள்ளே நுழைந்தால், அடடா, நம்மாளுங்க. ஆமாம், பழைய நண்பர்களை இருபது வருடம் கழித்து பார்க்கும் போதும ஏற்படும் இனபத்தை எப்படி விவரிப்பது...

          

பழங்கதைகள் பேசிப் பேசி, செட்டில் ஆகும் போது, நள்ளிரவு தாண்டி விட்டது. படுத்தும் தூக்கம் வரவில்லை. ஒரு புறம் பழைய நினைவுகள், இன்னொரு புறம் அடுத்த மூன்று நாட்கள் எப்படி இனிமையாக இருக்கும் என்ற ஆர்வம்.

இப்படியே இருந்து, எப்போது தூங்கினேன் என்றே தெரியவில்லை. எழுப்பியவுடன் துள்ளி எழுந்தோம்.

சேலம் ஜங்ஷனுக்குள் மெல்ல நுழைந்தது ஏற்காடு எக்ஸ்பிரஸ். ஒரு கம்பார்ட்மெண்ட் முழுக்க எங்கள் கல்லூரி நண்பர்கள். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் புலத்தின் 1990 பேட்ச். 20 ஆண்டுகளுக்கு பிறகான சந்திப்பு, ஏற்காட்டில்.

அடித்து பிடித்து, ரயிலில் இருந்து இறங்கினோம். நாங்கள் பிளாட்ஃபார்மில் நடக்கும் போதே, மேள ஓசை கேட்டது. “டம் டம்” என்று பேண்ட் வாத்தியம். யாரோ வி.ஐ.பி வருகிறார் எனப் பேசிக் கொண்டே ஸ்டேஷனுக்கு வெளியே வந்தோம்.

வரவேற்று எங்களுக்கு மாலையணிவித்தார்கள் ராம்ஸூம் அவர் நண்பர்களும். ஆமாம், வரவேற்பு ஏற்பாடு கல்லூரி நண்பர்களுக்கு தான். மேள வரவேற்பும் எங்களுக்குத் தான்.

அதிர்ந்து போனோம். மொட்ட ராம்ஸ் என்று நண்பர்களால் அன்பாக அழைக்கப்படும் ராமச்சந்திரன் கொடுத்த வரவேற்பு அப்படி. அங்கிருந்தே தன் முத்திரையை பதிக்க ஆரம்பித்து விட்டார். அடுத்து என்ன என்ற எதிர்பார்ப்பு கிளப்பியது அது.

ரயிலில் இருந்து இறங்கிய மற்றப் பயணிகள், எங்களை ஒரு மாதிரியாகப் பார்த்தார்கள். ஏன் பார்க்க மாட்டாங்க?. சிலர் பேண்ட் சர்ட்டில் ரொம்ப ஃபார்மலாக. சிலர் டிராக் ஸூட்டில். கொஞ்சம் பேர் பர்முடாஸில். ஒன்னு, ரெண்டு ஆளுங்க கைலியிலும்.

இந்தக் குரூப்ப பார்த்தா, முக்கியமான ஆளுங்க மாதிரி தெரியல. ஆனா, வரவேற்பு இப்படி பலமா இருக்கே என்பது அந்தப் பயணிகளின் மைண்ட் வாய்ஸ்.

ஸ்டேஷனை விட்டு வெளியே வந்தோம். வாகனங்கள் காத்திருந்தன. நம்ம ஆளுங்களுக்கு பழைய நினைப்பு வந்து விட்டது. ஆமாம், சிதம்பரம் ரயில்வே ஸ்டேஷன் ஞாபகம். எதிர்த்தாற் போல் இருந்த கடையை நோக்கி சென்றார்கள்.

டீ, காபிக்கு ஆர்டர் செய்தார்கள் சிலர். ஓசோனை ஓட்டை போட சிலர் முயன்று கொண்டு இருந்தனர். ராம்ஸ் மட்டும் தனது வேலையில் கண்ணாக இருந்தார். “மாம்ஸ் போலாமா?. டிபனுக்கு மேல போயிடனும்”என்று துரத்த ஆரம்பித்தார்.

வண்டி ஏறினோம், ஜெட்டாகக் கிளம்பியது. மனதும்...


(தொடரும்)