பிரபலமான இடுகைகள்

சனி, 31 ஆகஸ்ட், 2013

மக்கள் சந்திப்பு - 6, 7 (21.08.2013)

மக்கள் சந்திப்பு - 6, 7 (21.08.2013)

பொன்பரப்பி, சிறுகளத்தூர் ஊராட்சி.

பொன்பரப்பி என்றதும் பலருக்கும் பளிச் என்று தனித்தமிழ்நாடு போராளிகள் நினைவுக்கு வருவார்கள். தோழர் தமிழரசன் காவல்துறை சதியால் வீழ்த்தபட்ட ஊர். 

கடந்த முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த போது, தலைவர் கலைஞர் ஆட்சியில் ஆரம்ப சுகாதார நிலையம் துவங்கப்பட்டது, இது நீண்ட நாள் கோரிக்கை. அரசு மேல்நிலைப்பள்ளியில் 70 லட்சம் செலவில் புதிய கட்டிடம் கட்டப்பட்டது. கால்நடை துறை கிளை மருந்தகம், மருந்தகமாக தரம் உயர்த்தப்பட்டு கட்டிடம் வழங்கப்பட்டது.

பொன்பரப்பி-துளார், பொன்பரப்பி-உஞ்சினி சாலைகள் 15 ஆண்டுகளுக்கு பிறகு புதுப்பிக்கப்பட்டது. சட்டமன்ற உறுப்பினர் நிதியில் பல்வேறு தெரு சாலைகள் சிமெண்ட் சாலை மற்றும் தார்சாலைகளாக தரம் உயர்த்தப்பட்டன. ஆனாலும் இன்னும் பல சாலைகள் மேம்பாடு செய்ய வேண்டிய பெரிய ஊர் ஆகும்.

photo.JPGphoto.JPG

தற்போது மக்கள் சந்திப்பில் அங்கு வைக்கப்பட்ட கோரிக்கைகளை அங்கேயே பரிசீலனை செய்து பரவலாக ஊரின் எல்லா பகுதிக்கும் பிரதிநிதித்துவமாக பணிகளை அறிவித்தேன்.

photo.JPGphoto.JPG

1.குடிகாடு அய்யனார் குளத்தெரு -தார் சாலை
2.வினாயகர் கோவில் தெரு -தார் சாலை
3.ஆதிதிராவிடர் காலனி -சிமெண்ட்சாலை
4.அண்ணா நகர் -சிமெண்ட்சாலை
5.சந்தைக்கு கட்டிட வசதி

சிறுகளத்தூர் ஊராட்சி


photo.JPG


ஊராட்சியின் சமுதாயக்கூடத்தில் சந்திப்பு நிகழ்ந்தது. பெரும்பாலானோர் கோரிக்கைப்படி கடந்த ஆட்சியில் ஏற்படுத்தப்பட்ட நூலகத்திற்கு கட்டிட வசதி, இயங்கிக் கொண்டிருக்கும் அங்கன்வாடி மையத்திற்கு புதிய கட்டிடம், இரண்டு சாலைகள் மேம்பாடு திட்டங்களை அறிவித்தேன்.

photo.JPGphoto.JPG

இங்கும் முந்திரி விவசாயிகளின் பிரச்சினை முக்கியமாக எழுப்பப்பட்டது. முந்திரிக்கு வறட்சி நிவாரணம், மாவட்ட நிர்வாகத்தில் கோரி, ஏற்கப்படாவிட்டால் போராட்டம் அறிவிக்க வேண்டும் என்பதே மக்கள் குரல்.

# தயார் !

மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி - 4,5 (20.08.2013)

மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி-4, 5 (20.08.2013)


பொதுமக்கள் கலந்துக் கொண்டு தங்கள் கருத்துகளை கூறினார்கள். பொதுமக்களின் கருத்துகள் அடிப்படையில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து சில மேம்பாட்டு பணிகளுக்கு உடனடியாக தீர்வு அறிவித்தேன். 

photo.JPG


நாகல்குழி ஊராட்சி: 
அனைவரும் ஒருமித்து கேட்ட முதல் கோரிக்கை, துவக்கப்பள்ளி சாலை அருகே இருப்பதால் குழந்தைகளின் பாதுகாப்புக்காக சுற்றுசுவர். ஒரு தெருவிற்கு குடிநீர் வசதி இல்லாததால் புதிதாக குழாய் அமைத்து தர கோரினர். ஒரு தெருவிற்கு சிமெண்ட் சாலை.

photo.JPGphoto.JPG

வீராக்கன் ஊராட்சி:
இந்த ஊரில் 17 மனுக்கள் அளிக்கப்பட்டன. அவற்றில் 6 மனுக்கள் தனிநபர் பிரச்சினைகள், முதியோர் உதவித் தொகை போன்று. மீதி 11 மனுக்கள் வளர்ச்சிப் பணிகள் குறித்து. 11 மனுக்களில் ஒரு சில பணிகள் கோரப்பட்டு இருந்தாலும் ஒன்பது மனுக்களில் முதல் கோரிக்கையாக ஒரே கோரிக்கை வலியுறுத்தப்பட்டு இருந்தது.

அந்த ஒரே கோரிக்கை, அந்த ஊருக்கு ஒரு சமுதாயக்கூடம் வேண்டும் என்பது. எனவே அதனை ஏற்று அறிவித்தேன்.

பொதுப் பிரச்சினையாக ஒரு அம்சம் அனைவராலும் வலியுறுத்தப்பட்டது, அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என. தமிழக அரசால் வறட்சி நிவாரணம் அனைத்து மாவட்டங்களுக்கும் அறிவிக்கப்பட்டது. அதில் அரியலூர் மாவட்டத்தின் முக்கிய விவசாயமான முந்திரிக்கு நிவாரணம் அறிவிக்கப்படவில்லை.

என்னுடைய பதிவை தொடர்பவர்களுக்கு தெரியும், ஒரு முந்திரி விவசாயி கடன் பிரச்சினையால் தற்கொலை செய்து கொண்ட செய்தியை பதிவு செய்திருந்தேன். அந்த செய்தி தினத்தந்தி பத்திரிக்கையிலும் வந்திருந்தது. அப்போது அதனை திசைதிருப்ப முந்திரிக்கு நிவாரணம் வழங்கப்படும் என மாவட்ட நிர்வாகத்தால் அவசர அவசரமாக கணக்கெடுக்கப்பட்டது. ஆனால் இது வரை வழங்கப்படவில்லை.

இரண்டு வருடமாக மழை குறைவால் நிலத்தடி நீர்மட்டம் இறங்கியுள்ள நிலையில் முந்திரி விவசாயம் முற்றிலும் பொய்த்துப் போயுள்ளது. விவசாயிகள் பெரும் பாதிப்படைந்துள்ளனர். எனவே அரசு நிவாரணம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது பொதுமக்கள் கோரிக்கையாகும்.

அரசு கவனம் செலுத்த வேண்டும்....


Photo: மக்கள் சந்திப்பு - 4, 5, 6, 7

20.08.2013 செவ்வாய் கிழமை 
மாலை 4.00 மணி நாகல்குழி ஊராட்சி
மாலை 5.00 மணி வீராக்கன் ஊராட்சி

21.08.2013 புதன் கிழமை
மாலை 4.00 மணி பொன்பரப்பி ஊராட்சி
மாலை 5.00 மணி சிறுகளத்தூர் ஊராட்சி


சாம்பாரில் பல்லி - மாணவர்கள் பாதிப்பு

குன்னம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 19.08.2013 அன்று சத்துணவு சாப்பிட்ட சாம்பாரில் பல்லி இறந்து கிடந்ததுள்ளது. பார்த்த மாணவர்கள் பயந்து போனதை அடுத்து உடனடியாக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

கிட்டதட்ட 100 மாணவர்கள். பரிசோதித்த மருத்துவர்கள் பாதிப்பு ஏதும் இல்லையென்ற போதும், மூன்று மணி நேரம் மருத்துவ கண்காணிப்பில் வைத்திருந்து பராமரித்தனர். 

பதற்றப் படாமல் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற ஊர் பொதுமக்கள், விரைந்து சிகிச்சை பார்த்த மருத்துவர்கள், துரித நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் ஆகியோருக்கு நன்றி.

நான் தர்மபுரியில் இருந்ததால் அலைபேசியில் தொடர்பு கொண்டு மருத்துவரிடம் பேசி நிலவரம் அறிந்தேன். எங்கள் சார்பாக அரியலூர் நகர்மன்ற தலைவர் முருகேசன் மாணவர்களை சந்தித்து நலம் விசாரித்தார்.

மாணவர்கள் அனைவரும் நலமுடன் வீடு திரும்பினர்.


ஊர் திரும்பியவுடன் பள்ளிக்கு சென்றேன்.

சத்துணவுக்கூடத்தை உடனடியாக வெள்ளையடிக்க சொல்லி மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் பணி நடைபெற்று வருகிறது. இடநெருக்கடியை தீர்க்க கூடுதல் கட்டிட வசதிக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

அந்தக் கட்டிடத்தை ஒட்டி தனியார் நிலம் உள்ளதால் அந்த இடத்தில் சுற்றுசுவர் இருந்தால் பாதுகாப்பாக இருக்கும் என தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியைகள் சொன்னதன் பேரில் அதற்கு நிதி ஒதுக்க ஒப்புதல் அளித்தேன். 


குழந்தைகள் நலனும் கேட்டறிந்தேன். அனைவரும் பாதிப்பின்றி நலமாக உள்ளனர். 

#
அரசு தமிழகம் முழுதும் சத்துணவு சமையலறை கட்டிடங்களுக்கு வெள்ளையடித்து பராமரிக்க உத்தரவிட்டால் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கும்.

செவ்வாய், 27 ஆகஸ்ட், 2013

"எங்கய்யா கணேசன் ?" கரகர குரலில் கலைஞர் கேட்கிறார்....


"எங்கப்பா மாப்பிள்ளைய காணோம், தலைவர் வர்ற நேரமாயிடுச்சி ?"
"கொஞ்ச நேரமாவே காணோம்ங்க, தேடிகிட்டு தான் இருக்கோம்."

தலைவர் கலைஞர் ஜெயங்கொண்டம் வந்துவிட்டார். மண நிகழ்விடமான பிரிமியர் கலா பேலஸிற்கும் வந்துவிட்டார். மேடையிலும் வந்து அமர்ந்து விட்டார். மணமகன் இன்னும் வரவில்லை. "எங்கய்யா கணேசன் ?" கரகர குரலில் கலைஞர் கேட்கிறார். "தேடிகிட்டு இருக்கோம் அய்யா".

அருகே அன்றைய ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட தி.மு.க செயலாளர் அன்பில் தர்மலிங்கம், தமிழக அமைச்சர். அவரிடத்தில் ஒரு கழகத் தோழர் தயங்கி தயங்கி வந்து விஷயத்தை சொல்கிறார். "கணேசன் கண்டியன்கொல்லைக்கு போயிட்டாருங்க" "சரி. நான் போய் அழைச்சுகிட்டு வர்றேன்". அன்பில் கிளம்புகிறார். தமிழகத்தின் முதலமைச்சர் காத்திருக்கிறார், மணமகனுக்காக.

க.சொ.கணேசன், உடையார்பாளையம் வட்ட செயலாளர். தீவிர சுயமரியாதைக் கொள்கைக்காரர். சைக்கிளில் சென்று கழகம் வளர்த்தவர். பேரறிஞர் அண்ணாவின் அன்புக்கு பாத்திரமானவர். தலைவர் கலைஞரிடத்தில் அன்பாக வாதிடும் அளவுக்கு நெருக்கமானவர். அந்த க.சொ.கணேசன் தான் மணமகன். நாள் - 02.08.1972.

ராகுகாலத்தில் தன் திருமணத்தை நடத்தி வைக்க வேண்டுமென தலைவர் கலைஞரிடத்தில் கேட்டிருந்தார். ராகுகாலத்திற்கு முன்னதாகவே கலைஞர் மேடைக்கு வந்துவிட்டால் என்ன செய்வது என்று தான் சொந்த கிராமத்திற்கு கிளம்பி சென்று விட்டார். ஜெயங்கொண்டத்தில் இருந்து 15 கி.மீ தூரம்.

அமைச்சர் அன்பிலார் சென்று அழைத்து வருகிறார், சரியான ராகுகாலத்தில் மேடை ஏறுகிறார் மணமகன். "ஏன்யா கணேசா, இப்படியா பண்றது ?" செல்லமாகக் கடிந்து கொள்கிறார் தலைவர் கலைஞர். "நீங்க முன்னாடியே வந்துட்டா என்ன பண்றது, அதனால தான். நான் கொள்கைய விட்டுத் தர முடியுமா ?" இது க.சொ.க. சிரித்துக் கொண்டு திருமணத்தை நடத்தி வைத்து வாழ்த்துரை வழங்குகிறார் தலைவர்

தன் திருமணம் மட்டுமல்ல, தான் சார்ந்த அத்தனை நிகழ்வுகளையும் முடநம்பிக்கை ஒழிப்பு நிகழ்ச்சியாகவே நடத்தியவர் க.சொ.க. வாழும் வரை கொள்கை நழுவாது வாழ்ந்தவர். வெற்றியோ, தோல்வியோ அயராமல் கழகப்பணி ஆற்றியவர்.

இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக, இரண்டு முறை ஒன்றிய பெருந்தலைவராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றியவர். மக்கள் மனதைவிட்டு இன்றும் நீங்காதவராக மக்கள் தொண்டராக வாழ்ந்து காட்டியவர்.

நாற்பதாண்டு காலமாக அவர் மக்கள் மன்றத்திலும், சட்டமன்றத்திலும் எழுப்பிய கோரிக்கை, மதனத்தூர் - நீலத்தநல்லூர் இடையே கொள்ளிடத்தில் ஒரு மேம்பாலம். அவர் மறைந்த பிறகே, கடந்த கழக ஆட்சிக் காலத்தில் அவர் கனவை நனவாக்கினோம். அணைக்கரை பாலம் சேதமடைந்து போக்குவரத்து நிறுத்தப்பட்ட போது, இந்த பாலமே உதவியாக அமைந்தது.

இன்று அவர் மறைந்து எட்டு வருடங்கள். அவர் நினைவிடத்தில் கழகத்தோழர்கள் நினைவஞ்சலி செலுத்தினோம். முன்னாள் ச.ம.உ ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர் தனசேகர், நகர செயலாளர் வெ.கொ.கருணாநிதி உள்ளிட்ட நிர்வாகிகளும், அவரது மகன் தா.பழூர் ஒன்றிய செயலாளர் க.சொ.க.கண்ணன் உள்ளிட்ட குடும்பத்தினரும் அஞ்சலி செலுத்தினர்.

# காலம் உள்ளளவும் மக்கள் தொண்டர் க.சொ.க நினைவிருக்கும்

ஜாக்கிச்சான் பட ஷூட்டிங்கில் நுழைந்தது போல் இருந்தது....

 
 
ஜாக்கிச்சான் பட ஷூட்டிங்கில் நுழைந்தது போல் இருந்தது, எம்.எல்.ஏ-க்கள் கருத்தரங்கிற்கு தில்லி IIPA ஹாலில் நுழைந்தவுடன். மங்கோலியத் தன்மையான முகங்கள் அந்த அளவிற்கு நிறைந்திருந்தது.

கிட்டத்தட்ட எல்லோருக்கும் சற்றே முன் வழுக்கை. நம்மூர் சினிமாவிற்கு வில்லனாக நடிக்க கூப்பிடும் அளவிற்கு மூன்று, நான்கு பேர் இருந்தனர். ஒல்லியாக, குண்டாக, ப்ரென்ச் ப்யர்டு, உதட்டுக்கு கீழ் சிறு தாடி என டிசைன், டிசைனாக...எல...்லாம் அல்ட்ரா மாடர்ன்.

பிறகு விசாரித்தப் போது தான் மேகாலயா எம்.எல்.ஏ-க்கள் என தெரிந்தது. இந்தியா முழுதும் இருந்து வந்திருந்த மொத்த எம்.எல்.ஏக்கள் 62 பேரில் 28 பேர்கள் அவர்களே.

60 எம்.எல்.ஏக்கள் கொண்டது மேகாலயா சட்டமன்றம். அதில் 28 பேர் இங்கிருக்க மற்ற மாநிலத்து எம்.எல்.ஏக்கள் “மினி மேகாலயா அசெம்பிளி” என கிண்டல் அடித்தனர்.

மேகாலயாவில் தற்போது காங்கிரஸ் ஆட்சி. 60 எம்.எல்.ஏக்களில் 29 பேரை கொண்ட காங்கிரஸ் ஒரு சுயேச்சை எம்.எல்.ஏ ஆதரவுடன் ஆட்சி நடத்துகிறது. அந்த சுயேச்சை எம்.எல்.ஏவும் வந்திருந்தார்.

அவர் பெயர் Hopeful Bamon. பெயருக்கேற்றார் போல் நம்பிக்கையுடன் சுயேச்சையாக நின்று வெற்றி பெற்றிருக்கிறார். நாங்க பேசிக்கிட்டோம், ஒரு நாள் இவர ரூம்ல வச்சு பூட்டிட்டோம்னா மேகாலயாவ அலற விடலாம்....

எம்.எல்.ஏக்களின் முன் வைக்கப்பட்டிருந்த பெயர் பலகையை படித்தால் நான்கு பேர் “சங்மா” என்ற பெயருடனும், மூன்று பேர் “மாரக்” என்ற பெயருடனும் இருந்தனர். இனிஷியல் மட்டும் வேற வேற.


என் வரிசையில், எனக்கு மூன்றாவதாக உட்கார்ந்திருந்த ஒரு சங்மாவை கிண்டலாக "என்னங்க 4 சங்மா இருக்கீங்கன்னு" கிண்டலா கேட்டா, "இங்க பரவாயில்ல, எங்க அசெம்ப்ளியில மொத்தம் 11 சங்மா" அப்படின்னாரு.

"எங்களுக்கு தெரிஞ்சதெல்லாம் முன்னாள் நாடாளுமன்ற சபாநாயகர் பி.ஏ.சங்மா, அவரு பொண்ணு எம்.பி அகதா சங்மா. அவரு ஜெயலலிதாவ நம்பி ஜனாதிபதிக்கே நின்னவராச்சே ?" அப்படின்னு கேட்டேன். அவர் சிரித்தார்.

அவர் பி.ஏ.சங்மாவின் மகன் James Pangsang Kongkal Sangma வாம்.

 
  •  # டெல்லி போனாலும் பல்ப் வாங்குவோம்ல........

புதன், 21 ஆகஸ்ட், 2013

இவங்க திரும்பி வந்து சுதந்திரம் வாங்கி, போச்சுடா..."

" நாங்க எல்லாம் சுதந்திரத்திற்காக போராடும் போது ஆங்கிலேயர்கள் அவ்வளவு துன்புறுத்துவாங்க. மகாத்மா காந்தியோட தலைமையேற்று அவரது ஆணைப்படி நாங்க போராட்டக் களத்துல இருந்தோம்"

அது ஆண்டிமடம் அரசு மேல்நிலைப்பள்ளி. பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் எம்.எஸ்.தங்கராசு படையாட்சி வழக்கம் போல் கொடியேற்றி வைத்து பேச ஆரம்பித்தார். நான் ஏழாம் வகுப்பு மாணவன். மாணவர்கள் எல்லாம் கொடிமரத்திற்கு எதிரில் திடலில் அமர்ந்திருக்கிறோம்.

திடலை சுற்றிலும் வேப்பமரங்கள். ஆனால் காலை எட்டு மணி என்பதால் கிழக்கில் இருந்து எழும்பும் சூரியன் எங்கள் முகத்தை தான் தாக்கும். எதிர் வெயில். நேரம் ஆகஆக மெல்ல வெப்பம் அதிகரிக்கும். வியர்வை தலைகாட்ட ஆரம்பிக்கும்.

" உப்பு சத்தியாக்கிரகத்தின் போது மகாத்மா காந்தி தண்டிக்கு யாத்திரை போனார். அப்போ நாங்க எல்லாம் ராஜாஜி தலைமைல திருச்சிலேருந்து வேதாரண்யம் கிளம்பினோம். அப்ப இருந்த சுதந்திர உணர்ச்சி அப்படி. சொந்த வேலய விட்டுட்டு சுதந்திரத்துக்கு போராடுனோம்."

யதார்த்தமா, ஜோடனை இல்லாம எளிமையா பேசுவார் எம்.எஸ்.டி அவர்கள். முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர், முன்னாள் ஜில்லா போர்டு மெம்பர், ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்தின் மூத்த காங்கிரஸ் தலைவர், சுதந்திர போராட்டத்தில் நேரடியாக பங்கேற்றவர்.

ஆண்டிமடம் அரசு மேல்நிலைப் பள்ளியின் வளர்ச்சியில் முழுமையான பங்காற்றியவர். அவர் மறையும் வரை அவர் தான் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர். உடல் நலம் சரியாக இருந்தவரை அவர் தான் ஒவ்வொரு வருடமும் கொடியேற்றி வைத்து உரையாற்றுவார். ஆனால் எல்லோருக்கும் அவர் அருமை தெரியுமா...

பின்னாடி இருந்து லேசா முணுமுணு பேச்சு கேட்க ஆரம்பிக்கும். பத்தாவதுல ஒரு அராத்து செட் இருக்கும். அங்கேருந்து தான் கமெண்ட் வரும். "இப்போதாண்டா வேதாரண்யம் கிளம்பியிருக்காங்க. இவங்க திரும்பி வந்து சுதந்திரம் வாங்கி, போச்சுடா..."

"குடுக்கறது நார்த்தங்கா மிட்டாய். இதுக்கு எவ்வளவு நேரம்டா உட்கார்ந்துருக்கறது" இது அடுத்த செட். பேச்சு கேட்கும் திசை நோக்கி பி.டி.மாஸ்டர் சாம்சன் நகர்வார். அவரை பார்த்து சத்தம் லேசாக அடங்கும். ஒவ்வொரு வருடமும் இது வழக்கம்.

எம்.எல்.ஏ-வான பிறகு, ஒரு பள்ளியில் என்னை கொடி ஏற்றி வைக்க அழைத்திருந்தார்கள். கொடி ஏற்றி வைத்து பேச ஆரம்பித்தேன். "நமக்கு சுதந்திரம் பெற்று தர நம் முன்னோர்கள் சிந்திய ரத்தத்தையும் அவர்களது தியாகத்தையும் நாம் நினைத்து பார்க்க வேண்டும்". நீண்ட உரை தயார்.

மாணவர்களின் கடைசி வரிசையில் ஒருவர் வாட்சை பார்க்க, ஒருவர் சூரியனை பார்க்க, ரெண்டு பேர் முணுமுணுக்க, என் மனக் கண்ணில் பழையக் காட்சிகளில் ரீவைண்டாகியது.

" அந்த சுதந்திரத்தை நாம் பேணி காக்க வேண்டும், மதிக்க வேண்டும். வணக்கம்" பேச்சை முடித்துக் கொண்டேன். ஒரே நிமிடம்.

# கொடி வணக்கம், ஜெய்ஹிந்த் !!


நான் அளித்த ரத்ததானமே என் உயிரை காத்தது....வினோத் வெளியூர் செல்லும் போது அணியும் டி-சர்ட் "Dial for Blood 94888 48222" என்ற வாசகங்களோடு இருக்கும். அன்று தர்மபுரியில் ரயில் நிலையத்தில் இந்த டி-சர்ட்டை பார்த்த ஒரு இளைஞர் "எல்லாம் காசு சம்பாரிக்கும் ஏமாற்று வேலை" என கமெண்ட் அடிக்க, வினோத் கோபப்படாமல் பத்து நிமிடம் அவருக்கு ரத்த தானத்தின் அவசியத்தையும், உயிர்காக்கும் விதத்தையும் விளக்கி விட்டு ரயிலேறி விட்டார்.

மதியம் சேலம் அரசு மருத்துவமனையிலிருந்து ஃபோன். "வினோத், ஒருத்தர் ரத்தம் கொடுக்க வந்தார். முதல்முறை என்றார். நீங்கள் சொன்னதை கேட்டு வந்ததாக சொன்னார். நன்றி." மறுநாள் காலை மற்றொரு ஃபோன்.

"சார், நேத்து தர்மபுரியில் ரயில்வே ஷ்டேசன்ல பார்த்தேனே, நீங்க சொன்னத கேட்டு மனம் மாறி ரத்ததானம் செய்தேன். மாலை உடையாம்பட்டி அருகே எனக்கு பைக் ஆக்சிடெண்ட். ஆப்ரேஷனுக்கு ரத்தம் தேவைப்பட்டிருக்கிறது "O-". எங்கும் கிடைக்காமல் நான் கொடுத்த ரத்தம் தான் என்னையே காப்பாற்றி இருக்கிறது. நினைச்சா பயமாயிருக்கு. நீங்க சொன்னத கேட்டதால் தான் உயிரோடிருக்கிறேன். மிக்க நன்றி"

ரத்த தானம் செய்வதை ஊக்கப்படுத்தி வந்த தர்மபுரியை சேர்ந்த சமூக ஆர்வலர் வினோத், Indian Pillars என்ற அமைப்பை துவக்கி ரத்த தானம் செய்வோரை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டு அதற்காக 24x7 இயங்கும் கால் செண்டர் துவங்கியிருந்த நேரம்.

மத்தியப் பிரதேசம் மாநிலம், இந்தூர் நகரில் ஒருவருக்கு அறுவை சிகிச்சை. அவருக்கு ரத்தம் தேவை. அவரது ரத்தம் "O bombay" பிரிவு. 15000 பேரில் ஒருவருக்கே இந்த இந்தப் பிரிவு இருக்கும். அன்று விடுமுறை நாள் என்பதால் எங்கு தொடர்பு கொண்டும் கிடைக்காமல் தர்மபுரி Indian Pillars அமைப்பிற்கு தொடர்பு கொள்கிறார்கள்.

மாலை இந்த "O bombay" பிரிவு ரத்தம் கேட்டு அழைப்பு வந்த உடன் தங்களிடம் உள்ள மூன்றரை லட்சம் பேர் கொண்ட data base-ல் தேடி மேட்டூர் அருகே இருந்த ஒருவரை கண்டுபிடித்தனர். அவரை தொடர்பு கொண்டு சேலம் வர செய்து ரத்தம் சேகரித்த போது இரவாகிவிட்டது.

அதற்குள்ளாக அதனை இந்தூர் வரை பாதுகாப்பாக கொண்டு செல்ல கோயம்புத்தூரில் இருந்து icepack box-ஐ வரவழைத்தார்கள். சேலத்திலிருந்து பெங்களூருக்கு தனியார் பேருந்தில் ரூ 900 செலவு செய்து அனுப்பப்பட்டது. அங்கிருந்து இரவே விமானம் மூலம் ரத்தம் இந்தூரை சென்றடைந்தது. ( விமானத்தில் ரத்தம் அனுப்பினால் இலவசம்)

விடியற்காலை வினோத்தின் செல் ஒலிக்கிறது. தூக்கக் கலக்கத்தில் செல்லை எடுத்தால், புரியாத இந்தியில் பேசுகிறார்கள், கடைசியாக சொன்ன "தன்யவாத்" மட்டுமே தெரிந்த வார்த்தை, நன்றி. காலை அங்கிருந்து டாக்டர் தொடர்பு கொண்டு உரிய நேரத்தில் ரத்தம் வந்து சேர்ந்து, இரவே அறுவை சிகிச்சை செய்யப் பட்டதால் நோயாளி காப்பற்றப்பட்டதை சொல்லி, நன்றி சொல்லியிருக்கிறார்.

இந்த சேவை அனைத்தும் இலவசம். யாரிடமும் உதவி கேளாமல் நண்பர்கள் துணையோடே, இந்த உயிர் காக்கும் பணியில் தன்னை அர்ப்பணித்துள்ளார் வினோத். "இந்த பாராட்டு, நன்றி போலவே திட்டும்,வசவும் சகஜம் சார். எதுவாக இருந்தாலும் உயிர் காக்கப்பட்டால் போதும் சார்." இது தான் வினோத்.

மற்றொரு நாள், அதே டி-சர்ட் பார்த்து விளக்கம் கேட்ட ஒரு சென்னை கல்லூரி மாணவி தன் விவரங்களை அளித்துள்ளார். அன்று இரவு சென்னையிலிருந்து ரத்தம் கேட்டு அழைப்பு. ரயில் பயணம். முக்கிய எண்களை கொண்ட மற்றொரு செல் சார்ஜ் போய் அணைந்து போய் விட்டது. என்ன செய்வது என்று தெரியாமல் பையிலிருந்த பேப்பர்களை துழாவுகிறார். அந்தக் கல்லூரி மாணவியின் விபரத்தை பார்த்தால் அதே ரத்த வகை.

செல்லில் தொடர்பு கொண்ட வினோத் விபரத்தை சொல்ல அந்த பெண் உடனே கிளம்ப தயாராகிறார். இரவு மணி 11. துணைக்கு யாராவதை அழைத்து செல்ல சொல்ல, "அம்மா தூங்குகிறார், நான் தனியா போய் கொடுத்துடறேன்" என்கிறார். மனம் கேளாத வினோத் லேண்ட்லைன் நம்பருக்கு தொடர்பு கொள்கிறார். போனை எடுத்த தாயாரிடம் விளக்கினால்,"நீயெல்லாம் அக்கா,தங்கச்சியோடு பிறக்கலையா, இந்த நேரத்தில் எப்படி போவது?"

திட்டிவிட்டு போனை வைத்து விடுகிறார். உயிரை காப்பாற்ற வேண்டுமே என்ற எண்ணத்தில் மீண்டும் போன் செய்கிறார். பத்து நிமிடம் திட்டி தீர்த்து, வினோத் பேசியதை கேட்டு மனம் மாறி அவரே மகளை அழைத்து சென்று ரத்த தானம் செய்கிறார். இப்போது அவர்கள் ரெகுலராக ரத்த தானம் செய்கிறார்கள் மனம் உவந்து. 

ரத்த தானத்திற்கான கால்செண்டர் துவங்கப்பட்டது கடந்த ஆண்டு ஜூன் 14 , காரணம் அன்று உலக ரத்ததான தினம். எதேச்சையாக அதுதான் வினோத்தின் பிறந்ததினமும். ரத்ததானத்திற்காகவே பிறந்திருப்பார் போலும்... சொந்த வேலையை பார்க்காமல், சம்பாரிப்பதையும் செலவு செய்து இப்படி பொதுப் பணியாக இருக்கிறாரே என்ற பெற்றோர் கோபத்திலும் பணியை தொடர்கிறார்.

கல்லூரி விடுமுறை என்றால் ரத்ததானம் குறைவாக இருக்குமாம். ஜூன் மாதம் Indian Pillarsஐ தொடர்பு கொண்டு 100 முகாம் நடத்தி ரத்தம் திரட்டி கொடுக்க கேட்கிறார்கள். டீம் களத்தில் இறங்கியது. இந்தியா முழுதும் தொடர்பு கொள்கிறார்கள். போன் மூலம் பேசியே முகாம் நடத்த இடம் ஏற்பாடாகிறது. முகநூல் மூலம் ரத்ததான முகாம் செய்தி பகிரப்படுகிறது. பேப்பர் விளம்பரமோ, பிட் நோட்டீஸோ கிடையாது. ஜூலை 5 அன்று இந்தியா முழுதும் 400 முகாம் நடத்தப்பட்டு 11,500 யூனிட் ரத்தம் திரட்டப் பட்டிருக்கிறது. மிகப் பெரிய சாதனை.

உடன் படித்த நண்பர் பாலாஜி, உறுதுணையாக இருக்கும் நண்பர் தாஜுதீன், பணிகளை பார்த்து தானாக உதவிட முன்வந்த அரசு பணியிலிருக்கும் பொறியாளர் சிவக்குமார், அவரது துணைவியார் வங்கி மேலாளர் பாமா என கோர் டீம். தர்மபுரி எம்.எல்.ஏ பாஸ்கர் இவர்கள் பணிக்கு ஆதரவு. பிரதிபலன் பாராமல் உதவிடும் வாலண்டியர்களாக, படித்த, பணியிலிருக்கும் இளைஞர்கள் என ஒரு படையின் உழைப்பாக இந்த உயிர்காக்கும் சாதனை.

இந்தியாவின் எந்த மூலையில் ரத்தம் வேண்டும் என்றாலும் தொடர்பு கொள்க Indian Pillars Call Centre : 94888 48222.

இவர்களின் தர்மபுரி அலுவலகம் சென்று வந்தேன். இவர்களின் ஒரே கோரிக்கை அரசு ஒரு டோல் ஃபிரீ எண் இலவசமாக ஏற்பாடு செய்து கொடுத்தால், இன்னும் பல மடங்கு பணி விரிவடையும்.

# உயிர்காக்கும் பணியில் நம் பங்கும் ஒரு துளி இருக்கட்டும். Indian Pillars பக்கத்தை like செய்யுங்கள் ! 

https://www.facebook.com/IndianPillarsOfficial

இவர்களது இணையதள முகவரி http://www.iblood.in/ உங்களையும் இணைத்துக் கொள்ளுங்கள்

சனி, 10 ஆகஸ்ட், 2013

தலைவா - சிச்சுவேஷன் சாங்.... வணக்கங்கண்ணா !வாங்கண்ணா வணக்கங்கண்ணா மை சாங்க நீ கேளுஙகண்ணா 
நா ஒலரல ஒலரலண்ணா ரொம்ப பீலிங் பீலிங்குண்ணா ஹே ஆணாணா ஊணாணா “அம்மா” தேடி போவ 
நீ வேணான்னு போனாணா நீ தேவதாசா ஆவ
அவங்க லேட்டா தானா டாட்டா சொல்வாங்க பின்னால போவாத

லைப் ஒரு போட்டுங்கண்ணா ஷேப்டியா ஒட்டுங்கண்ணா
“அரசியல்ல” மாட்டிகிட்டா சேத்துல சிக்கிடும்ணா
ஹிட்லரு டார்ச்சர் எல்லாம் ஹிஸ்டரி பேசுதண்ணா
அம்மா டார்ச்சர் எல்லாம் யாருமே பேசலண்ணா...

“அரசியல், சினிமா” போததான் மூணு ஹௌரில் போகும்தான்
ஹஸ்கி வாய்ஸ் பேசுவாங்க போத தந்த மோகந்தான்
அப்படி விழுந்த நா எழுந்திட மாட்டேனா..

ம் “எலக்ஷன்” “மீட்டிங்னு” கூட்டிட்டு போவாங்கண்ணா
ஆக்டிங் ஆக்டிங்ணா ஐயோ ஆஸ்காரு ஆக்டிங்குணா
வணக்கமும் சொல்லிடுவாங்க எஸ்கேப்பு ஆகிடுண்ணா
வண்டில் ஏத்திடுவாங்க டெட் எண்டு பாத்துக்கணா

“பிரச்சாரத்தில்” நீயும் தான் கண்ணாமூச்சி ஆடுவ
கண்ண தொறக்கும் போது தான் “படத்த” நீயும் தேடுவ
பட்டத சொல்லுறேன் “அம்மாவே” வேணாணா...

ஹே ஆணாணா ஊணாணா “அம்மா” தேடி போவ
நீ வேணான்னு போனாணா நீ தேவதாசா ஆவ
அவங்க லேட்டா தானா Bye Bye சொல்வாங்க பின்னால Do Not Go...

ஹே ஊதிக்க ஊதிக்க ஊதிக்கண்ணா
மனச நீ கொஞ்சம் மாத்திக்கண்ணா
“ரிலீஸும், கொட நாடும்” சேந்துச்சுண்ணா
கொட்டுது “அரசியல்” தத்துவந்தான்....

வெள்ளி, 9 ஆகஸ்ட், 2013

லப்பைக்குடிகாடு தான், “கேட் வே ஆப் இந்தியா”...

எங்கள் குன்னம் தொகுதியின் ஒரே பேரூர் “லப்பைக்குடிக்காடு”.

முழுதும் இஸ்லாமியர்கள் வசிக்கும் பகுதி. இந்த ஊரை அரபு நாடுகளின் "மினியேச்சர்" என்றே சொல்லாம். காரணம் வீட்டுக்கு ஒருவர் அரபு நாடுகளில் பணியில் இருப்பார்கள், அதே போல வெளிநாட்டு பொருட்கள் எளிதாக, உண்மையானதாக கிடைக்கும் என்பதாலும். 

பணிபுரிய செல்பவர்கள் அந்தந்த நாட்டின் குடிமகன்கள் போலவே ஆகிவிடுவார்கள். ஆனால் வருடம் ஒரு முறை ஊர் வந்து தங்கள் பங்களிப்பை செய்ய தவறமாட்டார்கள், வீட்டுக்கு மட்டுமல்ல, ஊருக்கும்.

சுற்றிலும் இருக்கும் பல ஊர்களிலில் இருந்தும், பலரும் இதே போன்று அரபு நாடுகளிலேயே பணியாற்றுகிறார்கள். அதன் காரணமாக அந்த ஊர்களின் தோற்றமே மாறி வருகிறது. 

எங்கள் பகுதிக்கு லப்பைக்குடிகாடு தான், கிட்டத்தட்ட “கேட் வே ஆப் இந்தியா”. காரணம் சுற்றிலும் இருக்கும் கிராமத்தை சேர்ந்தவர்கள் இந்த ஊரில் இருக்கும் ஏஜெண்ட்கள் மூலமாக வெளிநாடு சென்றிருப்பார்கள், அல்லது சென்றவர்கள் மூலமாக சென்றிருப்பார்கள்.

இந்த ஊர் பெரம்பலூர் மாவட்டத்தின் எல்லையில் கடைகோடியில் இருக்கிறது. வெள்ளாற்றின் கரையில் இருக்கிறது. ஒரு கிலோ மீட்டரில் அக்கரை கடலூர் மாவட்டம். கிழக்கே பத்து கிலோமீட்டரில் அரியலூர் மாவட்டம். மேற்கே பதினைந்து கிலோமீட்டரில் சேலம் மாவட்டம். 

ஒரு தீவு போல சுற்றி பல்வேறு சமூகத்தவர்கள் வசிக்கும் கிராமங்களுக்கிடையே தான் இந்த ஊர் அமைந்திருக்கிறது. இது வரை மதப்பிரச்சினை என்பது இந்தப் பகுதியில் கிடையாது, காரணம் அனைவரிடமும் தாயாய் பிள்ளையாய் பழகுபவர்கள். 

இந்த நல்லிணக்கத்தை சீர்குலைக்க பல்வேறு முயற்சிகள் நடந்த போதும் அத்தனையும் முறியடிக்கப்பட்டு இன்றும் அதே அன்பு தொடர்கிறது. தொடரும்...

ரம்ஜான் பிரியாணி இந்த ஊரில் தயாராகிறது என்றால் சுற்றுப்பட்டு கிராமங்களில் மணக்கும், விருந்தாய் மலரும்....

# சூடான பிரியாணி சூப்பர்வியாழன், 8 ஆகஸ்ட், 2013

மக்கள் பிரச்சினைக்கு காது கொடுக்க முடியாத...

குன்னம் தொகுதி, செந்துறை நகரை சுற்றியுள்ள பத்துக்கு மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், செந்துறை நகருக்கு வருவதற்கு பயன்படுத்தும் பாதை ரயில்வேதுறைக்கு சொந்தமானது. 

செந்துறை ரயில்வே நிலையத்திற்கு அருகில் உள்ள பாலத்தின் கீழ்பகுதியே இப்படி பாதையாக பயன்பட்டது. இதன் வழியாக தான் இருசக்கர வாகனங்கள், கார் போன்றவை சென்று வருகின்றன.

செந்துறையில் உள்ள தாலுக்கா அலுவலகம், காவல் நிலையம், மருத்துவமனை போன்றவற்றிற்கு வருவதற்கும், ரெயில் நிலையத்திற்கு வருவதற்கும், கடைவீதிக்கு வருவதற்கும் காலம்காலமாக பயன்படுத்தும் பாதை இது. 

தற்போது இரண்டாவது இருப்புப்பாதை அமைக்கிற நேரத்தில் அந்த பாதையை மறிக்கிற விதமாக புதிய பாலம் கட்டுகிறார்கள். இந்த பாதை தடைபட்டால் ஆறு கிலோமீட்டர் சுற்றி செல்லும் நிலை வரும். அஃதில்லாமல் அந்த சாலையில் உள்ள ரயில்வே கேட்டால் தடைபட்டு வரும் சூழலும் ஏற்படும்.

ஏற்கனவே இருக்கிற பாலம் போலவே பாதைக்கு தடை இல்லாமல், புதிய பாலம் அமைக்க வேண்டும் என்பது தான் பொதுமக்கள் கோரிக்கை. 

இலைக்கடம்பூர் கிராமத்தில் உள்ள ரயில்வேகேட்டை எடுத்துவிட்டு சுரங்கப்பாதை அமைக்க திட்டமிட்டுள்ளனர். இப்படி செய்தால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். டிராக்டர், லாரி போன்றவை செல்ல முடியாத நிலை ஏற்படும்.

நக்கம்பாடி கிராமத்தில் கடந்த ஆட்சியில் வழங்கப்பட்ட 60 பேருக்கான முதியோர் உதவித் தொகை திடீரென்று நிறுத்தப்பட்டுள்ளது. 

இவற்றையெல்லாம் கண்டித்து, ரயில்வே நிர்வாகமும் வருவாய்துறையும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, ஒன்றிய தி.மு.க சார்பில் செந்துறையில் உண்ணாநிலைப் போராட்டம் நடைபெற்றது. கிராம பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் பெருமளவில் பங்கேற்றனர்.

ஒன்றிய கழகச் செயலாளர் ஞானமூர்த்தி, மு.ஒ.செ செல்லக்கண்ணு, சொற்பொழிவாளர் பெருநற்கிள்ளி, பொதுக்குழு உறுப்பினர் செல்வராஜ் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர். நான் தலைமையேற்று உண்ணாநிலையில் பங்கேற்றேன்.


ரயிவே துறை போன்றவை மக்கள் நலனுக்காகவே இயங்குபவை. அவர்களே மக்கள் கருத்தை கேட்காமல் தன்னிச்சையாக இது போன்ற நடவடிக்கைகள் தான் அரசு அலுவலர்கள் மீது மக்களின் வெறுப்பாக மாறுகிறது.


புதன், 7 ஆகஸ்ட், 2013

ஒரே இரவில் இடது கையால் கையெழுத்திட ....

பொதுக்கூட்ட மேடை. கூட்டப் பதிவேட்டை கையொப்பத்திற்காக கொடுத்தார்கள். பேச்சாளர் அண்ணன் இறைவனிடம் கொடுத்தேன் கையொப்பமிட. வாங்கியவர் வித்தியாசமான கோணத்தில் திருப்பினார். இடது கையால் கையொப்பமிட்டார்.

இடது கையால் கையொப்பமிட்டது சரி, ஆனால் நோட்டை திருப்பிப் பிடித்த விதம் வித்தியாசமாக இருந்தது. “ அண்ணா, நீங்க இடது கையாலவா முன்னாடி கையெழுத்து போட்டீங்க ?”. இல்லை. இப்போ தான் மாறினேன். “ எவ்வளவு நாள்ல மாத்துனீங்க ?.ஒரே இரவில்...***************************

பெயர் தான் இறைவன். ஆனால் ஊர் ஈரோடு, பகுத்தறிவாளர். தி.மு.க பேச்சாளர் என்பதை தாண்டி கவிஞர், எழுத்தாளர் என பல முகங்கள் கொண்டவர். கவிதை, நாவல், சிறுகதை என 13 புத்தகங்கள் வெளியிட்டுள்ளார்.

இவர் தந்தை பெயர் கைவல்யம். பெரியாரிஸ்ட். ராமசாமி நாடகக்குழுவில் இணைந்து பணியாற்றியவர். தான் மறைவுற்றால் எந்த சடங்கு, சம்பிரதாயமுமின்றி தனது இறுதி நிகழ்வுகள் நிகழ்த்தப்பட வேண்டும் என உறுதிபட கூறியிருந்தார்.

சில மாதங்களுக்கு முன்பு பெரியவர் கைவல்யம் மறைந்த போது, நெற்றியில் காசு கூட வைக்கப்படாமல் எந்த சடங்குகளுமின்றி இறுதி மரியாதை செய்யப்பட்டது. அப்படிப்பட்டவர் எப்படி இறைவன்னு பெயர் வைத்தார் ?

திருக்குறள் பற்றாளர். அதில் தலைவனை குறிக்க பயன்படுத்தப்படும் இறைவனை தனது மகனுக்கு பெயர் சூட்டியவர், பெயரப் பிள்ளைகளுக்கு “குழலினிது, யாழினிது குறளை ஒட்டி யாழினியன், குழலினியன் என பெயர் சூட்டினார்.

***********************


“ ஒரே இரவிலா, ஏன் ?. “ 12 புத்தகங்கள் வரை வலது கையால் தான் எழுதி வெளியிட்டேன். திடீரென எழுத்துக்கள் கிறுக்கலாக ஆரம்பித்தது. கை கட்டுப்படவில்லை. டாக்டரிடம் காட்டினேன். கையிலிருந்து மூளைக்கு செல்லும் நரம்பு செயலிழந்ததால் என்று சொன்னார்கள்

வலது கையால் எழுதிக்காட்டினார். இ.சி.ஜி யில் வருவது போல பேனா மேலும் கீழுமாக அவர் கைக்கு கட்டுபடாமல் போனது. கோடு போட்ட தாளில் ஒரு வரிக்குள் எழுத வேண்டியதை நான்கு வரியில் எழுதினால் எப்படி இருக்குமோ, அப்படி பெரிய எழுத்துக்களாக வந்தது.

“ இதற்கு மருத்துவம் இல்லையா ? “ ரூபாய் பதினைந்தாயிரம் மதிப்புள்ள ஊசி ஆறு மாதத்திற்கு ஒன்று போட வேண்டுமாம். அப்படிப்பட்ட மருந்தின் side effect-ஐ நினைத்து பார்த்து, வேண்டாம் என முடிவெடுத்தேன்.

“ ஒரே இரவில் இடது கையால் எழுத பயிற்சி எடுத்து, எழுத ஆரம்பித்துவிட்டேன். மூன்று வருடங்களாகிவிட்டது. இப்போ 9 புத்தகங்கள் எழுதி வெளியிட தயாராக உள்ளது. நான்கு திரைப்பாடல்களும் எழுதிவிட்டேன்

“ உங்க முயற்சியும்,மனதைரியமும் பாராட்டுக்குரியது அண்ணா” 
அப்பா கொடுத்த பகுத்தறிவு தான் அத்தனைக்கும் காரணம்.
# ஈரோட்டு இறைவனின் எழுத்துக்கள் தேர் ஏறட்டும், உலகை பவனி வர...

வெள்ளி, 2 ஆகஸ்ட், 2013

யோவ் அவன் யாருய்யா ஜீவா ?

" யோவ் பிஏ, இவன் எனக்கு வேண்டப்பட்டவன்யா. இவனுக்கு டிபாட்மெண்ட்டுல்ல ஒரு வேல போட்டுத் தரனும். ஏற்பாடு பண்ணுய்யா"

" அமைச்சர் சாருக்கு தெரியாதது இருக்காது. வேகன்ஸி வரும் போது இண்டர்வியு கால்ஃபர் ஆகும். அப்போ வாய்ப்பு இருந்தா பண்ணிரலாம் சார்"

" யோவ், இன்னாயா நீ. மினிஸ்டரு நானே சொல்றன். போட்டுவுடுய்யா. இன்னா பிராப்லம் வந்தாலும் பாத்துக்குலாம்"

" இல்ல சார். அதுக்கு ஜீவோ இடம் கொடுக்காது சார்"

" இன்னாயா மினிஸ்டர் பெருசா, ஜீவா பெருசா ?"

"சரிங்க சார் நான் கன்ஸல்ட் பண்ணிட்டு சொல்றேன்"

**************************

" யோவ் பிஏ, இவன் நம்ம தீவிரக் கட்சிக்காரன்யா. எனக்கு எலக்சன் வேல பயங்கரமா பண்ணவன். இவனுக்கு ஒரு கான்றாட் வேணுமாம். அத அந்த ஆபிசருட்ட சொல்லி முடிக்க சொல்லுய்யா"

" சார், டெண்டர்ல போட்டிக்கு வர்றவங்கள இவரே சமாதானம் பண்ணி தான் சார் எடுக்கனும். நேரா கொடுக்க முடியாது சார்"

" யோவ் நான் சொன்னன்னு சொல்லுய்யா. டெண்டர்லாம் வைக்க வேணாம்யா"

" சார், ஜீவோ ஒத்துக்காதுங்க சார்"

" யோவ் நீ மினிஸ்டர் பேச்ச கேப்பியா, ஜீவா பேச்ச கேப்பியா"

*************************

" யோவ் பிஏ, இவுரு நம்ம ஆளுய்யா. கலிக்டர்ட சொல்லி இவுருக்கு அங்கறருந்து இங்க டிரான்சர் போட சொல்லுய்யா"

" மூனு வருசம் ஆனாதான் டிரான்ஸ்பர் போட முடியும்னு ஜீவோ சொல்லுதுங்க சார்"

" யோவ் அவன் யாருய்யா ஜீவா. அப்ப சொல்லி என் கைலயே கிராஸ் ஆவுரான். கூப்புடுய்யா அவன. அவம் பெரிய ஆளா மினிஸ்டரு பெரிய ஆளா பாத்துறலாம்"

" சார், ஜீவா இல்ல சார். ஜீவோ"

" யோவ் ஜீவாவோ, ஜீவோவோ. இடம் குடுக்காதுங்கற, ஒத்துக்காதுங்கற, சொல்லுதுங்கற. இன்னா விளாட்றியா ?"

" சார் ஜீவோன்னா கவர்மெண்ட் ஆர்டர் சார்"

" யோவ் சி.எம் சொன்னாதான் கெவுருமெண்ட்டு ஆர்டர்யா. சி.எம்மெடோ பெரிய ஆளா ? இரு அம்மா கிட்ட கம்ப்ளெயிண்டு சொன்னா தான் சரியா வருவீங்க"

# " யோவ் கெவுருமெண்டே "முக்கூர்ல" நிக்குதுய்யா...

இடது கால் துண்டிக்கப்பட்டு....

திட்டக்குடி பார்டர் அருகே வயலூர். அங்கு கோவிலில் இருந்த கல் தூணை பிடித்துத் தொங்கி விளையாடுகிறான் அந்த சிறுவன். அந்த தூண் அவன் கால் மீது சரிகிறது. இடது கால் முட்டிக்கு கீழ் சிதைந்து போகிறது. சிகிச்சையில் கால் துண்டிக்கப்படுகிறது. மூன்றாண்டுகள் கடந்து விட்டது. இப்போது ஏழாம  வகுப்பு படிக்கிறான்.


விக்கிரமங்கலத்தை சேர்ந்த விவசாயி. விவசாய வேலைகளில் ஈடுபட்ட போது மின்சார வயர்களை சரி செய்கிறார். எதிர்பாராத ஷாக். தூக்கியடிக்கப் படுகிறார். இரண்டு கைகளும் துண்டிக்கப்படுகிறது.
பி.எஸ்.ஸி கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்த மாணவர் இரண்டு சக்கர வாகனத்தில் செல்கிறார். எதிரில் வந்த வாகனம் மோதி தூக்கி எறிகிறது. நினைவு வரும் போது, வலது கால் துண்டிக்கப் பட்டிருக்கிறது.

அய்ந்தாம் வகுப்பு படிக்கும் சினேகா, சின்ன வயதில் காலில் குத்திய முள்ளால் சீழ் பிடித்து வலது கால் துண்டிக்கப் பட்டுவிட்ட்து. வாடிப் போன ரோஜாவாக இருக்கிறது அந்தக் குழந்தை.

இதே போன்று கை, கால் இழ்ந்து முகாமுக்கு வந்தவர்கள் 52 பேர். ஒவ்வொருவருக்கும் ஒரு சோகக் கதை. கை, கால் இழந்தவர்களுக்கு செயற்கை கை,கால் வழங்க கண்டறியும் முகாம் நேற்று குன்னம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடந்த போது தான் இவர்களை சந்தித்தோம்.


தஞ்சை மாவட்டத்தில் கருப்பூர் அருகே இருக்கும் தஞ்சாவூர் பவர் கம்பெனி மின் உற்பத்தி செய்கிறது. அவர்கள் மக்கள் சேவைக்காக அமைத்துள்ள லேன்கோ பவுண்டேஷன் மூலமாக இந்த செயற்கை கை,கால்களை இலவசமாக வழங்குகிறார்கள்.

நான்கு நாட்கள் வாகனம் மூலம் முகாம் குறித்து விளம்பரம் செய்து, கிராமங்கலிலுள்ள கழக நிர்வாகிகள் மூலம் தேவையானவர்களை கண்டறிந்து முகாமுக்கு வரவழைத்தோம்.
லேன்கோவை சேர்ந்த ஜெகன், குமார் ஆகியோர் சுறுசுறுப்பாக பணியாற்றி அளவு எடுத்தனர். காலை 9.00மணி முதல் மாலை 3.30 வரை பணி முடித்தே உணவருந்தினார்கள். 45 நாட்களில் செயற்கை கை,கால்கள் தயாரிக்கப் பட்டு வழங்கப்படும்.

நாங்களும் மாலை வரை இருந்து முகாமை நடத்தினோம். மன நிறைவான பணி. சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் திறந்ததிலிருந்து அங்கு நடைபெற்ற நல்லதொரு சமூகப்பணி இதுவாகத் தான் இருக்கும்.

இந்த முகாமை நடத்த எனக்கு எண்ணம் ஏற்படுத்தியவர் தஞ்சாவூர் பவர் கம்பெனியில் பணிபுரியும் என் கல்லூரி நண்பர் செல்வம். 

நிகழ்வு முடிந்து கிளம்பும் போது தன் மனைவியுடன் வந்திருந்த கால் இழந்த முதிய இஸ்லாமியர் அருகில் வந்தார், கைக்கூப்பி நல்லா இருப்பீங்கஎன்றார்.
#
லேன்கோ போன்ற நிறுவனங்கள் நல்லா இருக்கனும் !