பிரபலமான இடுகைகள்

வியாழன், 27 பிப்ரவரி, 2014

உலகம் முழுதும் போன செய்தி.... நக்கீரன் இதழில் சட்டமன்ற விமர்சனம்

ஜனவரி 30, நண்பகல் 12.00 மணி. வழக்கமாக சபை கூடும் நேரம் இல்லை இது. ஜெயலலிதாவுக்கு நல்ல நேரமாம் அது, எந்த கேரளத்து பணிக்கர் குறித்த நேரமோ. ஆனால் தமிழகத்து மக்களுக்கு தான்...

ஆளுநர் உரை. வணக்கம் வைத்தவாறு உள்ளே நுழைந்தார் ஆளுநர். தமிழ்தாய் வாழ்த்து முடிந்து, நாற்காலியில் அமர்ந்த உடனேயே, உரையை படிக்க ஆரம்பித்தார். திமுகவின் சட்டமன்ற கட்சி தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் எழுந்து நின்றதை கவனிக்காதது போல வாசிப்பை தொடர்ந்தார்.

                                      

திமுக ஆட்சிக் காலத்தில் எதிர்கட்சியினர் எழுந்து நின்றால், அவர்களை பேச விட்டே, ஆளுநர் உரையை தொடரவார், இப்போது இப்படி. தாயைப் போல் பிள்ளையோ இல்லையோ, முதல்வரை போல் ஆளுநர். ஆளும் அரசின் தோல்விகளையும், தவறுகளையும் பட்டியலிட்டார் தளபதி அவர்கள்.

ஸ்டாலின்  அவர்களின் பேச்சு பத்திரிக்கையாளர்கள் காதில் விழாமல் தடுக்க, அதிமுகவினர் மேசையை தட்ட ஆரம்பித்தனர், ஓங்கி ஓங்கி. இதில் ஆளுநர் குரலும் கேட்கவில்லை. அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆளுநர் உரையை புறக்கணித்து, தளபதி அவர்கள் தலைமையில் திமுகவினர் வெளிநடப்பு செய்தோம்.

--------------------------------------

(மறுநாள்)

ஆளுநர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை முன்மொழிந்து பேச விளாத்திக்குளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் அவர்களை அழைத்தார் சபாநாயகர். அம்மா புராணத்தோடு துவங்கியவர் புரட்சி என்பதற்கு நீண்ட விளக்கம் கொடுத்தார். "நித்தம் அம்மா செய்யும் புரட்சியின் வெளிப்பாடே இந்த ஆளுநர் உரை" என்றவர் ஆளுநர் உரையை தொடாமல் டைரக்டாக திமுகவை தாக்க ஆரம்பித்தார்.

"தாக்க வந்தால் காவல் நிலையம் போவது தானே, ஏன் பத்திரிக்கையாளரிடம் போக வேண்டும் ?" என்று ஆரம்பித்தவர், தொடர்ந்து கலைஞர் குறித்து தரக்குறைவாக பேச ஆரம்பித்தார். உடனே திமுக உறுப்பினர்கள் பொங்கி எழுந்தோம். ஜெ.அன்பழகன் முன்னேறி சபாநாயகர் அருகில் சென்று குரல் எழுப்பினார். கிட்டத்தட்ட எல்லா உறுப்பினர்களும் முன்புறம் வந்து விட்ட நிலை. 'ஆளுநர் உரை குறித்து பேசாமல், கலைஞர் குறித்து பேசுவதை அனுமதிக்க முடியாது' என்றோம். அதனை அவைக் குறிப்பிலிருந்து நீக்க குரல் எழுப்பினோம். சபாநாயகர், "நான் அதனை படித்து பார்த்து முடிவு செய்கிறேன்"என்று சொன்னார். அவைமுன்னவர் ஓ.பன்னீர்செல்வம் எழுந்து,"அவர் பேசுவதில் தவறு இல்லையே" என்று ஆரம்பிக்க, கொந்தளிப்பு அதிகமானது. சபாநாயகர் எழுந்து நின்று, "உங்கள் துணை தலைவர் விளக்கம் தரட்டும். எல்லோரும் இருக்கைக்கு செல்லுங்கள்"என சொன்னார்.

துணைத்தலைவர் அண்ணன் துரைமுருகன் அவார்களுக்கு மைக் இணைப்பு தரப்பட்டது. எல்லோரும் இருக்கைக்கு திரும்பினோம். ஆனால் ஜெ.அன்பழகன் சபைக்குறிப்பிலிருந்து மார்க்கண்டேயன் பேச்சை முதலில் நீக்குங்கள் என தொடர்ந்து வலியுறுத்த, சபாநாயகர் அவரை வெளியேற்ற உத்தரவிட்டார். காவலர்கள் அவரை வெளியேற்றினார்கள்.

துரைமுருகன்"இது ஆளுநர் உரை மீதான விவாதம். இதில் எங்கள் தலைவர் கலைஞர் குறித்தான விவாதத்திற்கு என்ன அவசியம் ? நாங்கள் இதற்கு பதில் சொல்ல ஆரம்பித்தால், உங்கள் ரத்தம் உறைந்து போகும்." என்றது தான் தாமதம்... அமைச்சர் முனுசாமி துள்ளி எழுந்தார். "அவைக் குறிப்பிலிருந்து நீக்க வேண்டும். ரத்தம் உறைந்து போகும் என்பதை நீக்க வேண்டும்" என்று தாண்டவமாடினார். உடனே சபாநாயகரும் நீக்க உத்தரவிட்டார். "மார்க்கண்டேயன் பேசியதை நீக்காமல் இதை நீக்கக் கூடாது" எனக் குரல் எழுப்ப, முனுசாமி"அது உலகம் பூராவும் போன செய்தி" என்று ஆரம்பித்து பேசிக் கொண்டே இருந்தார்.

முன்னாள் அமைச்சர் ஏ.வ.வேலு ஆவேசமாக குரல் எழுப்பிக் கொண்டே சபாநாயகரிடம் சென்று வாதம் செய்தார். ஒவ்வொரு உறுப்பினராக அவையின் மையப் பகுதிக்கு சென்று எதிர்ப்புக் குரல் எழுப்ப ஆரம்பித்தோம். சபாநாயகர் "இருக்கைக்கு போங்க"என்று தொடர்ந்து உத்தரவிட்டுக் கொண்டிருந்தார். "அவைக் குறிப்பிலிருந்து நீக்கு" என்று நாங்கள் குரல் கொடுத்துக் கொண்டிருந்தோம். நானும், லால்குடி சவுந்தரபாண்டியனும் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டிருந்தோம். நான், எனக்கு வழங்கப்பட்டிருந்த ஆளுநர் உரையை கையில் வைத்திருந்தேன். அதனை சபாநாயகரிடம் காட்டி "இதில் இல்லாதவற்றை பேசுவதற்கு, இந்தப் புத்தகம் எதற்கு ?" என்று கேட்டேன். அவர் என்னை எச்சரித்தார். "தேவைப்படாத புத்தகம் எதற்கு ?" என்று சொல்லி கிழித்தேன். அவ்வளவு தான், சிக்ஸர் அடித்தால் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் எழுவது போல், அதிமுகவினர் ஒரே நேரத்தில் எழுந்து நின்று என்னைப் பார்த்து குரல் எழுப்பினர். வழக்கம் போல் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆவேசமானார். கே.பி.முனுசாமி துடித்துப் போனார். சபாநாயகர் அப்போது தான் பார்த்தார்.

திமுக உறுப்பினர்கள் அனைவருமே மையப் பகுதியில் குவிந்திருந்தோம். அமைதியான கொறடா சக்கரபாணியே ஆவேசமாகக் குரல் கொடுத்துக் கொண்டிருந்தார். சபாநாயகர் எங்களை வெளியேற்ற உத்தரவிட்டார். காவலர்கள் நுழைந்து அப்புறப்படுத்த ஆரம்பித்தனர். முன்னாள் அமைச்சர் மைதீன்கான் அப்படியே தரையில் அமர்ந்துவிட்டார். இன்னும் இருவர் அமர்ந்துவிட காவலர்கள் தவித்துப் போயினர். ஒரு வழியாக எல்லோரையும் வெளியேற்றினார்கள். ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கும் சபாநாயகரை கண்டித்து கோஷம் போட்டவாறே வெளியே வந்தோம். சபாநாயகரின் நடவடிக்கையை கண்டித்து அண்ணன் துரைமுருகன் பேட்டியளித்த பிறகு, காருக்கு காத்திருந்த என்னை பத்திரிக்கை போட்டோகிராபர்ஸ் சுற்றி வளைத்து போட்டோ எடுக்க, என்ன என்று விசாரித்தேன். "கூட்டத் தொடர் முழுதும் சஸ்பெண்ட்".

                     

மறுநாள் நாங்கள் திமுகவினர் சபையில் இல்லாத நேரம், ஆளுநர் உரையில் பேசிய மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா, ஆசிரியர் தேர்வில் இடஒதுக்கீட்டை ஜெயலலிதா அரசு பின்பற்றாததையும், இஸ்லாமியர் இட ஒதுக்கீடு குறித்தும் தக்க ஆதாரங்களுடன் பேச, இடைமறித்த உணவு அமைச்சர் காமராஜ், "இதற்கும் ஆளுநர் உரைக்கும் என்ன சம்பந்தம் ? பேசக் கூடாது" என்று சொல்லியிருக்கிறார்.

"இதனை ஆளுநர் உரையின் மீதான விவாதத்தில் பேசக் கூடாது என்றால், நேற்று மார்க்கண்டேயன் பேசியது ஆளுநர் உரை மீதானதா ?" எனக் கிடுக்கிப்பிடி போட அமைச்சர் திணறி போயுள்ளார். ஆளுக்கொரு நியாயம், அம்மா அரசாங்கத்தில்....

அன்று சட்டப்பேரவை வளாகத்திற்கு வந்த திமுக உறுப்பினர்கள் அவைக்கு செல்லவில்லை. பத்திரிக்கையாளர்களை சந்தித்த தளபதி ஸ்டாலின் அவர்கள் ,"முதல்வர் ஜெயலலிதா, தனது தோழி சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரை பலமுறை கட்சியை விட்டு நீக்கி, பிறகு அவர்களால் தனது உயிருக்கு ஆபத்து என்று கூறவில்லையா? மீண்டும் அவர்களை சேர்த்துக் கொள்ளவில்லையா? இதுபற்றி பேரவையில் பேச எங்களை அனுமதிப்பார்களா?

                           

அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர். செயல்பட முடியாதவராக உள்ளார் என்று அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்திக்கு ஜெயலலிதா கடிதம் எழுதியிருந்தது ஆதாரப்பூர்வமாக மக்கள் குரல் பத்திரிகையில் வந்ததே, இதுகுறித்து பேச அனுமதிப்பார்களா?

எம்.ஜி.ஆர். மறைந்த நேரத்தில் ஜானகி அம்மாள், மோரில் விஷம் கலந்து கொடுத்தார் என தி.நகரில் நடந்த கூட்டத்தில் இப்போதைய முதல்வர் பேசியுள்ளார். இதுகுறித்து பேச அனுமதிப்பார்களா?

சோபன்பாபுவோடு கோயிங்க் ஸ்டெடி குறித்து அவரே குமுதத்தில் எழுதினாரே. அதுகுறித்து பேச அனுமதிப்பார்களா?" என்று வினா எழுப்பி, "இதுபற்றியெல்லாம் பேச முயன்ற திமுக எம்.எல்.ஏ.க்களை வெளியேற்ற செய்தது மட்டுமின்றி, எம்.எல்.ஏ. சிவசங்கரை சஸ்பெண்ட் செய்துள்ளனர். எனவே, இதைக் கண்டித்து இந்தக் கூட்ட தொடர் முழுவதிலும் பங்கேற்பதில்லை" என அறிவித்தார்.

வெளியே நின்றிருந்த ஒரு அதிமுக எம்.எல்.ஏவின் கமெண்ட் "சபையில் பேச விட்டிருந்தா பதிவில் மட்டுமே இருக்கும், வெளியே அனுப்பியதால் உலகம் முழுதும் போவுது"

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக