பிரபலமான இடுகைகள்

செவ்வாய், 29 ஜனவரி, 2013

M.L.A தோசை


" M.L.A தோசை " தினம் சாப்பிடப் போகும் போதெல்லாம், மெனு கார்டில் கண்ணில் படும். ஆனாலும் பக்கத்தில் யாரும் ஆர்டர் செய்யாததால், கேட்க கூச்சம்.

ஹைதராபாத்தில், தொடர் உணவகம் நடத்தும் துவாரகா ஹோட்டலில் தான் இந்த எம்.எல்.ஏ தோசை.

இரண்டு துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்களோடு வரும் ஆந்திர எம்.எல்.ஏ-க்களை பார்த்து, எம்.எல்.ஏ தோசை-ன்னா என்ன ஸ்பெஷல் என பார்ப்போம் என்று ஒரு பக்கம் ஆர்வம்.

இன்று காலை, "சரி பார்ப்போம்" என்று ஆர்டர் செய்தேன்.

மொறு, மொறுவென தோசை மணக்க, மணக்க வந்தது, ஏதோ உள்ளடக்கத்தோடு.

ஆவலோடு பிரித்தேன். அய்யோ உப்புமா...

மசாலா தோசையில், மசாலா வைப்பதை போல, எம்.எல்.ஏ தோசை உள்ளே உப்புமா.

நம்ம ஊர்ல உப்புமா கம்பெனின்னா, சினி ஃபீல்டல பிரபலம்.
(படம் எடுக்கறதா காலத்த ஓட்டற கம்பெனி)

# அப்ப எம்.எல்.ஏ-ன்ன என்ன சொல்ல வர்ரீங்க ஆந்திர மக்கா ?

ஞாயிறு, 27 ஜனவரி, 2013

ஆந்திராவில் சிகிச்சையா ?

" ஆந்திராவில் இருந்து சென்னை அப்போலோவுக்கும், ராமச்சந்திராவுக்கும் வருகிறார்கள், நீங்கள் ஆந்திராவிற்கு சிகிச்சைக்கு போயிருக்கிறீர்களே ",அப்பாவின் நலம் விசாரிக்க தொடர்புகொள்ளும் அனைவரும் கேட்கும் கேள்வி.

" மருத்துவத் தலைநகராய் விளங்கும் சென்னையை விடுத்து ஹைதராபாத்தில், அப்பாவுக்கு சிகிச்சை மேற்கொள்வது ஏன் ? " அண்ணன் ஆ.ராசா அவர்கள் வந்தவுடன் கேட்ட கேள்வி.

அண்ணன் ராசா அவர்களுக்கு பதிலளித்த Nizam's ...Institute of Medical Sciences-ன் இயக்குனர், " தென் இந்தியாவில் ஹைதராபாத்தில் மட்டுமே அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. சென்னை, பெங்களூரில் செய்யப்படுவதில்லை " என்று தெரிவித்தார்.

பார்கின்ஸன்ஸ் நோய்க்கு மேற்சிகிச்சை, அறுவை சிகிச்சை இருக்கிறது என்பதே, இன்னும் பரவலாக தெரியாமல் உள்ளது, குறிப்பாக மருத்துவர்களுக்கே தெரியாத நிலை.

பத்து வருடங்களாக பார்கின்ஸன்ஸ்-க்கு சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கிற எங்களுக்கும் தற்போது தான் தெரிய வந்தது.

ஹைதராபாத்தில் இருக்கிற மத்திய அரசின் அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரியும் மூத்த ஆராய்ச்சியாளர் ஒருவர், பத்து வருடங்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டு, நேற்று தான் அறுவைசிகிச்சைக்கு வந்துள்ளார்.

பார்கின்ஸன்ஸ் நோய் தங்களுக்கு வந்திருப்பது தெரியாமலேயே, பெரும் எண்ணிக்கையில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள்.

வயதானவர்கள் மட்டுமே பாதிக்கப்படுவார்கள் என்ற பொதுவான ஒரு எண்ணமும் இருக்கிறது. தற்போது இளம்வயதினரும் பாதிக்கப்படுகிறார்கள்.

எனவே மாரடைப்பு, சர்க்கரை வியாதி போன்றவற்றிற்கு அளிக்கப்படுகிற விழிப்புணர்வு, பார்க்கின்ஸன்ஸ்-க்கும் ஏற்படுத்தப்பட வேண்டும்.

தற்போது ஆங்கிலப் பத்திரிக்கைகளில் இந்த நோய் குறித்து செய்தி கட்டுரைகள் வர ஆரம்பித்திருக்கின்றன. தமிழ் பத்திரிக்கைகளும் இது குறித்து செய்திகள் வெளியிட வேண்டும்.
 
 

தந்தை-தனயன் உறவு, அண்ணன் ஆ. ராசா

தன்னுடைய அரசியல் அறிமுகம் குறித்துக் குறிப்பிடும் போதெல்லாம் " 1996-ல் முதன்முதலாக நாடாளுமன்ற வேட்பாளராக கழகத்தால் நிறுத்தப்பட முக்கிய காரணம் எஸ்.எஸ் அவர்கள்" என மறக்காமல் அப்பாவை குறிப்பிடுவார் அண்ணன் ராசா.

கடந்த மாதம் தளபதி அவர்கள் கலந்த...ு கொண்ட பெரம்பலூர் பொதுக்கூட்டத்திலும் குறிப்பிட்டார்.

அந்த உணர்வை பேச்சோடு இல்லாமல், செயலிலும் காட்டக்கூடியவர் அண்ணன் ராசா. அப்பா மாத்திரமல்ல, அந்த நேரத்தில் யாரெல்லாம் உடன் இருந்தவர்களோ, அவர்களிடமும், இன்றும் நன்றி பாராட்டி வருபவர்.

அவர் நாடாளுமன்ற வேட்பாளராக அறிமுகமான போது, அப்பா மாவட்ட செயலாளர். பிறகு அவர் மாவட்ட செயலாளரான நேரத்தில், அப்பா உட்பட மூத்தோர்களை உரிய மரியாதையோடு நடத்தியவர்.

1996-ல் பெரம்பலூர் மாவட்டக் கழக செயலாளராக இருந்த அப்பா, தொடர்ந்து நான்கு நாடாளுமன்றத் தேர்தல்களிலும் அண்ணன் ராசா அவர்களுக்கு பணியாற்றியவர்.

தில்லியில் அண்ணன் சிறைபட்ட நேரத்தில், குன்றியிருந்த உடல் நலனையும் பொருட்படுத்தாது அப்பா அடிக்கடி சந்தித்து ஆறுதல் கூறினார்கள்.

இப்படி அப்பாவிற்கும், அண்ணன் ராசாவிற்குமான உறவு, தந்தை-தனயன் உறவு.

அந்த உணர்வோடு, அண்ணன் ஆ. ராசா அவர்கள், எங்கிருந்தாலும் தினம் தொடர்பு கொண்டு தந்தையின் சிகிச்சை குறித்து விசாரித்து அறிவார்கள்.

நீதிமன்றத்தின் அனுமதி பெற்று, நேற்று மாலையும், இன்று காலையும் ஹைதராபாத் NIMS மருத்துவமனைக்கு வருகை தந்து, சிகிச்சை பெறும் அப்பாவை சந்தித்து நலம் விசாரித்தார்.

தனது மைத்துனரை உடன் இருந்து சிகிச்சையை கவனிக்க பணித்துள்ளார். சிகிச்சையின் முழுப் பொறுப்பையும் தானே ஏற்றுக் கொண்டுள்ளார்.

மருத்துவமனைக்கு வந்த நேரத்தில், மருத்துவமனை இயக்குனர் தலைமையில் மருத்துவர்கள் அவரை வரவேற்றக் காட்சி, இப்போதும் அவர் அமைச்சராகவே இருக்கிற உணர்வை ஏற்படுத்தியது.

நீலகிரி தொகுதி, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் என்ன வரவேற்பு வழங்கப்படுமோ, அதே வரவேற்பு மருத்துவமனையிலும்.

அப்பாவை சந்தித்த செய்தி உள்ளூர் தினசரிகளிலும் வெளிவந்து பரபரப்பாகிவிட்டது.
 
 

சனி, 26 ஜனவரி, 2013

நல்ல பணியாளர். வாழ்க !

காலை, மருத்துவமனையில் இருந்ததால் அலைபேசியை 'அமைதியில்' போட்டிருந்தேன். பிறகு வழக்கப்படி தவறிய அழைப்புகளை அழைத்து பேசினேன்.

98410 என துவங்குகிற சென்னை எண், அழைத்தேன்.

" வணக்கம் ஸ்வாமி, நான் ........ பேசுகிறேன் "( அவர் சொன்ன பெயர் எனக்கு புரியவில்லை )

" வணக்கம். சிவசங்கர் பேசறங்க "

" சிவசங்கர் தான. உங்களுக்கு தான் போட்டேன் "

" நீங்க யார் பேசறீங்கன்னு புரியலை சார் "

" ஸ்வாமி, நான் ஸ்வரண்சிங் பேசறேன். எலெக்ட்ரோல் ( வாக்காளர் பட்டியல்) உங்களுக்கு கிடைச்சுடுச்சா..."

" கிடைச்சுடுங்க சார் "

" எங்க ஆந்திராவில இருக்கீங்களா, போன் தெலுகுல பேசுது "

" ஆமாம் சார், ஹைதராபாத்ல இருக்கன் "

" உங்க தொகுதியில பத்து பேருக்கு ஓட்டு சேர்க்கனும். என்ன பண்ணலாம் ?

" சார், நீங்கதான் எங்களுக்கே சேர்க்கனும்.... "

சிரித்துக் கொண்டே " சரி ஸ்வாமீ. ஓட்டர்லிஸ்ட் வந்துடுச்சான்னு கேட்கத்தான் போன் பண்ணேன். நன்றி ஸ்வாமீ"

" நன்றிங்க சார் "

இவர் ஸ்வரண்சிங், மூத்த IAS அதிகாரி.

பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களின் வாக்காளர் பட்டியல் வெளியிடுகிறப் பணிக்கு மேற்பார்வையாளர் என்ற முறையில் தான், சரிபார்ப்பதற்காக இந்த அழைப்பு.

இதுவரை இந்த பொறுப்பில் இருந்தவர்கள் யாரும் இப்படி அழைத்து பேசியது இல்லை, அதிலும் மூத்த அய்.ஏ.எஸ் அதிகாரி.

இதனால் தான் தளபதி அவர்கள், கழக ஆட்சியில் முக்கியத் துறையான தமிழ்நாடு குடி நீர் வடிகால் வாரியத்தில் , இவரை மேலாண்மை இயக்குனராக பணியாற்ற வைத்திருக்கின்றார்.

# நல்ல பணியாளர். வாழ்க !

ஒரு அலைபேசி , இரண்டு அழைப்புகள்...


காலையில் ஒரு அலைபேசி அழைப்பு.

" எம்.எல்.ஏ தானே ?"

" ஆமாங்க "

" நான் ......... கிராமத்திலிருந்து ................ பேசறேன். எங்கே இருக்கீங்க ?.. பார்க்கனும். "

" நான் ஹைதராபாத்தில் இருக்கேன். அப்பாவுக்கு ஒரு ஆப்பரேஷன்."

" நேத்து நடந்த கரிநாள் விளையாட்டு போட்டியப்ப, ஒரு தகராறு. எதிர்பார்ட்டி கேஸ் குடுத்துட்டாங்க. உடனே போலீஸ் ஸ்டேஷனுக்கு பேசனும் "

" நான் இப்போ டாக்டர்கிட்ட பேசிகிட்டிருக்கேன், கொஞ்ச நேரம் கழிச்சி பேசிடறேன்."

" உடனே போலீஸ் ஸ்டேஷன் பேசி, சொல்லிட்டு அப்புறம் பாருங்களேன்..."

# பொது வாழ்க்கைக்கு சகிப்புத் தன்மை நிறைய தேவைப்படுது....

**********************                  *************************         ******************
வழக்கமான அலைபேசி அழைப்பு என்று பார்த்தேன். மணி 11.02.

" private number "

தினம் இரண்டுமுறை அழைத்து தந்தையார் நலம் விசாரிக்கும் அண்ணன் ஆ. ராசா அழைக்கிறார் என நினைத்து,

" வணக்கம் அண்ணன் " என்றேன்.

மறுமுனையிலிருந்து கரகரத்த குரல்.

" வணக்கம் ஸ்டாலின் பேசறேன். அப்பா எப்படி இருக்காங்க ? "

ஒரு நிமிடம் தடுமாறிப் போனேன்.

" அப்பா நல்லா இருக்காங்க. ஆப்பரேஷன் முடிந்து நார்மலாயிருக்காங்க அண்ணே. "

" எனக்கு தெரியாது. இப்ப தான் சுபா ( மாநில இளைஞரணி துணை செயலாளர் சுபா.சந்திரசேகர்) சொன்னாரு. ஏன் சொல்லல ? "

" இல்லிங்கண்ணா, யாருகிட்டயும் சொல்லல "

" ஏன், என்ன பிரச்சினை ? "

" ஏற்கனவே அப்பாவுக்கு கை, கால் நடுக்கம் இருந்தது. அது பார்கின்ஸன்ஸ் பிராப்ளம். நீயூரோவுக்கு ஹைதராபாத்ல தான் டெல்லி AIMSக்கு அப்புறம் ஆப்பரேஷன் பண்றாங்க. அதனால இங்க வந்துட்டோம் "

" அப்படியா, சரி. அப்பாவ நல்லா பாத்துக்குங்க. ஊருக்கு வந்தபிறகு சொல்லுங்க "

" நன்றிங்க அண்ணா. அப்பாகிட்ட சொல்லிடறேன் "

" அவசியம் சொல்லிடுங்க நான் விசாரிச்சேன்னு "

தூக்கம் கலைந்துவிட்டது.

தலைவரால் " தலைவராக" முன்மொழியப்பட்டு விட்ட எங்கள் சட்டமன்ற கழகத் தலைவர்.

யாரையேனும் விட்டு விசாரித்தேன் என்று சொல்ல சொல்லியிருக்கலாம்.

விருதுநகர் மாவட்டத்தில் கழகப் பணியாற்றிவிட்டு, களைத்திருந்தாலும், கழகத் தோழரின் நலம் பெரிதென, மனம் கசிந்து விசாரித்த எங்கள் தளபதி.

# வாழ்நாளெல்லாம் இது போன்று கழகத்திற்கு உழைக்க வேண்டும்.......நான்.


வியாழன், 10 ஜனவரி, 2013

நடுவண் அரசு - 2014 - ஒரு பார்வை


மோடியின் கனவையும், அம்மாவின் கனவையும் ஆய்வு செய்து கொண்டிருந்தோம். தொடர்வோம் தற்போது...

பெரிய மாநிலங்களை பற்றி பார்த்தோம். அடுத்த நிலையிலுள்ள 20-30 தொகுதிகளை கொண்ட மாநிலங்கள் மத்தியப்பிரதேசம் 29, கர்நாடகா 28, குஜராத் 26, ராஜஸ்தான் 25, ஒரிசா 21, கேரளா 20.

மத்தியபிரதேசம் மாநிலம் தொடர்ந்து பா.ஜ.க-வின் ஆட்சியின் கீழ் உள்ளது. ஆனால் கடந்த எம்.பி தேர்தலில் காங்கிரஸ் 12 இடங்களை பிடித்துள்ளது. பா.ஜ.க 16 இடங்களை பிடித்தது.

கர்நாடகாவில் பா.ஜ.க வசம் 19, காங் 6 எம்.பி-களும் வைத்துள்ளன. ஆனால் தற்போது பா.ஜ.க-வை எடியூரப்பா குடைந்துக் கொண்டிருக்கிற நிலையில், வரும் எம்.பி தேர்தலில் நிலமை சிக்கல் தான் பா.ஜ.க-விற்கு.

குஜராத் 1995-லிருந்தே பா.ஜ.க கைப்பிடியில் உள்ளது. ஆனால் கடந்த எம்.பி தேர்தலில் மக்கள் பா.ஜ.க-விற்கு 15 இடங்களையும், காங்கிரஸிற்கு 11 இடங்களையும் அளித்துள்ளனர். வரும் தேர்தலிலும் இதுவே தொடரும் நிலை.

ராஜஸ்தானில் காங்கிரஸ் அரசு. 20 எம்.பிக்கள் காங்கிரஸிடமும், 4 எம்.பிக்கள் பா.ஜ.கவிடமும் உள்ளனர். ஆனால் வரும் தேர்தலில் நிலை சற்று மாறலாம்.

ஒரிசாவில் பா.ஜ.க கூட்டணி கட்சியான பிஜூஜனதாதளத்தின் ஆட்சி. நவீன் பட்நாயக் முதல்வர். அவரிடம் 14 எம்.பிக்களும், காங்கிரஸிடம் 6 எம்.பிக்களும் உள்ளனர். காங்கிரஸிற்கு சரியான மாநில தலைமை இல்லாததால் நவீன் கையே ஓங்கியிருக்கும்.

கேரளாவில் காங்கிரஸ் கூட்டணிக்கு 16 எம்.பிக்களும், கம்யூனிஸ்ட் கூட்டணிக்கு 4 எம்.பிக்களும் உள்ளனர்.

அடுத்த நிலையிலுள்ள மாநிலங்களான அசாம் 14, ஜார்கண்ட் 14, பஞ்சாப் 13, சத்திஸ்கர் 11, ஹரியானா 10, இவற்றில் காங்கிரஸும், பா.ஜ.க-வும் கிட்ட்தட்ட சம அளவில் எம்.பிக்களை பெற்றுள்ளன. அதே நிலையே தொடரும்.

இதுவரை பார்த்த மாநிலங்களில் வெற்றி பெறுகிற எம்.பிக்கள் எண்ணிக்கையை பொறுத்தே ஆட்சி அமைக்கின்ற வாய்ப்பு.

தென் மாநிலங்களில் கர்நாடகாவை தவிர மீதி மூன்று மாநிலங்களிலும் பா.ஜ.க நினைத்தே பார்க்க வேண்டியதில்லை. கர்நாடகாவிலும் கடந்த தேர்தல் எண்ணிக்கை வராது.

பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்திலும் வாய்ப்பு இல்லை. அங்கே வெற்றி பெறக் கூடிய மாயாவதியும், முலாயமும் ஆதரிக்கப் போவதில்லை.

மேற்குவங்கத்திலும் பா.ஜ.க கதைக்காகப் போவதில்லை.

கூட்டணியில் இருக்கிற பிகார் நிதிஷும், ஒரிசா நவீனும் மோடியை ஆதரிக்க மாட்டார்கள்.

ராமபிரானே வந்து கணை தொடுத்து ஆட்சிக் கனியை பறித்துக் கொடுத்தால் மோடி பிரதமர் ஆக வாய்ப்பு இருக்கிறது.

இதே கதை தான் அம்மா கதையும்.

காங்கிரஸிற்கு ஆந்திராவில் பெரிய இழப்பு இருக்கும். மற்ற மாநிலங்களில் சில இடங்களில் இழப்பும், சில இடங்களில் சிறு வரவும் இருக்கும்.

முலாயம், மாயாவதி, மம்தா, ஜெகன்மோகன் ரெட்டி, நிதிஷ்குமார், நவீன் பட்நாயக், பவார் ஆகியோர் தான் 2014-ல் மத்திய அரசை யார் ஆளுவது என்று முடிவு செய்பவர்களாக இருப்பார்கள்.

இவர்கள் மோடியையும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள், ஜெயலலிதாவையும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இருவரும் 2014 வரை கனவில் மகிழ்ச்சியாக திளைத்திருக்கட்டும்.

மத்திய அரசு அமைய இன்னொருவரின் கண்ணசைவும் தேவை.

அவர் தான் தலைவர் கலைஞர். 

சனி, 5 ஜனவரி, 2013

பாதுகாப்பு… ரொம்பத்தான்…

சிக்னல். பச்சை மாறுவதற்குள் காரை செலுத்திவிட சற்று வேகத்தைக் கூட்டினேன்.

எனக்கு முன்னால் சென்று கொண்டிருந்த இன்னோவா கார் திடீர் என பிரேக் அடித்து நின்றது.

டொம்.

நான் அடித்த பிரேக்கிற்கு ஒரளவுக்கே கட்டுப்பட்ட கார், இன்னோவாவை பின்னால் இடித்து நின்றது.

சிக்னல் மஞ்சளில் தான் இருந்தது, ஏன் நிறுத்தினார் என்று பார்த்தால், சிக்னல் அருகே சாலையில் 10-க்கு மேற்பட்டோர் நின்று கொண்டிருந்தனர். கையில் குச்சி...யில் செருகப்பட்ட சிறு தட்டிகள்.

அவர்களில் ஒருவர் கையை நீட்டியதால் இன்னோவாவை நிறுத்தியிக்கிறார். கிட்ட தட்ட பாதி ரோட்டில் நின்றது.

இறங்கி போய் பார்த்தேன். எனது கார் மாருதி ஸ்விப்ட் என்பதால் பெரிய சேதம் இரண்டு காருக்கும் இல்லை.

இன்னோவாவை ஓட்டி வந்தவர் இறங்கி வந்து பார்த்தார். “ சாரி” என்றேன். பரவாயில்லை என்றுவிட்டு காருக்கு போய்விட்டார்.

சிக்னல் அருகே நின்று காரை நிறுத்தியவர் என்னருகே வந்து நோட்டீஸ் கொடுத்தார்.

சிக்னல் விழுவதற்குள் காருக்குள் உட்கார்ந்து நோட்டீஸை பார்த்தேன்

# “ சாலை பாதுகாப்பு வாரம். கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள். “

வெள்ளி, 4 ஜனவரி, 2013

அம்மா, மோடி கனவு தொடரட்டும்....

மோடியின் பிரதமர் கனவை களவாட முயற்சிக்கும் ஜெயலலிதாவின் நாடகம் தான், தேசிய வளர்ச்சி குழு கூட்டத்தை புறக்கணிப்பு உதார்.

மோடியை, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருக்கும் பிகார்  முதல்வர் நிதிஷ்குமார் ஏற்றுக் கொள்ளமாட்டார். தனக்கு இடையூறாக இருக்கும் நிதிஷை வெளியேற்ற மோடியும் திட்டமிடுகிறார்.

பா.ஜ.கவின் தலைவர்கள் அத்வானி, சுஷ்மா சுவராஜ், அருண் ஜேட்லி ஆகியோருக்கும் ஆசை தான். ஆனால் மோடி போல, குஜராத்  குறிப்பிட்ட ஆதரவுத் தளம் இல்லை. இந்துத்துவா வெறி ஏற்ற மோடி வித்தை தான் உதவும் என்பதால் பேசவும் முடியாது. 

இப்படி பா.ஜ.க-விற்குள்ளும், கூட்டணிக்குள்ளும் மோடிக்கு இருக்கும் எதிர்ப்புகளால், எல்லோரும் ஏற்றுக் கொள்ளக் கூடியவராக ,குஜ்ரால், தேவகௌடா போல ஒரு வாய்ப்புக் கிடைக்காதா என்பது தான் ஜெ-வின் திட்டம். அதற்கு இணக்கம் காட்ட தான், மோடியின் பதவியேற்பில் பங்கேற்று காட்டிய பாசம்.

மத்தியஅரசு ஆட்சி அமைப்பில் முக்கிய பங்காற்ற வேண்டிய, உத்தரப்பிரதேச மாநிலத்தின் நிலை தான் பரிதாபம். ஒரு காலத்தில் இந்திய அரசியலை ஆட்டிப் படைத்த மாநிலம். இங்கு பெரும்பான்மை எம்.பி-களை கைப்பற்றி விட்டால், கூட்டணி பலமே தேவையிருக்காது.

543 எம்.பி-களில் 80 எம்.பிக்கள் உத்தரபிரதேசம் தான். அதனால் தான் இந்த மாநிலத்தை தன் கைக்குள் கொண்டு வந்துவிட வேண்டுமென்று ராகுல்காந்தி தலைகீழாக நின்று முயற்சித்தார்.

ஆனால் சோகம், அவரால் அங்கு துரும்பையும் அசைக்க முடியவில்லை. ஒரு காலத்தில் ஆட்சியில் இருந்த பா.ஜ.க-வாலும் தலை தூக்க முடியவில்லை. 

முலாயம்சிங் யாதவும் (எஸ்.பி), மாயாவதியும்(பி.எஸ்.பி) மாறி மாறி, மியூசிக்கல் சேர் ஆட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். 

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங், எஸ்.பி, பி.எஸ்.பி கட்சிகள் தலா 21,23,21, பாஜ.க கூட்டணி 15 இடங்களும் பிடித்தார்கள். இப்போதும் இதையே பிடித்தால் போதும் என்ற மனநிலையில் தான் இருப்பார்கள்.

அடுத்து அதிக எம்.பி தொகுதிகளை வைத்திருக்கிற மாநிலங்கள் : மகராஷ்டிரம் 48, மேற்கு வங்கம் 42, ஆந்திரா 42, பிகார் 40, தமிழ்நாடு 39.

மகராஷ்டிரத்தில் காங்+பவார் காங், பா.ஜ.க+சிவசேனா இடையே இழுபறி கதைதான். இதில் சிவ்சேனாவிற்கு மோடி மீது விருப்பம் இல்லை.

மேற்கு வங்கத்தில் மம்தாபானர்ஜி சட்டமன்ற தேர்தலை போல் ஸ்வீப் அடிக்கலாம் என்ற ஆசை. கம்யூனிஸ்டுக்கு கைநழுவிய வங்கத்தை எம்.பி தேர்தலில் மீட்க ஆசை. மம்தாவிடம் ஏற்கனவே 19 எம்.பிக்கள், இப்போது கூட செய்யும்.

ஆந்திராவில் கடந்த தேர்தலில், ஒய்.எஸ்.ராஜசேகர் ரெட்டியின் உழைப்பில் கிடைத்த 33 எம்.பி-க்கள் தான் மத்திய காங் அரசின் அடித்தளமே. ஆனால் இப்போது ஒய்.எஸ்.ஆர்.ஜெகன்மோகன் ரெட்டி என்ற புயல் வீச உள்ள நிலையில் காங் எங்கு தரைதட்டும் என்று தெரியாத நிலை.

பிகாரில் நிதிஷ் வசம் 20 எம்.பி-களும், அவரது துணையால் பா.ஜ.க வசம் 12 எம்.பி.களும் உள்ளனர். நிதிஷ் கை தான் மீண்டும் ஓங்கும் நிலை.

39 எம்.பி.கள் கொண்ட தமிழகத்தின் ஆதிக்கம் தான் 1999-லிருந்து மத்திய அரசியலில் தொடர்கிறது. 

இந்த முறை பெரும்பான்மையான எம்.பி.களை கைப்பற்றினால், பிரதமர் அல்லது துணைபிரதமர் என்ற கனவில் ஜெ உள்ளார். 

தமிழகம் இருளாக இருப்பதால், அம்மா தூக்கம் கலையாமல், கனவு சிதறாமல் மூழ்கியுள்ளார்.

இன்னும் பதினோரு பெரிய மாநிலங்கள் உள்ளன, தொடர்ந்து பார்ப்போம்...

அது வரை அம்மா, மோடி கனவு தொடரட்டும்....

மோடியின் வெற்றியும், பிரதமர் கனவும்...

மோடியின் வெற்றி செய்தி வர பா.ஜ.க-வினர் உற்சாக கனவில் திளைக்க ஆரம்பித்தனர். இருந்த ஆட்சியை தக்க வைத்தாக வே இருந்தாலும், மூன்றாவது முறை ஆட்சியை பிடித்ததால் இந்தக் கனவு.

வெற்றிக்கு பிறகான கொண்டாட்டங்களின் போது, மோடியின் ஆதரவாளர்கள் “ இது ட்ரெயிலர் தான், 2014-ல் தான் மெயின் பிச்சர்” என ரஜினியின் பிரபல பன்ச் டய்லாக்கை முழங்கினர்.

“ இது நல்ல ஆட்சிக்கும், வளர்ச்சி பணிகளுக்கும் கிடைத்த வெற்றி. 1980-களின் சாதிய மற்றும் குறுகிய கண்ணோட்டத்தை மக்கள் கைவிட்டுவிட்டனர் ”.
 
மோடியின் வெற்றி முழக்கத்தை கேட்ட அவரது ஆதரவாளர்களுக்கு உற்சாக வெள்ளம்.“ சி.எம் 2012-ல், பி.எம் 2014-ல்”, “ Hit & Fit for P.M “ என கோஷங்கள் விண்ணை தொட்டன.

ஆனால் மோடி மிக அடக்கமாக சொன்னார்,” நீங்கள மிகவும் விரும்பினால், டெல்லிக்கு செல்கிறேன், வருகிற 27ந் தேதி “. உளக்கிடக்கையை மறைக்க இயலாமல்.

ஹிந்தியில் உரையாற்றிய மோடியை, அவரது ஆதரவாளர்கள் தாய்மொழி குஜராத்தி மொழியில் பேச வற்புறுத்தினர். தேர்தல் பிரச்சாரம் முழுவதும் குஜராத்தியில் பேசியவர், எப்போதாவது தான் சிறிதளவு ஹிந்தியில் சிறிது பேசக் கூடியவர்.

அதற்கு மோடி அளித்த பதில், “ நான் ஹிந்தியில் பேசுவதை கேட்க, நீங்கள் இனி பழகிக் கொள்ள வேண்டும்.”  குஜராத்தில் ஹிந்தி தேவையில்லை, ஆனால் டெல்லி தேவைக்கு தயாராகிறார்.

இந்த தேர்தல் வெற்றி, தொடர் வெற்றியாக இருந்தாலும் மோடிக்கு குஜராத் போர் அடித்துவிட்டது. இந்த வெற்றிக்கு அவர் பட்ட பிரம்ம பிரயத்தனம் அவருக்கு தான் தெரியும்.

தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி கட்டத்தில் மோடியின் ஹைடெக் பிரச்சாரம் வெளிப்பட்டது, 3-D பிரச்சாரம். முதற் கட்டமாக அகமதாபாத், ராஜ்காட், வடோடரா, சூரத் ஆகிய நகரங்களில் துவங்கியது.

ஹோலோகிராபிக் தொழில் நுட்பத்தின் மூலம் திரையில் தோன்றுகிற மோடியின் உருவம் நேரடியாக தோன்றி பேசுவது போல இருக்கும். குஜராத்தின் நான்கில் ஒரு பங்கு வாக்காளர்கள் 19-29 வயதுக்கு உட்பட்டவர்கள்.

அந்த இளைய சமுதாயத்தை குறி வைத்தே இந்த ஹைடெக் பிரச்சாரம். முதல் நாள் பிரச்சாரத்திற்கே 65 கோடி செலவு செய்ததாக  குற்றம் சாட்டப்பட்டது.

ஆனால் மோடி, “ தேர்தலில், உலகத்திலேயே முதல் முறையாக இந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்துகிறவன் நான் தான். அதனால் பொறாமையில் பேசுகிறார்கள்”, என ஒதுக்கி தள்ளினார்.

ஆனால் மோடிக்கு தான் தெரியும் வெற்றியின் உண்மை முகம், அவருடைய கடந்த அமைச்சரவையில் இருந்த அய்ந்து அமைச்சர்கள் தோல்வியை தழுவியது.

குஜராத்தின் வளர்ச்சி கோஷம், இளைய தலைமுறையின் ஹைடெக் ஆதரவு, நகர்புற மத்திய வர்க்கத்தின் ஆதரவு, ஹிந்துத்துவா மோகம், வருங்கால பிரதமர் என்ற முழக்கம் என்ற சர்க்கஸ் விளையாட்டை திறமையாகக் கையாண்டார்.

முக்கியமாக காங்கிரஸின் தேறாத மாநிலத் தலைமை ( அதுக்கென்று, மத்திய தலைமை எப்புடின்னு கேட்டுடாதீங்க..) 

வெற்றி கண்டார். வெற்றி, வெற்றிதான். குறிப்பாக மோடியின் வெற்றிதான். 

ஆனால் பிரதமர் கனவு,,,,,,

புதன், 2 ஜனவரி, 2013

விஜய் டிவி - நீயா, நானா நிகழ்ச்சி - இட ஒதுக்கீடு

 
 
விஜய் டிவி-யின் நீயா, நானா நிகழ்ச்சிக்கு அழைத்திருந்தார்கள்....

இன்றைய மாணவர்கள் தமிழகத்தின் பிரச்சினைகளை உணர்ந்திருக்கிறார்களா என்ற தலைப்பிலான விவாதம்.

ஒருபுறம் கல்லூரி மாணவர்கள் 30 பேர். எதிர்புறம் சமூக ஆர்வலர்கள், பத்திரிக்கையாளர்கள், அரசியல் இயக்கத்தை சேர்ந்தோர் மற்றும் பல்வேறு தளங்களில் இயங்குபவர்கள் என 30 பேர்.

எனக்கு இருபுறத்திலும் பத்திரிக்கையாளர்கள் கார்த்திக் மற்றும் கவிதா. எழுத்தாளர் முத்துக்கிருஷ்ணன், களப்பிரன், மருத்துவர் சிவராமன், ஷாநவாஸ், ஜெயின் கூபி என பலதரப்பட்டோர்.

கோபிநாத் இயல்பாக துவங்கினார் விவாதத்தை. மாணவர்களிடம் துவங்குவோம், எனக் கூறி, " தமிழகத்தின் தலையாய பிரச்சினையாக எதை கருதுகிறீர்கள் ?" என்ற கேள்விக்கு ஒவ்வொருவராக பதில் சொல்லுங்கள் என்றார்.

ஒவ்வொருவராக பதில் சொல்ல ஆரம்பித்தனர். மாணவிகள் அனைவரும், ஒன்றுபட்ட குரலில், " பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை, பெண் சுதந்திரம் மறுக்கப் படுகிறது " என்று கருத்து சொன்னார்கள்.

மாணவர்களின் பதில் பல தரப்பட்டதாக இருந்தது. பயனுள்ள கல்வியாக இல்லை, லஞ்சம், மின்வெட்டு, சாதிப் பிரச்சினை என ஒவ்வொருவரும் சொல்லி வர... ஒரு மாணவன் சொன்ன பதில் எங்களை நிலைகுலையச் செய்தது.

" இட ஒதுக்கீடு - தமிழகத்தின் முக்கியமான பிரச்சினை " என அந்த மாணவன் சொல்ல, கோபிநாத் "ஏன் சொல்கிறீர்கள் ?" எனக் கேட்க, " என்னை விடக் குறைவான மதிப்பெண் எடுத்தவர்களுக்கு கல்லூரியில் இடம் கிடைத்தது, எனக்கு கிடைக்கவில்லை " என சொன்னார்.

அதற்கு பிறகும் தொடர்ந்து நான்கு, அய்ந்து மாணவர்கள் இட ஒதுக்கீட்டை குறை சொல்ல, அருகில் இருந்த சகோதரர் கார்த்திக்கு முகம் சிவந்தது. சகோதரி கவிதா அவர்களுக்கு உட்கார இருப்பு கொள்ளவில்லை.

இன்னும் கொடுமை, ஒரு ஆதிதிராவிட மாணவன் சொன்ன பதில், " என்னோடு இருக்கிற நான்கு நண்பர்கள் வேதனைப் படுகிறார்கள், எங்களுக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்பை நீங்கள் பறித்துக் கொள்கிறீர்கள் என்று வருத்தப் படுகிறார்கள். " .

எங்கள் பகுதி கொதிநிலைக்கு வந்தது.

பின் வரிசையில் இருந்த தோழர்களிடமிருந்து வருத்தக் குரல்கள். நான் கார்த்தியிடம் சொன்னேன், " நாம் தான் இப்போது மாணவர்கள், நமக்கு தான் பாடம் நடக்கிறது " . அவரும் ஆமோதித்தார்.

ஒரு கட்டத்தில் கோபிநாத், " இட ஒதுக்கீட்டை ஆதரிக்கிறவர்கள் கையை உயர்த்துங்கள்" எனக் கேட்க , அய்ந்து பேர் கை தூக்கினர். எதிர்ப்பவர்கள் கை உயர்த்துங்கள் " எனக் கேட்க 25 பேர் கை உயர்த்தினர்.

இது அறியாமை, மிதப்பான நடுத்தர வர்க்க மனோபாவம் எனப் புரிந்தது. இவர்களை தெளிவுபடுத்த என்ன வழி என்ற கேள்விதான் மனதில் எழுந்தது.

இடஒதுக்கீடு மட்டுமல்ல, இன்னும் சில சமூக பிரச்சினைகளில்  மாணவர்களின் கருத்து சமூக நிலைக்கு எதிராகவே இருந்தது. நிகழ்ச்சியின் முடிவில் எங்களது கருத்துகளை மாணவர்கள் ஏற்றுக் கொண்டபோது, ஒன்று புரிந்தது.

அவர்களிடம் உரிய செய்திகள் சென்றடையவில்லை. தெளிவு பெற்றால், அவர்கள் நிலைப்பாடு மாறுபடுகிறது.

கோபிநாத் கேட்டார், " தவறு யாரிடத்தில் ? ". அதற்கு சில பதில்கள் வந்தன, எங்கள் பக்கத்திலிருந்து. குற்ற உணர்வில், அங்கு என்னால் பதில் சொல்ல இயலவில்லை.

என்னைப் பொறுத்த வரை, " பெற்றோர்களின் நோக்கம் ( பிள்ளைகள் வேலைக்கு செல்வதற்காக மட்டுமே கல்வி கற்க வேண்டும் ), ஆசிரியர்களின் மனோபாவம், ( சம்பளத்திற்கு மட்டும் வேலை செய்தால் போதும் ), இயக்கங்களின் பணியில் தேக்கம் ".

நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஒளிப்பரப்பான பிறகு மேலும் பேசுவோம்.....

பேசுவது மாத்திரம் அல்ல, செயல்படவும் தேவை ஏற்பட்டிருக்கிறது.

# புத்தாண்டில் பணிகள் காத்திருக்கின்றன....