பிரபலமான இடுகைகள்

ஞாயிறு, 20 மார்ச், 2016

போடுங்கம்மா ஓட்டு

சாலை ஓரத்தில் இலுப்பை மரத்தோப்பு. மரத்தடியில் ஆறு பேர் வட்டமாக அமர்ந்திருந்தனர். உடன் வந்தத் தோழர் "அவர்களையும் பார்த்து விடுவோம்" என்றார்.  கிட்டே நெருங்கும் போது தான் தெரிந்தது, அவர்கள் சீட்டாடிக் கொண்டிருந்தார்கள்.

அவர்கள் அசையவில்லை. உடன் வந்தத் தோழர்களில் ஒருவர் அவர்களைப் பார்த்து சொன்னார்,"இவர் மாவட்ட கவுன்சிலுக்கு திமுக சார்பா நிக்கிற வேட்பாளர் சிவசங்கர். ஓட்டுப் போடுங்க",என்றார். நான் அவர்களைப் பார்த்து வணங்கினேன். கையில் இருந்த சீட்டு கலைந்து விடாமல் பிடித்துக் கொண்டு தலையசைத்தனர்.

ஒருவர் தலையை கூட அசைக்கவில்லை. உற்றுப் பார்த்தேன். அவர் தலை மீது சிறு கல் இருந்தது. அது கீழே விழுந்து விடக் கூடாது என்பதற்காக, அவர் தலையசைக்கவில்லை போலும். அவர் முந்தைய ஆட்டத்தில் தோற்றிருந்ததால், தலை மீது கல் வைப்பது தண்டனையாம். ஓட்டை விட சீட்டாட்டம் தான் அவர்களுக்கு முக்கியமாக இருந்தது. அந்த ஓட்டுக் கேட்கும் அனுபவம் சங்கடமாக இருந்தது.

அது 1996ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல். 50,000 பேர் வாக்களிக்கக் கூடிய, மாவட்ட ஊராட்சி உறுப்பினருக்கான தேர்தலில் போட்டியிட்டேன். அதற்கு முன்பு என் தந்தையாருக்காகவும், மற்ற சில வேட்பாளர்களுக்காவும் சில தேர்தல்களில் பணியாற்றிய அனுபவம் உண்டு தான். ஆனால் நாமே வேட்பாளராகப் போகும்போது தான் இது போன்ற நேரடி அனுபவங்கள்.   

அடுத்த அனுபவம் இன்னும் கொடுமை. அகரம் கிராமம். ஊர் கடைசியில் மாரியம்மன் கோவில். அதன் முன்புற திண்ணையில் சிலர் படுத்திருந்தனர். ஓட்டுக் கேட்க ஒரு கூட்டமாக வந்திருந்தவர்களை பார்த்த உடன் எழுந்து அமர்ந்து பதிலளித்தனர் சிலர். ஒருவர் படுத்திருந்தபடியே வணங்கினார். இன்னொருவர் "சரி, சரி. போ போ"என்று அலட்சியமாக பதிலளித்தார்.  பிச்சைக்காரன் போல் ட்ரீட்மென்ட். ஒரு நாளைக்கு இருபது கிலோமீட்டருக்கு மேல் நடந்தே வீடு, வீடாக ஓட்டுக் கேட்கும் போது, உடல் வலி வேறு.

இரவு வீடு திரும்பி, கால் வலிக்கு வென்னீர் ஒத்தடம் கொடுக்கும் போது கண்ணில் நீர் கசிந்தது. உடல்வலியால் மட்டுமல்ல அது.

வரவேற்பு தான் அப்படி இருந்ததே ஒழிய, தேர்தல் முடிவில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றியை அளித்தனர். பிறகு காலப் போக்கில் தான், எளிய மக்களின் இயல்பு அது  என்பது புரிந்தது. உள்ளாட்சித் தேர்தலின் போது, ஒரு நாளைக்கு பத்து வேட்பாளர்களுக்கு மேல் வாக்குக் கேட்டு இம்சை செய்யும் போது, அவர்கள் தான் என்ன செய்வார்கள், பாவம்.

அப்போதெல்லாம் வாக்கு கேட்டு சென்றால், "ஆமாம், ஓட்டுக் கேட்டு வந்துட்டிங்க. எங்களுக்கு என்னா செஞ்சீங்க?" என்றக் கேள்வியுடன் தான் வரவேற்பர். வாக்கு கேட்டு வருபவர் ஆளுங்கட்சியை சேர்ந்தவரா, எதிர்கட்சியை சேர்ந்தவரா, பதவியில் இருந்தவரா, புதியவரா என்ற பாகுபாடே இருக்காது. யாராக இருந்தாலும் சகட்டுமேனிக்கு இந்தக் கேள்வி பாயும்.

இது போன்ற சங்கடங்கள் பலவற்றை தேர்தல் நேரத்தில் எதிர் கொள்ள நேரிடும். அண்ணா போன்ற மாமனிதர்களுக்கே தேர்தல் நேரத்தில் இதை விடக் கொடுமையான அனுபவங்கள் ஏற்பட்டதை படித்திருந்ததால், மெல்ல மெல்ல இவைகளை எதிர் கொள்ள தயாரானேன்.

பிறகு 2001 உள்ளாட்சித் தேர்தல், 2006 சட்டமன்றத் தேர்தல், 2011 சட்டமன்றத் தேர்தல் ஆகியவற்றில் போட்டியிட்டதில் இது போன்று பல்வேறு அனுபவங்கள்.

இப்போது சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்திற்கான நாட்கள் குறைவாக இருப்பதால், வீடுவீடாக வாக்கு கேட்கும் சூழல் மாறிவிட்டது. திறந்த ஜீப்பில் நின்றபடி வாக்கு கேட்டால் தான் தொகுதி முழுதும் செல்லும் நிலை. இதனால் யாராவது வண்டியை நிறுத்தி கேள்வி கேட்டால் தான் வாய்ப்பு உண்டு.

2011 தேர்தல் போது, திறந்த ஜீப்பில் நின்று வணங்கி வாக்கு சேகரித்தவாறு சென்று கொண்டிருந்தேன். ஒரு ஊரில் பெண்கள் கூட்டமாக வயல் வேலைக்கு சென்று கொண்டிருந்தனர். அவர்களைப் பார்த்த ஓட்டுனர், ஜீப்பை மெதுவாக செலுத்தினார். மைக்கில் பிரச்சாரம் செய்தவர், ஓட்டுகளை மொத்தமாக வளைக்கும் நோக்கில் "தாய்மார்களே மறந்துவிடாதீர்கள்" என்று ஆரம்பித்தார்.

கூட்டத்தில் இருந்த ஒரு பெண் கை நீட்டி ஜீப்பை மறித்தார். நான் அவரை நோக்கிக் குனிந்தேன். அவர் என்னைப் பார்த்து சொன்னார்," நீங்க மறந்துடாதீங்க. இன்னும் எங்க தெருவுக்கு பணம் வரல".


( "அந்திமழை" மார்ச் மாத இதழில் எனது கட்டுரை )

வெள்ளி, 18 மார்ச், 2016

மாதா, பிதா, குரு...

"எங்க மாமா  இந்தப் பத்திரிக்கையின் ஆசிரியர். அவரே தான் இந்தப் பத்திரிகையின் நிறுவனர், நிருபர், விளம்பர மேலாளர், டிஸ்ட்ரிப்யூட்டர், டெலிவரி பாய்" என சொல்லிய போது அரங்கில் இருந்தோர் கையொலி எழுப்பினர். சிலர் சிரித்தனர். சிலர் மகிழ்ந்தனர். சிலர் வியந்தனர். நான் நெகிழ்ந்தேன்.

அது "சென்னைக் குரல்" பத்திரிக்கையின் 20ம் ஆண்டு நிறைவு விழா. நிறைவு விழா என்பதை விட, 21ம் ஆண்டின் துவக்க விழா என சொல்லலாம் என்று சிலர் செண்டிமெண்ட்டாக சொன்னார்கள். ஆனால் அதற்கும் அண்ணன் கார்த்திகை நிலவன் புன்னகைத்தவாறு நின்றார். அவர் தான் அந்த ஆசிரியர் கம் டெலிவரிபாய்.

சென்னை குரல் பத்திரிக்கை என்றவுடன் கூடுதல் சிந்தனை வந்துவிடலாகாது. கழகத் தோழர்களுக்காக இயங்கும் சிறுபத்திரிக்கை. ஆனால் சிறுபத்திரிக்கை என்ற எண்ணம் இல்லாமல் அதற்காக தன் வாழ்வின் பெரும் பகுதியை செலவிட்டிருக்கிறார் அண்ணன் நிலவன்.

அதனை அந்த விழாவில் வைக்கப் பெற்றிருந்த கண்காட்சியை கண்டு உணர்ந்தேன். துவக்கத்தில் இருந்து இது வரையிலான இதழ்களை பார்வைக்கு வைத்திருந்தார். "ஆரம்பத்துல சினிமா பாட்டுப்புத்தகம் சைஸ்ல இருக்கு பாருங்க" என மும்பை ஆறுமுகப் பாண்டியன் அண்ணாச்சி காட்டினார். அப்போதே எம்.ஜி.ஆரை கார்ட்டூனில் கலாய்த்திருந்தார் அண்ணன் நிலவன்.

விழாவிற்கு ஒரு கல்லூரிப் பெண் வரவேற்புரையாற்றினார். துவக்கவுரையாக ஒருவர் பின்னி எடுத்தார். வட்ட செயலாளர் அதியமான். அப்துல்லா அண்ணன் என்னைப் பார்த்து சிரித்தார். "கழகத்தின் வட்ட செயலாளரும் உரையில் கலக்குவார்" என கமெண்ட் பறந்தது. .

அண்ணன் எம்.எம்.அப்துல்லா, கீரை தமிழ்ராஜா, மாம்பலம் சந்திரசேகர், பத்திரிக்கையாளர் யுவகிருஷ்ணா, புதுகை மா.செ அண்ணன் அரசு என பலரும் வாழ்த்த, நக்கீரன் இணையாசிரியர் அண்ணன் கோவி.லெனின் மாநாட்டு உரை போல் பிரித்து எடுத்தார். உண்மையில், அழுத்தமான கருத்துகள் நிரம்பிய உரை அது.

அந்த "சென்னைக் குரல்" இதழை அனைவருக்கும் இலவசமாக தான் வழங்குவார் அண்ணன் கார்த்திகை. அதே போல விழாவிற்கு வந்த அனைவருக்கும் நினைவுப் பரிசு வழங்கி கவுரவித்தார். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவும் வழங்கினார். இதற்கான செலவிற்கு எவ்வளவு சிரமப்பட்டு இருப்பார் என பின்னர் தான் யோசிக்கத் தோன்றியது.

இன்னும் யோசிக்க பல விஷயங்களை வைத்திருந்தார் அண்ணன். 20 வருடங்கள் தொய்வில்லாமல் ஒரு பத்திரிகை நடத்துவது சிரமம். அதுவும் எதிர்பார்ப்பில்லாமல், வருமான நோக்கமில்லாமல், ந்ஒரு இயக்கம் சார்ந்து நடத்துவது மிக சிரமம். அதைவிட சிரமத்தை அவர் சுமக்கிறார் என்பதை அடுத்த நிகழ்வு உணர்த்தியது.

அரசு அண்ணன் "பேமிலி போட்டோ. எல்லோரையும் கூப்பிடுங்க", என்றார். வரவேற்புரையாற்றிய அறிவுச்செல்வி மேடைக்கு வந்தார். மூத்த மகள். எம்.சி.ஏ படிக்கிறார். அடுத்து வந்தப் பெண் தான் எங்களுக்கெல்லாம் டீ, பிஸ்கட் கொடுத்தவர். அறிவுக்கரசி, எட்டாம் வகுப்பு படிக்கிறார். அடுத்து அறிவன்பன். இவருக்கு சிறப்பு கவனம் செலுத்த அண்ணன் பெரும் பகுதி நேரம் செலவிடுகிறார். இவர்கள் அனைவரும் குடும்ப நிகழ்வு போல் அதுவரைப் பணியாற்றிக் கொண்டிருந்தார்கள்.

தன்னுடைய வரைகலைத் தொழிலை வைத்துக் கொண்டு, இவர்களை படிக்க வைத்து, குடும்பத்தை நடத்தி, இந்த இதழையும் நடத்தி உண்மையில் மிகப் பெரியப் பணி. காரணம், அண்ணன் கார்த்திகை நிலவன் துணைவியார் மறைந்து எட்டாண்டுகள் ஆகிறது. அதிலிருந்து இவர் தான் அவர்களுக்கு தாய், தந்தை, தோழன். சென்னைக் குரலுக்கும் ஆசிரியர்.

# மாதா, பிதா, குரு. அண்ணன் கார்த்திகை நிலவன் !

செவ்வாய், 15 மார்ச், 2016

பிணம் தின்னும் ஃபைனான்ஸ்கள்

அழகர். 26 வயது இளைஞர். திருமணமாகி மூன்று வருடம் தான் ஆகிறது. நேற்றைய முன்தினம் தற்கொலை செய்து கொண்டு இறந்து விட்டார். காரணம் டிராக்டர் வாங்க கடன் அளித்திருந்த தனியார் நிதிநிறுவனத்தார் செய்த கொடுமை .

அரியலூர் வட்டம், ஒரத்தூர் கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் என்ற விவசாயி மகன் அழகர். தனியார் நிதிநிறுவனத்தில் கடன் வாங்கி டிராக்டர் வாங்கி இருக்கிறார். வாங்கிய கடனில் 5 லட்சத்தை திருப்பி செலுத்தியிருக்கிறார். இன்னும் 2.25 லட்சம் செலுத்த வேண்டி இருக்கிறது.

10.03.2016 அன்று வி.கைகாட்டி கடைவீதியில் இருந்திருக்கிறார் அழகர். அப்போது அந்த தனியார் நிதி நிறுவனத்தை சேர்ந்த பத்து பேர் அழகரிடம் சென்று வம்பிழுத்திருக்கிறார்கள். அவரது சட்டையை பிடித்து இழுத்து பணம் கட்ட வேண்டும் என மிரட்டியிருக்கிறார்கள். ஒரு மாதம் டைம் கொடுங்கள் என்று அழகர் கேட்டிருக்கிறார்.

டைம் கொடுக்க முடியாது, உடனே பணத்தை கட்டவில்லை என்றால் ஜப்தி செய்வோம் என்று மிரட்டியிருக்கிறார்கள். அழகரும் அவர்களிடத்தில் பேசிப் பார்த்திருக்கிறார். ஆனால் அவர்கள் ரவுடிக் குழு போல் நடந்துக் கொண்டிருக்கிறார்கள். அதில் மூன்று பேர் தாங்கள் போலீஸ் என்றும் அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

தரக்குறைவான வார்த்தைகளை தாங்க முடியாத அழகர், அடுத்து தாக்குவார்களோ என பயந்து அங்கிருந்து தப்பி சென்று விட்டார். நிதி நிறுவனத்தை சேர்ந்த அந்தக் கும்பல் அழகர் வீட்டிற்கு சென்று மிரட்டி டிராக்டரை எடுத்து சென்று விட்டார்கள். அங்கிருந்து தப்பித்த அழகர் அரியலூருக்கு சென்று பூச்சிக்கொல்லி மருந்தை வாங்கிக் குடித்துவிட்டார். பிறகு தனது நண்பர் முருகானந்தத்திற்கு போன் செய்து பேசியிருக்கிறார். "எனக்கு அவமானம் தாங்கல. விஷம் குடிச்சிட்டேன். இனி பிழைக்க மாட்டேன் " என்று சொல்லியிருக்கிறார்.

அழகர் பயந்து போனதற்கு காரணம் இப்படி நடந்தது முதல் முறை அல்ல. ஏற்கனவே வீட்டில் ஆண்கள் இல்லாத நேரத்தில் சென்று பெண்கள் இடம் தரக்குறைவாகப் பேசி இருக்கிறார்கள், மிரட்டியிருக்கிறார்கள். அதனால் தான் அழகர் இந்த முடிவிற்கு போயிருக்கிறார்.

அழகரை தேடி அலைந்த குடும்பத்தினர் நிறைய நேரம் கழித்து கைகாட்டி பகுதியில் கண்டுபிடித்திருக்கிறார்கள். பைக்கிலேயே அழைத்து சென்று மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார்கள். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் விடியற்காலை 3.30 அளவில் இறந்து விட்டார் அழகர்.

வீட்டிற்கு உடலை எடுத்து வந்து மாலை எரியூட்டியிருக்கிறார்கள். இவர்கள் வீட்டில் இருந்து 500 மீட்டர் தூரத்தில் தான் காவல் நிலையம் இருக்கிறது. ஆனால் காவல்துறையினர் அந்தப் பக்கம் தலைக்காட்டவில்லை. வழக்கமாக தற்கொலை செய்தி கிடைத்தால் உடலை கைப்பற்றி போஸ்ட்மார்ட்டம் செய்ய வேண்டியது காவல்துறையின் கடமை.

அழகரை தவிர குடும்பத்தில் இருப்போர் கல்வி அறிவு இல்லாதவர்கள். ஏழை விவசாயக் குடும்பம். 26 வயது மகன் இறந்த சோகத்தில் அவர்களும் காவல்துறைக்கு செல்லவில்லை. இன்று அந்தப் பகுதியில் வேறு ஒரு துக்க நிகழ்விற்கு சென்ற நேரத்தில் இந்த செய்தியை என்னிடத்தில் சொன்னார்கள். அவர் இல்லம் சென்று ஆறுதல் கூறினேன். அப்போது  இதை எல்லாம் சொல்லி அவர் தாயும், தந்தையும் அழுதார்கள்.

நான் அங்கு சென்றிருக்காவிட்டால் இந்த செய்தி மீடியா பார்வைக்கு வராமலே போயிருக்கக் கூடும். வெளி உலகை எட்டியிருக்காது. நான் சென்ற செய்தி கிடைத்து தான், வருவாய் துறையினரும், உளவுத் துறையினரும் வந்து விசாரிக்க ஆரம்பித்தார்கள்.

வேறு யாராவது மிரட்டியிருந்தால் காவல்துறைக்கு செல்லலாம். இரண்டு நாட்களுக்கு முன்பு தான் தஞ்சை மாவட்டத்தில் காவல் ஆய்வாளர் பாதுகாப்போடு சென்று, இதே போன்று விவசாயியை மிரட்டி அடித்த செய்தி. இங்கேயும் வந்தவர்களில் மூவர் காவல்துறை என சொல்லியிருக்கிறார்கள். இது அழகரின் முடிவுக்கு முக்கிய காரணம்.

டிராக்டர் விற்கும் போது எல்லா ஆசை வார்த்தைகளையும் சொல்லி விற்கிறார்கள். விற்ற பிறகு கந்துவட்டி கும்பல் போல் நடந்துக் கொள்கிறார்கள். ஏற்கனவே பணம் கட்டாமல் இருந்தாலும் காரணம் சொல்லிக் கொள்வார்கள். ஆனால் அழகர் ஏற்கனவே 5 லட்சம் கட்டியும் இருக்கிறார்.

மூன்று வருடங்களாக மழை பொய்த்துப் போய் விவசாயி கடனாளி ஆகி இருக்கிற நேரத்தில் தனியார் நிறுவனங்கள் இந்தக் கொடுமையை தொடர்ந்தால் இந்தப் பலி தொடர செய்யும். ஆண்ட அரசாங்கத்திற்கு விவசாயி மீது அக்கறை இல்லை. இருந்திருந்தால் இந்தக் கடன்கள் கூட்டுறவு வங்கி மூலம் வழங்கப் பட்டிருக்கும். அரசு ஒத்துழைப்பு இல்லை என்றால், தனியார் நிதி நிறுவனங்கள் இந்த தாதா ராஜ்ஜியம் நடத்த முடியாது.

விஜய மல்லையாவுக்கு ஒரு நியாயம், அப்பாவி விவசாயிக்கு ஒரு நியாயம்.

நாளை அந்தப் பாக்கி பணத்தைக் கட்டிவிடலாம், போன உயிரை மீட்க முடியுமா?

இதற்கு நடவடிக்கை எடுக்காவிட்டால், மக்கள் திரள்வார்கள்.

# பிணம் தின்னும் நிறுவனங்கள், துணை நிற்கும் அரசாங்கம் !

செவ்வாய், 8 மார்ச், 2016

பெண்ணே உரிமை பெற்றிடுக


1929ஆம் ஆண்டு செங்கற்பட்டு நகரில் திராவிடர் கழக மாநாடு நடைபெற்றது.  மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த செய்தியை படித்தவுடன் நம்முடைய பொதுபுத்தி வேலை செய்யும். பல ஆண்டு காலமாக நம் புத்தியில் புகுத்தப்பட்ட செய்தி வெளியே வரும்.

"கடவுள் இல்லை,
கடவுள் இல்லை,
கடவுள் இல்லவே இல்லை,
கடவுளை  கற்பித்தவன் முட்டாள்,
கடவுளை பரப்புபவன் அயோக்கியன்,
கடவுளை வணங்குபவன் காட்டுமிராண்டி"என்று பெரியார் தீர்மானம் போட்டிருப்பார் எனப் போகிறப் போக்கில் நம் புத்தி சொல்லும்.

இது நம் புத்தியில் திணிக்கப்பட்டிருக்கிற விடயம். பத்திரிக்கைகளும், மேதாவிகளும் செய்த வேலை இது.  ஆனால் அப்போது நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களே வேறு. அந்தத் தீர்மானங்கள் பிற்காலத்தில், பெரியாரின் தொண்டரால் சட்டமாக ஆக்கப்பட்டு நடைமுறைக்கும் வந்து விட்டது. ஆனால் இன்றும் பல்வேறு நாடுகளிலும் ஏன் இந்தியாவின் சில மாநிலங்களிலும் கனவாகவே இருக்கிறது.

அந்த வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானங்கள்:

"பெண்களுக்குச் சொத்துரிமையும், தொழில் நடத்தும் உரிமையும், ஆசிரியர் பணியில் பெருமளவு வாய்ப்புகளும் வழங்கப்பட வேண்டும்".  தீர்மானம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு 1929. யாரும் சிந்திக்காததை அன்றே சிந்தித்தவர் தான் அந்தப் புரட்சியாளர்.

1989ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டசபையில் அன்றைய  தமிழக முதல்வர் தலைவர் கலைஞர்  முதல் அய்ந்து வகுப்புகளுக்குத் தமிழ்நாட்டில் பெண் கள் மட்டுமே ஆசிரியர்களாகப் பணிவார்கள் என நியமித்தார்.

அதே போல ஆண்களைப் போல பெண்களுக்கும் சொத்தில் சமபங்கு பெறும் உரிமை உண்டு என்ற சட்டத்தையும் நிறைவேற்றி பெரியாரின் தீர்மானத்திற்கு உயிரூட்டினார் தலைவர் கலைஞர்.

பெண் ஏன் அடிமை ஆனாள்?" என்ற தலைப்பில் நூல் எழுதியது மாத்திரமல்ல தொடர்ந்து பெண்ணுரிமைக்கு குரல் கொடுத்தவர் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார். அது வெற்று முழக்கமாக அல்லாமல்  பெண் விடுதலை அடைய வேண்டுமென்று  போராடினார்.

உடையில் கூட ஆண் அனுபவிக்கிற சுதந்திரத்தை பெண்கள் அனுபவிக்க வேண்டுமென வலியுறுத்தினார் பெரியார். தன் துணைவியார் மற்றும் சகோதரி அந்த உடை சுதந்திரத்தை அனுபவிக்க ஆதரவு கொடுத்தார்.

"பெண்களே! வீரத் தாய்மார்களாக ஆக விருப்பப்படுங்கள். நீங்கள் மாறினால் உங்கள் கணவன்மார்களும் மற்ற ஆண்களும் மாற்றம் அடைவது மிகமிக எளிது. ஆண்கள் உங்களைத்தான் பிற்போக்காளிகள் என்று உங்கள் மீது பழிசுமத்தி வருகிறார்கள். அப்பழிச் சொல்லுக்கு ஆளாகாதீர்கள், எதிர்காலத்தில் “இவள் இன்னாருடைய மனைவி” என்று அழைக்கப்படாமல், “இவன் இன்னாருடைய கணவன்” என்று அழைக்கப்பட வேண்டும்" பெண்களை பார்த்து அறைகூவியவர் தந்தைப் பெரியார்.

இப்படி பெண்ணுரிமைக்கு போராடிய பெரியாரின் பேரனாக, சட்டமாக்கிய தலைவர் கலைஞரின் உடன்பிறப்பாக, திராவிட இயக்க சிப்பாயாக நின்று உலக மகளிர் தினத்தில் வாழ்த்துகிறேன்.

# பெண்ணே விழித்திடுக, உரிமைகள் கைக்கொள்க !

கூரை வீட்டு கோடீஸ்வரி !

கானா கைக்காட்டியில் முக்கியச் சாலையில் இருந்து காட்டுப்பிரிங்கியம் திரும்பியது கார். சாலை பிரிவு திருப்பத்தில் ஒரு மூதாட்டி நின்றுக் கொண்டிருந்தார். அவரைப் பார்த்தவுடன் அண்ணன் பாலு என்னைத் தொட்டார். உணர்ந்து காரை நிறுத்தச் சொன்னேன்.

அது கழகத்தில் புதிதாக இணைந்தவர்களை சந்திக்கும் நிகழ்ச்சிக்கானப் பயணம். அரியலூர் தொகுதி. கடந்த பிப்ரவரி 28அன்று, அண்ணன் அரியலூர் பாலு அவர்கள் தலைமையில் 5,000 பேர் கழகத்தில் இணைந்தனர். அரியலூர் ஒன்றியத்தில் கடந்த 28ஆண்டுகளாக மக்கள் பணியாற்றியவர்.

இவரது துணைவியார் அருணா அவர்கள் அரியலூர் ஒன்றியக் குழு தலைவராக பணியாற்றியவர்.  தலைவர் கலைஞர் தான் சமூக நீதிக் கொள்கைக்காக உழைக்கும் தலைவர் என தன்னை கழகத்தில் இணைத்துக் கொண்டார் அண்ணன் பாலு அவர்கள்.

கழகத்தின் கொள்கைபரப்பு செயலாளர் அண்ணன் ஆ.ராசா அவர்கள் முன்னிலையில் கழகத்தில் இணைந்தனர். அரியலூர் கீதா மஹால் திணறிப் போனது. உணர்ச்சிமயமான விழாவாக அமைந்தது. அண்ணன் பாலு அவர்களது மக்கள் பணிக்கு சரியான அங்கீகாரம் கிடைத்தது என அவரோடு இணைந்தத் தோழர்கள் மகிழ்ந்தனர்.

வந்த அவ்வளவு பேருக்கும் துண்டு அணிவித்து வரவேற்க, வந்திருந்த
தோழர்களின் எண்ணிக்கை அனுமதிக்கவில்லை. அவ்வளவு கூட்ட நெரிசல். அதனால் ஒவ்வொரு ஊராக சென்று கழகத்தில் இணைந்தவர்களுக்கு கருப்புசிவப்பு மப்ளர் அணிவிப்பது எனத்தான் இந்தப் பயணம்.

திருப்பத்தில் காரை நிறுத்தி இறங்கினோம். மூதாட்டி,"வாப்பா பாலு" என்று வரவேற்றார். 85 வயது இருக்கும். ஆனால் வயதைத் தாண்டிய உறுதியோடு இருந்தார். அவர் கையில் ஒரு தட்டு இருந்தது. அதன் மீது ஒரு கைத்தறித் துண்டு இருந்தது. தட்டின் ஓரத்தில் திருநூறு தெரிந்தது.

என்னைப் பார்த்த மூதாட்டி தட்டில் இருந்து திருநூற்றை எடுத்து நெற்றியில் இட்டு ஆசிர்வதித்தார். "கலைஞர் ஜெயிப்பாரு. ஜெயிக்கனும்", என்றார். அருகில் இருந்த அண்ணன் பாலு, அரியலூர் ஒன்றிய செயலாளர் ஜோதிவேல், நகர செயலாளர் முருகேசன், அவைத் தலைவர் சந்திரசேகர்  ஆகியோருக்கும் திருநூறு இட்டார்.

"இவர் தனக்கோடி அம்மாள். அண்ணா காலத்தில் இருந்து திமுகவிற்கு வாக்களிப்பவர். உள்ளாட்சித் தேர்தலில் அண்ணன் பாலுவுக்கு வாக்களிப்பார்கள். வள்ளலார் கொள்கையில் ஈடுபாடு கொண்டவர். தைப்பூசத்தின் போதும், கோடையிலும் வீட்டின் முன் தண்ணீர் பந்தல் அமைத்து மக்களுக்கு உதவுவார்" , என்று வீட்டைக் காட்டினார்.

முக்கத்திலேயே ஒரு கூரை வீடு. ஏழ்மை நிலை.  கையில் இருந்த தட்டை அருகில் இருந்தவரிடம் கொடுத்து விட்டு, துண்டை எடுத்து எனக்குப் போர்த்தினார். தட்டில் மூன்று நூறு ரூபாய் நோட்டுகள் இருந்தது. தட்டில் இருந்தப் பணத்தை எடுத்து என் கையில் கொடுத்தார். நான் அவர் சூழ்நிலையை யோசிக்க, அவரோ மீண்டும் திணித்தார்," ஜெயிக்கனும்பா".

வழக்கமாக இது போல் ஆரத்தி எடுத்தால், அந்தத் தட்டில் பணம் வைப்பது தான் வழக்கம். இங்கோ நிலைமை தலைகீழ். ஏழ்மையிலும் கொடை. வாடியப் பயிரைக் கண்ட போதெல்லாம் வாடிய வள்ளலார் கொள்கையை கடைபிடிப்பவர் அல்லவா.

# கூரைவீட்டு தனக்கோடி, மனதால் கோடீஸ்வரி !

திங்கள், 7 மார்ச், 2016

புரட்சிக் குரல்

கன்ஹையா குமார்.

ஒரு வித்தியாசமானப் பெயராக இருக்கிறதே என சிந்திக்க வைத்தது. வித்தியாசமான பெயர் மட்டுமல்ல, வித்தியாசமான நபர் என அவரது நடவடிக்கை நிரூபித்து விட்டது.

தேசத்திற்கு எதிராகக் குரல் கொடுக்கிறார் எனக் குற்றம் சாட்டினார்கள். தேசத் துரோகி என்றார்கள். ஊடகங்கள் இவரை குறி வைத்துத் தாக்கினார்கள். இவரது வாதத்தை வெளிப்படுத்த வழியில்லாமல் தடுத்துப் பார்த்தார்கள். உண்மையின் குரலாக ஒலித்தார் கன்ஹையா குமார். இது கருத்து சுதந்திரத்திற்கானக் குரல்.

சமீபத்தில் டெல்லி "ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் (ஜே.என்.யூ)" ஏற்படுத்திய பரபரப்பின் மையப்புள்ளி இவர் தான். பாகிஸ்தான் ஆதரவு கோஷத்தை எழுப்பினார் என்று பிரிவினைவாத குற்றத்தை வீடியோ ஆதாரத்தோடு சுமத்தி கைது செய்தார்கள். ஆனால் அது "தயாரிக்கப்பட்ட வீடியோ" என பல்லிளித்தது.

ஏன் இந்தப் பதற்றம்.  இது கைது செய்த காவல்துறையின் பதற்றம் மட்டும் அல்ல. அரசின் பதற்றம். அரசு என்றால் மத்திய அரசு.  மத்திய அரசு என்றால் அதன் தலைவர் மாத்திரமல்ல. அவரை வழி நடத்துவோருக்கானப் பதற்றம். இது தான் நாட்டுக்குத் தேவையான பதற்றம்.

மத்திய அரசின் தலைவர் மோடி, உலகை வழி நடத்துகிற தலைவராக கட்டமைத்துப் பார்த்தார்கள். ஆனால் அவர் இந்த சாதாரண மாணவனைப் பார்த்து பயந்துப் போனது தான் வரலாறு. சாதாரண மாணவன் என்று தான் அந்தத் தலைவர் மோடியும், அவரை வழி நடத்துகிற அந்த மோசடிக் கூட்டமும் நினைத்தது.

அவர் சாதாரண மாணவர் தான்.    அதுவும் மிகப் பின்தங்கிய மாநிலமான பிகாரில் இருந்து வந்த மாணவர். இவரது அப்பா பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு முடங்கிப் போனார். அம்மா ஒரு அங்கன்வாடிப் பணியாளர். மிக ஏழ்மையானக் குடும்பம். தன் முயற்சியில் படித்து முன்னுக்கு வந்தவர் தான் இந்த கன்ஹையா குமார்.

இவர் தேர்வெழுதி தேறி, ஜே.என்.யூவில் சேர்ந்தவர். ஜே.என்.யூவிற்கு தனி வரலாறு உண்டு. மத்திய அரசியல் பல நேரங்களில் தறிக் கெட்டு ஓடிய நேரத்தில், அதற்கு மூக்கணாங்கயிறு போட்ட பெருமை இந்த ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்திற்கே உண்டு. அந்த அளவிற்கு சுயசிந்தனையாளர்களுக்கு வாய்ப்பளிக்கும் இடம். அது தானேப் பிரச்சினை.

குமாரோ வளரும் போதே, குடும்பத்தாரைப் போலவே கம்யூனிஸ்டாக வளர்ந்தவர். அதனால் தான் டெல்லி வந்தப் போது இன்னும் கூர்மையானார். அகில இந்திய மாணவக் கூட்டமைப்பின் தலைவர் ஆனார். இது இந்தியக் கம்யுனிஸ்ட் கட்சியின் மாணவர் பிரிவு. பொறுப்பிற்கேற்றார் போல் இந்துத்துவாவிற்கு எதிராகக் குரல் எழுப்பினார். அடக்கிப் போட மத்திய அரசு முனைந்தது.

ஆனால் நிலைமை மாறிப் போனது. இப்போது கன்ஹையா குமார் வளரும் தலைவர். அவரது பேச்சு நிதானமாக, பொருள் பொதிந்ததாக இருக்கிறது. குற்றம் சாட்ட முயற்சித்த மத்திய மோடி அரசு ஆப்பசைத்தக் குரங்காக முழிக்கிறது. தான் வைத்த ஆப்பிலேயே, தன் வால் மாட்டிக் கொண்டிருப்பதை உணர்கிறது.

அடிக்க, அடிக்கத் தான் பந்து எழும். குமாரை ஓங்கி, ஓங்கி அடிக்கட்டும் மோடி அரசு, குமார் தயாராகட்டும். ஒரு எதிர்காலத் தலைவன் உருவாகட்டும்.

# புரட்சிக் குரல் ஒலிக்கட்டும், கருத்துச் சுதந்திரம் நிலைக்கட்டும் !
 

ஞாயிறு, 6 மார்ச், 2016

ஊருக்கு ஊர் செம்பருத்திகள்

சொன்னதை செய்தார்கள். நன்றி !

செம்பருத்தி - படிப்பகம் செய்தியைப் படித்தவர்கள் பலர் உதவி செய்திட முன்வந்துள்ளனர்.

சீதைப்பதிப்பகம் உரிமையாளர் அண்ணன்  கௌரா ராஜசேகர் நூல்களை அன்பளிப்பாக அனுப்புகிறேன் என்றார். நீங்களே வந்து அளியுங்கள் என்று வற்புறுத்திய பிறகே வந்தார்.

ரூபாய் 80,000 மதிப்புள்ள 500 புத்தகங்களை அன்பளிப்பாக படிப்பகத்திற்கு அளித்தார். அதனை மாணவி செம்பருத்தியிடம் ஒப்படைத்தார்.

சிங்கை சிங்கங்கள் சார்பாக நரசிம்மன் நரேஷ், செம்பருத்தி கல்விக்கு உதவுவதாக தெரிவித்திருந்தார். மறுநாளே அண்ணன் அஜ்மீர் அலி தொடர்பு கொண்டார். அஜ்மீர் அலியும், அண்ணன் அபிஅப்பா என்கிற தொல்காப்பியனும் வருகை தந்தனர். செம்பருத்திக்கு கல்வி நிதி அளித்தனர்.

ஊராருக்கு அதிர்ச்சி. என்ன நடக்கிறது என அவர்களுக்கு புரியவில்லை. ஒரே நாளில் 'செம்பருத்தியும்', 'கொளப்பாடி படிப்பகமும்' ஊடக வெளிச்சத்தால் தமிழ் நாடளவில் புகழ் பெற்றுவிட்டதை அவர்கள் அறியவில்லை.

சிறு செம்பருத்தியின் ஆர்வமும் துடிப்பும் ஒரு கிராமத்திற்கு இத்தகைய நன்மையை பெற்றுத் தரும் போது, ஒவ்வொருவரும் முயன்றால் முடியாதது என்னவாக இருக்கும்.

# ஊருக்கு ஊர் செம்பருத்திகள் மலரட்டும் !

செவ்வாய், 1 மார்ச், 2016

வலைதளம் எங்கும் செம்பருத்தி

ஊரில் எவ்வளவோ பேர் இருக்க, அக்கறையோடு  நூலகம் வேண்டும் என்று  கேட்ட மாணவி செம்பருத்தியை கவுரவிக்க வேண்டும்.  செம்பருத்தியை உற்சாகப்படுத்துவதன் மூலம் மற்றவர்களை இது போல் பணியாற்றத் தூண்ட வேண்டும் என்ற நோக்கில் தான் செம்பருத்தியை திறப்பாளராக அழைத்தேன்.

ஆனால் இது இன்னொரு கோணத்தில் பார்க்கப்படும் என எதிர்பார்க்கவில்லை. விழா சிறப்புற்ற மகிழ்ச்சியில், அடுத்தப் பணிக்கு கிளம்பினேன். அரியலூர் நிகழ்ச்சிக்கு அண்ணன் ஆ.ராசா அவர்களோடு கிளம்பும் போது காரில் நிலைத்தகவல் பதிவிட்டேன்.

விழா மேடைக்கு செல்லும் முன்  பார்த்தேன். லைக் வேகம் திணறச் செய்தது. 

நிகழ்ச்சி முடிந்து தவறிய அழைப்புகளை பேசினேன். தேனியில் இருந்து எப்போதும் நையாண்டியாக பேசும் சுந்தரத்தின் குரல் பிசிறடித்தது. "அண்ணே உருக்கமாயிருக்கு". கத்தாரில் இருந்து சதக் அழைத்தார். நிலைத்தகவலின் வீச்சு புரிய ஆரம்பித்தது.

மெல்ல இன்பாக்ஸ் நிரம்ப ஆரம்பித்தது. முழுநாள் அலைச்சலில் அசந்தேன். காலை ஆறரை சிங்கப்பூரில் இருந்து செல்வபூபதி,"அண்ணே, கெத்தா சொல்லிப்போம்". அமெரிக்காவிலிருந்து மாதவன்,"கனடா நண்பரோடு விவாதித்தேன் அண்ணா. மகிழ்ச்சியா இருக்கு". தொடர்ந்து உள்ளூர் அழைப்புகள்.

"இன்று எந்த நிலைத்தகவலும் போடக் கூடாதுன்னு நினைச்சேன். போட வச்சிட்டிங்கண்ணே. அந்த பொண்ணுக்கு சிங்கை சிங்கங்கள் உதவ தீர்மானிச்சிருக்கோம்", சிங்கப்பூரில் இருந்து நரசிம்மன். "அந்த நூலகத்திற்கு நான் ஏதாவது செய்யனுமே", கௌரா பதிப்பகம் அண்ணன் ராஜசேகர். 8.00மணிக்கு சொக்கநாதபுரம் சமுதாயக் கூடம் திறக்க செல்லும் போதே இந்த அழைப்புகள்.

விராலிமலை உதயக்குமார் அழைத்தார்,"இண்டியன் எக்ஸ்பிரஸில் செய்தி வந்திருக்கு. வாழ்த்துக்கள்". ஹிந்துவில் இருந்து சுருதி சாகர் அழைத்து விபரம் கேட்டார். பெரியாக்குறிச்சி பள்ளிக்கட்டிடம் அடிக்கல் நாட்டும் போது தொடர் அழைப்புகள். டெக்கானிக் கிரானிக்கலில் இருந்தும் விபரம் கேட்டனர்.

தொடர்ந்து நண்பர்களின் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள். கட்சி பேதம் இல்லாமலும் மகிழ்ச்சிப் பரிமாறல். பெரம்பலூர் தினகரன் நிருபர் வில்சன் கோபித்துக் கொண்டார் உரிமையோடு,"எங்களுக்கு ஏன் தகவல் சொல்லவில்லை?". "இல்லண்ணே. நேர நெருக்கடி. அடுத்தது நான் அந்தப் பெண்ணை உற்சாகப் படுத்தவே இது போல் செய்தேன்".

நியூஸ்7 முருகானந்தம் "என்ன அண்ணே, எவ்வளவு முக்கியமான செய்தி. சொல்லாம விட்டுட்டீங்களே"என்றவாறே பேட்டி எடுத்தார். வசந்த் டீவி,"சார், நீங்க சாதாரணமா நினைச்சிருக்கலாம். ஆனா இது வரலாறாக போற விஷயம்"என்றார். நிகழ்வின் வெவ்வேறு பரிமாணங்கள் புரிந்தது.

கல்வெட்டு அடித்துக் கொடுத்தவர் பேச தவிக்கிறார் என்றார்கள். பேசினேன். "சார், உங்க நம்பர் கிடைக்காம, கல்வெட்டில் இருக்கும் என் நம்பரைப் பார்த்து பேசினார்கள் பலரும். அதில் ஒருவர் அமெரிக்காவில் இருந்து பேசினார். உண்மையாக நம்ம ஊரில் இப்படி கூட நடக்குதா என்றுக் கேட்டார். நான் தயாரித்த கல்வெட்டுகளிலேயே இது தான் உயர்ந்தது" என்று மனதைக் கொட்டினார்.

விகடன் வலைதளத்தில் செய்தி வந்து விட்டது என அழைப்பு. இப்போது முகம் தெரியாதவர்கள் எல்லாம் அழைத்து வாழ்த்த ஆரம்பித்து விட்டார்கள். "சார் விகடன்ல பார்த்தேன். நெட்ல நம்பர் எடுத்தேன். மகிழ்ச்சி. வாழ்த்துக்கள். எப்போதும் இதே போல் இருங்கள்".

அடுத்து நான் அழைக்க நினைத்தவர், என்னை அழைத்துவிட்டார். அலைபேசி ஒளிர்ந்தது,"செம்பருத்தி IPS". ஆம், அப்படி தான் பதிவு செய்திருக்கிறேன்.

"சார் ரொம்ப சந்தோஷமா இருக்கு. கூடப் படிக்கிறவங்க பாராட்டுனாங்க. டீச்சர்லாம் பெருமையா இருக்குன்னாங்க"
"என் கிட்ட கேக்கனும்னு எப்படி தோணுச்சும்மா?"
"சார், அப்போ நீங்க யாருன்னு தெரியாது. யாரோ அதிகாரி வந்துருங்காங்கன்னு நெனச்சி வந்து சொன்னேன். நேத்து இந்த தட்டிய பார்த்து தான் நீங்க யாருன்னு தெரிஞ்சுது. என் ப்ரெண்ட்ஸ் கூட கலாய்ச்சாங்க,  இது நடக்குமான்னு. நான் மனு கூட கொடுக்கல. எப்படி ஞாபகம் வச்சி செஞ்சீங்க. ரொம்ப பெருமையா இருக்கு"
"சந்தோஷம்மா. நல்லா படி. சொன்ன மாதிரியே ஐ.பி.எஸ் ஆகணும். கூடப் பொறந்தவங்க எத்தனப் பேரு?"
"கண்டிப்பா படிக்கிறேன் சார். அக்கா ஒருத்தவங்க. கல்யாணம் ஆயிடுச்சி. அண்ணன் ஒருத்தவரு"
"அண்ணன் என்ன பண்றாரு?"
"அண்ணன் பத்தாவது தான் படிச்சாரு. வசதி இல்லாததால அதுக்கு மேல படிக்கல. வியாபாரம் பண்றாரு. உங்களுக்கு எத்தன பசங்க சார்?"
"ரெண்டு பேரும்மா. பெரியவர் பிளஸ் ஒன். சின்னவர் நாலாவது"
"பொண்ணு இல்லீங்களா சார்?"
"இல்லம்மா"
"கவலைப்படாதீங்க. இனி நான் உங்க பொண்ணு"

# ஒரு நிகழ்வு, பல பரிமாணங்கள், புதிய உறவுகள் !