பிரபலமான இடுகைகள்

திங்கள், 31 டிசம்பர், 2012

மக்கள் சந்திப்பு - 3 ; பென்னகோணம் ஊராட்சி.

மழைத் தூறலுக்கிடையே ஊருக்குள் நுழைந்தோம். ஆனாலும் மக்கள் கூட்டம், குறிப்பாக பெண்கள் திரண்டிருந்தனர்.கூட்ட நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் அண்ணன் குன்னம் இராஜேந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் VGM. வெங்கடாசலம் முன்னிலை வகித்தார். பெரம்பலூர் மாவட்ட செயலாளர் துரைசாமி உரையாற்றினார். 

பொதுமக்கள் மனுக்களை அளித்தனர். பெற்றுக் கொண்டு, அதில் முக்கியமான சில கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்துள்ளேன்.

விடைபெறும் போது, நெருங்கிவந்த பெண்கள் தனிப்பட்ட முறையில், ஒரு கோரிக்கை வைத்தனர். பொதுசுகாதார வளாகம் அமைத்து தரக் கோரினர்.

ஆளுங்கட்சியினர் மக்களை நெருங்காத காரணத்தால் தான், மக்கள் அனைத்து கோரிக்கைகளையும், எதிர்கட்சி சட்டமன்ற உறுப்பினரிடம் வைப்பதாக கருதுகிறேன்.

பெண்கள் திரண்டு வந்ததும், சிறு பிள்ளைகள் அளித்த வரவேற்பும், தேர்தல் வந்துவிட்டதோ என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது.


சட்டமன்ற உறுப்பினருக்கான பயிற்சி பட்டறை IIMB - 5


வகுப்புகளையும் பாடங்களையும் பற்றி சொல்வதற்கு இடையில் IIM –ன் கட்டிட வடிவமைப்பு குறித்து சொல்லியே ஆக வேண்டும்.

பெங்களூருக்கு மத்தியில், நூறு ஏக்கர் சோலைவனமாக திகழ்கிறது இந்த வளாகம். எந்தப் பக்கம் திரும்பினாலும் உயர்ந்து வளர்ந்த மரங்களும், செடிகளும், கொடிகளும் என பசுமை வனம்.

நேர்த்தியான புல்வெளியும், வெட்டிவிடப்பட்ட செடிகளும், சீராக பாய்ச்சப்படுகின்ற நீரும் என பராமரிக்கப்படுகின்றது இயற்கை. ஆட்கள் பணியாற்றியபடியே இருக்கிறார்கள்.IIM-ன் கட்டிடங்கள், கட்டிடக் கலையின் உச்சம் என்று சொல்லலாம்.

எங்கு நோக்கினும் கருங்கல் பாறைகளாலான சுவர்களும், வர்ணம் பூசப்படாத கான்கிரீட் சுவர்களும், அதில் பசுங்கொடிகள் படர்ந்த அழகுமாக மிளிர்கிறது.

நீண்ட நீண்ட நடைபாதைகளே அந்த கட்டிட வடிவமைப்பின் சிறப்பம்சம். ஒவ்வொரு நடைபாதையும் ஒரு பர்லாங்க் தொலைவு இருக்கும். நடைபாதையுடைய மேற்கூறையின் (roof) உயரம் தான் பிரமிக்கவைத்தது.

ஒரு கட்டிடத்தின் மூன்றாவது மாடியின் கூறை என்ன உயரமோ, அந்த உயரத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது நடைபாதையின் கூறை. கூறையும் முழுவதுமாக மூடப்பட்டதாக அமைக்கப்படவில்லை.


சில இடங்களில் மூடப்பட்டும், சில இடங்களில் திறந்த வெளியாகவும், சில இடங்களில் சிறுசிறு திறப்புமாக, சில இடங்களில் கொடிகள் படர்ந்ததாகவும் அமைக்கப்பட்டிருக்கிறது கூறை.

இப்படி கொடி போல் படர்ந்திருக்கிற நடைபாதையின் இருபுறமும், வகுப்பறைகளும், அலுவலக அறைகளும், நூலகமும், அங்காடியும், வங்கியுமாக சீரான இடைவெளியில் கிளைத்திருக்கின்றன.


கட்டிடக் கலை பயில்கிற மாணவர்கள் இந்த வளாகத்திற்கு வந்து, தங்களது இறுதியாண்டிற்கான ஆய்வறிக்கைகளை தயார் செய்கிற அளவிற்கு, சிறப்பான வடிவமைப்பு.

எந்த சூழலிலும் இயற்கையான ஒளியும், காற்றும் நிறைந்திருக்கின்ற கட்டிட வடிவமைப்பு.

அந்த நடைபாதையில் நடந்துக் கொண்டிருந்தோம் ச.ம.உ கணேஷ் மற்றும் சேகர் உடன் நானும். பயிற்சி இடம் Central Pergola என போடப்பட்டிருக்கிறதே, என்ன அர்த்தம் என்ற விவாதம் வந்தது.


சற்று விவாதத்திற்கு பிறகு விடை காணப்பட்டது. மூன்று பேரும் பொறியியல் படித்தவர்கள் தான். இருப்பினும் சரியான விடையை சொன்னவர் கணேஷ்.

அவர்கள் இருவரும் இயந்திரவியல் படித்தவர்கள், நானோ மின்னியல் மற்றும் மின்ண்ணுவியல். அந்த வார்த்தையோ கட்டிடப் பொறியியல் தொடர்புடையது. கொடிகள் படர்ந்த தொங்கும் தோட்டம் போன்ற மேற்கூறை என்பதே அதன் அர்த்தம்.

இந்த இயற்கை சூழலில் படிக்கின்ற மாணவர்கள், கொடுத்து வைத்தவர்கள் என்றே சொல்ல வேண்டும்...

( தொடரும்... )

ஞாயிறு, 30 டிசம்பர், 2012

சட்டமன்ற உறுப்பினருக்கான பயிற்சி பட்டறை IIMB - 4


இந்திய சுகாதரம் குறித்தான வகுப்பில் வெளிப்பட்ட தகவல்கள் அனைத்துமே அதிர்ச்சியூட்டக் கூடியனவாக இருந்தன. காரணம் இந்திய சுகாதர நிலை மற்ற நாடுகளை ஒப்பிடும் போது மிக பின் தங்கிய நிலை.

ஆனால் மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது தமிழகம் எவ்வளவோ பரவாயில்லை.

5 வயது குழந்தைகளின் எடைகுறைவு, பிறந்த குழந்தைகள் எடை குறைவு போன்றவற்றை ஒப்பிட்டால், ஆப்பிரிக்க தேசங்களை விட மிக மோசமான நிலைமை.

உயிர் வாழும் காலம், குழந்தைகள் இறப்பு என எடுத்துக் கொண்டால் பங்களாதேசத்தை விட பின் தங்கிய நிலை.

போதிய மருத்துவர்கள் இல்லாத நிலை, போதிய மருத்துவ வசதிகள் இல்லாத நிலை, நிதி ஒதுக்கீடு குறைவு போன்ற காரணங்களால் தான் இந்த் நிலை.

12-ஆவது அய்ந்தாண்டு திட்டத்தில், வகுக்கப்பட்ட படி UNIVERSAL HEALTH COVERAGE , 2022-ல் எட்டப்பட வேண்டும். அதன்படி ஒவ்வொரு குடிமகனுக்கும் சுகாதார அட்டை வழங்கப்பட்டு அதன் மூலம் அனைவருக்கும் சுகாதார வசதிகள் சென்றடைய வேண்டும்.

இந்த திட்டத்தை செயலாக்குவதன் மூலமும், அதிக நிதி ஒதுக்குவதன் மூலமும், கட்டணங்களை நீக்குவதன் மூலமும், இலவச மருந்துகள் வழங்குவதன் மூலமும் இந்தியாவின் சுகாதார வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும்,

இந்த வகுப்பை எடுத்தவர் பேராசிரியர் ஏ.கே.சிவக்குமார். இந்திய அரசின் National Advisory Council-ல் உறுப்பினராக இருப்பவர். எனவே இவரது கருத்துகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை.அடுத்த வகுப்பு ‘ POLITICAL MARKETING” .

ஒரு அரசியல்வாதியாக நம்மை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டியதற்கான வழிமுறைகள்.

MBA வகுப்பில் இருந்த உணர்வு. மார்கெட்டிங்கின் தத்துவங்களை விளக்கி வகுப்பை எடுத்தார் பேராசிரியர் மிதிலேஷ்வர் ஜா, இவர் பெங்களூரு IIM-ல் பணிபுரிபவர்.

கேரளா “ God’s Own Country “ என்ற மார்க்கெட்டிங் யுத்தியை கையாண்டு சுற்றுலாவில் மிகப் பெரிய முன்னேற்றம் அடைந்திருப்பதை அழகாக எடுத்துரைத்தார்.

இது போல் ஒவ்வொருவரும் BRAND ஆக வேண்டும். அதனை தக்க வைக்க அடையாளம், உண்மைத்தன்மை, நேர்மை, உறுதித்தன்மை போன்றவைகளை காத்திட வேண்டும்.

மகாத்மா காந்தி என்றால் “புனிதம்”மும், டாடா நிறுவனம் என்றால் “ நம்பிக்கை”யும், நினைவுக்கு வருவது போல அரசியலில் நிலைத்திருக்க விரும்புபவர்கள் தங்களுக்கு என்று ஒரு அடையாளத்தை பாதுகாத்திட வேண்டும்.

இப்படியாக சுவையான வகுப்பாக இது அமைந்தது.

( தொடரும்... )


வெள்ளி, 28 டிசம்பர், 2012

சட்டமன்ற உறுப்பினருக்கான பயிற்சி பட்டறை IIMB - 3

மாறி வரும் இந்திய சூழலும், சட்டமன்ற உறுப்பினர்களும் என்ற தலைப்பில் IIMB-ல் பணிபுரியும் பேராசிரியர் ராஜிவ் கௌடாவின் உரை புதிய தகவல்களை தந்தது.

இந்த வகுப்பில் கிடைத்த தகவல்கள் நேரடியாக பயன்படாது என்றாலும், இந்தியாவில் ஏற்பட்டிருக்கிற மாற்றங்களையும், ஏற்படப்போகும் மாற்றங்களையும் விளக்குவதாக இருந்தது.

உலக பொருளாதாரத்தை கணக்கில் கொண்டால், நான்காம் இடத்தில் இருக்கும் இந்தியா, ஜப்பானை முந்திக் கொண்டு 2040-ல் மூன்றாம் இடத்திற்கு செல்லும்.

அதே நேரத்தில், தற்போது இந்தியாவில் 5 கோடியாக இருக்கிற நடுத்தர வர்க்கம்,  2025ல் 58 கோடியாக உயரும். இந்தியாவில் வாழ்வோரில் ஒவ்வொரு மூன்றாவது நபரும் ஏழையாக இருப்பார்கள்.

இந்திய GDP-ல் 1950-51ல் விவசாயத்தின் பங்கு 57%, 2008-2009ஆம் ஆண்டு 18% ஆக குறைந்திறது. தொழிற்துறை 14% லிருந்து 26% ஆக உயர்ந்திருக்கிறது. சேவை பிரிவு 29% லிருந்து 56% ஆக உயர்ந்திருக்கிறது.

இந்தப் புள்ளி விபரம் விவசாயத்தின் அவல நிலையை உணர்த்துகிறது. அதுவும் “ விவசாயிகள் வேறு தொழிலை கற்றுக் கொள்ள வேண்டும் என்ற மன்மோகன்சிங்கின் காமெடி தத்துவம் வெளிப்பட்டிருக்கிற வேளையில்.

·         நகரமயமாதலின் விளைவுகள்
·         குறையும் நெண் குழந்தைகள் விகிதம்
·         மாநிலங்களுக்கிடையேயான ஏற்றத்தாழ்வு
·         கிராம- நகர ஏற்றத்தாழ்வு
·         அரசியலில் பெண்கள்
·         கொள்கைகளின் வீழ்ச்சியும் கூட்டணி அரசியலின் ஏற்றமும்
·         நக்சலிசம்
·         அரசியல் சார்பான ஊடகங்கள்
·         கலவரங்களுக்கு ஊடக வெளிச்சம்
·         சமீபத்திய குடிமக்கள் எழுச்சி
இதை போன்று மக்கள் பிரதிநிதிகள் கவனத்தில் கொள்ள வேண்டிய செய்திகள் விவாதிக்கப்பட்டன.

·         சட்டமன்ற செயல்பாடு ( அதிகாரிகளின் ஆதிக்கம் தாண்டி செயல்பட வேண்டும் )
·         தொகுதியின் தலைமை நிர்வாகி ( CEO ) ( வளர்ச்சிப்பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்)
·         தலைமை பிரச்சினை தீர்வாளர் ( மக்களுக்காக அரசு அதிகாரிகள், தனியார் நிறுவன்ங்கள், காவல்துறை, கல்விக்கூட சேர்க்கை... )
·         அரசியல் செயல்பாடு ( எதிர்கட்சிகளை எதிர் கொள்ளுதல், ஆதரவுதளத்தை வலுப்படுத்துதல் )
என சட்டமன்ற உறுப்பினர்கள் மாறி வரும் சூழலுக்கு ஏற்ப தங்களை தயார் செய்து கொள்ள வேண்டும்.

மக்கள் பிரதிநிதிகளை தற்போது ஊடகமும், தொண்டு நிறுவனங்களும் உற்று நோக்க ஆரம்பித்துள்ளன. மும்பையில் ஒரு தொண்டு நிறுவனம் எம்.பி, எம்.எல்.ஏ, மாநகராட்சி உறுப்பினர்களுக்கு மதிப்பெண் அளித்து வருகிறது.

ஆக தொழில்நுட்பங்களை கையாண்டு மக்கள் பிரதிநிதிகள் சிறப்பாக செயல்பட வேண்டும்.

( தொடரும்... )

சட்டமன்ற உறுப்பினருக்கான பயிற்சி பட்டறை IIMB - 2

வகுப்பின் துவக்கமாக, பயிற்சிக்கு புதிதாக வந்திருந்த ச.ம.உ-க்களுக்கு, பயிற்சி பட்டறையின் நோக்கம் மற்றும் PRS –ன் பணிகள் குறித்து விளக்கப்பட்டது.


பத்துக்கும் மேற்பட்ட மாநிலங்களில் இருந்து 32 ச.ம.உ-க்கள் வந்திருந்தனர். புதுச்சேரியிலிருந்து 11 பேர் வந்திருந்தனர், பாண்டி மினி சட்டசபை போல் இருந்தது.

அடுத்ததாக ச.ம.உ-க்களின் பொறுப்பு மற்றும் செயற்பாடு குறித்த வகுப்பு. இது நாங்கள் கடந்த பயிற்சியிலேயே கேட்ட பாடம் தான், இருந்தாலும் சில புதிய தகவல்கள் சேர்க்கப்பட்டிருந்தன.

வகுப்பெடுத்தவர் PRS நிறுவனத்தின் இயக்குநர் திரு.மதுக்கர். உலக வங்கியில் பணிபுரிந்து, உலக பொருளாதார அமைப்பால், 2008-ஆம் ஆண்டுக்கன Young Global Leader ஆக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

“ பொதுவாக சட்டமன்ற உறுப்பினர்கள் என்றால், மக்கள் நினைப்பது, அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்க வேண்டும் என்பது தான். ஆனால் அரசியலமைப்புப்படி சட்டமன்ற உறுப்பினரின் கடமை, இயற்றப் படுகிற சட்டங்களை விவாதிப்பது தான்.

தற்போதைய அரசியல் சூழலில், எந்த மாநில சட்டமன்றத்திலும் விவாதங்கள் இல்லாமலே, ஆளுங்கட்சியின் விருப்பத்திற்கேற்ப சட்டங்கள் நிறைவேற்றப் படுகின்றன.

பதவி உயர்வில், ஆதிதிராவிடர்களுக்கான இடஒதுக்கீடு சட்டம் நிறைவேற்றப் படுவதற்கு முன்பு பாராளுமன்ற மக்களவையில் மூன்றரை மணி நேரம் விவாதம் நடைபெற்றது. இது போன்ற வாய்ப்பு சட்டமன்றத்தில் மறுக்கப்படுகிறது.

பாராளுமன்றத்தில் சிறப்பான முறையில் உரையாற்றும் உறுப்பினர்களுக்கு பிரதமர் வாழ்த்துக் கடிதம் எழுதுகிறார் என்ற தகவலை சொன்னபோது, நானே சிரித்துக் கொண்டேன்.

தமிழக சட்டப்பேரவையில், எங்களுக்கு பேசவே வாய்ப்பு தரப்படுவதில்லை, மீறி பேச முயன்றால் தூக்கி வெளியேற்றப்படுவதை எங்கே சொல்லி அழ...

இதை போன்ற விவாதங்களில் பங்கேற்பது குறித்தான வழிமுறைகள் ஆராயப்பட்டன. அவ்வப்போது அனுப்பும் ஆய்வறிக்கைகளை பயன்படுத்திக் கொள்ள கூறினர்.

( தேசிய உணவு பாதுகாப்பு சட்டம், நிலம் கையகப்படுத்துவது தொடர்பான சட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் குறித்த ஆய்வறிக்கைகளை, கடந்த பயிற்சியில் கலந்து கொண்டவர்களுக்கு அனுப்பி வருகின்றனர். )

விவசாயக் கடன் தள்ளுபடி, தகவல் அறியும் உரிமைச் சட்டம் போன்றவற்றின் நோக்கம், அதன் பயன்பாடு, தேவையானவர்களை சென்றடைந்த்தா போன்ற விவாதங்கள் நட்த்தப்பட வேண்டும்.

ஆனால் நமது சட்டமன்றங்களில் அதற்கான வாய்ப்புகள் இல்லை. விவாதங்களுக்கான தயாரிப்புகளுக்கான நேரம் இல்லை, சட்டமன்றத்தில் சிறப்பாக பணியாற்றினாலும் பாராட்டு இல்லை என்ற நிலை தான் நிலவுகிறது.

* சட்டமன்றம் செயல்பட்டாலும், நம் திறனுக்கேற்ப பங்களித்திருக்கிறோமா ?

* எவ்வாறு சிறந்த தலைவர்கள் விவாதத்தை ஏற்படுத்தினார்கள் ?

* நமது கருத்துகளை பதிவு செய்ய வேறு தளம் இருக்கிறதா ?

போன்ற கேள்விகளோடு வகுப்பு முடிவுக்கு வந்தது.

கிடைக்கின்ற வாய்ப்புகளை எவ்வாறு பயன்படுத்தி சட்டமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் பிரகாசிப்பது என மற்ற உறுப்பினர்களின் கருத்துகள் பகிர்ந்துக் கொள்ளப்பட்டது.


( தொடரும்...)

புதன், 26 டிசம்பர், 2012

சட்டமன்ற உறுப்பினருக்கான பயிற்சி பட்டறை IIMB - 1


ஓசூர் போக்குவரத்து நெரிசலை கடந்து, மெல்ல மெல்ல முன்னேறி பெங்களூரில் எங்கள் கார் நுழைந்தது. மறுநாள்(19.12.2012) துவங்க இருந்த India Policy Workshop for MLAs-ல் பங்கேற்பதற்காக.

காலை அதிமுக அரசின் தொடர் மின்வெட்டை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுவிட்டு கிளம்பியதால், காரிலேயே பயணம்.

Google maps-ல் தேடி தேடி IIM Bangalore-அய் அடைந்தோம். Management  Development Centre-ல் அறை என்றார்கள். அங்கே சென்றால், பயிற்சியை  வழங்கும் PRS Legislative Research-ன் அனில் நாயர் காத்திருந்தார்.

மணி இரவு 11.30. எங்களை வரவேற்று, அறை ஒதுக்கி, காலை உணவு நேரத்திற்கு வர சொல்லி அறைக்கு அனுப்பினார்.

இது தான் PRSன் அர்ப்பணிப்பு உணர்வு. நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பயிற்சி பெற வேண்டும், சிறப்பாக செயல்பட வேண்டும் என தொடர்ந்து செயல்படுகிறார்கள்.

மிதமான குளிர். அருமையாக இருந்தது. ஒதுக்கப்பட்ட அறை சிறப்பாக இருந்தது. அரசு கல்லூரியில் இந்த அளவிற்கு நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இது Executive Program வகுப்புகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கான அறை.

மாணவர்கள் என நினைத்திட வேண்டாம். ONGC, BHEL , ICICI போன்ற நிறுவங்களில் பணிபுரியும் உயர் அதிகாரிகளுக்கான பயிற்சி வகுப்பு அந்தExecutive  Program. குறுகிய காலப் பயிற்சி.
அறை மூன்று நட்சத்திர அறை அளவுக்கு இருந்தது. சுத்தமாகவும் இருந்தது. வெளி குளிர் உள்ளே தாக்காத அளவிற்கு கதகதப்பாக இருந்தது.

காலை எழுந்து சன்னல் திரையை விலக்கி பார்த்தால், காட்டுக்குள் இருப்பது போன்ற ஓர் உணர்வு. சுற்றிலும் மரங்கள், செடிகள், கொடிகள், புல்வெளிகள். காட்டுப் பறவைகளின் இனிய குரல்கள்.

இனிமையாக புலர்ந்தது காலைப் பொழுது. காலைப் பணிகள் முடிந்து, சாப்பிட சென்றோம். பஃபே முறையில் உணவு. கர்நாடகாவின் பிரசித்தி பெற்ற உப்பிட்டு, அது தாங்க நம்ம ஊர் உப்புமா.

பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்திருந்த சட்டமன்ற உறுப்பினர்கள், உணவிற்கு வர ஆரம்பித்தனர்.

நானும் கும்மிடிப்பூண்டி ச.ம.உ சி.ஹெச்.சேகரும ஏற்கனவே ஹைதராபாத் பயிற்சியில் கலந்து கொண்டவர்கள் என்பதால், ஏற்கனவே பயிற்சிக்கு வந்தவர்கள் அடையாளம் கண்டு புன்னகைத்தனர்.

மூன்று பயிற்சிகளிலும் கலந்து கொண்ட சம்பத் சிங் வந்திருந்தார். இவர் ஹரியானா மாநிலத்தை சேர்ந்த எம்.எல்.ஏ. இப்போது ஆறாவது முறை MLA.

உள்(காவல்) துறை அமைச்சர் ஆக இருந்து, இருபதுக்கும் மேற்பட்ட  துறைகளை கையாண்ட அமைச்சர். அவர் பயிற்சிக்கு தொடர்ந்து வருவது,  பயிற்சியின் அவசியத்தை என உணர்த்தியது.

காலை 9.00 மணிக்கு வகுப்பு துவங்கியது...
( தொடரும்... )செவ்வாய், 25 டிசம்பர், 2012

வன்னியர் இட ஒதுக்கீடு போராட்டம் -பாகம் 2

தொடர் சாலை மறியல் போராட்டம் இரண்டாம் நாளின் போது இன்னும் தீவிரமாகியது. காவல் துறை என்ன செய்வது என்று தடுமாறிக் கொண்டிருந்தது. வன்னியர் சங்கத்தினர் இன்னும் உத்வேகத்தோடு களமிறங்கினர்.

காவல்துறை சாலையில் போடப்பட்ட மரங்களை மெல்ல அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்ய முயன்று கொண்டிருந்தது. ஆனாலும் தடைகள் நீடித்தன.

காவல்துறையின் தலைவர் முதல்வர். முதல்வர் எம்.ஜி.ஆரோ அமெரிக்க மருத்துவ மனையில். ஆட்சி நிர்வாகம் கிட்டத்தட்ட முடங்கியிருந்த நேரம் அது.

முதல்வர் என்று அறிவிக்கப்படாமல், பண்ருட்டி ராமச்சந்திரன் பொறுப்பு முதல்வராக செயல்பட்டதாக பத்திரிக்கைகள் சொல்லிவந்தன. பண்ருட்டி ராமச்சந்திரன் ஒரு வன்னியர் என்பதால், போராட்டத்திற்கு மறைமுக ஆதரவு கொடுத்ததாக அ.தி.மு.கவிலேயே முனுமுனுப்பு.

பலரின் தியாகத்தால் போராட்டம் எழுச்சியடைந்தது. உயிர்களை பறிகொடுத்து, பலவிதமான அடக்குமுறைகளுக்கும் இன்னல்களுக்கும் இடையே வெற்றிகரமாக நடந்த்து போராட்டம்.

சில குழுக்கள் தலைமறைவாக பல கிராமங்களுக்கும் சென்று போராட்டத்தை தீவிரப்படுத்தினர். மறுநாளும் பல இடங்களில் மறியல் போராட்டம் நடந்தது. சாலைகளில் பேருந்துகளை காவல்துறையினரின அணிவகுப்புடன் நடத்தினர்.

இதனை தடுத்தே தீர வேண்டும் என்று பல கிராமங்களில் முடிவெடுத்தனர். அதற்கு ஒரே வழி சாலையோரம் இருக்கும் மரங்களை வெட்டுவது. சாலைகளை சேதப்படுத்துவது.

காவல்துறையின் நடவடிக்கைகளை பார்த்து, அடுத்த கட்ட வியூகங்கள் வகுக்கப்பட்டன. முக்கிய சாலைகளில் இருந்த பாலங்கள் குறிவைக்கப்பட்டன. சாலைகளின் இணைப்பு நரம்புகள் பாலங்கள் தான்.

பாலங்கள் இல்லையென்றால் புதியப்பாலங்கள் அமைக்க நாட்கள் ஆகும். அதுவரை போக்குவரத்து சீராக நாளாகும் என்பதை கணித்து குறிவைக்கப்பட்டன. முக்கிய சாலைகளில் இருந்த பாலங்கள் அடையாளம் காணப்பட்டு, தகர்க்கப்பட்டன.

போராட்டம் தீவிரமாகியது. போலிசார் இதனை எதிர்பாக்கவில்லை. கலகக்காரர்கள் என்று அறிவித்து கண்டதும் சுட உத்தரவிட்டனர். கோலியனூர் கூட்டு ரோட்டில் முதல் துப்பாக்கி சூடு.

துப்பாக்கி சூடு குறித்து கவலை கொள்ளாமல், போராட்டக்குழுவினர் சாலையில் இறங்கி போராடினர். துப்பாக்கி சூடு விக்கிரவாண்டி, பண்ருட்டி என விரிவடைந்தது.

கிராமங்களுக்கு போலிசார் சென்று வீட்டில் இருப்பவர்களை எல்லாம் அடித்து துவம்சம் செய்த சம்பவங்கள் ஆரம்பித்தன். ஆண்கள் வீட்டில் இருக்க இயலாத நிலை. பல கிராமங்கள் போலிசாரால் சூறையாடப்பட்டன.

உயிர் பலி 21-ஐ எட்டியது....

இந்த சம்பவங்கள் அத்தனையும் நடைபெற்ற போது அ.தி.மு.க ஆட்சி...

( தொடரும்...)

வன்னியர் இட ஒதுக்கீடு போராட்டம் -பாகம்1


வன்னிய இன மக்கள் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் புறக்கணிக்கப்படுவதாக கோபத்தின் உச்சத்தில் இருந்த நேரம். இட ஒதுக்கீட்டின் பலன்கள் வன்னியர் சமூகத்திற்கு கிடைக்கவில்லை என்ற ஆதங்கம் மேலோங்கியிருந்தது. 

அது எம்.ஜி.ஆர் தலைமையிலான அ.தி.மு.க ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்த நேரம். எம்.ஜி.ஆர் அவர்கள் உடல் நலக்குறைவால் அவதிப்பட துவங்கிய காலம்.

வட தமிழகத்தில், ஊருக்கு ஒரு வன்னியர் சங்கம் என சிறு சிறு குழுக்களாக செயல்பட்டுக் கொண்டிருந்தன. அதனை ஒருங்கிணைக்கும் பணியை உடையார்பாளையத்தை சேர்ந்த அய்.ஏ.எஸ் அதிகாரி சா.சுப்ரமணியம் துவங்கினார்.

மருத்துவர் இராமதாஸ் தலைமையில் வன்னியர் சங்கத்தின் பணிகள் தீவிரமடைந்தன. கிராமம், கிராமமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டார். சங்கத்தை பலமிக்கதாக கட்டமைத்தார்.

வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வேண்டுமென கோரிக்கையை முன்னிறுத்தி வன்னியர் சங்கத்தின் பணிகள் சூடு பிடித்தன. போராட்டக் களம் மெல்ல மெல்லத் தயாரானது.

எம்.ஜி.ஆர் மிக உடல் நலம் குன்றி மேல் மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா அழைத்து செல்லப்பட்டார்.

செப்டம்பர் 17 தொடர்சாலை மறியலுக்கான தேதி அறிவிக்கப்பட்டது. 17 காலை போராட்டம் துவங்கினால், காவல் துறை அடக்குமுறையை பயன்படுத்தி போராட்ட்த்தை ஒடுக்குவார்கள்.

எனவே செப்டம்பர் 16 நள்ளிரவே போராட்டம் துவங்கியது. போராட்டம் என்றால் அதுவரை தமிழகம் கண்டிராத புதிய போராட்ட யுக்திகள்.

சென்னையிலிருந்து தெற்கு நோக்கி செல்கிற அத்தனை சாலைகளும் போராட்டக் குழுக்களால் கைப்பற்றப்பட்டன.

பின்னிரவு நேரம் என்பதாலும், ஊருக்கு வெளியே என்பதாலும் காவல்துறைக்கு செய்தி எட்டவில்லை. அது தொலைத் தொடர்பு வளராத காலம். தகவல் கிடைத்து காவல்துறை பணியில் இறங்குவதற்குள் நிலைமை கைமீறி போய்விட்ட்து.

சாலைகளின் ஓரம் இருந்த மரங்கள் அறுத்து சாலையின் குறுக்கே போடப்பட்டன. அறுக்கப்பட முடியாத பெரிய மரங்கள், பெட்ரோல் ஊற்றி தீவைக்கப்பட்டு சாலையில் சாய்த்து விடப்பட்டன.

போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்ட்து. சென்னையிலிருந்து தெற்கு நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து உடபட அத்தனை வாகனங்களும், செங்கல்பட்டு தாண்டி ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

நிறுத்தப்பட்ட வாகனங்களில், அண்ணா அறிவாலயம் திறப்புவிழாவில கலந்துக் கொண்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்த கழகத் தோழர்கள் வந்த வாகனங்களும் அடங்கும்...

( தொடரும்... )
வெள்ளி, 14 டிசம்பர், 2012

அன்பு பா.ம.க நண்பர்களுக்கு,

அன்பு சகோதரர் ர. தமிழரசன் உள்ளிட்ட பா.ம.க நண்பர்களுக்கு,

( முகநூல்  பதிவுக்கான பதில்... )

வணக்கம் !

நீங்கள் எப்படி பா.ம.க-வோ, அப்படியே நான் தி.மு.க.

உங்கள் கொள்கைகளை எப்படி நீங்கள் விரும்புகிறீர்களோ, அதே போல் தான் நானும் எங்கள் கொள்கைகளை விரும்புகிறேன், பதிவிடுகிறேன்.

என் நிலைத் தகவலில் வந்து நீங்கள் வாதிடுவதால், நான் உங்களோடு வரப் போவதில்லை. என் நிலைத் தகவல் படித்தும், நீங்கள் என்னோடு வரப் போவதுமில்லை..

ஆனால். நீங்கள் கலைஞரை தாக்குவதை போல், நாங்கள் மருத்துவரை தாக்குவதில்லை. அதனால் மருத்துவர், கலைஞரை விட உயர்ந்தவருமில்லை.

நான் முகநூலில் புழங்குகிறவன், ஆனால் முகநூலில் மட்டுமே புழங்குகிறவன் கிடையாது, களத்திலும் நிற்பவன்.

முகநூலில் பதிவிடுவதாலே, நான் முகநூல் போராளியில்லை. ஆனால் நீங்கள் என்னை அப்படி நினைத்து கத்தி சுழற்றுகிறீர்கள். 

என் நிலைத்தகவலில், நான் என்ன சொல்ல வருகிறேன் என்றுகூட பொறுக்க முடியாமல், உங்கள் பின்னூட்டத்தை பதிவிட்டிருக்கிறீர்கள்.

வன்னிய இனத்தில் பிறந்துவிட்ட ஒரே காரணத்திற்காக, நான் வன்னியர் சங்க சிந்தனை ஓட்டத்திற்கு ஏற்ப நடந்து கொள்ள இயலாது. 

எனக்கு என்று சில கொள்கைகளும், சில நியாயங்களும் இருக்க செய்யும், உங்களுக்கு இருப்பது போலவே....

நீங்கள் எனக்கு வாக்களித்தது போலவே, விடுதலை சிறுத்தைகளும் எனக்கு வாக்களித்திருக்கிறார்கள். 

உங்களைப் போல், அவர்களும் நிர்பந்தித்தால் யார் பக்கம் நான் நிற்க ?

ஐ.ஜே.கே போட்டியிட்ட போதும், எனக்கு மிகுதியாக வாக்களித்த வயலப்பாடி போன்ற உடையார் சமூகத்தினர் மிகுந்த கிராமங்களும் உண்டு. 

தே.மு.தி.க-விற்கு மிகுதியாக வாக்களித்த, வன்னியர்கள் மட்டுமே வாழ்கிற பெரியம்மாபாளையம் போன்ற கிராமங்களும் உண்டு.

வாக்கு விவரப் பட்டியல் என்னிடத்திலும் இருக்கிறது.

சில கேள்விகளை கேட்டிருக்கிறீர்கள்....பதில் தயார்...

ர. தமிழரசன் : சிவசங்கர் அவர்களே தெலுங்கு தட்சினாமூர்த்தி ஒன்றும் சும்மா கொடுக்கல இட ஓதிக்கிட்டை ......

பதில் :என்ன வாங்கிகிட்டு கொடுத்தார், அந்த இட ஒதுக்கீட்ட, உங்களுக்கு தெரியுமா ?

ர. தமிழரசன் : உங்களை தேர்தலில் வெற்றி பெற செய்தது உங்கள் சாதி ஓட்டுதானே ? ...

பதில் : கொஞ்சம் மேல படிங்க....

ர. தமிழரசன்: sivashankar avargalukku thidir endru vanniyar meethu karisanam vara karanam?

பதில் : எங்கள் தலைவர் கலைஞருக்கு 20% இட ஒதுக்கீடு கொடுக்கனும்னு வந்த கரிசனம் தான் எனக்கும்....

ர. தமிழரசன் : Dharmapuri kalavarathiil sivashankar annan avargalin nilai padu enna? Vilakkavum?!

பதில் : இதில் என் நிலைப்பாடு கள்ள மவுனம் என்று பலருக்கு கருத்து இருக்கிறது, இரண்டு தரப்பிலும். ஆனால் என் மவுனம், நல்ல மவுனம் என்றே நினைக்கிறேன். 

காரணம் மவுனம் சில நேரங்களில், நல்லதே செய்யும்... 

எம் பகுதியில், இதை போன்ற பிரச்சினையும் இல்லை, கருத்து சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை. 

இதில் கருத்து சொல்வதே, புதிய பிரச்சினைகளை கிளம்பும்.

ர. தமிழரசன் : intha porattathail dmk vin pangu enna? 

பதில் : தம்பி, போராடியது நீங்கள் தான், ஆனால் எம்.ஜி.ஆர் இடத்தில். 

எங்கள் பங்கு இட ஒதுக்கீடு கொடுத்தது தான்.....நீங்கள் போராடாமல்...

அதே போல், வேறு எவனும் கொடுத்திருக்கவும் மாட்டான்....எங்களைத் தவிர,...

ர. தமிழரசன் : sivasankar, அவர்கள் இந்த வீடியோ வ முழுவதும் பாருங்கள் இதில் வன்னியர் சங்க போராட்ட வரலாறு முழுவதும் பாருங்கள் ...சிரமப்பட்டு தொடர் எழுத வேண்டாம்...

பதில் : அந்த வரலாறு எனக்கு நல்லா தெரியும், என் வயசுக்கு... 

உங்க வயசுக்கு நல்லா பாருங்க.... 

இந்த பதில் போதுமென்று நினைக்கிறேன். இல்லன்னா சொல்லுங்க... பதில் தர தயாராகவே இருக்கிறேன்.

உங்கள் நண்பர்கள் சில தரக்குறைவான பின்னூட்டம் இட்டிருக்கிறார்கள். சிலவற்றை நீக்கிவிட்டேன், ஆனால் பதில் சொல்ல தயாராகவே இருக்கிறேன்.

நீங்கள் உங்கள் பக்கத்தில், “ குன்னம் சட்ட மன்ற உறுப்பினர் யார் என்று தெரிய வில்லை பெரும்பாலான குன்னம் தொகுதி பொது மக்களுக்கு “ என்று நிலைத் தகவல் பதிவிட்டிருக்கிறீர்கள். அதற்கு நானும் விருப்ப சொடுக்கிட்டிருக்கிறேன் ( like போட்டிருக்கிறேன் ).

உங்கள் நிலைத்தகவலை எப்போது பதிவிட்டீர்கள் ?

மருத்துவர் ராமதாஸ் குறித்து நான் நிலைத் தகவல் போட்ட பிறகு....

ஆனால் நான் ராமதாஸ் குறித்து தரக்குறைவாக, ஏதும் விமர்சனம் செய்திடவுமில்லை. இட ஒதுக்கீடு கொடுத்தது, குறித்து மட்டுமே பதிவிட்டேன்.

மகிழ்ச்சி சகோதரர் தமிழரசன்.

இந்த நிலைத் தகவலில், நான் உங்கள் கருத்தை எதிர்பார்க்கவில்லை. 

தொகுதி குறித்து கருத்து சொன்னால், தலை வணங்கி செய்ய காத்திருக்கிறேன், காரணம் நான் உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி.

பின்குறிப்பு : “குன்னம் தொகுதியில் ராஜினாமா செய்துவிட்டு, மீண்டும் போட்டியிட்டு, டெப்பாசிட் வாங்க முடியுமா”, என்ற உங்கள் நண்பர் கோபால் போன்றவர்கள் கேள்விக்கான பதில், அடுத்தக் கடிதத்தில்.....

அன்போடு.... 
உங்கள் சட்டமன்ற உறுப்பினர்

எஸ்.எஸ்.சிவசங்கர்

புதன், 12 டிசம்பர், 2012

அன்புள்ள சூப்பர் ஸ்டார் ரஜினி


அன்புள்ள சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களே,
வணக்கம்.

உங்கள் பிறந்தநாளுக்கு வாழ்த்துவது குறித்து வாதப் பிரதிவாதங்கள் போய் கொண்டிருக்கின்றன.

உங்களை சூப்பர் ஸ்டார் ஆக்கிய தமிழகத்திற்காக, நீங்கள் ஒரு துரும்பையும் கிள்ளி போடவில்லை. மகராஷ்டிராவை பூர்விகமாகக் கொண்டு, கன்னடத்தை தாய்மொழியாகக் கொண்ட நீங்கள் தமிழ் திரையுலகை சுரண்டிப் பிழைக்கிறீர்கள்.

இவையெல்லாம் உங்கள் மீதான குற்றச்சாட்டுகள். இதை கேட்கும் பொழுது தலையாட்டத் தான் தோன்றுகிறது.

ஆனால், சிவாஜி ஒரு ரூபாயோடு வாழ்க்கையை திரும்பத் துவங்க வேண்டிய சூழலில், அந்த ஒர் ரூபாய் நாணயத்தை சுண்டுகிறீர்களே, அந்த இடத்தில் எங்களுடைய மனதையும் சுண்டிவிடுகிறீர்கள்.

அபூர்வராகங்கள் திரைப்படத்தில், நீங்கள் வரும் முதல் காட்சியில், விரிய திறந்தது இரும்பு கேட் அல்ல, தமிழ் ரசிகர்களின் மனக் கதவு தான். அன்று உள்ளே நுழைந்தவர் தான். சிம்மாசனம் இட்டு அமர்ந்துவிட்டீர்கள்.

16 வயதினிலே பரட்டையாக, "இது எப்படி இருக்கு" என்று பன்ச் டயலாக் பேசிய போது தமிழ் ரசிகன், வில்லனையும் ரசிக்கத் துவங்கினான். "முள்ளும் மலரும்", "தப்புத்தாளங்கள்" என நடிகனாக பரிணமித்தீர்கள்.

பிரியா-வில் ஹீரோவாக கொடி பறக்கவிட்ட நீங்கள், பில்லா-வில் விஸ்வரூபம் எடுத்தீர்கள். கெட்டதும் செய்கிற நல்லவன் ரோலுக்கு இன்றைக்கும் உங்களை விட்டால் ஆள் இல்லை.  படிக்கட்டில் ஓடி வந்து, "மை நேம் இஸ் பில்லா" என்று நீங்கள் பாடத் துவங்கும் போது தன்னை பில்லாவாக நினைக்காத ரசிகன் இல்லை.

சின்ன சின்ன கண்ணசைவு, விரல் சொடுக்கம் என உங்கள் ஒவ்வொரு அசைவும் ரசிகனுக்கு பிடித்துப் போனது. அன்னை ஓர் ஆலயத்தில் மென்மையாக ஏற்றுக் கொண்டவன்,  அன்புக்கு நான் அடிமை முரட்டுத் தனத்தை விரும்பினான்.

மகேந்திரனின் ஜானியில் கிளாசிக் ஹீரோவாக பிரகாசித்தவர், அடுத்து எஸ்.பி.முத்துராமனின் ஜனரஞ்சக முரட்டுக் காளையில் "பொதுவாக என் மனசு தங்கம்" மூலம் கிராமத்தின் மூலைமுடுக்கெல்லாம் எல்லைய விரித்தீர்கள்.

அது என்னவோ உங்களுக்கு அனைத்துவிதமான இயக்குநர்களும் கிடைத்தார்கள்.  எல்லா இசையமைப்பாளர்களும் ஹிட் பாடல்களாக கொடுத்தார்கள். நெருப்புப் பொறி பறக்கும் வசனங்களாக வந்து விழுந்தன.

ரங்கா பார்த்துவிட்டு அதிரடி ரங்கா வாக திரிந்த நாங்கள், மூன்றுமுகம் பார்த்துவிட்டு " இந்த அலெக்ஸ்பாண்டியன் பேரக் கேட்டா, வயித்துல இருக்கும் குழந்தை கூட வாய மூடிக்கும்" என வசனம் பேசி, போலீஸ் மிடுக்கும் காட்டினோம், உங்களால்.

ஆறிலிருந்து அறுபது வரை முதிர்ச்சி, தில்லுமுல்லு காமெடி, நெற்றிக்கண் வில்லத்தனம், போக்கிரிராஜா ஆக்க்ஷன், புதுக்கவிதை காதல், தங்கமகன் நடனம், நல்லவனுக்கு நல்லவன் செண்டிமெண்ட், ராகவேந்தர் பக்தி. உங்கள் படங்களில் வெரைட்டி இல்லை என்று சொன்னவர் யார் ?

ராஜாதிராஜா, பணக்காரன் என தொடர் மாஸ் ஆக்க்ஷன் படங்களுக்கு இடையில், ஸ்டைலிஷாக தளபதி, கிராமத்து எஜமான், கலகல வீரா.

தாழ்வு மனப்பான்மை கொண்ட இளைஞர்களுக்கு ஒரு நம்பிக்கையூட்டும் அடையாளம் நீங்கள். உங்களை ரோல்மாடலாக மனதில் தாங்கி முன்னேறியவர்கள் உண்டு. அண்ணாமலை ஒரு உத்வேகம்.

ஒரு சினிமாவின் துவக்க விழா, ஒரு அரசாங்கத்தை அசைக்கும் என்பதற்கு உங்கள் பாஷா உதாரணம். "உண்மையைச் சொன்னேன்", நீங்கள் சொல்லும் போது  இந்த இரண்டு வார்த்தைக்கு  தான்  எவ்வளவு பவர் ?

பாபாவில் ஏற்பட்ட சரிவிலிருந்து மீள்வீர்களா என பலர் ஆருடம் பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில் சந்திரமுகியில் ஆனாயசமாக எழுந்து நின்றீர்கள். வேட்டையன் நடை மனதில் அப்படியே மனதில் நிற்கிறது. உங்களுக்கு வயது என்ன ? " மாப்பு வச்சய்யா ஆப்பு ".

சிவாஜியில் மீண்டும் நிரூபணம் செய்தீர்கள் ரஜினியின் பலத்தை. அதிலும் மொட்டை பாஸ் எம்.ஜி.ஆர், சபாஷ். கிடைக்கும் சின்ன,சின்ன வாய்ப்பை எல்லாம் ஸ்கோர் செய்கிறீர்கள்.

ஷங்கரின் ' எந்திரனில்' பொருந்துவாரா என படத்திற்கு முன்பே விமர்சனங்கள்.  வசீகரனாக யார் வேண்டுமானாலும் நடித்திருக்கலாம், உங்களை தவற யாரும் எந்திரனாகியிருக்க முடியாது.

பள்ளியை கட் அடித்த எனது 5 வயது மகன், இன்று கே-டிவியில் " ரங்கா" பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான். கேட்டால் ரஜினி பிடிக்குமாம். அடுத்து "சிவாஜி 3D" பார்க்க வேண்டுமாம். இது யாரால் முடியும் ?

அதனாலேயே வாழ்த்துகிறேன், " பிறந்த நாள் வாழ்த்துக்கள்".

இந்த தலைமுறையையும் மகிழ்விக்கிற நீங்கள், அடுத்த தலைமுறையையும் மகிழ்விக்க வேண்டும். தொடர்ந்து நடிக்க வேண்டும், ஹீரோவாகவே, சூப்பர் ஸ்டாராகவே, முக்கியமாக ரஜினியாகவே ....

ரஜினியாக மட்டும் பார்க்கிறேன், மாஸ் எண்டர்டெயினராக....வாழ்த்துகிறேன் !


ரசிப்புடன்
ரஜினி ரசிகன்.

திங்கள், 10 டிசம்பர், 2012

அண்ணா அறிவாலயம் திறப்பு விழா
1987 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16ம் தேதி. வழக்கமாக முப்பெரும் விழா கொண்டாடப் படுகிற நாள். அந்த ஆண்டு “ அண்ணா அறிவாலயம் “ திறக்கப் பட்ட மகத்தான நாள்.

சட்டமன்ற வளாகத்தில் இருந்த கழகத்திற்கான சட்டமன்ற அலுவலகத்தை, எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தில் வலுக்கட்டாயமாக காலி செயத போது, எழுந்த உணர்வுகளின் வெளிப்பாடு தான் அண்ணா அறிவாலயம்.

கழகத்திற்கென்று சிறப்பானதொரு அலுவலகம் அமைப்பது என முடிவெடுக்கிறார்கள் தலைவர் கலைஞரும், பேராசிரியர் அவர்களும். அதனையும் காண்போர் வியக்கும் வண்ணம் சென்னையின்
மத்தியில் அமைக்க திட்டமிட்டனர்.

கழக நிகழ்ச்சிகளில், தலைவர் கலைஞர் கலந்துக் கொண்டால், அதற்கு கழகத் தோழர்களிடம் நிதி வசூலிக்கப்படும். அதை கேலியும் கிண்டலும் செய்தனர் எதிர்கட்சியினர். அனால் அந்த நிதி அண்ணா அறிவாலயத்திற்காக திரட்டப்பட்டது.

தலைவர் இதற்காக ஓய்வெடுக்காமல் தமிழகம் முழுவதும் சுற்றி சுழன்றார். கழக உடன்பிறப்புகளும் ஒவ்வொரு ரூபாயாக நிதி திரட்டி, தலைமைக் கழகத்திற்கு வழங்கினர்.

அண்ணா அறிவாலயத்தின் வடிவமைப்பை தலைவர் கலைஞரே உருவாக்கினார். தேர்ந்த பொறியாளர்களுக்குரிய நேர்த்தியோடு, பண்டை தமிழ் மன்னர்களின் நுணுக்கங்களோடு அண்ணா அறிவாலயத்தை எழிலாக எழுப்பினார்.

அந்த அண்ணா அறிவாலயத்தின் திறப்பு விழா. கழகத்தின் பொதுச் செயலாளர் பேராசியர் பெருந்தகை தலைமையில் விழா. கழகத்தை உருவாக்கிய பேரறிஞர் அண்ணா அவர்களின் துணைவியார் மரியாதைக்குரிய ராணி அம்மையார் சிறப்பு விருந்தினர்.

தலைவர் கலைஞர் அவர்கள் பெருமிதத்தோடும், நெகிழ்ச்சியோடும் அண்ணா அறிவாலயத்தை திறந்து வைத்தார்.

அதிக நிதி திரட்டிக் கொடுத்த அன்றைய சென்னை மாவட்ட கழக செயலாளர் டி.ஆர்.பாலு அவர்களுக்கு முதல் பரிசு வழங்கப்படுகிறது. இரண்டாம் பரிசு அன்றைய எங்களது ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்தின் கழக செயலாளர் எஸ்.கே.வடிவேலு அவர்களுக்கு வழங்கப்படுகிறது.

கோடி கழகத் தொண்டர்களின் கனவு நனவாகியது. உற்சாக வெள்ளத்தில் கலைஞரின் உடன் பிறப்புகள் ஊர் திரும்பினர்.

ஆனால் நள்ளிரவில் கழகத் தோழர்களின் பயணம் தடைப்பட்டது....

( தொடரும்.... )
 

சனி, 8 டிசம்பர், 2012

மக்கள் சந்திப்பு 2 – அந்தூர் ஊராட்சி....

அந்தூர் ஊராட்சி சற்றேறக்குறைய 3000 மக்கள் தொகை கொண்ட கிராமம். குன்னம் தொகுதியின், வேப்பூர் ஒன்றியத்தில் உள்ளது. இங்கு ஒரு காலத்தில், மக்கள் ஏரித் தண்ணீரை குடித்து வந்தார்கள்.

தற்போதும் மின்சாரம் இல்லாவிட்டாலோ, மோட்டார் பழுதானாலோ சில நாட்கள் அதே ஏரி தண்ணீர் தான் வழி. மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி மூலம் விநியோகமாகிற நீரும் உள்ளூர் தண்ணீர் கிடையாது. உள்ளூர் தண்ணீர் உப்புத் தண்ணீர், குடிப்பதற்கு சரி வராது.

13 கி.மீ தூரத்தில் உள்ள வெண்மணி கிராமத்தில் ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டு, அங்கிருந்து தான் தண்ணீர் வருகிறது. 13 கி,மீ தூரம் வருகிற நீர் நேரடியாக மேல்நிலை நீர் தேக்கத் தொட்டியில் ஏற்ற முடியாமல், பல நாட்கள் தண்ணீர் தட்டுப்பாடு.


இது குறித்த கோரிக்கை தொடர்ந்து வந்த வண்ணம் இருந்தது. இந்த வருடம் இது வரை மழை இல்லை. இதே நிலை நீடித்தால், கோடையில் மிக கடுமையான குடிநீர் பஞ்சம் வரும். இதை எந்த வகையில் தீர்ப்பது, என்பதை மக்கள் கருத்து அறிந்து தீர்க்க தான் இன்றைய மக்கள் சந்திப்பு.

மக்கள் சந்திப்பில்,ஊர் மக்கள் கூடியிருந்தனர்.  பொதுமக்களிடம் நேரடியாக விவாதித்தோம். தரை மட்ட நீர் தேக்கத் தொட்டி அமைத்தால் தான், இந்த பிரச்சினையை தீர்க்க முடியும் என்ற முடிவு எட்டப்பட்டது. அதனை கட்டுவதற்கான இடத்தை பார்வையிட்டோம்.


குடிநீர் வடிகால் வாரிய பொறியாளர்களிடம் அலைபேசியில் பேசி, எவ்வளவு தொகை தேவைப்படும் என்பதை கேட்டுக் கொண்டு, கூட்டத்திலேயே, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, ஏழு லட்ச ரூபாய் ஒதுக்குவதாக அறிவித்தேன்.

குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு கிடைத்ததில், மக்கள் சந்திப்புக்கு வந்த பொதுமக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி. எங்களுக்கும் ஆத்ம திருப்தி, நீண்ட நாள் பிரச்சினையை தீர்ப்பதில். இன்றே மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் அனுப்பிவிட்டேன்.

அந்தூரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கிராமப்புற நூலகத்திற்கு பெரியார் களஞ்சியம் 15 பாகங்கள் உடபட 31 புத்தகங்கள் அன்பளிப்பாக, நான் நிர்வகிக்கிற பெரியார் அறிவு மய்யத்தின் சார்பாக வழங்கினேன். புரவலர் நிதியாக ரூபாய் ஆயிரமும் வழங்கினேன்.#  அடிப்படை பணியோடு, அறிவுப் பணியும்...சனி, 1 டிசம்பர், 2012

எங்கள் அண்ணாமலைப் பல்கலைக்கழகம்...


மாண்பமை அய்யா எம்.ஏ.எம்.ராமசாமி அய்யா அவர்களுக்கு,

வணக்கம் !

நான் நமது அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் மாணவன். உங்களது அல்ல, நமது அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.

1920-ல் மீனாட்சிக் கல்லூரியாய், அண்ணாமலை செட்டியாரால் துவக்கப்பட்டு, 1929-ல் அண்ணாமலை பல்கலைகழகமாக நிறுவப்பட்டு சிறப்புற செயல்பட்டு வந்த பல்கலைக்கழகம்.

200 ஏக்கர் நிலத்தையும், 20 லட்ச ரூபாய் பணத்தையும் அள்ளித் தந்த கல்வி வள்ளல் அண்ணாமலைச் செட்டியாரின் வழித்தோன்றல் நீங்கள்.

இந்தியாவில் இத்தனை நீண்ட கால வரலாற்றோடு வேறு பல்கலைக்கழகம் இல்லை. அத்தனைத் துறைகளும் ஒருங்கே, ஓரிடத்தில் அமைந்த பல்கலைக்கழகம் வேறு இல்லை.

தமிழக அரசியலின் திசைமானியாய் விளங்கிய நம் பல்கலைக்கழகம், திராவிட இயக்கத்தின் நாற்றங்காலாய் விளங்கியது.

இனமானப் பேராசியர் க. அன்பழகன், தமிழர் தலைவர் கீ.வீரமணி, மறைந்த நாவலர் நெடுஞ்செழியன், எஸ்.டி.சோமசுந்தரம், பண்ருட்டி ராமச்சந்திரன், தங்கம். தென்னரசு என தற்கால அரசியல் வரை தொடர்கிறது நம் பல்கலைக்கழகத்தின் மாணவர் பட்டியல்.

இந்தி திணிப்பு எதிர்ப்புப் போரின் அடையாளமாய், காவல் துறையின் துப்பாக்கிச் சூட்டில் முதல் களப்பலியாகி சிலையாய் நிற்கிற ராஜேந்திரன் , நம் பல்கலைக்கழகத்தின் மாணவன் தானே...

வட தமிழகத்தின் கல்வி வறட்சியை போக்கிய, வளமார் பூமியல்லவா நம் பல்கலைக்கழகம், எத்துணை கல்வியாளர்கள், எத்துணை ஆட்சியாளர்கள். பல தலைமுறைக்கு வழிக்காட்டிய பல்கலைக்கழகம்.

என் சமகாலத் தோழர்கள் இன்று அரசின் அதிகாரிகளாக, தனியார் நிறுவன அதிகாரிகளாக, தொழிலதிபர்களாக, கல்வியாளர்களாக உலகத்தின் பல பாகங்களிலும் பரிணமித்து வருகின்றனர்.

ஒரு குட்டி தமிழகமாய் திகழ்ந்த்து நம் பல்கலைக்கழகம், சென்னை முதல் கன்னியாக்குமரி வரை நண்பர்கள், பக்கத்து அறைத் தோழர்களாய்...

நம் பல்கலைக்கழகம் எங்கள் அன்னை மடி, மனம் கவர்ந்த தோழன், மனம் கிளர்ந்த காதலி, போதி மரம், கலங்கரை விளக்கம், சொல்லிக் கொண்டே போகலாம்....

நாங்கள் இங்குப் படித்தது பாடம் மட்டுமல்ல, வாழ்க்கையையும் சேர்த்து தான்...

பேரறிஞர் அண்ணா, “ ஏ ! தாழ்ந்த தமிழகமே “ என்ற வரலாற்று சிறப்புமிக்க உரையை வழங்கிய உயர்ந்த இடம் நம் பல்கலைக்கழகம்.

 இன்று “ ஏ ! தாழ்ந்த பல்கலைக்கழகமே “ என்று அழைக்கப்படும் நிலைக்கு செல்வதாய் பத்திரிக்கைகள் எச்சரிக்கின்றன...

மனம் வலிக்கிறது...

சீர் செய்யுங்கள். கீர்த்தி கெடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

என்றும் பல்கலைக் கழக நினைவுகளோடு......
அண்ணாமலை மாணவன்.