பிரபலமான இடுகைகள்

திங்கள், 27 ஜூலை, 2015

கனவு காண்வோம், அய்யா கலாம்...

அடடா, கடந்த வாரம் தானே பார்த்தேன். அரியலூர் வந்தாரே, புத்தகத் திருவிழாவை துவக்கி வைத்தாரே. அப்போதே கொஞ்சம் தளர்ந்து தான் இருந்தார். மைக் முன் வர, நடக்கும் போதே சற்று தடுமாறிப் போனார்.

என் இணையர் காயத்ரி, "கலாமை பார்த்து உங்கள் புத்தகத்தை அளியுங்கள்", என்றார். நண்பர் போஸ், கலாமின் ஆலோசகர் பொன்.ராஜ் எண்ணை அனுப்பினார். "அவரை தொடர்பு கொள் அண்ணா. கலாமை சந்திக்க ஏற்பாடு செய்வார்",என்றார்.

ஆனால் முன்னாள் குடியரசு தலைவரின் பயணம் புரோட்டோக்கால் படி தயாரிக்கப் பட்டிருக்கும் என்பதால், அதை மீற விரும்பாமல் விட்டு விட்டேன். ஆனாலும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, முதல் வரிசையில் அமர்ந்து, அவர் பேச்சைக் கேட்டு மகிழ்ந்தேன்.

நிகழ்வின் முடிவில் கலாமை நான் சந்திக்க, அரியலூர் நகராட்சித் தலைவர் முருகேசன், அதிகாரிகளிடம் சென்றார். நான் தடுத்து விட்டேன். இன்னொரு முறை, அவருக்கு இடையூறு இல்லாமல் சந்திக்க வேண்டும் என நினைத்தேன். பொய்யாகிப் போய்விட்டது.

தமிழகத்தின் கடைகோடியில் காற்புள்ளி போன்ற அந்தத் தீவு. ராமேஸ்வரம். அதில் இருந்து கிளம்பி தன் அறிவு பலத்தால் விஞ்ஞானி, கல்வியாளர், குடியரசுத் தலைவர் என பல உயரங்களை அடைந்த எளிய மனிதன்.

எதெல்லாம் பலவீனமோ, அத்தனையும் கொண்டவர். ஆம், கிராமத்தில் பிறந்தவர், எந்தப் பின்புலமும் இல்லாதவர், அரசுப் பள்ளியில் படித்தவர், சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவர், மிக மிக எளிய மனிதர்.

ஆனால் அது எதுவும் அவரை தடுத்து நிறுத்தவில்லை. அவர் திட்டமிடாத உயரங்களை, பதவிகளை எதிர்பாராமல் அடைந்தார். ஆனாலும் தன் குணம் மாறாமல், அப்படியே இருந்தார், அதே எளிமையாய்.

குடியரசு தலைவராக இருந்த போது, குடியரசு தலைவர் தங்கும் மாளிகையை பொதுமக்களுக்கு திறந்து விட்டார். 'இது உங்களுடையது' என்ற எண்ணத்தை ஏற்படுத்தினார். திருக்குறளின் பெருமையை வெளிப்படுத்த, தன் அலுவலகத்தை பயன்படுத்தினார்.

சோமராஜூ என்ற மருத்துவரோடு இணந்து, ராக்கெட்'க்கு பயன்படுத்தும் உலோகத்தை வைத்து, குறைந்த விலையிலான, இருதய சிகிச்சைக்கான "Coronary stunt" தயார் செய்தார். விண்வெளி விஞ்ஞானி மட்டுமல்ல, எளிய மக்களின் நலன் நாடிய அறிவாளி தான், தான் என்பதை நிரூபித்தார்.

மாணவர்களின் மனம் கவர்ந்தவர். இளைஞர்கள் வாழ்விற்கு வழிகாட்டியானவர். கிராமத்து மனிதர்களின் ஆதர்ச நாயகன் ஆனவர். அரசியலில் குதித்து, அரசியல் அடையாளம் இல்லாமல் பார்த்துக் கொண்டவர். சில, பல விவாதங்கள் இருந்தாலும், பதில் சொல்லாமல் விலகி நின்றவர்.


                       

"கனவு காணுங்கள்" என்று வலியுறுத்தியவர், பாடம் நடத்தியவர், நம் புத்தியில் புகுத்தியவர். கனவு கண்டு, செயல்படுத்தி பார்த்தவர்.

# கனவு காண்வோம் அய்யா கலாம், உங்கள் எளிமையை கைக்கொள்ள !

ஞாயிறு, 26 ஜூலை, 2015

ஒரு வழியா வெளியிட்டாச்சி, புத்தகம் தான்

நான் பாட்டுக்கு புத்தகம் ரிலீஸ் அப்படின்னு ஸ்டேடஸ் போட்டுட்டேன். ஆனா ரிலீஸ் ஆகறத்துக்குள்ள பட்டபாடு இருக்கே. இனி இந்த வேலையே வச்சிக்கக் கூடாது. புத்தகத்த கைல வச்சிக்கிட்டு தான் அறிவிக்கனும்.

முதல்நாளே, புத்தகங்கள் லாரியில் ஏறி விட்டது என்று உறுதிப்படுத்தி விட்டார்கள். லாரி ஷெட்டில் 12 மணிக்கு வந்துவிடும் என்றார்கள். அதனை நம்பி 10.52க்கு ஸ்டேடஸ் போட்டு விட்டேன் “ரிலீஸ்”.

மீண்டும் 12 மணிக்கு ஷெட்டில் கேட்டால் லாரி வரவில்லை என்றார்கள். 12.30க்கும் வரவில்லை. லாரி எங்கிருக்கிறது என்று கண்டுபிடிக்க சொல்லி, லூயி அவர்களோடு போராடிக் கொண்டிருந்தார்.

இதற்குள் அண்ணன் ஞானமூர்த்தி இல்ல நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள பெண்ணாடம் கிளம்பிவிட்டோம். இன்னாருக்கு, இன்ன விஷயத்திற்காக புத்தகங்கள் வருகின்றன என லூயி அவர்களிடம் விளக்கி மன்றாடினார்.

இதற்கிடையில் புத்தகத்தை வெளியிட, திருச்சியிலிருந்த பத்ரிசேஷாத்ரியை அழைக்க, அவரும் தன் பணிகளை ஒத்தி வைத்து 7.00 மணிக்கு கிளம்பி வர ஒப்புக் கொண்டார். அப்போது கேட்டார்,”சார், புத்தகம் வந்திடுச்சா?”. “இல்லிங்க சார். அது ஒரு சினிமா போல போய்கிட்டு இருக்கு” என்றேன். சிரித்து விட்டார்.

லாரி ஷெட்காரர்கள், லாரி உளுந்தூர்பேட்டையில் இருக்கிறது என்று கண்டுபிடித்து சொன்னார்கள். லாரி இதே போக்கில் வழியில் பார்சல்களை இறக்கிவிட்டு வந்தால் மாலை ஆகிவிடும். வெளியிடுவது சிரமம் ஆகிவிடும்.

முதல்நாளே வெளியிட துடிப்பதற்கு இரண்டு காரணங்கள். முதல் நாளே வெளியிட்டால் தான், அடுத்த இரண்டு மூன்று நாட்களில் பிரபலமாகி, புத்தகம் விற்பனையாகி, பதிப்பகத்திற்கு பலன்.

அடுத்து தள்ளிப் போகும் நாட்கள் பிரச்சினை. மறுநாள் 18, தளபதி கடலூர் நிகழ்ச்சி. அதற்கடுத்த நாள் மகனுக்கு பிறந்தநாள். அதற்கடுத்த நாள் வேறொரு பணி. 4 நாட்கள் ஓடி விடும். 21 தான் மீண்டும் வெளியிட வாய்ப்புள்ள நாள். அதனால் தான் இந்த பரபரப்பு.

நாங்களோ பெண்ணாடத்தில். செல்வத்தை ஒரு கார் எடுத்துக் கொண்டு லாரியை சேஸ் செய்ய சொன்னோம். செல்வம் கிளம்ப, அரியலூர் பைபாஸ் ரோட்டில் கார் தடுக்கப்படுகிறது காவல்துறையால். முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் பெரம்பலூரிலிருந்து கிளம்பி விட்டதால், எதிபுறம் நோ டிராபிக்.

பிறகு அனுமதிக்கப்பட்ட செல்வம் பெரம்பலூர், தொழுதூர் தாண்டி 70 கி,மீ தொலைவில் லாரியை மடக்கினார். அப்போது கிழக்கு பதிப்பகம் மேலாளர் போன் செய்தார்,”சார், எங்களுக்கு வர வேண்டிய புத்தகம் வரும் லாரி வந்து சேரவில்லை. உங்க புத்தகம் வந்துடுச்சா?”. “சார் லாரிய புடிச்சிட்டோம். பில் நம்பர் சொல்லுங்க சார்”.

செல்வம் பெட்டிகளை ஏற்றிக் கொண்டு அரியலூர் வந்தார். புத்தகத்தை ஸ்டாலுக்கு அனுப்பினோம். கலாம் இன்னொரு நிகழ்ச்சிசையை முடித்துக் கொண்டு அருகில் வந்துவிட்டார் என கதவுகளை பூட்டிவிட்டார்கள் காவல்துறையினர், பாதுகாப்புக் கருதி. புத்தகங்களை அனுமதிக்கவில்லை.

பிறகு நிகழ்ச்சிக்கு செல்லும் என் காரிலேயே ஏற்றிக் கொண்டு சென்றோம். கலாமும் வந்தார். புத்தகக் காட்சியை துவக்கி வைத்தார். இதற்குள் பத்ரி அவர்களை ஆசை.அன்பு அழைத்துக் கொண்டு திருச்சியிலிருந்து வர, டிராபிக் நெருக்கடி.

ஒரு வழியாக 08.30-க்கு புத்தகத்தை பத்ரிசேஷாத்ரி அவர்கள் வெளியிட்டார்கள். அவர் புத்தகத்தை வெளியிடும் கிழக்கு பதிப்பகத்தை சேர்ந்தவர் என்றாலும், எனது முகநூல் நண்பர். முகநூல் மூலம் என் எழுத்துக்களை முன்னமே வாசித்திருந்த காரணத்தால் தான், பதிப்பிக்க ஒப்புக் கொண்டார்.

பெற்றுக் கொண்டவர்கள் கவிஞர் அரங்கன்.தமிழ் மற்றும் எஸ்.பி.மகேந்திரன். இவர்கள் இருவரும் எனது முகநூல் நண்பர்கள். அரியலூரை சேர்ந்தவர்கள் என்றாலும் முகநூல் மூலமே அறிமுகமானவர்கள். தொடர்ந்து வாசித்து கருத்து சொல்பவர்கள். சூழ்ந்திருந்து வாழ்த்தியவர்களும் முகநூல் நண்பர்களே.

           

ஒன்றிய செயலாளர் ஜோதிவேல், அவைத்தலைவர் சந்திரசேகர், நகராட்சித்தலைவர் முருகேசன், பொதுக்குழு செல்வராஜ் ஆகியோர் ஸ்டேடஸ் பார்த்து வந்திருந்தார்கள், பார்வையாளர்களாக.

காலை ஸ்டேடசை பார்த்து தேனியிலிருந்து பறந்து வந்த சோமசுந்தரம் பத்ரி அவர்களுக்கு ஏலக்காய் மாலை அணிவிக்க, அவர் நெளிந்தார். சில பிரதிகளில் கையெழுத்திட்டு வழங்கி, எழுத்தாளராக அங்கீகாரம் பெற்றேன்.

முகநூலால் தான் எழுதும் எண்ணம் வந்தது, புத்தகம் வெளியிடும் வாய்ப்பு கிடைத்தது. அதனால் முழுதும் முகநூல் விழாவாகத் தான் இருக்க வேண்டும் என முடிவெடுத்தேன்.

விழாவாக வைத்திருந்தால், அரசியல் கலந்திருக்கும், பெரும் விழா ஆகியிருக்கும். எழுத்து பின்னுக்கு தள்ளப்பட்டு, ஆளுமை முன்னுக்கு வந்திருக்கும். எழுத்து, எழுத்துக்காக மாத்திரம் கொண்டாடப்பட வேண்டும் என்றே எளிய வெளியீடு.

# முதல் நூல் முகநூலால். நன்றி மார்க் மற்றும் “உங்களுக்கு” !

செவ்வாய், 21 ஜூலை, 2015

புத்தகம் ரிலீஸ் ஆகுமா? (தொடர்ச்சி)


ஜூலை 7.
“இந்த ஃபாண்ட் சரியா வரல”
“நானே டைப் செய்தது தான். “அழகி” டிரான்ஸ்லிட்ரேஷன் ஃபாண்ட்”
“ரீ டைப் தான் செய்யனும்”
அது 100 பக்கம் தாண்டும். இதற்கு இடையில் சடைக்கம்பட்டி மகேந்திரன், பிளாகில் வந்த எனது மொத்த பதிவுகளையும் பிரிண்ட் எடுத்துக் கொடுத்தார், அதை பார்த்தால், அலைன் ஆகவில்லை தான். வேலைக்கு ஆகாது,
அன்று காலை அரியலூர் மாவட்ட செயற்குழு கூட்டம். கூட்டம் மதியம் நிறைவுற்றது. சாப்பிட்டு விட்டு, புத்தக சிந்தனையை மூட்டைக் கட்டி விட்டு படுத்தேன். ஒரு புத்தகத்தை புரட்டினேன். தூங்கி விட்டேன்.

கனவில், எங்கோ ஃபோன் அடித்தது போல் இருந்தது. லேசாக விழித்து பார்த்தேன். என் அலைபேசி தான்.
“பத்ரி”.
தூக்கம் போன இடம் தெரியவில்லை. எழுந்தேன்.

“சார், நான் ஃபிரி. நீங்க ஃபிரியா?” பத்ரி.
“ஃபிரிதான் சார். சொல்லுங்க”, நான்.
“புத்தகக் காட்சி 17 துவங்குது. அப்போ புத்தகம் 16 ரெடியா இருக்கனும், அப்ப தான் டிரான்ஸ்போர்ட்டேஷனுக்கு சரியா இருக்கும். 13 பிரிண்டிங்க் கொடுத்தா தான் 16 ரெடி ஆகும். அதுக்கு முன்னாடி லே அவுட் பார்த்து, ரேப்பர் தயார் செய்யனும்”
“உங்களுக்கு ஏற்கனவே திட்டமிட்ட வேலைகள் இருக்குமே?”, நான்.
“அது இருக்கு. பார்த்துக்கலாம் சார். நீங்க உடனே மெட்டிரீயல் அனுப்புங்க. எடிட்டோரியல் பார்த்து, ரெடி செய்ய சரியா இருக்கும்”
“எல்லாம் மெயிலில் ரெடியா இருக்கு, அனுப்பிடறேன் சார்”
“இல்ல சார். வேர்ட் பைல்ல எல்லா கட்டுரைகளையும் ஏற்றி ஒரே பைலா அனுப்பிடுங்க”
“அழகி ஃபாண்ட்ல இருக்கு”
“அது ஒன்னும் பிரச்சினையே இல்ல. யுனிக்கோடுக்கு மாற்றி ரெடி செஞ்சிடுவாங்க. மெயில் அனுப்பிடுங்க”
“சார், ப்ரிண்டிங்கிற்கு நான் என்ன செய்யனும்?”
“ஒன்னும் இல்ல சார். நாங்க ப்ரிண்ட் பண்ணிடுவோம். விற்க, விற்க ராயல்டி வரும். உங்க எழுத்து சேலபிள். நான் படிச்சிருக்கேன்ல, தெரியும்”

அதுவரை இருந்த பிரச்சினைகள், ஒரே நொடியில் முடிந்தது. அடுத்தப் பிரச்சினை. கம்ப்யூட்டர் அவுட். இது வரை மொபைலில் சமாளித்தாயிற்று. வேர்டு பைலில் அனுப்ப வேண்டுமே. மகேந்திரன் தனது லேப்டாப்பை கொண்டு வந்து கொடுத்தார்,

நல்லவேளையாக மாலை எந்த நிகழ்ச்சியும் இல்லை. உட்கார்ந்து முகநூல் கணக்கு துவங்கியதில் இருந்து போடப்பட்ட ஸ்டேடஸ்களை புரட்ட ஆரம்பித்தேன். பிளாகில் இல்லாத சில பதிவுகள் இங்கு இருந்தன. தெரிவு செய்த பட்டியல் மாற ஆரம்பித்தது.

வேர்ட் பைலில் ஏற்றும் போது, சில பதிவுகளில் ஆல்ட்ரேஷன் தேவைப்பட்டது. இரவு முழுதும் பணி.

ஜூலை 8.
ஒரு வழியாக பதிவுகளை தொகுத்து முடித்து மெயிலினேன். மணி நண்பகல் 12.00. மாலை “புகைப்படமும், என்னைப் பற்றிய விபரக் குறிப்பும்” அனுப்புங்கள் என பதில் வந்தது. சரி, வேலை துவங்கி விட்டது, நிம்மதி.

ஜூலை 9.
சென்னை பயணித்தேன். புத்தகப் பணியை முடித்து வர. அணிந்துரை இருந்தால் நன்றாக இருக்கும். “சார், அணிந்துரை வாங்கி அனுப்பலாமா?”. “தாராளமா. ஆனா எதுவா இருந்தாலும் திங்கட் கிழமைக்கு முன்னாடி. அன்றைக்கு பிரிண்ட்க்கு அனுப்பனும்”.

யாரிடம் வாங்கலாம், இரண்டு நாட்கள் தான் உள்ளன. முதலில் நினைவுக்கு வந்தவர் அண்ணன் கவிஞர் ராஜசுந்தரராஜன். ஏற்கனவே என் பதிவுகளை படிப்பவர், பாராட்டுபவர். எம்.எம்.அப்துல்லாவை தொடர்பு விபரம் கூறினேன். “பேசிடறேன் அண்ணா” என்றார்.

அடுத்து யோசித்தேன். நமக்கு பழக்கமான, பொதுவெளியில் அறிமுகமானவர்களாக இருக்க வேண்டும், கவிஞர் யுகபாரதி. அலைபேசினேன். “மகிழ்ச்சி தோழர். நான் ஷூட்டிங் ஸ்பாட் போகிறேன். பாலாகிட்ட கொடுத்திடுங்க”. பாலா நாட் ரீச்சபிள்.

நண்பகல். பத்ரி அவர்களை தொடர்பு கொண்டேன், சந்திக்க. “வாங்க” என்றார். அது தான் முதல் சந்திப்பு. அணிந்துரைக்கு கொடுக்க ப்ரிண்ட் அவுட் கேட்டேன். தயாராக அரை மணி நேரம் ஆயிற்று. அதற்குள் ஒரு நீண்ட உரையாடல். பல விஷயங்கள். பயனுள்ளதாக அமைந்தது.

அட்டை டிசைனை எடுத்து வர சொல்லி பார்த்தார். முகநூல் பதிவுகள் என்பதால், முகநூல் அடையாளமான “f”-ஐ பெரிதாக போட்டு டிசைன் செய்திருந்தார்கள். நான் மறுக்கும் முன்பே, பத்ரி மறுத்துவிட்டார். “இந்த புத்தகத்தின் அடிநாதமே வேறு”.

அண்ணன் அப்துல்லா தொடர்பு கொள்ளவில்லை. துணை இயக்குநர் பாலா ஒரு வழியாக மாலை சிக்கினார். அவரிடத்தில் ஒரு தொகுப்பை ஒப்படைத்தோம்.

ஜூலை 10.
காலை அண்ணன் அப்துல்லா லைனுக்கு வந்தார். “கவிஞர் கிட்ட சொல்லிட்டேன். பேசிடுங்க”. கவிஞருக்கு பேசினேன். “தம்பி, பாப்பாவுக்கு பரிட்சை, உதவனும். இருந்தாலும் உங்க பணி முடிக்கணும். மெயில் அனுப்பிடுங்க”. அனுப்பினேன்.

“இந்த போட்டோ நல்லா இல்லை. வேற அனுப்புங்க” இணையர் கருத்து. நீண்ட நாட்களாக புகைப்படம் எடுக்க அறிவுரைத்துக் கொண்டிருந்த அக்கா ஈஸ்வரிரகு அவர்களை தொடர்பு கொண்டேன். ரகு அவர்கள் சிறப்பான புகைப்படம் எடுத்தார். அது ஒரு தனிக்கதை.

அதற்குள் இடியென ஒரு செய்தி. ஆண்டிமடத்தில் எங்கள் தெருவை சேர்ந்த மூன்று இளைஞர்கள் விபத்தில் பலி. சென்னை வேலைகளை பாதியில் விட்டுவிட்டு, ஆண்டிமடம் கிளம்பினேன்.

காரில் வரும் போதே யுகபாரதி அவர்களிடமிருந்து குறுஞ்செய்தி. “அணிந்துரை அனுப்பி விட்டேன், மெயில் பார்க்கவும்”. தேனினும் இனிய அணிந்துரை. பதிப்பகத்திற்கு பார்வேர்ட் செய்தேன்.

ஜூலை 11.
விடியற்காலை 4.30க்கு, அண்ணன் ராஜசுந்தரராஜன் அணிந்துரை அனுப்பி இருந்தார். இலக்கிய உலகை சேர்ந்த அண்ணனது அணிந்துரை, ஒரு தகுதிச் சான்று. பதிப்பகத்திற்கு மெயில் அனுப்பினேன்.

ஜூலை 12. ஞாயிற்றுக்கிழமை.

ஜூலை 13.
ஒரு புதிய சிந்தனை. என்னுரை என்ற பெயரில் “நன்றியுரை” தயார் செய்து, வாய்ப்பு இருந்தால் இணைத்துக் கொள்ளவும் என அனுப்பினேன். அச்சுக்கு ஏற்றுக் கொண்டார்கள்.
இதற்கிடையில் புத்தகத்திற்கு சூட்ட பெயர் குழப்பம், நான் ஒன்று சிந்திக்க, கவிஞர் யுகபாரதி சில பெயர்களை சொல்ல.

மாலை எல்லாவற்றிற்கும் தீர்வாக, பத்ரி அட்டைப்பட லேஅவுட்டை அனுப்பினார். அவரே ஒரு பெயர் முடிவு செய்திருந்தார். அருமையாக அமைந்திருந்தது.

“சார் அட்டையில் என் படம் சற்று பெரிதாக இருக்கே. சின்னதா ஆக்கிட்டா பரவாயில்லை”
“சார், அது உங்க பார்வை, அடக்கமா இருக்கனும்னு. எங்கள் பார்வையில் இது தான் சரி”
“ப்ரிண்ட்டுக்கு அனுப்ப போகிறேன்”.

ஜூலை 14.
கவிஞர் யுகபாரதி ஒரு செய்தி அனுப்பி இருந்தார். “நீங்க நல்லா இருக்கணும் பாடல்” புலமைப்பித்தன் எழுதியது. ஆனால் வாலி எழுதியது போல் வந்துள்ளது. 40 வது பதிவு. அக்கறையான தோழர்.

திருத்தம் மேற் கொள்ள பத்ரி அவர்களை தொடர்பு கொண்டேன். “பிளேட் போட்டு பிரிண்டிங்கைத் தொடங்கிவிட்டோம். இனி மாற்ற முடியாது, நேரக் குறைவு காரணமாக.. அடுத்த அச்சில் சரி செய்துவிடலாம்.”

ஜூலை 16.
“சார். புக் ரெடி. நீங்க கேட்ட புத்தகங்களை அனுப்ப முகவரி அனுப்புங்க”.
முகவரி அனுப்பினேன்.
“சார், டிரான்ஸ்போர்டில் புக் பண்ணிட்டோம். நாளை வந்துவிடும்” பிரசன்னா.

“ஏங்க புக் பார்த்திட்டீங்களா?” இணையர்.
“இல்லை. நாளை தான் வந்து சேர்கிறது. நானும் நாளைக்கு தான் பார்க்கனும்”
“ஆனாலும் அட்டையில் உங்க படம் பெரிசா இருந்தது. சின்னதாக்க சொல்லி இருக்கலாம். உங்க ஸ்டைலுக்கு, அத ஏத்துக்க முடியல”
“பிரிண்ட் ஓடி, புத்தகம் வந்துகிட்டு இருக்கு. என்ன செய்ய?”.

ஜூலை 17. காலை 09.57. அரியலூர்.

டிரான்ஸ்போர்ட் லாரி வந்துக் கொண்டு இருக்கிறதாம்.

# நானும் புத்தகத்தைக் காண காத்திருக்கிறேன் !

திங்கள், 20 ஜூலை, 2015

தெறி மாஸ். செம ஹிட் !

காலையிலிருந்து வர ஆரம்பித்த அலைபேசி அழைப்புகளே "நீதி கேட்கும் பேரணி" நிகழ்ச்சியின்  வெற்றிக்கு கட்டியம் கூற ஆரம்பித்தன.

"அண்ண, கிராமத்தில இருந்து வந்த வேனெல்லாம் இல்லாம, நிறைய பேரு வந்துட்டாங்க. கைகாட்டியில ரெண்டு வேன் எக்ஸ்ட்ரா  இப்போ எடுத்தோம். எல்லா வேன்லயும் ஸ்டேண்டிங் தான்." அரியலூர் ஒன்றிய செயலாளர் ஜோதிவேல்.

"வர்றன்னு சொன்னவங்கள விட கூடுதலா இருக்கு வண்டி. ஆண்டிமடத்தில் அசம்பிள் ஆகிட்டோம் . கிளம்புறோம் ", ஆண்டிமடத்தில் இருந்து ஒன்றிய செயலாளர் தர்மதுரையும், துணை செயலாளர் முருகனும்.

"அய்யா, எங்க வேன் நிறைஞ்சி, நின்னுகிட்டு வர்ற நிலம ஆயிடுச்சி. நானும் நின்னுகிட்டு தான் வர்றேன், அப்ப தான் நின்னு கிட்டு வர்ற மத்தவங்க சங்கடப்படாம வருவாங்க " அசாவீரன் குடிகாடு ஊராட்சி செயலாளர்  கோடி.

வேப்பூர் ஒன்றிய செயலாளர் மதியழகன் அவர்களிடம் இருந்து குறுஞ்செய்தி "வேன் 23, கார் 52". மாணவரணி சுரேஷ் "கிளம்பிவிட்டதாக" முகநூலில் படத்துடன் செய்தி.  தா.பழூர் ஒன்றிய செயலாளர் கண்ணன் வாட்ஸ் அப்பில் படச் செய்தி. 

மணி 01.30.  தீப்பாஞ்சா கோவில் அருகே செந்துறை ஒன்றிய செயலாளர் ஞானமூர்த்தி, வரும் வாகனங்களுக்கு வழி சொல்லி, கணக்கு எடுத்துக் கொண்டிருந்தார். பரங்கிப்பேட்டை தாண்டி பெரம்பலூர் மா.செ அண்ணன் குன்னம் ராஜேந்திரன் இணைந்தார் . அண்ணன் பரமேஷ்குமார் உணவளித்தார். மணி 02.30.

மேடையை அடைய இரண்டு பர்லாங் இருக்கும் போதே லேசாக டிராபிக். சமாளித்து பயணித்தோம். தளவாய் தோழர்கள் பாதை அமைத்துக் கொடுத்தார்கள். மேடை பின்புறம் அடைந்தோம். ஒரு சிறு பந்தலில் தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் அமர்ந்திருந்தனர். மணி 03.00.

கும்பகோணம் ரத்தினசாமி புகைப்படத்திற்கு அழைக்க இந்தப் பக்கம் வந்தேன் . அருகில்  அண்ணன் பெரியண்ணன் அரசு இருந்தார். வாத்து மேய்ப்பது போல ஒரு குச்சியோடு வந்த பாண்டி அரவிந்த் அண்ணன் அரசு, அண்ணன் பாண்டி சிவா ஆகியோரோடு என்னையும் நிறுத்தி செல்ஃபி எடுத்தார். அந்தக் குச்சி செல்ஃபி ஸ்டிக்.

மேடையை நோக்கி நகர்ந்தோம். ஒரு கார் மேடை வரை வந்தது. முன்னாள் அமைச்சர் கோ.சி.மணி. உடல்நிலை சரியில்லை, நடை சிரமம், ஆனால் கழக உணர்வு அவரை வீட்டில் இருக்க விடவில்லை. வெயில் தாக்க, கிரேன் கேமராவின் ஒட்டு நிழலில் அமர்ந்தார்.

மணி 03.30. மேடையில் திருமுட்டம் ஆனந்தன் மைக் மூலம் கூட்டத்தை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தார். சிதம்பரம் நகரம் செந்தில் கடைசி நிமிட மேடைப் பணிகளை பார்வையிட்டுக் கொண்டிருந்தார். ஒன்றிய செயலாளர் முத்து பெருமாள் மேடையில் மற்றவர்கள் ஏறாமல் இருக்க தொண்டரணிக்கு அறிவுறுத்தினார். ஜாபர் அலி இணையப் பணிக்கு தயாராக ஐபேடோடு உலாவிக் கொண்டிருந்தார். எதிரே திடல் நிரம்பிக் கொண்டிருந்தது.

03.45. "தளபதி கடலூரில் இருந்து கிளம்பி விட்டார்கள். 20 நிமிடங்களில் வந்து விடுவார்கள். மாவட்ட செயலாளர்கள் மேடையில் அமருங்கள்" என்றார்கள். மேடையில் 18 நாற்காலிகள். தளபதி மற்றும் பங்கேற்கும் 17 மாவட்டங்களின் செயலாளர்களுக்கு. பின் வரிசையில் ஒன்றியம் முத்து.பெருமாள், ஊ.ம.தலைவர் ஆகிய இருவருக்கு.

மேடையேறி அமர்ந்தோம். வெயில் இப்போது கொஞ்சம் டிகிரியை கூட்டியது. அண்ணன் நாகை மா.செ விஜயன், டிராபிக் ஜாமால் 4 கி.மீ நடந்து வந்து சேர்ந்தார். மேடைக்கு எதிரே மாநில அளவிலான நிர்வாகிகள், மற்ற மாவட்ட செயலாளர்கள் வந்து அமர்ந்தனர்.

04.30. இன்னும் தளபதி அவர்கள் வந்து சேரவில்லை. விசாரிக்கலாம் என்றால் அலைபேசி அசையவில்லை. லட்சக்கணக்கான மொபைல்கள் ஒரே இடத்தில் குவிந்ததால், நெட்வொர்க் ஜாம். இளைஞரணி கார்த்தியை கேட்டால் கடலூர் ரோட் ஜாம், அதான் லேட். பாலமுருகன் தண்ணீர் கொடுத்து எங்களை காத்தார்.

05.00 அண்ணன் பொன்முடி மைக்கை பிடித்து கூட்டத்தை ஒழுங்குப்படுத்திக் கொண்டிருந்தார். கிடைத்த காட்சிகளை அண்ணன் ஜெயின் கூபி கேமராவால் சுட்டுத் தள்ளினார். வீடியோவில் வந்த "நீதி கேட்போம்" பாடல் ஒலிபரப்பாகி முறுக்கேற்றிக் கொண்டிருந்தது.

05.30. கூட்டம் அலைமோத ஆரம்பித்தது. மேடைக்கு இடப்புறம் திடலை தாண்டி சாலை வரை மக்கள் வெள்ளம். எதிர்புறத்தில் தான் கண் கொள்ளாக் காட்சி. கடலூர்-சிதம்பரம் சாலையில் வாகனம் மாட்டியவர்கள் பத்து கிலோமீட்டருக்கும் மேற்பட்ட தூரம் நடந்து திடலில் நுழைந்த காட்சி சினிமா போர்காட்சி போல இருந்தது.

05.45. இருபது நிமிடத்தில் வந்திருக்க வேண்டிய பயணத்தை, இரண்டு மணி நேரம் பயணித்து தளபதி அவர்களின் வாகனம் மக்கள் வெள்ளத்தில் நீந்தி வந்துக் கொண்டிருந்தது. எலெக்ட்ரிக் ஷாக் போல லட்சக்கணக்கில் திரண்டிருந்த ஒட்டு மொத்தக் கூட்டமும் எழுந்து நின்றது. கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து வெற்றி பெற்றால் கிரிக்கெட் மைதானத்தில் ஏற்படுகிற ஆனந்த அலை இங்கே.

தளபதி வாகனம் மேடையை ஒட்டி நின்றது. தளபதி இறங்கினார். மகிழ்ச்சி ஆரவாரம். படிகளில் ஏறினார், காலை நேர சூரியனை போல ஒளிப் பிழம்பாக. மேடை ஏறினார். மக்களை நோக்கி கையசைத்தார். மக்கள் கடலில் இருந்து அலை அடித்தது போல ஹோவென முழக்கம்.

தளபதி மேடையின் இடப்புறத்திலிருந்து மையப்பகுதியை நோக்கி நடந்தவாறு தொண்டர்களை பார்த்து வணங்கினார். அங்கிருந்து வலப்புறம் வரை கையசைத்து நடந்தார். மொத்தக் கூட்டமும் துள்ளிக் குதித்து கையசைத்தது, ஒட்டு மொத்த திடலும் அசைந்தது போல இருந்தது. ரஜினி படத்து ஓப்பனிங் பாடல் போல் அதிர்வு அடங்க வெகு நேரமானது. ஒரு வாரமாக பணியாற்றிக் கொண்டிருக்கும் ராக்போர்ட் இன்பாவும், இளைஞரணி நெய்வேலி ராஜேஷும் ஆனந்தமாய் பார்த்துக் கொண்டிருந்தனர். வெற்றியின் ஆனந்தம்.

மா.செ வெ.கணேசன் வரவேற்றிட, அண்ணன் பொன்முடி முன்னிலை உரை. இரண்டு மாதமாக பந்தல், கூட்ட ஏற்பாடு என உழைத்த அண்ணன் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமை உரையாற்றினார்.

நீதி கேட்கும் பேரணியின் கதாநாயகன் ஒலிவாங்கி முன் வந்து நின்றார். "வானத்து விண்மீன்கள் இறங்கி வந்தது போல் திரண்டிருக்கிற உங்களை " என்று  பன்ச் அடிக்க, எழுந்த கரவொலி விண்ணை எட்டியது. அதற்கு மேல் சரவெடியென முழங்கினார்.

முதல் வரியிலேயே வசியப்படுத்தியவர், கடைசி வரை கட்டிப் போட்டார்.

# தெறி மாஸ். செம ஹிட் !

வெள்ளி, 17 ஜூலை, 2015

புத்தகம் ரிலீஸ் ஆகுமா ?

காலை 7 மணிக்கு எழுந்திருக்கும் நபருக்கு, அன்று விடிகாலை 04.30க்கு விழிப்பு. இதற்கு படுத்ததோ நள்ளிரவு 12.30, பொதுக் கூட்டம் முடித்து. தண்ணீர் குடித்து விட்டு புரண்டு, புரண்டு படுத்தும் உறக்கம் பிடிக்கவில்லை.

காலை கடலூர் புதுச்சத்திரம் வேறு செல்ல வேண்டும். ஏதோ மனக்குழப்பம். யோசித்தேன். 17 புத்தகத் திருவிழா துவங்குகிறது. நன்கொடை தருவதாக சொன்னோம், தரவில்லை. ஏற்பாடு செய்ய வேண்டும்.

இந்தப் புத்தகக்காட்சிக்கு வேறு என்ன செய்யலாம்?. நேரடியாக களம் இறங்கினால், விழாக் குழுவினருக்கு அரசு ஒத்துழைப்பு குறைந்து விடும். உதவி செய்யலன்னாலும், உபத்திரம் செய்யாம இருப்போம் என முடிவெடுத்தேன்.

அப்போது தான் ஒரு மின்னல் வெட்டு. நீண்ட நாட்களாக நலம் விரும்பிகள் சொல்வது போல, ஒரு புத்தகம் போடும் யோசனை இருக்கிறதே, அதை இப்போது செய்தால் என்ன என்ற எண்ணம் உதித்தது.

நம்ம ஊரில் அரங்கேற்றுவது தானே சரியாக இருக்கும். நான் சிறு குழந்தையாக தவழ்ந்த ஊர் அரியலூர் தான். இங்கேயே நம் புத்தகமும் தவழட்டுமே. அதுவும் முதல் புத்தகக்காட்சியில் என்றால், காலமெல்லாம் நினைவிருக்கும். முடிவெடுத்தாகி விட்டது. உருக் கொடுக்க வேண்டும்.

புதுச்சத்திரம் சென்று அன்றைய பொழுது கழிந்துவிட்டது. அன்று ஜூலை 1. எஞ்சி இருப்பது 16 நாட்கள்.

ஜூலை 2, 
கழகத் தோழர் இல்ல நிகழ்ச்சி. மாலை உட்கார்ந்து பிளாகில் ஆராய்ச்சியில் இறங்கினேன். எந்தப் பதிவுகளை அச்சுக்கு தெரிவு செய்யலாம் என்ற ஆராய்ச்சி. மாலை துவங்கி அதிகாலை 2.00 வரை போராட்டம். குறிப்பிட்ட சில பதிவுகளின் தலைப்புகளை நோட்டில் குறிப்பெடுத்தேன்.

ஜூலை 3. 
காலையில் எழுந்ததும் எப்படி பதிப்பிக்கலாம் என்ற அடுத்த பிரச்சினை. சொந்தமாக பதிப்பிப்பதா அல்லது பதிப்பகம் மூலமாகவா. முதல் புத்தகம், பதிப்பகம் மூலம் வெளியிடுவதே நல்ல அறிமுகமாக அமையும் என முடிவெடுத்தேன்.

எந்தப் பதிப்பகம் என்றதும் விகடன், நக்கீரன், கிழக்கு நினைவுக்கு வந்தன. இவர்கள் தான் எளிய மக்களிடம் உடனே ரீச் ஆகக் கூடியவர்கள்.

இதில் விகடன், என் செய்திகளை வெளியிடவே தயங்குகிறவர்கள், புத்தகத்திற்கா ஒப்புக் கொள்வார்கள்.

அடுத்து நக்கீரன். என் சட்டமன்ற விமர்சனங்களை வெளியிட்டு, என் எழுத்தை வெகுசனங்களிடம் கொண்டு சென்றவர்கள். கேட்டால், ஒப்புக்கொள்வார்கள். ஆனால், திமுக எம்.எல்.ஏ என்பதால், நக்கீரன் புத்தகம் வெளியிட்டுள்ளது என்று போகிற போக்கில் சொல்லி விடுவார்கள். எழுத்தின் விஷயம் கவனிக்கப்படாது.

எஞ்சியிருப்பது, கிழக்கு பதிப்பகம் தான். ஆனால் அவர்கள் அறிமுகமான எழுத்தாளர்களின் புத்தகங்கள், சிறப்பான தலைப்புகள் என வெளியிடக் கூடியவர்கள். நாம் இரண்டு வகையறாவும் இல்லை. ஒரே நம்பிக்கை பத்ரி சேஷாத்ரி அவர்கள் என் முகநூல் நண்பர்.

ஒரு முறை சட்டமன்ற நடவடிக்கை குறித்து நான் எழுதி இருந்ததை படித்து விட்டு, "இதே தான் நடக்குதா? அலுப்பாக இல்லையா?" என்று கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு நான் ஒரு நீண்ட பதிலை ஸ்டேடசாகவே போட்டிருந்தேன். அது 2013 ஏப்ரலில்.

இரண்டு வருடங்கள் கழித்து நினைவிருக்குமா என்று சற்றே குழப்பம். இருந்தாலும் முயற்சிப்போம், என ஜூலை 3 மாலை முகநூல் தனிச்செய்தியில் தகவல் அனுப்பினேன்.

"சார்,
வணக்கம். நான் சிவசங்கர், சட்டமன்ற உறுப்பினர், குன்னம் தொகுதி.
முகநூலில் உங்கள் நட்பு வட்டத்தில் இருக்கிறேன். நினைவு இருக்கும் என நினைக்கிறேன்.
வரும் 17ஆம் தேதி எங்கள் அரியலூரில் புத்தகக்காட்சி துவங்குகிறது. ஒரு திடீர் ஆசை. எனது முகநூல் பதிவுகளில் சிலவற்றை தொகுத்து புத்தகமாக வெளியிட ஆசை.
தங்களது கிழக்கு பதிப்பகம் மூலம் வெளியிட விருப்பம். அதற்கு வாய்ப்பு உண்டா?
வாய்ப்பு இருப்பின் மேற்கொண்டு தொடர்பு கொள்கிறேன். நன்றி."

இரவே பதில் வந்தது, "செய்யலாம். ஆனால் மிகக் குறைவான கால அவகாசமே உள்ளதே... நாளைக் காலை இது குறித்துப் பேசுவோமா? "

ஜூலை 4. 
அண்ணன் ஆ.ராசா அவர்களது பெரம்பலூர் மாவட்ட சுற்றுப்பயணம்.
சுற்றுப்பயணத்தின் இடையே, நான் பத்ரியை தொடர்பு கொள்ள அவர் பிஸி.

ஜூலை 5. 
படத்திறப்பு நிகழ்ச்சிகள், தலைவர் பிறந்தநாள் கபடிப் போட்டிகள் என நாள் முழுதும் நிகழ்ச்சிகள்.

இன்று அவர் எனக்கு குறுஞ்செய்தி அனுப்ப, என்னால் தொடர்பு கொள்ள முடியவில்லை.

ஜூலை 6. 
இன்றும் அண்ணன் ஆ.ராசா அவர்களது நிகழ்ச்சிகள்.

மதியம் பத்ரி தொடர்பு கொள்ள, நான் கிராமத்தில் இருந்தேன், சிக்னல் இல்லை, சிக்கல்.

இன்னும் எஞ்சி இருப்பது 10 நாட்கள், இது வரை பத்ரி அவர்களிடம் பேசவே இல்லை. நம்பிக்கை குறைந்தது.

மாலை நண்பர் செல்வம் இதை அறிந்து, அடுத்த முயற்சி எடுக்கலாம் என்றார். வேறு என்ன, சொந்தப் பதிப்பகம் தான். இரவு உட்கார்ந்து, ஒவ்வொரு பதிவாக எடுத்து மெயில் போட்டேன். இரவு 10.30க்கு துவங்கி அதிகாலை 01.30 ஆனது.

சென்னையில் 11 பேர் கொண்ட குழு தன் பணியை துவங்கியது.

ஜூலை 7.

"அண்ணா, என்ன ஃபாண்ட் இது? அலைன் பண்ண முடியல..."

புத்தகத்த டிராப் பண்ணிடுவோமா ?

(தொடரும்...)

புத்தகத் திருவிழா

ஒரு நாள் பேராசிரியர் க.இராமசாமி அலைபேசியில் அழைத்தார்கள். "அரியலூரில் புத்தகத் திருவிழா நடத்த திட்டமிடுகிறோம். உங்களை எப்போ சந்திக்கலாம்?". "அய்யா, நானே வந்து பார்க்கிறேன். நீங்க அலைய வேண்டாம்"என்றேன்.

நீண்ட நாட்களாக எல்லோரும் 'இப்படி ஒன்று நடக்காதா?" என்று எதிர்பார்த்திருந்த விஷயம். பெரம்பலூரில் கடந்த சில ஆண்டுகளாக புத்தகத் திருவிழா சிறப்பாக நடந்து வருகிறது. காரணம் மாவட்ட ஆட்சியர் தாரேஷ் அகமது.

செந்துறையில் கழக நிகழ்ச்சியில் இருக்கும் போது, திடீரென விழாக் குழுவினர் வந்தார்கள். பேராசிரியர் க.இராமசாமி, பெரியவர் சீனி.பாலகிருஷ்ணன், புலவர் இளங்கோ என புத்தகத் திருவிழா ஏற்பாடு செய்கின்ற குழுவினர்.

அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளி திடலில் அரங்கம் அமைக்க இருப்பது, பபாசி அமைப்புடன் பேசியிருப்பது, நிதி பிரச்சினை என விவரித்தார்கள்.

"பெரம்பலூர் போல நிகழ்ச்சிக்கு உதவ பெரிய கல்வி நிறுவனங்கள் இல்லை. இங்கிருக்கும் பெரிய தொழிலகங்கள் தாமாக முன் வரமாட்டார்கள். யாராவது அதிகாரத்தில் உள்ள ஒருவர் மூலமாக தொடர்பு கொள்ளுங்கள்" என்றேன்.

"ரிட்டயர் ஆன ஆளுங்களுக்கு வேற வேலை இல்லையா? இதெல்லாம் நடக்கற வேலையா?" என்று கிண்டல் அடித்தவர்கள் உண்டு. உதவி செய்யாமல் குதர்கம் பேசியவர்களும் உண்டு. ஆனால், அவர்கள் தங்கள் பணி தொடர்ந்தார்கள்.

பேராசிரியர் இராமசாமி, மைசூர் பல்கலைக்கழகத்தில் மொழியியல் துறையில் பணியாற்றியவர். அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி கிராமத்தை சேர்ந்தவர். செம்மொழி ஆய்வு நிறுவனத்தின் செயல் அலுவலராக, தலைவர் கலைஞர் முதல்வராக இருக்கும் போது நியமிக்கப்பட்டு, சிறப்புற பணியாற்றியவர்.

பெரியவர் சீனி.பாலகிருஷ்ணன் அரியலூர் மாவட்டம் அமைய போராட்டக் குழு தலைவராக இருந்து பணியாற்றியவர். பொது வேலைகளில் முன் நிற்பவர். புலவர் இளங்கோ தொடர்ந்து கல்வி பணியாற்றுபவர்.

இவர்கள் எல்லாம் இரண்டு மாத காலம் தங்கள் சொந்தப் பணியை போல் இதே பணியாக இருந்தனர். உழைப்பிற்கான பலன் இருக்க வேண்டும். அதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

நாளை 17.07.2015 முதல் 26.07.2015 வரை அரியலூரில் புத்தகத் திருவிழா. முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் துவக்கி வைக்கிறார்கள்.

நான் கடலூர் தளபதி நிகழ்ச்சி பணிகளில் இருந்ததால், தொந்தரவு செய்ய வேண்டாம் என்று விட்டுவிட்டார்கள். ஆனால் மக்கள் பிரதிநிதியாக விட்டு விட முடியுமா?. இரண்டு நாட்களுக்கு முன், சென்று நிதி அளித்தேன். திருவிழா குறித்த சுவரொட்டியை எமது “பெரியார் அறிவு மய்யம்” சார்பாக ஏற்பாடு செய்துள்ளேன். நம் பங்கு.

ஒவ்வொருவரும் அவரவர் பங்காக திருவிழாவில் பங்கேற்று புத்தகம் வாங்கினால் போதும். பொது நலமும் சிறக்கும், சுய நலமும் சிறக்கும்.

# புத்தகம் வாசித்தால் புது “அகம்” மலரும். வாசிப்போம் !

வியாழன், 16 ஜூலை, 2015

கள்ளிக்காட்டு காதற் காற்றே !

எங்கள் கவி தேசத்தின் கருப்பு ராஜ குமாரனே. ஆம், நீ உடுத்தும் உடையும், நடக்கும் நடையும், மீசை முறுக்கும், பேச்சு நறுக்கும், ஊடுருவும் பார்வையும், தேனூறும்  வார்த்தையும்  உன்னை ஓர் ராஜகுமாரனாய் தான் நிலை நிறுத்திக் கொள்கிறாய்.

வடுகப்பட்டியில் கிளம்பும் போதே முடிவெடுத்துக் கொண்டாயா? பேயத் தேவரின் உடை சிக்கனத்தை உடைத்து, தனக்கென ஒரு தனி உடை அடையாளத்தை ஏற்படுத்திக் கொள்வதென. பால் உன் உடையோடு தன்னை ஒப்பிட்டு பார்த்துக் கொள்வதாய் கேள்வி.

ரஜினி நடையை சிலாகித்து பாடல் எழுதுவாய், ஆனால் உன் நடையை நாங்கள் ரசிக்கிறோம். சிவாஜி நடைக்கும், ரஜினி நடைக்கும் மத்தியிலே இது ஒரு தனி ரகம். மனக் கேமராவில் ஓட விட்டு பார்த்து அடியை எடுத்து வைப்பாயோ.

போருக்கு கிளம்பும் வீரனைப் போல் முறுக்கிய மீசை. சின்ன சின்ன சிறு வயது ஆசையில் இது ஒன்றோ. தாவணிக்கு நல்ல தலைவனாய் காதல் மொழி உன் பேனாவில் ஊற்றெடுக்கையில் இது வித்தியாசமாய்  தான் இருக்கிறது.

மேடை ஏறிவிட்டால் உன் பேச்சு மகுடியாகி விடுகிறதே, எதிரே இருப்போரை மயக்கிப் போடுகிறதே. அழுத்தம் திருத்தமாய் நீ தமிழை உச்சரிக்கையில், அந்தத் தமிழே மெல்ல மயங்கித் தான் போய் விடும்.

ஊடுருவி, சிணுங்கி, சிரித்து, முறைத்து, கம்பீரம் காட்டி உன் பேச்சை ஒட்டி நடமிடுகிறதே உன் கண்கள். சினிமாவில் நடிக்கப் போயிருந்தால், உன் கண்களை காட்டியே ஒரு பாடலை முடித்திருப்பார் பாரதிராஜா.

ஒவ்வொரு வார்த்தையையும் எங்கிருந்து பிடிக்கிறாய்? கவிதையாகட்டும், பாடலாகட்டும், கட்டுரையாகட்டும், பேச்சாகட்டும் மது சுமந்து வருகிறதே உன் வார்த்தைகள். கேட்டவன் சொக்கித் தான் போகிறான்.

கவிஞன் என்றால் இப்படி எல்லாம் இருக்க முடியாது என்பதை மறுத்து,  திருத்தமாயும், மிடுக்காயும், முடுக்காயும், நறுக்காயும், நறுவிசாயும், நயமாயும் இருந்து காட்டுகிறாய். எல்லாவற்றிலும் வித்தியாசம் நீ.

கவிஞர்கள் பாடலாசிரியராய் பரிணமிப்பது சிரமம். பாடலாசிரியர் கட்டுரையாளராய் மிளிர்வது குறைவு. கட்டுரையாளர் நாவலாசிரியராய் வெல்வது அரிது. நாவலாசிரியர் பேச்சாளராய் முத்திரை பதிப்பது கடிது. நீ எல்லா பரிணாமமும் எடுக்கிறாய்.

# கள்ளிக்காட்டு காதற் காற்றே வாழ்க நீ !