பிரபலமான இடுகைகள்

ஆண்டிமடம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆண்டிமடம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 14 செப்டம்பர், 2013

எம்.எல்.ஏ-வே 16 ரூட்டு கேக்கறார்...( தொடர்ச்சி )

அந்தத் திட்டம்....(தொடர்ச்சி)

வழக்கமாக  அரசு பேருந்துகளுக்கு புதிய ரூட் போடும் போது, டெப்போவில் இருந்து கிளம்பும் பேருந்துகள் எந்த ஊருக்கு செல்கிறதோ, அங்கிருந்து திரும்ப டெப்போ இருக்கும் ஊர் வரை வந்து செல்வது போல ரூட் போடுவது வழக்கம். அப்போது தான் டைம்கீப்பர் மூலம் கண்காணிக்க முடியும், டெப்போவிற்கு வந்து பராமரிக்க முடியும் என்பது அதிகாரிகள் மனப்பான்மை.

நான் கேட்ட ரூட்கள், செந்துறை ஒன்றியத்தில் உள்ள சன்னாசிநல்லூர், வாளரக்குறிச்சி ஆகிய கிராமங்களுக்கு புதிய வழி தடம். வீராக்கன், நாகல்குழி கிராமங்களுக்கு டவுன் பஸ்ஸே கிடையாது, அதற்கு டவுன் பஸ் கேட்டிருந்தேன். செந்துறையை திட்டக்குடி மெயின் ரோடிற்கு  இணைக்க வேப்பூர் ஒன்றியத்தில் உள்ள துங்கபுரம் கிராமத்திற்கு நக்கம்பாடி, நமங்குணம் வழியாக டவுன் பஸ் கேட்டிருந்தேன். (ஒவ்வொரு ரூட்டிற்கும் தனி விளக்கம் எழுதலாம்.)

இதற்கு தனித் தனியாக ரூட் போட்டு பஸ் ஒதுக்கினால், 4 பஸ்கள் தேவை. அப்போது தான், வழக்கப்படி அரியலூருக்கும் அந்த கிராமங்களுக்கும் இடையில் பேருந்து இயக்க முடியும். இதை நான் ஒரே பேருந்தை கொண்டு அனைத்து ஊருக்கும் ரூட் போட்டுக் கொடுத்தேன்.

நான் அரியலூர் டெப்போவிலிருந்து கிளம்பும் பேருந்தை செந்துறையை மையமாக கொண்டு நான்கு கிராமங்களுக்கு சென்று வருவது போல ரூட் போட்டேன். மதியம் ஓட்டுனர், நடத்துனர் டியூட்டி மாற்ற ஒரு முறையும், மெயிண்டெனன்ஸுக்கு இரவு ஒரு முறையும் டெப்போவிற்கு செல்லவும் மட்டும் அரியலூர் செல்வது திட்டம்.

இதே போல் ஜெயங்கொண்டம் டெப்போவிலிருந்து ஆண்டிமடம் ஒன்றிய 4 கிராமங்களுக்கு ஒரு பேருந்து. முள்ளுக்குறிச்சி, காடுவெட்டி, மாத்தூர், நாகம்பந்தல்(தற்போது இந்த ஊர் இயங்கவில்லை) ஆகிய  ஊர்களுக்கு.
  
அரியலூரிலிருந்து செந்துறை வரும் பேருந்து, 1.செந்துறை சன்னாசிநல்லூர் செந்துறை, 2.செந்துறை துங்கபுரம் செந்துறை, 3.செந்துறை வாளரக்குறிச்சி செந்துறை, 4.செந்துறை நாகல்குழி ஜெயங்கொண்டம் நாகல்குழி செந்துறை என நான்கு வழி தடங்களில் சென்று வரும்.



மதியம் அரியலூர் சென்று வந்து மீண்டும் இதே வழித் தடங்களில் பயணிக்க திட்டம். அவர்கள் வழக்கப்படி விட்டால் ஒவ்வொரு முறையும் செந்துறையிலிருந்து அரியலூர் சென்று வர வேண்டும். அதை அப்படி சேர்த்து படித்துப் பாருங்கள்.

இது அவர்கள் நடைமுறையில் இல்லாததால் தயங்கினார்கள். “இது நம்ம கார்ப்பரேஷனில் டிரை பண்ணதில்ல. பிராஞ்சிற்கு வந்து போவது போல ரூட் போடறது வழக்கம். “வேற பிராஞ்சில் இருக்கா ?. “தெரியலிங்க சார்.

சென்னை போன்ற லாங் ரூட் போற பஸ்லாம் ஒரு நாளைக்கு ஒரு நடை தானே டெப்போவுக்கு வரும் ? எனக் கேட்டேன். ஆம்என்றார்கள். இதுவும் அது மாதிரி தான் என்றேன். பதில் இல்லை.



மறுநாள் அந்த கிராமங்களில் புதிய பேருந்து இயக்க விழா.

# ரூட் கிளியர் !

செவ்வாய், 6 நவம்பர், 2012

முந்திரிக்காட்டு வீரப் பெண்மணி...



இன்று கழகத் தோழர் ஒருவரது தாயார் மறைவையொட்டி படத்திறப்பு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. கழகத் தோழர் இல்ல நிகழ்ச்சி என்ற அளவிலே கலந்துக் கொண்டு படத்தை திறந்து வைத்தேன். உள்ளூர்காரர்கள் பேசும் பொழுது தான் அவரது பெருமை புரிந்தது.

அது ஆண்டிமடம் அருகில் இருக்கும் வல்லம் கிராமம். ஒரு காலத்தில் தமிழ் தேசிய இயக்கத்தின் தலைமையகம். அந்த கிராமத்தை சுற்றியுள்ள முந்திரிக் காடுகளை உள்ளூர் மக்களுக்கு பயனில்லாமல், அரசு வனத் துறை அதிகாரிகள் சுரண்டித் தின்னக் காலம்.

உள்ளூர் மக்கள் பயன் பெறும் வகையில் நடைமுறை மாற்றியமைக்கப் பட வேண்டும் என மக்கள் குரல் கொடுக்கத் துவங்கினர். அதற்கான போராட்ட்த்திற்கு இயக்கத்தினர் வியூகம் வகுத்து தந்தனர்.

காவல்துறை இதை காரணம் காட்டி ஊரில் உள்ள அனைவரையும் “ நக்சலைட்டுகள் “ என முத்திரை குத்தத் துவங்கினர். வழக்குகள் புனையப்பட்டன. அந்த ஊருக்கு மட்டும் அறிவிக்கப் படாத நெருக்கடி நிலை.

ஒரு கட்டத்தில் ஊரிலுள்ள ஆண்கள் தலைமறைவாக வேண்டிய சூழல். பெண்கள் தான் குடும்பப் பொறுப்பையும் சுமக்க வேண்டும், தலைமறைவாக இருக்கிறவர்களுக்கும் உதவ வேண்டும்,காவல்துறையையும் எதிர் கொள்ள வேண்டிய நிலை.

அந்த நேரத்தில் தலைமறைவாக இருந்த முண்ணனித் தோழர்களுக்கு, தாய் பாசத்தோடு உணவு சமைத்து கொடுத்தவர் இந்த “ சின்னப் பிள்ளை அம்மாள் .

காவல்துறைக்கு பயப்படாமல், உணவு தயாரித்து, முந்திரி காட்டுக்குள் கொண்டு போய் கொடுத்து, அவர் காட்டிய பாசத்தை, அந்தப் போராட்டத்தில் ஈடுபட்டு, இன்று மிச்சம் இருக்கின்ற தோழர்கள் பதிவு செய்தனர்.

சித்தாந்தம் புரிந்தவரல்ல, இயக்கத்தில் இருந்தவரல்ல, ஆயுதம் ஏந்தியவரல்ல, வழக்கில் சிக்கியவரல்ல ஆனால் அவர் நூறு சதவீதம் “ போராளி “. உரிமைக்கு போராடியவர்களுக்கு உயிர் கொடுத்த போராளி !

அவரது மகன் இயக்கப் பணியாற்றியவர், இன்று கழகத் தோழர்.


# “ சின்னப் பிள்ளை அம்மாள் படத்தை திறக்கக் கிடைத்த வாய்ப்பிற்கு பெருமைப் பட்டேன். இந்த மண்ணில் பிறந்ததற்கு கர்வப்பட்டேன்.