மன்னர் மெய்காவல் படை சூழ அரண்மனையின் பெருவழி நுழைவாயிலில் நுழைந்தார். வழக்கம்போல் அயல்தேச பயணம் முடித்து வந்தார். இரண்டாம் சுற்று அரண் தாண்டியது படை. மன்னர் மேனியெங்கும் வியர்வைத் திவலைகள். தார்பாய்ச்சு வேட்டி, மேல்துண்டு அணிந்து , அதன் மேல் மார்கவசம் தரித்திருந்தார். விதவிதமான உடை உடுத்துவதில் ஆர்வம் உள்ளவர் மன்னர்.
அந்தப்புரம் நுழைந்த உடன் நெசவுக்காரரை அழைத்து வர உத்தரவிட்டார். "உலகில் வேறு யாரும் உடுத்தாத ஆடை தயாரித்து வா", என உத்தரவிட்டார். அடுத்த நாள் அரசவை கூடியது. நெசவாளி வந்தார், ஒரு ஆடையை கொடுத்தார்," சரியில்லை". மறுநாள் " இன்னும் சன்னமாய் வேண்டும்". அடுத்த நாள்," உடுத்தியிருப்பதே தெரியக் கூடாது". நெசவாளியால் முடியவில்லை. ஆனால் மன்னரின் கோபம் பயமுறுத்தியது.
அடுத்த நாள் நெசவாளி மிக மகிழ்ச்சியாய் வந்தார். "மன்னா, இது உலகிலேயே இதுவரை தயாரிக்கப்படாத ஆடை. பிரத்தியேகமானது. உடுத்தியிருப்பதே தெரியாது. கண்ணுக்கே புலப்படாது. உத்தமர் கண்ணுக்கு மாத்திரமே தெரியும்", என்று வெறும் கையை காட்டினார் நெசவாளி. மன்னர் மகிழ்ந்து போனார். " சபாஷ், இதைத் தான் எதிர்பார்த்தேன்", என்றார்.
மன்னரை உடையை களைய சொன்ன நெசவாளி, வெறுங்கை கொண்டு அலங்கரித்தார். அறைக்கு வெளியே இருந்த மெய்காப்பாளர்கள் இதைக் காதில் வாங்கிக் கொண்டிருந்தார்கள். வெளியில் வந்த உடன் மன்னர் கேட்டார்,"உடை எப்படி?". தெரியவில்லை என்று சொன்னால் உத்தமர் இல்லை என்று விடுவார்களே என அவர்களும் "பிரம்மாதம்" என்றனர்.
சற்று தள்ளிக் காத்திருந்த நிதியமைச்சர், "இது என்ன கோலம்" என கேட்பதற்குள் மெய்காவல் தலைவன் எச்சரித்தான். அவரும், "அருமையான உடை" என சிலாகித்தார். எல்லோரும், தான் உத்தமன் அல்லாத காரணத்தால், தம் கண்ணுக்கு உடை தெரியவில்லை என நினைத்துக் கொண்டார்கள்.
அதற்குள் நகரில் செய்தி தீயென பரவி விட்டது. மன்னர் நகர்வலம் கிளம்பினார். மந்திரி பிரதானிகள் புடைசூழ நடை பயின்றார். மன்னரின் பிரத்யேக உடை காண மக்கள் ரத வீதியின் இருமருங்கிலும் கூடியிருந்தனர். மன்னரின் உடை கண்டு துணுக்குற்றனர். ஆனால் யாருக்கும் வெளியில் சொல்ல பயம். முகமன் கூறி ஒதுங்கி வழி விட்டனர்.
மன்னரின் நகர்வலம் முடியும் தருவாய். ஒரு பாடசாலையை கடந்தார்கள். பாடசாலை வளாகத்துள் இருந்த ஒரு சிறுவன் நாக மரத்தின் மீதேறி மரத்தை உலுக்கிக் கொண்டிருந்தான். கீழே அவன் நண்பர்கள் பழத்தைப் பொறுக்கிக் கொண்டிருந்தனர். எதேச்சையாக வீதியை பார்த்தான். "ஏ, ராஜா துணியில்லாம போறாரு" என்று கூச்சலிட்டான். மன்னர் திரும்பிப் பார்த்தார்,"சின்ன வயதிலேயே உத்தமனாக இல்லாமல் போய் விட்டானே" என வருத்தப்பட்டார்.
மன்னர் அரசவை நுழைந்தார். பேரிகை முழங்கியது. "ராஜாதிராஜ ராஜகுஜராத்த ராஜடிஜிட்டல ராஜகேஷ்லெஸ்ஸ ராஜதுக்ளக்க ஜாடிராஜா வருகிறார். பராக், பராக், பராக் !". "ஜெய்ஹிந்த், ஜெய்ஹிந்த், ஜெய்ஹிந்த்" ஜெயகோஷங்கள் முழங்கின.
மன்னர், "பாவம் அந்த சிறுவனை பார்த்தீர்களா. சிறு வயதிலேயே என்ன தவறு செய்தானோ? உத்தமனாக இல்லாமல் போனானே" என்று விசனப்பட்டார். "மன்னா, அந்த சிறுவன் சிவசங்கர். சில்மிஷக்காரன். அவன் ஒரு தேஷ் துரோகி. அவனை சிறையிலடைத்து, அபராதம் விதிக்க வேண்டும்" ,என்றார் நிதியமைச்சர் இட்லீ. "இல்லை. விதியை ஒரு நொடி முன் திருத்தியாகி விட்டது. அவனை நாடு கடத்த வேண்டும்", என்றார் மந்திரி பூண்டையா.
துள்ளிக் குதித்தேன், தலையில் நாட்காட்டி இடித்தது. அய்ம்பது நாட்கள் கடந்திருந்தன. கதறினேன்.
# எனக்கும் இப்ப தெரியுது - புது இந்தியா !