பிரபலமான இடுகைகள்

திங்கள், 24 ஜூலை, 2017

கல்லூரி சீனியர் தங்கம் தென்னரசு

"தம்பி, நானே கூப்பிட இருந்தேன். கூப்பிட்டுடீங்க. கும்பகோணத்தில் இருந்து கிளம்பப் போறேன்", அண்ணன் தங்கம்.தென்னரசு அவர்கள், அலைபேசியை எடுத்தவுடன் சொன்னார்.

இன்று (22.07.2017) கங்கைகொண்டசோழபுரத்தில் , "தொல்லியல் கழகம் 27 ஆம் ஆண்டு கருத்தரங்கம்" நடைபெற்றது. அதில் கலந்து கொள்ள அண்ணன் வந்தார். முன்னாள் அமைச்சராக அல்ல, தொல்லியல் ஆர்வலர் என்ற அடிப்படையில் அழைக்கப்பட்டிருந்தார். அண்ணன் கோமகன், உள்ளூர் செயலாளராக இருந்து நிகழ்ச்சியை நடத்தினார்.

அண்ணன் தென்னரசு அவர்கள், பாண்டியன் ஆய்வு மையத்தின் நிறுவனர், வரலாற்று ஆர்வலர். அந்த வகையில், இன்றைய விழாவில் "ஆவணம்" நூலை வெளியிட்டு சிறப்பிக்க அழைக்கப் பட்டிருந்தார்.

நான் அரியலூரில் இருந்து கிளம்பி செல்வதற்குள், அண்ணன் வந்து விடுவாரோ என பதற்றம். ஒன்றிய பொறுப்பாளர் மணிமாறனை, ஜெயங்கொண்டம் குறுக்குசாலையில் காத்திருக்க சொல்லி இருந்தேன்.

நான் போய் சேர்வதற்குள் வந்து விட்டார் அண்ணன். மணிமாறன் உள்ளிட்ட கழகத் தோழர்கள் வரவேற்பளித்தனர். நான் வரவில்லை என்றவுடன், அருகே இருந்த கழகத் தோழர் ராஜயோகத்தின் குறுகலான இடத்தில் அமர்ந்து விட்டார்.

எனக்காக காத்திருந்திருக்க வேண்டிய அவசியமில்லை. அவர் தொடர்ந்து வந்திருந்தால், எதிரில் வந்த நான் அவருடன் இணைந்திருப்பேன். ஆனாலும் காத்திருந்தார். "வாங்க, வாங்க சங்கர்", என்று வரவேற்றார், உள்ளூர்காரர் போல.

அண்ணன் அரசு அவர்களுக்கு நூல்கள் பரிசளித்தேன். அவருக்கு விருப்பமான பறவைகள் குறித்த நூல் "பறவைகளும் வேடந்தாங்கலும்", வண்ணதாசன் நூல் மற்றொன்று. நூல்களை கண்டாலே அண்ணன் முகம் மலரும், இன்றும்.

நான் செல்வதற்கு முன்பாகவே கழகத் தோழர்களோடு பேசிக் கொண்டிருந்தவர், பேச்சை தொடர்ந்தார். "சங்கர் சபைக்கு வராததை சில நேரங்கள்ல உணர்கிறேன்" என்று என் சபை செயல்பாடுகளை சொல்லி நெகிழ்வாக்கி விட்டார். கழகத் தோழர் பக்கத்தில் இருந்த டீக்கடையில் வாங்கி வந்து அளித்த டீயை மகிழ்வாய் அருந்தினார்.

நிகழ்ச்சி குருவாலப்பர்கோவில் மீரா மகாலில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சென்றடைந்தோம். முழுதும் தொல்லியல் அறிஞர்கள், தொல்லியல் துறையில் பணியாற்றியோர், ஆர்வலர்கள் என அது வேறொரு உலகமாக இருந்தது.

அண்ணன் அரசு அவர்களை கண்டதும் ஒரு பரபரப்பு. உறவினரை கண்டது போல எல்லோரும் வரவேற்றனர். அமைச்சராக இருந்தவர் என்பதே தெரியாத அளவிற்கு பழகுபவர் என்பது கழகத் தோழர்களுக்கு தெரியும். ஆனால் அங்கும் அதே பாங்கு தான்.

ஒவ்வொருவரையும் தனித்தனியாக பெயர் சொல்லி பேச, அவர்களுக்கு அளவு கடந்த மகிழ்ச்சி. தமிழகத்தின் தொன்மை சின்னங்களை கண்டறிந்து, அவற்றை சீரமைக்கும் பணியில் ஈடுபடும், முகநூலில் இயங்கும் சகோதரர் சசிதரனை பார்த்தவுடன் கைகுலுக்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். "வீர சோழன் அணுக்கப் படை" என டீ-சர்ட் அணிந்திருந்த அந்தத் தோழர்களுக்கும் மகிழ்ச்சி.

தனவேல் ஐ.ஏ.எஸ், தொல்லியல் அறிஞர் சுப்பையா என ஒரு அறிஞர் பட்டாளமே குவிந்திருந்தது. மேடையில் அமர அண்ணன் தென்னரசு அவர்களை முதலில் அழைத்தனர். வழக்கமான அரசியல்வாதிகள், நடுவில் உள்ள நாற்காலியில் தான் அமர்வார்கள். ஆனால் இவர் ஓர் ஓரமான நாற்காலியாக பார்த்து அமர்ந்தார், மற்றவர்களை நடுவில் அமர்த்தினார்.

"ஆவணம்" நூலை அண்ணன் தென்னரசு வெளியிடுவார் என்று அறிவித்தார்கள். வெளியிடுவதற்காக காகிதத்தில் கட்டப்பட்டு, அங்கு இருந்த பல்வேறு புத்தகக் கட்டில் ஆவணத்தை தேடி எடுக்க நேரமாகியது.

"நூல் வெளியிடுவது எவ்வளவு சிரமம் என்பது இப்போது தான் புரிந்தது. தயாரான நூலையே வெளியிட இவ்வளவு நேரமாகிறது. அதிலும் இது தொல்லியல் நூல், அதனாலும் அதிக நேரம்" என நகைச்சுவை உணர்வோடு உரையை துவங்கியவர், கல்வெட்டுகள், தொல்லியல் ஆய்வுகள் குறித்து ஒரு அறிஞருக்கான பார்வையோடு உரையாற்றினார்.

அடுத்த அவர் மாவட்டத்தில் இருக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உடனே புறப்பட வேண்டிய அவசரம். இருந்தாலும், இன்னும் இருவர் பேசும் வரை அமர்ந்திருந்து, பிறகே கிளம்பினார்.

ஒரு அரசியல் முக்கியத்துவம் இல்லாத நிகழ்ச்சியாக இருந்தாலும், நிகழ்ச்சியின் முக்கியத்துவம் உணர்ந்து, தன் வரலாற்று ஆர்வத்தின் அடிப்படையில், அறுநூறு கிலோமீட்டர் பயணித்து நிகழ்ச்சிக்கு வந்து சென்றதன் மூலமும், அங்கு அவரது செயல்பாட்டின் மூலமும் எனக்கு சில பாடங்களை நடத்திச் சென்றார் அண்ணன் தென்னரசு.

# கல்லூரி சீனியரிடம் கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது !

வியாழன், 20 ஜூலை, 2017

நண்பன் ஓவியர் சத்தியசீலன் !

நண்பன் சத்தியசீலன் ஓர் ஒவியக் கண்காட்சி வைக்கிறார் என்ற உடன் மகிழ்வுடன் கிளம்பினேன். ஏற்கனவே என்னை தன்னுடைய வரைப்பட்டியில் (டேப்லட்டில்) வரைத்து அனுப்ப, அதனை முகப்பு படமாக வைத்து மகிழ்ந்தேன்.

அசோக் லேலண்ட் நிறுவனத்தில் வடிவமைப்பு பிரிவில், மிக முக்கியப் பொறுப்பில் பல்வேறு பணி நெருக்கடிக்கு இடையில் இருந்தாலும், கலையை உயிராக நினைப்பவர், அதற்கு பெரும் நேரம் செலவிடுபவர். பாடல், இசை, இலக்கியம் இத்தோடு ஓவியம். என் பள்ளி, கல்லூரி நண்பன்.

அவ்வப்போது அவர் வடிவமைப்பு செய்த வாகனங்களின் படங்கள், இயற்கை ஓவியங்கள், நண்பர்கள், திரை ஆளுமைகளின் படங்களை வரைந்து அனுப்புவார். ஆனால் ஓவியக் கண்காட்சி நடைபெறும் இடம் வேறு மாதிரியான ஓவியங்களுக்கான இடம்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் இருக்கும்,  Focus art gallery. அந்த சாலையில் பயணிக்கும் போது, இங்கு மாடர்ன் ஆர்ட் கண்காட்சிகள் நடக்கும் விளம்பரங்கள் பார்த்த நினைவு.

புதுமை ஓவியங்களை பல பக்கங்களில் இருந்து பார்த்து அர்த்தம் கண்டு பிடிக்க முயலும் பாமர ரசிகன் நான். இங்கு சத்யாவின் படங்களும் அதே புதுமை ரகம். 15.07.2019 அன்று துவக்க நாள்.

அன்று சென்றேன். "சத்யா, இது..." , என்று நான் துவங்கும் முன்னே சத்யா உணர்ந்துக் கொண்டார். கை உயர்த்தி என்னை அமர்த்தினார். "நீ பாருண்ணே. உனக்கு என்ன தோணுதோ, அது தான் அர்த்தம், அது தான் ஓவியம்", என்றார்.

நான் பார்த்த முதல் ஓவியமே என் மனதில் அறைந்தது.  கருப்பு வெள்ளை படமாக, ஒரு துக்கத்தில் உறைந்த முகம். கண்களில் தேங்கிய சோகமும், நெளிந்த உதடுகளும் ஏதோ ஒரு சொல்ல முடியா சோகத்தை அழுத்தி சொன்னது.

அடுத்து வண்ணமயமாக ஓர் ஓவியம். கூர்ந்து கவனித்தால், திமிறி நிற்கும் காளையும், அடக்கத் துடிக்கிற காளையுமாக ஜல்லிக்கட்டுக் காட்சி. சூழ்ந்த இளஞ்சிவப்பு நிறப்பு நிறம், ஜல்லிக்கட்டின் கொதி நிலைக்கு குறியீடோ. இப்படி நானாக சிந்தித்து, ஒரு வழியாக புதுமை ஓவியக்கலை ரசிகனாக தயாரானேன்.

ஒரு ஓவியம் முழுதும் கோடுகளாலும், அதன் முடிச்சுகளாலும் பின்னப்பட்டிருந்தது. அது புத்தராக இருக்கும் என்பது என் அனுமானம். இன்னொரு ஓவியம் , ஒரு முகம் கீழ் நோக்கிப் பார்த்துக் கொண்டிருந்தது. மேலும், கீழுமாக வண்ண வண்ண சுழிகள், வளையங்கள். அது அவதார் படத்தின் வரைகலை முகமாக தோன்றியது.

இங்கே இணைத்திருக்கும் கருப்பு, வெள்ளைப் படம் எனக்கு சத்தியமாக புரியவில்லை என்பதையும் ஒப்புக் கொள்ளத் தான் வேண்டும்.

ஒரு சுற்று முடித்து வந்தேன். எங்களது கல்லூரி நண்பர்கள் ரவீந்திரன், சீனுவாசன், கங்காதரன், குமரன் வந்திருந்தனர். துவக்க நிகழ்ச்சிக்கு வந்திருந்த புகழ்பெற்ற ஓவியர் 'டிராட்ஸ்கி மருது' அவர்களை அழைத்து என்னை அறிமுகம் செய்து வைத்தார் சத்யா. இந்த நிகழ்ச்சிக்கு சென்றிருக்காவிட்டால், எனக்கு மருது அவர்களது அறிமுகம் கிடைத்திருக்காது.

"இந்த நிகழ்ச்சி மூலமா உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. என் நண்பர் மூலமா கிடைத்த வாய்ப்பு", என்றேன். அவர் சொன்ன பதில் மிக சிறப்பு. "வழக்கமா இங்க நடக்கிற ஓவியக் கண்காட்சிக்கு இவ்வளவு பேர் வரமாட்டாங்க. ஓவியம் தொடர்புடையவர்கள் தான் வருவாங்க. சத்யா நிகழ்ச்சி என்பதால், பெரிய அளவில் திரண்டிருக்கீங்க. இதுவே ஒரு வெற்றி. உங்களை போன்றோர் வந்தது மகிழ்ச்சி", என்றார். எளிய மக்களிடம் புதுமை ஓவியக் கலையை கொண்டு சேர்த்திருக்கிறார் நம்ம ஆள் சத்யா.

ஜெயங்கொண்டத்தில் இருந்து வந்திருந்த சத்யாவின் தாய், தந்தையருக்கு எல்லையில்லா மகிழ்ச்சி. நிச்சயம், அந்த ஓவியங்கள் அவர்களுக்கு புரிந்திருக்காது. ஆனால் தன் மகனின் கலையை ரசிக்க இவ்வளவு பேர் வந்திருக்கிறார்கள் என்ற மகிழ்ச்சி, அவர்கள் முகத்தில் தாண்டவமாடியது.

சத்யாவுடன் வாகன வடிவமைப்புத் துறையில் பணிபுரியும் பல உயர் பொறுப்பில் இருந்தோர் வந்திருந்தனர்.  ஆங்கிலேயர் ஒருவரும் வந்திருந்தார். அவரிடம் சத்யா தன் தாயை அறிமுகப்படுத்தினார். "சத்யா சில்ரன் , நோ பிளே. ஒன்லி ஆர்ட்" என தனக்கு தெரிந்த ஆங்கிலத்தில் சத்யாவின் தாய், தன் மகன் குறித்து மகிழ்வாய் பேச எல்லோருக்கும் நெகிழ்ச்சி.

பழச்சாறு தட்டு வந்தது. வந்த உடன் பச்சை நிறத்தில் இருந்த சாறு கொடுத்தார்கள், அது என்ன சாறு என்று தெரியவில்லை. இப்போது இளஞ்சிவப்பு நிறத்தில். தர்பூசணி சாறு, கடைசி சொட்டு வரை ருசித்தது எளிமையாய். சத்யாவின் ஓவியத்தை போலவே. "Flow it in", "உள்ளீடு பரவல்" என்பது காட்சியின் தலைப்பு. சாறும், ஓவியமும் உள்ளீடு பரவல் நிகழ்த்தியது.

நடிகரும், ஓவியருமான நடிகர் சிவக்குமார் பார்வையிட்டு பாராட்டியிருக்கிறார்.

# ஓவிய உலகத்தில் சத்யா, உலகப் பார்வை படட்டும் !

கிராம சுகாதாரத்தை பாதிக்கும் நீட்

இன்று கர்நாடகா, நாளை தமிழகம்...

கர்நாடக மருத்துவத் துறை, உயர்கல்வி பயின்ற மருத்துவர்களுக்காக தத்தளிப்பதை இன்றைய 'ஆங்கில இந்து' நாளிதழ் முதல் பக்க செய்தியாக்கியுள்ளது.

சிறப்பு மருத்துவர்களை பணியமர்த்த திணறிய கர்நாடக மருத்துவத்துறை, இணையம் வாயிலாக பணியமர்த்த முடிவு செய்து அறிவித்தது.

ஒரு இளம் மயக்கவியல் நிபுணர், மாதம் ரூபாய் மூன்றரை லட்சம் ஊதியம் கேட்டுள்ளார். அவரது அனுபவம் ஒரு வருடம் தான். இப்படி மற்ற மருத்துவர்களும் கேட்ட தொகை, துறை செலவு செய்ய திட்டமிட்டுள்ள தொகையை விட அதிகம்.

மிகக் குறைவாக ஒரு மருத்துவர் கேட்டுள்ள தொகையே ரூபாய் ஒன்றரை லட்சம். அவரும் வட்டார அளவிலான பொது மருத்துவமனையில் பணிபுரிய மறுக்கிறார்.

இதே நேரத்தில் இன்னொரு செய்தியையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய நிலையில் உள்ளோம். தும்கூரு மாவட்ட மருத்துவமனையில் 26 ஆண்டுகால அனுபவத்தோடு பணிபுரியும் மயக்கவியல் நிபுணர் பெறும் சம்பளம் ரூபாய் ஒரு லட்சத்து பத்தாயிரம்.

இந்த வித்தியாசம் இப்போது பணியில் இருக்கும் அரசு மருத்துவர்களிடம் எதிர்ப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கும் தமிழகத்திற்கும் என்ன தொடர்பு என எண்ணலாம்.

தமிழகத்தில் வரும் ஆண்டுகளில் ஏற்படப் போகும் நிலை வேறு. ஆரம்ப சுகாதார நிலையங்களில் இப்போது போதுமான அளவு இளநிலை மருத்துவர்கள் (எம்.பி.பி.எஸ் படித்தவர்கள்) இருக்கிறார்கள். ஆனால் வரும் காலங்களில் பணிபுரிய இளநிலை மருத்துவர்களே இல்லாமல் திண்டாடும் நிலை வரும்.

காரணம், முதுநிலை மருத்துவப் படிப்பிற்கு கொண்டு வரப்பட்டுள்ள நீட் தேர்வு. ஏற்கனவே முதுநிலை மருத்துவப் படிப்பிற்கு  விண்ணப்பிப்பவர்களில் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு இருந்தது.

அதனால் முதுநிலை மருத்துவம் படிக்க விரும்புபவர்கள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரிந்து கொண்டே படித்து தேர்வு எழுதுவார்கள். இதனால் கிராமப்புற மக்கள் எளிதாக மருத்துவ வசதி பெற்றனர்.

அவர்கள் அரசுப் பணியில் பணியாற்றும் ஆண்டுகளுக்கு ஏற்ப மதிப்பெண்கள் வழங்கப்படும். இதன் காரணமாக கிராமப்புறங்களில் இருக்கும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்ற மருத்துவர்கள் முன் வந்தார்கள். இதை மருத்துவர்கள் 'சர்வீஸ் கோட்டா' என்பார்கள். நீட்டால் இந்த இடஒதுக்கீடு பறி போய் விட்டது. இதற்காகத் தான் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் மருத்துவர்கள் கடந்த மாதங்களில் போராடினார்கள்.

சில மருத்துவர்கள் இந்த இட ஒதுக்கீட்டை காக்க நீதிமன்றத்தை நாடினார்கள். நீதிமன்றம் இதன் பிற்கால தாக்கத்தை உணராமல், இந்த இட ஒதுக்கீட்டை ரத்து செய்துவிட்டது.

இந்த வருடம் இளநிலை மருத்துவர்கள், முதுகலை படிப்பிற்காக கொச்சின், டெல்லி, சென்னை என 'கோச்சிங்  கிளாஸ்'க்கிற்காக படையெடுப்பார்கள்.

அரசு மருத்துவர்களுக்கு, இடஒதுக்கீட்டு இல்லை என்ற நிலையில் அரசு மருத்துவப் பணிக்கு ஆள் இல்லாத நிலை ஏற்படும்.

அடுத்து முதுநிலை மருத்துவப் படிப்பிற்கான இடங்களை நீட் தேர்வின் அடிப்படையில் நிரப்புவதில் அடுத்த சிக்கல் வந்து விட்டது. முதுநிலை மருத்துவ படிப்பில் பாதி இடத்தை வெளி மாநிலத்தவர்கள் ஆக்கிரமித்து விடுவார்கள் எதிர்காலத்தில்.

தமிழகத்திலும், தென் மாநிலங்களில் இருக்கும் அளவு எண்ணிக்கையிலான மருத்துவ படிப்பு இடங்கள், வட மாநிலங்களில் கிடையாது.

இதை விட மோசம் உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளின் நிலை. கல்லூரிக்கு ஓரிரு இடங்கள் தான் இருக்கிறது. அதையும் அடித்து பிடுங்குகிறார்கள்.

அடிப்படை கட்டமைப்பை மேம்படுத்தி, தொலை நோக்கோடு திட்டம் வகுத்து, உருவாக்கப்பட்ட மருத்துவ கல்லூரிகளில் இருக்கும் முதுநிலை மருத்துவப் பட்டப் படிப்பு இடத்தை தான் அவர்கள் அபகரிக்கிறார்கள். கஷ்டப்பட்டு நாம் உருவாக்கியதை திருடுவது தான் இது.

நான் உமி கொண்டு வருகிறேன், நீ அரிசி கொண்டு வா. இரண்டையும் ஒன்றாகக் கலந்து ஊதி, ஊதி ஆளுக்கு பாதியாக சாப்பிடுவோம், கதை தான் இது.

உடனே சிலர் தகுதி, மெரிட் என குதிப்பார்கள்.

பெரு நகரத்தில், பெரும் பணம் கொடுத்து பயிற்சி எடுத்து விட்டு இங்கு வந்து படிக்கும் அயல் மாநிலத்தவர்கள் இங்கு பணிபுரிய மாட்டார்கள். அவர்கள் மாநிலத்திற்கு ஓடியே போய் விடுவார்கள்.

மெரிட்டில் படித்து விட்டு ஓடிப்போக இருப்பவர்களை விட , படித்து விட்டு இங்கேயே பணிபுரியும் நம் மாநிலத்து மருத்துவர்கள் போதும்.

நாம் உருவாக்கிய இடத்திற்கு தான் நாம் உரிமை கோருகிறோம். நம் மாநில சுகாதாரம் காக்க தான் நீட்டிற்கு எதிராக குரல் கொடுக்கிறோம்.

# தமிழக மக்களின் சுகாதாரம் காக்க, நீட்டை எதிர்ப்போம் !

வியாழன், 13 ஜூலை, 2017

கவிராஜன் கதை

'என் ஜன்னலின் வழியே'
பார்த்துக் கொண்டிருந்தேன்
மெல்ல பூங்கதவு தாழ்திறந்தது

அந்திமழை பொழியப் போகிறதென
'இதனால் சகலமானவர்களுக்கும்' அறிவிக்கப்பட்டது

'இந்த குளத்தில் கல் எறிந்தவர்கள்'
வாருங்கள் என்றழைத்து 'கல்வெட்டுகளி'ல்
அவர்தம் பெயர் பொறித்தான்

அவன் சொன்னது இவை
'என் பழைய பனை ஓலைகள்'
நவீன அலைபேசி செயலிகளை வீழ்த்துகின்றன

கண்ணதாசனுக்கு பிறகு சோர்ந்துகிடந்த
திரைத்தமிழுக்கு 'ரத்ததானம்' ஈந்தான்

தம்மை படைத்த தமிழை
'சிற்பியே உன்னை செதுக்குகிறேன்' என செதுக்கி, செதுக்கி அழகுப்படுத்தினான்

'இந்த பூக்கள் விற்பனைக்கல்ல'
என அவன் சொன்னாலும்
அவன் பாடல்களை விருது கொடுத்து
வாங்கியன அரசுகள்

இவன் தந்த சின்ன,சின்ன ஆசை
'இன்னொரு தேசிய கீதம்' ஆனது
பூங்காற்று திரும்புமா
'கருவாச்சி காவியம்" ஆனது

'வைகறை மேகங்கள்' திரட்டி
'பெய்யென பெய்யும் மழை'
பொழியச் செய்து
'தண்ணீர் தேசம்' கட்டியவன்

ராசையாவோடு முரண் வந்த நேரம் அது
'ஒரு போர்களமும் இரண்டு பூக்களும்'

'எல்லா நதியிலும் என் ஓடம்' என
'வடுகப்பட்டி முதல் வால்கா வரை'
துடுப்பு போட்டுக் கொண்டிருக்கிறான்

'கொஞ்சம் தேநீர் நிறைய வானம்'
என ஓய்வெடுங்கள் என்றாலும்
'வில்லோடு வா நிலவே' என்று
கவிப்போருக்கு கிளம்பி விடுவான்

சமீபகாலமாக
'காவி நிறத்தில் ஒரு காதல்'-ஓ
சந்தேகம் கூடுகட்டியது
இல்லை,இல்லை
'என் மௌனத்தின் சப்தங்க'ளும்
திராவிடம் தான் பேசும் என்றான்

திரை 'வானம் தொட்டுவிடும் தூரம் தான்'
பறந்தே விடுவான் என்றெண்ண
என் 'கொடி மரத்தின் வேர்கள்'
இலக்கிய மண்ணில் தானென்று
முரசறைந்தான்

'இதுவரை நான்'
'ஒரு கிராமத்துப் பறவையும் சில கடல்களும்' என பறந்தவன்
ராஜாளியாய் 'பாற்கடல்' வென்றான்

அவ்வப்போது புத்துணர
'மீண்டும் என் தொட்டிலுக்கு' என
தேனீமண் தவழ்வான்

நெஞ்சத்து 'கேள்விகளால் ஒரு வேள்வி'
நடத்தி
'கள்ளிகாட்டு இதிகாசம்' கண்டான்

'நேற்று போட்ட கோலம்' அல்ல
இந்த 'கவிராஜன் கதை'
இது பழம் தமிழை
'திருத்தி எழுதிய தீர்ப்புகள்'

# 'தமிழுக்கு நிறம் உண்டு'; வடுகப்பட்டி கருப்பு !

( '--' குறிக்குள் இருப்பவை கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய நூல்கள். இன்று கவிப்பேரரசு பிறந்தநாள்)

__எஸ்.எஸ்.சிவசங்கர்

புதன், 12 ஜூலை, 2017

அனிதாவின் எம்.பி.பி.எஸ் கனவு

அனிதாவின் எம்.பி.பி.எஸ் கனவு.

அனிதா குழுமூர் கிராமத்தை சேர்ந்தவர். குழுமூர் கிராமம், அரியலூர் மாவட்டம் செந்துறை ஒன்றியத்தில் உள்ள ஊர். ஒடுக்கப்பட்ட மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் ஊர். அனிதாவும் ஒடுக்கப்பட்ட இனத்தை சேர்ந்தவர். ஓட்டு வீடு தான் சொந்தம். வேறு எந்த சொத்தும் இல்லாதக் குடும்பம்.

குழுமூரில் அந்த காலத்தில் துவங்கிய கிறித்துவ மிஷனரிப் பள்ளி உண்டு. அது தான் அந்த சுற்று வட்டாரப் பகுதியின் ஏழை மக்களுக்கு கல்வி அளிக்கும் பள்ளி.

அந்தப் பள்ளியில், தன் உயர் நிலைக்கல்வியை பெற்றார் அனிதா. 10ம் வகுப்பில் அனிதா பெற்ற மதிப்பெண்கள், அவரை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது.

பத்தாம் வகுப்பில் அனிதா பெற்ற மதிப்பெண்கள் 478. கணிதத்தில் 100, அறிவியலில் 100, சமூக அறிவியலில் 99. தமிழில் 96, ஆங்கிலத்தில் 83 மதிப்பெண்கள் எடுத்தார்.

இந்த மதிப்பெண்ணிற்கு அருகில் இருக்கும் தனியார் பள்ளியில் கட்டண சலுகையில் இடம் அளித்தார்கள். இதை விட ஒரு முக்கியக் காரணம் அந்தப் பள்ளியில் சேர்த்ததற்கு உண்டு.

அந்தக் காரணம்,  இவர்கள் வீட்டில் கழிப்பறை கிடையாது என்பதே. ஏழை குடும்பத்திற்கு படுக்க இடத்தோடு வீடு இருப்பதே பெரிய விஷயம் தானே. இதனாலேயே ஹாஸ்டல் வசதி கொண்ட பள்ளியில் சேர்க்கப்பட்டார்.

+2 விலும் நல்ல மதிப்பெண்கள் பெற்றுள்ளார் அனிதா. இயற்பியலில் 200, வேதியியலில் 199, உயிரியலில் 194. கணிதத்தில் 200, தமிழில் 195, ஆங்கிலத்தில் 188 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

கடந்த ஆண்டு போல +2 மதிப்பெண்கள் அடிப்படையில் கலந்தாய்வு நடந்திருந்தால் அனிதா தேர்வுப் பெற்றிருப்பார். காரணம் அவரது கட் ஆப் மதிப்பெண் 196.5. அதிலும் சிறந்த மருத்துவக் கல்லூரியிலேயே இடம் கிடைத்திருக்கும்.

ஆனால் நீட் தேர்வால் அனிதாவின் கல்வி எதிர்காலம் பறிக்கப்பட்டிருக்கிறது.  நீட் தேர்வு எழுதினார். பெற்ற மதிப்பெண் 86. அனிதாவின் மருத்துவப் படிப்பு கனவு, மத்திய அரசால் கருக்கப் பட்டிருக்கிறது.

இன்று நடைபெற்ற நீட் தேர்வு எதிர்ப்பு போராட்டத்தில் அண்ணன் மணிரத்தினத்தோடு வந்து கலந்து கொண்டார் அனிதா.

"நீட் தேர்வு கோச்சிங் போனீயாம்மா ?", என்று கேட்டேன். " இல்லீங்க. போகலை". "அப்பா என்ன பண்றார்ம்மா?". " திருச்சி காந்தி மார்க்கெட்டில் மூட்டை தூக்குறாரு". இந்த சூழலில் அவர் செலவு செய்து கோச்சிங் போக வாய்ப்பே இல்லை.

குழுமூர் கிராமத்தில் பிழைப்பாதாரம் இல்லாமல், திருச்சி காந்தி மார்க்கெட்டில் மூட்டை தூக்குகிறார் சண்முகம். நான்கு மகன்கள், ஒரு மகள். உழைத்து நான்கு மகன்களுக்கும் கல்லூரி கல்வி வழங்கி விட்டார்.

உடன் வந்திருந்த அண்ணன் மணிரத்தினம் சமூக செயற்பாட்டாளர். பொதுப் பிரச்சினைகளுக்காக என்னை அணுகக் கூடியவர். குடிமைத் தேர்வு பயிற்சிக்காக சென்னயில் பயில்பவர்.

மணிரத்தினத்திடம் கேட்டேன், "அப்பாவும் திருச்சியில், நீங்க எல்லோரும் படிக்கிறீங்க. அம்மா தான் அனிதாவுக்கு துணையா ?". அவரது பதில் அடுத்த இடி. "அம்மா இறந்து பத்து வருஷமாச்சி அண்ணா".

ஒடுக்கப்பட்ட இனம். அம்மா இறந்துவிட்டார். அப்பா வெளியூரில் கூலி வேலை. ஒண்டுக் குடித்தன ஓட்டு வீடு. அதிலும் கழிப்பறை வசதி கிடையாது. இந்த சூழலிலும் இவ்வளவு மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார் அனிதா.

கல்வி மாத்திரமே எதிர்காலம் என்று உணர்ந்து பன்னிரண்டு ஆண்டுகள் படித்து, பத்தாம் வகுப்பில் இருந்து பன்னிரண்டாம் வகுப்பு வரை உயிரைக் கொடுத்துப் படித்து, +2ல் உயர்ந்த மதிப்பெண்கள் பெற்று மருத்துவப் படிப்பு கிடைக்கும் என்றிருந்த அனிதாவின் வயிற்றிலும், வாழ்விலும் அடித்திருக்கிறது இந்த முரட்டு முட்டாள் மத்திய அரசாங்கம்.

இந்த ஒரு அனிதா தான் நம் பார்வைக்கு வந்திருக்கிறார். நாட்டில் இன்னும் எத்தனை அனிதாக்களோ ?

இத்தனை பேர் வாழ்க்கையை சூறையாடிய 'மோடி' என்ன பதில் சொல்லப் போகிறார். ஆட்சி அதிகாரம் கையில் இருக்கும் இறுமாப்பில் ஏழை, எளிய கிராம மாணவர்களின் எதிர்காலத்தை அழித்து நிற்கிறார் மோடி. இந்த எளிய மக்களின் வயிற்றெரிச்சல் இவரை அதல பாதாளத்தில் வீழ்த்தும். அது வரை போராடுவோம்.

# அனிதாக்களுக்காக "நீட் தேர்வை" எதிர்ப்போம் !