பிரபலமான இடுகைகள்

வியாழன், 31 டிசம்பர், 2015

மூத்தவரை வணங்குவோம்

1977ல் தமிழகம் ஒரு ஆட்சி மாற்றம் கண்டு எம்.ஜி.ஆர் முதல்வராகிறார். அப்போது பெரம்பலூர், கரூர், அரியலூர் எல்லாம் சேர்ந்து ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டம். மாவட்டத்தில் மொத்தம் 18 தொகுதிகள்.

அதில் திராவிட முன்னேற்ற கழகம் இரண்டு இடங்களில் தான் வெற்றி பெற்றது. ஒன்று திருவெறும்பூர், வெற்றி பெற்றவர் கே.எஸ்.முருகேசன். இன்னொரு தொகுதி அரியலூர், வெற்றி பெற்றவர் அய்யா த.ஆறுமுகம்.

மீண்டும் 1980ல் எம்.ஜி.ஆர் முதல்வராகிறார். ஆனால் அரியலூர் தொகுதியில் கழகமே வெற்றி. அய்யா ஆறுமுகம் அவர்கள் தான் வெற்றி பெற்றவர். சட்டமன்றத்தில் கழகக் குரலாக கம்பீரமாக ஒலிப்பார்.

எம்.ஜி.ஆர் அவர்களே ஒரு கட்டத்தில் ஆள் விட்டு இவரை அ.தி.மு.கவிற்கு அழைத்தார். ஆனால் அய்யா மறுத்துவிட்டார். கலைஞர் தான் என் தலைவர், கழகம் தான் என் இயக்கம் என தெளிவாக சொல்லி விட்டார்.

ஆளுங்கட்சி அனுகூலங்களை சொல்லிப் பார்த்தார்கள். ஆனால் அவர் அசையவில்லை. அது தான் அய்யா ஆறுமுகம் அவர்கள். அரியலூர் ஆறுமுகம் என்று அன்றையக் காலக்கட்டத்தில் தமிழகம் முழுதும் அறிமுகம்.

இன்றும் மூத்தவர்கள் அரியலூர் என்றால் அவர் பெயரை தான் உச்சரிப்பார்கள். அரியலூர் தொகுதியில் எம்.எல்.ஏ என்றாலே அவர் பெயர் தான் மக்களுக்கு இன்றும்  நினைவு வரும்.

1984ல் மீண்டும் தேர்தல். இந்திராகாந்தி இறப்பும், எம்.ஜி.ஆர் உடல்நலக்குறைவும் தேர்தல் முடிவுகளை பாதித்தன. அரியலூர் வெற்றி வாய்ப்பு பறி போனது. ஆனால் 1989ல் அரியலூரை மீண்டும் அய்யா த.ஆறுமுகம் அவர்கள் கைப்பற்றினார்கள்.

1996ல் அரியலூர் ஒன்றியப் பெருந்தலைவர். இவரது மேடைப் பேச்சு ரசிக்க வைக்கும். தொகுதியின் ஒரு முனையில் இருக்கும் கிராமத்தில் கழக ஆட்சியில் நடைபெற்ற பணிகளை சொல்ல ஆரம்பித்து, இன்னொரு முனையில் இருக்கும் கிராமத்தில் நடைப்பெற்ற பணிகளை சொல்லி முடிப்பார்.

கழகத்தில் கிளை செயலாளர், ஒன்றிய துணை செயலாளர், ஒன்றிய செயலாளர், தலைமைச் செயற்குழு உறுப்பினர், மாவட்ட அவைத் தலைவர் என அயராமல் கழகத்திற்கும், மக்களுக்கும் பணியாற்றிக் கொண்டிருப்பவர்.

அய்யா ஆறுமுகம் அவர்களுக்கு இன்று 83வது பிறந்தநாள். நேரில் சென்று வணங்கி வாழ்த்து பெற்றோம்.

# வணங்குவோம், வாழ்த்துவோம் !

ஞாயிறு, 20 டிசம்பர், 2015

மாமழை போற்றுதும்

('அந்திமழை' டிசம்பர் மாத இதழுக்காக, சென்னை வெள்ளத்திற்கு முன்பாக எழுதியப் பதிவு )

கப்பல் செய்வது மிகப் பிடிக்கும். அதிலும் சாதாக் கப்பல், கத்திக் கப்பல், நான்கறைக் கப்பல் என பல வகைகளில் செய்வது சிறு வயது மகிழ்ச்சி. அதற்கான வாய்ப்பைத் தந்தது மழை. மழை என்றால் மகிழ்ந்து வரவேற்ற காலம்.

இன்று போல் இல்லை அன்று. அன்று வெள்ளத்தையே வரவேற்று மகிழ்ந்தது உண்டு.

அப்போது அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு திடலுக்கு பின்புறம் எங்கள் வீடு. அப்போது திடலை சுற்றி சுற்றுச் சுவர் கிடையாது. திறந்த வெளி. திடலின் ஒரு மூலையில் பெரிய புளிய மரம்.

புளிய மரத்தின் கீழ் தான் சிறு, சிறு கடைகள். ரொட்டி, மிட்டாய், நாவல்பழம், இலந்தப்பழம் என விற்கும் கடைகள். அதுவே ஒரு பேருந்து நிறுத்தமும் கூட. புளிய மரத்தின் பரந்த நிழலில் பஸ்ஸுக்கு காத்திருப்பார்கள்.

திடலை சுற்றி சுவர் இல்லாதக்  காரணத்தால், மக்கள் போக்கு வழியாகவும் பயன் படுத்துவார்கள். மக்களைப் போலவே, மழை நீரும். அதுவும் சுதந்திரமாக திடலின் உள் நுழைந்து வெளியேறும். அது அதன் சொந்த பூமி. கால மாற்றத்தில் அதன் குறுக்கே பள்ளிக் கட்டிடங்கள். இருப்பினும் கிடைத்த இடைவெளியில் புகுந்து வெளியேறும்.

அது தான் கப்பல் விட்ட அந்த "களி" காலம்.

அப்போது மழைக் காலத்தில் ஒரு நீர்நிலை நிரம்பினால், நீர் தானாக அடுத்த நீர்நிலையை தேடிச் செல்லும். யாரும் வழிக் காட்டத் தேவை இல்லை. அதன் வழியை அதுவே அறியும்.  பாரம்பரிய வழியும் உண்டு, அவசரத்திற்கு கண்டுபிடிக்கும் வழியும் உண்டு.

குட்டை நிரம்பி குளத்திற்கு செல்லும். குளம் நிரம்பி ஏரிக்குச் செல்லும். ஏரி நிரம்பி வாய்க்காலுக்கு செல்லும். வாய்க்கால் காட்டாற்றை அடையும். அங்கிருந்து ஆற்றை அடைந்து, கடலை நாடிச் செல்லும். மிகும் மழை நீரின் பயணம் இதுவே அன்று.

அப்படித் தான் ஆண்டிமடத்தின் மேற்கு மூலையில் இருக்கும் வண்ணான் ஏரி நிரம்பினால், அடுத்தப் பயணம் குறவன் குட்டை. குறவன் குட்டை நிரம்பினால், பள்ளித் திடலைக் கடக்கும். கடந்து சிவன் கோவில் திருக்குளத்தையும், குட்டக்கரையையும் நிரப்பிக் கொண்டு விளந்தை பெரிய ஏரியை சேரும்.

பெரிய ஏரி நிரம்பினால், ஓடை வழியாக இடையில் பல ஏரிகளைக் கடந்து, செங்கால் ஓடையை சேரும். அங்கிருந்து 'பொன்னியின் செல்வன்' புகழ் வீராணம் ஏரி, அங்கிருந்து வெள்ளாற்றை பிடித்து, பிச்சாவரம் அருகே கடலில் கலக்கும்.

அப்படி கடலை சென்று அடைவதற்கு முன் பல ஏரிகளை நிறைத்து, விவசாயிகளின் வயலையும், மனதையும் குளிர்வித்துச் செல்லும். மழை மிகுந்து வெள்ளமானால் பயிரையும் நாசம் செய்யும். ஆனால் ஊருக்குள், வீட்டுக்குள் புகுந்ததில்லை. இப்போது நிலைமை மாறிவிட்டது.

அப்போது மழை வலுக்கும் போது, விளையாட்டுத் திடல் எங்கள் விளையாட்டுக் கடல் ஆகும். தண்ணீர் வரும் பாதையில் மணலால் அணைக் கட்டி, கரிகாலனாய் ஆட்சி புரிவோம். அணையில் இருந்து வாய்க்கால் வெட்டி பொறியாளராய் பரிமளிப்போம். நீரில் அடித்து வரும் மீனை பழைய வேட்டி கொண்டு பிடித்து மீனவராய் திகழ்வோம்.

சமயத்தில் தலைப்பிரட்டையும், நத்தையும், வயல் நண்டும் வரும். காட்டாமணக்கு குச்சி ஒடித்து அவற்றை கரை ஏற்றி விளையாடுவோம். அப்படியே பாட நோட்டைக் கிழித்து கப்பல் செய்து, யார் கப்பல் நீண்ட தூரம் பயணிக்கிறது எனப் போட்டி நடக்கும்.

மைதானத்தின் ஒரு மூலையில் அறிவியல் ஆய்வகம் கட்டத் துவங்கினார்கள். அந்தப் பக்கம் வழக்கமாக நுழையும் நீர், அடுத்த வருடம் புதியப் பாதைக் கண்டுபிடித்தது. காடுவெட்டி சாலையில் செல்ல ஆரம்பித்தது.

குறவன்குட்டை தாண்டும் நீரின் பாதையில் புதிய வீடுகள் முளைத்தன. நீர் கடைவீதிக்கு வந்தது. கடைவீதி சேறும், சகதியுமானதால் வடிகால் வாய்க்கால் கோரிக்கை வந்தது. கான்கிரீட் வாய்க்கால் கட்டப்பட்டது.

இதனால், துவக்கமான வண்ணான் ஏரியில் இருந்து வரும் நீரின் பாதை  குறுகியது. அது வேறு வழி தேடியது. பக்கத்தில் இருந்த வாரச் சந்தை தாழ்வான பகுதி. எளிதாக நுழைந்தது. சந்தையை ஒட்டி இருந்த குடியிருப்புகளையும் விட்டு வைக்கவில்லை வெள்ள நீர். அப்புறம் வெள்ள நிவாரணம் கொடுக்க வேண்டி வந்தது.

நீரின் பாதையை மறித்ததால், மக்கள் வாழ்க்கை பாதிப்பு, அரசு பணிக்கும் நெருக்கடி.  அது ஒரு புறம். இன்னொரு புறம் பால்ய பக்கங்களை காணவில்லை. ஊரின் அடையாளம் மாறிப் போனது.

இப்போது பள்ளித் திடலில் நீரின் தடமே இல்லை. திடலை சுற்றி காம்பவுண்ட் சுவர். உள்ளே நீர் நுழையப் பாதை இல்லை. புளியமரம் இல்லை. புளியமரத்து கீழ் இருந்த கடைகள் இல்லை. இயற்கையானப் பேருந்து நிறுத்தமும் இல்லை.

இன்றைய சிறுவர்களுக்கு மீன் பிடிக்கும் வாய்ப்பும் இல்லை, நத்தை ஓட்டும் வாய்ப்பும் இல்லை, மணல் அணைக் கட்டுகிற வாய்ப்பும் இல்லை, வாய்க்கால் வெட்டும் வாய்ப்பும் இல்லை. மொத்தத்தில் நீர் விளையாட்டே மறைந்து போனது, மறந்துப் போனது.

சமீபத்து மழை வெள்ள நாள். மகன் சொன்னான்,"அப்பா, பிளாட்ஃபார்ம் வரைக்கும் தண்ணி நிக்குது". நான் சொன்னேன், "நோட்ட கிழிச்சு, கப்பல் செஞ்சு விட்டுப் பாருப்பா. நாம் கப்பல் படை வைத்திருந்த ராஜேந்திர சோழன் மண்ணை சேர்ந்தவர்கள்".

இயற்கையின் பாதையை மறிக்க, மறிக்க அது புதியப் பாதை வகுக்கும்.

# மாமழை போற்றுதும், மாமழை போற்றுதும்


வெள்ளி, 18 டிசம்பர், 2015

ஊருக்கு உழைத்தவருக்கு மரியாதை

"காலையில் ஒன்பது மணிக்கு தளபதி அவர்களை சந்தித்து வாழ்த்து வாங்குவதாக திட்டம். ஆனால் ஒரு மணிக்கு தளபதியே அவரை பார்க்க வர்ற நிலைமை ஆயிடுச்சே", சொல்லும் போதே வழக்கறிஞர் அண்ணன் கண்ணதாசனுக்கு கண்ணீர் கட்டுப்படாமல் ஓடுகிறது.

இன்று (18.12.2015) சென்னை வந்த உடன் வழக்கறிஞர் கவிகணேசன் இடமிருந்து குறுந்தகவல். "நமது ஆரோக்கியதாஸ் அண்ணன் நம்மை விட்டு பிரிந்து விட்டார்". அலைபேசியில் அழைத்தேன். "போஸ்ட்மார்ட்டம் முடியப் போகுது அண்ணா", என்பதை கூட அவரால் சொல்ல முடியவில்லை. உடைந்து அழுகிறார்.

திருவொற்றியூர் நோக்கி பயணித்தேன்.  ஆகஸ்ட் மாதம் தான் அவரை சந்தித்தேன். அண்ணன் கண்ணதாசன் அவர்களோடு ஆய்வுப் பணிக்கு வந்தார் அண்ணன் தாஸ், திருவொற்றியூர் நகர துணை செயலாளர். இரண்டு முறை கவுன்சிலராகப் பணியாற்றியவர். இவர் மீண்டும் கவுன்சிலராகக் கூடாது என்பதற்காக, பெண்கள் வார்டு ஆக மாற்றப்பட்டது.

மிக எளிமையான மனிதராக இருந்தார். இரண்டு நாட்கள் அங்கு இருந்ததில் எங்களோடு அன்னியோன்யமாகி விட்டார்.

"நீங்க அமைச்சர் கே.பி.பி.சாமி அழைப்பில் திருவொற்றியூரில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது பார்த்தேன். அதில் இருந்து உங்கள் சட்டமன்ற உரைகளை படிப்பேன். என் மகள் உங்கள் பேஸ்புக் தகவல்களை காட்டுவார். சென்னை வரும் போது அவசியம் வீட்டுக்கு வர வேண்டும்" என அழைப்பு விடுத்தார். "எனக்கும் திருவொற்றியூருக்கும் தொடர்பு நீடிக்குது. அவசியம் வர்றண்ணே",என்றேன்.

ஆனால் இப்படி அவர் வீட்டுக்கு செல்ல நேரிடும் என நினைக்கவில்லை. திருவொற்றியூர் அடைந்தேன். கடற்கரைக்கு எதிர்புறம். ஆம்புலன்ஸ் வந்தது. ஓ' வென்று அழுகுரல். சாலையில் இருந்து பிரியும் சிறுசந்து. இரண்டு பேர் சென்றால் உரசிக் கொண்டு தான் செல்ல வேண்டும்.

பெரும் கூட்டம். தாஸ் அண்ணன் இளைய  மகள் ப்ரீஸர் பெட்டி மீது ஓங்கி அறைந்து அழுது கொண்டிருந்தார். மூன்று மகள்கள். பெண்கள் கூட்டம்  தலையில் அடித்துக் கொண்டு அழுதவாறு இருந்தனர். "தாஸு, புள்ளையோல இப்படி விட்டுட்டு போயிட்டியே", ஒரு பெண்மணி கதறினார்.

அண்ணன் பொள்ளாச்சி உமாபதி கலங்கிய கண்களோடு மாலை வைத்தார். நிற்க இடமில்லை. வெளியில் வந்தோம். இளைஞர் கூட்டம். வருபவர்களுக்கு வழி ஏற்படுத்திக் கொடுத்தனர். உழைக்கும் மக்கள் வாழும் இடம். அண்ணன் தாஸ் மீதான அந்த மக்களின் பேரன்பு வெளிப்பட்டது.

அண்ணன் கண்ணதாசன் அடுத்த தெருவிற்கு அழைத்து சென்றார். ஒரு தளம் கொண்டப் பழையக் கட்டிடம். அதன் மொட்டை மாடியைக் காட்டி,"இங்கிருந்து தான் விழுந்து விட்டார். ஓடுகளை நகர்த்தும் போது, காலை பின்புறம் தவறி வைத்திருக்கிறார்".

ஒரு முதிர்ந்த இஸ்லாமியப் பெண்மணி,"தாஸு விழுந்தப்ப நாங்க தான் இருந்தோம். இந்தக் கல்லு மேல தான் தலை பட்டுடிச்சி. நாங்க வந்து தூக்கிப் பாத்தோம். ஆனா...", என்று சொல்லும் போதே அவருக்கு கண்கள் குளமானது.

"வெள்ளம் வந்தப்ப காலையிலேயே பால் பாக்கெட்டோடு, இடுப்புயர நீரில் என்னைப் பார்க்க ஆதிகுருசாமியோட வீட்டுக்கு வந்துட்டார். அப்புறம் சமைச்சு எடுத்துக்கிட்டு நாங்க போய் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு கொடுத்தோம்"என்று அந்தப் படங்களைக் காட்டினார் அண்ணன் கண்ணதாசன்.

"வெள்ளப் பணிகளில் இறந்துப் போன மாணவன் இம்ரான் பக்கத்து தெரு தான். என் கிட்ட அத சொல்லி வேதனைப் பட்டார் தாஸ். நாங்க தான் அத மீடியாவுக்கு தெரிவிச்சோம். தளபதிக்கு சொல்ல சொன்னார். தளபதி ஆறுதல் கூற வந்தாங்க. தன் மகள் நகையை அடமானம் வச்சி, அந்தக் குடும்பத்துக்கு அம்பாதயிரம் ரூபா குடுத்தாரு தாஸ். இவ்ளோ நல்ல மனசு கொண்ட மனுஷனுக்கு இப்படி ஒரு நிலைமை", அதற்கு மேல் அண்ணன் கண்ணதாசனால் பேச முடியவில்லை.

இப்போது வீட்டிலிருந்து அவரது உடலை பொது இடத்தில் கொண்டு வந்து வைத்தார்கள். சுற்றிலும் சவுக்குக் கட்டையால் கழகத் தோழர்கள் பேரிகார்ட் அமைத்திருந்தார்கள். அந்த ஏற்பாடுகளே, அவரை அந்த எளிய மக்கள் எப்படி ஒரு தலைவனாக வரித்திருக்கிறார்கள் என்பது புரிந்தது.

# ஊருக்கு உழைத்தவருக்கு ஊரே கூடி மரியாதை செய்தது

வியாழன், 17 டிசம்பர், 2015

முறுக்கு பாய்

சர்புதீன் அலைபேசியில் பதற்றமாக பேசினார்," நம்ம கட்சிக்காரர் ஒருவர் ரயில் ஆக்சிடெண்ட்ல இறந்துட்டார். திருச்சியில் போஸ்ட்மார்ட்டம் நடக்குது. மாலை உடல் செந்துறை வந்துடும். வந்துட்டு போங்க".

அவர் இருந்தப் பதட்டத்தில் இறந்தவர் யார் என்பதை கூறவில்லை. ஞாயிற்றுக்கிழமை. துறையூர், திருமானூரில்  இரண்டு திருமணங்களில் கலந்துக் கொண்டு, வேப்பந்தட்டை ஒன்றிய செயலாளர் நல்லதம்பி  தாயார் மறைவிற்கு இறுதி அஞ்சலி செலுத்த சென்ற போது தான் இந்த அழைப்பு.

அன்று அது ஒன்பதாவது இறப்பு செய்தி. மற்ற இடங்களுக்கு சென்று மாலை வைத்து இறுதி அஞ்சலி செலுத்தி விட்டு செந்துறையை அடையும் போது இரவு மணி 7.00. உடல் அடக்கம் முடிந்து அவர்கள் இல்லத்தார் வீடு திரும்பிய நேரம்.

காரில் இருந்து இறங்கி, சந்தில் நடந்தோம். "யார் இறந்தது ?" என்று கேட்டேன். "நம்ம முறுக்கு பாய்" என்றார் உடன் வந்த சர்புதீன். நினைவு கூர்ந்து பார்த்தேன், எனக்கு புரியவில்லை. அதற்குள் சந்தின் இறுதியை அடைந்தோம்.

எளிமையான ஓட்டு வீடு. வீட்டுக்கு வெளியில் மரத்தடியில் நாற்காலி போடப்பட்டிருந்தது. அவரது உறவினர்கள் இருந்தனர். "எப்படி விபத்து நடந்தது". "திருச்சி ஜங்சனுக்கும் பொன்மலை ஸ்டேஷனுக்கும் இடையில் நடந்திருக்கு. எப்படி விழுந்தார்னு தெரியல".

"கால்ல ரயில் ஏறியிருக்கு. மற்ற பயணிகள் பார்த்துட்டு போலீஸில் சொல்லி தான் போய் பார்த்திருக்கிறார்கள். அப்புறம் எங்களுக்கு தகவல் வந்து போனோம்"என்றார் அவரது உறவினர்.

நான் வந்துள்ளதை கேள்விப்பட்டு வந்த அண்ணன் சின்னத்தம்பி, "நம்ம முறுக்கு பாயா செத்து போனது?. எனக்கு தெரியாம போச்சே. ரயில்ல ஏறுனா, முறுக்கு விக்கிறாரோ இல்லையோ, கட்சிய பத்தி தான பேசிகிட்டு இருப்பாரு. தலைவர யாராவது குறை சொல்லிட்டா சண்டை தான்" என்றார்.

உடன் வந்த பாஸ்கர்,"காலையில் எழுந்து கிளம்பிடுவாரு. பக்கத்துல ஆபிஸ் இருக்கறதுன்னால பார்த்திருக்கேன். நான் கூட வேலையில் இருக்கிறாருன்னு நினைச்சேன். அப்புறம் தான் முறுக்கு வியாபாரம்னு தெரிஞ்சுது. கையில் தினகரன் பேப்பரோடு போவாரு".

"பல நாள் பாசஞ்சர்ல பார்த்திருக்கேன். கட்சிப் பேச்சு தான்", என்றார் பைலட் பழனிசாமி. "ஒரு கூட்டம் விடமாட்டாரு. கடைசி வரிசைல தான் உக்காருவாரு",என்றார் சர்பு. முகத்தை யோசித்துப் பார்த்தேன். வரவில்லை.

சந்தின் அடுத்த முனையில் சாலை பக்கம் பார்த்து ப்ளெக்ஸ் பேனர் தெரிந்தது. போகும் போது, அதில் முகம் பார்க்க வேண்டும் என நினைத்தேன்.

வீட்டினுள் இருந்து ஒரு இளைஞர் வந்தார். "இவர் தான் அவர் மருமகன். ஒரு பொண்ணு, ஒரு பையன். பையன் வெளிநாட்டில் இருக்கிறார்"என்றார் சர்பு.

வணங்கிய மருமகன்  சொன்னார், "வீட்டில் இருந்தார்னா கலைஞர் டிவி சேனல் தான் ஓடனும். அவர் உடலுக்கு பக்கத்தில் கிடந்த அவர் மணி பர்ஸ எடுத்துப் பார்த்திருக்காங்க. பத்துப் படம் கலைஞர் படம் தான் இருந்திருக்கு". என்ன சொல்வதென்றே புரியவில்லை.

சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து, ஆறுதல் கூறி கிளம்பினேன். மறக்காமல் பேனரைப் பார்த்தேன்.  செந்துறை பகுதியில் இரண்டாவது முறை சட்டமன்ற உறுப்பினர், மாவட்டச் செயலாளர்  நான். ஆனால் என் கண்ணில் பட்டதே இல்லை இவர். "சையது முகம்மது கனி".

"யார் கிட்டயும் எதுக்கும் வரமாட்டாரு. தான் உண்டு, யாவாரம் உண்டு. ஆனா கட்சியும், கலைஞரும் உயிர். அவர் பாட்டுக்கு பிரச்சாரம் பண்ணிகிட்டு இருப்பாரு", என்றார் சர்பு.

# "முறுக்கு பாய்"கள் தான் கழகத்தின் அடித்தளக் கற்கள் !

புதன், 16 டிசம்பர், 2015

காலம் எல்லாம் களங்கம்

அடுத்தவர் சிரமத்தில் இருக்கும் போது தானாக சென்று உதவுவது தான் மனிதாபிமானம். அப்படி உதவ மறந்து நிற்பவன் மனிதன் அல்ல, மரம். மனிதனே இப்படி என்றால், ஒரு இயக்கம் உதவுவதையே கடமையாகக் கொண்டிருக்க வேண்டும்.

இந்த பேரழிவில் தனிமனிதர்களும் இயக்கங்களும் தங்கள் கடமையை சிறப்பாக இன்னும் ஆற்றிக் கொண்டிருப்பதை நாடறியும். தனி மனிதர்களின் பங்கே கூடுதல். மழை வலுத்து, வெள்ளம் பெருத்து சென்னை மூழ்கிய போது யாரும் உதவி கேட்டு கோரிக்கை விடுக்கவில்லை, யாரும் உதவச் சொல்லி அறிக்கை விடவுமில்லை.

ஆனால் அடுத்த நொடியே எல்லோரும் களத்தில் குதித்து விட்டார்கள். அவரவரால் முடிந்த உதவியை செய்தார்கள். தண்ணீரில் மூழ்கிய முதல்தளத்துக்காரர்களை, இரண்டாம் தளத்துக்காரர்கள் தங்கள் வீட்டில் தங்க வைத்தார்கள்.

பக்கத்து வீட்டுக்கு சாப்பாடு சமைத்துக் கொடுத்தார்கள். பால்பாக்கெட் வாங்கி, தெரு முழுதும் கொடுத்தார்கள். நீரில் தத்தளித்த முதியவர்களை மேட்டுக்கு தூக்கி வந்து விட்டார்கள். அடுக்கு மாடிக் குடியிருப்பில் இருப்போர், வீடிழந்தவர்களுக்கு உதவி செய்தார்கள். குப்பத்து மனிதர்கள் தான் மாடிகளில் சிக்கியோரை வெளிக் கொணர்ந்தார்கள்.

மீனவ நண்பர்கள் தான் செல்வந்தர்களை படகுக் கொண்டு மீட்டார்கள். பார வண்டி இழுப்பவர்கள், ஆட்டோக்காரர்கள், அய்.டியில் வேலைப் பார்ப்பவர்கள், அரசு வேலை பார்ப்பவர்கள், ஆண்கள், பெண்கள் என எல்லோரும் முடிந்த வரை உதவினார்கள். பாகுபாடு, பாரபட்சம் என்பது இல்லவே இல்லை.

இஸ்லாமிய இயக்கத் தோழர்களின் பணியை எல்லோரும் பாராட்டினார்கள். களத்தில் நின்று கரம் கொடுத்தார்கள். பள்ளிவாசல்கள், சர்ச்'கள்  திறந்து விடப்பட்டன, பாதிக்கப்பட்டோர் தங்குவதற்கு. இந்து இயக்கத் தோழர்கள் பணிகளும் நடைபெற்றது.

ஜெயின் சங்கப் பணி அளப்பரியது. வெளி நாடு வாழ் தமிழர்கள் தாய்மண்ணிற்கு தங்கள் பங்களிப்பை அனுப்பினார்கள். மும்பை பாலியல் தொழிலாளர்கள் நிவாரண நிதி அனுப்பியது மனதை உருக்கும் செய்தி. எதிரி மாநிலமாக பார்க்கப்படும் கர்நாடக அரசும், மக்களும் போட்டிப் போட்டுக் கொண்டு உதவினர்.

கடலூரில் தமிழகம் எங்குமிருந்தும்  பல்வேறு கல்வி நிறுவனங்கள், வியாபாரிகள் சங்கம், அமைப்புகள் என உதவிப் பொருள் வாகனங்களோடு திரிந்ததை கண்கூடாக பார்த்தேன். அள்ளி, அள்ளி வழங்கினார்கள்.

அரசியல் கட்சிகள் உதவிகள் புரிந்தார்கள். திமுக தோழர்களால் தொடர்ந்து உணவு வழங்கப்பட்டு வந்தது. கொளத்தூர் தொகுதியில் அணையா அடுப்பில் உணவு தயாராகிக் கொண்டே இருந்தது. பா.ஜ.க, காங்கிரஸ், தே.மு.தி.க, பா.ம.க, ம.தி.மு.க, வி.சி.க, கம்யூனிஸ்ட்கள், நாம் தமிழர் கட்சி வரை தங்களால் முடிந்தப் பணியை செய்தார்கள்.

இவர்களைத் தாண்டி ஒரு இயக்கத்திற்கு கூடுதல் பொறுப்பு உண்டு, கடமை உண்டு, மக்கள் ஆளுங்கட்சி என்ற அந்தஸ்தை வழங்கி இருப்பதால்.

ஆனால்  அந்த இயக்கம் மட்டும் களம் இறங்கவே இல்லை. தமிழகத்தின் அதிக உறுப்பினர்களை கொண்ட இயக்கம் என்று மார்தட்டிக் கொள்ளும் இயக்கம். தங்கள் தலைமைக்கு ஒரு இன்னல் என்றால் கோயில் கோயிலாக வழிபாடு நடத்தும் இயக்கம். 5000 பேரை பால் குடம் தூக்க வைக்கும் சக்தியுள்ள இயக்கம். தலைமைக்கு பிறந்தநாள் என்றால் பிரியாணி மேளா நடத்தும் இயக்கம். அந்த இயக்கம் மாத்திரம் இயங்கவேயில்லை.

அதற்கு அதன் தொண்டர்களை குறை சொல்ல முடியாது. தலைமை தான் காரணம். அந்தத் தொண்டர்களின் ஒவ்வொரு அமையும் தலைமையின் கண்ணசைவிலேயே நடந்து பழகி விட்டது. வழிகாட்டுதல் இல்லாமல் நிலை குலைந்து விட்டார்கள்.

இதன் மூலம் காலத்துக்கும் மறையா  களங்கத்தை உண்டாக்கி விட்டார். எந்த மக்கள் கண்ணை மூடிக் கொண்டு ஆதரவை அள்ளி வழங்கினார்களோ, அவர்களின் கஷ்ட நேரத்தில் கைகழுவியது மன்னிக்க முடியாதக் குற்றம்.

நிரந்தரப் பொதுச்செயலாளர் என தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகின்ற அ.தி.மு. தொண்டனுக்கு, வெளியில் சொல்லிக் கொள்ள முடியாத அவமானத்தை ஏற்படுத்தி விட்டார்.  மற்றவர்கள் வந்து உதவும் போது, ஆளுகின்ற இயக்கம் நாம் இப்படி ஆகி விட்டோமே என்று மறுகுகிறார்கள்.

டயர் நனையாமல் தன் தொகுதியில் மாத்திரம் வெள்ளம் பார்வையிட்டவர், பிரதமர் வருகிறார் என்றவுடன் ஹெலிகாப்டரில் அரை வட்டம் அடித்தவர், கடைசியாக வாட்ஸ் அப்பில் பாவ மன்னிப்பு கேட்டது தான் தன் தொண்டர்களுக்கு கொடுத்த உச்சபட்ச தண்டனை.

அம்மாவின் கருணை உரையைக் கேட்டு அந்தத் தொண்டர்களால் புளகாங்கிதப் படவும் முடியவில்லை. பகிரவும் முடியவில்லை.

# கால வெள்ளத்தாலும் அடித்து செல்ல முடியா கறை !

திங்கள், 14 டிசம்பர், 2015

கடலூருக்கு கரம் நீட்டுவோம்

அந்த ஊர் தீவு போலவே இருக்கிறது. ஆமாம், மெயின் ரோட்டில் இருந்து போகும் பாதையே பயமுறுத்துகிறது. சிங்கிள் ரோட். இன்னொரு வாகனம் வந்தால், ஒதுங்க இடம் இல்லை. இரண்டு புறமும் வயல் வெளி தான்.

வழியெங்கும் சவுக்கு தோப்புகள். சவுக்கு கன்றுகள் சாய்ந்து கிடந்தன. சில இடங்களில் காற்றால் சாய்ந்த தோற்றம், சில இடங்களில் வெள்ள நீரால் சாய்க்கப்பட்ட தோற்றம். ஆமாம், இங்கு புயல் போல் காற்றும் வீசியிருக்கிறது, வெள்ளமாய் நீரும் விளையாண்டிருக்கிறது.

குறிஞ்சிப்பாடி தாண்டி கடலூர் சாலையில் வலப்புறம் திரும்புகிறது சாலை. நீண்டப் பயணம் போல் ஆயசமளிக்கிறது. 6 கிலோமீட்டர் இருக்கும். "வேறு சாலை இருக்கிறதா?". "இருக்கு. அதுவும் இது போல தான்". வழியில் ஓடை குறுக்கிடுகிறது. ஓடையில் ஆளுயரம் தாண்டி நீர் போன அடையாளம்.

போன ஊர் இடங்கொண்டான் பட்டு. ஆயிக்குப்பம் ஊராட்சி. குறிஞ்சிப்பாடி ஒன்றியம். சுற்றிலும் 1000 ஏக்கர் நிலத்தால் சூழப்பட்ட ஊர். உயர்நிலைப் பள்ளி என்றால், பக்கத்தில் 5 கி.மீ கடந்து குள்ளஞ்சாவடி தான். இல்லை என்றால் 10 கி.மீல் குறிஞ்சிப்பாடி.

பாம்புக்கடி, பிரசவம் என்று மருத்துவமனைக்கு செல்ல வேண்டுமென்றாலும் இப்படி தான் கடக்க வேண்டும். காலை 7.00 மணிக்கு ஒரு பேருந்து வரும். மாலை 6.00 மணிக்கு அதே பேருந்து. இரண்டு நடை தான், வெளியே சென்று, வர. இல்லை என்றால் பைக் வைத்திருந்தால் உண்டு. அப்படி ஒரு ரிமோட் வில்லேஜ்.

இந்தக் கிராமத்தைத் தேர்ந்தெடுக்க காரணம் சகோதரர் பாபு. ஏற்கெனவே அறிமுகமான கழகத் தோழர் தான். அதைத் தாண்டி இந்த வெள்ள மீட்புப் பணியில் தன்னார்வத் தொண்டராக அவர் ஆற்றிய பணி ஈர்த்தது. அவர் மூலம் இந்தக் கிராமத்தை முடிவு செய்தோம்.

குறிஞ்சிப்பாடி தொகுதியில் வெள்ளப் பாதிப்பை ஏற்படுத்திய 'பெருமாள் ஏரியின்' கரையில் இருக்கும் கிராமம் தான் இது. பத்து கிலோமீட்டர் நீளக் கரை கொண்ட பெருமாள் ஏரியால், இந்தக் கிராமத்திற்கு துளியும் புண்ணியம் கிடையாது, பாதிப்பு தான். எதிர்புறம் இருக்கும் கிராமங்களுக்கு தான் பயன், பாசன வசதி.

ஆனால் வெள்ள பாதிப்பு இந்தக் கிராமத்திற்கு தான். வெள்ளமும் பாதித்தது, தீபாவளி போது வீசிய காற்றும் பாதித்தது. சுனாமியால் இந்த கிராமத்தின் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டது. தானே புயலால் இந்த ஊரின் தென்னை மரங்கள் வீழ்ந்தன. இப்போதும் இந்த கிராமம் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த கிராமத்திற்கு உதவ சென்றது மன நிறைவளித்தது. இங்கேயும், இதை ஒட்டி இருக்கும் கிராமங்களிலும் தான் நேற்று  பாதிக்கப்பட்ட 250 குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கினோம்.

# கடலூருக்கு கரம் நீட்டுவோம் !