பிரபலமான இடுகைகள்

திமுக லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திமுக லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 10 ஆகஸ்ட், 2017

பவளவிழா முரசொலிக்கு

18 வயதில், எதிர்கால திட்டமிடலில் கல்வியில் கவனம் பாயும். அல்லாதோருக்கு பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் மிகும். சிலருக்கு விளையாட்டில்  கவனம் திரும்பும்.

அந்த சிறுவனுக்கு தமிழ் மீதும், அரசியல் மீதும், எழுத்தின் மீதும் ஆர்வம் திரும்பியது. அவற்றிற்கு வடிவம் கொடுக்கும் வகையில் பத்திரிகை துவங்க திட்டமிடுகிறார்.

அன்றைய அவருடைய பொருளாதார சூழலுக்கு தகுந்தவாறு, கையெழுத்துப் பத்திரிக்கையை துவக்குகிறார். 18 வயதில் பத்திரிக்கை நிறுவனர் "கலைஞர்".

பத்திரிக்கைக்கு பெயர் சூட்ட வேண்டும்.  துவங்கும் போதே, போர் அறிவிப்பு ஒலியை நினைவில் நிறுத்தி பெயர் சூட்டுகிறார். அப்போது இந்திக்கு எதிரான போர் முரசு தமிழகத்தில் ஒலித்துக் கொண்டிருந்த நேரம்.

அதை ஒட்டிய பெயராக "முரசொலி" என சூட்டுகிறார். அன்றிலிருந்து சமூக அவலங்களுக்கு எதிராக அந்த முரசு தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருக்கிறது, இன்றும்.

மெல்ல வளர்ந்து வரும் சூழலில் முரசொலியை துண்டறிக்கையாக அச்சிட்டு வெளியிடுகிறார், அதன் நிறுவனரான தலைவர் கலைஞர். பின்னர் மாத இதழாக மலர்ந்தது முரசொலி.

அடுத்து வார இதழானது முரசொலி. அடுத்தக் கட்ட வளர்ச்சியாக நாளிதழாக உருவெடுத்தது. அதன் ஒவ்வொரு படி வளர்ச்சியையும் திட்டமிட்டு செயல்படுத்தினார் நிறுவனர் கலைஞர்.

தலைவர் கலைஞரும் அரசியல், கலை உலகம் என பயணித்துக் கொண்டிருந்தார். அவரும் படிப்படியாக வளர்ச்சி அடைந்துக் கொண்டிருந்தார். "பராசக்தி" மூலம் திரை உலகில் முத்திரை பதித்தார்.

படத்திற்கு கலைஞர் எழுதிய அனல் பறக்கும் வசனங்கள் திரைப்படத்தின் வெற்றியை உறுதி செய்தன. அந்த திரைக்கதை வசனங்கள் தொகுக்கப்பட்டு புத்தகமாக வெளியானது. அதன் விற்பனை உச்சம் தொட்டது.

வசனப் புத்தகத்தில் கிடைத்த லாபத்தை கொண்டு, சென்னையில் முரசொலிக்கு அச்சகம் திறந்தார். நாளிதழாக கழகத்தின் கொள்கைகளை கழகத் தோழர்களிடம் கொண்டு சேர்த்தது முரசொலி.

அன்றைய காலகட்டத்தில் திராவிட இயக்கத் தலைவர்கள், எழுத்தாளர்கள் பல இதழ்களை நடத்தி வந்தனர். அதில் இன்றும் வெற்றிகரமாக நடக்கும் ஒரே பத்திரிக்கை 'முரசொலி' மட்டும் தான்.

ஏன், தலைவர் கலைஞரே பல பத்திரிக்கைகளை துவக்கி நடத்தியவர், பல பத்திரிக்கைகளை துவக்க காரணமாக இருந்தவர். ஆனால் அவற்றிலும் 'முரசொலி' தான் தொடர்ந்து ஒலிக்கிறது.

ஒரு பத்திரிக்கை தொடங்கி நடத்துவது சாதாரண செயல் கிடையாது. பொருளாதார பிரச்சினை ஒரு பக்கம். நாளிதழுக்கு தினம் செய்திகளை தொகுத்து வெளியிடுவது சிரமம்.

வெகுஜனப் பத்திரிக்கை என்றால், அரசியல், பொழுதுபோக்கு, கலை, இலக்கியம், ஜோதிடம் என கலந்துக் கட்டி சமாளித்து விடலாம். ஒரு இயக்க செய்திகளை மாத்திரம் வெளியிட்டு, கொள்கைகளை கொண்டு சேர்க்கும் பணியை செய்யும் நாளிதழை நடத்துவது மிகச் சிரமம்.

அதையும் 75 வருடம் நடத்துவது மிகப் பெரும் சாதனை. அந்த சாதனையை செய்தவர் தலைவர் கலைஞர். அதிலும் துவங்கிய நாளில் இருந்து, 75வது வருடம் வரை நிறுவியவரே நிர்வகிப்பது பெரும் சாதனை ஆகும்.

கையெழுத்து பத்திரிக்கையாக துவங்கிய போது எப்படி கண்ணும் கருத்துமாக முரசொலியை கவனித்தாரோ, முதலமைச்சராக இருந்த போதும் கவனித்தார், உடல் நலம் குன்றும் வரையிலும் தொடர்ந்து கவனித்தார்.

உடன்பிறப்பு கடிதம், கேள்வி பதில் என கலைஞரது நேரடி பங்களிப்பு இருக்கும். அதல்லாமல் கேலிச்சித்திரங்கள், எதிர்கட்சி நாளிதழ் மற்றும் தலைவர்களின் தாக்குதலுக்கான பதில் செய்தி என அவரது மறைமுக பங்களிப்பு இருக்கும்.

சாதாரண ஒரு தி.மு.க தொண்டர் கூட மாற்று அரசியல் கட்சித் தலைவரின் சவாலுக்கு பதில் சொல்லும் திறன் உள்ளவர்கள் என்று வியக்கப்படுவதுண்டு. அதற்கு முழு முதற் காரணம், முரசொலி தான். முரசொலி படித்தாலே தயாராகி விடலாம்.

காலை முரசொலி அலுவலகத்திற்கு சென்று கடிதம் எழுதி விட்டு, அன்றைய நாளிதழை வடிவமைத்து விட்டு வருபவர், மாலை முதல் இதழ் அச்சான உடன் அதைப் பார்த்தால் தான் மற்ற பணிகளுக்கு செல்வார். அவரது அந்த கடமை உணர்வு தான் முரசொலியின் வெற்றி.

முரசொலியின் வெற்றி  கலைஞரின் வெற்றி. அந்த அளவிற்கு கலைஞர் வேறு, முரசொலி வேறு என்று பிரிக்க முடியாது. கலைஞரின் வார்த்தையில் சொல்வதானால், "முரசொலி கலைஞரின் மூத்தப் பிள்ளை".

அந்த மூத்தப் பிள்ளை தான், கலைஞரின் உடன்பிறப்புகளுக்கு பாடம் நடத்திய ஆசிரியர், பள்ளிக் கூடம், பல்கலைக்கழகம். முரசொலியை மாணவனாக வணங்குகிறேன்.

# தொடர்ந்து முரசு ஒலிக்கும், காலமெல்லாம் !

_எஸ்.எஸ்.சிவசங்கர்.

செவ்வாய், 25 ஏப்ரல், 2017

அன்பான தளபதி

நேற்றிரவு மணி 10.45 அலைபேசி அழைத்தது. அய்யா துரைமுருகன் அவர்களது எண். "மாவட்ட ஷெயலாளரா?". " ஆமாங்கய்யா". "தளபதி பேசுறாங்கப்பா". அலைபேசி கைமாறியது.

"சங்கர், எங்க இருக்கீங்க?", தளபதி அவர்கள் தான். "அரியலூர்ல இருக்கன் அண்ணா". "அப்பா ஊர்ல இருக்காங்களா?". "இருக்காங்க அண்ணா". "கும்பகோணம் வர்றேன் காலையில. அப்பாவ பார்க்க வர்றேன்". "சரிங்க அண்ணா".

அய்யா கோ.சி.மணி அவர்களது படத்திறப்பு விழாவுக்கு கும்பகோணம் வந்துவிட்டு சென்னை செல்லும் போதும் அப்பாவை சந்திக்க முயற்சித்தார். அப்போது அப்பா ஹைதராபாத் செக்கப் சென்றிருந்தார்கள்.

அடுத்து செந்துறை அருகே, கொலை செய்யப்பட்ட நந்தினி இல்லத்திற்கு ஆறுதல் கூற வந்த போதும், கும்பகோணத்தில் சொன்னார், " சங்கர், ஆண்டிமடம் போய் அப்பாவ பார்த்திடலாம்". "அப்பா திருச்சி அப்போலோவுல இருக்காங்க அண்ணா".

திருச்சியிலும் அப்பாவை பார்க்க முயற்சித்தார். அண்ணன் நேரு இல்ல திருமண நேர நெருக்கடியில் சந்திக்க இயலவில்லை. இப்போது கும்பகோணம் பயணம் என்றவுடன் உடனே திட்டமிட்டு விட்டார், அப்பாவை சந்திக்க.

காலை உளுந்தூர்பேட்டை சென்றேன். ச.ம.உ அண்ணன் உதயசூரியன், மா.செ அங்கயற்கண்ணி ஆகியோரோடு வரவேற்பு கொடுத்தோம். தளபதி அவர்களது வாகனத்தில் அண்ணன் கு.க.செல்வம் அவர்களோடு, அண்ணன் உதயசூரியனும் நானும் பயணித்தோம்.

விருத்தாசலத்தில் வரவேற்பு கொடுத்த மா.செயலாளர் கணேசன், ச.ம.உ உடன் இணைந்தார். ஆண்டிமடம் பயணித்தோம். வழியெங்கும் தளபதி அவர்களுக்கு அன்பான வரவேற்பு நிகழ்ச்சிகள்.

ஆண்டிமடம். வீட்டு வாயிலில் கழகத் தோழர்கள் குவிந்திருந்து வரவேற்பளித்தனர். வரவேற்பை ஏற்றுக் கொண்டு வீட்டுக்குள் வந்தார்.

கடந்த நான்கு மாதத்தில் இருமுறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, ஐ.சி.யுவில் சிகிச்சை பெற்று திரும்பியிருந்ததால் அப்பா மெலிந்து விட்டார்கள். களைப்பாகவும் இருந்தார்கள்.

வீட்டுக்குள் நுழைந்த எனக்கே ஆச்சரியம். அப்பா வேட்டி, சட்டை, வாட்ச் அணிந்து நாற்காலியில் உட்கார்ந்திருந்தார்கள். தளபதியை பார்த்த உடன் எழுந்தார்கள். பதறிப் போன தளபதி,"நீங்க உக்காருங்கண்ணா" என்றார்.

"எப்படி இருக்கீங்கண்ணே?". அப்பா நல்லா இருக்கேன் என கையால் சைகை காட்டினார்கள். "தலைவரை பத்தி தான் எப்பவும் கேட்டுகிட்டு இருக்காங்க", என்றார் என் அம்மா. "தலைவர் நலம் குறித்து என்னிடமும் கேட்கிறார்கள்", என்றேன்.

உடனே தளபதி தன் அலைபேசியை எடுத்தார். கேலரியை திறந்து கொண்டே," சமீபத்தில் எடுத்த தலைவருடைய புகைப்படம் இருக்கு. பாருங்கண்ணே", என்றவாறு அய்ந்து நிமிடம் பொறுமையாக தேடி எடுத்து அப்பாவிடம் காட்டினார்கள்.

அப்பாவால், அந்தப் புகைப்படத்தை காணும் அரிய வாய்ப்பு எங்களுக்கும் கிடைத்தது. "அம்மா, அப்பாவ பார்க்கும் போது", என்றார் தளபதி. புகைப்படத்தில் தலைவர் கலைஞரும், தயாளு அம்மாள் அவர்களும் எதிரெதிராக அமர்ந்து ஒருவரை ஒருவர் பார்க்கும் காட்சி. தயாளு அம்மாள், தலைவர் கையை பற்றியிருக்கும் உணர்ச்சிமிகு புகைப்படம்.

படத்தை பார்த்த அப்பா லேசாக கலங்க, " தலைவர் கிட்ட நீங்க விசாரிச்சிங்கன்னு சொல்றேன். சென்னை வரும் போது சொல்லுங்க, தலைவர பார்க்க ஏற்பாடு செய்கிறேன்", என தளபதி சொல்ல, அப்பா கண்ணில் அவ்வளவு ஆனந்தம்.

அப்பாவின் சிகிச்சை நிலை, உணவு ஆகியவற்றை குறித்து விசாரித்தார்கள் தளபதி அவர்கள். உடனே அப்பா ,"கிளம்பலாமா?" எனக் கேட்க, எல்லோருக்கும் அதிர்ச்சி. "எங்கப்பா?" என என் தம்பி சிவக்குமார் கேட்க, "கூட்டத்துக்கு தான்" என்றார்கள் அப்பா. 

"மாலையில் தான்ணா கூட்டம். வெயிலா இருக்கு. நீங்க ரெஸ்ட் எடுத்துட்டு  மாலை
வாங்க. நான் முன்னாடி கும்பகோணம் கிளம்புறேன்" என்றார்கள் தளபதி.

அப்பா கண்ணீர்  பெருக்கோடு விடைகொடுக்க, "ஏன்ணா இதுக்கா நான் வந்தேன். நீங்க சந்தோஷமா, தெம்பா இருக்கணும் தானே பார்க்க வந்தேன். நல்லா இருப்பீங்க" என கையை பிடித்து சொல்ல, அப்பாவுக்கு ஆறுதல். இது மிகுந்த தெம்பை தரும்.

1989ல் அப்பா எஸ்.சிவசுப்ரமணியன், ஆண்டிமடம் சட்டமன்ற உறுப்பினர். பொது நிறுவனங்கள் குழுத் தலைவராக நியமித்தார் அப்போதைய முதல்வர் தலைவர் கலைஞர். குழுவின் உறுப்பினர் ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் தளபதி அவர்கள்.

பெரம்பலூர் மாவட்ட செயலாளராக பணியாற்றிய போது, தளபதி அவர்களை அழைத்து வந்து, கிராமங்கள் தோறும் கழக கொடியேற்றும் நிகழ்ச்சியை நடத்தியவர்கள் அப்பா. அப்படி நீண்ட கால உறவு இது.

கார் கிளம்பியது. முகநூல் நான்கு ஆண்டுகளுக்கு முன்னான நினைவை காட்டியது. அப்பா ஹைதராபாத்தில் அறுவை சிகிச்சை முடிந்து சென்னை வந்த போது, தளபதி அவர்கள் அப்பாவை சந்தித்து நலம் விசாரித்த நாள் இன்றாம்.

"மணியண்ணன் வீடு மயிலாடுதுறை வழியில தானே சங்கர். கும்பகோணம் போனா அவர் தான் முன்னாடி நின்னு வரவேற்பார்", என்று மறைந்த அய்யா கோ.சி.மணி நினைவில் மூழ்கினார் தளபதி.

போகின்ற வழியெங்கும் இருக்கும் கழகத்திற்கு உழைத்த முன்னோடிகளை நினைவில் கொண்டு, அவர்களை சந்தித்து நலம் விசாரிக்கும் தளபதி அவர்களின் பண்பை வெளிப்படுத்தும் நிகழ்வு இது. மறைந்த முன்னோடிகளையும் நன்றியோடு நினைவு கூறும் பண்பு இளைய தலைமுறைக்கு பாடம்.

# அன்பான, பண்பான, பாசத் தளபதி வழிகாட்டுகிறார் !

செவ்வாய், 28 பிப்ரவரி, 2017

'தலைமை' ஆசிரியர் தளபதி !

"என்ன மாவட்டம் மழ உண்டா?". " கொஞ்சம் தான்ணே பேஞ்சுது", என் பதில். "எங்கூர்லயும் மழ இல்ல மாவட்டம். ஆத்துலயும் தண்ணி வர்ல்ல", ஆதங்கப்பட்டார் அண்ணன் பூண்டி கலைவாணன். திருவாரூர் மாவட்டக் கழக செயலாளர். என்னை எங்குப் பார்த்தாலும் 'மழையில்' தான் ஆரம்பிப்பார். மண்ணின் மைந்தர், மண் பாசம் மிக்கவர். நான் கொஞ்சம் தணிந்தக் குரலில் பதில் அளித்துக் கொண்டிருந்தேன்.

" உங்க ஊருல நிலத்தடி நீர் என்ன மட்டத்துல இருக்கு, போர் எத்தன அடி ஆழம்?, மோட்டார் எத்தன அடியில நிக்கும்?" என அவர் தொடர்ந்து வினவ, நான் சகஜமாக பதில் அளிக்க ஆரம்பித்தேன். அவர் திருவாரூர் மாவட்ட விவசாயிகளின் அவல நிலையை சொல்லிக் கொண்டு வந்தார். டீக்கடை பெஞ்சில் உட்கார்ந்து, பேசும் சுவாரஸ்யத்தோடு உரையாடிக் கொண்டிருந்தோம்.

ஆனால் நாங்கள் உட்கார்ந்திருந்த இடம் தளபதி அவர்களது காரில். முன் சீட்டில் தளபதி. பின் சீட்டில் எங்கள் இருவர் இல்லாமல் முரசொலி செல்வம் அவர்கள். முரசொலி மாறனின் தம்பி, தலைவர் கலைஞரின் மருமகன்.

சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர். தமிழகத்தின் பிரதானத் தலைவராக உருவெடுத்திருப்பவர்.  அவருக்கு வரும் அலைபேசி அழைப்புகளுக்கு பதிலளித்துக் கொண்டு, வாட்ஸ் அப் தகவல்களைப் பார்த்துக் கொண்டு அவ்வப்போது எங்கள் உரையாடலிலும் பங்கெடுத்தார் தளபதி. சிலர் இது போல் பேசுவதை இடைஞ்சலாக காட்டிக் கொள்வார்கள், எனது அனுபவம். ஆனால் அவர் சிறிதும் அலட்டிக் கொள்ளவில்லை.

இது பிப்ரவரி 5 அன்று நடந்தது. அன்று காலை தளபதி அலுவலகத்தில் இருந்து அழைப்பு. கொலையுண்ட "நந்தினி" இல்லத்திற்கு வந்து ஆறுதல் கூறுவதற்காக தளபதி வர விரும்புகிறார்கள், உங்களை தொடர்பு கொள்வார்கள் என தகவல் சொன்னார்கள். சில நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த அழைப்பு.

சில நொடிகளில் தளபதி அவர்களிடம் இருந்து அழைப்பு. "சங்கர், சாயந்தரம் வந்திடலாமா? திருவாரூர்ல இருந்து எப்படி வரலாம்? நான் மதியம் சாப்பிட்டு விட்டு கிளம்பிவிடுவேன்". " கும்பகோணம் வழியா வந்திடலாங்க அண்ணா". நந்தினிக் குறித்த சில செய்திகளை நான் சொல்ல முற்பட்டேன். அவர் அவற்றை ஏற்கனவே அறிந்து வைத்திருந்தார். "இப்போ புரோக்ராம வெளியில் சொல்ல வேண்டாம். தேவை இல்லாத கூட்டம் கூடிடுவாங்க. அவங்க குடும்பத்தினரிடம் ஃப்ரியா பேச முடியாது", என்றார்.

மாலை கும்பகோணம் கிளம்பினோம். வரும் வழியில் கலைவாணன் அழைத்தார்," மாவட்டம், ஆண்டிமடம் போகிற வழியில இருக்கா?". "இல்லண்ணே, ஏன்?". " தளபதி அப்பாவ பாக்கணும்னாங்க". "அப்பா ஊரில் இல்லை. செக்கப்புக்கு திருச்சி போயிருக்காங்க".

கும்பகோணத்தில் வரவேற்றோம். காரில் ஏறியவுடன் என் தந்தை நலம் குறித்து விசாரித்தார்.

சிறுகடம்பூர் கிராமம் வரை பல இடங்களில் கழகத் தோழர்கள் சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தனர். பொதுமக்கள் கையசைத்து வரவேற்றனர். குமிளியம் கிராமத்தில் வெடி வெடித்து வரவேற்றனர். கார் கிளம்பிய உடன், " என்ன சங்கர் துக்கம் விசாரிக்கப் போறோம். வெடி வெடிக்கறது தப்பில்லையா?", என்றுக் கேட்டார். "ஆர்வக் கோளாறுல செஞ்சிட்டாங்க அண்ணா", சமாளித்தேன்.

கார் சிறுகடம்பூர் கிராமத்தை அடைந்தது. முக்கியச் சாலையில் இருந்து ஊருள் சென்று, தெரு சாலையில் திரும்பிய கார் அந்த சிறு சிமெண்ட் சாலை முன் நின்றது. கட்டுக்கடங்காக் கூட்டம். அலையடிக்கும் கூட்டத்தில் இறங்கி நடந்தார். சிமெண்ட் சாலையில் இருந்து ஒருவர் நடக்கும் பாதை நந்தினி வீட்டுக்கு. அதில் வந்து நந்தினி படத்திற்கு மாலை அணிவித்தார். அவரது தாயார் மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

பெருங் கூட்டத்தில் யார் அவரை இடிக்கிறார்கள் என்றுக் கூட தெரியவில்லை. மணி 7.00 ஆகியிருந்தது. இருட்டி விட்டது. திரும்புகையில் சிமெண்ட் சாலையில் பத்திரிக்கையாளர்கள் மறித்தனர். இரைச்சல் அடங்கக் காத்திருந்து பேட்டியளித்தார். கார் ஏறிக் கிளம்பினோம்.

அடுத்து வந்த காரில் இருந்து முன்னாள் எம்.பி அண்ணன் ஏ.கே.எஸ் விஜயன் தளபதிக்கு அலைபேசியில் அழைத்து காபி இருக்கிறது என்று சொல்ல, வேண்டாம் என மறுத்தார் தளபதி. அவர் வற்புறுத்தவே அலைபேசியை என்னிடம் கொடுத்தார்கள் தளபதி. " சங்கர், எங்கேயாவது ஓரமா நிறுத்துங்க. அண்ணன் காஃபி சாப்பிடட்டும். மதிய சாப்பாட்டுக்கு பிறகு எதுவும் அண்ணன் சாப்பிடல" , என்றார் விஜயன். செந்துறை தாண்டி கார் நிற்கக் கூடிய ஒரு மரத்தடியை காட்டினேன்.

மரத்தடியில் இறங்கி நின்று காஃபியை அருந்தினார். கார் ஏறிய உடன்,"சங்கர் எத்தனை மணிக்கு திருச்சி போவோம்?" என்றுக் கேட்டார். "ஒன்பதாயிடும்" என்றேன். "நேரு காத்திருப்பார். வரவேற்பிற்கு போயிடணும் அவசியம் வரணும்னு சொல்லி இருக்கார். நேரு கிட்ட பேசி, எந்தப் பாதையில் வர்றோம்னு சொல்லிடுங்க"என்றார்.

08.40 மணிக்கு திருச்சி சுங்கச்சாவடியை அடைந்தோம். " வரவேற்புக்கு போனா சரியா இருக்கும்ல?",என்றுக் கேட்டார்.  அண்ணன் நேரு அவர்களும், அண்ணன் ஆ.ராசா அவர்களும் காத்திருந்தனர். நான் விடைப்பெற்றேன். "பத்திரமா போங்க சங்கர்".

முக்கிய நிகழ்வுகளை மனதில் வைத்திருந்து செல்லுதல், கழக மூத்தவர்களை நினைவில் வைத்து விசாரித்தல் - சந்தித்தல், எளிமையாய் இருத்தல், பதற்றம் இல்லாமல் இயல்பாக இருத்தல்,  தோழர்கள் மீது அக்கறையாய் இருத்தல், அடுத்தவர் கருத்துகளை கவனித்தல் என தனது ஒவ்வொரு அசைவிலும்  தலைமைப் பண்புக்கான பாடத்தை  போதித்தார் தளபதி.

# எம் 'தலைமை' ஆசிரியர் தளபதி வாழ்க !

சனி, 21 ஜனவரி, 2017

மர்மப் புன்னகை ஓ.பி.எஸ்

"நல்லது நடக்கும். பொறுத்திருங்கள்", இதை சொல்லிவிட்டு ஒரு மர்மப் புன்னகை பூத்தார் தமிழக முதல்வர் ஓ.பி.எஸ் டெல்லியில். பிரதமர் மோடியை சந்தித்த பிறகு அளித்த பேட்டி இது.

"தமிழக அரசே இதற்கு அவசர சட்டம் இயற்றிக் கொள்ளலாம்", மத்திய அரசின் வழக்கறிஞர் வாய் திறந்தார்.

இடைவேளைக்கு பிறகான ரஜினி படம் போல காட்சிகள் சூடுபிடித்தன.

மறுநாள் காலை தமிழக அரசின் வழக்கறிஞர் வரைவு சட்டம் தயார் செய்தார்.

மதியம் சட்ட அமைச்சகம் ஒப்புதல் அளித்தது. மாலை கலாச்சார அமைச்சகம் ஒப்புதல் அளித்தது. இரவே உள்துறை ஒப்புதல் அளித்தது.

இது ஒவ்வொன்றுக்கும் ஊடகங்கள், பிளாஷ் நியூஸ், பிக் நியூஸ், தற்போதைய செய்தி என பிண்ணனி இசையோடு தலைப்பிட்டு அதகளம் செய்தார்கள்.

"நானே வந்து வாடி வாசல் திறப்பேன். ஜல்லிக்கட்டு நடக்கும்", வெற்றிப் புன்னகை பூத்தார் ஓ.பி.எஸ்.

2009ல் இது போன்ற நிலையில் தான் "தமிழ்நாடு ஜல்லிக்கட்டு ஒழுங்குமுறை சட்டம்" கொண்டு வந்து ஜல்லிக்கட்டை நடத்திக் காட்டினார் தலைவர் கலைஞர்.

அதிமுக ஆட்சியில் ஜல்லிக்கட்டுக்கு மீண்டும் தடை வந்தப்போது, இது போன்ற அவசர சட்டத்தை நிறைவேற்றத் தான் தலைவர் கலைஞர் அவர்கள் வலியுறுத்தினார்கள்.

அப்போதை முதல்வர் ஜெயலலிதா, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடிதம் எழுதினார். ஆனால் அவசர சட்டம் இயற்ற முன்வரவில்லை ஜெ.

இரும்பு பெண்மணியை கேள்வி கேட்க  பத்திரிக்கைகள், ஊடகங்கள் முன்வரவில்லை.

இந்த ஆண்டும் திமுகவும் ஜல்லிக்கட்டு பேரவையினரும் போராட்டம் நடத்திய போதும்,  மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும்,  முதல்வர் ஓ.பி.எஸ்ஸும் "ஜல்லிக்கட்டு நடந்தே தீரும்" என்று தொடர்ந்து முழங்கி வந்தனர்.

பொங்கல் போது தான், நீதிமன்றத்தைக் காரணம் காட்டி ஜல்லிக்கட்டு நடத்த வாய்ப்பில்லை என பின் வாங்கினார்கள்.

மாணவர்கள் திரண்டு போராட, ஒட்டு மொத்த தமிழகமும் எதிர்ப்பை காட்டிய பிறகு தான் மோடிக்கு உதறல். ஓ.பி.எஸ்ஸை டெல்லி வர சொல்லி இந்த 'அவசர சட்டத்திற்கு' அறிவுரை வழங்கி இருக்கிறார். சட்டமும்  வரப்போகிறது.

படத்திற்கு 'சுபம்' போட்டு முடிக்க ஆசைப்படுகிறார்கள். இது 'இடைவேளை' தான், 'முடிவு அல்ல' என மாணவர்கள் கூறுகிறார்கள். நிரந்தர முடிவு தான் தேவை என அவர்கள் கோரிக்கை.

அது கூட அப்புறம் விவாதிப்போம்.

இந்த அவசர சட்டம் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொண்டு வராததன் காரணம் என்ன? ஜனவரி ஆரம்பத்திலேயே கொண்டு வராததன் நோக்கம் என்ன ? ஜல்லிக்கட்டு நடக்கக் கூடாது என்பது தானே.

"காலம் கடத்தி ஜல்லிக்கட்டு நடத்த இடையூறாக இருந்தது யார் "? என தலைப்பு வைத்து விவாத களம் நடத்த எந்த ஊடகமும் முன்வராதது ஏன்? வரமாட்டார்கள். அவர்கள் முன்வர வேண்டாம், உணரக்கூடியவர்கள் உணர்ந்தால் போதும்.

கண்ணாமூச்சி ஆட்டம் ஆடுவதாக நினைத்து விளையாடிய மோடியும், ஓ.பி.எஸ்ஸும் மாட்டியிருப்பது ஜல்லிக்கட்டு திடலில்.

# தமிழ் காளை கொம்பில் சிக்கி திணறுகிறார்கள். தொடரும் !



செவ்வாய், 17 ஜனவரி, 2017

ஜல்லிக்கட்டு எதிர்ப்பு; மடைமாற்றம்

ஜல்லிக்கட்டு எதிர்ப்பை மடைமாற்றும் முயற்சியில் இந்துத்துவா கம்பெனி இறங்கியுள்ளது.

ஜல்லிக்கட்டு பிரச்சினையில் தமிழகம் கொதி நிலைக்கு வந்துள்ள சூழலில், அலங்காநல்லூரில் போராட்டம் வலுபெறும் நிலையில் peta-வுக்கு அனுமதி கொடுத்தது யார் என்ற பிரச்சினையை கையில் எடுத்துள்ளனர் ஆர்.எஸ்.எஸ் வகையறா. இதில் உள் அரசியலில் ஈடுபடும் சில தமிழ்நாட்டு கட்சிகள் வேறு.

இவர்களின் குற்றச்சாட்டு, peta-வுக்கு அனுமதி கொடுத்தவர் முன்னாள் அமைச்சர் ஆ.ராசா என்பது. அவர் வனம் மற்றும் சுற்றுசூழல் அமைச்சராக இருந்த போது என்பது அவர்கள் வாதம்.

1. Peta என்பது ஒரு லாப நோக்கில்லா தொண்டு நிறுவனம் என சொல்லிக் கொள்பவர்கள். 2000-ல் இந்த அமைப்பு இந்தியாவில் துவங்கப்பட்டது. (அப்போது மத்தியில் பா.ஜ.க அரசு)

2. அப்படிப்பட்ட தொண்டு நிறுவனம் அங்கீகாரம் பெறுவதற்கு வனம் மற்றும் சுற்றுசூழல் அமைச்சகத்திற்கு செல்ல தேவை இல்லை. அதற்கு வேறு அமைச்சகங்களுக்கு தான் செல்ல வேண்டும். (Peta இயங்குவதற்கான அனுமதியை வனத்துறை அமைச்சகத்திடம் பெற வேண்டிய அவசியம் இல்லை.)

3. அப்படியே Peta, விலங்குகள் பாதுகாப்பிற்கு வனம் மற்றும் சுற்றுசூழல் துறையிடம் ஒத்துழைக்கிறோம் என்று அனுமதி கேட்டிருந்தாலும், அது அதிகாரிகள் மட்டத்தில் முடிந்து விடும். எல்லா விஷயங்களுக்கும் அமைச்சரிடம் செல்லத் தேவை இல்லை.

4. 2008-ல் ஜல்லிக்கட்டுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தடை பெற்ற போது, ஆ.ராசா தொலைதொடர்பு துறை அமைச்சர் ஆகிவிட்டார். ( அப்போது தடையை பெற்றவர் பா.ஜ.கவின் மேனகா காந்தி)

5. 2011 ஜூலையில் தான் காளை காட்சிப் பொருளாக தடை விதிக்கப்பட்டது, நீதிமன்ற உத்தரவுப்படி. அப்போது ஆ.ராசா அமைச்சரே அல்ல. (வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் 1972படி, வன விலங்கு பாதுகாப்பு வாரியம், காட்சிப் பொருளாக வைக்கக் கூடாத விலங்குகள் பட்டியலில் காளையை சேர்த்தது 2011.)

ஜல்லிக்கட்டு தடை நீக்கப்படும், இந்த ஆண்டு 'கண்டிப்பாக' நடத்தப்படும் என கதை விட்ட பொன்.ராதாகிருஷ்ணன் சிம்பிளா மன்னிப்பு கேட்டுட்டு, பிரச்சினைய திசை திருப்புறீங்க.

இப்போதும் ஜல்லிக்கட்டு நடத்தக்கூடாது என்று வலியுறுத்துபவர்கள் பா.ஜ.கவின் முண்ணனி தலைவர்களான மேனகா காந்தியும், சுப்ரமணியசுவாமியும் தான்.

Peta அமைப்பில் இருப்பவர்கள்  ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளர்கள்.

வாதத்திற்கு உங்கள் கருத்தை எடுத்துக் கொண்டாலும், Peta வந்தது 2000, Peta ஜல்லிக்கட்டு எதிர்ப்புக்காக நீதிமன்றம் சென்றது 2011, இந்த காலக்கட்ட நடவடிக்கைகளுக்கு ஆ.ராசா எந்த விதத்தில் பொறுப்பாவார் ?

இவ்வளவு சிக்கலையும் உங்கள் பா.ஜ.க பக்கம் வைத்துக் கொண்டு, பிரச்சினையை திசைதிருப்பி தப்பிக்க நினைக்கிறீர்கள்.

# ஜல்லிக்கட்டு, உன்னால முடியுமா இல்லையா? அதச் சொல்லு !

#jallikattu