பிரபலமான இடுகைகள்

புதன், 31 அக்டோபர், 2012

நீர் தான் விஜயசாந்த் என்பவரோ ?

பத்திரிக்கைகள் எல்லாம் இதே பரபரப்பு. ஜெயில்லலித்தை சந்திக்க, விஜயசாந்த்-க்கு அனுமதி கிடைக்குமா ?. ஒரு வேளை விஜயசாந்தின் மனுவை, ஜெ ஏற்றுக் கொண்டு சந்திக்க ஒப்புக்கொண்டால்....

விஜயசாந்த் ஜெ-வின் அலுவலகத்தில் நுழைகிறார்.....
ஜெ : நீர் தான் விஜயசாந்த் என்பவரோ ?
வி : ஆங்.... இதிலேயே சந்தேகமா ?
ஜெ : கேட்ட கேள்விக்கு பதில்...
வி : ம்ம்ம்ம். அதேதான்...
ஜெ : ஏது இவ்வளவு தூரம் ?
வி : கடையிலிருந்து பக்கம் தான்...
ஜெ : வந்த நோக்கம் என்னவோ ?
வி : உரிமை நாடி வந்துள்ளேன்...
ஜெ : என்ன உரிமை ?
வி : என் எம்.எல்.ஏக்களை மீட்க வந்தேன்...
ஜெ : எனக்கும் உரிமை உண்டு.

வி : உரிமை, உரிமை. எப்படி உரிமை, ஏது உரிமை?  சீட்டு கொடுத்தாயா ? நோட்டு கொடுத்தாயா ? எம் வேட்பாளர்களுக்கு குட்டுதான் வைத்தாயா ? அவ்வப்போது அடித்து தான் விளையாடினாயா ? கட்சிக்கு தலைவரா ? பொதுச் செயலாளரா ? உனக்கு என்ன உரிமை ?
ஜெ : பிரச்சாரம் செய்தேன், வாக்கு கேட்டேன், வேறென்ன செய்ய ?
வி : இதெல்லாம் என் டையலாக். நீங்கள் பேசக் கூடாது.
ஜெ : சரி. நீரே பேசும்...

வி : அக்காங்க் , இந்தா புள்ள இந்த தமிழ் நாட்டுல ஒரே சட்டசபை, அதில 234 எம்.எல்.ஏ , அதில என் கட்சிக்கு 29 பேர், அதில நாலு பேர் இப்போ உன் சைடு. இன்னும் இருக்குன்னு நீ சொல்ற. நான் சொல்றன், இல்லன்னு. இந்த நாட்டுக்கு பாகிஸ்தான் தீவிரவாதிகளால பிரச்சின வர்ரப்போ நான் தான் போராடனும். ஏன்னா, ராணுவம் என்னத் தான் கூப்பிடும். நம்ம நாட்டு ராணுவத்துல மூனு பிரிவு, அதுல இருக்குற சிப்பாய்ங்க 23லட்சத்து57 ஆயிரத்து 365 பேர். அதுல விமானப்படைல...
ஜெ : ( இடைமறித்து ) வெயிட்,வெயிட். இந்தப் புள்ளிவிவரம்லாம் என் கிட்ட வேண்டாம்.  ஓ.பி.எஸ் கிட்ட சொல்லு , அவர் தான் நிதி.
வி : விமானப்படைல 5 லட்சத்து 42ஆயிரத்து....
ஜெ : அய்யோ.... ( மயக்கமாகிறார் )
வி : (அங்கு கட்டிப் போடப்பட்டிருக்கிற நான்கு பேரின் கட்டுகளை அவிழ்த்து ) ஓடி வாங்க ஓடிடலாம்....

( பிண்ணனியில் " அந்த வானத்த போல மனம் படைச்ச மன்னவனே ..." பாடல் ஓடுகிறது )

படத்திற்கும், கதைக்கும் தொடர்பில்லை. கதையில் வரும் சம்பவங்கள் அத்தனையும் கற்பனையே.

# சுழி குற்றப் பிரிவுலிருந்து வர்றீங்களா

செவ்வாய், 30 அக்டோபர், 2012

மழை...

மழை....

வெப்பச்சூரியன்
தகிக்கும்பூமி
வானத்தின்
நீர்குடை...
இயற்கை
காக்க
வானத்தின்
நீர்கொடை...


 குடைவிரிக்கும்
எவர் மீதும்
வானம் தொடுக்கும்
நீர் படை...
பிள்ளைகள்
மனு ஏற்று
வானம் வழங்கும்
நீர் தடை...வளமை கூட்ட
வறட்சி கழிக்க
பசுமை பெருக்க
மேகம் வகுக்க
வானத்தின்
நீர்விடை....

மழை.

திங்கள், 22 அக்டோபர், 2012

" அய்ய்ய்ய்யா தீயசக்தி வந்துடுச்சு. ஏய் ஜாக்கீ, நீ தடுத்து நிறுத்து "


சிறு பிள்ளைகள் இருக்கிற வீட்டில், சுட்டி டீவி ஒரு தவிர்க்க முடியாத அங்கம்.


இன்று சுட்டி டீவி ஓடிக்கொண்டேயிருந்தது. ஓயாமல் பஜ்ஜி, பஜ்ஜி என்று காது நிரம்பி வழிந்தது. ஒரு விளம்பரம், அடுத்த விளம்பரங்கள் முடிந்தால், திரும்ப இந்த விளம்பரம் தான்.


அப்பா திருட்டுத்தனமாக, மகளுக்கு பஜ்ஜி கொடுத்து விட்டு, "பஜ்ஜி சாப்பிடாதே பிம்பிள்ஸ் வரும்" என சொல்ல , அம்மா "பஜ்ஜி சாப்பிடு, நம்ம வீட்டுல பிம்பிள்ஸ்லாம் வராது " என்கிறார். .


சோப் விளம்பரமாம். நான் பஜ்ஜி விளம்பரம் என்றே நினைத்து விட்டேன். ஹமாம்னா ஆரோக்கியம். ஹமாம் சோப் போட்டுக் குளித்தால் பிம்பிள்ஸ் வராதாம்.


 உடனே போட்டி விளம்பரம். சிறு குழந்தை கையை மூடிக்கொண்டு வர, அம்மா என்ன என்று கேட்க, குழந்தை " வெயில் " என்கிறது. வெயிலை சிறு பெட்டியில் அடைத்தால் பியர்ஸ் சோப் இருக்குமாம். முழு பரிசுத்தம் தருமாம்.


அடுத்த விளம்பரம். அதுவும் சோப் தான். உடல் நலம் சரியில்லாத சிறுவனுக்கு, நலம் கொடுப்பது லைப்பாய் சோப்பாம். எல்லாவற்றிற்கும் தீர்வு லைப்பாய் தான் என்கிறது.


சுட்டி டீவி, ஜாக்கிசான் சீரியலில் வரும், அங்கிள் போல , " அய்ய்ய்ய்யா தீயசக்தி வந்துடுச்சு. ஏய் ஜாக்கீ, நீ தடுத்து நிறுத்து  " , என்று அந்தக் குழந்தைகளை பார்த்து, உரக்க கத்த வேண்டும் என தோன்றுகிறது.


# சின்னக் குழந்தைகளை ஏமாத்தாதீங்கையா, சோப் விற்க ரொம்ப பொய் சொல்லாதீங்க....

அது ஒரு கனாக் காலம்...


கடந்த தி.மு.க ஆட்சிக்காலம்....

இரவு நேரம். சென்னையின் ஒரு பகுதியில் மின்தடை ஏற்படுகிறது. டிரான்ஸ்பார்மர் சீர்கெட்டதால் என தெரியவருகிறது. வழக்கம் போல் ஆற்காட்டாருக்கு அர்ச்சனை நடக்கிறது. மின்வாரிய அலுவலகத்தை தொலைபேசியில் தொடர்பு கொள்கிறார்கள், போனை யாரும் எடுக்கவில்லை.

ஒரு நடுத்தர வர்க்கத்து பெண் முதலமைச்சர் இல்ல தொலைபேசி எண்ணை தேடுகிறார். கிடைக்கிறது. தொடர்புகொள்கிறார், யாராவது உதவியாளர்கள் தொலைபேசியை எடுப்பார்கள் என்ற எண்ணத்தோடு.

" வணக்கம். கருணாநிதி பேசுகிறேன் " என்ற கனிவான கம்பீரக் குரல். இந்தப் பெண் திகைத்துப் போகிறார். தடுமாறி விபரத்தை சொல்கிறார். எந்தப் பகுதி என்று விபரம் கேட்டுக் கொள்கிறார் தலைவர் கலைஞர். உடனடியாக அதிகாரிகள் தொடர்பு கொண்டு சீர் செய்தது தனிக்கதை.

இன்று முதல்வர் இல்ல தொலைபேசி எண் கிடைத்தால், யாராவது பேச முன்வருவார்களா தைரியமாக ? நிச்சயம் தற்போதைய முதல்வர் எடுக்கமாட்டார் என்பது அனைவருக்கும் தெரியும். முதல்வரிடம் அல்ல, உதவியாளர்களிடம் பேசவே பயப்படுவார்கள் பொதுமக்கள் இன்று .

# ஏங்கம்மினி, கெரண்ட் இல்லாதது அப்புறம்  உங்களுக்கு எப்படி தெரிய வருங்க ? செரிதானுங்கோ நீங்க சொல்றதும்....

ஞாயிறு, 21 அக்டோபர், 2012

# " செவி உன் வசம், மனம் உன் வசம், சதிராடுது உன் இசைதான்... "


கார் அன்னூரிலிருந்து மேட்டுப்பாளையம் நோக்கி ...
ஏற்றம், இறக்கம், வளைவுகள் நிரம்பிய சாலை. இரவு மணி பதினொன்றை தாண்டுகிறது. மிதமான வேகம்.
இளையராஜாவின் இசை ராஜாங்கம். ராஜாவின் தேர்ந்தெடுத்தப் பாடல்கள். ராஜா காதில் இழைந்துக் கொண்டிருக்கிறார். அடுத்தப் பாடல்...

" சிறு பொன்மணி
அசையும்
அதில் தெறிக்கும்
புது இசையும்
இரு கண்மணி
பொன்னிமைகளில்
தாள லயம்
நிதமும் தொடரும்
கனவும் நினைவும்
இது மாறாது
ராகம் தாளம்
பாவம் போல
நானும் நீயும்
சேர வேண்டும்"
வரிவரியாக இல்லாமல், வார்த்தை வார்த்தையாக அமைக்கப்பட்ட இசைக்கட்டு.
ஜானகி காதுகளை ஊடுருவுகிறார்.
கங்கை அமரனின் வரிகள்,

ராஜா தொடர்கிறார்,...
" சிறு பொன்மணி அசையும் அதில் தெறிக்கும் புது இசையும்
இரு கண்மணி பொன்னிமைகளில் தாள லயம் "
இளையராஜா காதலை குழைத்து பாடுகிறார்.

இசை இடைவெளி... புதுவெள்ளமாய் பாய்கிறது இசை.
காலத்தை கடந்து நிற்கும் இசை, காதை வருடுகிறது.

ஜானகி மெல்லிய மயக்கும் குரலில் , ராஜா காந்தக் குரலில்...

பாடல் வரிகளின் போது, இசை மிகாமல், வார்த்தைகள் தெளிவாக...
அமரனின் ரசனையான வரிகள்.

இளையராஜாவின் இசைக்கூடத்தின் நடுவே நாம் இருக்கின்ற உணர்வு. சுற்றிலும் இசைக்கலைஞர்கள் அமர்ந்து ராஜாவின் விரலசைவுக்கு இசைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

" கரை தேடுது கவி பாடுது கலந்தால் சுகம் மிஞ்சும்
உயிர் உன் வசம் உடல் என் வசம் சதிராடுது உன் நினைவுகள்  "
பாடல் முடிகிறது. ஆனால் காதில் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது....
மனம் நிறைகிறது,  இசையில் மூழ்குகிறது....

மிகச் சரியாகத்தான் சொன்னார் கலைஞர், " இசைஞானி ".

# " செவி உன் வசம், மனம் உன் வசம், சதிராடுது உன் இசைதான்... "

ஞாயிறு, 14 அக்டோபர், 2012

சட்ட மன்றம் - நாளைய அமைச்சர்கள் - ஓர் கண்ணோட்டம் !


தலைவர் கலைஞர் அவர்களின் செயற்குழு தீர்மானத்தின் நிர்பந்தம் காரணமாக முல்லை பெரியார் பிரச்சினையில், 2011 டிசம்பரில், சட்டமன்றம் கூட்டப்பட்டது உங்களுக்கு தெரிந்த செய்தி. 
சட்டமன்றத்தில் ஜெ-வால் தீர்மானம் கொண்டு வரப்பட்டு, அனைத்துக் கட்சிகளாலும் ஆதரிக்கப்பட்டது, தளபதி அவர்களின் உரை அனைத்து தரப்பினராலும் பாராட்டப்பட்டது பத்திரிக்கை வாயிலாக வெளி வந்த செய்தி.
தளபதி அவர்களின் உரையை அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களும் , சிறு சலசலப்பும் இல்லாமல் கூர்ந்து கவனித்தது பத்திரிக்கைகளில் வராத , நாங்கள் நேரடியாக கண்ட காட்சி.
கட்டுரையின் செய்தி அதுவல்ல.....
கம்யூனிஸ்டுகள், த.மு.முக வரை விவாதம் சரியாக போனது.
சரத்குமார் தொடங்கி தனியரசு, கதிரவன், தமிழரசன் போன்ற இன்னும் "மிக" ஆதரவு கட்சி   ச.ம.உ-க்களின் --------சத்தம் தாங்காமல் கொட்டாவி வர ஆரம்பித்தது.
அப்போது எதிர் புற கடைசி வரிசை  கண்ணில் பட்டது. ஒரு நபர் நெருக்கடிக்கு இடையில் குறுகி உட்கார்ந்திருந்தார். அவர் இசக்கி சுப்பையா... முன்னாள் சட்ட அமைச்சர். ஏன் பதவி போனது என்று தெரியாமல் இன்னும் சஸ்பென்ஸ்.
நம்ம பக்கத்து மாவட்டத்துக் காரர் பரஞ்ஜோதி எங்கே என்று பார்த்தேன்.  நாலாவது வரிசை...
அப்புறம் என்ன ஆரம்பித்திருந்தேன், எண்ண ஆரம்பித்தேன், எத்தனை முன்னாள் அமைச்சர்கள்.
 நிகழ்கால முன்னாள் அமைச்சர்கள் மட்டும் 9 பேர், இதில் சிலரை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை, இரண்டாம் முறை எம்.எல்.ஏவாக இருந்தும் . மா.கம்யு -வின்  டெல்லிபாபு-வின் உதவியை நாடினேன், அவரும் இரண்டாம் முறை .
அப்படியும் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் அறநிலையத்துறை அமைச்சர் பெயர் , எங்கள் வரிசையில் இருந்த யாருக்கும் தெரியவில்லை.
மீண்டும் விட்ட இடத்தில் கணக்கை ஆரம்பித்திருந்தேன்.
முன்னாள்- முன்னாள் அமைச்சர்கள் - 9 பேர், பொள்ளாச்சி ஜெயராமனில் ஆரம்பித்து....
மொத்த முன்னாள் அமைச்சர்கள் - 18 பேர்.
தற்போதைய அமைச்சர்கள் - 33 பேர். 
சபாநாயகர், துணை, கொரடா - 3 பேர்.
எனவே மிச்சம்  'வருங்கால அமைச்சர்கள்'  91 பேர் மிடுக்காக அமர்ந்திருந்தனர். 
அம்மா மனசு வைங்கம்ம்மா......
மியுசிகல் சேர்... 
மியூசிக் ஸ்டார்ட்ஸ்.....
ரபப்ப ப, ரபப்ப ப, ரபப்பரபப்ப......

" விண்ணளக்கும் சிறகுகள்" கவிதை நூல்

விண்ணை அளக்கட்டும் இந்த " சிறகு "....

காலை ஒரு கழகத்தோழரின் புதியத் திருமணக்கூடத்தை திறந்து வைத்துவிட்டு, நீலகிரி செல்லும் அவசரத்தில் வண்டி ஏறினேன். ஒரு இளைஞரை ஜெயங்கொண்டம் ஒன்றிய செயலர் அண்ணன் தனசேகர் அறிமுகப்படுத்தினார்.
" கவிதை நூல் வெளியிட அண்ணன் திருச்சி சிவா தேதி கொடுத்துள்ளார், நீங்களும் வரவேண்டும்" என்றார். நூல் இருக்கிறதா என கேட்டு வாங்கிக் கொண்டேன். பயணத்தை வீணாக்காமல் படித்தேன். 

அருமை. கிராமத்து மணம் மாறா வார்த்தைகள். அமுதமாகவும் இனிக்கிறது. ஆசிடாகவும் எரிக்கிறது. சாட்டையாய் சொடுக்குகிறது. சந்தனமாய் குளிர்விக்கிறது. உங்கள் பார்வைக்கு சில....

" ஞாயிறு வாசிகள் "
மற்றைய தினங்களின்
வாழ்க்கையையும் சேர்த்து
ஞாயிற்றுக்கிழமையில்
வாழ நினைத்து
தோற்பவர்கள்....

" சுனாமி "
இவ்வளவு நாள்
இந்த உடம்பிற்கு
உப்பிட்டது
இப்படி நீ
உட்கொள்ளத்தானா ?....

" பெண் "
வெட்கத்தை எங்கு
ஒளித்து வைக்கிறீர்கள்
நீயும்
மருதாணிச்செடியும்....

" அரசியல் "
வாக்குறுதிகள் நிரம்பி வழியும்
ஒலி பெருக்கிக் குழாயடியில்
பிளாஸ்டிக்குடங்களாய்
பொதுசனம்
கவிழ்ந்து கிடக்கும்....

" பறை முழக்கம் "
தப்புக்கொட்டுடா - தம்பி
தப்புக்கொட்டுடா
ஆண்டமாரு காது அதிர
தப்புக்கொட்டுடா....
( நூல்: விண்ணளக்கும் சிறகுகள், ஆசிரியர் : பெ.மணிகண்டன், தேவாமங்கலம், அரியலூர் மாவட்டம் , 97889 80385 )


கவிஞர் மணிகண்டனின் " விண்ணளக்கும் சிறகுகள்" கவிதை நூல் வெளியீட்டுவிழா நடைபெற்றது.
மாலை 6.30லிருந்து இரவு 10.30 வரை சிறப்பாக நடைபெற்றது. அண்ணன
் திருச்சி சிவா வெளியிட , நான் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பை பெற்றேன். கவிஞர் நந்தலாலா ஆய்வுரை வழங்கினார். தமிழ் ஆர்வலர்களும், கழகத்தோழர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
புலவர்,கவிஞர், பேராசிரியர்கள் தமிழ் மழையில் நனைந்தோம். அண்ணன் சிவா அவர்களின் இலக்கியப் பேருரையில் அனைவரும் லயித்துப் போனோம்.

கவிதை நூலைப் போல விழாவும் வெற்றி, சிறப்பு.# இந்தக் கவிப்படகு காலவெள்ளத்தை மீறி கரை சேர வேண்டும். சேரும். வாழ்த்துக்கள் !

மக்கள் சந்திப்பு...


ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினராக இருந்தால், பல அரசு நிகழ்ச்சிகள் மூலம் மக்களை எளிதாக சந்தித்து விட முடியும். ஆனால் எதிர்கட்சி சட்டமன்ற உறுப்பினராக மக்களை சந்திக்க இருக்கின்ற வாய்ப்புகள் திருமணம், துக்கம் போன்ற தனிப்பட்ட நிகழ்வுகள் தான்.

இது சிறு கிராமங்களுக்கு பொருத்தமாக இருக்கும். ஆனால் நகரப் பகுதிகளுக்கு சற்று சிரமம். எனவே லப்பைக்குடிக்காடு பேரூராட்சி மக்களை சந்திப்பதற்கு " மக்கள் சந்திப்பு " என்ற நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து பொதுமக்களை சந்தித்தேன்.

லப
்பைக்குடிக்காடு இஸ்லாமியப் பெருமக்கள் மிகப்பெரும் அளவில் வாழுகின்ற ஊர். சின்ன துபாய் என சொல்லலாம். அந்த அளவிற்கு இங்கிருந்து அரபு நாடுகளில் பணிபுரிவோர் அதிகம்.

எனது அழைப்பை கடிதமாக எழுதி பெரும்பாலோருக்கு கிடைக்க செய்து, சனிக்கிழமை(22.092012) மாலை சந்தித்தேன். பொதுமக்களும், பள்ளிவாசல்களின் தலைவர்களும் வந்திருந்து தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

கடந்த கழக ஆட்சியில், அண்ணன் ஆ.ராசா அவர்கள் பரிந்துரைப்படி, தளபதி அவர்கள் பாதாள சாக்கடைத் திட்டம் அமைக்க நிதி ஒதுக்கி தந்தார். கழிவுநீர் அகற்றும் நிலையம் அமைக்க,பக்கத்து ஊர் மக்கள் எதிர்ப்பால் தாமதமாகிவிட்டது. இது குறித்து தற்போது சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளேன்.இது குறித்தும் வளர்ச்சிப்பணிகள் குறித்தும் கருத்துகள் கேட்டேன்.

பெரும்பாலானோர் வைத்தக் கோரிக்கை, ஊரை ஒட்டி ஓடுகின்ற வெள்ளாற்றின் கரையில் ஏற்படும் மண் அரிப்பை தடுக்க, தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என்பதாக இருந்தது. கிழக்கு மற்றும் மேற்கு ஜமாத்தினரின் முதல் கோரிக்கையும் இதுதான்.

நிகழ்ச்சியிலேயே, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி மூலமாக தடுப்புசுவர் கட்டப்படும் என்ற உறுதியை அளித்தேன். எல்லோருக்கும் மகிழ்ச்சி. எனக்கும் மகிழ்ச்சி, மக்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்ற வாய்ப்பு கிடைத்தமைக்கு.

இளைஞர்களுக்கு இறகுப்பந்து மைதானம் அமைக்கவும், மற்ற அடிப்படை வசதிகளை மேம்பாடு செய்யவும் சில கோரிக்கைகள். படிப்படியாக நிறைவேற்றவும், மருத்துவமனை மற்றும் பள்ளியின் குறைபாடுகளை உரிய அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு செல்லவும் உறுதி அளித்தேன். செய்யக் கூடியவைகளை மட்டுமே...

# இது தலைவர் கலைஞரின் சிந்தனையில் விளைந்த மனுநீதி நாள் முகாமின் மறு பதிப்புதான்...

வெளிச்சம் ஷெரின்கடந்த வருடம் பாண்டிச்சேரியில் உள்ள ஒரு தனியார் செவிலியர் கல்லூரியில் பயிலும் 20 மாணவிகளுக்கு தேர்வு எழுத அனுமதி மறுக்கப்படுகிறது. அவர்கள் "வெளிச்சம்" தொண்டு நிறுவனத்தை அணுகினர். தேர்வு எழுத அனுமதி பெற்றுத் தரப்பட்டது.

இந்த ஆண்டு கோவை தனியார் பல் மருத்துவக் கல்லூரியில், அரசு ஒதுக்கீட்டீல் இடம் கிடைத்து, கட்டணம் கட்ட வழியில்லாத நிலையில், "வெளிச்சம்" நிறுவனத்தை நாடிச் சென்றனர். ஒரு சில நல்ல உள்ளங்களிடம் இருந்து நன்கொடை பெறப்பட்டு, கல்லூரியில் செலுத்தப்பட்டது.

வேலூர் மாவட்டத்தி
ல் ஒரு தோல் தொழிற்சாலையில் பணிபுரிந்த அப்பாவிப் பெண்ணை காதலிப்பதாக ஏமாற்றி விபச்சாரத் தொழிலில் தள்ளியவர்கள, காவல்துறை கவனத்திற்கு கொண்டு சென்று கைது செய்யவைத்தது "வெளிச்சம் அமைப்பு".

கடந்த பல ஆண்டுகளாக முதல் தலைமுறை மாணவர்களுக்கு கல்வி மறுக்கப்படும் போதோ, கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டாலோ எழும் குரல் வெளிச்சம் குரலாக இருக்கும். முதல் தலைமுறை மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்கப்பட வேண்டும் என்பதற்காக அதிகாரிகளை, அரசியல்வாதிகளை தொடர்பு கொண்டு போராடி வரும் அமைப்பு "வெளிச்சம்".

இதில் அடுத்தக் கட்டமாக, முதல் தலைமுறை மாணவர்களின் உயர்கல்விக்காக ஒரு பொதுநல வழக்கும், பழங்குடியின மாணவர்களுக்கு உயர்கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கவேண்டுமெனவும் ஒரு பொதுநலவழக்கும் தாக்கல் செய்து, வழக்கறிஞர் வைக்காமல் வெளிச்சம் நிறுவனத்தின் தலைவர் சகோதரி ஷெரின் அவர்களே வாதாடி, அரசு இரண்டு வாரங்களுக்குள் பதில் தரவேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதையெல்லாம் படித்தவுடன், பணக்கார, வெளிநாட்டு உதவி பெறுகின்ற கார்ப்பொரேட் தொண்டு நிறுவனங்களை போல கற்பனை செய்துவிடாதீர்கள். ஷெரினுடன் பணியாற்றுபவர்கள் வெளிச்சம் நிறுவனத்தால் உதவி பெற்று கல்வி பயின்றவர்கள்,தற்போது பயிலும் மாணவர்கள்.

சில வேளை உணவுகளை துறந்துவிட்டு, நல்ல உள்ளம் படைத்தவர்களை அணுகி, ஏழை மாணவர்களின் நிலையை எடுத்துக்கூறி, சமயங்களில் அங்கு ஏற்படும் அவமானங்களையும் தாங்கிக் கொண்டு, நாளைய செலவுக்கு பணம் இல்லாவிட்டாலும், கிடைத்தப் பணத்தை ஏதாவது ஒரு மாணவருக்கு செலுத்தி, அவர்களது கல்வியை உறுதி செய்வதே ஷெரின் அவர்களின் தினப்படி பணி.

இந்தப் பணிகள் தவிர்த்து, தற்கொலைக்கு முயற்சிக்கும் மாணவர்களுக்கு அறிவுரை கூறுவது, பதின் பருவத்தில் தடுமாறும் மாணவிகளை நெறிப்படுத்துவது என பல நற்பணிகளை தொடர்கிறார்.


மனமும் வாய்ப்பும் இருப்பவர்கள் இவர்கள் மூலமாக, கல்வி கண்ணை திறக்க உதவுங்கள் .

# வெளிச்சம் பரவட்டும் !!
 

சபாநாயகர் தேர்வு - பதவியேற்பு - நிகழ்வுகள்

சட்டப் பேரவையின் புதிய தலைவராக தனபால் பொறுப்பேற்றார்.

முன்னாடி தனபாலு மேசைய தட்டிகிட்டிருந்தத, ஜெயக்குமாரு வேடிக்க பார்த்தாரு. இன்றைக்கு Ex ஜெயக்குமாரு தட்டிக்கிட்டிருந்தத, தனபால் வேடிக்க பார்த்தாரு....

ஒரு மிகப்பெரிய மாற்றம் நிகழ்ந்துள்ளது

# மாற்றம் விரும்பிய மக்களே !

                ********    ******* ******

புதிய சபாநாயகராக திரு.தனபால் அவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு, மரபுப்படி ஆளுங்கட்சி அவை முன்னவர் ஓ.பி.எஸ் அவர்களாலும், எதிர்கட்சி துணை தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் அவர்களாலும் பேரவைத்தலைவர் நாற்காலியில் அமரவைக்கப்பட்டார். மரபுப்படி காலில் விழும் வைபவம். 

மு.சபா ஜெயக்குமாரை தேடினேன், ஜெ-க்கு பின்புறம் நான்காவது வரிசையில் கம்பீரமாக அமர்ந்து, ஓங
்கி மேசையை தட்டிக் கொண்டிருந்தது கொள்ளை அழகு. இடது ஓரம், மூன்றாவது வரிசையில், செங்க்ஸும், சி.வி.எஸ்ஸும் அமர வைக்கப்பட்டிருந்தனர், பாவமாக.

ஒவ்வொரு கட்சி சார்பிலும் புதிய சபா-வை வாழ்த்தி பேசும் மரபு. பண்ருட்டி வழக்கம் போல் மயிலிறகால் விசிறி விட்டார். கழகத்தின் சார்பில் தளபதி அவர்கள் வாழ்த்தி பேசினார்கள்.

" தாழ்த்தப்பட்ட சமுதாயத்திலிருந்து, 1946ல் முதல் சபாநாயகராக தேர்வு பெற்ற சிவசண்முகம் பிள்ளை, தலைசிறந்த சபாநாயகராக போற்றப்பட்டார். பல நல்ல முன்னுதாரனங்களை ஏற்படுத்தியவர். அதே போன்று தாங்களும் பணியாற்றி பாராட்டு பெற வேண்டும்" என பாராட்டினார்.

" அண்ணா சொன்னது போல, பூனை தனது குட்டிகளை எவ்வாறு கவ்வி செல்லுமோ, அது போல சபாநாயகர் எதிர்கட்சி உறுப்பினர்களிடம் நடந்துக் கொள்ளவேண்டும். எலியை கவ்வுவது போல நடந்துக் கொள்ளக் கூடாது. சிறப்பாக சபையை நடத்த திமுக ஒத்துழைக்கும்" என்று சிறு மாச்சர்யம் தைஇல்லாமல் கண்ணியமாக பேசி அமர்ந்தார்.

அதற்கு பிறகு பேசிய மற்ற கட்சித் தலைவர்கள், புதிய சபா-வை வாழ்த்தும் சாக்கில் ஜெ-வை வாழ்த்தியதில்....

 
 சட்டமன்றத்தில் படமாக இருக்கின்ற அண்ணல் காந்தி, அம்பேத்கார், தந்தை பெரியார் ஆகியோரின் ஒட்டு மொத்த உருவமாக புரட்சித்தலைவி இருக்கிறார் " - குடியரசு கட்சி தலைவர் செ.கு.தமிழரசன்.

" காந்தி, அம்பேத்கார், பெரியார், காமராஜர், பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர், வ.உ.சி ஆகியோரின் சமூக சீர்திருத்த எண்ணங்களை நிறைவேற்றி வருபவர் புரட்சித்தலைவி " - கொங்கு இளைஞர் பேரவைத் தலைவர் தனியரசு.

இன்று சட்டப்பேரவையில் ஜெயலலிதாவை புகழ்வதில் நடந்த போட்டியில் ஆறுமுகம் ( இ.கம்யூ ), ஜவாகிருல்லா ( ம.ம.க), டாக்டர்.கிருஷ்ணசாமி, சரத்குமார், கதிரவன்( பார்வர்ட் பிளாக்), தனியரசு, செ.கு.தமிழரசன் ஆகியோரில் தனியரசும் தமிழரசனும் இறுதி சுற்றுக்கு வந்தனர். 


இன்று தனியரசே வெற்றி பெற்றார். இதில் ஜெ-வின் புன்முறுவலை பெற்றது, சரத்தின் பேச்சு.

தேவையில்லாமல் தளபதி அவர்களின் பேச்சை மேற்கோள் காட்டிய சரத், " சமயத்தில் பூனை எலியையும் கவ்வ வேண்டும் " என நக்கல் செய்து சபாநாயகருக்கு கடுமையாக இருக்க அறிவுரை வழங்க, ஜெ-வுக்கு சிரிப்பு, மேசை தட்டல்.

அடுத்து சபா-வை ஜெ வாழ்த்தி பேசினார், தனது பெருமைகளை அடுக்கி.

நாற்காலி நுனியில் அமர்ந்து, ஜெ வாழ்த்தி பேசும்போதெல்லாம், வணங்கி, வணங்கி, நெளிந்து, நெளிந்து, மாண்புமிகு.தனபால், தனது சபாநாயகர் பணியை தெளிவாக துவங்கினார்.

" சட்டசபையில் திட்டமிட்டு கலவரம் செய்தால் ஏற்கமுடியாது. அதை கடுமையாக தடுப்பது சபாநாயகரின் கடமை " என்று தனது பேச்சை ஜெ முடித்தார். சபை நிகழ்வுகள் அமைதியாக நடந்துக் கொண்டிருக்கும் , இந்த நேரத்தில் , ஜெ-வின் பேச்சு எதற்கோ அச்சாரமாகத் தோன்றுகிறது.

கண்ணியமாகப் பேசிய தளபதி எங்கே ?, தேவையில்லா சரத்குமார் பேச்சுக்கு புன்முறுவல் காட்டி, கலவரம் பேசிய ஜெ எங்கே ?

# மாறாதய்யா.. மாறாது... மணமும், குணமும் மாறாது.....