பிரபலமான இடுகைகள்

செந்துறை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
செந்துறை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 14 செப்டம்பர், 2013

எம்.எல்.ஏ-வே 16 ரூட்டு கேக்கறார்...( தொடர்ச்சி )

அந்தத் திட்டம்....(தொடர்ச்சி)

வழக்கமாக  அரசு பேருந்துகளுக்கு புதிய ரூட் போடும் போது, டெப்போவில் இருந்து கிளம்பும் பேருந்துகள் எந்த ஊருக்கு செல்கிறதோ, அங்கிருந்து திரும்ப டெப்போ இருக்கும் ஊர் வரை வந்து செல்வது போல ரூட் போடுவது வழக்கம். அப்போது தான் டைம்கீப்பர் மூலம் கண்காணிக்க முடியும், டெப்போவிற்கு வந்து பராமரிக்க முடியும் என்பது அதிகாரிகள் மனப்பான்மை.

நான் கேட்ட ரூட்கள், செந்துறை ஒன்றியத்தில் உள்ள சன்னாசிநல்லூர், வாளரக்குறிச்சி ஆகிய கிராமங்களுக்கு புதிய வழி தடம். வீராக்கன், நாகல்குழி கிராமங்களுக்கு டவுன் பஸ்ஸே கிடையாது, அதற்கு டவுன் பஸ் கேட்டிருந்தேன். செந்துறையை திட்டக்குடி மெயின் ரோடிற்கு  இணைக்க வேப்பூர் ஒன்றியத்தில் உள்ள துங்கபுரம் கிராமத்திற்கு நக்கம்பாடி, நமங்குணம் வழியாக டவுன் பஸ் கேட்டிருந்தேன். (ஒவ்வொரு ரூட்டிற்கும் தனி விளக்கம் எழுதலாம்.)

இதற்கு தனித் தனியாக ரூட் போட்டு பஸ் ஒதுக்கினால், 4 பஸ்கள் தேவை. அப்போது தான், வழக்கப்படி அரியலூருக்கும் அந்த கிராமங்களுக்கும் இடையில் பேருந்து இயக்க முடியும். இதை நான் ஒரே பேருந்தை கொண்டு அனைத்து ஊருக்கும் ரூட் போட்டுக் கொடுத்தேன்.

நான் அரியலூர் டெப்போவிலிருந்து கிளம்பும் பேருந்தை செந்துறையை மையமாக கொண்டு நான்கு கிராமங்களுக்கு சென்று வருவது போல ரூட் போட்டேன். மதியம் ஓட்டுனர், நடத்துனர் டியூட்டி மாற்ற ஒரு முறையும், மெயிண்டெனன்ஸுக்கு இரவு ஒரு முறையும் டெப்போவிற்கு செல்லவும் மட்டும் அரியலூர் செல்வது திட்டம்.

இதே போல் ஜெயங்கொண்டம் டெப்போவிலிருந்து ஆண்டிமடம் ஒன்றிய 4 கிராமங்களுக்கு ஒரு பேருந்து. முள்ளுக்குறிச்சி, காடுவெட்டி, மாத்தூர், நாகம்பந்தல்(தற்போது இந்த ஊர் இயங்கவில்லை) ஆகிய  ஊர்களுக்கு.
  
அரியலூரிலிருந்து செந்துறை வரும் பேருந்து, 1.செந்துறை சன்னாசிநல்லூர் செந்துறை, 2.செந்துறை துங்கபுரம் செந்துறை, 3.செந்துறை வாளரக்குறிச்சி செந்துறை, 4.செந்துறை நாகல்குழி ஜெயங்கொண்டம் நாகல்குழி செந்துறை என நான்கு வழி தடங்களில் சென்று வரும்.



மதியம் அரியலூர் சென்று வந்து மீண்டும் இதே வழித் தடங்களில் பயணிக்க திட்டம். அவர்கள் வழக்கப்படி விட்டால் ஒவ்வொரு முறையும் செந்துறையிலிருந்து அரியலூர் சென்று வர வேண்டும். அதை அப்படி சேர்த்து படித்துப் பாருங்கள்.

இது அவர்கள் நடைமுறையில் இல்லாததால் தயங்கினார்கள். “இது நம்ம கார்ப்பரேஷனில் டிரை பண்ணதில்ல. பிராஞ்சிற்கு வந்து போவது போல ரூட் போடறது வழக்கம். “வேற பிராஞ்சில் இருக்கா ?. “தெரியலிங்க சார்.

சென்னை போன்ற லாங் ரூட் போற பஸ்லாம் ஒரு நாளைக்கு ஒரு நடை தானே டெப்போவுக்கு வரும் ? எனக் கேட்டேன். ஆம்என்றார்கள். இதுவும் அது மாதிரி தான் என்றேன். பதில் இல்லை.



மறுநாள் அந்த கிராமங்களில் புதிய பேருந்து இயக்க விழா.

# ரூட் கிளியர் !

வெள்ளி, 13 செப்டம்பர், 2013

எம்.எல்.ஏ-வே 16 ரூட்டு கேக்கறார்...

போக்குவரத்து துறை அமைச்சர் அப்போது அண்ணன் கே.என்.நேரு அவர்கள். தலைமை செயலகத்தில் அவரது அறையில் நுழையும் போதே நல்லக் கூட்டம், ஆளுக்கொரு மனுவோடு.

நானும் என் பங்குக்கு மனுக்களோடு சென்றிருந்தேன். அரசியலில் அவர் என் தந்தையின் சம காலத்தவர். இருந்தாலும் எல்லோருடனும் எளிமையாக பழகக் கூடியவர். “என்னப்பா ? என்றார். “அண்ணே, பஸ் தான்என்று இழுத்தேன். காரணம், கையில் கணக்கில்லா புது ரூட்டுகள் கேட்டு அத்தனை மனு.

K. N. Nehru In Office

மனுக்களை வாங்கிப் பார்த்தார். பக்கத்தில் இருந்த போக்குவரத்து துறையின் உயர் அதிகாரியிடம் கொடுத்தார். “எஸ்.எஸ் பையன்யா, சீக்கிரம் சர்வே பண்ணி குடுங்க என்றார். மனுக்களை படித்த அதிகாரி “சார், மொத்தமே 200 பஸ் தான் வருது. எம்.எல்.ஏ-வே 16 ரூட்டு கேக்கறார் என்றார்.

“என்னப்பா பண்றது என்றார். “சரிங்க அண்ணே, முக்கியமான பஸ் போகாத கிராமத்துக்கு மட்டும் இந்த வருஷம் கொடுங்க. மிச்சத்தை அடுத்த வருடம் கொடுங்க என்றேன். “ டிவிஷ்னல் மேனேஜர சர்வே பண்ணிட்டு, எம்.எல்.ஏ-வ பார்க்க சொல்லுங்கஎன்றார் அதிகாரியிடம்.

ஊருக்கு வந்த பிறகு, சர்வே செய்த டிவிஷ்னல் மேனேஜர் சந்தித்தார். “சார் 8 ரூட்கள் வருது. அத்தனை பஸ் தருவாங்களா ? என்றார். அது அரியலூர் டெப்போவில் 4 பஸ் செந்துறை ஒன்றியத்திற்கும், ஜெயங்கொண்டம் டெப்போவில் 4 பஸ் ஆண்டிமடம் ஒன்றியத்திற்கும் என வந்தது.

நான் அதற்கு ஒரு தீர்வு கொடுத்தேன். டி.எம் “சார், இது போல இதுவரை செய்ததில்லை என்றார். நான் என் லெட்டர்பேடில் நான் சொன்ன வகையில் புது ரூட்களை எழுதி கொடுத்தேன். “நீங்க ஒங்க சர்வே படியும் அனுப்புங்க, என் திட்டப்படியும் அனுப்புங்க என்றேன்.

மீண்டும் கோட்டை, அமைச்சரிடம். என் திட்டத்தை பார்த்த அதிகாரி அமைச்சரிடம் “சார், இது புது மாதிரியா கொடுத்திருக்கிறார் என்றார். “ அண்ணே, 8 பஸ் வேண்டும். ஆனால் நான் 2 பஸ்ல அந்த ரூட் எல்லாம் போகிற மாதிரி கொடுத்திருக்கிறேன் என்றேன்.

“சார், அவன் வேலைக்கு போயிருந்தா, உங்கள மாதிரி அதிகாரியா வந்திருக்க வேண்டிய ஆள், எஞ்சினியர். சரியா தான் இருக்கும். அனுப்புங்க என்று அதிகாரியிடம் சொல்லி மனுவை வாங்கி கையெழுத்து போட்டுக் கொடுத்தார்.


அந்தத் திட்டம்.... (தொடரும்)

சனி, 31 ஆகஸ்ட், 2013

மக்கள் சந்திப்பு - 6, 7 (21.08.2013)

மக்கள் சந்திப்பு - 6, 7 (21.08.2013)

பொன்பரப்பி, சிறுகளத்தூர் ஊராட்சி.

பொன்பரப்பி என்றதும் பலருக்கும் பளிச் என்று தனித்தமிழ்நாடு போராளிகள் நினைவுக்கு வருவார்கள். தோழர் தமிழரசன் காவல்துறை சதியால் வீழ்த்தபட்ட ஊர். 

கடந்த முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த போது, தலைவர் கலைஞர் ஆட்சியில் ஆரம்ப சுகாதார நிலையம் துவங்கப்பட்டது, இது நீண்ட நாள் கோரிக்கை. அரசு மேல்நிலைப்பள்ளியில் 70 லட்சம் செலவில் புதிய கட்டிடம் கட்டப்பட்டது. கால்நடை துறை கிளை மருந்தகம், மருந்தகமாக தரம் உயர்த்தப்பட்டு கட்டிடம் வழங்கப்பட்டது.

பொன்பரப்பி-துளார், பொன்பரப்பி-உஞ்சினி சாலைகள் 15 ஆண்டுகளுக்கு பிறகு புதுப்பிக்கப்பட்டது. சட்டமன்ற உறுப்பினர் நிதியில் பல்வேறு தெரு சாலைகள் சிமெண்ட் சாலை மற்றும் தார்சாலைகளாக தரம் உயர்த்தப்பட்டன. ஆனாலும் இன்னும் பல சாலைகள் மேம்பாடு செய்ய வேண்டிய பெரிய ஊர் ஆகும்.

photo.JPGphoto.JPG

தற்போது மக்கள் சந்திப்பில் அங்கு வைக்கப்பட்ட கோரிக்கைகளை அங்கேயே பரிசீலனை செய்து பரவலாக ஊரின் எல்லா பகுதிக்கும் பிரதிநிதித்துவமாக பணிகளை அறிவித்தேன்.

photo.JPGphoto.JPG

1.குடிகாடு அய்யனார் குளத்தெரு -தார் சாலை
2.வினாயகர் கோவில் தெரு -தார் சாலை
3.ஆதிதிராவிடர் காலனி -சிமெண்ட்சாலை
4.அண்ணா நகர் -சிமெண்ட்சாலை
5.சந்தைக்கு கட்டிட வசதி

சிறுகளத்தூர் ஊராட்சி


photo.JPG


ஊராட்சியின் சமுதாயக்கூடத்தில் சந்திப்பு நிகழ்ந்தது. பெரும்பாலானோர் கோரிக்கைப்படி கடந்த ஆட்சியில் ஏற்படுத்தப்பட்ட நூலகத்திற்கு கட்டிட வசதி, இயங்கிக் கொண்டிருக்கும் அங்கன்வாடி மையத்திற்கு புதிய கட்டிடம், இரண்டு சாலைகள் மேம்பாடு திட்டங்களை அறிவித்தேன்.

photo.JPGphoto.JPG

இங்கும் முந்திரி விவசாயிகளின் பிரச்சினை முக்கியமாக எழுப்பப்பட்டது. முந்திரிக்கு வறட்சி நிவாரணம், மாவட்ட நிர்வாகத்தில் கோரி, ஏற்கப்படாவிட்டால் போராட்டம் அறிவிக்க வேண்டும் என்பதே மக்கள் குரல்.

# தயார் !

மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி - 4,5 (20.08.2013)

மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி-4, 5 (20.08.2013)


பொதுமக்கள் கலந்துக் கொண்டு தங்கள் கருத்துகளை கூறினார்கள். பொதுமக்களின் கருத்துகள் அடிப்படையில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து சில மேம்பாட்டு பணிகளுக்கு உடனடியாக தீர்வு அறிவித்தேன். 

photo.JPG


நாகல்குழி ஊராட்சி: 
அனைவரும் ஒருமித்து கேட்ட முதல் கோரிக்கை, துவக்கப்பள்ளி சாலை அருகே இருப்பதால் குழந்தைகளின் பாதுகாப்புக்காக சுற்றுசுவர். ஒரு தெருவிற்கு குடிநீர் வசதி இல்லாததால் புதிதாக குழாய் அமைத்து தர கோரினர். ஒரு தெருவிற்கு சிமெண்ட் சாலை.

photo.JPGphoto.JPG

வீராக்கன் ஊராட்சி:
இந்த ஊரில் 17 மனுக்கள் அளிக்கப்பட்டன. அவற்றில் 6 மனுக்கள் தனிநபர் பிரச்சினைகள், முதியோர் உதவித் தொகை போன்று. மீதி 11 மனுக்கள் வளர்ச்சிப் பணிகள் குறித்து. 11 மனுக்களில் ஒரு சில பணிகள் கோரப்பட்டு இருந்தாலும் ஒன்பது மனுக்களில் முதல் கோரிக்கையாக ஒரே கோரிக்கை வலியுறுத்தப்பட்டு இருந்தது.

அந்த ஒரே கோரிக்கை, அந்த ஊருக்கு ஒரு சமுதாயக்கூடம் வேண்டும் என்பது. எனவே அதனை ஏற்று அறிவித்தேன்.

பொதுப் பிரச்சினையாக ஒரு அம்சம் அனைவராலும் வலியுறுத்தப்பட்டது, அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என. தமிழக அரசால் வறட்சி நிவாரணம் அனைத்து மாவட்டங்களுக்கும் அறிவிக்கப்பட்டது. அதில் அரியலூர் மாவட்டத்தின் முக்கிய விவசாயமான முந்திரிக்கு நிவாரணம் அறிவிக்கப்படவில்லை.

என்னுடைய பதிவை தொடர்பவர்களுக்கு தெரியும், ஒரு முந்திரி விவசாயி கடன் பிரச்சினையால் தற்கொலை செய்து கொண்ட செய்தியை பதிவு செய்திருந்தேன். அந்த செய்தி தினத்தந்தி பத்திரிக்கையிலும் வந்திருந்தது. அப்போது அதனை திசைதிருப்ப முந்திரிக்கு நிவாரணம் வழங்கப்படும் என மாவட்ட நிர்வாகத்தால் அவசர அவசரமாக கணக்கெடுக்கப்பட்டது. ஆனால் இது வரை வழங்கப்படவில்லை.

இரண்டு வருடமாக மழை குறைவால் நிலத்தடி நீர்மட்டம் இறங்கியுள்ள நிலையில் முந்திரி விவசாயம் முற்றிலும் பொய்த்துப் போயுள்ளது. விவசாயிகள் பெரும் பாதிப்படைந்துள்ளனர். எனவே அரசு நிவாரணம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது பொதுமக்கள் கோரிக்கையாகும்.

அரசு கவனம் செலுத்த வேண்டும்....


Photo: மக்கள் சந்திப்பு - 4, 5, 6, 7

20.08.2013 செவ்வாய் கிழமை 
மாலை 4.00 மணி நாகல்குழி ஊராட்சி
மாலை 5.00 மணி வீராக்கன் ஊராட்சி

21.08.2013 புதன் கிழமை
மாலை 4.00 மணி பொன்பரப்பி ஊராட்சி
மாலை 5.00 மணி சிறுகளத்தூர் ஊராட்சி


வியாழன், 8 நவம்பர், 2012

நூறாண்டு கண்ட கழக இளைஞர் !


கழகத்தில் ஒன்றிய செயலாளர் என்ற பொறுப்பு ஏற்படுத்தப் பட்ட போது, அரியலூர் மாவட்டம், செந்துறை ஒன்றியத்தின் முதல் ஒன்றிய கழக செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் திரு. மு.கந்தசாமி. தொடர்ந்து நான்கு முறை ஒ.செ-வாக பணியாற்றியவர்.

6.10.2012 அன்று நூறாவது பிறந்தநாளை கொண்டாடினார். 1913 ஆம் ஆண்டு பிறந்தவர். ஆனால் இன்றைக்கும் இளைஞராக செயல்படுபவர்...


பள்ளிப்பருவத்திலேயே அரசியல் மீது ஆர்வம் திரும்பியது. பெரியார் பாதையை ஏற்றார்.

வீட்டில் திருமணப் பேச்சுதுவங்கியதும், ஒரே ஒரு நிபந்தனை மட்டும் விதித்தார், “தனது திருமணம் சுயமரியாதை திருமணமாக இருக்க வேண்டும் .

அதன்படி 1936 ஆம் ஆண்டு, திருச்சி மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் வேதாச்சலனார் தலைமையில் சுயமரியாதை திருமணமாக நடைபெற்றது. சுயமரியாதை திருமணத்திற்கு கடும் எதிர்ப்பு நிலவிய நேரம் அது.

1943 ஆம் ஆண்டு பெரியாரை அழைத்து வந்து, பகுத்தறிவு விழிப்புணர்வு பிரச்சாரமாக 51 பேர் பங்கேற்ற “ தீமிதிப்பு “ நிகழ்ச்சியை நடத்தினார். அதில் கரகம் சுமந்து, பகுத்தறிவு பூசாரியாக தலைமையேற்றார்.

1948 ஆம் ஆண்டு சொந்தமாக வீடு கட்டிய போது, முகப்பில் தந்தைப் பெரியார் படத்தை வரைந்து, “ திராவிடநாடு திராவிடருக்கே; தமிழ் வெல்க என்ற முழக்கத்தை செதுக்கியுள்ளார்.

அரியலூர் மாவட்டம், நக்கம்பாடி என்னும் கிராமத்தில் ஊராட்சிமன்ற உறுப்பினராக தனது பொது வாழ்வை துவக்கியவர். மூன்று முறை ஊராட்சி மன்ற உறுப்பினர். தொடர்ந்து மூன்று முறை ஊராட்சி மன்ற தலைவர்.

40 ஆண்டுகளாக, இன்றும் செந்துறை அரசு மேல்நிலைப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர். அதன் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றி வருபவர்.

இன்றும் கழக நிகழ்ச்சி என்றால் ஆர்வத்தோடு பங்கேற்பவர், அது பொதுக்கூட்டம் என்றாலும், போராட்டம் என்றாலும். நேற்று உறுப்பினர் உரிமைச் சீட்டு வழங்கும் நிகழ்ச்சியில் முதல் நபராக வந்து பெற்றுக் கொண்டார்.





நூறாவது பிறந்த நாளை தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா சிலைகளுக்கு மாலை அணிவித்துக் கொண்டாடினார்.கழகத் தோழர்கள் கலந்துக் கொண்டு, அவரது கழகப் பணிக்கு நன்றி தெரிவித்தோம். வாழ்த்தினோம்.

அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து விட்டு படிகளில் இறங்கும் பொழுது, தோழர்கள் அவரைப் பார்த்து, “ சாக்கிரதை, மெதுவாக இறங்கவும் என பதட்ட்த்தோடு சொல்ல,

“ பயப்படாதீர்கள், எதற்கு பயப்படுகிறீர்கள் ? “ என்று சொல்லிவிட்டு கையை உயர்த்தி ஓங்கிய குரலில் பாட ஆரம்பித்தார், (நிஜமாகவே) .... (  படத்தை காணவும் )




# அச்சம் என்பது மடமையடா, அஞ்சாமை திராவிடர் உடமையடா...
    ஆறிலும் சாவு, நூறிலும் சாவு; தாயகம் காப்பது கடமையடா....