பிரபலமான இடுகைகள்

ஜெயலலிதா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஜெயலலிதா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 19 அக்டோபர், 2014

மக்களின் முதல்வரை வரவேற்கிறேன் !

மாண்புமிகு மக்களின் முதல்வர் அவர்களை வருக, வருக என வரவேற்கிறேன்...



எப்படி பார்த்தாலும் நம் முதல்வராக இருந்தவர் அல்லவா, 153 எம்.எல்.ஏக்கள், 37 எம்.பிக்கள் கொண்ட, கோடிக்கணக்கான உறுப்பினர்களை கொண்ட அகில இந்தியக் கட்சியின் தலைவர் அல்லவா, அதனால் வரவேற்கலாம்.

தமிழகத்தை ஆளுகின்ற முதலமைச்சர் ஒ.பி.எஸ் தலைமையிலான அமைச்சரவை பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறைக்கே சென்று தாள் பணிந்து, தண்டனிட்டு வரவேற்கும் போது சாமானியனான நானும் வரவேற்கலாம்.

தமிழகத்தை அறிவுப்படுத்துகின்ற பத்திரிக்கைகளான, நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்ட தினத்தந்தி, தினமலர், தினமணி என இன்னும் பல பத்திரிக்கைகள் பூங்கொத்தோடு வரிசையில் நிற்கும் போது நானும் வரவேற்கலாம்.

ஊழலுக்கு எதிர்ப்பான, நேர்மைக்கு பாடுபடுகின்ற மக்களின் ஆயுதமான ஊடக ஜாம்பவான்கள் தந்தி டீ,வி-யும், புதிய தலைமுறை தொலைக்காட்சியுமே நேரலை ஒளிபரப்பி, மண்டியிட்டு வரவேற்பு அளிக்கும் போது நானும் வரவேற்கலாம்.

தமிழகத்தை நல்வழிப்படுத்தி திசைகாட்டியாக இருக்கின்ற திரையுலகமே பூச்சொரிந்து வரவேற்கும் போது, அந்நியன்களும், சிங்கங்களும் உண்ணாவிரதம் இருந்து வரவேற்க்கும் போது, நான் பச்சைக் கொடி பிடித்து வரவேற்கலாம்.

தமிழகத்தின் அறிவுஜீவிக்களான, இந்தியாவுக்கே வழிக்காட்டுகின்ற சோ, ஆவடி குமார் ஆகியோரே புகழ்மாலை பாடி சிவப்புக் கம்பளம் விரிக்கும் போது, நான் ரத்தினக் கம்பளம் விரித்து வரவேற்கலாம்.

மக்களுக்காகவே பாடுபடுகின்ற, மக்களுக்காகவே குரல் கொடுக்கின்ற, மக்கள் தலைவர்கள் சரத்குமார், பண்ருட்டி வேல்முருகன், செ.கு.தமிழரசன், மதுரை ஆதினம் போன்றோர் ஆரவாரித்து ஆதரிக்கும் போது, நான் கைத்தட்டி வரவேற்கலாம்.

நீதிமன்றத்தால் ஏ.ஒன் அக்யூஸ்ட் என்று குற்றம் சாட்டப்பட்டிருக்கலாம், கடும் கண்டிஷன்களோடு ஜாமீன் கொடுக்கப்பட்டிருக்கலாம், மீண்டும் விசாரணையை எதிர் நோக்கலாம், மீண்டும் தண்டனை உறுதிப்படுத்தப்படலாம். ஆனாலும் வரவேற்கிறேன்.

ஆயிரம் இருந்தாலும், முதல்வராக இருக்கும் போதே குற்றவாளி என குற்றம்சாட்டப்பட்டு கைதானாலும், அது குறித்து கவலைக் கொள்ளாமல், நீதித் துறையையே மிரள வைத்து, பரப்பன அக்ரஹாரத்தில் இருந்து போயஸ் அக்ரஹாரத்திற்கு வருகை தரும் மக்களின் முதல்வரே...

# நானும் வரவேற்கிறேன் !

சனி, 27 செப்டம்பர், 2014

இந்தத் தீர்ப்பை இவரைத் தவிற வேறு யாராலும் கொடுத்திருக்க முடியாது !

இந்தத் தீர்ப்பை இன்னொரு நீதிபதி வேண்டுமானாலும் கொடுத்திருக்க முடியும். இதை விட கடுமையாகக் கூட கொடுத்திருக்க முடியும். இதை விட விரைவாகக் கூட கொடுத்திருக்க முடியும், வேறு யாருக்கும் எதிராக என்றால்….

ஆனால் இந்தத் தீர்ப்பு, சந்திரலேகா அய்.ஏ.எஸ்-க்கு ஏற்பட்ட அவலம் தெரிந்தும், பலம் பொருந்தியவர்களை எதிர்த்துக் கொடுக்கப்பட்ட தீர்ப்பு. இதை வேறு யாராலும் கொடுத்திருக்க முடியாது.

                 

இந்தத் தீர்ப்பு “கண்ணுக்கு எதிரே எதிரிகளே இல்லாத தன்னிகரற்றவருக்கு” எதிராகக் கொடுக்கப்பட்ட தீர்ப்பு. இதை வேறு யாராலும் கொடுத்திருக்க முடியாது.

இந்தத் தீர்ப்பு அரசு நிலத்தை நடத்தைவிதிகளை மீறி வாங்கியிருந்தாலும் மனசாட்சிப்படி திருப்பிக் கொடுத்தவருக்கு எதிராகக் கொடுக்கப்பட்ட தீர்ப்பு. இதை வேறு யாராலும் கொடுத்திருக்க முடியாது.

இந்தத் தீர்ப்பு கீழ்கோர்ட்டில் வழங்கப்பட்ட ஓராண்டுத் தண்டனையை போகிறப் போக்கில் தட்டியவருக்கு எதிராகக் கொடுக்கப்பட்ட தீர்ப்பு. இதை வேறு யாராலும் கொடுத்திருக்க முடியாது.

இந்தத் தீர்ப்பு 18 ஆண்டுகள் இழுத்தடித்து, பல நீதிபதிகளை கதறடித்து, சிதறடித்த வழக்கு வன்மையாளருக்கு எதிராகக் கொடுக்கப்பட்ட தீர்ப்பு. இதை வேறு யாராலும் கொடுத்திருக்க முடியாது.

இந்த தீர்ப்பு நீதிபதி வீட்டுக்கே குடிநீர் இணைப்பை துண்டித்த பலம் பொருந்தியவருக்கு எதிராகக் கொடுக்கப்பட்ட தீர்ப்பு. இதை வேறு யாராலும் கொடுத்திருக்க முடியாது.

இந்தத் தீர்ப்பு வழிக்கு வராத நீதிபதி மருமகன் மீது, கஞ்சா வழக்குப் போடும் அறிவாளருக்கு எதிராகக் கொடுக்கப்பட்ட தீர்ப்பு. இதை வேறு யாராலும் கொடுத்திருக்க முடியாது.

இன்தத் தீர்ப்பு எந்த உருட்டல் மிரட்டலுக்கும் அஞ்சாமல், உயிர் பயத்தை மீறி,  நீதியின் மீதுள்ள பற்றால் கொடுக்கப்பட்ட தீர்ப்பு. இதை வேறு யாராலும் கொடுத்திருக்க முடியாது.

இந்தத் தீர்ப்பு எந்த விலை கொடுக்க தயாராக இருந்தோருக்கும் மசியாமல், நேர்மையின் மீது நம்பிக்கையோடு கொடுக்கப்பட்ட தீர்ப்பு. இதை வேறு யாராலும் கொடுத்திருக்க முடியாது.


# இந்தத் தீர்ப்பை இவரைத் தவிற வேறு யாராலும் கொடுத்திருக்க முடியாது !

ஞாயிறு, 3 ஆகஸ்ட், 2014

பெங்களூரு வழக்கும்.... தில்லி வழக்கும்....

அங்கும் ஒரு வழக்கு நடக்கிறது, இங்கும் ஒரு வழக்கு நடக்கிறது…

ஆனால் தாம் கண்ணை மூடிக் கொண்டதால், உலகம் இருண்டு போகும். அந்த இருட்டில், இது யாருக்கும் தெரியாமலேயே போய்விடும் எனபது பூனைகளின் நினைப்பு. 

பெங்களூரு நீதிமன்றத்தில் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு எப்படி, எத்தனை வருடமாக இழுத்தடிக்கப்படுகிறது என்பது நாடறிந்த உண்மை. வாய்தா வாங்குவதிலேயே கின்னஸ் சாதனை படைக்கும் கட்டத்தில் ஜெ.

2ஜி வழக்கில், தில்லி சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் 2011 ஏப்ரல் 2-ம் தேதி குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட நாள் முதல் இன்று வரை முழு ஒத்துழைப்பு கொடுத்து தன் மீதான வழக்கை நடத்தி வருகிறார் அண்ணன் ஆ,ராசா.

           

வழக்கை இழுத்தடிப்பதற்காக, சி.பி.ஐ தான் நேற்று நீதிமன்றத்தால் கண்டிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற குறிப்புரையையும், நீதிமன்ற உத்தரவையும் படித்தால் புரியும்.

நீதிமன்றக் குறிப்புரை :
கேட்ட கேள்வியையே வெவ்வேறு வகையில் கேட்டும், சுற்றி வளைத்து கேட்டும், ஒரே கேள்வியை திரும்ப திரும்ப கேட்க வேண்டாம் என மூத்த அரசு வழக்கறிஞரை நீதிமன்றம் கேட்டுக் கொள்கிறது.

நீதிமன்ற உத்தரவு :
“ஏற்கனவே 17-07-2014 அன்று, மூத்த அரசு வழக்கறிஞர், ”இது பெரிய வழக்கு என்ற அடிப்படையில் குறுக்கு விசாரணைக்கு தயார்படுத்திக் கொள்ள கூடுதல் நாட்கள் வேண்டும்” என்று கோரியதின் அடிப்படையில் இரண்டு நாட்கள் வழங்கப்பட்டன.

ஆகவே, 18-07-2014 மற்றும் 19-07-2014 ஆகிய வேலைநாட்களில் வழக்கு தள்ளி வைக்கப்பட்டு, இன்று 21-07-2014 எடுத்துக் கொள்ளப்பட்டது. இப்போது மேலும் நாட்கள் கேட்கிறார்.

07-07-2014-ல் குறுக்கு விசாரணை துவங்கியது, ஆனால் இன்னும் முடிவை எட்டவில்லை. முடிவுத் தேதி(கட்-ஆப் டேட்) குறித்து குறுக்கு விசாரணை துவங்கியது, ஆனால் இன்னும் அதே முடிவுத் தேதி குறித்தே விசாரணை நீடிக்கிறது, பல நாட்களுக்குப் பிறகும்.

இதனடிப்படையில் இந்த வேண்டுகோள் நிராகரிக்கப்பட வேண்டியது. ஆனால் எனது விருப்பமின்மைக்கு இடையிலும், வழக்கு விசாரணை தாமதப்படாத வகையில் குறுக்கு விசாரணையை விரைவாக முடிக்க வேண்டுமென்ற உத்தரவோடு, வேண்டுதல் ஏற்றுக் கொள்ளப்படுகிறது.

மூத்த அரசு வழக்கறிஞரின் வேண்டுதலுக்காக குறுக்கு விசாரணை தள்ளி வைக்கப்படுகிறது”

வழக்கமாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் தான் வழக்கை இழுத்தடிப்பார்கள், ஜெயலலிதாவைப் போல. ஆனால் இங்கே அரசுத் தரப்பு இழுத்தடிக்கிறது. இதன் காரணமாக, மூத்த அரசு வழக்கறிஞரை இந்த அளவிற்கு கண்டித்திருக்கிறார் நீதிபதி,

அதே போல நேற்றைய விசாரணையில் பிரதமரின் ஒப்புதல் பேரிலேயே அனைத்தும் நடைமுறைப் படுத்தப்பட்டது என்று அண்ணன் ஆ.ராசா அழுத்தம் திருத்தமாகத் தெரிவித்துள்ளார்.

தானே வாதாடி, இப்போது தானே சாட்சியமும் வழங்கி அரசுத் தரப்பை திணறடித்துக் கொண்டிருக்கிறார் அண்ணன் ஆ.ராசா.
ஆனால் இது எதுவும் உலகின் கண்களுக்கு தெரியக்கூடாதென கண்களை இறுக மூடிக் கொண்டுள்ளன, சில பத்திரிக்கைப் பூனைகள்.

# உதயசூரியனும் உதிக்கையிலே… !

புதன், 26 பிப்ரவரி, 2014

இந்தியாவையே அதிரடிக்கும் தேர்தல் அறிக்கை...

நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை - பிற்சேர்க்கை...

                            

1. கடந்த காங்கிரஸ் ஆட்சியில் இந்தியாவின் நிதி நிலைமை மிகவும் சீர் கெட்டிருப்பதால், அதனை சீராக்க தமிழகத்தின் நிதி நிலைமையை சீர் செய்த, தமிழக நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், இந்தியாவின் நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டு, "அதிரடி"யாக நேர் செய்யப்படும்.

2. தமிழகத்தின் மின் வெட்டை 2 மணி நேரத்திலிருந்து, 4-14 மணி நேரமாக போராடி உயர்த்திய, தமிழக மின்சாரத் துறை அமைச்சர் நத்தம்.விஸ்வநாதன் இந்திய மின்சாரத் துறை அமைச்சராக பதவியமர்த்தமப்பட்டு மின்சாரம் "சரி" செய்யப்படும்.

3. ராஜஸ்தான், குஜராத், உ.பி, ம.பி போன்ற வடமாநிலங்களில், குடிநீர் பஞ்சம் நிலவுவதாக வருத்தத்திற்குரிய செய்திகள் வருகின்றன. எனவே மலிவு விலையில் குடிநீர் விற்க போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, இந்திய போக்குவரத்துக்கு மாற்றப்படுவார்.

4. அமைய இருக்கிற மக்களவையை செயல்பட விடாமல் தடுக்க, மோடியும், ராகுலும் தனித் தனியாக திட்டமிடுவதாக தகவல் வந்துள்ளது. அவர்களுக்கு "உரிய முறையில்" பதிலளிக்க தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், இந்திய சுகாதார அமைச்சராக நியமிக்கப்படுவார்.

5. இந்திய அளவில் இடைத் தேர்தல்கள் வருவது தவிர்க்க இயலாது. அதனை கையாளுவதற்கென்று ஒரு துறை எனது தலைமையின் கீழ் உருவாக்கப்பட்டு, தமிழக அமைச்சர் பா.வளர்மதி படையமர்த்தப்படுவார்.

6. இந்தியா முழுவதும் இருக்கும் மாடுகள் "அம்மா" என்று தான் கதறுகின்றனவா என்று கண்டறியவும், ஒரு மாநிலத்தில் மேயும் மாடுகளை பிடித்து அடுத்த மாநிலத்தில் இலவசமாக கொடுக்கவும், கால்நடைத் துறை ஏற்படுத்தப்பட்டு, தமிழக மந்திரி சின்னையா நியமிக்கப்படுவார்.

7. பாராளுமன்றத்தில் புதிய வரலாறுகளை சொந்தமாகக் கூறவும், கடந்த கால ஆட்சி மீது குறை சொல்லியே எல்லாப் பிரச்சினைகளையும் சமாளிப்பதற்காகவும் உள்துறை அமைச்சராக, தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.பி.முனுசாமி நியமிக்கப்படுவார்.

8. இந்தியாவில் உள்ள எல்லா மாநகராட்சிகளையும் இணைத்து, அந்த கூட்டமைப்பின் மேயராக சைதை துரைசாமி நியமிக்கப்பட்டு, எல்லா இடங்களிலும் அம்மா உணவகம், அம்மா திரையரங்கம், அம்மா மருந்தகம் திறக்கப்பட்டு, அந்த மாநகரங்களும் "சென்னை"யை போலவே 'சிறப்பாக' பராமரிக்கப்படும்.

9. விதி 110-ன் கீழ் புதிய அறிவிப்புகளை வெளியிடும் போது, அதனை வரவேற்று பேசுவதற்காகவே, ஏற்கனவே அனுபவம் வாய்ந்த செ.கு.தமிழரசன், சரத்குமார், தனியரசு ஆகியோரோடு தா.பாண்டியன், பண்ருட்டி, வேல்முருகன் ஆகியோர் நியமன எம்.பிக்களாக நியமிக்கப்படுவார்கள்.

10. தமிழக சட்டசபை போல, இந்திய பாராளுமன்றம் சுமுகமாக நடக்க வழிவகை செய்யப்படும். பேசினால் மைக் கட் செய்யவும், போராடினால் தூக்கி வெளியே போடவும், பேட்டி கொடுத்தால் உரிமை மீறல் பிரச்சினை கொண்டு வரவும் தமிழக சபாநாயகர் தனபால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் சேர்த்து சபாநாயகராக செயல்படுவார்.

# கும்தலக்கா கும்மாவா அம்மான்னா சும்மாவா.....

வெள்ளி, 6 செப்டம்பர், 2013

அம்மா என்றால் அன்பு



முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் Dr. தேவராஜன் அ.தி.மு.கவிலிருந்து நீக்கம் - ஜெயா டி.வி பிளாஷ்.

டாக்டர் தேவராஜன் பள்ளியில் படிக்கும் போது அவரது வகுப்புத் தோழர் கோவிந்தசாமி. பிறகு நெருங்கிய நண்பர்களாகிறார்கள். தேவராஜ் பள்ளிப் படிப்பு முடித்து மருத்துவக் கல்லூரியில் சேர்கிறார். கோவிந்தசாமி தமிழ்நாடு மின்வாரியத்தில் பணியில் சேர்கிறார்.

டாக்டராகும் தேவராஜ் பெரம்பலூர் நகரில் பிராக்டீஸ் செய்கிறார். திராவிடக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு தி.மு.கவில் இணைகிறார். ஒன்றிய செயலாளராக ஆகிப் பணியாற்றுகிறார்.

கோவிந்தசாமி மின்வாரிய தொ.மு.சவில் இணைந்துப் பணியாற்றுகிறார். பெரம்பலூர் நகரத் தி.மு.கவில் 8 -வது வார்டு செயலாளராகவும் செயல்படுகிறார். பள்ளி நண்பர்கள் தேவராஜனும் கோவிந்தசாமியும் இப்போது கழகத் தோழர்களாகிறார்கள்.

இடையில் ம.தி.மு.க துவங்கிய நேரத்தில் பெரும் தலைகள் பலர் அங்கு சென்றார்கள். அப்போது டாக்டர்.தேவராஜன் தொடர்ந்து கழகத்திலேயே பணியாற்றுகிறார். 1996 பொதுத் தேர்தல் வருகிறது. கழகத்தின் சார்பில் பெரம்பலூர் தொகுதியின் வேட்பாளராகப் போட்டியிடுகிறார்.

சட்டப்பேரவை உறுப்பினராக தேர்வு பெற்று 1996 - 2001 ஆம் ஆண்டு பணியாற்றுகிறார். 2001 அ.தி.மு.க ஆளுங்கட்சியாகிறது. பெரம்பலூர் நகராட்சிக்கு இடைத் தேர்தல் வருகிறது. அப்போது கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதால் கழகத்தில் இருந்து நீக்கப்படுகிறார். அ.தி.மு.கவில் இணைகிறார், பணியாற்றுகிறார்.

இப்போது கோவிந்தசாமி தனது மகன் மூர்த்திக்கு திருமண ஏற்பாடு செய்கிறார். கழகக் கொள்கைப்பரப்பு செயலாளர் அண்ணன் ஆ.ராசா அவர்கள் தலைமையில் திருமணம் 01.09.2013 அன்று. 10.30 மணிக்கு மேடை ஏறுகிறோம். திருமண மேடைக்கு டாக்டர்.தேவராஜன் வருகிறார். மேடையில் அழைத்து அமர வைக்கிறார்கள்.

திருமணத்தை அண்ணன் ஆ.ராசா நடத்தி வைக்கிறார். கழகத் தோழர்கள் வாழ்த்தி பேசுகிறார்கள். திருமணத்தை தொகுத்து வழங்கிய நான் டாக்டர்.தேவராஜன் அவர்களை வாழ்த்த அழைத்தேன். அவரும் வாழ்த்தி பேசினார். நிறைவாக அண்ணன் ஆ.ராசா அவர்கள் வாழ்த்தி பேச ஆரம்பித்தார்கள்.

அப்போதே மேடையில் இருந்தவர்களது செல்ஃபோனுக்கு அழைப்பு அலற ஆரம்பித்தது. "என்ன டாக்டர் தேவராஜன் திமுக திருமணத்தில் கலந்து கொண்டாரா ?". உளவுத் துறை காவலர்கள் பாய்ந்து வந்தனர். 11.30க்கு திருமண நிகழ்வு முடிந்து அண்ணன் ஆ.ராசா அவர்களோடு அடுத்த திருமணத்திற்கு கிளம்பினோம்.

அ.தி.மு.கவினர் தலைமையகத்திற்கு ஃபேக்ஸ் கொடுக்க ஆரம்பித்து விட்டதாக தகவல் வர ஆரம்பித்தது. காவல்துறையிடம் அறிக்கை கேட்டிருப்பதாக தகவல். இரவு மணி 8.30. ஜெயா தொலைக்காட்சியில் ஃபிளாஷ் மின்ன ஆரம்பித்தது. நீக்கம். இன்னா ஸ்பீடு....

Dr. தேவராஜன் நேற்று இந்தத் திருமணத்தில் கலந்துக் கொண்டது தான் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதற்கான காரணம், அது தான் அவர் செய்த குற்றம். நாற்பது ஆண்டு கால நண்பரிடம் அவர் காட்டிய அன்புக்கு கிடைத்த கட்சி தலைமையின் பரிசு !

# அம்மா என்றால் அன்பு !

சனி, 2 பிப்ரவரி, 2013

நடிகரே அன்போடு முதல்வர் நான் கொடுக்கும் பேட்டியே..


குணா கமல் மாதிரி உங்கள நினைச்சிக்கோங்க... ம்... ஆரம்பிங்க...............


நடிகர் அன்போடு முதல்வர் நான் நான் கொடுக்கும் இண்டர்வியூ..
சீ... அறிக்கை.... இல்ல அறிவிப்பு வச்சிக்கலாமா ?... இல்ல பேட்டியே இருக்கட்டும்... எங்க படி...

"  
நடிகரே அன்போடு முதல்வர் நான் கொடுக்கும் பேட்டியே..."

பாட்டாவே படிச்சிட்டியா.... அப்ப நானும்...
மொதல்ல நடிகர் சொன்னேன்ல... இங்க ஆக்டர் போட்டுக்க....

ஆக்டர் ஒன் பேட்டி ரிலீசா, எம் பேட்டி இங்க ரிலீஸ்...

" ஆக்டரே உன் பேட்டி ரிலீஸா, என் பேட்டி இங்கு ரிலீஸே..."

உன்ன நெனச்சி பாக்கும் போது கோவம் மனசுல அருவி மாதிரி கொட்டுது.... ஆனா அத பேசனும்னு ஒக்காந்தா அந்த பேச்சுத்தான் வார்த்த...

" உன்னை எண்ணிப் பார்க்கையில் கோபம் கொட்டுது
(அதான்)
அதை சொல்ல நினைக்கையில் வார்த்த முட்டுது "

அதேதான்...ஆஹா... பிரமாதம்...
பேட்டி...பேட்டி...பேசு...

எனக்கு உண்டான ஓட்டு தன்னால விழுந்துடும்
அது என்னமோ தெரியல...
என்ன மாயமோ தெரியல....
எனக்கு ஒன்னுமே தெரியரதில்ல...

இதையும் பேசிரனுமா ?

நடுவுல நடுவுல தீவிரவாதம், பெட்ரோல் பாம், சட்டம் ஒழுங்கு
போட்டுக்கனும்...

இதப் பாரு... எனக்கு என்ன பிரச்சினைன்னாலும் ஆட்சி தாங்கிடும்...
உன் படம் தாங்குமா ? தாங்காது.. தாங்காது...

பிரதமர்... பிரதமர்... பிரதமர்...

அதையும் பேசிரவா ?

அது...கனவு...

ஆ.. என் கனவு என்னன்னு சொல்லாம...
ஏங்க, ஏங்க சிரிப்பா வருது....
ஆனா நான் சிரிச்சி... என் மகிழ்ச்சி உன்ன தாக்கிடுமோ
அப்படின்னு நினைக்கும் போது வர்ர சிரிப்பு கூட நின்னுடுது...

நடிகர் உணர்ந்துக் கொள்ள இது சாதாக் கனவு அல்ல...
கனவு அல்ல....கனவு அல்ல....கனவு அல்ல....

அதையும் தாண்டி பெரிதானது....பெரிதானது....பெரிதானது....

" உண்டான பிரச்சினை தன்னாலே பெரிதானதென்ன
மாயம் என்ன பெட்ரோல் பாமே, பெட்ரோல் பாமே...
என்ன பிரச்சினை ஆன போதும் என் ஆட்சி தாங்கிக் கொள்ளும்
உந்தன் படம் தாங்காது தீவிரவாதமே
எந்தன் கனவு என்னவென்று சொல்லாமல்
ஏங்க ஏங்க சிரிப்பு வந்தது....
எந்தன் மகிழ்ச்சி உன்னை தாக்கும் என்றென்னும் போது வந்த சிரிப்பு நின்றது...
நடிகர் உணர்ந்துக் கொள்ள இது சாதாக் கனவு அல்ல...
அதையும் தாண்டி பெரிதானது....

பிரதமரே தாலாட்டும் சோவே நான் தானே தெரியுமா ?
பி.எம்மே ஆட்சியில் நீயும் பாதியே அது உனக்கு தெரியுமா ?

சுபலாலியே லாலியே லாலி லாலியே
பிரதமரே லாலியே லாலி லாலியே

பிரதமரே தாலாட்டும் சோவே நான் தானே தெரியுமா ? உனக்கு தெரியுமா ? "

( தாலாட்டு முடிந்து ஜெ கண் விழிக்க அடுத்த பாடல் கேட்கிறது )

"இந்தியிலும் பாடுவேன்
வெற்றி நடை போடுவேன்
ஏக்துஜே கே லீயே
ஏன்டி நீ பார்த்தியே
எனக்காக ஏக்கம் என்னம்மா
களத்தூரின் கண்ணம்மா
உனக்காக வாழும் மாமன் தான்
கல்யாண ராமன் தான்
நாள் தோறும் தான் ஆள் மாறுவேன்
நான் தான் சகலகலா வல்லவன்"

# ஏ.ஜி.எஸ் தியேட்டரில் கண்ணாடி உடைந்து சிதறுகிறது.....

வெள்ளி, 4 ஜனவரி, 2013

அம்மா, மோடி கனவு தொடரட்டும்....

மோடியின் பிரதமர் கனவை களவாட முயற்சிக்கும் ஜெயலலிதாவின் நாடகம் தான், தேசிய வளர்ச்சி குழு கூட்டத்தை புறக்கணிப்பு உதார்.

மோடியை, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருக்கும் பிகார்  முதல்வர் நிதிஷ்குமார் ஏற்றுக் கொள்ளமாட்டார். தனக்கு இடையூறாக இருக்கும் நிதிஷை வெளியேற்ற மோடியும் திட்டமிடுகிறார்.

பா.ஜ.கவின் தலைவர்கள் அத்வானி, சுஷ்மா சுவராஜ், அருண் ஜேட்லி ஆகியோருக்கும் ஆசை தான். ஆனால் மோடி போல, குஜராத்  குறிப்பிட்ட ஆதரவுத் தளம் இல்லை. இந்துத்துவா வெறி ஏற்ற மோடி வித்தை தான் உதவும் என்பதால் பேசவும் முடியாது. 

இப்படி பா.ஜ.க-விற்குள்ளும், கூட்டணிக்குள்ளும் மோடிக்கு இருக்கும் எதிர்ப்புகளால், எல்லோரும் ஏற்றுக் கொள்ளக் கூடியவராக ,குஜ்ரால், தேவகௌடா போல ஒரு வாய்ப்புக் கிடைக்காதா என்பது தான் ஜெ-வின் திட்டம். அதற்கு இணக்கம் காட்ட தான், மோடியின் பதவியேற்பில் பங்கேற்று காட்டிய பாசம்.

மத்தியஅரசு ஆட்சி அமைப்பில் முக்கிய பங்காற்ற வேண்டிய, உத்தரப்பிரதேச மாநிலத்தின் நிலை தான் பரிதாபம். ஒரு காலத்தில் இந்திய அரசியலை ஆட்டிப் படைத்த மாநிலம். இங்கு பெரும்பான்மை எம்.பி-களை கைப்பற்றி விட்டால், கூட்டணி பலமே தேவையிருக்காது.

543 எம்.பி-களில் 80 எம்.பிக்கள் உத்தரபிரதேசம் தான். அதனால் தான் இந்த மாநிலத்தை தன் கைக்குள் கொண்டு வந்துவிட வேண்டுமென்று ராகுல்காந்தி தலைகீழாக நின்று முயற்சித்தார்.

ஆனால் சோகம், அவரால் அங்கு துரும்பையும் அசைக்க முடியவில்லை. ஒரு காலத்தில் ஆட்சியில் இருந்த பா.ஜ.க-வாலும் தலை தூக்க முடியவில்லை. 

முலாயம்சிங் யாதவும் (எஸ்.பி), மாயாவதியும்(பி.எஸ்.பி) மாறி மாறி, மியூசிக்கல் சேர் ஆட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். 

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங், எஸ்.பி, பி.எஸ்.பி கட்சிகள் தலா 21,23,21, பாஜ.க கூட்டணி 15 இடங்களும் பிடித்தார்கள். இப்போதும் இதையே பிடித்தால் போதும் என்ற மனநிலையில் தான் இருப்பார்கள்.

அடுத்து அதிக எம்.பி தொகுதிகளை வைத்திருக்கிற மாநிலங்கள் : மகராஷ்டிரம் 48, மேற்கு வங்கம் 42, ஆந்திரா 42, பிகார் 40, தமிழ்நாடு 39.

மகராஷ்டிரத்தில் காங்+பவார் காங், பா.ஜ.க+சிவசேனா இடையே இழுபறி கதைதான். இதில் சிவ்சேனாவிற்கு மோடி மீது விருப்பம் இல்லை.

மேற்கு வங்கத்தில் மம்தாபானர்ஜி சட்டமன்ற தேர்தலை போல் ஸ்வீப் அடிக்கலாம் என்ற ஆசை. கம்யூனிஸ்டுக்கு கைநழுவிய வங்கத்தை எம்.பி தேர்தலில் மீட்க ஆசை. மம்தாவிடம் ஏற்கனவே 19 எம்.பிக்கள், இப்போது கூட செய்யும்.

ஆந்திராவில் கடந்த தேர்தலில், ஒய்.எஸ்.ராஜசேகர் ரெட்டியின் உழைப்பில் கிடைத்த 33 எம்.பி-க்கள் தான் மத்திய காங் அரசின் அடித்தளமே. ஆனால் இப்போது ஒய்.எஸ்.ஆர்.ஜெகன்மோகன் ரெட்டி என்ற புயல் வீச உள்ள நிலையில் காங் எங்கு தரைதட்டும் என்று தெரியாத நிலை.

பிகாரில் நிதிஷ் வசம் 20 எம்.பி-களும், அவரது துணையால் பா.ஜ.க வசம் 12 எம்.பி.களும் உள்ளனர். நிதிஷ் கை தான் மீண்டும் ஓங்கும் நிலை.

39 எம்.பி.கள் கொண்ட தமிழகத்தின் ஆதிக்கம் தான் 1999-லிருந்து மத்திய அரசியலில் தொடர்கிறது. 

இந்த முறை பெரும்பான்மையான எம்.பி.களை கைப்பற்றினால், பிரதமர் அல்லது துணைபிரதமர் என்ற கனவில் ஜெ உள்ளார். 

தமிழகம் இருளாக இருப்பதால், அம்மா தூக்கம் கலையாமல், கனவு சிதறாமல் மூழ்கியுள்ளார்.

இன்னும் பதினோரு பெரிய மாநிலங்கள் உள்ளன, தொடர்ந்து பார்ப்போம்...

அது வரை அம்மா, மோடி கனவு தொடரட்டும்....

ஞாயிறு, 4 நவம்பர், 2012

சாண்டி புயலும், நீலம் புயலும்.....


சாண்டிப் புயல் அமெரிக்காவை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இன்னொருபுறம் அதிபர் தேர்தலுக்கான உச்சக் கட்ட பிரச்சாரம். தற்போதைய அதிபர் ஒபாமா உச்சக் கட்ட தேர்தல் பிரச்சாரத்தில்...

தனது தேர்தல் பிரச்சாரத்தை ஒத்தி வைத்து விட்டு, சாண்டி புயலை எதிர் கொள்ள அமெரிக்க மக்களை தயார் செய்யும் பணியில் இறங்குகிறார் ஒபாமா. புயல் முடிந்தப் பின்னும் மீட்புப் பணிகளில் தீவிரம் காட்டுகிறார்.

மீட்புப் பணிகளை முடித்து , நேற்று சனிக்கிழமை தான் பிரச்சாரத்திற்கு திரும்பியுள்ளார்....

********     ****** *****

நீலம் புயல் சென்னையை நெருங்குகிறது...

சென்னையில் சட்டமன்றத்தில் தமிழக முதல்வருக்கு லட்சார்ச்சனை. அம்மா மனம் மகிழ்ந்து, உளம் நெகிழ்ந்து, முகம் மலர்ந்து ரசித்துக் கொண்டிருக்கிறார். மின் வெட்டுக்கு கடந்த திமுக அரசே காரணம் என ருத்ர தாண்டவம் ஆடுகிறார்.

புயலைத் தொடர்ந்து புதியதலைமுறை ஓடி கொண்டிருக்கிறது. புரட்சித் தலைவி ஓய்வெடுக்க சென்று விடுகிறார்.

புயல் அடித்து ஓய்ந்து, இரண்டு நாள் கழித்து, புரட்சியின் நிதி ஓ.பி.எஸ் உரிய நேரத்தில், உரிய தொகை நிவாரணத்திற்கு ஒதுக்கப்படும் என மின்னல் வேகத்தில் அறிவித்திருக்கிறார்.

 **********   ************************

2011 டிசம்பர், தானே புயல்....

கடலூர் மாவட்டமே இயற்கையின் கோரத் தாண்டவத்தில் சிக்கி சின்னாபின்னமாகி கிடக்கிறது. முதல்வர் ஜெயலலிதா, சேதத்தை பார்வையிட செல்கிறார். ஹெலிகாப்டரில், நேரடியாக கடலூர் செல்கிறார். 5 நிமிடம் மட்டுமே நிவாரணம் வழங்கிவிட்டு கிளம்புகிறார்.

தலைவர் கலைஞர் கார் மூலம், சென்னையிலிருந்து திருவாரூர் வரை, கடலூர் மாவட்டம் வழியாக பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு, விவசாயிகளை சந்தித்து ஆறுதல் கூறுகிறார்.

கடலூர் மக்கள் ஒன்பது தொகுதிகளையும் அம்மா கூட்டணிக்கு வாரி வழங்கி ஆறு மாதங்களே ஆகியிருந்த நேரம்.
******** ******************

கடந்த திமுக ஆட்சி...

கடும் மழையால், வெள்ளம் பெருக்கெடுத்து, செங்குன்றம் புழல் ஏரி நிரம்புகிறது. கரையின் ஒரு இடத்தில் நீர் கசிவு ஏற்பட்டு, உடைப்பு ஏற்படும் அபாயம். நள்ளிரவு நேரம் , முதல்வர் இல்லத்திற்கு தகவல் வருகிறது. முதல்வருக்கு தெரிவிக்கப் படுகிறது.

பொதுப்பணி துறையின் அமைச்சர் துரைமுருகனின் மாமனார் இறந்து துக்க நிகழ்ச்சியில் இருப்பதை அறிந்து, அவரை வரவேண்டாம் என்று சொல்லிவிட்டு முதலவர் தலைமைச் செயலகம் நோக்கி விரைகிறார். அதிகாலை 2.30 மணி.

அதிகாரிகளுடன் ஆலோசித்துவிட்டு புழல் ஏரிக்கு செல்கிறார். மணி 4.00. முதல்வர் வருகையை அறிந்த அதிகாரிகள் அங்கே குவிகின்றனர். உடைப்பை அடைக்கும் பணி தீவிரப் படுத்தப் படுகிறது.

அந்த நேரத்தில் சீர் செய்யப் பட்டிருக்காவிட்டால், சென்னையில் பெருத்த நாசம் ஏற்பட்டிருக்கும். சென்னை காப்பற்றப்பட்டது. உடைப்பு முழுவதும் அடைத்து முடித்த பிறகு, காலை தான் வீடு திரும்புகிறார் கலைஞர்.

# நீங்கள் தான் நீதிபதி. நீங்களே ஒப்பிட்டுக் கொள்ளுங்கள்....

வெள்ளி, 2 நவம்பர், 2012

சென்றோம், குரலெழுப்பினோம், வெளியேற்றப்பட்டோம்....

31.10.2012 அன்று காலை சட்டமன்றத்தில் கேள்வி நேரம் நடைபெற்றது. வழக்கம்போல் அம்மாவை வணங்கி கேள்விகள் கேட்கப்பட, அமைச்சர்களும் அம்மாவை துதித்து பதிலளித்துக் கொண்டிருந்தனர், அம்மா இல்லாமலே.


இடையில் ஜெ வருவதாக எண்ணி ஓ.பி.எஸ் எழ, அவரைப் பார்த்து மற்ற அமைச்சர்கள் எழ, அவர்களை பார்த்து அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் எழுந்து நிற்க, நொடிகள் கடந்து, நிமிட
ம் கடந்து, ஐந்து நிமிடம் ஆகியும் ஆளைக் காணோம். அனைவரும் உட்கார, ஓ.பி.எஸ்க்கு அழைப்பு வந்தது. உடன் விஸ்வநாதன் மற்றும் முனுசாமி சென்று வந்தனர்.


பிறகு ஜெ சபைக்கு வர, முகத்தில் உக்கிரம். சூழல் தெரியாமல், டாக்டர் கிருஷ்ணசாமி விபத்துகள் நிறைய நேர்வது குறித்து கவலை தெரிவித்து புள்ளிவிவரங்களை அடுக்கி, சாலைகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகளை பேசிக்கொண்டிருந்தார்.


போக்குவரத்துறை அமைச்சர் பதிலளிக்க வேண்டிய கேள்வி. ஆனால் டாக்டர் பேச்சில், இடைமறித்த ஜெயலலிதா, " போக்குவரத்து துறை அமைச்சரிடத்தில் நெடுஞ்சாலைத் துறை சம்பந்தமாக கேள்வி கேட்டால் எப்படி பதிலளிக்கமுடியும் ? " என முகம் சிவக்க கேட்க, டாக்டர் பாதிலேயே உட்கார்ந்துவிட்டார்.


இப்படியாக கேள்வி நேரம் முடிந்தவுடன், அனைத்து எதிர்கட்சி உறுப்பினர்களும் எழுந்து மின்சாரம் குறித்து, ஒத்திவைப்பு தீர்மானத்தை எடுத்துக் கொள்ள வேண்டும் என கேட்க சபா மறுக்க, சூழ்நிலை சூடாக ஆரம்பித்தது.


சட்டமன்ற தி.மு.க துணைத் தலைவர் துரைமுருகன் பேச நேரம் கேட்க, சபா மறுக்க, நாங்கள் எல்லோரும் எழுந்து குரல் கொடுக்க ஆரம்பித்தோம். முதல்வர் பதிலளிப்பார் என்பதையே சபா திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருந்தார்.


எங்கள் கோரிக்கை சபையின் வழக்கமான அலுவல்களை ஒத்திவைத்து, தமிழ்நாட்டின் மின்பற்றாக்குறை நிலவரம் குறித்து, அனைத்துக் கட்சி தலைவர்களும் கருத்து தெரிவித்து அதன் மீது பதில் அளிக்க வேண்டும் என்பது.


ஆனால் ஆட்சியாளர்கள் குற்றங்களை காதில் வாங்கத் தயாராக இல்லை. வாழ்த்துப்பா என்றால் மட்டும் அனைவரும் இசைக்கவேண்டும்.


சபா எங்களை வெளியேற்ற உத்தரவிட்டார். சபைக்காவலர்கள் எங்களை இழுத்தும், தள்ளியும் வெளியேற்ற, நாங்கள் முழக்கம் எழுப்பிய படி வெளியேறினோம்.


" காணோமே, காணோமே, மின்சாரத்தை காணோமே. சொன்ன வாக்கு, என்ன ஆச்சு, மின்சாரம் தான் என்ன ஆச்சு "


# தமிழகத்தின் வீதிகளிலும் ஒலிக்கும் பொதுமக்களின் " மவுன" முழக்கமும் இதுதானே...

புதன், 31 அக்டோபர், 2012

நீர் தான் விஜயசாந்த் என்பவரோ ?

பத்திரிக்கைகள் எல்லாம் இதே பரபரப்பு. ஜெயில்லலித்தை சந்திக்க, விஜயசாந்த்-க்கு அனுமதி கிடைக்குமா ?. ஒரு வேளை விஜயசாந்தின் மனுவை, ஜெ ஏற்றுக் கொண்டு சந்திக்க ஒப்புக்கொண்டால்....

விஜயசாந்த் ஜெ-வின் அலுவலகத்தில் நுழைகிறார்.....
ஜெ : நீர் தான் விஜயசாந்த் என்பவரோ ?
வி : ஆங்.... இதிலேயே சந்தேகமா ?
ஜெ : கேட்ட கேள்விக்கு பதில்...
வி : ம்ம்ம்ம். அதேதான்...
ஜெ : ஏது இவ்வளவு தூரம் ?
வி : கடையிலிருந்து பக்கம் தான்...
ஜெ : வந்த நோக்கம் என்னவோ ?
வி : உரிமை நாடி வந்துள்ளேன்...
ஜெ : என்ன உரிமை ?
வி : என் எம்.எல்.ஏக்களை மீட்க வந்தேன்...
ஜெ : எனக்கும் உரிமை உண்டு.

வி : உரிமை, உரிமை. எப்படி உரிமை, ஏது உரிமை?  சீட்டு கொடுத்தாயா ? நோட்டு கொடுத்தாயா ? எம் வேட்பாளர்களுக்கு குட்டுதான் வைத்தாயா ? அவ்வப்போது அடித்து தான் விளையாடினாயா ? கட்சிக்கு தலைவரா ? பொதுச் செயலாளரா ? உனக்கு என்ன உரிமை ?
ஜெ : பிரச்சாரம் செய்தேன், வாக்கு கேட்டேன், வேறென்ன செய்ய ?
வி : இதெல்லாம் என் டையலாக். நீங்கள் பேசக் கூடாது.
ஜெ : சரி. நீரே பேசும்...

வி : அக்காங்க் , இந்தா புள்ள இந்த தமிழ் நாட்டுல ஒரே சட்டசபை, அதில 234 எம்.எல்.ஏ , அதில என் கட்சிக்கு 29 பேர், அதில நாலு பேர் இப்போ உன் சைடு. இன்னும் இருக்குன்னு நீ சொல்ற. நான் சொல்றன், இல்லன்னு. இந்த நாட்டுக்கு பாகிஸ்தான் தீவிரவாதிகளால பிரச்சின வர்ரப்போ நான் தான் போராடனும். ஏன்னா, ராணுவம் என்னத் தான் கூப்பிடும். நம்ம நாட்டு ராணுவத்துல மூனு பிரிவு, அதுல இருக்குற சிப்பாய்ங்க 23லட்சத்து57 ஆயிரத்து 365 பேர். அதுல விமானப்படைல...
ஜெ : ( இடைமறித்து ) வெயிட்,வெயிட். இந்தப் புள்ளிவிவரம்லாம் என் கிட்ட வேண்டாம்.  ஓ.பி.எஸ் கிட்ட சொல்லு , அவர் தான் நிதி.
வி : விமானப்படைல 5 லட்சத்து 42ஆயிரத்து....
ஜெ : அய்யோ.... ( மயக்கமாகிறார் )
வி : (அங்கு கட்டிப் போடப்பட்டிருக்கிற நான்கு பேரின் கட்டுகளை அவிழ்த்து ) ஓடி வாங்க ஓடிடலாம்....

( பிண்ணனியில் " அந்த வானத்த போல மனம் படைச்ச மன்னவனே ..." பாடல் ஓடுகிறது )

படத்திற்கும், கதைக்கும் தொடர்பில்லை. கதையில் வரும் சம்பவங்கள் அத்தனையும் கற்பனையே.

# சுழி குற்றப் பிரிவுலிருந்து வர்றீங்களா

திங்கள், 22 அக்டோபர், 2012

அது ஒரு கனாக் காலம்...


கடந்த தி.மு.க ஆட்சிக்காலம்....

இரவு நேரம். சென்னையின் ஒரு பகுதியில் மின்தடை ஏற்படுகிறது. டிரான்ஸ்பார்மர் சீர்கெட்டதால் என தெரியவருகிறது. வழக்கம் போல் ஆற்காட்டாருக்கு அர்ச்சனை நடக்கிறது. மின்வாரிய அலுவலகத்தை தொலைபேசியில் தொடர்பு கொள்கிறார்கள், போனை யாரும் எடுக்கவில்லை.

ஒரு நடுத்தர வர்க்கத்து பெண் முதலமைச்சர் இல்ல தொலைபேசி எண்ணை தேடுகிறார். கிடைக்கிறது. தொடர்புகொள்கிறார், யாராவது உதவியாளர்கள் தொலைபேசியை எடுப்பார்கள் என்ற எண்ணத்தோடு.

" வணக்கம். கருணாநிதி பேசுகிறேன் " என்ற கனிவான கம்பீரக் குரல். இந்தப் பெண் திகைத்துப் போகிறார். தடுமாறி விபரத்தை சொல்கிறார். எந்தப் பகுதி என்று விபரம் கேட்டுக் கொள்கிறார் தலைவர் கலைஞர். உடனடியாக அதிகாரிகள் தொடர்பு கொண்டு சீர் செய்தது தனிக்கதை.

இன்று முதல்வர் இல்ல தொலைபேசி எண் கிடைத்தால், யாராவது பேச முன்வருவார்களா தைரியமாக ? நிச்சயம் தற்போதைய முதல்வர் எடுக்கமாட்டார் என்பது அனைவருக்கும் தெரியும். முதல்வரிடம் அல்ல, உதவியாளர்களிடம் பேசவே பயப்படுவார்கள் பொதுமக்கள் இன்று .

# ஏங்கம்மினி, கெரண்ட் இல்லாதது அப்புறம்  உங்களுக்கு எப்படி தெரிய வருங்க ? செரிதானுங்கோ நீங்க சொல்றதும்....