பிரபலமான இடுகைகள்

புதன், 29 ஜனவரி, 2014

சிட்டுக்குருவி, சிட்டுக்குருவி சேதி தெரியுமா ?

சிட்டு குருவிகளின் வாழ்வும் வீழ்ச்சியும் – ஆதி வள்ளியப்பன்.
                

புத்தகக் காட்சியில் வாங்கிய புத்தகத்தில் முதலில் படிச்சது. சிட்டு குருவி எல்லோரது வாழ்விலும் பின்னி பிணைந்தது. சமீப காலமாக சிட்டுகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது என்ற பரபரப்பால் இந்தப் புத்தகம் கவனம் ஈர்த்தது.

மக்கள் பிரச்சினையை விட சிட்டு பிரச்சினை முக்கியமா என ஒரு எண்ணம் ஏற்படும். இதுவும் மக்கள் பிரச்சினையே. எல்லா உயிரிகளும் இணைந்து ஒரு உயிரி வட்டம் உண்டு, அதில் ஒரு கண்ணி விடுபட்டாலும் உலக இயக்கம் பாதிக்கப்படும்.

விவசாயத்திற்கு ஊறு விளியவிக்கக் கூடிய பூச்சிகளை, புழுக்களை அழிப்பதற்கு சிட்டு போன்ற பறவைகள் அவசியம். அது குறித்த விவரங்களை கொண்டதே இந்தப் புத்தகம்.

சமீபத்திய ஆய்வில் பாம்பும் காப்பாற்றப் படவேண்டிய ஒரு ஜீவன் என்பது வெளிப்பட்டுள்ளது. வயல் வெளிகளில் நாசம் செய்யும் எலிகளை கட்டுப்படுத்த பாம்பு வாழ வேண்டும். அது போல் தான் சிட்டும்.

சிட்டுக் குருவிகளை அறிமுகப்படுத்துவதுடன், அதன் வாழ்க்கை முறை, அழிவு, கணக்கெடுப்பு, காப்பற்ற வழிமுறை என பல அத்தியாயங்களாக தொகுக்கப் பட்டுள்ளது.

சிலரது வாழ்வில் சிட்டு ஏற்படுத்திய அனுபவங்களை இணைத்திருப்பது சுவாரஸ்யம், நமக்கும் மலரும் நினைவுகள். அதன் படங்களையும் தொகுத்திருப்பது பயனுள்ளது.

பாரதியாருக்கு பிடித்தமான பறவை, அவரது கவிதையில் இடம் பிடித்தது. பறவையியல் ஆராய்ச்சியாளர் சலீம் அலி தன் சுயசரிதைக்கு வைத்த தலைப்பு “ஒரு சிட்டுக் குருவியின் வீழ்ச்சி” . இப்படி பல சுவாரஸ்ய தகவல்கள்.

மேம்போக்காக இல்லாமல் சற்றே ஆய்வுகளையும் இணைத்து, அதே சமயம் இலகுவாகவும் கொடுத்திருப்பது புத்தக ஆசிரியரை பாராட்டத்தக்கது. சுற்று சூழலியல் ஆர்வம் உள்ளவர்கள் மாத்திரம் அல்ல அனைவருக்குமான புத்தகம்.

தலைப்பு : சிட்டு குருவிகளின் வாழ்வும் வீழ்ச்சியும்
ஆசிரியர் : ஆதி வள்ளியப்பன்
வெளியீடு : தடாகம் மற்றும் பூவுலகின் நண்பர்கள்
விலை : ரூ. 70/-

# சிட்டுக்குருவி, சிட்டுக்குருவி சேதி தெரியுமா ?

செவ்வாய், 28 ஜனவரி, 2014

பேஸ்புக் மவுசு குறைகிறது - சமீபத்திய சர்வே

பொதுவாக முகநூல் மற்றும் இணைய பயன்பாடு குறைந்திருக்கோ அப்படின்னு ஒரு சந்தேகம் கொஞ்ச நாளா எனக்கு. பணி நெருக்கடியால, நான் அதிகம் வர முடியாததால இப்படி எனக்கு தோனுதோன்னு இருந்தேன். தினத்தந்தியில் ஒரு செய்தி, “அமெரிக்காவில் பேஸ்புக் மவுசு குறைகிறதுஎன சமீபத்திய சர்வே அடிப்படையில்.

                        

பேஸ்புக் நல்லதா, கெட்டதா அப்படிங்கிற விவாதமும் அடிக்கடி இங்க வருது. போதை மாதிரி ஆயிடுச்சி, சண்டை நடக்குது, பலப் பிரச்சினைகளுக்கு வழி வகுக்குது இப்படி வாதங்கள் பல. .  கொஞ்சம் பின்னோக்கி பார்த்ததில் என்னை பொறுத்த வரை பேஸ்புக் நல்ல முறையில் பயன்படுவதாகவே நினைக்கிறேன்.

நான் இவ்வளவு எழுத முடியும் அப்படிங்கறத, நானே தெரிஞ்சிக்கிட்டதற்கு பேஸ்புக் தான் காரணம். கடந்த வருடம் முழுதும் நிறைய எழுதியிருக்கேன் அப்படிங்கறத இப்போ உடகார்ந்து புரட்டும் போது தான் தெரியுது. சில விஷயங்கள் தேவையில்லாததாக இருந்தாலும் பல விஷயங்கள் பிரயோசனமா அமைஞ்சதுன்னே நினைக்கிறேன்.

சட்டமன்ற நிகழ்வ விளையாட்டா தான் எழுத ஆரம்பிச்சேன். பிரச்சினை வரும்னு சிலர் எச்சரிச்சாலும், உள்ளே வராதப் பிரச்சினையா இங்க வரப் போகுதுன்னு தொடர்ந்தேன். பலரும் பாராட்டினார்கள். ஹைலைட்டா நக்கீரன் இதழ்ல எழுதற வாய்ப்பு கிடைச்சது. பேஸ்புக் இல்லன்னா இது சாத்தியம் இல்ல.

எனக்கு மட்டும் பேர் கிடைச்சதினால இத சொல்லல. நான் சிலரை பற்றி எழுதிய பிறகு அவர்களுக்கு கிடைச்ச ஊடக வெளிச்சம் மகிழ்ச்சியானது. என் தொகுதியை சேர்ந்த கண்பார்வையற்றவரான கிளியூர் கொளஞ்சிநாதன் பற்றி எழுதினேன். 

என் செய்திக்கு பிறகு புதிய தலைமுறைவார இதழ் அவர் குறித்து கவர்ஸ்டோரி வெளியிட்டது. அதை பார்த்த சென்னையை சேர்ந்த ஒருவர் மாதம் தோறும் அவருக்கு உதவி செய்கிறார். தர்மபுரி வினோத் இந்தியன் பில்லர்ஸ்அமைப்பு மூலம் ரத்ததானத்திற்கு பெரும் பணி ஆற்றுவதை எழுதினேன், ஆனந்த விகடன் ஸ்டோரி வெளியிட்டது.

கண்பார்வை குறைவுடைய மாணவி கண்மனி +2ல் 1148 மதிப்பெண்கள் பெற்றதற்கு, நேரில் சென்று பாராட்டு தெரிவித்து பகிர்ந்து கொண்டதை 2803 பேர் லைக் செய்தும், 1441 பேர் ஷேர் செய்த செயல் நல்ல செயல்பாடுகளுக்கு நம்பிக்கை அளித்தது.

எனது தந்தைக்கு பார்க்கின்ஸன் நோய்க்கு ஹைதரபாத்தில் அறுவை சிகிச்சை செய்ததை, இங்கு விரிவாக பகிர்ந்து கொண்டதால், இன்று வரை அது குறித்து பலரும் என்னிடம் விபரம் கேட்டு பயன் அடைகின்றனர்.

என்னுடைய ரயில் பயணங்கள் பற்றிய பதிவுகள் பலருக்கு புதிய ஆர்வத்தை உண்டாக்கி, ரயிலில் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ரயில்வே துறையின் அதிகாரப்பூர்வமற்ற தகவல்.

தொகுதியை சேர்ந்த புதிய நண்பர்கள் பலர் கிடைத்தது பேஸ்புக் மூலம். இவர்கள் மூலம் பல செய்திகள், பிரச்சினைகள் பார்வைக்கு வந்தது. அதில் சில தீர்வும் கிடைத்தது.

இன்னும் பல துறையை சேர்ந்த நண்பர்கள் தமிழ்நாடு முழுதும் கிடைத்துள்ளனர். அவர்கள் மூலம் பல துறை குறித்து அறிவு பெற வாய்ப்பு. அறிவுப் பசி தீர்ந்த பிறகு முகநூல் நட்பு முகம்மது அலி வீட்டில் சாப்பிட்ட பட்டியல போட்டு வயிற்றெரிச்சலும் வாங்கியாச்சி.

அப்புறம் பத்திரிக்கை உலக ஜாம்பவான்கள் நட்பும் கிடைச்சிது. ஆனந்தவிகடன், குமுதம் ரிப்போர்ட்டர் ஆசிரியர், உரிமையாளர்களுக்கு ஓப்பன் லெட்டர் எழுதி விரோதித்துக் கொண்டதும் இங்கு தான். 

இருபது ஆண்டுகள் கழித்து ஒரு கர்நாடகா நண்பரை கண்டுபிடிக்க முகநூல் தான் உதவியது. இல்லை என்றால் அவரை கண்டுபிடிக்க வாய்ப்பே இல்லை.

இசை ரசனையை வெளிப்படுத்தி பாராட்டும், பாட்டும் வாங்கிய அனுபவமும் உண்டு. மனதில் பட்டதை கவிதயா நினைச்சி எழுதி மிரட்டுகிற துன்பியல் சம்பவங்களும் அரங்கேறின.

மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் ஐ.பி.செந்தில்குமார் ஒரு முறை கேட்டார், “செம்பருத்தி கேட்ட நூலகம் கட்ட தொகை ஒதுக்கிட்டீங்களா ?”. நெருங்கிய உறவினர் கேட்டார் கிண்டலாக, “ நாங்க போன் செஞ்சா எடுக்க மாட்டேங்கறீங்க, தொகுதியில இருந்து ஏழாவது படிக்கிற மதுமிதா போன் பண்ணா பதில் சொல்றீங்க”. பதிவின் ரீச் தெரிந்தது. 

இவ்வளவு விஷயங்கள் இருந்தாலும் அவ்வப்போது ஒவ்வொரு குரூப்பிடம் சிக்கி ரணகளமாவதும் உண்டு. ஒரு எம்.எல்.ஏ-வுக்கு வேற வேலை இல்லையா, பேஸ்புக்ல சுத்தறாருன்னு மாசம் ஒரு பஞ்சாயத்தும் உண்டு.

குடும்பத்திலேயேயும் பிரச்சினை. இதே வேலையான்னு கேட்டு பார்த்திட்டு, தண்ணி தெளிச்சு விட்டுட்டாங்க வீட்டுக்காரம்மாவும், பெரிய பையனும். ஆனா சின்ன பையனுக்கு தான் தீராத பிரச்சினை, “ஏம்ப்பா கேம் ரெக்குவஸ்ட் கொடுத்தா, விளையாட மாட்டேங்கறீங்க ?”

#
சரி, நாளைக்கு என்ன ஸ்டேடஸ் போடலாம் ?

வியாழன், 23 ஜனவரி, 2014

"நில்லுங்க" என்றார் பேராசிரியர்...

இரவே பேராசிரியர் அவர்களது கையெழுத்தை பெறுவது என முடிவெடுத்தப் போது, இரவு 8.30. மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்ப்பாளர் அண்ணன் திருச்சி.சிவா அவர்களது வேட்புமனுவை தயாரிக்கும் பணியில் இருந்தோம் அப்போது, அறிவாலயத்தில்.

வழக்கறிஞர்கள், ஆடிட்டர் என்று ஒரு குழுவே அந்தப் பணியில் இருந்தது. கழகத்தின் வேட்பாளர் என்ற அங்கீகாரச் சான்றிதழ் வேட்புமனுவோடு இணைக்கப்பட வேண்டும். அதில் கழகப் பொது செயலாளர் என்ற முறையில் பேராசிரியர் அவர்கள் கையொப்பம் இட வேண்டும்.

                                             

அப்போது தான் தலைவர் கலைஞர் அவர்கள் புறப்பட்டிருந்ததால், நிர்வாகிகளும் கிளம்பி இருந்தனர். அதனால் என்னை சென்று கையொப்பம் பெற்று வர, அண்ணன் சிவா அவர்களும், கொறடா அண்ணன் சக்கரபாணி அவர்களும் பணித்தார்கள்.

பேராசிரியர் அவர்களது உதவியாளர் நடராஜனை தொடர்பு கொள்ள முயன்றோம், முடியவில்லை. அவரது ஓட்டுனரை தொடர்பு கொண்டோம். "அய்யா பத்தரை மணிக்கு தான் படுப்பார்கள். சென்றால் கையெழுத்து பெறலாம்" என்றார்.

தயக்கத்தோடு சென்றேன், ஓய்விலிருந்தால் தொந்தரவாகி விடுமோ என்று. வீட்டில், உதவியாளர் ஒரு சிறு பையன் இருந்தார். எனக்கு அறிமுகம் இல்லாதவர். "சாப்பிடுகிறார்கள். காத்திருங்கள்" என்றார். பெயர் கேட்டார், சொன்னேன்.

அய்ந்து நிமிடத்தில் அழைத்தார். உள் அறையில், ஒரு சுழல் நாற்காலியில் பேராசிரியர் அமர்ந்திருந்தார். உள்ளே நுழைந்தேன். மேசையில் பேனாவைத் தேடிக் கொண்டிருந்தார். கைலியும், தைத்த பனியனுமான எளிய கோலம்.

அறையில் ஏ.சி கிடையாது. ஒரு நாற்காலி, மேசை தவிர, அறை முழுதும் கண்ணாடி அலமாரிகள். அலமாரி முழுதும் புத்தகங்கள், ஆயிரக் கணக்கில் இருக்கும். செல்வம். மேசை முழுதும் புத்தகங்களே. இரண்டு புத்தகங்கள் விரித்தபடி இருந்தன. பக்கத்தில் குறிப்பெடுக்க நோட்டு.

பேனாவை எடுத்தார். படிவத்தை கொடுத்தேன். கையொப்பமிட்டார். மணி 9.30. எத்தகைய அறிவார்ந்தவரின் கையெழுத்து. எத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த கையெழுத்து. பெருமிதமாய் வாங்கி பைலில் வைத்தேன்.

வணங்கி விடை பெற்றேன். அப்போது தான் என்னை கவனித்தார், அது வரை தன் பணியில் கவனமாய் இருந்தவர். நான் அறைக் கதவை தாண்டி வெளியே வந்து விட்டேன். "நில்லுங்க" என்றார் பேராசிரியர். நின்றேன்.

"ஆண்டிமடம் சிவசங்கரா ?" என்றார். திரும்பி அறைக்குள் சென்றேன். "அறிவாலயத்தில் இருந்து வந்திருக்கிறார்கள் என்றதால் கவனிக்கவில்லை" என்றார். நானும் பேண்ட், சர்ட்டில் இருந்தேன். அருகில் அழைத்து கைக்குலுக்கி, தோளில் தட்டிக் கொடுத்தார்.

# அன்போடு இயைந்த வழக்கென்ப !

புதன், 22 ஜனவரி, 2014

நானும் புத்தகம் வாங்கினேங்க, சரி லிஸ்ட் ரிலீஸ்....

நான் வாங்கின புத்தகங்கள பட்டியல் போட்டா, காமெடியா பார்ப்பீங்களேன்னு தான் புத்தகக் காட்சி போனதோட நிறுத்தினேன். சிலருக்கு சந்தேகம் வந்துடுச்சி, நானும் டெல்லி அப்பளம் சாப்பிடத் தான் போனேனோ, அப்படின்னு...

                    

நானும் புத்தகம் வாங்கினேங்க, சரி லிஸ்ட் ரிலீஸ்....

1. கையில் அள்ளிய கடல் / கலைஞர் / திருமகள் புத்தக நிலையம் / பேட்டிகள், அறிக்கைகள்
2. ஒற்றை வைக்கோல் புரட்சி / மசானபு ஃபுகோகா / எதிர் வெளியீடு / இயற்கை வேளாண்மை
3. விடுபூக்கள் / தொ.பரமசிவம் / கயல்கவின் / வரலாற்று ஆராய்ச்சிக் கட்டுரைகள்
4. சச்சார் குழு அறிக்கை / அ.மார்க்ஸ் / அறிக்கை மற்றும் ஆய்வு
5. பைத்திய ருசி / கணேசகுமரன் / தக்கை / சிறுகதைகள்
6. கர்ணனின் கவசம் / கே.என்.சிவராமன் / சூரியன் / சாகச நாவல்
7. லிண்ட்சே லோஹன் w/o மாரியப்பன் / வா.மணிகண்டன் / மின்னல் கதைகள்
8. சிட்டு குருவிகளின் வாழ்வும் வீழ்ச்சியும் / ஆதி.வள்ளியப்பன் / தடாகம், பூவுலகின் நண்பர்கள் / சுற்று சூழலியல்
9. தமிழகத்தின் இரவாடிகள் / சண்முகானந்தம் / தடாகம் / சுற்று சூழலியல்
10. தூப்புக்காரி / மலர்வதி / மதி வெளியீடு / நாவல்
11. சூரியனுக்கு அருகில் வீடு / மனுஷ்யபுத்திரன் / உயிர்மை / கவிதை
12. கடவுளோடு விளையாடும் குழந்தைகள் / மு.முருகேஷ் / அகநி / கவிதை
13. ஆதியில் சொற்கள் இருந்தன / அ.வெண்ணிலா / அகநி / கவிதை
14. எந்நாடுடைய இயற்கையே போற்றி / கோ.நம்மாழ்வார் / விகடன் / இயற்கை வேளாண்மை
15. திருப்போரூர் மற்றும் வடக்குபட்டு, பதின்னெட்டாம் நூற்றாண்டு ஆவணங்கள் / ஶ்ரீநிவாஸ், பரமசிவம், புஷ்கலா / செண்டர் ஃபார் பாலிஸி ஸ்டடீஸ் / வரலாற்று ஆய்வுகள்
16. களப்பிரர் ஆட்சியில் தமிழகம் / மயிலை சீனி.வேங்கடசாமி / விடியல் / வரலாறு
17. சட்டப்பேரவையில் ஜீவா / ஜீவபாரதி / நியு சென்சுரி / அரசியல்
18. சிறியதே அழகு / இ.எஃப்.ஷூமாஸர் / எதிர் / பொருளாதாரம்
19. நீராதிபத்தியம் / மாட் விக்டோரியா பார்லே / எதிர் / தண்ணீர் அரசியல்
20. இருபத்தொன்றாம் நூற்றாண்டிற்கான சோசலிசம் / மார்த்தா ஆர்னெக்கெர் / விடியல் / பொருளாதாரம் மற்றும் அரசியல்
21. எனது நாட்டில் ஒரு துளி நேரம் / மாலதி / விடியல் / ஈழம்
22. கச்சத்தீவும் இந்திய மீனவரும் / சூரியநாராயணன், முரளிதரன் / காலச்சுவடு / வாழ்வும், அரசியலும்
23. பகுத்தறிவின் சிகரம் பெரியார் ஈவெரா / ஏ.கே.எஸ் / எதிர் / விமர்சனக் கட்டுரைகள்
24. தமிழ் அன்றும் இன்றும் / சுஜாதா / உயிர்மை / தமிழ் ஆய்வுக்கட்டுரைகள்
25. மௌன வசந்தம் / ரெய்ச்சல் கார்சன் / எதிர் / சுற்று சூழலியல்

புத்தகத் தேர்வு கொஞ்சம் கலந்து கட்டி தான் இருக்கும். கொஞ்சம் முகநூல் பரிந்துரை, கொஞ்சம் நண்பர்கள் புத்தகம், கொஞ்சம் ஆர்வம், கொஞ்சம் அவசியம் எல்லாம் கலந்து.

அப்புறம் அந்த டெல்லி அப்பளமும் சாப்பிட்டுட்டேன், மறுநாள் குடும்பத்தோடு போனப்ப.....

இத்தனையையும் ஒரு வருஷத்துக்குள்ள படிச்சிடனும்...

# அடுத்தப் புத்தகக்காட்சிக்கு ரெடியாகனும்ல....

அண்ண, கொத்து கொத்தா புக் இருக்கு

ஜென்ம சாபல்யம் போல ஆண்டு சாபல்யம் என்று ஒன்று இருந்தால், அதை அடைந்து விட்டதாக வைத்துக் கொள்ளலாம். ஆமாம் சென்னை புத்தகக் காட்சி போய் வந்தேன். போன வருடம் ஊரில் இல்லாததால், போகவில்லை.

"அண்ண, கொத்து கொத்தா புக் இருக்கு" "ஏம்பா, போன வருசம் வாங்குன புக்கே படிச்சி முடியல. இன்னமுமா ?" "சில புத்தகம் படிக்கிறதுக்கு. சில புத்தகம் ரெபரன்ஸுக்கு. வாங்கினா தான்பா படிக்கத் தோனும்" வீட்டு சமாதானம்.

ஒய்.எம்.சி.ஏ திடலும் நல்லாத் தான் இருக்கு, பசுமையா. ரோட்ல இருந்து நடந்து வர்றவங்க பாடு தான் சிரமம், தூரம். வழக்கமான ஏற்பாடுகள், சிறப்பாக. எட்டு பெருவழியாக பிரிக்கப்பட்டு, இருபுறமும் ஸ்டால்கள். முகப்பிலேயே கடைப் பட்டியல்.

                        

இரண்டு பாதைகளுக்கு ஒரு முறை குடி தண்ணீர் ஏற்பாடு பாராட்டுக்குரியது. டீ-ஸ்டாலும் ரெப்ரெஷ்மெண்ட்டுக்கு. கடந்த ஆண்டுகளில் வெளியே போக வேண்டி இருந்ததாகத் தான் ஞாபகம். வாழ்க.

ஒரு ஷோல்டர் பேக்கோடு போவது நல்லது, புத்தகங்களை வாங்கி அடுக்க. ஸ்டால்களில் கொடுக்கும் பைகளின் சின்னக் காதுகள், கை விரல்களை பதம் பார்க்கின்றன. சிலர் பேப்பர் பையும் கொடுத்தார்கள்.

தனியாகப் போவதே நலம். யாருடைய தொந்தரவும் இல்லாமல், யாருக்கும் தொந்தரவு கொடுக்காமல், யாருடைய நேரத்தையும் எடுக்காமல், நம் இச்சைக்கு புத்தகம் தேர்வு செய்யலாம்.

வித்தியாசமான புத்தகங்களை தேர்ந்தெடுப்பவர்களுக்கு வேலை சுலபம். ஒரு பாதைக்கு இரு கடைகள் தேறும். பெயரே கவர்ந்திழுக்கும், எதிர், கருப்பு பிரதிகள், அகநி, பூவுலகின் நண்பர்கள், தடாகம், மதிநிலையம், விடியல், கயல்கவின், கருத்து என.

என்னைப் பொறுத்தவரை, பெரிய பதிப்பகங்களின் புத்தகங்களை இங்கு வாங்காமல் தவிர்க்கலாம். காரணம் அவர்கள் வெளியீடுகளை ஆண்டு முழுதும் அவர்கள் ஷோரூம்களில் வாங்கலாம்.

மற்றபடி எங்கெங்கு காணினும் சமையல் புத்தகங்கள், கவிதை நூல்கள், ஆன்மிகப் புத்தகங்கள், சுயமுன்னேற்ற நூல்கள், குழந்தைகள் புத்தகங்கள், கல்லூரி மாணவர்களுக்கான ரெபரென்ஸ் புத்தகங்கள் குவிந்திருக்கின்றன.

எது எப்படியோ, ஏராளமானப் புத்தகங்கள், எங்கெங்கும் புத்தகங்கள், கண்கொள்ளாக் காட்சியாக. இதை கண்டுகளிக்கவாவது புத்தகக் காட்சிக்கு போக வேண்டும்.

                   

# புத்தகத்தை திறக்கும் போது, உலகத்தின் வாசலையே திறக்கிறோம் !

ஞாயிறு, 19 ஜனவரி, 2014

ஏற்கனவே இளையராஜா ரசிகன் தான்...

ஏற்கனவே இளையராஜா ரசிகன் தான். எப்போது ராஜா பாடல்களை கேட்டாலும் இந்த இடத்தில் எந்த இசைக் கருவி பயன்படுத்தப்பட்டிருக்கும் என்று கணிக்க முயற்சிப்பது வாடிக்கை. சில நேரங்களில் கண்டுபிடிப்பது உண்டு. சில நேரங்களில் சிரமம்.

                                                                     

நடந்ததை நினைவுப்படுத்தி எழுதவே இவ்வளவு சிரமப்படுகிறோம். உருவகப்படுத்த முடியாத இசையை கற்பனையில் வடிப்பது நினைத்தாலே மயக்கம் வருகிறது. கற்பனை செய்யும் இசைக் கோர்வையை வடித்தெடுப்பது எவ்வளவு சிரமம்.

அதற்கு எப்படி இத்தனை இசைக் கலைஞர்களை ஒருங்கிணைத்து வேலை வாங்கியிருப்பார் என்ற பிரமிப்பு ஏற்படும். அவர் விரல் பட்டு ஒலிப்பது போலவே, ஒவ்வொரு இசைத் துளியும் நமக்கு கேட்பது பிரம்மை தானோ ?

கிராமிய இசையா, நவீன இசையா, அல்லது இரண்டையும் கலந்து கொடுப்பதா, இப்படி எதை எடுத்தாலும் முத்திரை தான். அதனால் தானே கலைஞரால் ,"இசைஞானி" என்று வாழ்த்தப்பட்டார்.

இப்படி ரசித்து, ரசித்து ஒரு கட்டத்தில் அவர் பாடல்கள் சுவாசமாகிவிட்டன. இது எனக்கு மட்டுமல்ல, லட்சக்கணக்கானோருக்கு ஏற்பட்ட நிலை. அவரது இசைக் கோர்ப்பை நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் உண்டு.

அதற்கு வாய்ப்பு கிடைக்குமா என்ற நிலையில், தற்போது ஜெயா டிவியில் ஒளிப்பரப்பாகும் , மலேசியாவில் நிகழ்த்தப்பட்ட கிங்க்ஸ் ஆப் கிங்க்ஸ் நிகழ்ச்சியின் பதிவு அந்தக் குறையை ஓரளவு தீர்க்கும் போலும்.

எவ்வளவு பெரிய ஆர்கெஸ்ட்ரா, எவ்வளவு இசைக் கலைஞர்கள், எத்தனை இசைக்கருவிகள். இத்தனையும் இன்றைய நவீன தொழில் நுடபத்தில் சாத்தியம். ஆனால் அந்தப் பாடல்கள் பதிவு செய்யப்பட்ட காலத்தில் எப்படி இது சாத்தியம் ?

நான் நினைத்ததை ஒருவர் இசைஞானியிடம் கேட்டே விட்டார். " நாங்கள் இன்னும் விவாதித்துக் கொண்டு இருக்கிறோம். அந்தப் பாடலில் எப்படி தபேலாவை இப்படி பயன்படுத்தினார் ? வளையோசை பாடலில் அந்த அழுத்தம் எப்படி ?"

"இதை எல்லாம் எப்படி யோசிச்சு போடுவீங்களா ?"

"யோசிச்சு போட்டா mental reflection தான் இருக்கும். யோசிக்காம போட்டா தான் flow இருக்கும்". "Raja never thinks". இது இசைஞானியின் பதில்.

அவ்வளவு தான், அவ்வளவு தான் பதில் சொல்ல முடியும்.

# ஏற்கனவே இளையராஜா ரசிகன் தான். இப்போ இன்னும் நுணுக்கமாய்....

கருநாள், கிராமத்து வாழ்வின் உற்சாகத் திருநாள் !

மாலை நேரம் விளையாட்டுத் திடல் உற்சாகத் திடல் ஆகியிருக்கும். ஆண்டிமடம் அரசு மேல்நிலைப் பள்ளியின் விளையாட்டுத் திடல் அது. 

ஆண்கள், பெண்கள், சிறார்கள் என அவரவர் விருப்பத்திற்கேற்ற குழுவில் சங்கமித்திருப்பார்கள். காலையில் இருந்தே வார்ம்-அப் செய்து ஆயத்தமாகியிருப்பார்கள். 

மூன்று நாட்களாக கிரிக்கெட் லீக் எல்லாம் முடிந்து காலையில் இருந்து செமி ஃபைனல், ஃபைனல் என்று ஒரு பக்கம். கபடிக் குழுக்கள் இன்னொரு பக்கம். சில காலம் முன்னர் சிலம்பம், சுருள் வீச்சு என சில நாட்டுப்புறக் கலைகள் உயிரோடிருந்தன.

                                  - Kabadi Kabadi (Camera ) Tags: camera blue india playing game love sports team village play near district indian culture tournament tamilnadu kabaddi rajapalayam kabbadi kabadi virudhunagar seithur nikond7000 kirukan devathanam

பெண்கள் உலகம் தனி. கும்மி, கோலாட்டம் என மகிழ்ச்சியாக இருப்பார்கள். காலையில் இருந்தே இதற்காக தயாராகி இருப்பார்கள். வாழை மட்டையில் பூவை வைத்து தைத்து, சடைப்பட்டி தயார் செய்து, நடமாடும் பூக்கடையாக வந்திருப்பார்கள்.

ஓராண்டுக்கு ஒரு முறை கிடைக்கும் விடுதலை அல்லவா, அவர்களுக்கு. ஓராண்டின் சமூகச் சுமைகளை இறக்கி வைக்கும் நாளாகவே, அந்த நாள் கழியும் பெண்களுக்கு. சுற்றிலும் வேலி இல்லாமல், தோழிகளோடு திளைத்திருப்பார்கள்.

சிறுவர், சிறுமியர் கொண்டாட்டத்தின் உச்சத்தில் இருப்பர். தெரிந்த அத்தனை விளையாட்டுகளையும் விளையாடித் தீர்ப்பார்கள். இவர்களுக்காவே ரங்கராட்டினமோ, குடை ராட்டினமோ வருடம் தவறாமல் ஆஜராகி விடும்.

தற்காலிக டீக்கடை, பலகாரக்கடை, கரும்புக்கடை என சிறு வணிகச் சந்தை. இதல்லாமல் பூக்கடை, ரிப்பன் கடை, ஜாக்கெட் பிட் கடை, வளையல் கடை, அதிலும் பிரசித்தி பெற்ற ஸ்டிக்கர் பொட்டுக்கடையில் கூட்டம் மொய்க்கும்.

சிறுவர்களுக்கான பலூன், ஊதாங்குழல் உள்ளிட்ட விளையாட்டுப் பொருட்களுக்கான கடைக்கான கூட்டம் போல இன்னொரு பக்கமும் ஒரு கூட்டம் உண்டு. அது மூனு சீட்டு குரூப். அதில் "உற்சாக"ப்பிரியர்கள் கூட்டம் எவ்வி இருக்கும்.

உற்சாகப் பிரியர்கள் தான் தனித்துவமானவர்கள். இவர்களை கண்டால் எல்லோரும் மிகுந்த மரியாதையோடு வழிவிடுவார்கள். தைப் பிறந்தால் வழி பிறக்குமோ இல்லையோ, இவர்களை கண்டால் தானாய், வழி பிறக்கும்.

பக்கத்தில் இருக்கும் போலீஸ் ஸ்டேஷன் தான் பாவம். நல்ல நாளை குடும்பத்தாரோடு செலவிட முடியவில்லையே என்று அவர்களே வருத்தத்தில் இருப்பார்கள். அதை அதிகப்படுத்தும் வகையில் வேலை அதிகம் அன்று, அந்த ஊரில் தகராறு, இந்த ஊரில் பிரச்சினை என்று. இவர்கள் வந்தால் தான் உற்சாகர்கள் கொஞ்சம் தணிவார்கள்.

இதை எல்லாம் தாண்டி, இந்தக் கொண்டாட்டத்தில் பங்கேற்க பக்கத்து கோவிலில் இருந்து திரௌபதி அம்மனும் வந்திருப்பார். மரச் சகடையின் மீது எழுந்தருளியிருப்பார். பூசாரிக்கு அன்று தான் உச்சபட்ச வருமானம். வருபவர்கள் ஒரு சூடம் ஏற்றி, தன் பாரத்தை அவர் மீது ஏற்றி விட்டு, விளையாட்டில் மூழ்கி விடுவார்கள்.

அருணா, சண்முகா தியேட்டர்கள் கூட்டத்தால் வழியும். மாலை மங்க, மங்க உற்சாகம் மிகும். ஆனால் மீண்டும் இந்த உற்சாகம் இனி அடுத்த ஆண்டு தான் என்ற ஏக்கத்தோடு கலைவார்கள். ஆனால் சில காலம் தான், அந்த ஆண்டுகள் வந்தன.

கருநாள் எனும் காணும் பொங்கல், நண்பர்களை காணும் பொங்கல், ஆனால் இப்போது நினைக்கும் பொங்கலாக கூட இல்லாமல் மாறிக் கொண்டிருக்கிறது. நினைக்கவும் நேரமில்லாமல் வாழ்வின் சுமை அழுத்திக் கொண்டிருக்கிறது.

# கருநாள், கிராமத்து வாழ்வின் உற்சாகத் திருநாள் !

வியாழன், 16 ஜனவரி, 2014

உழவனுக்கு துணை, உலகுக்கும். வணங்குவோம் !

ஊரே கோலாகலமாக இருக்கும். காலையிலேயே மாட்டையும், ஆட்டையும் பிடித்துக் கொண்டு கிளம்பி விடுவார்கள், ஏரியை நோக்கி. அப்போதெல்லாம் ஊரின் ஜனத் தொகையைத் தாண்டி, கால்நடைகளின் எண்ணிக்கை இருக்கும்.

ஊரின் முகப்பிலேயே, ரோட்டை ஒட்டியே ஏரி. அங்கிருந்து ஒரு கி.மீ நடந்தால் ஊர். தேவனூர், எங்கள் சொந்த ஊர். ஏரிக்கு சென்று குளித்து வரும் கால்நடைகள் ஊர்வலம் போல் வந்து சேரும்.

                                 

இதெல்லாம் 30 ஆண்டுகளுக்கு முன். பிறகு மெல்ல கால்நடைகளின் எண்ணிக்கை குறைய ஆரம்பித்து விட்டது. பாட்டி ராசாம்பாள் இருக்கும் வரை தான் எங்கள் வீட்டில் கால்நடை செல்வம் இருந்தது.

அப்போது 30-க்கும் குறையாத மாடுகள் இருக்கும் தாத்தா வீட்டில், காளை, பசு, எருமை என. பாட்டியின் உடல் தளர ஆரம்பித்த போதே, மாடுகளின் எண்ணிக்கை குறைந்தது. பாட்டி மறைவுக்கு பிறகு, தாத்தா சாமிதுரையால் சமாளிக்க முடியவில்லை. வாரிசுகள் நகரங்களுக்கு இடப்பெயர்ச்சி. பிறகு அந்தச் செல்வம் அற்றே போனது.

ஒரு வாரம் முன்பே வேலைகள் துவங்கிவிடும். காளைகளுக்கு லாடம் கட்டப்படும். கொம்புகள் சீவப்பட்டு வர்ணம் பூசப்படும். மூக்கணாங்கயிறு புதுப்பிக்கப்படும். பசுமாட்டுகளுக்கு கயிறு மாற்றப்படும்.

வீட்டிற்கு எதிரில் ஒரு பெரிய காலிமனை. அதன் ஓரம் ஒரு மாட்டுக் கொட்டகை. ஒரு மூலையில் வைக்கோல் போர், இன்னொரு புறம் கடலைக்கொடி போர். ஆங்காங்கே முலைக் குச்சிகள் அடிக்கப்பட்டு மாடுகள் கட்டப்பட்டிருக்கும்.

தண்ணீர் காட்ட தொட்டிகள் கட்டப்பட்டிருக்கும். நிழலுக்கு சுற்றிலும் வேப்பமரங்கள், வாதநாராயண மரங்கள். பாதுகாப்புக்கு மூங்கில் வேலி.  அதுவும் ஒரு வீடாய் தான் பராமரிக்கப்படும்.

மாட்டுப் பொங்கல் காலை, அந்தப் பகுதி கூடுதல் சுத்தப்படுத்தலுக்கு உட்படும். மையப் பகுதியில் மணலால் ஒரு செவ்வகம் எல்லைக் கட்டப்படும். அது தான் பொங்கல் வைக்கும் பகுதி. அடுப்பு வெட்டப்படும்.

எல்லைக் கட்டிய பகுதிக்குள் கோலம் போடுவார்கள். சோலையுடன் கரும்பு வைத்து அலங்கரிக்கப்படும். வாழை இலை விரித்து, தேங்காய், பழம் வைத்து பூசைக்கு தயார் செய்யப்படும்.

மாட்டின் கழுத்தில் கட்ட ஜெயங்கொண்டம் சந்தையிலேயே சலங்கைக் கொத்து, வண்ணவண்ணமாய் நெட்டித்தக்கை மாலை வாங்கப்பட்டிருக்கும். இதல்லாமல் ஆவாரம்பூ, மாவிலை மாலை, பூ மாலையும். செல்வந்தர் வீட்டு மணப்பெண் போல், அன்று மாடுகளின் கழுத்து நிறைந்தே இருக்கும்.

புதுப்பானையில் மஞ்சள் கொத்து கட்டி, அடுப்பில் ஏற்றி பொங்கல் வைத்து, பொங்கி வரும் போது "பொங்கலோ, பொங்கல். மாட்டுப் பொங்கல்" குரல் உற்சாகம் பெறும். சிறுவர்கள் தட்டை எடுத்து குச்சியால் தட்டி ஒலி எழுப்புவார்கள்.

பொங்கியப் பானைக்கு சூடம் காட்டி படைத்து, மாடுகளுக்கு காட்டி படைப்பார்கள். மாட்டுக் கொட்டகை பகுதியை சூடத் தட்டோடு பெரியவர்கள் சுற்றி வர, சிறார்கள் பின்னால் ஒலி எழுப்பிக் கொண்டே குஷியாய் சுற்றுவார்கள்.

 பொங்கல் மாட்டுகளுக்கு ஊட்டப்படும். அடுத்த அடுத்த வீடுகள் சிறிது கால இடைவெளியில் பொங்குவார்கள், மற்றவர் வீட்டு மகிழ்ச்சியில் பங்கேற்க. அதிலேயே ஒரு ஒற்றுமை ஏற்படும். கூட்டு மகிழ்ச்சி.

பொங்கல் பொங்கிய பிறகு, மாட்டுவண்டிகள் பூட்டப்படும். ஊர்வலம் கிளம்பும். கிடைத்தப் பொருட்களை தட்டி ஒலி எழுப்பப்படும். "பொங்கலோ, பொங்கல், மாட்டுப் பொங்கல்". இதற்காகவே மாட்டு வண்டியை பராமரித்து வைத்திருப்போரும் உண்டு.

 ஊரே அதகளமாகும். ஊரே ஒன்றுபட்டு கொண்டாடும் திருவிழா, மாட்டுப் பொங்கல்.

# உழவனுக்கு துணை, உலகுக்கும். வணங்குவோம் !

சோறு போடும் விவசாயிக்கு நன்றி சொல்லும் நாள் இது....

வாழ்விற்கு  ஒளி கொடுக்கும்
சூரியனையும் வணங்கியே
சுழற்றுவித்து நலன் பயக்கும்
இயற்கை வணங்கும் நாள் இது

ஏர் பின்னே உலகம் என
வாயளவில் இல்லாமல்
சோறு போடும் விவசாயிக்கு
நன்றி சொல்லும் நாள் இது

                           

மாடாய் உழைப்பது என்ற
இலக்கண வார்த்தை அலகாய்
உடன் உழைக்கும் உயிருக்கும்
அன்பு காட்டும் நாள் இது

காலமெல்லாம் உடனிருந்து
கணப்பொழுதும் தாங்கிடும்
பாசமிக்க உறவு நட்புக்கு
வாழ்த்து வழங்கும் நாள் இது


உலகின் மூத்தக் குடியென
அடையாளம் கொடுத்த தமிழின்
புத்தாண்டு பாரதிதாசன் சொல்படி
கொண்டாடி துவங்கும் நாள் இது

உழைப்போரை வணங்குவோம்
உணவளிப்போரை காப்போம்
கொண்டாடுவோம் பொங்கலை
பொங்கலோ பொங்கல் !

சனி, 11 ஜனவரி, 2014

திரும்பி பார்க்கிறேன் 2013-ஐ...

திரும்பி பார்க்கிறேன். கடந்த வருடத்தை.....

                                 

கழகப் பணி, தொகுதிப் பணி, சட்டமன்றப் பணி இவைகளைப் போல் முகநூல் பணியும் ஒரு கடமையானது.

2013 ஜனவரி மாதம் ஹைதராபாத்தில். எனது தந்தையாருக்கு பார்கின்ஸன் நோய்க்கு அறுவை சிகிச்சை, ஹைதராபாத் NIMS-ல் மேற்கொள்ளப்பட்டது. நோய் குறித்தும், சிகிச்சை குறித்தும் முகநூலில் பகிர்ந்து கொண்டது பலருக்கும் உதவியாக அமைந்தது.

ஹைதராபாத் வாசம் தெலுங்கு பேச்சுவதை மீண்டும் புதுப்பித்துக் கொள்ள உதவியது, பல புதிய நண்பர்களை கொடுத்தது.

பிப்ரவரியில், விஜய் டி.வி "நீயா, நானா" நிகழ்ச்சியில் பங்கேற்றது ஒளிபரப்பானது. இது புதிய அடையாளத்தைக் கொடுத்தது.

மார்ச், மாணவர்கள் அழைப்பில் மாவட்டம் முழுதும், பாலச்சந்திரன் மறைவின் விளைவாக உணர்வுக் கொந்தளிப்பான உண்ணாவிரதங்களில் பங்கேற்பு. சட்டமன்ற கூட்டத் தொடர்.

ஏப்ரல் முதல் நாளே சட்டசபையிலிருந்து சஸ்பெண்ட், இரண்டு நாட்களுக்கு. கலைஞர் செய்திகள், தந்தி டிவி, ஜி டிவி என ஒரு சுற்று டிவி கலந்துரையாடல்கள்.

அரசு அறிவித்த மருதையாறு நீர்தேக்கத் திட்டம் தொடர்பாக, மக்கள் கருத்தை அரசு கேட்க வலியுறுத்தி, பொதுமக்கள் உண்ணாவிரதத்தில் பங்கேற்பு.

மே மாதம் கழக உட்கட்சித் தேர்தல். அஸ்திவாரமான "வார்டு கிளை"களுக்கானத் தேர்தல்.

ஜூன் மாதம், தமிழகம் எங்கும் வறட்சி நிவாரணம் அறிவித்த தமிழக அரசு அரியலூர் மாவட்டத்தின் ஆதாரப் பயிரான முந்திரிக்கு நிவாரணம் அறிவிக்கவில்லை. இரண்டு மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளில் கோரிக்கை விடுத்தேன், நாளிதழ்களிலும் வந்தது.

இந்த சமயத்தில் இரும்புலிக்குறிச்சியை சேர்ந்த முந்திரி விவசாயி சொக்கலிங்கம் கடன் கொடுமையால் தற்கொலை செய்து கொண்டார். நேரில் சென்று ஆறுதல் சொல்லி வந்தோம். இதனால், மாவட்ட நிர்வாகம் அவசரமாக கணக்கு எடுக்க ஆரம்பித்தது, நிவாரணம் தருவதாக. ஆனால் இது வரை தரவில்லை. நம்பி ஏமாந்து போனோம்.

ஜூலை மாதத்தில், செந்துறையிலிருந்து நக்கம்பாடி, நமங்குணம் செல்லும் பாதையை மறித்து ரயில்வே துறை பாலம் கட்டுவதை கண்டித்து, செந்துறையில் மாபெரும் உண்ணாவிரதம் நடத்தினோம்.

டெல்லியில் உள்ள Indian Institute of Public Administration-ல் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான “வேலைவாய்ப்புகளை உருவாக்குதல்” என்ற கருத்தரங்கில் கலந்து கொண்டேன்.

ஆகஸ்ட் மாதத்தில் தொடர்ச்சியாக மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் மூலம் பல்வேறு ஊராட்சிகளுக்கு சென்று அடிப்படை வசதிகளை மேம்படுத்த ஆலோசனை மேற்கொண்டு பணிகள் துவங்கப்பட்டன.

செப்டம்பரில் புதுக்கோட்டை கழக இணைய பயிற்சி பாசறை. பல்வேறு முகநூல் நண்பர்களை சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. நல்ல பயிற்சியும் கிடைத்தது.

அக்டோபரில் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் பெரம்பலூர் வருகை. அண்ணன் ஆ.ராசா அவர்கள் ஏற்பாட்டில் இளைஞர் அணி பயிற்சி பாசறைக் கூட்டம் பிரம்மாண்டமாக அமைந்த்து. கூட்டத்தில் தளபதி அவர்களால் பாராட்டப் பெற்றேன். மகிழ்ச்சியான தருணம்.

தளபதி அவர்கள் கலந்து கொண்ட அரியலூர் தேர்தல் நிதியளிப்பு பொதுக்கூட்டம் மிக சிறப்பாக அமைந்தது. அரியலூர் நகரில் இது வரை கூடாத கூட்டம் என அனைவராலும் பாராட்டப்பட்டது. மறுநாள் காலை தளபதி அவர்கள் தொலைபேசியில் அழைத்து பாராட்டியது ஒரு மாத உழைப்பிற்கு பலன்.

லேன்கோ பவுண்டேஷன் மூலம் கை-கால் இழந்தவர்கள் 39 பேருக்கு மூன்று லட்ச ரூபாய் மதிப்பிலான செயற்கை கை,கால், ஊன்றுகோல் போன்றவற்றை பெற்று தந்தது ஆதம் திருப்தி அளித்த பணி.

முகநூலில் எழுதி வந்த சட்டமன்ற விமர்சனத்தை, அக்டோபர் கூட்டத் தொடர் போது, நக்கீரன் வாரமிரு முறை இதழில், நான்கு இதழ்களில் வெளியிட்டு என் எழுத்துக்கு அங்கீகாரம் அளித்தார்கள்.

நவம்பர், டிசம்பர் மாதங்கள் ஏற்காடு இடைத்தேர்தல் பணியில் கழிந்தது.

டிசம்பர் இறுதியில் கழக அமைப்புத் தேர்தலான, ஊராட்சிக் கழகங்களுக்கான தேர்தல் பணியில், ஒரு வாரம் தூங்கக் கூட நேரமில்லாமல் ஓடியது.

2006 ச.ம.உ ஆன பிறகு, டைரி எழுதும் பழக்கம் போய் விட்டது. முகநூல் உதவியால் தான் இதை தொகுக்க முடிந்தது.

ஓரளவு பலவகைப் பணிகளோடு வருடம் கடந்திருக்கிறது. புதிய அடையாளங்கள், அங்கீகாரங்கள் கிடைத்திருக்கின்றன. முகநூலில் நேரத்தை வீணாக்குவதாக பாராட்டும் உண்டு. அனைத்தும் நல்லதற்கே.

# இந்த ஆண்டு இன்னும் கூடுதலாக உழைக்க வேண்டும்...

வெள்ளி, 10 ஜனவரி, 2014

1957-ல் பேரறிஞர் அண்ணா கையெழுத்து இட்ட உறுப்பினர் உரிமைச் சீட்டு.


பத்து நாட்களாக பதிவுகள் இடவில்லை. காரணம் உட்கட்சித் தேர்தல். பெண்டு எடுத்து விட்டார்கள். எல்லோருக்கும் பொறுப்புக்கு வர ஆசை. அவர்களை பேசி சமாதானம் செய்து யாராவது ஒருவரை விட்டுக் கொடுக்க செய்வதற்குள் போதும் என்றாகி விடும்.

சில இடங்களில் இரண்டு தரப்பாக இருப்போருக்குள் சமாதானம் செய்வது இன்னும் சிரமம். இரண்டு தரப்புக்கும் பொறுப்புகளை பகிர்ந்து கொடுத்து, கை கொடுக்க வைத்து ஒற்றுமைப் படுத்தி அனுப்ப வேண்டும். முடியும் தருவாயில் யாராவது ஒருவர் திரும்ப ஆரம்பிப்பார்.

பெரும்பாலோர் என்னை விட மூத்தவர்களாக இருப்பார்கள். அவர்கள் மனம் கோணாமல் பேச வேண்டும். அவர்கள் வயதை, உழைப்பை மதித்து பேசித் தீர்க்க வேண்டும். மூத்தோரையும், இளையோரையும் இணைத்துக் கொண்டு செல்ல வேண்டும். 

திருமானூர் ஒன்றியம், காமரசவல்லி ஊராட்சிக்கானத் தேர்தல். உள்ளூரில் மூத்த கழகத் தோழர் கலியபெருமாளை சிலர் முன்மொழிய யாரும் போட்டி போடவில்லை. அவர் மற்றவர்களை அழைத்து பேசி எல்லா பொறுப்புகளுக்கும் யார், யார் என்று முடிவு செய்திருக்கிறார்கள்.

இதில் ஒருவருக்கு பதவி கிடைக்கவில்லை என்ற வருத்தம். இப்படியே ஒரு குழு சேர்ந்து விட்டது. அரியலூருக்கு வந்து மனு கொடுக்கும் போது போட்டியாக மனு கொடுத்து விட்டார்கள். இது போன்று போட்டியாக இருந்த ஊர்களை அழைத்து பேசினோம்.

காமரசவல்லியினரை பேச அழைத்தோம். “யார், யார் செயலாளருக்கு போட்டி போடறீங்க ?” என்று கேட்டேன். செயலாளர் பொறுப்பு தான் முதன்மையானது. கலியபெருமாள் “நான் போட்டியிடுகிறேன்” என்றார். “யார் போட்டியாளர் ?” என்று கேட்டேன். யாரும் முன்வரவில்லை. 

“அப்புறம் ஏன் மனு கொடுத்தீங்க?” என்று கேட்டேன். “எங்களை அழைத்து கலந்து பேசவில்லை, அதனால் தான் மனு கொடுத்தோம்”. “அப்பன்னா என்ன விட்டுடுங்க.... எனக்கும் வயசாயிடுச்சி. சின்னப் பசங்களா யாரையாவது போட்டுக்குங்க.” “அட இருங்கண்ணா, பேசிக்கலாம். யாராவது அனுசரிச்சு தான் போகனும்” என்றேன்.

“சரி அண்ணன், நீங்க தான் செயலாளர். மற்ற பொறுப்புகளை கலந்து போட்டுடலாம்.” என்றேன். அவர் தனது உறுப்பினர் அட்டைகளை எடுத்துக் கொடுத்தார். அதில் ஒன்று மிக பழையதாக இருந்தது. எடுத்துப் பார்த்தேன். 

1957-ல் பேரறிஞர் அண்ணா கையெழுத்து இட்ட உறுப்பினர் உரிமைச் சீட்டு. ஒரு நிமிடம் ஆடிப் போனேன். “யாருக்கு யார் பஞ்சாயத்து பேசுவது ?”

                       

அடுத்து அவர் சொன்ன செய்தி இன்னும் உச்சம். “ராபின்சன் பூங்காவில், கட்சி ஆரம்பிச்ச அடுத்த வாரமே காமரசவல்லியில் கிளை ஆரம்பிச்சோம், நானும் இவரும்.” இவர், பக்கத்தில் இருந்த சுப்ரமணியன். அவரை அவைத் தலைவராக இருக்க சொன்னேன். “இதுவரை பொறுப்பை எதிர்பார்க்கவில்லை. இப்பவும் மற்றவங்க சொல்றதுனால தான்.” என்றார் கலியபெருமாள்.

“மூத்தோர் நீங்கள் களப் பணியாற்றும் போது, நான் மாவட்ட செயலாளராக இருப்பது எனக்கு கிடைத்த பெருமை” என்று எழுந்து வணங்கினேன். அண்ணா கையெழுத்திட்ட அட்டையை வாங்கி ஸ்கேன் செய்து கொண்டேன். பொக்கிஷம்.

# யான் பெற்ற பேறு !