பிரபலமான இடுகைகள்

புதன், 28 அக்டோபர், 2015

ஊரை எழுப்பிய பாடல்

அதிகாலையில் அந்தப் பேருந்து வருகை தான் ஊரை விழிக்க வைக்கும். ஆமாம், அந்தப் பேருந்து வந்தவுடன் டீக்கடையில் ஒலிப் பெருக்கி உயிர் பெறும். அந்த ஒலிப்பெருக்கி ஊரை எழுப்பும்.

வழக்கமாக டீக்கடைகளில் சாமிப் பாட்டுகள் தான் ஒலிக்கும். அதுவும் சமயத்திற்கேற்ப விநாயகர் பாடல்கள், முருகன் பாடல்கள், அய்யப்பன் பாடல்கள், அம்மன் பாடல்கள் என இருக்கும்.

ஆனால் இந்த டீக்கடை வித்தியாசம். அங்கு காலையில் முதலில் ஒலிக்கும் பாடல்,"அவர் தாம் பெரியார்". திராவிடர் கழகத்தின் கொள்கை விளக்கப் பாடல்களே அந்த டீக்கடையில் ஒலிக்கும். ஊரை விழிக்க வைக்கும்.

அப்படி, அந்தப் பாடல் ஊரை மட்டும் விழிக்க வைக்கவில்லை. பக்கத்திலே ஒரு பள்ளி உண்டு. அது அரசுப் பள்ளிக்கூடம். அந்தப் பள்ளியின் மாணவர்கள் தங்கிப் படிக்க ஒரு அரசு மாணவர் விடுதி உண்டு.

சுற்றுவட்டாரத்தில் பத்துக் கிலோமீட்டர் அளவுக்கு வேறு உயர்நிலைப் பள்ளிகள் கிடையாது. அதனால் சுற்றிலும் உள்ள இருபதிற்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மாணவர்களுக்கு அது தான் கதி.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள். அதில் நூறு பேர் அந்த மாணவர் விடுதியில் தங்கிப் படித்தனர். அவர்களில் சிலர் தான் அதிகாலையில் விழிப்பர். அவர்களில் அந்த மாணவனும் உண்டு.

மற்ற மாணவர்கள் எழுந்து மற்ற வேலைகளை கவனிக்க, இந்த மாணவனுக்கு மாத்திரம் காலைப் பணிகளை துவங்க அந்தப் பாடலை கேட்க வேண்டும். அந்தப் பாடல் தான் அவருக்கு சுப்ரபாதமாகி விட்டது.

இதில் ஒரு வேடிக்கை, அந்த மாணவன் வீட்டில் யாரும் அந்தப் பாடலை காது கொடுத்தும் கேட்க மாட்டார்கள். காரணம், அந்தக் குடும்பத்தை சேர்ந்தவர்கள் அத்தனை ஆத்திகமானவர்கள். கடவுளை கும்பிடாமல் எந்த வேலையும் துவங்காது.

இந்த மாணவனின் பாடல் ஆர்வம் அத்தோடு நிற்கவில்லை. மெல்ல மெல்ல அந்தப் பாடலின் நாயகர் 'பெரியார்' மீதான ஆர்வம் ஆனது. சுற்றிலும் சூழ்ந்த ஆத்திக ஈரத்தைத் தாண்டி, பகுத்தறிவு நெருப்பு கொழுந்து விட்டு எரிந்தது.

அந்த ஊர் பாடாலூர். அந்த  மாணவர், பெரியாரின் மாணவர் ஆனார். இன்று பெரியாரின் கொள்கையை ஓங்கி முழங்குபவராக இருக்கிறார்.

அன்றைய மாணவர் தான் இன்றைய திராவிட முன்னேற்றக் கழகக் கொள்கைபரப்பு செயலாளர். அண்ணன் ஆ.ராசாவின் பிறந்தநாள் 26.10.2015.

# கொள்கை முழக்கமே ஓங்கி ஒலித்திடுக !

திங்கள், 26 அக்டோபர், 2015

பெட்டி வந்தாச்சி

வரவேற்க வந்த நண்பர்களோடு அளவளாவியபடி பார்க்கிங்கை அடைந்தோம். ஆயிரக்கணக்கில் கார்கள் நின்றன. எல்லாம் வெளிநாட்டு தயாரிப்பு கார்கள். கங்கை கொண்ட சோழபுரம் குமாரின் நிசானில் ஏறினோம்.

ஹோட்டலை அடைந்தோம். ஹோட்டல் "டூரிஸ்ட்". வந்த நண்பர்கள் பேசி விடை பெற எத்தனித்த போது, அண்ணன் பெரியண்ணன் அரசு தூக்கக் கலக்கத்தில் வந்தார். அறை தெரியாமல், அறந்தை ராஜூ முருகன் பக்கத்து அறையில் தூங்கிக் கொண்டிருந்த அரசு அண்ணனை எழுப்பி விட்டார்.

அவரோடு சிறிது நேரம் பேசிவிட்டு படுக்கப் போன போது மணி 05.00. பெட்டி வராத வருத்தத்தில் இருந்த எனக்கு ஆறுதல் கூறிய அண்ணன் சதக் ஆப்ரேசனைத் துவங்கி இருக்கிறார். சதக், மினிஸ்டரி ஆப் இண்டிரியரில் வேலை பார்க்கிறவர். துபாய் ஏர்போர்ட்டில் வேலை பார்க்கும் நண்பரிடம் தகவல் பரிமாறி இருக்கிறார்.

அப்துல்லா கனி எமிரேட்ஸ் ஏர்லைன்ஸில் வேலை பார்ப்பவர். அவர் துபாயில் இருக்கும் சகாவிடம் தேட சொல்லி விட்டார். குமார் கத்தார் ஏர்வேஸில் வேலை பார்ப்பவர். அவர் நண்பரை தொடர்பு கொண்டிருக்கிறார். இப்படியாக ஜாயிண்ட் ஆப்ரேசனில் லக்கேஜ் தோகாவை காலை 10.30க்கு வந்து சேர்ந்தது. எனக்கு உயிரும் வந்தது. அதற்கு பிறகு குளித்து உடைமாற்றிக் கிளம்பினேன்.

நிகழ்ச்சி நடக்கும் ஹோட்டலுக்கு சென்றோம் அண்ணன் அரசு அவர்களும் நானும். அரங்கு நிறைந்திருந்தது. முகநூலில் இயங்கும் கழக நண்பர்கள், புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த கழகத் தோழர்கள், கட்சி சாராத முகநூல் நண்பர்கள் என கலந்து நிறைந்து இருந்தது அரங்கு.

இஸ்லாமிய பெண்கள் உட்பட பெண்களும் வந்திருந்தனர். சிலர் குழந்தைகளோடு. நிகழ்ச்சி துவங்கியது. அப்துல் ரஷீத் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த அண்ணன் சதக் தலைமை ஏற்று வரவேற்றார்.  முன்னிலை வகித்த அறந்தை ராஜுமுருகன் வாழ்த்திப் பேசினார். மதன் குமார் வாழ்த்துரை வழங்கினார்.

புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் அண்ணன் பெரியண்ணன் அரசு அவர்கள் "மக்களோடு நான்" நூலை வெளியிட, கத்தார் கழகத் தோழர்கள் பெற்றுக் கொண்டனர் . அடுத்து வாழ்த்தி பேச வந்தார் ஆரூர் பாலா என்கிற பாலாஜி.

புத்தகத்தின் ஒவ்வொரு கட்டுரையாக சொல்லி, அதன் கதாப்பாத்திரங்களை விளக்கி, அதன் சிறப்புகளை எடுத்து கூறி ஒரு ஆய்வுரையே நிகழ்த்தினார் பாலா. அப்படியே அதிமுக ஆட்சியின் தவறுகளை சுட்டிக்காட்டி பேச ஆரம்பித்தவர், சூடாகி, பொதுக் கூட்ட பேச்சாளர் போல் வெளுத்து வாங்கினார்.

அடுத்த நிகழ்ச்சியாக, ஒரு அமைப்பு துவக்க விழா. வெளிநாடுகளில் பணிபுரியும் திமுக தோழர்களை கொண்ட அமைப்பு. International DMK welfare Association. இதன் மூலம் கழகத் தோழர்களுக்கு உதவுவது என அறிவித்தனர்.

#  கத்தார் கழக விழா !

ஞாயிறு, 25 அக்டோபர், 2015

கத்தார் வந்தாச்சி

விமானம் கிளம்பியது. மணி 09 45. முகம் துடைக்க நீராவியில் சூடு செய்யப்பட்ட சிறு டவல் கொடுத்தார்கள். முகம் துடைத்து பிரஃஷ் ஆனேன். முன்புற டீவி ஈர்த்தது. துழாவினேன்.

பல சேனல்களில் ஆங்கிலம்,  அரேபி, இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழி படங்களும், பாடல்களும் குவிந்திருந்தன. தமிழ் திரைப்படங்களை ஆராய்ந்தேன். ஒன்றும் ஈர்க்கவில்லை.

தெலுங்கு பட்டியலைப் பார்த்தேன். எல்லாம் ஆக்‌ஷன் மசாலாக்கள். 'டெம்பர்'. ஜூனியர் என்.டி.ஆர் நடித்த படம். கரம் மசாலா. பரபரவென படத்தை கொண்டு சென்றிருக்கிறார் இயக்குனர் பூரி ஜெகநாத்.

நல்ல பிரியாணி கொடுத்தார்கள். சுவையான உணவு. உணவை விட அதற்கு முன்பாக கொடுத்த மெனு கார்டு 'டாப்'. வழவழ அட்டையில் ஒரு பக்கம் ஆங்கிலம், ஒரு பக்கம் அரபி, ஒரு பக்கம் தமிழ் என அச்சிட்டிருந்தார்கள். ஒவ்வொரு உணவுப் பதார்த்தம் குறித்தும் தனித்தனி தகவல்கள். அது சிறப்பு .

4.15 மணி நேரம் கடந்து துபாய் விமான நிலையத்தை அடைந்தது. நம் நேரம் அதிகாலை 02.00. துபாய் நேரம் 12.30.  துபாயில் இருந்து தோகா செல்லும் விமானத்திற்கு மாற வேண்டும். அது. 02.30க்கு கிளம்பும். டிரான்சிட்.

விமானத்தில் வந்து, அதே விமான நிலையத்தில் இன்னொரு விமானத்திற்கு மாறினாலும் பரிசோதனை நடந்தது. வரிசையில் முதல் ஆளாக சென்றவர் திருப்பி அனுப்பப்பட்டார். பெல்ட்டை கழற்றி விட்டு மீண்டும் பரிசோதனைக்கு சென்றார். இன்னொருவர் ஷூவை கழற்றி ஸ்கேனர் டிரேயில் வைத்தார். இதை பார்த்த நானும் அலைபேசி, ஷூ, பேனா என எல்லாவற்றையும் டிரேயில் கழற்றி வைத்தேன். இப்போது முதல் ஆள் மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டார். அவர் இடுப்பில் இருந்து வெள்ளி அரைஞாண் கொடியை உருவிக் கொண்டிருந்தார். செக்யூரிட்டி செக் முடிந்து உள்ளே சென்றேன்.

துபாய் ஏர்போர்ட்டை தெரிந்து கொள்ள தனியாக நாள் ஒதுக்க வேண்டும். A1-A50, B1-B50, C1-C50 என என் கண்ணில் 150 வாயில்கள் தென்பட்டன. தோகா விமானத்திற்கான வாயிலை நோக்கி நடந்தேன். ஒரு கிலோமீட்டர் இருக்கும். வழி எங்கும் இருபுறமும் நாற்காலிகளில் பயணிகள் தூக்கத்தில்.

இந்தப்புறமும் அந்தப்புறமுமாக மக்கள் விமானம் பிடிக்க வேக நடையில். கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பொங்கல், தீபாவளிக்கு திமிரும் மக்கள் வெள்ளத்தை இங்கு பார்த்தேன். எந்தப் பக்கம் திரும்பினாலும் முகங்கள். வேறுவேறு நாட்டு முகம், வேறுவேறு நிற முகம் என திணற வைத்தது.

எழுத்தாளர் சுஜாதா அனுபவ நினைவு ஒன்று இப்போது வந்தது. ஒரு விமான நிலையப் பணியாளரை அழைத்து கேட்டேன்," சென்னையில் இருந்து தோகா செல்கிறேன். இங்கு டிரான்சிட். பெட்டிகள் பாதுகாப்பாக வந்துவிடுமா ?". அவர் என்னை வித்தியாசமாகப் பார்த்தார். "it will come", என்றார் அரேபிய ஆங்கிலத்தில் அலட்சியமாக.

02.30க்கு துபாயில் விமானம் ஏறி, 02.35க்கு தோகாவில் இறங்கினேன். குழப்புதா?. துபாய்க்கும் கத்தாருக்கும் ஒரு மணி நேர வித்தியாசம். ஒரு மணி நேரப் பயணம். இங்கு இமிக்ரேஷன். கண்ணை படம் எடுத்து, பாஸ்போர்ட்டில் சாப்பா குத்தி துரத்தி விட்டார்கள்

லக்கேஜ் எடுக்க கன்வேயர் பெல்ட் அருகில் சென்றேன். அங்கு நின்ற பணியாளர்கள் மூன்று பையை காட்டி "இதில் உங்களுடையது இருக்கிறதா?" என வினவினர். இல்லை என்றேன். "நேராக சென்று வலதுப் பக்கம் திரும்புங்கள். கம்ப்ளெயிண்ட் செக்‌ஷன். உங்கள் பெட்டி துபாயில் தங்கி விட்டது. புகார் கொடுத்து விடுங்கள்". மாற்றக் கூட கையில் உடை இல்லாத சோகத்தோடு ஒரு கிலோ மீட்டர் நடந்து கம்ப்ளெயிண்ட் பிரிவை அடைந்தேன்.

உள்ளே போனதும் மகிழ்ச்சி. விமானத்தில் பார்த்த 20 பேர், பெட்டி வரவில்லை என்று நின்றார்கள். பொறுமையாக விபரம் கேட்டு புகாரை கணினியில் பதிந்து ரசீது கொடுத்தார்கள். இடையில் ஃப்ரீ வை பையில் குமாருக்கு வாட்சப் செய்தேன். அவர், "நாங்கள் வாயிலில் நிற்கிறோம். கவலைப் படாதீர்கள். பெட்டியை வரவழைத்து விடலாம்"என செய்தி அனுப்பி, ஒரு விமான நிலைய செக்யூரிட்டியையும் அனுப்பி வைத்தார், என்னை வெளியில் அழைத்து வர.

ஒரு வழியாக தோகாவில் கால் வைத்தேன். கருப்பு சிகப்பு டீஷர்ட்டில் அப்துல் ரஷீத் கையசைத்தார். 15க்கு மேற்பட்ட கழகத் தோழர்கள் திரண்டிருந்தனர். சால்வை போட்டு வரவேற்க, மற்ற பயணிகள் வினோதமாக பார்த்தனர்.

# கத்தார் வந்தாச்சி !

விமான அறிவிப்பு வந்தாச்சி

எமிரேட்ஸ் விமானம் நோக்கி மனம் பறந்தது. ஆனாலும் கடமை இருக்கிறதே. செந்துறை திருமணத்தை நடத்தி வைத்துவிட்டு வாரியங்காவல் சென்றேன். அங்கும் திருமணத்தை நடத்தி வைத்துவிட்டு ஜெயங்கொண்டம் கிளம்பினேன்.

அப்போது தான் மருதூரில் மூத்த கழகத் தோழர் இறந்த செய்தி. ஜெயங்கொண்டம் திருமணத்தில் மணமக்களை வாழ்த்திவிட்டு, மருதூர் கிளம்பினேன். கத்தாரில் இருந்து அழைப்பு. அண்ணன் சதக்கத்துல்லா பேசினார். "அண்ணா  கிளம்பிட்டீங்களா?".

"இதோ கிளம்பிடுவேன் அண்ணா". மருதூர் சென்று மறைந்த கழகத் தோழருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினோம். இது எதிர்பாராத நிகழ்ச்சி. அரியலூர் சென்று கிளம்பினால், விமானத்தை பிடிக்க சரியாக இருக்கும்.

திருமானூர் ஒன்றிய செயலாளர் அண்ணன் கென்னடி அழைத்தார்," காதணி நிகழ்ச்சிக்கு வந்துடுறீங்களா?". "அண்ணா லேட்டாயிடுச்சி. இப்போ கிளம்பினா தான் விமானத்த பிடிக்க முடியும்".

சென்னை கிளம்பினேன். செல்வம் போன் செய்தார்," கிளம்பிட்டீங்களா? இண்டர்நேஷனல் ப்ளைட். மூன்று மணி நேரம் முன்னாடி போயிடுங்க. இமிக்ரேஷன் இருக்கு". ஏற்கனவே டெல்லி போக விமானத்தை தவற விட்டு பெயர் பெற்றவன் நான், மூன்று முறை.

சென்னை சேர்ந்தேன். நேரத்தில் விமான நிலையம் சென்றேன். அதற்குள் கத்தாரில் இருந்து அய்ந்து அழைப்புகள், ரஷீத், குமார், அண்ணன் அரசு ஆகியோரிடம் இருந்து.

இமிக்ரேஷனில் இரண்டு முறை மேலும், கீழும் பார்த்தவர் கேட்டார்,"எதுக்கு கத்தார் போறீங்க?". "ஒரு பிஸினஸ் மீட்டிங்". விசாவை பார்த்தவர், மீண்டும் என்னை பார்த்தார், பிஸினஸ் முகமா தெரியல போல. விசா ஏற்பாடு செய்த அண்ணன் சதக் 'பிசினஸ் விசா' போட்டிருந்தார்.

விமானத்திற்கு ஒரு மணி நேரம் இருந்தது. பேஸ்புக்கில் ஒரு ஸ்டேடஸ், "கண்ணாடி விழுவதில் தொடர்ந்து சாதனை படைக்கும் சென்னை விமான நிலையம்". சிவகணேஷ் போட்டது இப்போ தானா கண்ணில் படனும். கண்ணாடி இல்லாத இடமா பார்த்து உட்கார்ந்தேன்.

ஒரு வழியா அழைப்பு வந்தது. எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ். அரபு ஸ்டைல் உடையில் இருந்த விமானப் பணிப்பெண் போர்டிங் பாஸை பார்த்தார். "பர்ஸ்ட் ரைட்" என்றார். சென்னையில் வழி சொல்வது போல் சொல்கிறாரே என நினைத்துக் கொண்டு விமானத்தின் உள் நுழைந்தேன். செகண்ட் ரைட் ஒன்றும் இருந்தது.

விமானத்தில் இருக்கை அமைப்பு  மூன்று வரிசையாய் பிரிக்கப்பட்டு, நடுவில் இரண்டு வழிகள். அதனால் தான் பர்ஸ்ட் ரைட், செகண்ட் ரைட்.  50 வரிசைகளில் 450 இருக்கைகள் இருக்கும்.  ஒரு கிராமத்தையே ஏற்றலாம்.

அறிவிப்பு வந்தது, "flight is going to take off. Please switch off your mobile". அலைப்பேசியை அணைத்தேன். கத்தார் பயணம். உறுதி, இனி ஏதும் அழைப்பு வராது. விமானம் கிளம்பியது.

# கத்தார் பயணம் !

செவ்வாய், 20 அக்டோபர், 2015

விடியல் மீட்பு பயணம் 5

கண்ணிமைப்பதற்குள் வாகனத்தில் இருந்து இறங்கிய தளபதியை பார்த்தேன். உடன்  நாங்களும் வணடியில் இருந்து குதித்தோம். மேற்கு பள்ளிவாசலில் இறங்க வேண்டிய தளபதி 100 மீட்டர் முன்பே இறங்கி விட்டார்.

இந்த 'நமக்கு நாமே' பயணத்தில், மக்களை சந்திப்பதென்றால் கட்சியின் எந்த நிர்வாகியிடமும் கருத்து கேட்கவில்லை தளபதி. தானே முடிவெடுத்து சிறப்பாக செயல்படுத்தினார். இப்போதும் அதையே செய்தார்.

"தலைவர்களை அவர்கள் கட்சிக்காரர்களை தாண்டி சந்திக்க இயலாது" என்பது ஒரு பொதுக் கருத்தாக இருக்கிறது. அதனை  உடைத்தெறிய வேண்டும் என்பது தளபதியின் நோக்கம் போலத் தெரிந்தது. இப்போது அதனை தகர்த்தும் விட்டார்.

நிற்கிறவர்களின் முகம் பார்த்தே கண்டுபிடித்து விடுகிறார், யார் கட்சிக்காரர்கள், யார் பொதுமக்கள் என்பதனை. சால்வையோடு நிற்கும் கட்சிக்காரர்களை தவிர்த்து, மனுக்களோடு நிற்கும் மக்களை நாடித் தான் சென்றார்.

இப்போதும் அப்படியே, திரளாக நின்ற இஸ்லாமியப் பெண்கள் தங்கள் குறைகளை கூற தளபதியை பார்த்து கை நீட்ட, வாகனத்திலிருந்து இறங்கி விட்டார். அவர்கள் அருகே சென்றார்.

பாதாள சாக்கடைத் திட்டம் செயல்படுத்தப் படாததால் தாங்கள் அவதிப்படுவதை எடுத்துக் கூறினார்கள் அந்தப் பெண்கள். பெரும்பாலானோர் கருப்பு நிற பர்தாவில். தங்கள் குறையை காதுக் கொடுத்துக் கேட்ட தலைவனை சந்தித்த திருப்தி அவர்கள் முகத்தில். வழக்கமாக இது போல வெளியில் வந்து யாரையும் சந்திக்காதவர்கள் இந்தப் பெண்கள். தளபதி மீது ஏற்பட்டிருக்கும் நம்பிக்கையால் தான் திரண்டிருக்கிறார்கள்.

அங்கிருந்து நடந்து மக்களை சந்தித்தவாறு, மேற்கு ஜமாத்தை அடைந்தார். அங்கு மனுக்கள் பெற்று செல்வதாக திட்டம். உட்கார்ந்து தங்கள் கருத்தைக் கேட்க வேண்டுமென நிர்வாகிகள் சொல்ல, உட்கார்ந்து விட்டார். இரண்டு ஜமாத் நிர்வாகிகள் பேச, அதனைக் கேட்டு பதிலளித்தார் தளபதி.

நாங்கள் கடிகாரத்தை பார்த்தவாறு இருந்தோம். தொழுகை நேரத்திற்குள் கிழக்கு பள்ளிவாசலுக்கு செல்ல வேண்டும். "நடந்து போயிடலாமா?" என்று கேட்டார் தளபதி. அடுத்தக் கட்ட நடைபயணம்.

ஒரு முதியவர் தளபதியை காணும் ஆர்வத்தில் வீட்டிலிருந்து அவசரமாக வெளியில் வர, தளபதி 'டக்' என திரும்பி அந்த வீட்டை நோக்கி சென்றார். நான்கு படிக்கட்டுகள் ஏறி முதியவரை நெருங்கினார். மகிழ்ந்துப் போன முதியவர் தளபதி கரம் பிடித்து வாழ்த்து தெரிவித்தார்.

தொடர்ந்து தளபதி நடக்க, நாங்கள் ஓடினோம். ஒரு குரல் கேட்டு திரும்பிப் பார்த்தார் தளபதி. உயரமான காம்பவுண்ட் சுவருக்கு அந்தப் பக்கம் இருந்து இரண்டு சிறுவர்கள் ஆர்வமாக கையசைக்க, அவர்களிடம் சென்றார். எக்கி அவர்கள் கரம் பிடித்துக் குலுக்கினார். வாழ் நாளுக்கும் மறக்க மாட்டார்கள் அந்த சிறுவர்கள்.

ஆங்காங்கே நின்ற இஸ்லாமிய பெண்களிடம் குறைகளை கேட்டவாறே நடந்தார் தளபதி. ஒரு மாற்றுத் திறனாளி இளைஞர்  கையில் மனுவோடு நிற்பதைப் பார்த்து கிட்டே சென்றார். அவர் சொன்னதற்கு காது கொடுத்து மனு பெற்றுக் கொண்டார். அந்த மாற்றுத்திறனாளி இளைஞர் ஒரு சமூக ஆர்வலர்.

இவ்வாறு நடைபயணம் கிழக்கு பள்ளிவாசலை அடைந்தது. அங்கே பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஜமாத் நிர்வாகிகள் திரண்டிருந்தனர். அவர்களில் சிலர் தங்கள் கருத்தை தெரிவிக்க, பேச கையில் மைக்கை எடுத்தார் தளபதி. பாங்கு ஒலிக்க ஆரம்பித்தது. பாங்குக்கு இடைவெளி விட்டு பிறகு பேசினார். இஸ்லாமியர்களுக்கு கழகம் பாதுகாவலாக இருப்பதை விளக்கி, அவர்கள் கருத்துக்கள் பரிசீலிக்கப்படும் என உறுதியளித்தார்.

வழியெங்கும் பள்ளி மாணவர்கள், பெண்கள் நின்று கையசைத்து உற்சாகமாக, வணங்கியவாறே பயணம் தொடர்ந்தார் தளபதி.

(பயணம் தொடரும் 5....)

திங்கள், 19 அக்டோபர், 2015

விடியல் மீட்பு பயணம் 4

தளபதி பொறுமையாக கேட்கிறார் என்ற உடன் பெண்கள் விலாவாரியாக அரசின் தவறுகளை, தங்கள் தேவைகளை எடுத்துக் கூற ஆரம்பித்தனர். சிலர் பேருரையே ஆற்றினர்.

தளபதி நடைக்கு ஈடு கொடுத்து ஓடி வந்ததில், வியர்வை மழையில் நனைந்து, சட்டை தொப்பலாக ஈரம். பரிதாபப்பட்டு, மண்டப முதலாளி அறையில் மின்விசிறிக்கு கீழே இருக்கை கொடுத்தனர் எனக்கு.

மகளிர் பிரச்சினையில் முதலிடம் டாஸ்மாக் தான்.  அடுத்து ரேஷன் கடைப் பிரச்சினை, சுய உதவிக்குழுவுக்கு அரசு உதவி இல்லை என அரசு மீது குற்றப் பத்திரிக்கை வாசித்தார்கள் பெண்கள்.

குறை கேட்டு முடித்து தளபதி உரையாற்ற ஆரம்பித்தார். உணர்வுப்பூர்வமான, யதார்த்தமானப் பேச்சு. வந்திருந்த தாய்குலத்தின் புண்பட்ட மனதிற்கு ஆறுதல் அளிக்கும் பேச்சு.

தலைவர் கலைஞர் தலைமையிலான ஆட்சியில் முதல் நடவடிக்கையே டாஸ்மாக் கடைகளை மூடுவது தான் என உத்தரவாதம் அளித்தார். கரவொலியால்  மண்டபம் அதிர்ந்தது.

மகளிர் உரையாடல் முடித்து கிளம்பினார் தளபதி. வடக்கு மாதவி சாலையில் இருந்து, பைபாஸ் வழியாக திருச்சி-சென்னை நெடுஞ்சாலையை அடைந்தது தளபதி கான்வாய்.

நெடுஞ்சாலையில் மற்ற பயணிகள் வாகனங்களுக்கு இடையே தளபதி வாகனம் பயணித்தது. அந்த வாகனங்களில் இருந்தவர்கள் தளபதி அவர்களை அருகில் பார்த்ததில் வியந்து கையசைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.

அடுத்த நிறுத்தம் வாலிகண்டபுரம். கரும்பு, பருத்தி, சோளம், வெங்காய விவசாயிகளுடன் உரையாடல் நிகழ்ச்சி. இயற்கை சூழலில், சோளக்காட்டிற்கும், நெல் வயலுக்கும்  முன்பாக இருந்த தென்னந்தோப்பில் நிகழ்ச்சி. அங்கு வந்த தளபதி வயலில் இருந்த ரைஸ்மில்லில் நுழைந்தார். ரைஸ்மில் தொழிலுக்கு இப்போது இருக்கும் பிரச்சினையை கேட்டறிந்தார்.

தென்னந்தோப்பிற்கு வந்தார். அங்கு அமர்ந்திருந்த விவசாயிகளுக்கு அருகில் சென்று மனுக்களை பெற்றுக் கொண்டார். அடுத்து அவர்களது கருத்துகளை கேட்டார். விவசாயிகள் மின்சாரப் பிரச்சினையையும், விளை பொருட்களுக்கு சரியான விலை இல்லாததையும் எடுத்துக் கூறினார்கள்.

ஒரு இஸ்லாமியப் பெண்ணும் விவசாயப் பிரச்சினை குறித்து கருத்து சொன்னார். தளபதி அவர்கள் கழக ஆட்சியில் இலவச மின்சாரம் வழங்கியதையும், விவசாய கடனை தள்ளுபடி செய்ததையும் விளக்கி, எதிர்காலத்தில் கழக ஆட்சியில் பிரச்சினைகள் தீர்க்கப்படும் என்றார். பயணம் துவங்கியது.

அடுத்து லப்பைகுடிக்காடு பேரூராட்சி. முழுதும் இஸ்லாமிய சமுதாயத்தினர் வசிக்கும் ஊர். இரண்டு ஜமாத்கள் உண்டு, கிழக்கு ஜமாத், மேற்கு ஜமாத். முதலில் இருக்கும் மேற்கு ஜமாத் நிர்வாகிகளை சந்தித்து விட்டு, அடுத்து கிழக்கு ஜமாத்தில் பெரம்பலூர், அரியலூர் மாவட்டத்தில் இருக்கிற பல்வேறு ஜமாத் நிர்வாகிகளை சந்திக்க ஏற்பாடாகி இருந்தது.

லப்பைகுடிகாடு துவக்கத்தில் பாலத்தின் அருகே நின்று கழகத் தோழர்கள் வரவேற்பளித்தனர். சால்வையை பெறறுக் கொண்டார்.  அடுத்து மேற்கு பள்ளிவாசல் அருகே இறங்க வேண்டும். 100 மீட்டர் இருக்கும். நாங்கள் அந்த பள்ளிவாசலைப் பார்த்துக் கொண்டு இருந்தோம். திடீரென வாகனம் நின்றது. கண்ணிமைப்பதற்குள் தளபதி கீழே இறங்கி விட்டார்.

(பயணம் தொடரும் 4...)

அடுத்த டூர் கிளம்பியாச்சா ?

மத்திய கிழக்கு நாடுகளில் அது ஒன்று. இந்தியாவை போல அது ஒரு தீபகற்பம். மூன்று புறமும் கடலாலும், ஒரு புறம் நிலத்தாலும் சூழப்பட்ட நாடு. மூன்று புறம் பாரசீக வளைகுடாவும் ஒரு புறமும் சௌதி அரேபியாவும் எல்லை.

50,000 ஆண்டுகளுக்கு முன்பே மனித இனம் இங்கு வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. குடியிருப்புகளும் ஆயுதங்களும் கற்காலத்தை சேர்ந்தவை, இங்கு கண்டெடுக்கப் பட்டுள்ளன. மெசோபொடமியன் நாகரிகத்தின் அடையாளங்கள், கைவிடப்பட்ட கடலோர குடியிருப்புகளின் மிச்சத்தில் இருக்கிறது.

"என்ன திடீர்னு வரலாற்று பாடம் ?". "ஒரு நாட்டுக்கு போறதுக்கு முன்ன அதன் வரலாற்ற தெரிஞ்சிக்கனும்ல". "கிளம்பியாச்சா அடுத்த டூர்?". "பாஸ், சிங்கப்பூர்  போய் வந்து ஒரு வருஷம் ஆச்சு". "சரி, மேல சொல்லுங்க".

ஒரு காலத்தில் பிரிட்டிஷ் ஆதிக்கத்தின் கீழ் இருந்த நாடு. 1971ல் சுதந்திரம் வழங்கப்பட்டாலும், அரச குடும்ப அதிகாரத்தின் கீழ் வந்தது. அதற்கு பிறகு தான் பெட்ரோல் மற்றும் இயற்கைவாயு கிடைக்க ஆரம்பித்தது. அவ்வளவு தான் செல்வம் கொழிக்க ஆரம்பித்தது நாட்டில்.

1995ல் அரசரிடம் இருந்து அதிகாரம் மகன் கைக்கு வந்தது. அதற்கு பிறகு லேசான சுதந்திரம். அதுக்குன்னு கூட்டம் போட்டு கொடி பிடிச்சா உள்ள தான் போகனும். 1999ல் தான் பெண்களுக்கு ஓட்டுரிமை அளிக்கப்பட்டது. 2005ல் தான் அரசியல் சட்டம் எழுதப்பட்டது.

எண்ணெய் பணம் கொட்ட ஆரம்பித்த பிறகு, வெளி நாட்டினர் வேலைத் தேடி குவிய ஆரம்பித்தனர். ஒரு கட்டத்தில் உள்ளூர்வாசிகளை விட வெளிநாட்டு மக்கள் எண்ணிக்கை கூடிவிட்டது. மொத்த மக்கள் தொகை 18 லட்சம். உள்ளூர்காரர்கள் 2.78.000 பேர் தான். அதாவது உள்ளூர் மக்கள் 13 சதவீதம் தான்.

இது தான் இன்றைய தேதிக்கு உலகின் பணக்கார நாடு. 2012 சர்வே படி இந்த நாடு தான் உலகின் நம்பர் 1. அடுத்து, தூரத்தில் லக்ஸம்பர்க். அடுத்து சிங்கப்பூர். நீண்ட காலமாக இதனை தக்க வைத்து வருகிறது.

"ஒகே. அங்க போய் என்ன சுத்தி பார்க்கப் போறீங்க?". "சுத்திப் பார்க்க போகல பாஸ். அழைச்சிருக்காங்க போறேன்". "யாரு அரபு ஷேக்கா?". "இந்த நக்கல் தான வேண்டாம்கிறது. நம்ம ஆளுங்க தான்". "அங்கேயேயும் நம்ம ஆளுங்களா?".

"இந்த 87% வெளிநாட்டினர் இருக்காங்க இல்ல, அதுல மெஜாரிட்டி இந்தியர்கள் தான். 5,45,000 பேர் இருக்காங்க. அதில் கணிசமா தமிழர்கள், அதில் நம்ம திமுக உடன்பிறப்புகள். சும்மா இருப்பாங்களா, ஃபார்ம் ஆயிட்டாங்க"

"அந்தத் தோழர்கள் தான் நிகழ்ச்சிக்கு அழைச்சிருக்காங்க. ரெண்டு மாசம் முன்னாடி அண்ணன் தங்கம்.தென்னரசு போயிட்டு வந்தார். இப்போ அண்ணன் பெரியண்ணன் அரசுவோட என்னையும் அழைச்சிருக்காங்க.". "எப்போ?". "அக்டோபர் 23 நிகழ்ச்சி". "இத சொல்லி ஊர சுத்திப் பார்க்கப் போறீங்க, எஞ்சாய். சரி, எந்த நாடு?".

#கத்தார் !