பிரபலமான இடுகைகள்

சனி, 28 செப்டம்பர், 2013

அதிரடிப் படை வீரர்கள் எங்களை சுற்றி நின்றனர்....

அது 2001-2006 ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சிக் காலம். சைதாப்பேட்டை இடைத்தேர்தல். அண்ணன் மா.சுப்ரமணியன் கழக வேட்பாளர். அரியலூர் மாவட்டத்திற்கு 135-ஆ வார்டு ஒதுக்கப்பட்டு தேர்தல் பணியாற்றினோம்.

அந்த வார்டிற்கு அ.தி.மு.க சார்பில் தேர்தல் பொறுப்பாளர் கராத்தே தியாகராஜன். அப்போது அவர் துணை மேயர். அதிகாரத்தின் உச்சியில் இருந்த நேரம். அந்தப் பகுதியின் புகழ் பெற்ற தாதா ஃபங்க் குமார். 

இருவர் சார்பாகவும் எங்களுக்கு மிரட்டல் விடப்பட்டது. அதை மீறி பணியாற்றிக் கொண்டிருந்தோம். எங்கள் மீது ஒரு கண்ணாகவே இருந்தார்கள். வாக்குப் பதிவிற்கு இரண்டு நாள் முன்பு, குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் ஓட்டு கேட்டுக் கொண்டிருந்தோம். 

திடீரென கராத்தே தலைமையில் போலீசார் எங்களை சுற்றி வளைத்தனர். ஓட்டுக்கு பணம் கொடுத்தோம் என்று காரணம் சொன்னார்கள். போலீசார் என்னை சோதனையிட்டனர். என் சட்டைப் பையில் அறுநூற்று சொச்சம் ரூபாய் தான் இருந்தது. 

என்னோடு சைதை பகுதி 135 –வது வட்டத்தை சேர்ந்த சேர்ந்த கழக நிர்வாகிகள் ரவிராஜ், நாகா, ரமேஷ், அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த லூயி கதிரவன் கைது செய்யப்பட்டு சைதை காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டோம்.

எங்கள் மீது புகார் யார் கொடுப்பது என விவாதிக்கப்பட்டு அப்போதைய ஸ்ரீவில்லிப்புத்தூர் எம்.எல்.ஏ இன்பத்தமிழன் அழைக்கப்பட்டார். அவர் கொடுத்த நாற்பதினாயிரம் ரூபாய் எங்களிடத்தில் பறிமுதல் செய்யப்பட்டதாக வழக்கு பதிவானது.

செய்தி கேள்விப்பட்டு, தலைவர் கலைஞர் சைதை கழகத் தேர்தல் அலுவலகத்திற்கு வந்திருப்பதாக தகவல் வந்தது. காவல் நிலையத்திலிருந்து வெகு அருகில் அலுவலகம். உடனே எங்களை இடம் மாற்றுவதற்கான நடவடிக்கை துவங்கியது.

             

சிறிது நேரத்தில் அதிரடிப் படை வீரர்கள் வந்தனர். எங்கள் அய்ந்து பேரையும் கிளப்பினர். காவல் நிலையத்தின் உள்ளேயே எங்களை சுற்றி சுவர் வைத்தது போல் நின்றனர், தீவிரவாதிகளைப் போல. அப்படியே யார் கண்ணிலும் படதாவாறு வெளியில் அழைத்து வந்தனர். சினிமாவில் பார்க்கும் காட்சிகள் எங்களை சுற்றி நிஜத்தில் நடந்துக் கொண்டிருந்தது. 

எங்களை அதிரடிப்படையினரின் வாகனத்தில் ஏற்றினர். அப்போது ஒரு கார் காவல் நிலைய வளாகத்தினுள் நுழைந்தது. காரில் இருப்பவர்கள் கண்ணில் படாமல் எங்களை கொண்ட வாகனம் வெளியேறியது. பிறகு சொன்னார்கள், காரில் வந்தவர் தளபதி அவர்கள், எங்களைப் பார்ப்பதற்கு. அவருக்கு பயந்தே அந்த அவசரம்.

எங்களை கொண்டு சென்ற அதிரடிப்படை வாகனத்திற்கு முன்னும் பின்னும் அதிமுக வாகனங்கள் இன்பத்தமிழன் தலைமையில், தெலுங்கு பட வில்லன் குழுவை போல், ஓ என குரல் எழுப்பிக் கொண்டு. (இதற்கு பரிசு தான் ஒரு மாதத்தில் இன்பத்தமிழன் அமைச்சர்). 


தொடரும்....

புதன், 25 செப்டம்பர், 2013

குழந்தைகளை குழந்தைகளாகவே இருக்க விடுவோமே....

மணீஷ். ஆறாம் வகுப்பு படிக்கும் பையன். பள்ளியில் நல்ல பிள்ளை என்ற பேர் பெறுபவன். எல்லாப் பாடங்களிலும் 90-95 மதிப்பெண் எடுப்பவன். வீட்டிலும் அன்பு பிள்ளை.

கடந்த மாதத்தில் நடைபெற்ற கனிம சுரங்க பாதுகாப்பு குறித்த கருத்தரங்கில் பேசி முதல் பரிசு பெற்றான். அதே போல விளையாட்டிலும் ஆர்வமானவன். வருகின்ற அக்டோபர் மாதத்தில் நடைபெற இருக்கின்ற மாநில அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் பங்கேற்க தேர்ச்சி பெற்றவன்.

எனக்கு நெருக்கமான கழகத் தோழர் ரமேஷின் மகன். பள்ளி விட்டால் தந்தையோடு கிரவுண்டில் தான் பார்க்கலாம். விடியற்காலை எழுந்து படித்து விட்டு, எக்ஸர்சைஸ் செய்து விட்டு பள்ளி கிளம்பினால், மாலை வந்து ஒர்க் அவுட். அப்படி சுறுசுறுப்பானவன். 

                             

கடந்த தேர்வில் ஹிந்தியில் எதிர்பார்த்ததை விட 10 மார்க் குறைவு. அனைத்து பாடத்திலும் நல்ல மதிப்பெண் எடுக்கக்கூடியவன் இப்படி செய்து விட்டானே என அம்மா கண்டித்திருக்கிறார்.

கடந்த வாரம் வியாழக்கிழமை, காலை தந்தை ரமேஷ் கோவிலுக்கு சென்று விட்டார். தாய் மகனை படிக்க சொல்லி விட்டு வயலுக்கு சென்று விட்டார். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தால் வீடு உட்பக்கம் பூட்டியிருக்கிறது.

உள்ளே பார்த்தால் குழந்தை தூக்கில் தொங்குகிறான். ஊரே கூடிவிட்டது. இந்த பிள்ளை அமைதியான பிள்ளையாயிற்றே என அனைவரும் துக்கத்தில். செய்தி கிடைத்து போகும் போது போஸ்ட்மார்ட்டத்திற்காக குழந்தையின் உடலை அரியலூர் மருத்துவமனைக்கு கொண்டு சென்று விட்டனர்.

மார்ச்சுவரியில் வைத்து பார்த்தேன். கண்ணாடி, ஒட்ட டிரிம் செய்யப்பட்ட முடி, பேண்ட், ஷர்டில் அடக்கமாக தூங்குபவனை போல் படுத்திருந்தான். இது போன்ற பல மரணங்களை பார்த்திருக்கக் கூடியவர் தான், ஆனால் டாக்டர் வானொலி அவர்களுக்கே வருத்தம் தாங்க முடியவில்லை. முன்னாள் ச.ம.உ அய்யா ஆறுமுகம் இரண்டு மணி நேரம் மருத்துவமனையிலேயே உட்கார்ந்துவிட்டார், வருத்தம் தாளாமல்.

ரமேஷை தான் எப்படி தேற்றுவது என்று தெரியவில்லை. ஒரே மகன் மணீஷ். பிரிந்துவிட்டான். தன் சொல்லால் மகன் மரித்தானோ என மனைவி அரளி விதை குடித்து உயிருக்கு போராடும் நிலையில் மருத்துவமனையில்....

போஸ்ட்மார்ட்டத்திற்காக மருத்துவமனையில் காத்திருந்த  நேரத்தில் பார்த்தோரெல்லாம் அவன் பெருமையே பேசினர். எல்லோர் உள்ளங்களிலும் குடி கொண்டவன், இன்று உலகில் குடியில்லை.

# குழந்தைகளை குழந்தைகளாகவே இருக்க விடுவோமே....


செவ்வாய், 24 செப்டம்பர், 2013

சிமெண்ட் ஆலைகளும் மாறி வரும் தொழில் நுடபமும்....

இன்று ஒரு வேலையாக அரியலூர் பகுதியில் இருக்கும் ஒரு தனியார் சிமெண்ட் ஆலைக்கு சென்றிருந்தேன். மிக சமீபத்தில், நவீன தொழில் நுட்பத்தில் அமைக்கப்பட்டது. மூன்று ஆண்டுகளுக்கு முன் அரியலூர் அரசு சிமெண்ட் ஆலைக்கு ஆய்வுக் குழுவில் சென்றிருந்த நினைவு வந்தது.

                            

தன்னிச்சையாக இரண்டு ஆலைகள் குறித்த ஒப்பீட்டுக் காட்சி மனதில் ஓடியது. plant மற்றும் machineries குறித்த ஒப்பீட்டை ஒதுக்கி அலுவலகம் குறித்து மாத்திரம் இங்கே சொல்ல விழைகிறேன்.

அரசு ஆலையில் தலைமை நிர்வாகி அறை தனியாக. மற்றப் பிரிவுகளுக்கு தனித்தனி அறை. இண்டர்காமில் பேசிக் கொள்ளலாம், அல்லது ஒரு அறையில் இருந்து இன்னொரு அறைக்கு வந்து பேச வேண்டும். எல்லா அறைகளிலும் அறை முழுதும் பீரோ மற்றும் மேசை. மேசை நிறைய ஃபைல்கள், கத்தை கத்தையாக பேப்பர்கள். அரிதாக கணினி.

                            

தனியார் ஆலையின் அலுவலகத்தினுள் நுழைந்தால் ஐ.டி அலுவலகத்திற்கு வந்த உணர்வு. மிக பிரம்மாண்டமான ஹாலில் இடுப்பளவு மறைக்கப்பட்ட கியுபிக்கிள்ஸ், அதில் ஒவ்வொருவரும் லேப்டாப்புடன். எங்கும் பேப்பர் கண்ணில் படவில்லை.

இரண்டு. மூன்று அறைகள் நிர்வாகிகளுக்கு, அவை பாதியளவு கண்ணாடியாலான சுவர் கொண்டவை. அதில் ஒரு அறை தலைமை நிர்வாகி அறை. அங்கிருந்து அலுவலகம் முழுதையும் கண்காணிக்கலாம்.

ஹாலின் கடைசியில் கண்ணாடியால் தடுக்கப்பட்ட பெரியளவு அறையில் ஹாலிவுட் படத்தில் வருவது போல பெரிய, பெரிய மானிட்டர்கள். அதனை மூன்று பேர் கண்காணித்துக் கொண்டிருந்தனர். ஆலையின் மொத்த நடவடிக்கையும் இங்கிருந்து கண்காணிக்கப்படுகிறது, கட்டுப்படுத்தப்படுகிறது.

சுரங்கத்தில் இருந்து வருகிற சுண்ணாம்புக்கல் தரம் அறிவதிலிருந்து, கலவை விகிதாச்சாரம் சரி செய்வதிலிருந்து ஒவ்வொரு நடவடிக்கையும் அலுவலகத்தில் இருந்தே நடக்கிறது. அரசு ஆலையில் இது அத்தனையும் பிளாண்டில் நடைபெறும்.

அடுத்து முழு சுவரும் கண்ணாடியாலான ஒரு கண்ணாடி கான்ப்ரன்ஸ் அறை. அதில் கிட்டத்தட்ட 20 பேர் கொண்ட கூட்டம் நடந்துக் கொண்டிருந்தது. அது தினம் நடக்கும் கூட்டமாம், முதல் நாள் நடவடிக்கைகளை ஆய்ந்து மறுநாள் நடவடிக்கைகளை திட்டமிடும் கூட்டம். இது போன்ற கூட்டம் அரசு ஆலையில் மாதம் ஒரு முறை நடைபெறும் என நினைக்கிறேன்.


                               

நவீனப்படுத்தப்பட்டதால் அரசு ஆலையை விட 50% குறைவான மனித சக்தியை கொண்டு தனியார் ஆலைகள் இயக்கப்படுகின்றன. அந்த வேலைகளும் காண்டிராக்டாக விடப்படுகிறது. இது ஒரு புறம் வேலைவாய்ப்பு இழப்பு, இன்னொரு புறம் நிறுவனத்திற்கு லாபம்.

இத்தனை நவீன வசதிகளோடும், எளிய நடைமுறைகளோடும் தனியார் ஆலைகள் லாபகரமாக இயங்குகின்றன. அரசு ஆலைகள் சிவப்பு நாடாக்களில் கட்டப்பட்டு தள்ளாடுகின்றன. (ஆனால் எங்கள் அரியலூர் அரசு சிமெண்ட் ஆலை ஆறு ஆண்டுகளுக்கு மேலாக லாபத்திலேயே இயங்குகிறது, ஆனால் அரசின் ஆலங்குளம் ஆலை நட்டம்)

# அரசு துறைகளிலும் நவீனமயம் தேவை, மெல்ல மெல்லவாவது....

இந்திய முனிமா நூற்றாண்டு விழா...

நேரு உள்'வினை'யாட்டு அரங்கம்.... இந்திய முனிமா நூற்றாண்டு விழா..... நேரடி ஒளிப்பரப்பு...."அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே" கடவுள் வாழ்த்துடன் விழா துவங்குகிறது. குத்துவிளக்கு லைட்டிங். 

தென்னிந்திய தரைப்பட வர்த்தக சபை தலைவர் நிச்சயதார்த்தம் வரவேற்புரை,"தமிழ்புறமே வருக, தென்னிந்திய மொழிகளின் திரைகாவியமே வருக, வருங்கால வி.எம்மே வருக, வருக ! "

கலைநிகழ்ச்சிகள் துவக்கம்...

" நீ வர வேண்டும் என்று எதிர் பார்த்தேன்" நடிகர் வம்பு வழக்கம் போல் விரல் சொடுக்கி ஆட, சபாநாயகர் பழக்கதோஷத்தில் அவரை வெளியேற்ற உத்தரவிடுகிறார்.

விருது வாங்கும் வரிசையில் கைகட்டி அமர்ந்திருக்கிறார் வெள்ளுடை ஏ.வி.எம்.கரவணன். அடுத்து கன்னடத்து பயங்கிளி கண் சிமிட்டி அமர்ந்திருக்கிறார். "தொட்டால் பூ மலரும்" நினைவுக்கு வருகிறது. யார் பட்டியலில் சேர்த்தது, சூடு ஏறுகிறது.

நடிகர் விஜெய் பேச அழைக்கப்படுகிறார்," நான் ஒரு தடவ முடிவெடுத்தா என் பேச்சையே கேக்கமாட்டேன், அப்புறம் நீங்க ஏன் கேக்கனும், ஆனா அம்மா பேச்ச மட்டும் கேப்பேன். முடிச்சிக்கிறேன். Now time to run"

" நீங்க நல்லாயிருக்கணும் நாடு முன்னேற " பாடல் ஒலிக்கிறது. நடிகர் பவுதம்கார்த்திக் ஆட வருகிறார். மேடையில் இருக்கும் எம்.ஜி.ஆர் படத்தை வணங்கி பாடலுக்கு வாயசைக்க, சைடில் நின்று கீழே அமர்ந்திருப்பவரை பார்த்து வணங்கி ஆடுமாறு சமத்துவகுமார் சிக்னல் கொடுக்கிறார். கவனிக்காமல் பவுதம் தொடர அவுட் கொடுக்கப்படுகிறது.

அடுத்து கண்ணீர்ஹாசன், "அபிராமி,அபிராமி அது என்ன மாயமோ தெரியல, எனக்கு மட்டும் அடி விழுது. அப்புறம் பஸ்பரூபம்-2 வரணும். நாலு பேருக்கு அடி விழாம இருக்கனும்னா ஒருத்தர கூப்பிடாம இருக்கறது தப்பே இல்ல..." டொங்ட டொங்ட டொங்டடொய்....

" நாங்க புதுசா கட்டிகிட்ட ஜோடி தானுங்க" பாடல், முகம் மலர பார்க்கிறார். மகிழ்ச்சிவெள்ளம். திடீரென இருட்டு. "வாட் ஹேப்பண்ட் ?" "பவர் பெயிலர் மேம்" நொத்தம் விசு கேலரி மேல் தாவி குதித்து ஓடிக் கொண்டிருக்கிறார். ஜெனரேட்டர் முடுக்கப்படுகிறது.

விஜய்கேதுபதி பேச வருகிறார்,"என்னாச்சி, நூற்றாண்டு விழா நடக்குதில்ல, அதுக்கு உதவி கேட்டோம், ம் குடுத்தாங்கல்ல, ஓ அவர கூப்பிடலியா. அது ஒன்னும் பிரச்சினை இல்ல. அஞ்சு வருஷம் கழிச்சு கூப்பிடறலாம். இது ஷார்ட் டெர்ம் தான்" ஓ.பி.எச் பாய்ந்து மைக்கை பிடுங்குகிறார்.

அசித் பேஸ்கிறார், " நான் பில்லா, பேஸ் மாட்டேன். ஆனா அவர் வஸ்னம் டிரை பண்ணிருக்கேன். விழாவே கூடாதல்ல, விழா "ஜெ"ழா ஆவ் கூடாது. அவ்ர் வந்திருந்தா நல்லாருக்குமா தெர்யாத். ஆனா வந்திர்க்கலாம்...." இந்தக் கட்டத்தில் கஜினிகாந்த் எழுந்து நின்று கைத்தட்டி "லக லக லக" என குரல் கொடுக்க...

தந்திரி வளர்கதி குருப் கருப்பு கொடியோடு பாய.....

மீண்டும் பவர்கட் ..... "அடி, ஆசிட், புடி" என்று எங்கும் கூக்குரல்......

புதன், 18 செப்டம்பர், 2013

சார், சல்யூட் !

அவர் எங்கள் மாவட்டத்தில் ஒரு அரசு துறையின் தலைமை அதிகாரி. தற்போது மாறுதல் வந்திருக்கிறது. எதேச்சையாக ஒரு தோழர் அவரை சந்தித்திருக்கிறார். உங்கள் பணியை எங்கள் எம்.எல்.ஏ பாராட்டினார் என சொல்லியிருக்கிறார்.

அவர் "நானும் இந்த மாவட்டத்திற்கு வந்ததிலிருந்து அவரை சந்திக்க வேண்டும் என நினைத்தேன், ஆனால் சந்தர்ப்பம் வாய்க்கவில்லை." என்றிருக்கிறார். " தொலைபேசியில் பேசுகிறீர்களா ?" எனக் கழகத் தோழர் கேட்டிருக்கிறார். அவர் சரி என எனக்கு அழைப்பு.

" சார், எனக்கு மாறுதல் வந்திருக்கிறது. உங்களைப் பற்றி உங்கள் நண்பர் ஒருவர் கூறினார். சந்திக்க நினைத்தேன் , வாய்ப்பு கிடைக்கவில்லை. அடுத்த முறை வாய்ப்பு கிடைக்கும் போது சந்திக்கிறேன்"

" நான் உங்கள் பணி குறித்து பாராட்ட வேண்டும் என நினைத்திருந்தேன். இப்போது தான் வாய்ப்பு கிடைத்தது. மகிழ்ச்சி. உங்கள் சிறப்பான பணிக்கு வாழ்த்துக்கள்" என அவரது ஒரு குறிப்பிட்ட பணியை சொல்லி வாழ்த்தினேன்.

அவர் "சார், அந்த வாழ்த்து எனக்கு உரியது அல்ல. மாறுதலாகிப் போன மாவட்ட ஆட்சியர் சொன்ன பணியை செய்தேன்" என்றார். " ஒரு பணியை செய்ய சொல்லி மாவட்ட ஆட்சியர் சொல்லியிருந்தாலும், அதை தட்டிக் கழிக்காமல், சுயலாபம் பார்க்காமல் செய்த உங்கள் பணிக்கு எனது பாராட்டுக்கள்" என்றேன்.

அடுத்து அவர் சொன்னார்...

"சார், உங்கள் மாவட்டத்து மனித வளத்தை உங்கள் மாவட்டத்திற்கே பயன்படுவது போல் செய்தால் தான் உங்கள் மாவட்டம் முன்னேறும். அனைவரும் சென்னை, திருப்பூர், வெளிநாடு என வேலை தேடி செல்வதை விடுத்து உள்ளூரில் உழைத்தால், இந்த மாவட்டம் முன்னேறும்.

அவர்களை உள்ளூர் விவசாயத்தில் ஈடுபடுத்தி தான் அந்த நிலையை உண்டாக்க முடியும்" என சொல்லி ஒரு திட்டத்தை சொன்னார். இது தான் நீண்ட நாட்களாக நானும் யோசித்து வரும் ஒரு விஷயம். சரியாக அதையே தொட்டார்.

இன்னும் சொன்னது தான் முக்கியம். "இந்தத் திட்டத்தை இன்றைய ஆளுங்கட்சியின் ஒரு வி,ஐ.பி இடமும் சொல்லியிருக்கிறேன். அவர்கள் செய்தாலும் சரி, நாளை உங்கள் கட்சி ஆட்சி வந்து செய்தாலும் சரி. யார் மூலமாவது இந்த மாவட்டம் முன்னேறினால் சரி."

இதை நான் எதிர்பார்க்கவில்லை. ஏனெனில் அந்த பதவி அதிகாரம் வாய்ந்த, பணம் புழங்குகிற பதவி. பெரும்பாலும் வேறு சிந்தனைக்கு நேரம் இருக்காது. அடுத்து மாறுதலாகி செல்லும் நேரத்தில் தனக்கு தொடர்பில்லாத ஒரு மாவட்டத்தின் மீது உணமையான அக்கறை.

( வெளிப்படையாக அவர் பெயரை சொன்னால் அவருக்கு பாதிப்பு வரும்)

# சார், சல்யூட் !


மாடு மேய்த்திருப்பேன்...

எங்கோ ஓர் மூலையில்
மாடு மேய்த்திருப்பேன்
மிஞ்சினால் ஏர் பூட்டி ஓட்டியிருப்பேன்
மூன்றாம் தலைமுறையாய்
படித்திருக்கிறேன்
உரிமை பெற்று தந்தாய்...

உம்மை விமர்சிப்போருக்கும்
உம்மை தொடர்வதால்
என்னை விமர்சிப்போருக்கும்
விமர்சிக்கும் பகுத்தறிவை வழங்கினாய்... 

அறிவுக்காய்
மானத்திற்காய்
உரிமைக்காய்
பெண்ணுக்காய்
போராடினாய்...

தொடர்ந்து போராடுவாய்
பல உருவில்.......


செவ்வாய், 17 செப்டம்பர், 2013

வடைக்கும் போண்டாவுக்கும் வித்தியாசம் என்ன ?

ஹோட்டல்.

"டிபன் என்ன இருக்கு"

"போண்டா"

போண்டா வந்தது. திருப்பதி லட்டுக்கு சின்ன சைஸில் இருந்தது.

"ஏங்க, இது வடை மாவுல, வடைக்கு பதில் போண்டாவா போட்ட மாதிரி இருக்கு இல்ல "-மேடம்.

"சரி, வடைக்கும் போண்டாவுக்கும் வித்தியாசம் என்ன ?" நான்

"இல்லைங்க, போண்டானா உள்ள கொஞ்சம் உருளக்கிழங்க வச்சி போடுவாங்க இல்ல"

" வெயிட், வெயிட் நான் சொல்றேன்" எங்க வீட்டு சின்ன சயிண்டிஸ்ட்.

" ஒரு வடை மேல இன்னொரு வடைய வச்சி, அந்த ஓட்டையிலயும் மாவ ஊத்தி சுட்டுட்டா போண்டா. இதுக்கு போய் டிஸ்கஸ் பண்ணிக்கிட்டு இருக்கீங்க"

# நல்லா சுடறாங்கய்யா....

கணேசன் எழ முயற்சிக்கிறார்...

ஜெயண்ட் வீலை ஆர்வமாக பார்த்தார் கணேசன். அதில் ஏறி சுற்றுவது சிறு வயது ஆசை. ஜெயண்ட் வீல் ஏறினார், சுற்ற ஆரம்பித்தது. கணேசன் சந்தோசமாக கீழே பார்த்தார். இரண்டு சுற்று முடிந்தது. தலையில் லேசாக "வின்" என்று வலி தெரித்தது. 

ஜெயண்ட் வீல் சுற்றி நின்றது. கணேசன் எழுந்து இறங்குவதற்கு மேலே இருக்கும் இரும்பு கம்பியை பிடிக்கிறார், கை எழவில்லை. எழ முயற்சிக்கிறார், கால் நிற்கவில்லை. ஒரு கையும் காலும் செயலிழந்துவிட்டது.

அவர் அப்போது சென்னையில் ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆணடு மாணவர். தென் மாவட்டத்தை சேர்ந்த ஒரு நடுத்தரக் குடும்பத்திலிருந்து ஆயிரம் கனவுகளோடு சென்னை வந்தவர். சிறு ஆசை அத்தனை கனவுகளையும் நொறுக்கித் தள்ளி விட்டது.

மூளைக்கு செல்லும் நரம்பு ஒன்று திடீரென பாதிக்கப்பட்டதால், இந்த நிலை. மருத்துவ சிகிச்சையில் இரண்டு ஆண்டுகள் போயின. கை, காலை லேசாக அசைக்க முடிந்தது.

இதிலிருந்து மீண்டு, மீண்டும் படிக்க வேண்டும் என்ற வெறி கணேசனை நெருக்கியது. கல்லூரி சென்றார். 2002, இரண்டு வருடங்கள் கழித்து மீண்டும் மூன்றாம் ஆண்டு வகுப்பில், ஜூனியர்களோடு அமர்ந்தார்.

வழக்கமான அசைவுகள் இல்லை என்றாலும் சற்றே சிரமப்பட்டு நடக்க இயன்றது. இருப்பினும் மன உறுதியோடு படித்தார். அப்போது தான் எனக்கு அறிமுகம்.

கல்லூரி படிப்பை முடித்து ஊர் திரும்பியதில் அவருக்கும் நண்பர்களுக்கும் தொடர்பு அறுந்து போனது. திரும்பி சென்னை வந்து ஒரு வேலை தேடி தங்கினார். இதற்கிடையில் அவரது நண்பர்கள் வேலை கிடைத்து ஆளுக்கொரு மூலைக்காய் பிரிந்து விட்டனர்.

அதில் ஒரு நண்பர் செல்வம், சொந்தமாக தொழில் தொடங்கி இருந்தார். அவருக்கு கணேசனை மீண்டும் சந்திக்கும் ஆசை வந்தது. நண்பர்களிடம் சொல்லி தேட ஆரம்பித்தார்.

அந்தக் கட்டத்தில் கணேசன் சில வேலைகள் மாறி, கடைசி வேலையையும் விட்டிருந்தார். எதேச்சையாக சந்தித்த நண்பர் மூலம் தொடர்பு ஏற்பட்டது.

கணேசனும் செல்வமும் சந்தித்தார்கள். செல்வம் கணேசனை தனது நிறுவனத்திற்கு அழைப்பது என முடிவெடுத்திருந்தபடி அழைக்க, இணைந்தார். கணேசன் பழைய நண்பர்களை சந்தித்தார். அவரது ஷார்ப்னெஸ் மீண்டும் வெளிப்பட்டது.

வீட்டின் ஒரே ஆண் பிள்ளை என்ற வகையில் குடும்ப பொறுப்பை ஏற்க திருமணம் செய்து வைக்க குடும்பத்தினர் முடிவு செய்தனர். கணேசன் உடல் நிலை அறிந்து மணக்க ஒரு சகோதரி முன் வந்தார். படித்தவர். மகிழ்ச்சியான சூழல்.

கடந்த வாரம் திருமணம். 300 கி.மீ தூரம் பயணம் செய்ய வேண்டிய ஊர். முதல் நாள் இரவே சென்று வாழ்த்தி வந்தேன்.

நடப்பதற்கும், கை அசைவிற்கும் இன்னும் சிரமப்பட்டாலும், தடைகளை தகர்த்து புதுவாழ்வு துவங்கும் கணேசன் பலருக்கு பாடம். கணேசனின் வாழ்வு சிறக்கும்.

# வாழ்க கணேசன், வெல்க அவர் மன உறுதி !

சனி, 14 செப்டம்பர், 2013

எம்.எல்.ஏ-வே 16 ரூட்டு கேக்கறார்...( தொடர்ச்சி )

அந்தத் திட்டம்....(தொடர்ச்சி)

வழக்கமாக  அரசு பேருந்துகளுக்கு புதிய ரூட் போடும் போது, டெப்போவில் இருந்து கிளம்பும் பேருந்துகள் எந்த ஊருக்கு செல்கிறதோ, அங்கிருந்து திரும்ப டெப்போ இருக்கும் ஊர் வரை வந்து செல்வது போல ரூட் போடுவது வழக்கம். அப்போது தான் டைம்கீப்பர் மூலம் கண்காணிக்க முடியும், டெப்போவிற்கு வந்து பராமரிக்க முடியும் என்பது அதிகாரிகள் மனப்பான்மை.

நான் கேட்ட ரூட்கள், செந்துறை ஒன்றியத்தில் உள்ள சன்னாசிநல்லூர், வாளரக்குறிச்சி ஆகிய கிராமங்களுக்கு புதிய வழி தடம். வீராக்கன், நாகல்குழி கிராமங்களுக்கு டவுன் பஸ்ஸே கிடையாது, அதற்கு டவுன் பஸ் கேட்டிருந்தேன். செந்துறையை திட்டக்குடி மெயின் ரோடிற்கு  இணைக்க வேப்பூர் ஒன்றியத்தில் உள்ள துங்கபுரம் கிராமத்திற்கு நக்கம்பாடி, நமங்குணம் வழியாக டவுன் பஸ் கேட்டிருந்தேன். (ஒவ்வொரு ரூட்டிற்கும் தனி விளக்கம் எழுதலாம்.)

இதற்கு தனித் தனியாக ரூட் போட்டு பஸ் ஒதுக்கினால், 4 பஸ்கள் தேவை. அப்போது தான், வழக்கப்படி அரியலூருக்கும் அந்த கிராமங்களுக்கும் இடையில் பேருந்து இயக்க முடியும். இதை நான் ஒரே பேருந்தை கொண்டு அனைத்து ஊருக்கும் ரூட் போட்டுக் கொடுத்தேன்.

நான் அரியலூர் டெப்போவிலிருந்து கிளம்பும் பேருந்தை செந்துறையை மையமாக கொண்டு நான்கு கிராமங்களுக்கு சென்று வருவது போல ரூட் போட்டேன். மதியம் ஓட்டுனர், நடத்துனர் டியூட்டி மாற்ற ஒரு முறையும், மெயிண்டெனன்ஸுக்கு இரவு ஒரு முறையும் டெப்போவிற்கு செல்லவும் மட்டும் அரியலூர் செல்வது திட்டம்.

இதே போல் ஜெயங்கொண்டம் டெப்போவிலிருந்து ஆண்டிமடம் ஒன்றிய 4 கிராமங்களுக்கு ஒரு பேருந்து. முள்ளுக்குறிச்சி, காடுவெட்டி, மாத்தூர், நாகம்பந்தல்(தற்போது இந்த ஊர் இயங்கவில்லை) ஆகிய  ஊர்களுக்கு.
  
அரியலூரிலிருந்து செந்துறை வரும் பேருந்து, 1.செந்துறை சன்னாசிநல்லூர் செந்துறை, 2.செந்துறை துங்கபுரம் செந்துறை, 3.செந்துறை வாளரக்குறிச்சி செந்துறை, 4.செந்துறை நாகல்குழி ஜெயங்கொண்டம் நாகல்குழி செந்துறை என நான்கு வழி தடங்களில் சென்று வரும்.மதியம் அரியலூர் சென்று வந்து மீண்டும் இதே வழித் தடங்களில் பயணிக்க திட்டம். அவர்கள் வழக்கப்படி விட்டால் ஒவ்வொரு முறையும் செந்துறையிலிருந்து அரியலூர் சென்று வர வேண்டும். அதை அப்படி சேர்த்து படித்துப் பாருங்கள்.

இது அவர்கள் நடைமுறையில் இல்லாததால் தயங்கினார்கள். “இது நம்ம கார்ப்பரேஷனில் டிரை பண்ணதில்ல. பிராஞ்சிற்கு வந்து போவது போல ரூட் போடறது வழக்கம். “வேற பிராஞ்சில் இருக்கா ?. “தெரியலிங்க சார்.

சென்னை போன்ற லாங் ரூட் போற பஸ்லாம் ஒரு நாளைக்கு ஒரு நடை தானே டெப்போவுக்கு வரும் ? எனக் கேட்டேன். ஆம்என்றார்கள். இதுவும் அது மாதிரி தான் என்றேன். பதில் இல்லை.மறுநாள் அந்த கிராமங்களில் புதிய பேருந்து இயக்க விழா.

# ரூட் கிளியர் !

வெள்ளி, 13 செப்டம்பர், 2013

எம்.எல்.ஏ-வே 16 ரூட்டு கேக்கறார்...

போக்குவரத்து துறை அமைச்சர் அப்போது அண்ணன் கே.என்.நேரு அவர்கள். தலைமை செயலகத்தில் அவரது அறையில் நுழையும் போதே நல்லக் கூட்டம், ஆளுக்கொரு மனுவோடு.

நானும் என் பங்குக்கு மனுக்களோடு சென்றிருந்தேன். அரசியலில் அவர் என் தந்தையின் சம காலத்தவர். இருந்தாலும் எல்லோருடனும் எளிமையாக பழகக் கூடியவர். “என்னப்பா ? என்றார். “அண்ணே, பஸ் தான்என்று இழுத்தேன். காரணம், கையில் கணக்கில்லா புது ரூட்டுகள் கேட்டு அத்தனை மனு.

K. N. Nehru In Office

மனுக்களை வாங்கிப் பார்த்தார். பக்கத்தில் இருந்த போக்குவரத்து துறையின் உயர் அதிகாரியிடம் கொடுத்தார். “எஸ்.எஸ் பையன்யா, சீக்கிரம் சர்வே பண்ணி குடுங்க என்றார். மனுக்களை படித்த அதிகாரி “சார், மொத்தமே 200 பஸ் தான் வருது. எம்.எல்.ஏ-வே 16 ரூட்டு கேக்கறார் என்றார்.

“என்னப்பா பண்றது என்றார். “சரிங்க அண்ணே, முக்கியமான பஸ் போகாத கிராமத்துக்கு மட்டும் இந்த வருஷம் கொடுங்க. மிச்சத்தை அடுத்த வருடம் கொடுங்க என்றேன். “ டிவிஷ்னல் மேனேஜர சர்வே பண்ணிட்டு, எம்.எல்.ஏ-வ பார்க்க சொல்லுங்கஎன்றார் அதிகாரியிடம்.

ஊருக்கு வந்த பிறகு, சர்வே செய்த டிவிஷ்னல் மேனேஜர் சந்தித்தார். “சார் 8 ரூட்கள் வருது. அத்தனை பஸ் தருவாங்களா ? என்றார். அது அரியலூர் டெப்போவில் 4 பஸ் செந்துறை ஒன்றியத்திற்கும், ஜெயங்கொண்டம் டெப்போவில் 4 பஸ் ஆண்டிமடம் ஒன்றியத்திற்கும் என வந்தது.

நான் அதற்கு ஒரு தீர்வு கொடுத்தேன். டி.எம் “சார், இது போல இதுவரை செய்ததில்லை என்றார். நான் என் லெட்டர்பேடில் நான் சொன்ன வகையில் புது ரூட்களை எழுதி கொடுத்தேன். “நீங்க ஒங்க சர்வே படியும் அனுப்புங்க, என் திட்டப்படியும் அனுப்புங்க என்றேன்.

மீண்டும் கோட்டை, அமைச்சரிடம். என் திட்டத்தை பார்த்த அதிகாரி அமைச்சரிடம் “சார், இது புது மாதிரியா கொடுத்திருக்கிறார் என்றார். “ அண்ணே, 8 பஸ் வேண்டும். ஆனால் நான் 2 பஸ்ல அந்த ரூட் எல்லாம் போகிற மாதிரி கொடுத்திருக்கிறேன் என்றேன்.

“சார், அவன் வேலைக்கு போயிருந்தா, உங்கள மாதிரி அதிகாரியா வந்திருக்க வேண்டிய ஆள், எஞ்சினியர். சரியா தான் இருக்கும். அனுப்புங்க என்று அதிகாரியிடம் சொல்லி மனுவை வாங்கி கையெழுத்து போட்டுக் கொடுத்தார்.


அந்தத் திட்டம்.... (தொடரும்)

அப்பாவே ஒரு போஸ்ட் பாண்டி....

ஜூனியர்ஸ் ரெண்டு பேருக்குள்ள டிஸ்கஷன் போய்கிட்டு இருந்தது...

“வருத்தப்படாத வாலிபர் சங்கம்” படப் பாடல்கள் ரொம்ப அட்ராக்ட் பண்ணியிருக்கு போல, அத பத்தி பேச்சு போச்சு...

ஜில்லாவோ திண்டுக்கல்லு
சின்னாலம் பட்டி பக்கம் சொல்லு
நம்ம சிலுக்குவார்பட்டி சிங்கம்
செம்பு கலக்காத தங்கம்
அது வைத்திருப்பதோ வருத்தப்படாத வாலிபர் சங்கம்
“நம்ம வருத்தப் படாத வாலிபர் சங்கத் தலைவர் போஸ் பாண்டி சிவசூர்யா எம்.ஏ., எம்.பில் பார்” அப்படின்னு அண்ணன் தம்பிய பார்த்து சொன்னார்...

நாம சும்மா இருக்கனும். சுழி விடுதா...

“ அடடா, அண்ணன் போஸ் பாண்டி வாழ்க ! ”

அதுக்கு தம்பி கிட்ட இருந்து வந்துது பாருங்க ரிப்ளை....

“அண்ணே, நான் போஸ் பாண்டி தான். ஆனா அப்பா போஸ்ட் பாண்டி”

“ டெய்லி ஃபேஸ்புக்ல, பிளாக்ல போஸ்ட் போடுறது தானே வேல....”

# தேவையா நமக்கு. எஸ்கேப்.....

வியாழன், 12 செப்டம்பர், 2013

துள்ளி குதித்து ஓடிய எம்.எல்.ஏ....

அது கல்விக்கடன் வழங்கும் விழா. வங்கிகள் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டது. அரசு விழா. வங்கி அலுவலர்களாலும், அரசு அதிகாரிகளாலும் நிரம்பி வழிகிறது மேடை. தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் மேடையில் இருக்கிறார்.

பெற்றோர்கள் பிள்ளைகளின் சார்பாக கடனுக்கான காசோலையை வாங்க குவிந்திருக்கிறார்கள். விழா துவங்கி அனைவரும் உரையாற்றுகிறார்கள். காசோலையை வழங்க துவங்குகின்றனர். ஒவ்வொருவர் பெயராக அறிவிக்கப்படுகிறது. பெற்றோர் மேடையேறி பெற்றுக் கொள்கின்றனர். சட்டமன்ற உறுப்பினர் காசோலையை வழங்கி புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கிறார். உடன் உள்ளாட்சி நிர்வாகிகளும் ஆளுங்கட்சியினரும். கீழே பத்திரிக்கையாளர்கள் கேமராவுடன்.

அடுத்த மாணவன் பெயர் அறிவிப்பு வருகிறது. கடைசி வரிசையில் இருந்த மாணவனின் தந்தை எழுந்தவர் ஒரு நிமிடம் யோசிக்கிறார். மேடையை நோக்கி நடக்கத் துவங்குகிறார். வந்தவரை பார்த்தவுடன் உடன் இருந்தவர் எம்.எல்.ஏ காதில் கிசுகிசுக்கிறார்.

எம்.எல்.ஏ அப்போது தான் வருபவரை பார்க்கிறார். ஷாக் அடித்தது போல் ஆகிவிட்டார். முகம் மாறுகிறது. உடன் இருப்பவர்களை பார்க்கிறார். அவர்களும் விழிக்கிறார்கள். விறுவிறுவென மேடையிலிருந்து எம்.எல்.ஏ துள்ளி குதித்து இறங்குகிறார். உடன் இருந்தவர்களும் திபுதிபுவென மேடையிலிருந்து குதித்து ஓடுகின்றனர்.

வங்கி அலுவலர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. அதற்குள் மாணவனின் தந்தை மேடையேறிவிட்டார். வங்கி மேனேஜர் " சார், இவருக்கு மட்டுமாவது செக் கொடுத்துட்டு போங்க சார்" என கெஞ்சுகிறார். எம்.எல்.ஏ காரில் ஏறுகிறார். கார் தெலுங்கு படத்தில் வருவது போல் பறக்கிறது.

மேனேஜருக்கு தெரியாது இவருக்கு மட்டும் செக் கொடுக்க பயந்துதான் எம்.எல்.ஏ பறந்தார் என்பது.

மேடை ஏறிய மாணவரின் தந்தை ஏற்கனவே வங்கியில் கொடுத்த விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டு காசோலை வாங்க அழைக்கப்பட்டதால் விழாவுக்கு சென்றிருந்தார். அவருக்கு தெரியாது, காசோலை வழங்கப் போவது எம்.எல்.ஏ என்று. போன பிறகு ஒரு காசோலை கொடுத்துவிட்டு எம்.எல்.ஏ சென்று விடுவார், அதிகாரிகள் கொடுப்பார்கள் எனக் காத்திருந்தார்.

அப்போது தான் அவரை அழைக்க, அவரும் நம்மால் எம்.எல்.ஏவுக்கு ஏன் கெடுதல் என ஒரு நிமிடம் யோசித்துவிட்டு, வாங்காவிட்டால் நம்மை தவறாக நினைப்பார்களே என மேடை ஏறி விட்டார்.

பயமுறுத்திய மாணவனின் தந்தை : கென்னடி, திருமானூர் ஒன்றிய தி.மு.க செயலாளர். அலறியடித்து ஓடியவர் அரியலூர் எம்.எல்.ஏ துரை.மணிவேல். இடம் : திருமானூர் ஒன்றிய அலுவலகம்.

உங்களுக்கு என்ன சிரிச்சிட்டு போயிடுவீங்க, அவரோட சேர்த்து, ஒரு போட்டோ மட்டும் எடுத்திருந்தா என்னாவது....

#அண்ணன் ஏற்கனவே மாவட்ட செயலாளர விட்டுருக்காரு. இனிமேலும் இழக்க முடியாது...


( நன்றி : தினமலர் நாளிதழ் )

உங்க ப்ரெண்ட் டிரெட் மில்ல நடக்கறத்துக்கா வர்றாரு ?

நீண்டநாட்கள் கழித்து கல்லூரி நண்பர் சுரேஷ் அமெரிக்காவிலிருந்து வந்திருந்தார். சந்திக்க வீட்டிற்கு வருவதாக சொல்லியிருந்தார்.

அதனால் வீட்டின் ஹாலை சுத்தம் செய்யும் முயற்சியில் இருந்தேன். அன்று பள்ளி விடுமுறை. வீட்டிலிருந்த இரண்டாவது படிக்கும் மகன் சூர்யா உதவிக்கு வந்தார். ( அப்பவே ஜாக்கிரதை ஆகியிருக்கனும்... )

நாற்காலிகளில் கிடந்த நாளிதழ்கள் மற்றும் புத்தகங்களை எடுத்தேன், அவர் வாங்கி அடுக்கினார். 

"யார்ப்பா வர்றாங்க ?"
"காலேஜ்ல கூட படிச்ச பிரெண்ட் வர்றாரு"

டைனிங் டேபிளை சுத்தம் செய்தேன், " அவர் சேர்ல தான உட்காரப் போறாரு ?" ஸ்பின்.

துணிகாயும் ஸ்டேண்டை தள்ளினேன், தள்ளி அறைக்குள் கொண்டு போனார்.
டிரெட் மில்லின் மேல் இருந்த பொருட்களை அப்புறப்படுத்தினேன். அடுத்த கேள்வி கூக்லியாக வந்தது.

" அவர் டிரெட் மில்ல நடக்கரத்துக்கா வர்றாரு ?"

புதன், 11 செப்டம்பர், 2013

தளபதி வழிப்பயணம் - சுற்றுப்பயணம் ஆனது....


09.09.2013 அன்று தளபதி அவர்கள் தலைமையில் முன்னாள் அமைச்சர் கோ.சி.மணி அவர்கள் இல்லத் திருமணம், கும்பகோணத்தில். திருமணம் முடிந்து திருச்சி சென்று விமானத்தில் செல்வதாக இருந்ததை கார் பயணமாக சென்னை செல்வதாக முடிவு மாறியது. குடந்தையிலிருந்து மதனத்தூர் கொள்ளிடம் பாலம் வழியாக தா.பழூர், ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், விருத்தாசலம் வழியாக உளுந்தூர்பேட்டையில் நெடுஞ்சாலை அடைவது என திட்டம் இறுதியானது.

தளபதி அவர்கள் தற்போது கார் பயணத்தையே அதிகம் தேர்ந்தெடுக்கிறார்கள். மக்களோடு தொடர்புடையவராக இருப்பதற்கும், செல்கின்ற வழியில் இருக்கும் ஊர்களின் நிலை அறியவும் இது உதவுகிறது. அதனால் தான் கார் பயணத்தை விரும்புவதாக நினைக்கிறேன்.


தளபதி திருமணம் முடித்து தா.பழூர் வருகை தந்த போது, ஒன்றிய திமுக அலுவலகம் முன்பு கழகத் தோழர்கள் திரண்டு வரவேற்றோம். மாநில இளைஞர் அணி துணை செயலாளர் அண்ணன் சுபா.சந்திரசேகர் அவர்கள் கழகத் தோழர்கள் புகைப்படம் எடுத்துக் கொள்ள விரும்புவதை தெரிவிக்க தளபதி அவர்கள் உடனே இறங்கி அலுவலகத்தின் உள் வந்தார்கள், உடன் தளபதி அவர்களின் துணைவியார் அண்ணியார் அவர்களும் வந்தார்கள்.

கழகத் தோழர்கள் வரிசையாக வந்து இளைஞர் அணி வளர்ச்சி நிதி வழங்கி சால்வை, துண்டு வழங்கி புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள். புகைப்படம் எடுத்த மூன்று பேரில் ஒருவரிடம் தளபதி அவர்கள், " உங்க கேமராவில் பிளாஷ் செயல்படவில்லை. புகைப்படம் எடுத்தவர்களுக்கு கொடுக்கலைன்னா ஏமாந்துவிடுவார்கள்" என்றார். தளபதியின் அலர்ட்னெஸை கண்ட புகைப்பட தோழர் அயர்ந்து போனார்.

புகைப்படம் எடுத்துக் கொண்ட ஒரு தோழர் வெளியே செல்லாமல் உள்ளேயே சுற்றி வருவதை தளபதி அவர்கள் கவனித்து விட்டார்கள. "ஏன், மீண்டும் புகைப்படம் எடுக்கனுமா ?" எனக் கேட்க ஒன்றிய செயலாளர் க.சொ.க.கண்ணன் " அண்ணா, அவர் எங்கள் ஒன்றியத்தை சேர்ந்த கழகத் தோழர். தலைமைக் கழகப் பேச்சாளர் இளஞ்செழியன். தலைவர் கலைஞரின் 90வது பிறந்தநாளை ஒட்டி 90 கவிதைகள் எழுதி ஒரு நூலாக தயார் செய்திருக்கிறார். அதை நீங்கள் வெளியிட்டால் எங்களுக்கு பெருமை" என சொன்னார்.

தளபதி அவர்கள் உடன் ஒப்புக் கொண்டு, "தாய் தமிழ் 90" என்ற கவிதை நூலை, வாங்கிக் கொண்டு "யார் வாங்குவது" எனக் கேட்க, ஒன்றிய செயலாளர் என்னைக் காட்டினார். தளபதி அவர்கள் வழங்க பெற்றுக் கொண்டேன். நூலாசிரியர் இளஞ்செழியனுக்கு எல்லையற்ற மகிழ்ச்சி. அவருக்கு இது வாழ்நாள் சாதனையல்லவா....

Photo: இன்று (9-9-13) தா.பழூர் ஒன்றிய அலுவலகத்தில் தலைவர் கலைஞரின் 90-வது பிறந்தநாளை முன்னிட்டு தலைமை கழக பேச்சாளர் இரா.இளஞ்செழியன் அவர்கள் எழுதிய ”தாய் தமிழ்” எனும் கவிதை நூலினை வருங்கால தமிழகம் தளபதி அவர்கள் வெளியிட்டார்கள்.மாவட்ட கழக செயலாளர் அண்ணன் எஸ்.எஸ்.சிவசங்கர்,மாநில இளைஞரணி துணை செயலாளர் சுபா.சந்திரசேகர்,குடந்தை சட்ட மன்ற உறுப்பினர் க.அன்பழகன்,ஜெயங்கொண்டம் ஒன்றிய செயலாளர் தனசேகர்,மற்றும் கழக முன்னோடிகள் உள்ளனர்..

தளபதி அவர்களிடத்தில் ஒன்றிய செயலாளர் மினிட் நோட்டில் கையொப்பம் பெற கொடுக்க, கட்சி அலுவலகம் எந்த ஆண்டு கட்டப்பட்டது என்று தளபதி அவர்கள் கேட்டார்கள். மறைந்த சட்டமன்ற உறுப்பினர் க.சொ.கணேசன் 
அவர்களால் கட்டப்பட்டு 92ஆம் ஆண்டு தலைவர் கலைஞர் அவர்களால் திறந்து வைக்கப்பட்ட புகைப்படத்தை காட்ட


 தளபதி அவர்கள் மகிழ்ந்தார்கள். "தலைவர் அவர்களால் திறக்கப்பட்ட அலுவகத்தை பார்வையிடும் வாய்ப்பு கிடைத்தமைக்கு மகிழ்ச்சியடைந்தேன். பணிகள் சிறப்பாக உள்ளது, தொடரட்டும்" என எழுதி கையெழுத்து இட்டார்கள்.

            

ஜெயங்கொண்டத்தில் நகர செயலாளர் வெ.கொ.கருணாநிதி தலைமையில் அளிக்கப்பட்ட வரவேற்பை ஏற்று பயணம் தொடர்ந்தார்கள். அலைபேசியில் அழைத்த ஒசெ க.சொ.க.கண்ணன் "தனியாக தேதி பெற்று இருந்தால் கூட எங்களுக்கு இவ்வளவு சிறப்பு கிடைத்திருக்காது. தளபதி எங்களை பெருமைப்படுத்தி விட்டார்" என அகமகிழ்ந்தார்.

ஆண்டிமடத்தில் ஒன்றிய செயலாளர் தர்மதுரை அவர்கள் தலைமையில் கழகத் தோழர்கள் வரவேற்பளித்தனர். அங்கு கழக சட்டத்திருத்தக் குழு உறுப்பினர் எஸ்.சிவசுப்ரமணியன் (எனது தந்தையார்) காரில் இருந்து இறங்கி நடக்க சிரமப் படுவதை கண்ட தளபதி அவர்கள் காரில் இருந்து இறங்கி தானே அருகே சென்று வேட்டியினை பெற்றுக் கொண்டார். "உடல் நலமாக இருக்கிறதா ? நீங்கள் ஏன் வெயிலில் காத்திருக்கிறீர்கள்" எனக் கேட்டு காரில் அமர சொல்லிவிட்டு பிறகு தனது காருக்கு திரும்பினார். அவர் எளிமையை கண்டு, மூத்த கழகத்தவரை மதிக்கின்ற பாங்கு கண்டு பொதுமக்கள் பிரமித்து பார்த்தனர். 

Photo


தளபதி சென்னை நோக்கி கிளம்பினார்கள். தளபதி அவர்களுக்கு இது தினம் மேற்கொள்ளும் பயணத்தில் ஒன்று, வழக்கமான நிகழ்வு. ஆனால் எங்கள் மாவட்டத்துக் கழகத் தோழர்களுக்கு இது ஒரு மறக்க முடியாத நிகழ்வு.

# நம்பிக்கையான எதிர்காலம் !

ஊர்வலம் துவங்கும் போதே கெடுபிடி....(2)

தொடர்ச்சி... 

போலீஸார் எங்களை துரத்துவதிலேயே குறியாக இருந்தனர். அதற்குள் தொலைவில் கேட்ட சத்தம், டி.ஜி.பி அலுவலகம் அருகே நடந்த துப்பாக்கிச் சூடு என தெரிய வந்தது..

போலீஸார் லத்தியை சுழற்றத் துவங்கினர். சாலைக்கு திரும்ப சென்றவர்கள் மீது ரப்பர் குண்டுகள் வந்து தாக்கத் துவங்கின. தொடர்ந்து சுடும் சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தது. சாலையே போர்களமாக காட்சி அளித்தது. எங்கள் மாவட்டத்தினர் மட்டும் அந்த இடத்திலேயே மாட்டிக் கொண்டோம். எங்களில் சிலருக்கு கல்லடி, சிலருக்கு லத்தி அடி.

முன்னாள் சென்றவர்கள் கால்வாய்க்கு இடது புறம் உள்ள சாலையில் சென்றுவிட்டனர். அந்த நேரத்தில் ஒரு மாருதிவேன் ஆம்புலன்ஸ் ஒன்று கடற்கரையை நோக்கி வந்தது. நாங்கள் இருக்கும் பகுதியை கடக்கும் போது புகை மூட்டத்தால் வேகம் குறைந்தது. இருக்கும் சூழலை பார்த்து ஆம்புலன்ஸை திருப்ப முனைந்தது போல் இருந்தது.

அந்த நேரத்தில் பக்கத்தில் ஒரு கட்டிடத்தில் இருந்து வந்த இரண்டு பேர் அந்த ஆம்புலன்ஸை கட்டையால் தாக்கினர். கண்ணாடிகள் நொறுங்கின. டிரைவர் இறங்கி தப்பி ஒடினார். ஆம்புலன்ஸில் வேறு யாரும் இல்லை. தாக்கிய இருவரும் தள்ளி சென்று ஒரு பாட்டிலை ஆம்புலன்ஸ் மீது அடித்தனர்.

வேன் தீ பிடித்தது. சினிமாவில் நடப்பதை போல் காட்சிகள் நடந்தேறின. நிமிடங்களில் நடந்த இந்த சம்பவத்திற்கு போலீஸார் மௌனசாட்சியாக நின்றனர். இப்போது நாங்கள் 50 பேர் அளவிலே அந்த இடத்தில் இருந்தோம். மீதி பேர் கால்வாயின் இரு பக்கங்களிலும் சென்று கொண்டிருந்தனர். பின்னால் வெகு தொலைவிலே மற்ற மாவட்டங்களை சேர்ந்தவர்கள் போலீசாரால் மறிக்கப்பட்டுக் கொண்டிருந்தனர்.

நாங்கள் இருந்த இடத்திலிருந்து காந்தி சிலை வரை சாலை வெறிச்சோடி காணப்பட்டது. பிளாட்பார்மில் ஏறி நடந்தோம். சாலை முழுவதும் ஓடும் போது விட்டு சென்ற செருப்புகளும், கிழிந்த துண்டுகளும், வேட்டிகளும், முறிந்த லட்டிகள் என போர் முடிந்த களமாய் காட்சியளித்தது.

பொங்கி வழியும் வியர்வையும், கண் எரிச்சலுமாய், தாக்குதலின் வலியுமாய் கடற்கரை சாலையை அடைந்தோம். அங்கு இதை விட அலங்கோலம். போலீஸார் தடியடி மற்றும் துப்பாக்கிச்சூட்டால் பாதிக்கப்பட்டு கை, கால் முறிந்து, காயங்களோடு பலர் சாலை ஓரமாக அமர்ந்திருந்தனர். குண்டடிப்பட்டவரை தூக்கி செல்கிறார்கள் என்றனர். ஒருவருக்கு உயிர் பிரிந்துவிட்டது என்றனர்.

கழகத் தோழர்கள் வந்த வேன்கள் வந்து தாக்கப்பட்டவர்களை ஏற்றி செல்லும் முயற்சியில் இருந்தனர். நாங்கள் முன்னே செல்ல ஆரம்பித்தோம். விவேகானந்தர் இல்லத்திற்கு அந்தப்பக்கம் சாலை விளக்குகள் ஒளிரவில்லை, வாகன வெளிச்சம் மட்டுமே. பார்த்தால் வெட்டுக்காயங்களோடு இருந்த சிலரை வாகனத்தில் ஏற்றிக் கொண்டிருந்தனர்.

ஊர்வலத்தில் வந்தவர்கள் மீது டி.ஜி.பி அலுவலகத்திலிருந்து காந்தி சிலை பகுதிகளில் துப்பாக்கிச் சூடு நடத்திய அதே நேரத்தில், திருவல்லிக்கேணி அயோத்திக்குப்பம் பகுதியில் இருந்து வந்த ரவுடிக்கூட்டம் சிறுசிறு குழுக்களாக பிரிந்து கழகத் தோழர்களை வீச்சரிவாள் போன்ற ஆயுதங்களால் தாறுமாறாக வெட்டியிருக்கின்றனர். தலை, கை, கால் என ஏகப்பட்ட பேருக்கு வெட்டு. எங்கும் ரத்த மயம். மரண ஓலம்.

( போலிசுக்கு தலைமை முத்துக்கருப்பன், ரவுடிகளுக்கு தலைமை அயோத்திக்குப்பம் வீரமணி. அரசுக்கு தலைமை முதலமைச்சர் ஜெயலலிதா )

இதை எல்லாம் பார்த்து பதைபதைத்த நாங்கள் உடன் வந்தவர்களை தேடிப் பிடிக்கத் தொடங்கினோம். ஒரு குழு தப்பி ஓடி அயோத்திக்குப்பம் வழியாக வந்து, அங்கே சிலரால் துரத்தப்பட்டு வந்து சேர்ந்தனர். இன்னும் சிலர் நாங்கள் தாக்கப்பட்ட பகுதியிலேயே மொட்டை மாடிகளில் ஏறி ஒளிந்திருந்து வந்து சேர்ந்தனர். பலர் தப்பி பீச்க்கு ஓடி வந்து நாங்கள் வந்த வாகனங்களை கண்டு பிடித்து அமர்ந்திருந்தனர்.

பீச்சில் இருந்த வாகனங்களையும், தோழர்களையும் போலீஸ் கிளம்ப சொல்லி விரட்ட ஆரம்பித்தனர். அப்போது கடற்கரை சாலையிலிருந்து துப்பாக்கி ஏந்திய போலிசார் கடற்கரை மணலில் இறங்குவதும், சாலைக்கு திரும்ப போவதுமாக மிரட்டிக் கொண்டிருந்தனர். திரும்ப துப்பாக்கிச்சூடு நடக்கலாம், ரவுடிகள் தாக்க வரலாம் என்ற பீதி கிளம்பியது.

ஒவ்வொரு வாகனமாக கிளப்பி அனுப்பினோம். என்னிடம் அலைபேசியில் தொடர்பு கொண்டவர்களை திரட்டி கடைசி வாகனத்தை கிளப்பிய போது இரவு 11.00. நீங்காத திகிலோடு ஊர் திரும்பினோம், வாழ் நாளுக்கும் மறக்க மாட்டோம்.

பின்னாளில், எங்கள் ரத்தத்தை அம்மனுக்கு பூசை செய்த அயோத்திக்குப்பம் வீரமணி, அம்மனாலேயே அருள் பாலிக்கப்பட்டார்.

# இன்னும் ரத்தப் பூசை கேட்ட அம்மன் தான்....