பிரபலமான இடுகைகள்

செவ்வாய், 30 ஜூன், 2015

சாதனை மேல் சாதனை, வாழ்த்துக்கள் !

வாழ்த்துக்கள் முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களுக்கு !

தொடர்ந்து முறியடிக்க முடியாத சாதனையாக செய்து வருகிறீர்கள். இன்று அதில் மேலும் ஒரு எண்ணிக்கை கூடியிருக்கிறது. ஆர்.கே நகரின் வெற்றி, சாதனை வெற்றி.

இனி வரும் காலங்களில் யார் தமிழகத்தின் முதல்வராக வந்தாலும், தங்கள் சாதனையை அவர்களால் சமன் செய்ய இயலாது. தமிழகம் என்ன இந்தியாவிலேயே எந்த முதல்வரும் உங்களோடு  ஒப்பிடும் அளவிற்கு வர இயலாது.

இந்தியாவிலேயே எந்த முதல்வரும் இது வரை ஊழல் வழக்குகளில் சிக்கி, முதல்வராக இருக்கும் போதே தீர்ப்பு வழங்கப்பட்டு, பதவியை இழந்ததும் கிடையாது, தீர்ப்பு வழங்கப்பட்ட உடன் கைது செய்யப்பட்டு சிறை சென்றதும் கிடையாது.

இந்தியாவிலேயே சிறையில் இருந்த காலத்திலும் மக்கள் முதல்வராகப் பதவி வகித்து, சிறையில் இருந்தவாறே  மாநில அரசை வழி நடத்தி, செயல்படுத்திய பணிகளை மக்கள் அனுபவிக்க தனது விடுதலைக்காக காத்திருக்க வைத்த சாதனையும் வேறு யாருக்கும் கிடையாது.

இந்தியாவில் எந்த முதல்வரும் அரசு சொத்தையே வாங்கியதும் கிடையாது, அதற்காக தண்டனையும் பெற்று, மேல்முறையீட்டில் அரசு சொத்தை திருப்பிக் கொடுத்து, மனசாட்சிப் படி மன்னிப்பு பெற்று தப்பித்ததும் கிடையாது.

இந்தியாவிலேயே முதல்வராக பதவியேற்று, ஊழல் வழக்குகளால் பதவி இழந்து, அதுவும் இரண்டு முறை, மீண்டும் பதவிக்கு வருவதற்காக  இடைத்தேர்தல்கள் ஏற்படுத்தி, அதில் வெற்றி பெற்ற வரலாறு யாருக்கும் கிடையாது.

இந்தியாவிலேயே முதல்வராக பணியாற்றி, அரசு விதி முறைகளை அறிந்தும், அதற்கு மாறாக நான்கு சட்டமன்றத் தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்து, சட்டப்படி தள்ளுபடி செய்யப்பட்டு, தேர்தல் களத்தை காமெடியாக்கிய சாதனை யாருக்கும் கிடையாது.

அதில் அடுத்தக் கட்டம் தான் இந்த ஆர்.கே.நகர் தேர்தல் வெற்றி. தொடர்ந்து அதிமுக வெற்றி பெறுகிற தொகுதியில், முதலமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டு போட்டியிட்டு, வெற்றி பெற்று சாதனை.

அதிலும் தேர்தல் முறையாக நடக்காது என, பிரதான எதிர்கட்சிகள் போட்டியிடாமல் புறக்கணித்த நிலையிலும், மொத்த மந்திரிகளையும், கட்சி நிர்வாகிகளையும் களம் இறக்கி, அரசு நிர்வாகத்தின் மூலம் அடிப்படை வசதிகளை செய்து கொடுத்து மாபெரும் வெற்றி.

அதிலும் ஒரு வாக்குச்சாவடியில், வாக்காளர் பட்டியலில் இருந்ததை விட கூடுதல் வாக்காளர்கள் வாக்களித்திருக்கிறார்கள் என தேர்தல் ஆணையமே ஒப்புக் கொண்டு, மறு வாக்குப் பதிவு நடத்தி பெற்றிருக்கின்ற வெற்றி. இது சாதனை வெற்றி.

இது என்ன, இன்னும் பல சாதனைகள் படைப்பீர்கள்.

முதல்வராக கர்நாடக சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை எதிர்கொண்டது போல், மீண்டும் முதல்வராக இருந்து கொண்டு உச்ச நீதிமன்ற தீர்ப்பையும் எதிர் கொள்வீர்கள். சாதனை புரிவீர்கள்.

தற்போது ஆர்.கே.நகரில் பெற்ற 1.5 லட்சம் வாக்கு வித்தியாசத்தை, அடுத்த மாதம்  இடைத்தேர்தல் வரவழைத்து, இன்னொருவரை நிறுத்தி, இன்னும் கூடுதல் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்து சாதனை படைப்பீர்கள்.

தமிழகத்தை சோதனைக் களமாக்கி சாதனைகள் பல படைக்க வாழ்த்துக்கள் !

# மேலும் மேலும் சாதனை புரிவீர்களா? படைப்பீர்களா?

ஞாயிறு, 28 ஜூன், 2015

உடன்பிறப்பே, மெட்ரோ ரயிலை கொண்டாடுவோம் !

அன்பு சகோதரா,

உங்களுக்கு ஒரு அருமையான வாய்ப்பு கிடைத்துள்ளது, பயன்படுத்திக் கொள்ளுங்கள். எங்களுக்கு கிடைக்காத வாய்ப்பு, சென்னையில் இருக்கும் உங்களைப் போன்ற உடன்பிறப்புகளுக்கான வாய்ப்பு.

தலைவர் கலைஞர் ஆட்சிக்காலத்தில் துவங்கப்பட்ட, நமது தளபதி அவர்களின் கனவுத் திட்டமான "மெட்ரோ ரயில்", நாளை தனது பயணத்தை துவங்குகிறது. துவக்கி வைப்பது யார் என்று கவனித்தீர்களா?

"மெட்ரோ ரயில்", தலைவர் காலத்தில் துவங்கிய திட்டம் என்பதால், அதை உச்சரிக்கவே விரும்பாமல், நான்காண்டுகளாக "மோனோ ரயில், மோனோ ரயில்" என்று மந்திர உச்சாடனம் போல் அர்ச்சித்துக் கொண்டிருந்த ஜெயலலிதா தான்.

"மோனோ ரயில்" உலக அளவில் தோல்வியை தழுவிய திட்டம் என்பது ஜெயலலிதாவுக்கும் தெரியும் . இருப்பினும் அதை திருப்பி திருப்பி சொன்னது, மக்கள் கவனத்தை திசை திருப்பவே. அதனால் தான் நான்காண்டுகள் கழிந்தும் மோனோ ரயில் இன்னும் டெண்டர் நிலையிலேயே இருக்கிறது.

மதுரவாயல் - துறைமுகம் விரைவு சாலை, தலைவர் ஆட்சி காலத்தில் துவங்கப்பட்டது தாங்கள் அறிந்ததே. ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தவுடன், அதை முடக்கிப் போட்டு, அந்தத் திட்டத்திற்காக அமைக்கப்பட்ட தூண்கள் இன்றும் "அவல சின்னங்களாக" நிற்கின்றன.

தமிழக சட்டமன்றம், ராணுவத்திற்கு சொந்தமான கோட்டையில் நடப்பதை, அதுவும் நெரிசலான நிலையில் நடப்பதை, மாற்றிடத் தான் புதியத் தலைமை செயலகத்தை கட்டினார் தலைவர் கலைஞர். ஆனால் தலைவருக்கு அந்த அடையாளம் கிடைத்துவிடக் கூடாது என்று தான், அதனை மருத்துவமனையாக்கி தன் வக்கிரத்தை வெளிப்படுத்தினார் ஜெயலலிதா.

இப்படி தலைவர் திட்டங்களை முடக்கிப் போட்ட ஜெயலலிதா, மெட்ரோ ரயில் திட்டத்தை தாமதப்படுத்த தன்னால் ஆன காரியங்களை செய்து பார்த்தார். ஆனால் திட்டம் ஒரு வழியாக உருபெற்று விட்டது. வேறு வழியில்லாமல் துவக்கி வைக்க இருக்கிறார் ஜெயலலிதா.

முதலமைச்சர் என்ற முறையில் இந்தத் திட்டத்தை துவக்கி வைக்கிற வாய்ப்பும், உரிமையும்  வேண்டுமானால் ஜெயலலிதாவுக்கு இருக்கலாம். ஆனால் அதற்கான தகுதியும், திறனும் தலைவர் கலைஞருக்கும், தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் மட்டுமே உண்டு.

துவக்கி வைப்பது வேண்டுமானால் ஜெயலலிதாவாக இருக்கட்டும். கொண்டாடுவது கழகமாகத் தான் இருக்க வேண்டும். அதற்கான உரிமையும், தகுதியும் கழக உடன்பிறப்புகளுக்கே உண்டு. பொதுமக்களுடன் இணைந்து கொண்டாடுவோம்.

இரு வண்ணக் கொடியேந்தி பயணிப்போம், இரு வண்ணக் கொடியேந்தி இனிப்பு வழங்குவோம். இது நம் உரிமை ! இது நம் கடமை !

அன்புடன்
நாளைய கொண்டாட்டத்தை ஆவலோடு எதிர்நோக்கும் உடன்பிறப்பு.
சிவசங்கர்.

சனி, 27 ஜூன், 2015

மீண்டும் காலேஜுக்கு - 3

அடுத்து பேசியவர், எழுத்தாளர் சு.வெங்கடேசன். இவரது "காவல் கோட்டம்" நாவல் சாகித்ய அகாதமியின் சிறந்த புதினமாக 2011 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டது. மதுரையை களமாகக் கொண்டு, நாயக்கர் காலத்தை அடிப்படையாகக் கொண்ட நூல்.

இந்த வரலாற்று புதினத்தை எழுத அவருக்கு பத்து ஆண்டுகள் ஆகியிருக்கிறது. அந்த அளவிற்கு ஆய்வு மேற்கொண்டு வரலாற்று தரவுகளோடு எழுதியிருக்கிறார். அவர் பேச வந்தார்.

"மருத்துவர் சிவராமன் விட்ட இடத்திலிருந்து துவங்க விரும்புகிறேன். மதுவிலிருந்து துவங்குகிறேன். சங்க காலத்தில் தமிழகத்தில் 60  மது வகைகளை   குடித்தனர் .  அந்த குடியை ஒட்டி தான் மக்களும் இருந்தனர்.

குடியில் இருந்து தான் குடிமகன் என்ற வார்த்தை  பிறந்தது. அப்படி தான் குடிகளும். 60 குடிகள் (கூட்டம்) இருந்தனர். ஒவ்வொரு குடிக்கும் தனித்தனி கொடி, ஆயுதம், மது வகைகள் இருந்திருக்கின்றன. ஆனால் அப்போது இருந்த மது அல்ல, இப்போது இருப்பது.

இப்போது இருப்பது வெளி நாட்டு மது. இதிலும் அரசியல் இருக்கிறது. நம் மீது திணிக்கப்படுகிற.                         உணவிலும் அரசியல் இருக்கிறது. அதை நாம் உணர வேண்டும். நம்முடைய தமிழ் பாரம்பரியம் எல்லோருக்கும் முந்தையது. அதை காக்க வேண்டும்"

இப்படி தமிழ் பாரம்பரிய பெருமையை மிக அழகாக, சுருக்கமாக எடுத்துரைத்தார் எழுத்தாளர் சு.வெங்கடேசன். வந்திருந்தவர்கள்  பொறியியல் கல்வி படித்தவர்கள் என்பதால்,  பெரும்பாலானோருக்கு இது புதிய செய்தி.

இரண்டு அருமையான உரைகளுக்குப் பிறகு கலை நிகழ்ச்சிகள். அதற்கு இடையில் ஒரு சிறு புத்தகம் வெளியிடப்பட்டது. மருத்துவர் சிவராமன் வெளியிட, எழுத்தாளர் வெங்கடேசன் பெற்றுக் கொண்டார்.

அண்ணாமலைப் பல்கலைக்கழக, பொறியியல் புலத்தின் புகைப்படத்தைத் தாங்கிய அட்டைப்படம். பழைய கல்லூரி கையேட்டை நினைவுப்படுத்தி பயமுறுத்தியது. ஆமாம், தேர்வுக்கான சிலபஸ் புத்தகத்தை பார்த்தால் பயம் வராதா?

"நினைவலைகள்" என்றத் தலைப்பில் புத்தகம். 10 பேர் தங்கள் பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்ட  கட்டுரைகள் இடம் பெற்றிருந்தது. எங்கள் கல்லூரி காலத்தில் "ஆவிச்சி" விகடன் மாணவப் பத்திரிக்கையாளர். அந்த கைவண்ணம் இந்தப் புத்தகத்தில் வெளிப்பட்டது.

அட்டை இல்லாமல் 60 பக்கங்கள். கலந்து கொண்டவர்களின் முகவரித் தொகுப்பு 6 பக்கங்கள். பல்கலைக்கழகத்தை நினைவுபடுத்தும் புகைப்படங்கள் 8 பக்கங்கள். 37 பக்கங்கள் நினைவலை கட்டுரைகள்.

இதில் சிவக்குமார், அப்ஜகன்யா, மீனாட்சிசுந்தரம், ஶ்ரீவித்யா, டில்லிபாபு ஆகியோர் தலா ஒரு பக்கத்தில் முடித்துக் கொண்டனர். மெய்யப்பன் 2 பக்கம், கவிஞர் சிங்கை மூர்த்தி, அசோக்குமார் தலா மூன்று பக்கங்கள்.

புத்தக வெளியீட்டாளர் ஆவிச்சியே அடக்கமாக 8 பக்கங்கள் தான். ஆனால் 18 பக்கங்களுக்கு நீட்டி, நீட்டி முழக்கி புத்தகத்தை ஆக்கிரமித்தவர் உங்கள் அன்பு நண்பர் சிவசங்கர் தான்.

(எல்லாம் இங்க முகநூலில் வெளியான ஸ்டேடஸ்கள் தான்)

(தொடரும்)

வெள்ளி, 26 ஜூன், 2015

வாயை திறக்காதே, கேள்வி கேட்காதே !

முதலில் ட்விட்டர் முடக்கப்படும். அடுத்து முகநூல். மிச்சமிருக்கும் சமூக வலைத்தளங்கள் ஒவ்வொன்றாய் மூடப்படும். இவற்றை எல்லாம் தனித்தனியாய் ஏன் கை வைத்துக் கொண்டு என, இணையத்தின் மென்னி மொத்தமாய் முறிக்கப்படும்.

பரபரப்பு விவாதம் நடத்தும் தனியார் தொலைக்காட்சிகள் எல்லாம் " ரகுபதி ராகவா ராஜாராம்" தான் இசைக்க முடியும். டீக்கடையில் கூட விவாதம் நடத்த முடியாத நிலையில் தொலைக்காட்சியில் எங்கே ?

நாளிதழ்கள் அச்சிடுவதற்கு முன் அரசின் தணிக்கைத் துறைக்கு அனுப்பி ஒப்புதல் பெற்ற பிறகே, அச்சகங்கள் ஓட்டலாம். சின்ன துணுக்கு செய்தியாக இருந்தாலும், அரசின் மீதான லேசான விமர்சனமாகத் தெரிந்தால் கூட தடை செய்யப்படும்.

என்ன சினிமா கதை போல இருக்கிறதே என நினைப்பீர்கள். இதெல்லாம் நடப்பதற்கான ஒரு வழி இருக்கிறது. அது "எமர்ஜென்சி".

புரியும் படி சொன்னால், "நெருக்கடி நிலை".  அது தான் "மிசா".

இணையமும், தனியார் தொலைக்காட்சிகளும் இல்லாத காலம் அது. அப்போது தான் அன்றைய பிரதமர் இந்திராகாந்தி இந்த எமர்ஜென்சியை அமல்படுத்தினார். அப்போது பத்திரிக்கைகள் மீது, மேலே குறிப்பிட்ட தணிக்கை முறை பாய்ந்தது.

அந்த நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டு நாற்பது ஆண்டுகள் ஆகின்றன. அது ஜனநாயகத்தின் மீது ஏவப்பட்ட கொடூரமான தாக்குதலாக அமைந்தது. எதிர்கட்சித் தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். என்ன வழக்கு என்று யாரும் கேள்வி கேட்க இயலாத நிலை.

அந்த வடு இன்னும் மறையவில்லை.  இந்த நேரத்தில் மீண்டும் அந்த எமர்ஜென்சி வருவதற்கான சாத்தியக் கூறு இருப்பதாக ஒரு தலைவர் பேசி இருக்கிறார். அதுவும் மூத்தத் தலைவர். அதுவும் தேசியக் கட்சியின் தலைவர். அதுவும் ஆளுகின்ற கட்சியின் தலைவர். அந்தத் தலைவர் தான் அத்வானி .

அத்வானியின் வார்த்தைகள் மீண்டும் அந்த ரணத்தைக் கிளறி விட்டிருக்கிறது. அப்படி அந்த எமர்ஜென்சி மீண்டும் வந்தால் ?. துவக்கத்திலே சொன்னது போல் கருத்து சுதந்திரத்தின் குரல் வளை நெறிக்கப்படும்.

இணையத்தில் எழுதுவோர் தான் முதலில் பாதிக்கப்படுவார்கள். அதிலும் கலைஞரை விமர்சிக்கும் அதிஜனநாயகவாதிகள் தான் பாதிக்கப்படுவார்கள்.

அப்படி எமர்ஜென்சி வந்தால், யார் முதலில் எதிர்த்து குரல் கொடுப்பார்கள்? அன்றைக்கு எதிர்த்து குரல் கொடுத்த அதே தலைவர் தான், இன்றைக்கும் குரல் கொடுப்பார். அன்றைக்கு எதிர்த்து நின்ற அதே இயக்கம் தான், இன்றைக்கும் எதிர்த்து நிற்கும். அந்தத் தலைவர், கலைஞர். அந்த இயக்கம், திமுக.

எமர்ஜென்சியால் துரத்தப்பட்ட இந்தியத் தலைவர்களுக்கு தஞ்சம் அளித்த மாநிலம், திமுக ஆண்ட தமிழகம். எமர்ஜென்சியால் இந்தியாவிலேயே அதிகம் பாதிக்கப்பட்ட இயக்கம் திமுக. எமர்ஜென்சியை எதிர்த்ததால், திமுக ஆட்சி கலைக்கப்பட்டது. திமுக தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.

திமுக தலைவர்கள் மீது சிறைச்சாலையில் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. ஆற்காடு வீராசாமி அவர்களின் ஒரு காது கேட்கும் திறனை இழந்தது. முரசொலி மாறனின் இதயம் பாதிக்கப்பட்டது.

தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டது. குறுக்கே விழுந்து அடியைத் தாங்கிய சிட்டிபாபு மாண்டே போனார். தளபதி அவர்களின் உடலில் இன்னும் அடையாளங்கள் மிச்சம் இருக்கின்றன. ஆனாலும் கடைசி வரை திமுக எதிர்த்தே நின்றது. நாளை வந்தாலும் எதிர்த்தே நிற்கும்.

எமர்ஜென்சிக்கு பிறகு, இந்திராவுக்கு மக்கள் பொதுத் தேர்தலில் பாடம் புகட்டினர். எந்த இந்திரா?, இந்திரா தான் இந்தியா, இந்தியா தான் இந்திரா எனப் புகழப்பட்ட இந்திரா.

தமிழகத்தில் ஜெயலலிதாவின் பதவியேற்பும், அரசு நடைபெறும் முறையும் ஒரு வகையில் மினி எமர்ஜென்சி தான். மத்தியில் நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை கொண்டு வர கையாளப்படும் முறையும் எமர்ஜென்சியை தான் நினைவுப் படுத்துகிறது.

# இந்திராவுக்கே அந்த நிலை என்றால், இவர்கள் எல்லாம் எம்மாத்திரம் ?

புதன், 24 ஜூன், 2015

மீண்டும் காலேஜுக்கு - 2

நிகழ்ச்சி துவங்கியது. முதல் நிகழ்ச்சி , வந்திருப்போரின் நலனில் அக்கறையோடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆம், மருத்துவர் கு.சிவராமன் அவர்களின் உரை.  இயற்கை உணவுக்காக தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறவரின் உரை.

46 வயதை கடந்த, கடக்கிற பழைய மாணவர்கள்  இருக்கிறக் கூட்டம். இது தான் உடல் நிலையில் மாற்றம் ஏற்படுகிற முக்கியமான  காலகட்டம். எனவே, இது தான் முக்கிய செய்தியாக இருக்க வேண்டுமென ராம்ஸ் முதல் நிகழ்ச்சியாக உடல் நலம் குறித்த அமைத்தார்.

"ஆறாம் திணை", "ஏழாம் சுவை", "நலம்" ஆகிய உடல் நலம் சார்ந்த நூல்களின் ஆசிரியர் ஆற்றிய உரையின் தலைப்பு "நலம்". மிகவும் எளிமையாக, விளக்கமாக, மனதில் தைக்கும் வகையில் அமைந்தது உரை.

"நூடுல்ஸ் தீமைகளை பலகாலமாக எடுத்துக் கூறி வந்தோம். இப்போது தான் விழிப்பு வந்திருக்கிறது. இதே போல தான் மிச்சம் இருக்கிற ஃபாஸ்ட்புட்களை எதிர்த்து குரல் கொடுத்து வருகிறோம். இதற்கும் முடிவு வர வேண்டும்".

"வெளி நாட்டு உணவு வகைகளை நாம் ஏன் உண்ண வேண்டும். நமது சிறு தானியங்கள் தான் சிறந்த உணவு. வரகு, சாமை, தினை, கேழ்வரகு போன்ற தானியங்கள் தான் உடலுக்கு வலு சேர்ப்பது. தீட்டாத அரிசியை உண்ணுங்கள்".

"வெள்ளைகளை தவிர்த்திடுங்கள். உப்பு, சர்க்கரை, பால், முட்டை போன்ற வெள்ளை உணவுகளை உண்ணாதீர்கள். பிராய்லர் கோழியும் இப்போது இந்தப் பட்டியலில் சேர்ந்துக் கொண்டு இருக்கிறது.

ஒரு முறை பிராய்லர் கோழி  சாப்பிடுவது, பதினைந்து நாட்களுக்கு ஆண்டிபயாட்டிக் மருந்துகளை உட்கொள்வதற்கு சமம். நாட்டுக் கோழியையும் இதே முறையில் வளர்க்க ஆரம்பித்திருக்கிறார்கள். எச்சரிக்கையாக இருங்கள்.

அதே போல பேக்கிங் செய்யப்பட்ட உணவு வகைகளை ஒதுக்குங்கள். பேக்கிங் செய்யும் உணவுப் பொருட்கள் கெடாமல் இருக்க, அதனுடன் சேர்க்கப்படும் கெமிக்கல்கள் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. மதுவை ஒதுக்குங்கள், தலைமுறையே வீணாகிக் கொண்டிருக்கிறது".

ஒரு பேராசிரியரின் கேட்கும் மாணவர்கள் போல எல்லோரும் கேட்டுக் கொண்டிருந்தனர். குறிப்பாக பெண்கள் பக்கம் பலத்த ஆதரவு. இந்த ஆதரவின் காரணமாக மறு நாள் காலையும் அவரது பேச்சுக்கு நேரம் ஏற்பாடு செய்யப்பட்டது.

ஆண்கள் பக்கமும் ஆதரவு, காரணம் தங்கள் பேச்சைக் கேட்காத பிள்ளைகள் இவரது பேச்சைக் கேட்டாவது, ஜங்க் உணவை ஒதுக்கட்டும் என.

அடுத்து பேசியவர்...

(தொடரும்)

மீண்டும் காலேஜுக்கு -1

ஹோட்டல் லீலா பேலஸ். எம். ஆர்.சி நகர், சென்னை. 20.06.2015. சனிக்கிழமை. காலை 09.00 மணி.

"ஏமப்பா, ஏவி.சுந்தர்ராஜ்க்கு தோள்ல பைய மாட்டி விட்டா,  காலேஜுக்கு அனுப்பிடலாம் போல, அப்படியே இருக்கான்". "இது யாருப்பா புரொபசர் மாதிரி?". "நம்ம சிவில் ராஜாமணி தான். முழுசும் வெளுத்து போச்சி". 

"நந்தா எங்க இருக்க?" "பெங்களூரு தான்பா". "சிங்கப்பூர் குரூப் எல்லாம் வந்தாச்சா?" "சொன்னவன் எல்லாம் வந்துட்டான். சுரேஷ் மட்டும் நாளைக்கு காலைல வர்றான்". "இந்த மீனாட்சிசுந்தரம் மதுரைல இருந்து கிளம்பினதுல இருந்து வாட்ஸ் அப் குருப்ல மெசேஜ் போட்டுகிட்டே இருக்கான். வந்து சேரலடா".

"இவங்க தாம்பா என் ஒயிப், பையன், பொண்ணு. ரெண்டு பேரும் மெடிக்கல் படிக்கிறாங்க" இது ராமசாமி, எக்ஸிகியூட்டிவ் எஞ்சினியர். "அது யார்றா கைக்குழந்தையோட?" "நம்ம சிவில் வெற்றி தான்டா".

ஒவ்வொரு குடும்பமாக வரவர ஒரு குழு நின்று வரவேற்றது. ஹோட்டல்  ரிசப்சன் நிரம்பி வழிந்தது. அங்கேயே நின்று அறிமுகப்படலம், நலம் விசாரிப்பு என்று போனது. ஒரு கட்டத்தில் நிர்வாகத்தினர் வந்து, லாபியில் சென்று உட்காருங்கள் என்று கேட்க வேண்டிய நிலை வந்தது.

25 ஆண்டுகள் கழித்து தான் பலரை சந்திக்கின்ற வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதனால் வந்திருக்கின்ற ஒவ்வொருவரும் அடுத்து யார் வருகிறார்கள் என்று ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

வருபவர்களை ரிசப்ஷனுக்கு அனுப்ப, அங்கு அறைகள் ஒதுக்கப்பட்டது. பஃபே முறையில் காலை உணவு. அடுத்தத் தளத்தில் நிகழ்ச்சி நடக்கும் கூடம். நிகழ்ச்சியை நடத்த ஈவன்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனம் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.

அவர்கள் ஒரு பதிவு மையம் வைத்து ஒரு படிவம் அளித்து, விருந்தினர்களின் விபரங்களை பெற்றுக் கொண்டனர். ஒரு கிட் அளிக்கப்பட்டது. அதில் ஒரு டி-ஷர்ட், குக்கீஸ் பெட்டி, குடும்ப உறுப்பினர்களுக்கும் அடையாள அட்டை ஆகியன இருந்தன.

அப்போதே கல்லூரி நிகழ்வுக்கு வந்த உணர்வு எழ ஆரம்பித்தது. ரீயுனியன் குறித்த டிஜிட்டல் போர்டுகள் அழகாக வைக்கப்பட்டிருந்தது. அதன் முன் நின்று குடும்பம் குடும்பமாக புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள், செல்பியும்.

காலைப் பொழுது நண்பர்கள் வருகையிலேயே கழிந்தது. ஆங்காங்கே நண்பர்கள் குடும்பங்களுக்குள்  அறிமுகம் நடந்தது. ஒரு மணிக்கு மதிய உணவு ஆரம்பித்தது. இரண்டு மணி வரை தொடர்ந்தது.

அதற்கு பிறகு நிகழ்ச்சிகள் துவங்கின...
(தொடரும்...)

சனி, 20 ஜூன், 2015

பறவைகள் மீண்டும் கூட்டிற்கு...

"எலெக்ட்ரிகல்ல யார் யார் வந்திருக்காங்க?".  "ஜெர்மனியிலே இருந்து ஹரி வந்துட்டான். ராமசுப்பு துபாயில் இருந்து மும்பை வந்துட்டான், நாளை சென்னை. துபாய் மோகன் வந்தாச்சி. சிங்கப்பூர் வெங்கட்ரமணன் பெங்களூரு வந்துட்டான். சுகுமார் ஹைதராபாத்லருந்து சிதம்பரம் போயிட்டான். நாளை வரான்".

"ஹரி எங்கருக்கான், போன் போடும்மா". "ஹரி, விடிகாலை வந்திருக்கான், இப்போ நேச்சுரல்ஸ் போயிருக்கானாம்". "ஏண்டா, வந்த உடனே அங்க போயிட்டான். ஜெர்மனில சலூனே இல்லியா?" ராம்ஸ் ஃபார்முக்கு வந்துட்டான். இனி ரெண்டு நாள் துவம்சம் தான்.

"எங்கப்பா இந்த சிங்கப்பூர் குரூப்பு?". "அவிங்க ஃப்ளைட் நேரா கோடம்பாக்கம் துளசி பார்க் ஹோட்டல்ல லேண்ட் ஆயிடுச்சாம். அங்க தான் இருக்குதுங்க அந்த குரூப்பு ". "இப்பவே இந்த நக்கல் நையாண்டின்னா ரெண்டு நாள் தாங்குமாடா?". "ஏய், ஏண்டா, இதெல்லாம் பார்த்தது தானேடா"

சிவில் அண்ட் ஸ்ட்ரக்சுரல் டிபார்ட்மெண்ட்க்கும் மெக்கானிக்கல் டிபார்ட்மெண்ட்க்கும் இருந்த போட்டியில் சி.எஸ் முந்தியது. ஆமாம் சி.எஸ்சிலிருந்து 30க்கும் மேல வர்றாங்க. சிலர் திடீர்னு வரலன்னு சொல்றாங்க, சிலர் இப்போ வர்றேன்னு சொல்றாங்க. ஆனா கணக்கு பேலன்ஸ்டா போயிகிட்டிருக்கு.

சிங்கப்பூர் கலைவாணன் சென்னை  வந்து சேர்ந்த கதை தான் நாளைய நிகழ்ச்சிக்கு செம டிரெய்லர்.

சிங்கப்பூர். கலை அட்வான்ஸா ரெடியாயிட்டதா நினைச்சி வீட்டில் ஹாயா உட்கார்ந்திருக்கும் போது தான் ஃபோன். "ஏர்போர்ட் போயிட்டியா?" மணி கேட்க, "ஏன்டா, என்ன அவசரம்?". "டிக்கெட் எடுத்து போர்டிங் டைம் பாரு".  டிக்கெட்டை எடுத்து கலை பார்க்க, நேரத்தை மாற்றி நினைச்சிக்கிட்டிருந்தது தெரிஞ்சுது.

டென்ஷனான கலை, தன்னோட டிக்கெட் போட்ட முகிலுக்கு போன் அடிக்க,"மாம்ஸு டைம் பார்க்கறது இல்லியாடா?". "நானே மணி சொல்லி இப்ப தான் கிளம்புறேன். வந்து சேரு". முகில் வீடு ஏர்போர்ட்டுக்கு அருகில் இருப்பதால், அவர் செக் இன் டைமுக்கு சென்று விட்டார்.

கலை நேரத்திற்குள் வந்து சேருவது சிரமம் என்பது தெரிந்தது. கவுண்டரில் போய் முகில், "டிராபிக்ல மாட்டி வந்து கிட்டு இருக்காங்க. கொஞ்சம் டைம் வேணும்" சொல்ல, "வரட்டும் பார்ப்போம்" என்று பதில்.

என்ன செய்வது என்று தெரியாமல் சோகத்துடன் உட்கார, பக்கத்து சேரில் அதை விட சோகமாக ஒரு நபர். கலைக்கு போன் செய்ய, "நல்ல நேரமா டிராபிக் இல்ல மாம்ஸ். வந்துகிட்டிருக்கோம்". இப்போ பக்கத்து நபருக்கு ஃபோன். டென்ஷனாக, "எப்ப வருவீங்க?" எனக் கேட்டு அமைதியாகி இருக்கிறார்.

'ஆஹா, நமக்கு கம்பெனி சிக்கிட்டாண்டா' என முகில் அவரைப் பார்க்க, அந்த நபர் யூனிஃபார்மில் இருந்தார். விமானி யூனிஃபார்ம். அதே விமானத்தின் விமானி. 'அப்பா, இவருக்கு வேண்டியவரே வரனுமா? தப்பிச்சோம்'.

15 நிமிடங்கள் கழித்து, விமானியோட ஆள் வந்து சேர்ந்தார். எதையோ கொடுத்தார். விமானியின் ஐ.டி கார்டு. தலைவர் ரூமிலேயே அதை விட்டுவிட்டு வந்துவிட, அதனால் விமானத்திற்கு  அனுமதிக்கவில்லை. கெஞ்சி , கதறி இன்னும் ஒரு பத்து நிமிடங்கள் கூடுதலாக செக் இன்னிற்கு பர்மிஷன் வாங்கி கலையை, விமானத்தில் ஏற்றி விட்டார் முகில்.

சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில் சாதித்த தமிழன் முகில் வாழ்க. நாளைய சந்திப்பில் இன்னும் எத்தனை கதைகளோ..

# 25 ஆண்டுகளுக்கு முன் பிரிந்து சென்ற பறவைகள் இன்று (20.06.2015) மீண்டும் ஒரு கூட்டில்...                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                      

வெள்ளி, 19 ஜூன், 2015

தினம் தினம் வாழையிலையில் சாப்பாடு

."ஏம்பா, அவன் வடக்குப்பட்டி ராமசாமி பேரன் தான? சேம்பரத்துல படிக்கிறானா? இப்புடி உப்பி இருக்கானே. அப்புடி தான் இருக்கனும்". எங்கள் உடையார்பாளையம் தாலுக்காவில் அப்போதெல்லாம் அப்படி தான்.

வீட்டில் சாப்பிடும் உணவை விட, அந்த உணவு தான் உடலுக்கு ஊட்டமளித்து குண்டாக்கும் என்பது பொது புத்தியாகிப் போனது. அப்படிப் பெருமைப் பெற்ற உணவு அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர் விடுதி உணவு. தினம் ஒரு வகை உணவு கிடைக்கும், என்ற செய்தி உலகப் பிரசித்தம்.

சைவம், அசைவம் என உணவருந்தும் இடம் இரண்டாகப் பிரிக்கப் பட்டிருக்கும். விசாலமான ஹாலில் உணவருந்த சிமெண்ட்  மேசை, உட்கார சிமெண்ட் பென்ச் எனப் போடப்பட்டிருக்கும்.

தினமும் காலை 7.00 மணிக்கு உணவு பரிமாற ஆரம்பிப்பார்கள். அப்படி ஆரம்பிப்பது இரவு 9.30 மணி வரைப் போகும். காலை, மாலை இரு வேளை காஃபி கிடைக்கும். மாலை வேளைகளில் ஏதாவது நொறுக்கு கிடைக்கும்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் அழிக்க முடியாதப் பெருமை ஒன்று உண்டு. மாணவர் விடுதியில் அனைவருக்கும் வாழை இலையில் தான் உணவுப் பரிமாறப்படும். திருமண வீடு போல எல்லா வேளையும் அப்படி தான்.

ஞாயிற்றுக்கிழமை காலையில் பிரட், ஆம்லட்டில் துவங்கி இட்லி, தோசை, பூரி, கிச்சடி என ஒரு சுற்று வரும். பிரட்'டிற்கு கொடுக்கும் சாஸ் சொந்தத் தயாரிப்பு. பெரியப் பாத்திரத்தில் எடுத்து வந்து சாஸை, கரண்டியால் ஊற்றுவது வித்தியாசமாக இருக்கும்.

அசைவ மெஸ்ஸில் ஞாயிற்றுக் கிழமையும், வியாழக் கிழமையும் சற பரபரப்பாகத் தான் இருக்கும். ஞாயிற்றுக் கிழமை மதியம் மட்டன் புலவ்வும், வியாழக் கிழமை இரவு பூரி - மட்டன் விண்டலும் டாப் ஹிட் மாணவர்களிடம்.

சில நாட்கள் தோசை - சிக்கன், முட்டை என கிடைக்கிற நாட்களில் எக்ஸ்ட்ரா நிறைய போகும். சில நாட்கள் டின்னில் அடைக்கப்பட்ட பதப்படுத்தப்பட்ட பைனாப்பிள் சிலைஸ் கிடைக்கும், அவ்வளவு சுவையாக இருக்கும். இன்றும் சிலாகிக்கப்படுகிறது.

ஒவ்வொரு நாள் இரவும் தயிர்சாதம் அவசியம் உண்டு. தோசை, இட்லி, பூரி என எந்த உணவு இருந்தாலும் தயிர்சாதமும் கட்டாயம் இருக்கும். தயிர்சாதத்தை கடைசியாக சாப்பிட்டால் தான் ஒரு நிறைவு இருக்கும். அந்தப் பழக்கம் இந்த சந்திப்பு வரைத் தொடர்கிறது.

மெஸ்ஸை நிர்வகிக்க மாணவர்கள் கொண்ட கமிட்டி அமைக்கப்படும். அந்தக் கமிட்டியும், அதன் தலைவரும் பிரசித்தி பெறுவார்கள். ஹாஸ்டல் டே அன்று வழங்கப்படும் விருந்தான feast மிகப் பிரபலம்.

அது அந்தக் காலம். பல்கலைக்கழகமே மெஸ்ஸை நடத்தியது. பிறகு மெஸ் கான்ட்ராக்ட் விடப்பட்டதில் பழைய சுவை, உபசரிப்பு காணாமல் போனது.

# அண்ணாமலை மெஸ் சமையல், அயிட்டங்களும் பிரம்மாதம் !