பிரபலமான இடுகைகள்

குன்னம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குன்னம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 27 அக்டோபர், 2013

திடீரென மின்சாரம் தாக்கியது, கைகள் துண்டிக்கப்பட்டது....

சிவநேசன், உடையவர்தீயனூர் கிராமத்தை சேர்ந்தவர். சுமார் ஒரு வருடத்திற்கு முன் ஒரு சம்பவம். வீட்டில் ஃபியூஸ் போனது. அதனை சீர் செய்யும் போது திடீரென மின்சாரம் தாக்கியது. தூக்கி அடிக்கப்பட்டார்.

நினைவு வரும் போது திருச்சியில் மருத்துவமனையில் இருந்தார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் பலனளிக்கவில்லை. இரண்டு கைகளும் முட்டிக்கு மேல் துண்டிக்கப்பட்டு விட்டது.

தற்போது 34 வயதாகிறது. திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது. கைகள் இல்லாமல் அடுத்தவர்கள் உதவியோடு ஒவ்வொரு நிமிடத்தையும் நகர்த்திக் கொண்டிருந்தார்.

ஜூன் 25 வெள்ளி அன்று தஞ்சாவூர் பவர் கம்பெனியின் லேன்கோ பவுண்டேஷன் மூலம் குன்னம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடத்தப் பட்ட முகாமில் இவருக்கு கை அளவு எடுக்கப்பட்டது.

18.10.2013 அன்று இவரைப் போன்று அளவு எடுக்கப்பட்டவர்களுக்கு உபகரணங்கள் குன்னம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடந்த விழாவில் வழங்கப்பட்டன.


                        mail3.jpg


விழாவில் தஞ்சாவூர் பவர் கம்பெனியின் Deputy General Manager செல்வம் கலந்து கொண்டு வழங்கினார். இவர் எனது கல்லூரி நண்பர். இவர் கொடுத்த ஒத்துழைப்பின் அடிப்படையிலேயே இந்த வாய்ப்பு கிடைத்தது.

சிவநேசனுக்கு லேன்கோ நிறுவனத்தின் மூலம் செயற்கை கைகள் வழங்கப்பட்டன. இப்போது அவரால் தனது செல்போனை தானாக உபயோகிக்க முடிகிறது. கையெழுத்திடுகிறார். டம்ளரை தூக்கி நீர் அருந்துகிறார். மீண்டும் சகஜ வாழ்க்கை.

இதே போன்று 39 பேருக்கு செயற்கை கை, கால்கள், ஊன்றுகோல்கள் வழங்கப்பட்டன. இதன் மொத்த மதிப்பு மூன்று லட்சம். மதிப்பு முக்கியமில்லை. கிராமத்தை சேர்ந்த இவர்கள் எங்கு சென்று இந்த செயற்கை கை,கால்களை வாங்குவது என்று தெரியாதவர்கள்.

இவர்களுக்கு இருக்கும் இடம் தேடி வந்து உதவி செய்த லேன்கோ நிறுவனத்திற்கும், நண்பர் செல்வம் அவர்களுக்கும் தொகுதி மக்கள் சார்பாக நன்றி. அளவுகள் எடுத்து செயற்கை அவயங்களை பொருத்திய ஜெகன் மற்றும் நண்பர்களுக்கு நன்றி.

13 வயதான வயலூர் பாரதிராஜாவுக்கு செயற்கை கால் பொறுத்தப்பட்டு நடக்க பழக்கிய போது அவரது தந்தையின் கண்களில் ஆன்ந்த கண்ணீர். வரும் போது தூக்கி வரப்பட்ட பிள்ளை போகும் போது தத்தி தத்தி நடந்து சென்றது அழகு.

# வாழ்வின் மகிழ்வான தருணங்கள் !


                         mail1.jpg

ஞாயிறு, 8 செப்டம்பர், 2013

லைப்ரரி கேட்ட 'செம்பருத்தி'



கொளப்பாடி கிராமத்தில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை முடித்து காரில் ஏறினோம்...

"சார்" ஒரு சிறு குரல்.

திரும்பிப் பார்த்தால், கார் கதவு ஓரம் ஒரு சிறு பெண், பள்ளி யூனிஃபார்மோடு. சுற்றிலும் வயதில் மூத்தவர்கள், இளைஞர்கள். 

" என்னம்மா ?" என்றேன். " லைப்ரரியை திறக்கமாட்டேங்கறாங்க சார்". காரை விட்டு இறங்கி விட்டேன்.

" ஏன் திறக்கலை, என்ன காரணம்னு தெரியுமா ?" "அது தெரியலிங்க சார்" சுற்றிலும் நின்ற பெரியவர்களிடம் கேட்டேன் "என்ன காரணம் தெரியுமா ?". அவர்களுக்கு லைப்ரரி என்று ஒன்று இருப்பதே தெரியுமா என்ற அளவுக்கு எக்ஸ்பிரஷன்.

சிறுமியிடமே திரும்பினேன், "சாவி யாருகிட்டமா இருக்கு ?" "அது யாரோ வெளியூர் ஆள் கிட்ட இருக்குதாம் சார்" "எந்தக் கட்டிடத்தில் இருக்கு" "ஊராட்சிமன்ற அலுவலகத்துக்கு பின்னாடி இருக்கு சார்" "சரிம்மா, நான் விசாரிச்சி திறக்க ஏற்பாடு பண்றேம்மா"

காரில் ஏறினேன். "எங்கம்மா படிக்கிற ?" "பக்கத்தில வெண்மணி கிராமத்தில படிக்கிறேன் சார்" "எத்தனாவதும்மா?" "எட்டாவது சார்" "பேர் என்னம்மா ?"

"செம்பருத்தி சார்"

அடுத்த தெருவிற்கு சென்று, கொடியேற்றி வைத்து விட்டு கார் ஏற வருகையில் மீண்டும் செம்பருத்தி, தோழிகளோடு. சாக்லேட் கொடுத்தார். "எதுக்கும்மா ?" "நாளைக்கு எனக்கு பிறந்தநாள் சார்" "மகிழ்ச்சிம்மா, நல்லா படி" வாழ்த்தினேன். "சார் லைப்ரரிய மறந்துடாதீங்க”

இன்று ஊராட்சி மன்றத் தலைவரை தொடர்பு கொண்டு விசாரித்ததில், நூலகத்திற்கு தனிக் கட்டிடம் இல்லை என்பது தெரிய வந்தது, வேறு கட்டிடத்தில் இயங்குகிறது.



நூலகக் கட்டிடம் அமைக்க நிதி ஒதுக்க உள்ளேன்...

# கொளப்பாடியின் அறிவுக் கண் திறக்கும் “செம்பருத்தி” !

சனி, 31 ஆகஸ்ட், 2013

மக்கள் சந்திப்பு - 6, 7 (21.08.2013)

மக்கள் சந்திப்பு - 6, 7 (21.08.2013)

பொன்பரப்பி, சிறுகளத்தூர் ஊராட்சி.

பொன்பரப்பி என்றதும் பலருக்கும் பளிச் என்று தனித்தமிழ்நாடு போராளிகள் நினைவுக்கு வருவார்கள். தோழர் தமிழரசன் காவல்துறை சதியால் வீழ்த்தபட்ட ஊர். 

கடந்த முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த போது, தலைவர் கலைஞர் ஆட்சியில் ஆரம்ப சுகாதார நிலையம் துவங்கப்பட்டது, இது நீண்ட நாள் கோரிக்கை. அரசு மேல்நிலைப்பள்ளியில் 70 லட்சம் செலவில் புதிய கட்டிடம் கட்டப்பட்டது. கால்நடை துறை கிளை மருந்தகம், மருந்தகமாக தரம் உயர்த்தப்பட்டு கட்டிடம் வழங்கப்பட்டது.

பொன்பரப்பி-துளார், பொன்பரப்பி-உஞ்சினி சாலைகள் 15 ஆண்டுகளுக்கு பிறகு புதுப்பிக்கப்பட்டது. சட்டமன்ற உறுப்பினர் நிதியில் பல்வேறு தெரு சாலைகள் சிமெண்ட் சாலை மற்றும் தார்சாலைகளாக தரம் உயர்த்தப்பட்டன. ஆனாலும் இன்னும் பல சாலைகள் மேம்பாடு செய்ய வேண்டிய பெரிய ஊர் ஆகும்.

photo.JPGphoto.JPG

தற்போது மக்கள் சந்திப்பில் அங்கு வைக்கப்பட்ட கோரிக்கைகளை அங்கேயே பரிசீலனை செய்து பரவலாக ஊரின் எல்லா பகுதிக்கும் பிரதிநிதித்துவமாக பணிகளை அறிவித்தேன்.

photo.JPGphoto.JPG

1.குடிகாடு அய்யனார் குளத்தெரு -தார் சாலை
2.வினாயகர் கோவில் தெரு -தார் சாலை
3.ஆதிதிராவிடர் காலனி -சிமெண்ட்சாலை
4.அண்ணா நகர் -சிமெண்ட்சாலை
5.சந்தைக்கு கட்டிட வசதி

சிறுகளத்தூர் ஊராட்சி


photo.JPG


ஊராட்சியின் சமுதாயக்கூடத்தில் சந்திப்பு நிகழ்ந்தது. பெரும்பாலானோர் கோரிக்கைப்படி கடந்த ஆட்சியில் ஏற்படுத்தப்பட்ட நூலகத்திற்கு கட்டிட வசதி, இயங்கிக் கொண்டிருக்கும் அங்கன்வாடி மையத்திற்கு புதிய கட்டிடம், இரண்டு சாலைகள் மேம்பாடு திட்டங்களை அறிவித்தேன்.

photo.JPGphoto.JPG

இங்கும் முந்திரி விவசாயிகளின் பிரச்சினை முக்கியமாக எழுப்பப்பட்டது. முந்திரிக்கு வறட்சி நிவாரணம், மாவட்ட நிர்வாகத்தில் கோரி, ஏற்கப்படாவிட்டால் போராட்டம் அறிவிக்க வேண்டும் என்பதே மக்கள் குரல்.

# தயார் !

மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி - 4,5 (20.08.2013)

மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி-4, 5 (20.08.2013)


பொதுமக்கள் கலந்துக் கொண்டு தங்கள் கருத்துகளை கூறினார்கள். பொதுமக்களின் கருத்துகள் அடிப்படையில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து சில மேம்பாட்டு பணிகளுக்கு உடனடியாக தீர்வு அறிவித்தேன். 

photo.JPG


நாகல்குழி ஊராட்சி: 
அனைவரும் ஒருமித்து கேட்ட முதல் கோரிக்கை, துவக்கப்பள்ளி சாலை அருகே இருப்பதால் குழந்தைகளின் பாதுகாப்புக்காக சுற்றுசுவர். ஒரு தெருவிற்கு குடிநீர் வசதி இல்லாததால் புதிதாக குழாய் அமைத்து தர கோரினர். ஒரு தெருவிற்கு சிமெண்ட் சாலை.

photo.JPGphoto.JPG

வீராக்கன் ஊராட்சி:
இந்த ஊரில் 17 மனுக்கள் அளிக்கப்பட்டன. அவற்றில் 6 மனுக்கள் தனிநபர் பிரச்சினைகள், முதியோர் உதவித் தொகை போன்று. மீதி 11 மனுக்கள் வளர்ச்சிப் பணிகள் குறித்து. 11 மனுக்களில் ஒரு சில பணிகள் கோரப்பட்டு இருந்தாலும் ஒன்பது மனுக்களில் முதல் கோரிக்கையாக ஒரே கோரிக்கை வலியுறுத்தப்பட்டு இருந்தது.

அந்த ஒரே கோரிக்கை, அந்த ஊருக்கு ஒரு சமுதாயக்கூடம் வேண்டும் என்பது. எனவே அதனை ஏற்று அறிவித்தேன்.

பொதுப் பிரச்சினையாக ஒரு அம்சம் அனைவராலும் வலியுறுத்தப்பட்டது, அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என. தமிழக அரசால் வறட்சி நிவாரணம் அனைத்து மாவட்டங்களுக்கும் அறிவிக்கப்பட்டது. அதில் அரியலூர் மாவட்டத்தின் முக்கிய விவசாயமான முந்திரிக்கு நிவாரணம் அறிவிக்கப்படவில்லை.

என்னுடைய பதிவை தொடர்பவர்களுக்கு தெரியும், ஒரு முந்திரி விவசாயி கடன் பிரச்சினையால் தற்கொலை செய்து கொண்ட செய்தியை பதிவு செய்திருந்தேன். அந்த செய்தி தினத்தந்தி பத்திரிக்கையிலும் வந்திருந்தது. அப்போது அதனை திசைதிருப்ப முந்திரிக்கு நிவாரணம் வழங்கப்படும் என மாவட்ட நிர்வாகத்தால் அவசர அவசரமாக கணக்கெடுக்கப்பட்டது. ஆனால் இது வரை வழங்கப்படவில்லை.

இரண்டு வருடமாக மழை குறைவால் நிலத்தடி நீர்மட்டம் இறங்கியுள்ள நிலையில் முந்திரி விவசாயம் முற்றிலும் பொய்த்துப் போயுள்ளது. விவசாயிகள் பெரும் பாதிப்படைந்துள்ளனர். எனவே அரசு நிவாரணம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது பொதுமக்கள் கோரிக்கையாகும்.

அரசு கவனம் செலுத்த வேண்டும்....


Photo: மக்கள் சந்திப்பு - 4, 5, 6, 7

20.08.2013 செவ்வாய் கிழமை 
மாலை 4.00 மணி நாகல்குழி ஊராட்சி
மாலை 5.00 மணி வீராக்கன் ஊராட்சி

21.08.2013 புதன் கிழமை
மாலை 4.00 மணி பொன்பரப்பி ஊராட்சி
மாலை 5.00 மணி சிறுகளத்தூர் ஊராட்சி


சாம்பாரில் பல்லி - மாணவர்கள் பாதிப்பு

குன்னம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 19.08.2013 அன்று சத்துணவு சாப்பிட்ட சாம்பாரில் பல்லி இறந்து கிடந்ததுள்ளது. பார்த்த மாணவர்கள் பயந்து போனதை அடுத்து உடனடியாக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

கிட்டதட்ட 100 மாணவர்கள். பரிசோதித்த மருத்துவர்கள் பாதிப்பு ஏதும் இல்லையென்ற போதும், மூன்று மணி நேரம் மருத்துவ கண்காணிப்பில் வைத்திருந்து பராமரித்தனர். 

பதற்றப் படாமல் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற ஊர் பொதுமக்கள், விரைந்து சிகிச்சை பார்த்த மருத்துவர்கள், துரித நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் ஆகியோருக்கு நன்றி.

நான் தர்மபுரியில் இருந்ததால் அலைபேசியில் தொடர்பு கொண்டு மருத்துவரிடம் பேசி நிலவரம் அறிந்தேன். எங்கள் சார்பாக அரியலூர் நகர்மன்ற தலைவர் முருகேசன் மாணவர்களை சந்தித்து நலம் விசாரித்தார்.

மாணவர்கள் அனைவரும் நலமுடன் வீடு திரும்பினர்.


ஊர் திரும்பியவுடன் பள்ளிக்கு சென்றேன்.

சத்துணவுக்கூடத்தை உடனடியாக வெள்ளையடிக்க சொல்லி மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் பணி நடைபெற்று வருகிறது. இடநெருக்கடியை தீர்க்க கூடுதல் கட்டிட வசதிக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

அந்தக் கட்டிடத்தை ஒட்டி தனியார் நிலம் உள்ளதால் அந்த இடத்தில் சுற்றுசுவர் இருந்தால் பாதுகாப்பாக இருக்கும் என தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியைகள் சொன்னதன் பேரில் அதற்கு நிதி ஒதுக்க ஒப்புதல் அளித்தேன். 


குழந்தைகள் நலனும் கேட்டறிந்தேன். அனைவரும் பாதிப்பின்றி நலமாக உள்ளனர். 

#
அரசு தமிழகம் முழுதும் சத்துணவு சமையலறை கட்டிடங்களுக்கு வெள்ளையடித்து பராமரிக்க உத்தரவிட்டால் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கும்.

வெள்ளி, 9 ஆகஸ்ட், 2013

லப்பைக்குடிகாடு தான், “கேட் வே ஆப் இந்தியா”...

எங்கள் குன்னம் தொகுதியின் ஒரே பேரூர் “லப்பைக்குடிக்காடு”.

முழுதும் இஸ்லாமியர்கள் வசிக்கும் பகுதி. இந்த ஊரை அரபு நாடுகளின் "மினியேச்சர்" என்றே சொல்லாம். காரணம் வீட்டுக்கு ஒருவர் அரபு நாடுகளில் பணியில் இருப்பார்கள், அதே போல வெளிநாட்டு பொருட்கள் எளிதாக, உண்மையானதாக கிடைக்கும் என்பதாலும். 

பணிபுரிய செல்பவர்கள் அந்தந்த நாட்டின் குடிமகன்கள் போலவே ஆகிவிடுவார்கள். ஆனால் வருடம் ஒரு முறை ஊர் வந்து தங்கள் பங்களிப்பை செய்ய தவறமாட்டார்கள், வீட்டுக்கு மட்டுமல்ல, ஊருக்கும்.

சுற்றிலும் இருக்கும் பல ஊர்களிலில் இருந்தும், பலரும் இதே போன்று அரபு நாடுகளிலேயே பணியாற்றுகிறார்கள். அதன் காரணமாக அந்த ஊர்களின் தோற்றமே மாறி வருகிறது. 

எங்கள் பகுதிக்கு லப்பைக்குடிகாடு தான், கிட்டத்தட்ட “கேட் வே ஆப் இந்தியா”. காரணம் சுற்றிலும் இருக்கும் கிராமத்தை சேர்ந்தவர்கள் இந்த ஊரில் இருக்கும் ஏஜெண்ட்கள் மூலமாக வெளிநாடு சென்றிருப்பார்கள், அல்லது சென்றவர்கள் மூலமாக சென்றிருப்பார்கள்.

இந்த ஊர் பெரம்பலூர் மாவட்டத்தின் எல்லையில் கடைகோடியில் இருக்கிறது. வெள்ளாற்றின் கரையில் இருக்கிறது. ஒரு கிலோ மீட்டரில் அக்கரை கடலூர் மாவட்டம். கிழக்கே பத்து கிலோமீட்டரில் அரியலூர் மாவட்டம். மேற்கே பதினைந்து கிலோமீட்டரில் சேலம் மாவட்டம். 

ஒரு தீவு போல சுற்றி பல்வேறு சமூகத்தவர்கள் வசிக்கும் கிராமங்களுக்கிடையே தான் இந்த ஊர் அமைந்திருக்கிறது. இது வரை மதப்பிரச்சினை என்பது இந்தப் பகுதியில் கிடையாது, காரணம் அனைவரிடமும் தாயாய் பிள்ளையாய் பழகுபவர்கள். 

இந்த நல்லிணக்கத்தை சீர்குலைக்க பல்வேறு முயற்சிகள் நடந்த போதும் அத்தனையும் முறியடிக்கப்பட்டு இன்றும் அதே அன்பு தொடர்கிறது. தொடரும்...

ரம்ஜான் பிரியாணி இந்த ஊரில் தயாராகிறது என்றால் சுற்றுப்பட்டு கிராமங்களில் மணக்கும், விருந்தாய் மலரும்....

# சூடான பிரியாணி சூப்பர்



திங்கள், 31 டிசம்பர், 2012

மக்கள் சந்திப்பு - 3 ; பென்னகோணம் ஊராட்சி.

மழைத் தூறலுக்கிடையே ஊருக்குள் நுழைந்தோம். ஆனாலும் மக்கள் கூட்டம், குறிப்பாக பெண்கள் திரண்டிருந்தனர்.



கூட்ட நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் அண்ணன் குன்னம் இராஜேந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் VGM. வெங்கடாசலம் முன்னிலை வகித்தார். பெரம்பலூர் மாவட்ட செயலாளர் துரைசாமி உரையாற்றினார். 





பொதுமக்கள் மனுக்களை அளித்தனர். பெற்றுக் கொண்டு, அதில் முக்கியமான சில கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்துள்ளேன்.

விடைபெறும் போது, நெருங்கிவந்த பெண்கள் தனிப்பட்ட முறையில், ஒரு கோரிக்கை வைத்தனர். பொதுசுகாதார வளாகம் அமைத்து தரக் கோரினர்.

ஆளுங்கட்சியினர் மக்களை நெருங்காத காரணத்தால் தான், மக்கள் அனைத்து கோரிக்கைகளையும், எதிர்கட்சி சட்டமன்ற உறுப்பினரிடம் வைப்பதாக கருதுகிறேன்.

பெண்கள் திரண்டு வந்ததும், சிறு பிள்ளைகள் அளித்த வரவேற்பும், தேர்தல் வந்துவிட்டதோ என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது.


புதன், 5 செப்டம்பர், 2012

நெஞ்சு பிளக்கும் துயரம்...


குன்னம் வட்டத்திற்கு உட்பட்டது பெரியம்மாபாளையம் கிராமம். 02.09.2012 நண்பகல், குட்டையில் குளிக்கச் சென்ற நான்கு குழந்தைகளும், இரண்டு குழந்தைகளின் தந்தை ஒருவரும் நீரில் மூழ்கி பலியாகிவிட்டனர்.

ஊருக்கு ஒதுக்குபுறமாக, விவசாயத்திற்கு வெட்டப்பட்ட பண்ணைக் குட்டையில், சமீபத்தில் பெய்த மழையால் நீர் பிடித்திருந்தது. அதில் ஆழம் தெரியாமல் இறங்கி மாட்டிக் கொண்ட பிள்ளைகளும் காப்பாற்ற சென்றவரும் மரணம்.

பெரம்பலூர் தலைமை மருத்துவமனைக்கு உடல்கள் கொண்டு செல்லப்பட்டு, உடற்கூறு பரிசோதனைக்கு காத்திருந்தன. உடன் பரிசோதனை மேற்கொள்ள நானும் நேரில் சென்று முயற்சி செய்தேன், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் (அதிமுக) தமிழ்செல்வனும் நேரில் வந்து முயற்சி செய்தார். இரவு பரிசோதனை மேற்கொள்ளகூடாது என்பது அரசு விதி என்பதால் மறுநாள் தான் பரிசோதனை.

பிணவறையில், அந்தப் பிள்ளைகளின் உடல்களை பார்த்தேன். தூங்குவது போன்றே இருந்தனர். கனவில் கூட அந்தக் காட்சியை காணக்கூடாது

மறுநாள்அந்த கிராமத்திற்கு இறுதி அஞ்சலி செலுத்த சென்றோம். அனைத்துக் கட்சியினரும், சுற்று வட்டாரத்தினரும் திரண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

மூன்று குடும்பங்களில் மரணம். மன்னாதி (45 வயது) அவரது மகன்கள் சிந்தனைச்செல்வன் (12), சுரேஷ்மேனன்(9) ஆகியோரை இழந்து இவரது மனைவியும், முதல் மகனும் துடிக்கின்றனர். ஒரே குடும்பத்தில் மூன்று மரணம் பெரும் சோகம், பெரும் இழப்பு.

சச்சின் (10) குடும்பத்து சோகம் இன்னொரு வகை. ஒரே மகன். இவரது தந்தை, சச்சின் எட்டு மாதக் குழந்தையாக இருந்தபோது துபாய் சென்றவர் , என்ன ஆனார், எங்கிருக்கிறார் என தெரியாத நிலை. கணவன் நிலை அறியாத, அவரது தாய் ஒரே ஆதரவான சச்சினையும் இழந்து இன்று தனிமரம்.

அருண்குமார் (13). இவரது ஒன்பதாம் வகுப்பு படிக்கிற அண்ணனும் , தங்கையும் சரியாக நடக்க இயலாத மாற்றுத் திறனாளிகள். இந்த குடும்பத்தின் நம்பிக்கையாக விளங்கிய துடிப்பான அருண்குமாரை இழந்து தவிக்கிறது இந்தக் குடும்பம்.

ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு சோகம். ஒட்டு மொத்த ஊரும் பேரிழப்பில் தவிக்கிறது. மயானத்தில் எங்கு நோக்கினும் விசும்பல் குரல். யாரை பார்த்தாலும் கலங்கியக் கண்கள். யாருக்கு யார் ஆறுதல் சொல்வதென தெரியாமல் தடுமாற்றம். பச்சிளம்பிள்ளைகளை எரிக்காதீர்கள், புதையுங்கள் என சிலர் குரல்.

சூரியன் மறையும் நேரம், ஒரே நேரத்தில் , அருகருகே அடுக்கி தீ வைக்கப்பட்டன அந்த ரோஜாக்கள் . மூன்று குடும்பங்களின் எதிர்கால நம்பிக்கைகள் பொசுக்கப்பட்டன. வெள்ளந்தி மக்களாய் வாழும் இந்த கிராமத்து மக்களுக்கு ஆண்டுகணக்காகும் இந்தக் கெட்டகனவிலிருந்து மீள.

காலம் தான் மருந்து, இவர்களை தேற்ற ....