பிரபலமான இடுகைகள்

திங்கள், 28 அக்டோபர், 2013

சட்டமன்ற விமர்சனம் (23,24-10.2013) - நக்கீரனில் எனது கட்டுரை

தமிழக சட்டப்பேரவையின் குளிர்காலக் கூட்டத்தொடர் துவங்குகிறது என்ற உடனே தமிழக அரசியல் அரங்கில் ஆர்வம் மிகுந்தது.

                                

இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்ற தமிழ்மக்களின் குரலை சட்டசபை எதிரொலிக்குமா என்ற எண்ணம் தான் புதிய ஆர்வத்திற்கு காரணம். தி.மு.க தலைவர் கலைஞர் இதனை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என அறிக்கை விடுக்க ஆவல் கூடியது.

சட்டப்பேரவை கூடிய 23- ந் தேதி காலை ச.ம.உ-க்களுக்கு வழங்கப்பட்ட கடிதத்தில் இருக்கை மாற்றம் குறித்த அறிவிப்பு இடம் பெற்றது. தே.மு.தி.க அதிருப்தி அணியை சேர்ந்த மாஃபா.பாண்டியராஜன், சாந்தி ஆகியோருக்கு தனியாக இடம் ஒதுக்குவதற்காக தி.மு.க, கம்யூனிஸ்ட் உறுப்பினர்களின் இடம் மாற்றப்பட்டிருந்தது. அதை பார்த்த முன்னாள் அமைச்சர் தங்கம்.தென்னரசு "குருபெயர்ச்சிக்கும் சனிப்பெயர்ச்சிக்கும் நடுவில் ஒரு இடப்பெயர்ச்சி" என கமெண்ட அடிக்க சிரிப்பலை படர்ந்தது.

மறைந்த முன்னாள் ச.ம.உறுப்பினர்கள் 11 பேருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இடைத்தேர்தல் காண்கிற ஏற்காடு தொகுதியின் மறைந்த ச.ம.உ பெருமாள் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அஞ்சலி செலுத்தியதோடு சபை ஒத்திவைக்கப்பட்டது. பதவியில் இருக்கும் ச.ம.உ மறைந்தால் வேறு அலுவல்கள் மேற்கொள்ளாமல் அவை ஒத்திவைக்கப்படுவது மரபு.

இரண்டாம் நாளாக 24-ந் தேதி. உறுப்பினர்களுக்கு இரவு வழங்கப்பட்ட நிகழ்ச்சி நிரலில் காமன்வெல்த் குறித்த தீர்மானம் இல்லை. காலையில் இதை கண்ட பத்திரிக்கையாளர்கள் மத்தியில் பரபரப்பு. எதிர்கட்சிகள் என்ன நடவடிக்கை மேற்கொள்ள போகிறார்கள் என்ற கேள்வியோடு பத்திரிக்கையாளர்கள் எதிர் கட்சிகளின் அலுவலகங்களில் ஆய்ந்து கொண்டிருந்தனர். சபை உள்ளே வழங்கப்பட்ட நிகழ்ச்சி நிரலில் காமன்வெல்த் குறித்த அரசினர் தனித் தீர்மானம் தனி இணைப்பாக புதிதாக சேர்க்கப்பட்டு வழங்கப்பட்டது.

10 மணிக்கு அவை துவங்கியது முதலில் கேள்வி நேரம். மின்துறை முடிந்து உள்ளாட்சித்துறை. பெண்ணாகரம் (இ.கம்யூ) ச.ம.உ நஞ்சப்பன் "தாகம் தீர்க்கும் ஒக்கனேக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தை துவங்கி வைத்த முதலமைச்சருக்கு நன்றி" என்று விசுவாசத்தை காண்பித்து கேள்வியை துவங்கினார். "இன்னும் பல கிராமங்களுக்கு இந்த தண்ணீர் வந்து சேரவில்லை" என்று சொல்ல, உள்ளாட்சி அமைச்சர் "பொத்தாம் பொதுவாக குற்றம் சுமத்தாமல் குறிப்பிட்டு சொன்னால் நடவடிக்கை எடுக்கப்படும்" என விசுவாசத்தை பொருட்படுத்தாமல் பதிலளித்தார்.

கேள்வி நேரத்தில் புகழ்வது, குற்றம் சுமத்துவது கூடாது என்பது மரபு. ஆனால் அ.தி.மு.க உறுப்பினர்கள் விராலிமலை விஜயபாஸ்கரில் துவங்கி, யார் முதல்வரை அதிகம் புகழ்வது என்ற போட்டி துவங்கியது. சீர்காழி ச.ம.உ சக்தி "பார் வியக்கும் புதுமைப் பெண்ணே, இனி பாரதம் உங்கள் பின்னே" எனக் கவிதை சொல்லி இன்று முதலிடம் பிடித்தார்.

இவர்களை விஞ்சினார் தே.மு.தி.க அதிருப்தி மாஃபா பாண்டியராஜன். "வாக்கினில் உண்மை ஒளி, வாழ்வினில் தெய்வ ஒளி உடைய அம்மாவுக்கு வணக்கம்" என வணங்க, ஜெ திரும்பி வணங்க, பாண்டியராஜன் முகத்தில் சிவகாசி மத்தாப்பூ வெளிச்சம். (காலையில் அ.தி.மு.க கொடி கட்டிய காரில் தான் வந்தார் என்பது கூடுதல் தகவல்)

அடுத்து எல்லோராலும் ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட காமன்வெல்த் குறித்த அரசினர் தனித் தீர்மானத்தை முதல்வர் ஜெயலலிதா முன் மொழிந்து பேசினார்.

தீர்மானத்தை வரவேற்று பேச அனைத்துக் கட்சிகளுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது. செ.கு.தமிழரசன் துவங்கினார். வழக்கம் போல் முதல்வரை புகழ்ந்து வரவேற்றார்.

கொங்கு இளைஞர் பேரவையின் தனியரசு தீர்மானம் குறித்து நீட்டி முழக்கி பேசிக் கொண்டே போக சபா சைகை காட்டி முடிக்க சொன்னார். பார்வர்ட் பிளாக் கதிரவன் முதல்வருக்கு நன்றி சொல்லி தீர்மானத்தை வரவேற்றார். அதிசயமாக சரத்குமார் ஒரே வரியில் தீர்மானத்தை ஆதரித்து பேசி அமர்ந்தார். டாக்டர்.கிருஷ்ணசாமி ஈழத்தின் பாதிப்பை விளக்கி தீர்மானத்தை வரவேற்றார்.

ஜவாஹிருல்லா பேச்சு உணர்ச்சி வேக்தோடு இருந்தது. மனித உரிமை ஆர்வலர்கள் 10 பேர் தூக்கிலிடப்பட்டதற்காக, நைஜிரீயா நாடு காமன்வெல்த் அமைப்பிலிருந்து நீக்கப் பட்டது போல இலங்கை நீக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார். காங்கிரஸ் சார்பில் பேச கோபிநாத் எழுந்தபோது, எல்லோரும் ஆவலோடு பார்த்தார்கள். "சிலோன் மக்களுக்காக பாடுபட்டவர் எங்கள் தலைவர் ராஜீவ்.  இலங்கைக்கு 4000 கோடி ஒதுக்கி மத்திய அரசு தமிழர்களுக்கு அத்தனை உதவிகளையும் செய்கிறது" என்று ஆரம்பித்தவர் தீர்மானத்தை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை குழு சார்பாக வரவேற்கிறேன் என்றார்.

இந்திய கம்யுனிஸ்ட் சார்பாக பேசிய ஆறுமுகம் முதல்வரை புகழ்ந்து தீர்மானத்தை ஆதரித்து பேசினார். மார்க்சிஸ்ட் கம்யூனிட் சார்பாக பேசிய சௌந்தர்ராஜன்"காமன்வெல்த் அமைப்பு என்பது இந்தியா பிரிட்டிஷ்க்கு அடிமைப்பட்டு கிடந்ததை நினைவுப் படுத்துகிறது. இந்த அமைப்பே தேவை இல்லை என்பது எங்கள் நிலைப்பாடு, இந்தியா இலங்கை தமிழர் நலனுக்காக ராஜ்ஜிய அழுத்தம் கொடுக்க வலியுறுத்துகிறோம்" என பேசி அமர்ந்தார். தீர்மானத்தை ஆதரிக்கிறார்களா, இல்லையா என்பதை சாதுரியமாக குறிப்பிடவில்லை.

தி.மு.க சார்பாக பேசிய மு.க. ஸ்டாலின் அவர்கள் பேச்சு மிக நிதானமாக, கச்சிதமாக அமைந்தது. "கலைஞர் கொடுத்த அறிக்கை, தி.மு.க செயற்குழு தீர்மானம், டெசோ தீர்மானம், பிரதமருக்கு கலைஞரின் விரிவான கடிதம் என தி.னு.க எடுத்த நடவடிக்கைகளை குறிப்பிட்டு, ஜெயலலிதா பிரதமருக்கு எழுதிய கடிதத்தையும் குறிப்பிட்டார். காமன்வெல்த் மாநாடு குறித்து கனடா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து நாடுகளின் நிலைப்பாடுகளை எடுத்துக் கூறி, தமிழகத்தில் அனைத்துக் கட்சிகளும் ஒன்றுபட்ட குரலாக ஒலிப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்றார். மாநாட்டை புறக்கணிக்க இந்திய அரசை வலியுறுத்தி, தீர்மானத்தை வரவேற்றார்.

தே.மு.தி.க சார்பில் பேசிய பண்ருட்டி "முதல்பாதி எதிர்பார்த்தது, பின்பாதி எதிர்பாராதது" என்ற பன்ச் டயலாக்கோடு ஆரம்பித்து தீர்மானத்தை வரவேற்க, சபா ஐந்து நிமிடம் ஜெ' வாழ்த்துப்பா பாடினார்.

மீண்டும் முதல்வரின் வேண்டுகோளுக்கு பிறகு தீர்மானம் சபையால் ஒரு மனதாக நிறைவேறப்பட்டது.

சட்ட அமைச்சர் கொண்டு வந்த சட்ட முன்வடிவை நிதி அமைச்சர் முன்மொழிய சபையில் நிறைவேற்றி இன்றைய நிகழ்வுகள் இத்தோடு முடிந்தது அமைதியாக.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக