பிரபலமான இடுகைகள்

சட்டசபை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சட்டசபை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 13 ஜனவரி, 2016

சட்டசபையாக நடந்த காலம் அது

சட்டமன்றத்தில் உரையாற்றி முடித்தேன். அது 2008ம் ஆண்டு. அண்ணன் உபயதுல்லா ஒரு துண்டு சீட்டை நீட்டினார். சட்டசபையில் துண்டு சீட்டு நடமாட்டம் உண்டு. தகவல் பரிமாற்றங்கள் அந்த வகையில் இருக்கும். சட்டமன்ற உறுப்பினர்களுக்குள்ளும் இருக்கும், அமைச்சர்களுக்குள்ளும் இருக்கும்.

அன்றைய முதல்வர் கலைஞர் அமைச்சர்களுக்கு துண்டு சீட்டில் ஆலோசனைகள் வழங்குவார். எதிர்கட்சித் தலைவர்களிடம் கருத்துப் பரிமாறுவார். இப்போதும் அண்ணன் தங்கம்.தென்னரசும் நாங்களும் கருத்துப் பரிமாறிக் கொள்வோம், துண்டு சீட்டில்.

அண்ணன் உபயதுல்லா அப்போது வணிக வரித்துறை அமைச்சர். தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பார். அதிர்ந்து பேச மாட்டார். கண்ணியமான வார்த்தைகளை மிகப் பக்குவமாக பயன்படுத்தி பேசுவார். நான்கு முறை தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதியில் வெற்றிப் பெற்றவர்.

சட்டமன்றத்தில் அவர் உரையாற்றுகிறார் என்றால் தமிழ் ஆர்வம் மிக்க உறுப்பினர்கள், அவரது உரையை கூர்ந்து கேட்பார்கள். காரணம், சங்க இலக்கியம், தேவாரம், திருவாசகம் என்று தமிழ் மழை பொழியும்.

துறை சார்ந்த வணிக வரி விஷயங்கள் குறித்து பதிலளிக்கும் போது, மிக எளிமையாக கேட்போருக்கு புரியும் வகையில் பதிலளிப்பார். எல்லா விபரங்களையும்  துல்லியமாக அளிப்பார்.

சட்டசபையில் காலையில் உள்ளே நுழைந்தார் என்றால், நான்கு மணி நேரமோ, அய்ந்து மணி நேரமோ, அன்றைய கூட்டம் முடிந்தது என்று சபாநாயகர் அறிவிக்கும் வரை நகர மாட்டார். அவர் சபை நேரத்தில் வெளியே சென்று பார்த்தது மிக அரிது. யார் பேசினாலும் கூர்ந்துக் கேட்பார்.

சட்டமன்றத்தில் அவருக்கு பின் வரிசையில் தான் எனக்கு இருக்கை. காலையில் வந்த உடன் ஒரு காகிதத்தை எடுத்து கட்டம் போட்டு வைத்துக் கொள்வார். ஆரம்பத்தில் எதற்கோ வைத்திருக்கிறார் என இருந்தேன்.

பிறகு எதற்கு அந்த காகிதம் என கவனிக்க ஆரம்பித்தேன். ஒவ்வொரு உறுப்பினரும் எத்தனை நிமிடங்கள் பேசினார்கள் என அவர்கள் பெயரை எழுதிக் குறித்துக் கொள்வார். பேச்சுக் குறித்து சிறுசிறு குறிப்புகளும் எழுதிக் கொள்வார்.

அவர்கள் கருத்துக்களையும் குறிப்பெடுப்பார். சிறப்பாக பேசினால், கூப்பிட்டு கைக் கொடுப்பார், பாராட்டுவார். சில சமயங்களில் துண்டு சீட்டில் பாராட்டும் வழங்குவார். அப்படி  2008ஆம் ஆண்டு, தொழில் துறை மானியத்தில், சட்டமன்றத்தில் என் உரைக்கு வழங்கிய பாராட்டுக் கடிதம் தான் இது. இன்று ஒரு பழைய பைலை  தேடும் போது இந்தக் கடிதம் கிடைத்தது.

கழக ஆட்சியில், பெரும்பாலான அமைச்சர்கள் எதிர்கட்சி  சட்டமன்ற உறுப்பினர்களின் பேச்சுகளை கவனித்து, பாராட்டியது உண்டு. இப்போது அதிமுக ஆட்சியினர் பேசவே விடுவதில்லை, அப்புறம் எங்கு பாராட்டுவது.

# அது ஒரு காலம், சட்டசபையாக நடந்த காலம் !

வியாழன், 1 அக்டோபர், 2015

"பாட்சாவும்" பதறிய துணை சபாநாயகரும்

பாட்சா என்று சொன்னால் காலம் கடந்தும் பதறுகிறது  அதிமுக.

மின் துறைக்கான மானியக் கோரிக்கையில் உரையாற்றினேன். அப்போது சூரிய ஒளி மின்சாரம் குறித்து குறிப்பிட்டேன்.

"மாநிலத்தின் மின்சாரத் தேவைக்கான மின்சாரத்தை வாங்கும் போது Renewable Energy Purchase Obligation என்ன சொல்கிறது ?  0.05 சதவீதம் சூரிய மின்சக்தியைத்தான் வாங்க வேண்டுமென்று சொல்லியிருக்கிறார்கள். ஆனால் அதானி நிறுவனத்தோடு ஒப்பந்தம் எவ்வளவு  போடப்படுகிறது ?

அதுவும் எவ்வளவு தொகைக்கு போட்டிருக்கிறார்கள்? 7 ரூபாய் 1 பைசாவிற்கு வாங்குவதாக ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது. இதே மின்சாரம் மத்தியப் பிரதேசத்தில் எவ்வளவு? 5 ரூபாய். தெலுங்கானாவில் எவ்வளவு ? ரூபாய் 6-க்கும் குறைவு. இதை ஒப்பிட்டால் .... 7ரூபாய் 1பைசாவிற்குப் போட்ட ஒப்பந்தம், அதானி நிறுவனத்தோடு--- எந்த அதானி---- நம்முடைய பிரதமர் மோடி அவர்களுடைய மனம் கவர்ந்து அதானி..."

நான் பேசிக் கொண்டிருக்கும் போதே எழுந்து நின்று விட்டார் அமைச்சர் நத்தம். Renewable energy purchase obligation குறித்து நான் பேசியதை அவர் எதிர்பார்க்கவில்லை. அடுத்து மின்சாரம் வாங்கும் விலையை பட்டியலிட்டது, அவருக்கு கோபம் வந்துவிட்டது. பைலில் தேட ஆரம்பித்தவர், பேப்பர் கிடைத்தவுடன் எழுந்தார்.

சூரிய ஒளி மின்சாரத்தின் விலை மற்ற மாநிலங்களில் அதிகம் என ஒரு பட்டியல் வாசித்தார். அதில் விலைக் குறைவான மூன்று மாநிலங்களையும் சேர்த்து வாசித்தார், தன்னை அறியாமல்.

பிறகு அதானி குறித்து ஒரு லெக்சர் கொடுத்தார். அதானின்னா ஏன் எல்லாக் கட்சியும் இப்படி துள்ளிக் குதிக்கறீங்க? அவரும் ஒரு தொழிலதிபர், அவ்வளவு தான். அவரு யாருன்னு எனக்கு தெரியாது என்று மாற்றி, மாற்றி பேசிக் கொண்டிருந்தவர் என் மீது பாய்ந்தார்.

"அதானிய விடுங்க. நீங்க யார் எழுதிக் கொடுத்தத பேசறீங்க? என்ன தெரியும் ? Technical ஆ தெரியாம பேசாதீங்க?" என்றார் நத்தம்.

"சரி, அதானியை அதோடு விட்டுவிடுவோம். ஒரு விஷயம், technical ஆக எனக்குத் தெரியாது என்று அமைச்சர் சொன்னார்"என்ற நான் அடுத்து சொன்ன வார்த்தை அதிமுகவினரை பதறச் செய்தது.

"அப்புறம் பாட்சா பட வசனம் தான் பேசனும் போல", இதைத் தான் நான் சொன்னேன். அடுத்து நான் என்ன சொல்ல வருகிறேன் என கவனிக்கக் கூட அவர்களுக்கு பொறுமை இல்லை. ஒரே எதிர்ப்புக் குரல். பேரவையை நடத்திக் கொண்டிருந்த துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் "இதை அவைக் குறிப்பில் இருந்து நீக்குகிறேன்" எனக் கட்டளையிட்டார், நொடியும் தாமதிக்காமல்.

நான் சொல்ல வந்தது இது தான். "அப்புறம் பாட்சா பட வசனம் தான் பேசனும் போல. என் பேரு மாணிக்கம், எனக்கு இன்னொரு பேரு உண்டு, அப்படின்னு. அமைச்சர், உங்களுக்கு தெரிஞ்ச சிவசங்கர் எம்.எல்.ஏ தான். ஆனா  எனக்கு இன்னொரு பக்கம் உண்டு. நான் B.E படிச்சவன். Technical ஆ தெரியும்". ஆனால் இதைக் கேட்கும் பொறுமை கூட அவர்களுக்கு இல்லை.

பாட்சா-ன்னா இன்னும், இன்றும் உதறுது. ஆனால் பாட்சா தான், பழைய பாட்சா இல்லை என்பது வேறு விஷயம்.

"எனக்கு technical ஆகத் தெரியும் சார். நான் B.E electrical படித்தவன். என்னோடு படித்தவர்கள் E.B-ல் A.E ஆகவும், A.D ஆகவும், D.E ஆகவும் இருக்கிறார்கள். இன்னும் சொல்லப் போனால், மத்திய அரசாங்கத்தினுடைய எரிசக்தித் துறையிலே வேலை பார்க்கிறார்கள். அவர்களிடத்தில் தகவல் திரட்டி தான் பேசுகிறேன்" என்றேன். தொடர்ந்து நான் பேசிய சிலக் கருத்துகளை அவைக் குறிப்பிலிருந்து நீக்கினார்கள்.

பாட்சா படத்தில், கம்பத்தில் கட்டி வைத்து ரத்தம் வழிய, வழிய ரஜினியை அடிப்பார்களே, அது போல தான் ஜனநாயகத்தின் நிலை சட்டமன்றத்தில். ஆனால் ஜனநாயகம் ஒரு கட்டம் வரை தான் கட்டுண்டு இருக்கும். மாணிக்கம் போல, கட்டறுத்து கிளம்பும்.

# ஒரு தடவை நீக்கினா, நூறு தடவ ஷேர் ஆகும் !

சனி, 4 ஏப்ரல், 2015

நானும் வரமாட்டேன், நீங்களும் வரக்கூடாது



சட்டமன்றத்தில், இப்படி ஆரம்பித்தேன்.

“மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, ஆளுநர் உரை மீதான விவாதத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக பேசுவதற்கு எனக்கு வாய்ப்பு அளித்திருக்கின்ற எங்களது கழகத் தலைவரும், திராவிட இயக்கத்தின் பெருந்தலைவருமான, தலைவர் கலைஞர் அவர்களுக்கும், எங்களுடைய கழகத்தின் சட்டமன்றக் கட்சித் தலைவரும், இளைஞர்களின் எழுஞாயிறு, தமிழகத்தின் எதிர்காலம் தளபதி அவர்களுக்கும் எனது வணக்கத்தையும் நன்றியையும் முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஏர் பின்னது உலகம்”, இது உலகம் அறிந்தது. விவசாயிகளுக்கு நாம் எதை செய்கிறோமோ, அதையே கைமாறாக உலகத்திற்கு பெறுகிறோம். எனவே விவசாயிகளின் நலனிலே அக்கறை கொண்டு எந்த அரசாங்கமும் செயல்பட வேண்டும் என்பது எழுதப்படாத விதி.

இன்றைக்கு தமிழகத்தில் உள்ள விவசாயிகள், கடந்த காலங்களில் சரி வர மழைப் பொழியாததால் பெருத்த பாதிப்புக்கு ஆளாகியிருக்கிறார்கள். தொடர்ந்து வறட்சிக்கு ஆளாகி, அவதியிலே இருக்கிறார்கள். எனவே அவர்களுக்கு வறட்சி நிவாரணம் வழங்குவதற்கு இந்த அரசாங்கம் ஆளுநர் உரையிலே ஏதாவது கருத்தை வெளியிடுவார்கள் என்று எதிர்பார்த்தோம்.

எனவே அரசாங்கம் வருங்காலத்திலாவது கருத்திலே கொள்ளவேண்டுமென்று வேண்டுகிறேன். இந்தத் தொடர் வறட்சியின் காரணமாக தமிழகம் முழுவதும் பல இடங்களில் தென்னை மரங்கள் காய்ந்துபோய், பட்டுப்போய் இருக்கின்றன. இதைக் கருத்திலே கொண்டு அதைக் கணக்கெடுத்து தென்னை மர விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்குவதற்கு அரசு முன் வர வேண்டுமென்று வேண்டுகிறேன்.”

அதிமுகவினர் என்னை சற்று சந்தேகமாக பார்க்க ஆரம்பித்தார்கள், இவ்வளவு அமைதியான உரையா என்று. இதே கடந்த முறை அவையில் பேசும் போது, மூன்றாவது வரியிலேயே அமைச்சர்கள் எழுந்து கொந்தளித்து குறுக்கிட்டனர்.

“தென்னை மரங்களை இன்னும் கணக்கெடுக்காத காரணத்தினால், தென்னை மரங்களை வெட்டாமல், விவசாயிகள் காத்திருக்கிறார்கள் என்கிற நிலை இருக்கிறது என்பதை அமைச்சர் அவர்கள் உணரவேண்டும்.

எங்களுடைய அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் முக்கியப் பயிராக இருக்கின்ற முந்திரி, மழை இல்லாத காரணத்தினால் பட்டுப்போகின்ற நிலையில் இருக்கின்றன. தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக அரசு நிவாரணம் வழங்கும் என்று விவசாயிகள் காத்திருக்கிறார்கள். ஆனால் இதுவரை நிவாரணம் வழங்கப்படாத ஓர் அவல நிலை நிலவுகிறது.

இதையும் கருத்தில்கொண்டு எங்கள் பகுதி விவசாயிகளுக்கு முந்திரிக்கும், பருத்திக்கும், சோளத்திற்கும் நிவாரணம் வழங்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

அதேபோல், கரும்பு விவசாயிகளின் முக்கிய கோரிக்கையான, தனியார் ஆலைக்கு கரும்பை வெட்டிக் கொடுத்துவிட்டு இதுவரை பணம் பெறாமல், பாக்கித்தொகை வராமல், அந்த விவசாயிகள் அவதியுறுகிறார்கள். பாக்கித் தொகையை தனியார் ஆலைகள் உடனடியாக வழங்குவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கரும்புக்கு கூடுதல் விலை வேண்டுமென்று தொடர்ந்து விவசாயிகள் போராட்டங்கள் நடத்துகிறார்கள், கோரிக்கை வைத்து வருகிறார்கள். டன்னுக்கு ரூபாய் 4 ஆயிரம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

அதே போல், நெல்லுக்கு, குவிண்டாலுக்கு ரூபாய் 2 ஆயிரம் வழங்க வேண்டுமென்று…”

அவ்வளவு தான், அதற்கு மேல் தொழில் துறை அமைச்சரால் பொறுக்க முடியவில்லை. எழுந்து தனியார் ஆலைகள் பாக்கி, கரும்பு விலை என ஒரு நீண்ட விளக்கம் கொடுத்தார்.

சபாநாயகர், என்னை மீண்டும் பேச அழைத்தார். நான் எழுந்து அவரை பார்த்தேன்.

“மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, எனக்கு எவ்வளவு நேரம் ஒதுக்கப்பட்டிருக்கிறது என்பதைக் கொஞ்சம் கூறினால் நன்றாக இருக்கும்” என்று கேட்டேன். தொடர்ந்து அமைச்சர்கள் குறுக்கிடுவார்கள் என்பதால் கேட்டுக் கொண்டேன்.

அவர் பதில் சொல்லாமல் என்னையே பார்த்தார். மீண்டும் கேட்டேன். “பதினைந்து நிமிடம்” என்று சொன்னார். (வேண்டா வெறுப்பாக).

“மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, அந்தப் பதினைந்து நிமிடத்திற்கு மேல் நானும் போக மாட்டேன். நீங்களும் உள்ளே வந்திடக் கூடாது என்பதைக் கேட்டுக் கொள்கிறேன்” என்றேன். சபையில் லேசாக சிரிப்பொலி எழுந்தது.

“சிவசங்கர், சபாநாயகருக்கு நீங்க உத்தரவு போடக்கூடாது. பேசுங்க” என்றார் கடுமையாக. அவருக்கு புரியவில்லை. இப்போது அனைவரும் கவனிக்க ஆரம்பித்தனர்.

“மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, அந்தக் கோட்டுக்கு பிறகு நானும் வரமாட்டேன், நீங்களும் வரக்கூடாது” என்று நிறுத்தினேன். இந்த முறை அதிமுகவினர் உட்பட அனைவரும் சிரித்துவிட்டனர். ஆனால் அண்ணன் சபாநாயகர் மட்டும் சிரிக்கவேயில்லை.

அவர் சிரிப்பொலி, ஆதித்யா சேனல்லாம் பார்க்க மாட்டார் போல…

     

(இணைப்பு; தினத்தந்தி செய்தி)

வியாழன், 2 ஏப்ரல், 2015

முயலை பார்க்கும் புலியின் பார்வை....

 2015-ம் ஆண்டு ஆளுநர் உரை சட்டமன்றக் கூட்டத் தொடர், எனக்கு மிக முக்கியமானதாக அமைந்து விட்டது. தாதுமணல் பிரச்சினை குறித்த தொடர் கட்டுரை, தொலைக்காட்சி பேட்டிகள் என பரபரப்பாக போய்விட்டதால் அதை அப்போதே பகிர்ந்து கொள்ள இயலாமல் போனது.

ஆளுநர் உரை அன்று அதிமுக அரசின் தோல்விகளை, தவறுகளை, ஊழல்களை கண்டித்து வெளிநடப்பு செய்துவிட்டோம். அடுத்த நாள் ஆளுநர் உரை மீதான விவாதத்தில் நான் பேசுவது என தளபதி அவர்களும், கொறடா அவர்களும் முடிவெடுத்தனர்.

பிறகு அந்த வாய்ப்பு, கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் திராவிடமணி அவர்களுக்கு சென்றது. அவர் தொகுதியில் புலியால் தாக்கப்பட்டு ஒரு பெண் இறந்து போனார். கோபத்தில் மக்கள் கொந்தளித்து போராட்டத்தில் இறங்கினர்.

அந்த நேரத்தில் சில சமூக விரோதிகள் அரசு வாகனங்களை கொளுத்தி விட்டனர். அரசு அப்பாவி பொதுமக்கள் மீது பொய் வழக்கு போட்டது. அது குறித்த குரல் எழுப்ப, முதல் நாள் வாய்ப்பு அவருக்கு போனது.

அன்று தான் அதிமுக துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், கழக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகனை பார்த்து கோமாளி என்று சொல்லி பிரச்சினை. அந்த பிரச்சினையில் நாங்கள் வெளியேற்றப்பட, திராவிடமணி பேச முடியாமல் போனது.

அடுத்த நாள் அலுவலகத்தில் குழுமும் போதே, இன்று யார் பேசுவது என மற்றோர் கேட்க, கொறடா அண்ணன் சக்கரபாணி என்னை கைகாட்டினார். சிலர் “இன்னைக்கும் போச்சா” என்று சிரித்தனர். ஏனென்றால் என்னை கண்டால் அதிமுகவினருக்கு அவ்வளவு பிரியம் என்பது பிரசித்தம்.

நானும் அதே எண்ணத்தில் தான் இருந்தேன். முதல்நாளே அதிமுக-வினர் தேவை இல்லாமல் வம்பிழுத்தே எங்களை வெளியேற்றி இருந்தனர். இன்றும் தொடரலாம் என்ற எண்ணம். அதனால் தயார் செய்த குறிப்புகளை நான் எடுத்து செல்லவில்லை. சூழ்நிலைக்கு தகுந்தாற் போல் பேசிக் கொள்ளலாம் என முடிவெடுத்தேன்.

ஸ்பின் என்றால் அடித்தாடுவது, ஃபாஸ்ட் என்றால் தற்காத்து ஆடுவது என்று முடிவு. ஆனால் அதிமுகவினர் எடுத்தவுடன் வேகப்பந்தில் புகுந்தனர். விவாதத்தில் பேச எழுந்தார் அதிமுக ச.ம.உ கடம்பூர் ராஜூ.

அவர் தேவை இல்லாமல் தலைவர் கலைஞரையும், விஜயகாந்தையும் அநாகரிகமாக விமர்சிக்க, தேமுதிகவினர் கொந்தளிக்க, தேமுதிகவினரை ஒட்டு மொத்தமாக அவை காவலர்களை விட்டு வெளியேற்றினார் சபாநாயகர். சஸ்பெண்ட்டும் செய்தார். தேமுதிக கிளீன் போல்ட்.

சபை கொந்தளிப்பான நிலையில் நான் எழுந்தேன். ஒட்டு மொத்த சபைக்கும் நான் ஒரு நிமிடம் தாண்டுவேன் என்ற நம்பிக்கை இருந்திருக்காது. முதல் பந்திலேயே டக் அவுட் என்பது எல்லோரது எண்ணமும்.

ஆனால் தளபதி அவர்களும், கொறடா அவர்களும் என் மீது நம்பிக்கையோடு இருந்தனர். நானும் முழு நம்பிக்கையாய் இருந்தேன்.

சபாநாயகர் என்னை பார்த்தார். தேமுதிகவினரை வெளியேற்றிய வெற்றிக் களிப்பு. முயலை பார்க்கும் புலியின் பார்வை. நானும் அப்படியே பார்த்தேன்.

      

பேசுவதற்கு வாய்ப்பளித்த தலைவருக்கும், தளபதி அவர்களுக்கும் இரண்டு வரிகளில் நன்றி சொல்லி சப்ஜெக்ட்டுக்கு சென்றேன். அவர்களை போல் நானும் வாழ்த்துப்பா பாடுவேன், குறுக்கிடலாம் என்று காத்திருந்த அதிமுகவினருக்கு முதல் ஏமாற்றம்.
தொடரும்...

வெள்ளி, 19 டிசம்பர், 2014

வாதாடி 'பெற்ற' தீர்ப்பு (சட்டமன்ற விமர்சனம்)

04.12.2014 ஜீரோ நேரம். அவசர முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளை எழுப்பும் நேரம்.

அனைத்து எதிர்கட்சித் தலைவர்களும் எழுந்து நின்றனர். கிட்டத்தட்ட அனைத்து எதிர்கட்சி உறுப்பினர்களும் எழத் துவங்கினர். பதறி எழுந்தார் நத்தம் விஸ்வநாதன். அவை முன்னவராகப் பொறுப்பேற்ற முதல் தினம். அதனால் மிக பக்குவமாக பேசினார்,”ஒவ்வொரு உறுப்பினராக பேசுங்கள்".

துரைமுருகன் பேச எழுந்தார். ”சட்டமன்றம் நடக்கும்” என்று ஆரம்பித்தார். ஆனால் அவர் பேசுவதற்கு, சபாநாயகர் அனுமதிக்க மறுத்தார். சட்டசபை மூன்று நாட்கள் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தான் அனைத்து எதிர்கட்சிகளும் பிரச்சினை எழுப்பியது. அதனால் தான் சபாநாயகர் அனுமதிக்க மறுத்தார்.

திடீரென சபாநாயகர்,”சவுந்தர்ராஜன் அத உள்ள வைங்க” என்று திரும்பி, திரும்பி உத்தரவிட்டார். மார்க்சிஸ்ட் சட்டமன்றக் குழு தலைவர் சவுந்தர்ராஜன் ஒரு அச்சடிக்கப்பட்ட காகிதத்தை தலைக்கு மேல் தூக்கிப் பிடித்துக் கொண்டு நின்றார்.

எல்லா மார்க்சிஸ்ட் உறுப்பினர்கள் கையிலும் அதே போன்ற காகிதம். அதில் இருந்த வாசகம்,”மக்கள் பிரச்சினையை பேச, பேரவைக் கூட்ட நாட்களை அதிகப்படுத்துக”. சபாநாயகர் உஷ்ணமாகிவிட்டார். “அலுவல் ஆய்வுக்குழு முடிவு தான் இறுதி” என்றவர் “ஆறுமுகம் பேசுங்க” என்று இ.கம்யூ தலைவரை பார்த்து சொன்னார்.

ஆறுமுகம், “தஞ்சை மாவட்டத்தில் போராட்டம்” என்றார். அவ்வளவு தான், உடனே சபாநாயகர் “முனுசாமி பேசுங்க” என்று முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமியை அழைத்தார். அந்த நேரத்தில் ஆளுங்கட்சி உறுப்பினரை பேச அழைப்பது மரபு அல்ல, ஆனாலும் அழைத்தார்.

எதிர்கட்சிகளை வம்பிழுக்க சரியான ஆள், முனுசாமி தான் என இந்தத் திட்டம். மார்க்சிஸ்ட் வெளி நடப்பு செய்தனர். முனுசாமி மூச்சுக்கட்டி பேச ஆரம்பித்தார், முதல் வரிசைக்கு வர வேண்டுமல்லவா. பேச விடாததை கண்டித்து, திமுக வெளிநடப்பு செய்தோம். அடுத்து தேமுதிகவும் வெளிநடப்பு செய்தது.

இந்த நேரத்தில், "ஜெயலலிதாவால் 110 விதிகளின் கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?" என்ற சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் எடுத்துக் கொள்ளப்பட்டது. தேமுதிக சார்பில் பார்த்தசாரதி பேசினார்.

அடுத்து பேசிய தளபதி அவர்கள்,”21,893 கோடிக்கு திட்டங்கள் முதல் ஆண்டு அறிவித்திருக்கிறீர்கள். அடுத்து 18,000 கோடி. மொத்தம் 39,893 கோடி. இதில் எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது? என்ன நிலையில் உள்ளது ?” என்று கேட்டார்.

இதற்கு பதிலளித்த ஓ.பி.எஸ்,”என் மக்கள் யாரிடமும் கையேந்தி நிற்காத காலம் வரும் வரை உழைப்பேன் என்ற அம்மா, விழிகாட்டி, வழிகாட்டி வழி நடத்துகிறார்கள்” என்று புகழந்து கொண்டே போனார்.

அப்போது ஜெ.அன்பழகன் எழுந்து,” முதல்வர் யாரை புகழ்கிறார்? ஏன் இந்த அவையில் புகழ்கிறார்?” என இடைமறித்து கேட்க, அவரை அவையை விட்டு வெளியேற்றினார் சபாநாயகர்.

மறுபடியும் ஓ.பி.எஸ், ஜெ புகழ்பாடிக் கொண்டே போனார். நத்தம், ஓ.பி.எஸ்ஸை உட்கார சொல்ல, ஓ.பி.எஸ்ஸும் உட்கார்ந்து தண்ணீர் குடித்தார். அண்ணன் துரைமுருகன் எழுந்து,”எங்கள் தலைவரை சுருக்கமா பேச சொன்னீங்க. ஆனா முதல்வர் இப்படி பேசிக்கிட்டே போறாரே !” என்று கேட்டார்.

அதற்கு சபாநாயகர்,”இது அவைக் குறிப்பில் ஏறாது” என சொல்ல, அண்ணன் துரைமுருகன்,”எழுதுனா எழுதுங்க, எழுதாங்காட்டி போங்க” என கேஷூவலாக சொல்லி விட்டு அமர, அவையில் சிரிப்பலை.

ஓ.பி.எஸ்,” அரசு 110 விதியின் கீழ் சொன்னதை செய்யவில்லை என திமுகவினர் தொடர்ந்து சொல்லி வருகிறார்கள். ஆனால் 110 விதி அறிவிப்புகள் மக்கள் தலைவிதியை மாற்றி அமைத்திருக்கிறது, எதிர்கட்சிகளை வீதிக்கு கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது.” என டி.ராஜேந்தர் போல வார்த்தை விளையாட்டு ஆடினார்.

இப்படியாக 12.05 - 12.51 வரை பேசிக் கொண்டே போனார் ஓ.பி.எஸ். அடுத்து பால் விலை உயர்வு, தர்மபுரி அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள் இறப்பு ஆகியன குறித்து கவன ஈர்ப்புத் தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டன.

அடுத்து முல்லைப் பெரியார் பிரச்சினை குறித்து ஓ.பி.எஸ் அரசினர் தனித் தீர்மானம் கொண்டு வந்தார். இது குறித்து ஓ.பி.எஸ் மிக நீண்ட விளக்க உரையாற்றினார். பல உறுப்பினர்கள் தூங்கியே போனார்கள். செ.கு.தமிழரசன், தனியரசு ஆகியோரது வாழ்த்துரைக்கு பிறகு பா.ம.க கலையரசு வாழ்த்துரை வழங்கி களத்தில் போட்டியாகக் குதித்தார்.

இதற்கு பதிலளித்த ஓ.பி.எஸ்,” இது அம்மா சட்ட நுணுக்கங்களை அடுக்கி வாதாடி பெற்ற தீர்ப்பு” என சொல்ல, “இந்த நுணுக்கம் பெங்களூரு வழக்கில் எங்கப் போச்சி?” என பின் வரிசையில் இருந்து குரல் வர, பதில் இல்லை.

துரைமுருகன் முல்லைப் பெரியார் பிரச்சினை குறித்து பேச, தொடர்ந்து அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். “முல்லைப் பெரியார் பிரச்சினைக்கு காரணம் எம்.ஜி.ஆர் தான், தீர்ப்பின் வெற்றிக்கு முன்னோடி கலைஞர்” என துரைமுருகன் சொன்னதற்கு, அமைச்சர் வைத்தி பொங்கி எழுந்தார்.

அமைச்சர் செல்லூர் ராஜூ எழுந்து, நாடகத்தில் வரும் பபூன் நடிகர் போல முகபாவங்களைக் காட்டி நக்கல் செய்தார். இதனைக் கண்டித்து திமுக சார்பாக கடும் எதிர்ப்பு தெரிவித்தோம். ஒரு கட்டத்தில் பதில் அளிக்க அனுமதி மறுத்த சபாநாயகரை கண்டித்து வெளிநடப்பு செய்தோம்.

# ஜெ’னநாயக பாதுகாவலர் சபாநாயகர் !

செவ்வாய், 16 டிசம்பர், 2014

மக்கள் முதல்வரும், பினாமி அரசும் (சட்டமன்ற விமர்சனம்)

04.12.2014. சட்டப்பேரவையில், கேள்வி நேரம் துவங்கியது.

அதிமுக மானாமதுரை ச.ம.உ குணசேகரன் (அதிமுக) மின்துறையில் கேள்வி கேட்டார். ஒரு புதிய மின்மாற்றி அமைக்கப்படுமா என. அமைச்சர் நத்தம் வாய்ப்பில்லை என்று சொல்லிவிட்டார்.

                       

மீண்டும் குணசேகரன் “மக்கள் முதல்வர் அம்மாவை வணங்கி கேட்கிறேன்”. நத்தம் பதில் “மக்கள் முதல்வர் அம்மா ஆசியோடு நடக்கும் ஆட்சி நடவடிக்கை எடுக்கும்".
அவ்வளவு தான் ஒவ்வொரு கேள்விக்கும் அம்மா, அம்மா தான்.

காங்கிரஸ் பிரின்ஸ் கேள்விக்கு அமைச்சர் வைத்தி பதில்,”மக்களின் முதல்வர் இதயதெய்வம் அம்மாவை வணங்கி, இது குறித்த கருத்துரை ஏதும் அரசிடம் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்”

அமைச்சர் மோகன்,” மாண்புமிகு அம்மா அரசு நடவடிக்கை எடுக்கும்”

அமைச்சர் வளர்மதி,”அம்மா இருக்கும் திசை நோக்கி வணங்கி பதில் அளிக்கிறேன்”

அமைச்சர் பழனியப்பன்,”மக்களின் முதல்வர் அம்மா திசை வணங்கி…”

அப்போது ஒரு கேள்வி கேட்க சரத்குமார் எழ அவர் காதில் “கடுக்கண்” டாலடித்தது. நேராக ஷூட்டிங் போவாரோ. சுரண்டை கல்லூரிக்கு கூடுதல் கட்டிடம் கேட்டவர், மக்கள் முதல்வர் குறித்து புகழவில்லை. எதிர்கட்சி உறுப்பினர்கள் ஆச்சரியமாக பார்த்தனர்.

அமைச்சர் காமராஜ்,”அம்மாவின் பொற்பாதங்கள் வணங்கி பதில் அளிக்கிறேன்”

சித.பழனிசாமி (அதிமுக சமஉ),”அம்மா தான் நிரந்தர முதல்வர், அம்மா தான் நிரந்தர பொது செயலாளர்…” என அடுக்கிக் கொண்டே போனார். பேப்பரே படிக்க மாட்டார் போல, நிரந்தர முதல்வராம்.

ஒரு கேள்விக்கு பதில் சொல்ல எழுந்த அமைச்சர் வேலுமணி தேவையில்லாமல் கடந்த திமுக ஆட்சி குறித்து குறிப்பிடும் போது, “மைனாரிட்டி திமுக ஆட்சி” என சொல்ல, நாங்கள் “பினாமி ஆட்சி” என்று குரல் கொடுக்க, அத்தோடு ஒழுங்காக பதில் சொல்லி அமர்ந்தார்.

“வருவாய் துறை சார்பாக ஒரு ஊருக்கு வருவாய் ஆய்வாளர் அலுவலகம் கட்டப்படுமா ?” என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் உதயக்குமார் “ அலுவலகம் கட்ட மக்கள் முதல்வர் ‘அம்மா’ கவனத்திற்கு கொண்டு சென்று ஆவன செய்யப்படும்".

இப்படி எது கேட்டாலும், மக்கள் முதல்வர் அம்மா கவனத்திற்கு கொண்டு செல்லப்படும், மக்கள் முதல்வர் அம்மா செய்வார்கள், மக்கள் முதல்வர் அம்மா அரசு, மக்கள் முதல்வர் அம்மாவை வணங்கி என்றால், இந்த முதல்வர் ஓ.பி.எஸ் எதற்கு ?

அதே போல சட்டசபையில் அதிகாரிகள் வரிசையில் தலைமை செயலாளர் ஞானதேசிகன் அமர்ந்திருந்தார். அவருக்கு அடுத்து “மக்கள் தலைமை செயலாளர்” ஷீலா பாலகிருஷ்ணன் அமர்ந்திருந்தார். அடுத்து “மக்கள் டி.ஜி.பி” ராமானுஜமும் அமர்ந்திருந்தார்.

இப்படி ஒரு அரசு. அலுவல்படி ஒரு முதல்வர், தலைமை செயலர். டி.ஜி.பி இருக்க, கூடுதலாக ஒரு “மக்கள் முதல்வர், அரசு ஆலோசகர்கள் என்ற பெயரில் மக்கள் தலைமை செயலாளர், மக்கள் டி.ஜி.பி” இருந்தால் அந்த அரசை எப்படி அழைக்க முடியும் ? இப்படி தான்…

திங்கள், 15 டிசம்பர், 2014

பயத்தோடு சட்டசபையில் நுழைந்தேன்...

04-12-2014. சட்டமன்ற குளிர்கால கூட்டத் தொடரின் முதல் நாள்.

சற்றே பயத்துடனும், ஆவலுடனும் தான் அவைக்குள் நுழைந்தேன். “அவர்அமர்ந்திருந்த இருக்கையை “பயத்துடன் பார்த்தேன். அவையில் நுழைந்தால் நேரே அந்த இருக்கை தான் கண்ணில் படும். ஹப்பா, இருக்கையின் மீது ஏதுமில்லை.

     

பரதன் போல் ஓ.பி.எஸ் ஆட்சி புரிவார் என்று சொன்னதால் வந்த பயம். தப்பா நினைக்காதீங்க. வழக்கமா மேசை மீது வைக்கிற “மக்கள் முதல்வர் படத்த இருக்கை மீது வைத்து விட்டு தன் இருக்கையில் அமர்வாரோ என்ற சந்தேகம் தான்.

ஆவலுடன் என் இருக்கைக்கு முன் இருக்கையை சென்று பார்த்தேன். அது தான் தலைவர் கலைஞருக்கு ஒதுக்கப்பட்ட இடம். தலைவர் அவைக்கு வருவதாக தெரிவித்த போது, சவால் விட்டாரே ஓ.பி.எஸ். அதற்கேற்ப தலைவரது சக்கர நாற்காலி வர, வசதி செய்யப்பட்டிருக்கிறதா என்று பார்த்தேன். செய்யப்பட வில்லை.

நான் இப்படி பார்த்துக் கொண்டிருக்கும் போது, ஒருவர் குறுக்கே புகுந்து சட்டப்பேரவை செயலாளர் இருக்கையை சுற்றிக் கொண்டு போனார். அட, முதல்வர் ஓ.பி.எஸ். அம்மா அமர்ந்த இருக்கைக்கு கூட இடையூறு இல்லாமல் சுற்றி, உள்ளே வந்தார்.

வந்தவர் முதல்வர் இருக்கையில் அமரவில்லை. அது இரண்டு பேர் அமரக்கூடிய சோபா. அதில் ‘அவர் உட்கார்ந்த இடத்தை விட்டுவிட்டு கூட இன்னொரு பாதியில் அமரலாம். ஆனால் இவரோ தனது வழக்கமான இருக்கையில் அமைச்சராகவே அமர்ந்தார். என்னே ஒரு பக்தி !

வழக்கமாக ஜெ முதல்வராக இருக்கும் போது வந்தால், இரண்டு நிமிடத்திற்கு முன்பு அவரது கண்ணாடிக் கூடு, கைக்குட்டை போன்றவை வந்துவிடும். அதை பார்த்த உடனேயே அதிமுகவினர் அலர்ட்டாகி எழுந்து நின்று விடுவார்கள், கூப்பியக் கரங்களோடு.

ஆனால் ஓ.பி.எஸ் யாருக்கும் தொந்தரவு இல்லாமல், சரக்கென்று வந்து அமர்ந்து விட்டார். சபாநாயகர் தனது வழக்கமான பாதை வழியாக வந்தார். அவர் நுழையும் இடத்தில் தான் முதலமைச்சர் நாற்காலி. அந்த காலங்களில் அங்கே அமர்ந்திருக்கும் ஜெவை வணங்கி தான் உள்ளே நுழைவார்.

பழக்கதோஷத்திலோ, அல்லது மரியாதை நிமித்தமாகவோ பழைய முறையிலேயே அந்த காலி இருக்கையை நோக்கி குனிந்து, வணங்கி நுழைந்தார். அப்போது தான் எனக்கு அடுத்த பயம் வந்தது. பதவியேற்பின் போது நிகழ்ந்த “அழுகாச்சி காவியம் ஒன்ஸ்மோர் ஆகிவிடுமோ என.

நல்லகாலம் குரல் தளும்பாமல், கண் கலங்காமல் திருக்குறளை வாசித்தார். மற்றவர்களை பார்த்தேன். யாரிடத்திலும் சோகமில்லை, துக்கமில்லை. பளிச்சென்று மொட மொட வெள்ளை வேட்டி சட்டையில் ஜம்மென்று அமர்ந்திருந்தனர்.

இரண்டாவது வரிசையில் மந்திரி உதயக்குமார் மட்டும் நீண்ட தாடியுடன் மிகுந்த சோகமாக அமர்ந்திருந்தார், இன்னும் பிரார்த்தனை முடியவில்லை போலும் என நினைத்துக் கொண்டேன். மூன்றாவது வரிசையில் பழைய மந்திரி பச்சைமால் தாடியோடு இருந்தார். தாடிக்கும் டை அடித்து கருகருவென.

அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, செந்தில்பாலாஜி, வேலுமணி, அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் மொட்டையடித்து, லேசாக முடி வளர்ந்து வந்திருந்தனர். துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மட்டும் மழமழவென ஃபிரெஷ் மொட்டை தலையாக அமர்ந்திருந்தார்.


# சிம்பாலிக்கா மின்கட்டண உயர்வ சொல்லியிருப்பாரோ பொள்ளாச்சி ?

செவ்வாய், 9 டிசம்பர், 2014

முட்டை முறைகேடு - சட்டமன்றத்தில் எனது பேச்சு

08.12.2014 அன்று,  சட்டமன்றத்தில் "முட்டை கொள்முதலில் முறைகேடு" குறித்து எதிர்கட்சிகள் கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது கழகத்தின் சார்பாக பேச தளபதி அவர்கள் வாய்ப்பளித்தார்கள்.

                

பேச போகும் முன் கொறடா சக்கரபாணி அவர்கள்,"தளபதி அவர்கள் விவாதத்தில் பேச வேண்டும். சண்டை வராமல் பேசு" என்று அறிவுரை வழங்கினார். சபாநாயகர், முதல் வரி பேசிய உடனேயே "சிவசங்கர் சுருக்கமா பேசுங்க" என்றார். அதை தாண்டி முட்டைப் பிரச்சினையில் மக்கள் கருத்தை பதிவு செய்தேன்.

இது குறித்து முரசொலியில் வெளிவந்துள்ள செய்தி.

""சத்துணவு திட்டத்திற்கு, முட்டை கொள்முதலில் மாநில அளவில் ஒரே நிறுவனத்திடம் டெண்டர் விட்டது ஏன் ?
எடை குறைந்த – தரம் குறைந்த முட்டைகள் என பொதுமக்கள் புகார் ! பேரவையில் எஸ்.எஸ்.சிவசங்கர் குற்றச்சாட்டு !

சத்துணவு திட்டத்திற்கு கொள்முதல் செய்யப்படும் முட்டைகள் ஒரே நிறுவனத்திடம் டெண்டர் விடப்படுவது ஏன்? என்றும் எடை குறைந்த முட்டைகள், தரம் குறைந்தவைகளாக இருப்பதாக மக்கள் குறை கூறுகிறார்கள் என்றும் கழக உறுப்பினர் எஸ்.எஸ்.சிவசங்கர், சட்டப் பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்தில் பேசும் போது குறிப்பிட்டார்.

சட்டப்பேரவையில் சிறப்புக் கவன ஈர்ப்புத் தீர்மானத்தில் கழக உறுப்பினர் எஸ்.எஸ்.சிவசங்கர் பேசியதாவது :

“பள்ளியிலே பயிலுகின்ற மாணவர்களுக்கு சத்துண்வோடு முட்டையினை வாரம் ஐந்து முறை வழங்குவதற்கு எங்கள் தலைவர் கலைஞர் அவர்கள் ஆணையிட்டு, வழங்க ஏற்பாடு செய்தார்கள்.

அப்படி வழங்கப்படுகின்ற முட்டை, கடந்த ஆட்சி காலங்களில் மாவட்டங்களில் டெண்டர் விடப்பட்டது. பல பேர் டெண்டர் எடுத்து அந்த முட்டையை சப்ளை செய்தார்கள்.

தற்போது மாநில அளவிலே டெண்டர் விடப்பட்டு, ஒரே நபருக்கு வழங்கப்பட்டு, அவரே சப்ளை செய்கிற நிலைமை ஏற்பட்டிருக்கின்றது.

அது போல, வாரம் மூன்று முறை அந்த முட்டைகளை பள்ளிகளுக்கு அனுப்புகின்ற முறை இருந்தது. ஆனால் இப்போது வாரம் ஒரு முறை அந்த முட்டைகளை முழுவதுமாக சப்ளை செய்வதால், அவற்றை தரமாக விநியோகிக்க முடியாத நிலை இருப்பதாக மக்கள் நினைக்கிறார்கள்.

நாள் தோறும் 60 லட்சம் முட்டைகள் சப்ளை செய்யப்படுகின்ற நிலையில், ஒரு முட்டை 45கிராம் இருக்க வேண்டும். ஆனால் தற்போது 30 முதல் 35 கிராம் எடை கொண்ட முட்டைகள் தான் சப்ளை செய்யப்படுவதாக மக்களிடத்திலே எண்ணம் ஏற்பட்டிருக்கிறது.

கடந்த ஆண்டே எங்கள் சட்டமன்றக் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இந்த செய்தி குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு வந்திருக்கிறார்கள். ஆனால் ஓராண்டு கடந்த பிறகு இன்று பத்திரிக்கைகளிலே பல எதிர்கட்சிகள் இந்தச் செய்தி குறித்து பேசுகின்ற அளவிற்கு செய்தி வந்திருக்கிறது.

எனவே இந்தப் பிரச்சினைகளுக்கு அமைச்சர் தெளிவு படுத்த வேண்டும் “
இவ்வாறு எஸ்.எஸ்.சிவசங்கர் குறிப்பிட்டார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் வளர்மதி, எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு முட்டை கொள்முதலில் முறைகேடுகள் என வந்துள்ள செய்திகளுக்கும் நேரடியாக பதில் தராமல் வழக்கம் போல் கழக ஆட்சியை குறை கூறியே ஏறக்குறைய 20 பக்கங்களுக்கு மேல் படித்தார்.

அமைச்சரின் அர்த்தமற்ற பதிலுக்கு கழக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.""

         

திங்கள், 8 டிசம்பர், 2014

சட்டசபையில் ரவுடித்தனம் செய்த அமைச்சர்….


           
இந்தக் குளிர்காலக் கூட்டத் தொடரை ஒரு வாரம் நடத்தாமல் மூன்று நாட்களாக சுருக்கியதன் நோக்கமே பிரதான எதிர்கட்சிகளை பேச விடாமல் செய்ய வேண்டும் என்பதற்காகத் தான், அதிலும் குறிப்பாக திமுக-வை.

கூட்டத் தொடரின் கடைசி நாள், துணை நிதி நிலை அறிக்கை மீதான விவாதத்தில் இறுதியாக தளபதியே பேசுகிறார் என்றால் விடுவார்களா. இன்று அந்த நோக்கத்தை நிறைவேற்றிக் கொண்டார்கள்.

2.00 மணிக்கு சபையில் கில்லட்டின் நேரம். அப்படி என்றால் அந்த நேரத்திற்குள் சட்ட மசோதாக்களை தாக்கல் செய்து நிறைவேற்ற வேண்டும். இது மரபு. இதை கணக்கு வைத்து ஆளுங்கட்சியின் ஒத்து நாயனங்களான செ.கு.தமிழரசன், தனியரசு போன்றோர் அதிக நேரம் எடுத்துக் கொள்ள சபாநாயகர் அனுமதித்தார்.

இதனால் திமுகவுக்கான வாய்ப்பு நண்பகல் 1.10-க்கு தான் வந்தது. தளபதி பேச எழுந்தார்கள். சபாநாயகரும், செயலாளரும் பார்த்துக் கொண்டனர், தயார் என்பது போல. அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கவனிக்கத் தொடங்கினர். அமைச்சர்கள் தயாராகினர்.

“இது இரண்டாவது துணை நிலை நிலை அறிக்கை. இதில் ஒதுக்கப்பட்ட நிதி மூலமே அரசு அறிவித்துள்ள திட்டங்கள் குறித்து அறிந்து கொள்ள முடிகிறது. 110 விதியின் கீழ் இது வரை நீங்கள் அறிவித்துள்ள திட்டங்களுக்கு ரூபாய் 31,208 கோடி ஒதுக்கியிருக்க வேண்டும்.

ஆனால் இந்த துணை நிதி நிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்டிருக்கிற தொகை வெறும் 1,500 கோடி மட்டுமே. மற்ற அறிவிப்புகளுக்கான தொகை ஒதுக்கப்படவில்லையா ?” என்று தளபதி அவர்கள் உரையாற்றும் போதே முதல்வர் ஓ.பி.எஸ் எழுந்தார். அப்போது மணி 1.13.

கை நிறைய கத்தையாக காகிதங்கள். அடையாளத்திற்காக ஆங்காங்கே ஃபிளாக் வைக்கப்பட்டிருந்தது. அதில் புரட்டி, புரட்டி ஒரு பக்கத்திற்கு வந்தார் ஓ.பி.எஸ். படிக்க ஆரம்பித்தார். 04.12.2014 அன்று 110 விதிகளில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் நிலைக் குறித்து எதிர்கட்சிகளால் கொண்டு வரப்பட்ட கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதிலளித்த போது வாசித்தவற்றையே மீண்டும் வாசித்தார்.

அந்த அறிக்கையும் ஒதுக்கப்பட்ட தொகை குறித்த விவரங்கள் இல்லாமல் வெறும் திட்ட விவரிப்பு தான். அப்படியே 110 அறிக்கைகளின் தொகுப்பு.

எதிர்கட்சி உறுப்பினர்கள் “அண்ணா முடியல. போதும்ணா” என்று குரல் கொடுக்க ஆரம்பித்தார்கள். ஒரே சலசலப்பாக, அவை முழுதும் சத்தமாக இருந்தது.

ஓ.பி.எஸ் “இப்படி தான் அன்று நான் இந்த அறிக்கையை படித்த போதும் திமுக உறுப்பினர்கள், படிக்க வேண்டாம் அவையில் தாக்கல் செய்யுங்கள். நாங்கள் படித்துக் கொள்கிறோம் என்று சொன்னீர்கள். ஆனால் நான் அப்போதே சொன்னேன், நீங்கள் படிக்க மாட்டீர்கள். அதனால் நான் பேசுவதைக் கேளுங்கள் என்று”

ஒரு இடைவெளி கொடுத்து, “நான் சொன்னது போல திமுக உறுப்பினர்கள் படிப்பதுமில்லை; சொல்வதை புரிந்து கொள்வதுமில்லை” என்று நக்கலானக் குரலில் சொல்லிவிட்டு ஒரு ஏளனப் பார்வை பார்த்தார்.

பிள்ளைப்பூச்சிக்கு கொடுக்கு முளைச்சது போல இருந்தது.

அண்ணன் துரைமுருகன் கடும் கோபமுற்றார். எழுந்து கடும் எதிர்ப்பு தெரிவித்தார். “எப்படி படிப்பதில்லை, புரிந்து கொள்வதில்லை என்று சொல்வது ?” என்று குரலெழுப்பினார். ஆனால் சபாநாயகர் பேச அனுமதிக்கவில்லை. கோபமிருந்தாலும் நாங்கள், தளபதி அவர்கள் உரையாற்ற வேண்டுமென்பதற்காக அமைதி காத்தோம்.

ஓ.பி.எஸ் தொடர்ந்து பேச ஆரம்பித்தவர் “மைனாரிட்டி திமுக ஆட்சி போல நாங்கள் இல்லை” என்றவுடன் தளபதி எழுந்து எதிப்பு தெரிவித்தார்கள். நாங்களும் எழுந்து நின்றோம். ஓ.பி.எஸ் தனது டிரேட்மார்க் சிரிப்போடு நின்றார். சபாநாயகர் தளபதி அவர்களை பேச அனுமதிக்கவில்லை.

தொடர்ந்த ஓ.பி.எஸ், “இத்தோடு முடிக்கிறேன். இனியும் கேள்வி கேட்டால் நானும் தொடருவேன்” என்று 110 குறித்து இனியும் பேச வேண்டாம் என மிரட்டுவது போல கூறிவிட்டு அமர்ந்தார். அப்போது நேரம் 1.28.

மூன்று நிமிடங்களே தளபதி அவர்கள் பேசியிருந்த நிலையில், பதில் சொல்கிறேன் என ஓ.பி.எஸ் 15 நிமிடங்களை, பேசி வீணடித்திருந்தார். தளபதி அவர்களை பேச விடாமல், அவரது நேரத்தை அபகரிப்பதே அவர்கள் நோக்கம். அதே போல சபாநாயகர் “உங்கள் நேரம் முடிகிறது” என சொல்ல, திமுக தரப்பு சூடு அதிகமானது. அதை உணர்ந்த சபாநாயகர் தளபதியை பேச அனுமதித்தார்.

மீண்டும் தளபதி அவர்கள் பேச எழுந்தார்கள். “மைனாரிட்டி ஆட்சி என்று குறிப்பிட்ட பினாமி முதல்வர்” என்றார்.

(இரண்டாம் நாளே, இது போல “மைனாரிட்டி திமுக ஆட்சி” என்று சொன்னதற்கு பதிலடியாக “பினாமி அதிமுக ஆட்சி” என்று தளபதி அவர்கள் குறிப்பிட்டார்கள். அந்த வார்த்தையை சபாநாயகர் அவைக்குறிப்பில் இருந்து நீக்கினார். “இனி மைனாரிட்டி என்று சொன்னால் “பினாமி” என்று சொல்வோம்” என தளபதி எச்சரித்திருந்தார்கள்)

அவ்வளவு தான் அதிமுக ஒட்டு மொத்த சட்டமன்ற உறுப்பினர்களும் எழுந்து நின்று கூக்குரலிட்டார்கள். உடனே சபாநாயகர் “அவைக் குறிப்பிலிருந்து நீக்குகிறேன்” என சொல்லியும் அதிமுகவினர் உட்காராமல் தகராறு செய்தனர். சபாநாயகர் எழுந்து நின்று அவர்களை அமர செய்தார்.

கொந்தளித்த அமைச்சர் வைத்திலிங்கம்,”பினாமி முதல்வர் என்கிறார். அப்பா முதலமைச்சர், மகன் துணை முதலமைச்சர். அது தான் பினாமி ஆட்சி. மகள் டெல்லியில் “ என்னும் போதே திமுக உறுப்பினர்கள் எதிர் குரல் எழுப்பினோம்.

சபாநாயகரோ வைத்திலிங்கத்தைப் பார்த்து,”அந்த வார்த்தையை நீக்கி விட்டேன். நீங்கள் ஏன் பயன்படுத்துகிறீர்கள் ?” என பதற, வைத்தியோ அதைக் கண்டு கொள்ளாமல் பினாமி, பினாமி என்று கதறிக் கொண்டிருந்தார். சபாநாயகர் செய்வதறியாமல் முழித்தார்.

ஒரு கட்டத்தில் வைத்தி தளபதி அவர்களை நோக்கி விரலை ஆட்டி, அடித்து விடுவேன் என்பது போல சைகை புரிந்து ஆவேசமாக கத்த, எங்கள் பொறுமை எல்லை மீறியது. நாங்கள் எழுந்து எதிர்ப்பு தெரிவிக்க, வைத்தி வேட்டியை மடித்துகட்டி பாய்வது போல முன்னேற, நாங்கள் சபாநாயகரை பார்த்து “இது சரியா?” என்று கேட்டோம்.

ஆனால் சபாநாயகர் எழுந்து நின்று, எங்களை அமர சொல்லி ஆணையிட்டுக் கொண்டிருந்தார். அதிமுகவினர் ஓலமிட்டுக் கொண்டிருந்தனர், அவர்களை கண்டுக் கொள்ளவில்லை அவர்.

வைத்திலிங்கத்தை மற்ற அமைச்சர்கள் அமர வைத்தாலும் மீண்டும், மீண்டும் எழுந்து தளபதி அவர்களை நோக்கி ரவுடித்தனமாக கத்திக் கொண்டிருந்தார். திமுக உறுப்பினர்கள் சபாநாயகரை நோக்கி “ரவுடித்தனம் செய்யும் வைத்திலிங்கம் மீது நடவடிக்கை எடு” என கோஷம் எழுப்பினோம்.

அவரோ மீண்டும் எங்களை எச்சரிப்பதிலேயே குறியாக இருந்தார். வைத்திலிங்கம் பக்கமே திரும்பி பார்க்கவில்லை. ஒரு கட்டத்தில் சபாநாயகரை நோக்கி முன்னேறினோம். வைத்திலிங்கம் கத்திக் கொண்டிக்க, பொறுமை இழந்த தளபதி அவர்கள், தன் மார்பை விரித்துக் காட்டி,”வந்து அடித்துப் பார்” என சொல்ல, சபாநாயகர் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

நாங்கள் ஆத்திரத்தின் உச்சிக்கே போனோம். சபையின் நடுப்பகுதியை நோக்கி சென்றோம். தளபதி அவர்கள் எங்களை தடுத்து விட்டார். இன்னொரு வழியாக சபாநாயகர் இருக்கை அருகே சென்ற அன்பழகன், ஐ.பெரியசாமி ஆகியோர் சபாநாயகரிடம் நியாயம் கேட்டு வாதிட, சபாநாயகர் அதற்கு பதில் சொல்லாமல் “இடத்திற்கு போங்க, இடத்திற்கு போங்க” என்று கத்திக் கொண்டிருந்தார்.

கொறடா சக்கரபாணி எங்களை “இடத்துக்கு போய் உட்காருங்க, தளபதி தொடர்ந்து பேசி அவர்களுக்கு பதிலளிக்கட்டும்” என சொல்ல, நாங்களும் இருக்கைக்கு திரும்பினோம். அதைப் பார்த்த சபாநாயகர் தடாலென “திமுக உறுப்பினர்களை வெளியேற்றுகிறேன்” என்று உத்தரவிட்டார்.

வைத்திலிங்கத்தின் தரக்குறைவான நடவடிக்கையை கண்டிக்காத சபாநாயகர், திமுக உறுப்பினர்களின் நியாயக் கோரிக்கையை காது கொடுத்துக் கேட்கவில்லை. அவர்கள் நோக்கம் நிறைவேறியது, தளபதி அவர்களை சபையில் பேசவிடாமல் தடுத்து விட்டார்கள்.

110 விதியின் கீழ் அறிவித்த திட்டங்களுக்கு நிதி ஒதுக்காமல் மக்களை ஏமாற்றுவதை புள்ளிவிபரங்களோடு தளபதி அவர்கள் அரசை தோலுரித்து விடுவார் என்பது தான் அவர்கள் பயம்.

நாங்கள் அவைக்காவலர்களால் வெளியேற்றப் பட்டோம். சட்டசபை வளாகம் முழுதும் “ரவுடி வைத்திலிங்கத்தின் மீது நடவடிக்கை எடு” என்ற கோஷம் எதிரொலித்தது.

# பினாமி, ரவுடி, கண்மூடி மனிதர் கொண்ட சபை. வாழ்க ஜெ’னநாயகம் !