பிரபலமான இடுகைகள்

செவ்வாய், 28 மே, 2013

அது ஒரு கிரிக்கெட் காலம்...."சண்முகா தியேட்டர் முனையிலிருந்து, ஆண்டிமடம் அணியை சேர்ந்த சந்திரமோகன் பந்து வீசுகிறார். பாளையங்கோட்டை அணியை சேர்ந்த மோசஸ் எதிர்கொள்கிறார். சற்றே மிதமான வேகத்தில் வந்த பந்தை அடித்தாட முயல்கிறார். ஏமாற்றிய பந்து கீப்பரின் கையில் தஞ்சமடைகிறது"

பள்ளி மைதானத்தின் இலையுதிர்ந்த மரத்தின் உச்சியில் கட்டிய புனல் ஒலிப்பெருக்கியிலிருந்து உள்ளூர் கமெண்டேடரின் வர்ணனை காதை பிளக்கும். 

கோடை வெயிலை வீணாக்காமல், மதிய உணவு குறித்த கவலை இல்லாமல், நண்பகல் இரண்டு மணிக்கு உச்சி வெயிலில் கிரிக்கெட் தவமிருந்த காலம்.

வரும் பந்தை தாண்டவிட்டு, மண்ணை தட்டுகிறாரா பந்தை தட்டுகிறாரா எனத் தெரியாமல் தட்டி நான்குக்கு விரட்டும் அசாருதீன்,

சீறி வரும் பந்தை பார்க்காமல் அலட்சியமாக நின்று கொண்டிருந்து எப்போது பாய்ந்தார், பிடித்தார் எனத் தெரியாமல் லாகவமாக கேட்ச் பிடித்து ஃபீல்டிங்கில் கலக்கிய அஜய் ஜடேஜா.

இருந்த சாதனைகளை எல்லாம் முறியடித்து, புதிய சாதனைகளை படைத்து, அதையும் தானே முறியடித்து கிரிக்கெட்டின் சிறுகடவுளாக அவதாரமெடுத்த சச்சின் டெண்டுல்கர்.

அலட்டிக் கொள்ளாமல் அமைதியாய் சாந்தசொரூபியாய் சாதித்த அணில் கும்ப்ளே, சிக்ஸ் சித்து... இப்படி கிரிக்கெட் ஒரு மதமாக இந்தியாவில் அவதாரமெடுத்த காலம்.

டெஸ்ட் கிரிக்கெட் என ரிலாக்ஸாக ஆடி பிறகு லிமிட்டெட் ஓவராக டிரிம் செய்யப்பட்டு, 5 நாள், 3நாள் போய் ஒரு நாள் கிரிக்கெட்டாகி அதுவும் 20-20 என அவசர உலகின் பாஸ்ட்ஃபுட் கலாச்சாரத்தில் சுருங்கி...
அதற்கேற்ப வீரர்களும் பிஃக்ஸிங்கில் இறங்கி மேட்ச் பிஃக்ஸிங், ஸ்பாட் பிஃக்சிங், பால் பிஃக்சிங் என கண்டுபிடித்து....

சோடா மூடியால் பந்தை சுரண்டியது போல், லலித் மோடியால் கிரிக்கெட் சுரண்டப்பட்டு ஐ.பி.எல்-லோடு கிரிக்கெட் மீதான நம்பிக்கை சுரண்டப்பட்டு...

# அது ஒரு கிரிக்கெட் காலம்....


               *****************************************************************   

26.05.2013 அன்று நடைபெற்ற IPL போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் நடைபெற்ற இறுதி போட்டியின் முடிவு பிக்ஸ்சிங்கின் அருமையை வெளிப்படுத்துகிறது...

இனி கமென்ட்ரி....

யோவ் சுத்தி சி.பி.ஐ நின்னு பாத்துகிட்டு இருக்கான்யா. 1 பால், 2 பால்ல அவுட் ஆகாதிங்கய்யா. 10 பால்க்காவது நில்லுங்கைய்யா...

# சி.பி.ஐ ஆபிச்சர்ஸ் கொஞ்சம் கண்ணயும் காதயும் மூடுங்க....
                         *************************

ஸ்ரீசாந்த் போட்ட பந்து இன்னும் ஸ்பின்னாயி சுத்துதோ

சி.எஸ்.கே 41/6 (7.5 ஓவர்ஸ்)

# ஓவர், ஓவர்ர்ர்ர்ர்ர்ர்ர்............
.......
                       ******************************

அண்ணே, சீக்கிரம் கைல துண்டு போடுங்க....
சி.எஸ்.கே 58/7 (11.2)

#
ரெடியா ???? 
                       ******************************

மும்பை இந்தியன்ஸ் : 148/8 (20 ஓவர்ஸ்)
சென்னை சூப்பர் கிங் : 125/9 (20 ஓவர்ஸ்)

                        *****************************

டோனி சார், டோனி சார்... இவனுங்க அப்பவே படம் போட்டு காட்டிக் கொடுத்துட்டானுங்க...
God of Big Deals.
( மும்பை இந்தியன்ஸ் வெற்றி)

# பெரும் பேரங்களின் கடவுள் ! 


திங்கள், 27 மே, 2013

இன்ப சக்கரம் சுத்துது... அதில் நீங்கள் தான் எங்கள் சக்கரவர்த்தி !கேமரா விரிகிறது. பனிமலை, சிம்லா. மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் சிகப்பு நிற சூட்கேஸோடு ஓடி வருகிறார். பனிமலையை கண்ட ஆனந்தத்தில் கண்கள் விரிகிறது. உற்சாகமாகிறார்...“ புதிய வானம் புதியபூமி
எங்கும் பனி மழை பொழிகிறது
நான் வருகையிலே என்னை வரவேற்க 
வண்ண பூமழை பொழிகிறது”

உற்சாகம் நம்மையும் தொற்றுகிறது. நாமே சிம்லாவில் இருக்கிறோம். இப்போது நாமே சிகப்பு சூட்கேஸோடு ஓட ஆரம்பிக்கிறோம், ஆட ஆரம்பிக்கிறோம்.

                **************************************************

நடிகர் திலகம் சிவாஜி குழந்தையின் தொட்டிலை ஆட்டிக் கொண்டிருக்கிறார். மெல்ல மெல்ல அசைகிறது தொட்டில். 

“ ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ
இல்லை ஒரு பிள்ளை என்று 
ஏங்குவோர் பலர் இருக்க 
இங்கு வந்து ஏன் பிறந்தாய் செல்வமகனே” கடும் சோகம் நம்மை கவ்வுகிறது. நாமே தொட்டிலை ஆட்டுகிறோம். நாம் பாட ஆரம்பிக்கிறோம்.

                         *************************************************

நம்மை அறியாமல் அந்தக் குரல் மெல்ல நம்மை ஆக்கிரமிக்கிறது...
நாமே பாடுவதாக தோன்றுகிறது. மகிழ்ச்சியோ, துக்கமோ நம்மை அதில் ஆழ்த்துகிறது.எம்.ஜி.ஆர், சிவாஜி மாத்திரமல்ல தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் பல நடிகர்களுக்கு உயிர் கொடுத்த குரல் பிரிந்துவிட்டது.

பல மனிதர்களுக்கும் உற்சாகமோ, அமைதியோ தேவைபடுவதை கொடுக்கும் குரல் மருத்துவர்.

                   *****************************************************

வசந்த மாளிகையில் சிவாஜி சுழல்கிறார்....

“ஒரு சட்டங்கள் தர்மங்கள் ஏதுமில்லை
இன்ப சக்கரம் சுத்துதடா
ஹ ஹ ஹ ஹா....
அதில் நான் சக்கரவர்த்தியடா....”
# இன்ப சக்கரம் சுத்துது... ஆம் நீங்கள் தான் எங்கள் சக்கரவர்த்தி !MLA-க்கள் குறித்த சர்வேபுதிய தலைமுறை தொலைக் காட்சியில் MLA-க்கள் குறித்த சர்வேயில் எனக்கு இடம் கிடைக்குமா என நண்பர்கள் விவாதித்து வருகிறார்கள், என்னையும் கேட்கிறார்கள். எனக்கு வாய்ப்பு இல்லை என்பதே என் அனுமானம்.

சட்டமன்ற உறுப்பினர்கள் செயல்பாடு குறித்த மக்கள் மதிப்பீடு நிகழ்ச்சியில் முதல் 50 இடங்களை பிடித்த ச.ம.உக்களில் 11-50 வரை இடம் பிடித்தவர்கள் பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது. முதல் பத்து இடங்களுக்கான பட்டியல் இன்று வெளியிடப்பட இருக்கிறது. இதில் இடம் பெற வாய்ப்புகள் இல்லை. காரணம்...
 

(சர்வே வருமுன் முக நூலில் இட்ட பதிவு )

சாம்பிள் சர்வே எடுக்க வாய்ப்பில்லாத பரந்து, விரிந்த தொகுதி, குன்னம். அள்ளி தெளித்தது போல் திருச்சியிலிருந்து வரும் போது பாடாலூர் அருகே துவங்கும் தொகுதி ஜெயங்கொண்டம் கிட்டத்தட்ட செல்கிறது. இன்னொரு புறம் கடலூர் மாவட்டம் பெண்ணாடம் வரை . எப்படி பார்த்தாலும் 100கிமீ பயணம் செய்ய வேண்டும்.

குன்னம் முற்றிலும் கிராமங்கள் நிறைந்த தொகுதி. பெரும்பாலான தொகுதிகள் ஒரு நகரத்தை சுற்றி அமைந்திருக்கும். நகரத்தில் அடிக்கடி மக்களை சந்தித்தாலே போதுமானது. 400க்கும் மேற்பட்ட கிராமங்களை கொண்ட குன்னத்தில் இது சாத்தியமில்லை.

குன்னம் சென்று கேட்டால் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் திறப்பதில்லை என்ற புகார் சொல்வார்கள். உண்மை தான். செந்துறை, ஆலத்தூர், வேப்பூர் ஆகிய மூன்று ஒன்றியங்களுக்கும் மையப் பகுதி குன்னம் அல்ல, அரியலூர் தான். அரியலூரில் எனது சொந்த அலுவலகம் செயல்படுகிறது. ( குன்னம் ச.ம.உ-ஆனதால் வசிப்பிடத்தை ஆண்டிமடத்திலிருந்து அரியலூருக்கு மாற்றிக் கொண்டது தனி செய்தி).

கடந்த முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தப் போதே, என்னை அலுவலத்தில் பார்க்க முடியாது என்ற குறை உண்டு. காரணம் அலுவலத்தில் உட்காராமல் சுற்றுப் பயணத்தை விரும்புபவன். நேரில் கிராமத்திற்கு சென்றால் தான் தேவைகளை உணரமுடியும் என்பது என் எண்ணம்.

இது போல இன்னும் சில காரணங்களால்..... வாய்ப்பு இல்லை...


ஆயிரம் காரணம் சொன்னாலும் சர்வேயில் இடம் பெறாவிட்டால் ஃபெயில் தான்.

# இறுதித் தேர்வுக்கு தயாராக இருக்க வேண்டும்....சனி, 25 மே, 2013

" மணப்பெண்ணை காணோம்"....


இரவு பதினோரு மணி, செல்லிடப்பேசி அழைக்கிறது.  கழக சொற்பொழிவாளர் அண்ணன் பெருநற்கிள்ளி.

" அய்யா, ஒரு பிரச்சினை "
"சொல்லுங்கைய்யா "
" மணப்பெண்ணை காணோம்"
"என்ன சொல்றீங்க" அதிர்ச்சியானேன்.
"ஏற்கனவே காதலாம், இங்கே எல்லோரும் அதிர்ச்சியில்"

காலையில் நடைபெறுவதாக இருந்த திருமணம், சுயமரியாதை திருமணமாக. இப்போது இப்படி இக்கட்டு. மணமகன் எனக்கு வேண்டிய கழகத் தோழர்.

" என்ன செய்யலாம்" -நான்
"திருமணத்தை நிறுத்தக் கூடாது, இப்போதே பெண் தேட துவங்குகிறோம்"
" சரி அய்யா, முயற்சி செய்யுங்கள்
மணமகனுக்கு தைரியம் சொல்லுங்கள்" செல் கைமாறுகிறது.
" தம்பி, தைரியமாக இருங்க. திருமணத்திற்கு பிறகு என்றால் எவ்வளவு சங்கடம். இந்த நிலையில் தெரிய வந்தது பரவாயில்லை என்று நினைத்துக் கொள்ளுங்கள். அடுத்த வேலையை பாருங்கள்"
" சரிங்க அண்ணா"- மணமகன்

மீண்டும் நள்ளிரவு ஒரு மணிக்கு செல் அழைப்பு.

" அய்யா, பையனின் அத்தை பெண் கொடுக்க ஒப்புக் கொண்டார். திருமணம் உறுதி. வந்து நடத்திக் கொடுங்கள்"
"மகிழ்ச்சி. ஆக வேண்டிய வேலையை பாருங்கள். சரியாக வந்துவிடுகிறேன்"
“ மணமகன் தந்தை சங்கட்த்தில் இருக்கிறார், ஒரு வார்த்தை அவரிடமும் பேசிவிடுங்கள்
“ அண்ணா, திருமண வேலையை பாருங்கள். எந்த சங்கடமும் வேண்டாம் ஆறுதல் கூறினேன்.

காலை மூன்று திருமண விழாக்களில் கலந்து கொண்டு, இந்த திருமண நிகழ்விற்கு செல்ல வேண்டிய சூழல். காத்திருந்தார்கள், சிறப்பான முறையில் திருமணத்தை நடத்தி வைத்தோம்.

மணமக்களுக்கான வாழ்த்துரையில், மணமகள் பெற்றோருக்கு நன்றி சொன்னேன். மணமகள் பெற்றோர் திருமணத்திற்கு ஒப்புக் கொண்டிராவிட்டால், மணமகன் குடும்பம், சொல்லொணா நிலைக்கு ஆளாகி இருப்பார்கள்.

அதே போல அண்ணன் பெருநற்கிள்ளி அவர்கள் இல்லையென்றால், இந்த திருமணம் நடந்திருக்காது.

மணமகன் குடும்பம் இடிந்து போயிருந்த சூழ்நிலையில், அவர்களுக்கு தைரியம் சொல்லி, இரவே பெண் தேடி, அவர்களை அழைத்து பேசி, திருமணம் சிறப்பாக நடக்க காரணமாக இருந்தார், நண்பர் என்ற முறையில்.


# ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பும் உறவும்....

வியாழன், 23 மே, 2013

பேரின்பமே உன் இசைதானய்யா - அதை மக்களிடம் தந்தாயய்யா...


மாலை சென்றிருந்த திருமண வரவேற்பில், இசைநிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. தொடர்ந்து புதிய பாடல்கள். அப்போது அடுத்த பாடல் ஆரம்பித்தது..

துவக்க இசையின் இதமே இதயத்தை வருடியது. பப பப... பப பப....

நம் இளையராஜாவின் இசை...

ஜெர்மனியின் செந்தேன் மலரே 
தமிழ் மகளின் பொன்னே சிலையே 
காதல் தேவதையே... 
காதல் தேவதை பார்வை கண்டதில் 
நான் எனை மறந்தேன் ...

மனம் டைம் மெஷினில் ஏறி பின்னோக்கி சென்றாகிவிட்டது. நிகழ்வு முடிந்து காரில் ஏறினேன். நீண்ட பயணம். மீண்டும் ராஜா, அட....

சித்திரமே செந்தேன் மழையே 
முத்தமிழே கண்ணா அழகே 
காதல் நாயகனே... 
காதல் நாயகன் பார்வை கண்டதில் 
நான் எனை மறந்தேன்......            

எஸ்.பி.பியும் ஜானகியும் போட்டி போட்டுக் கொண்டு குரலில் துள்ள, இடைவெளியில் ராஜாவின் இசை பிளிறல், மெல்லிசை என காதுகளை கட்டிப் போடுகிறது.

கண்ணை மூடிக் கொண்டு கேட்டால், வெளிநாட்டில் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும் இசை. தொழில்நுட்ப வளர்ச்சி இல்லாத காலக்கட்டத்தில் இருக்கின்ற இசைக் கருவிகளைக் கொண்டு உன்னத இசை.

கேட்கும் போதே நம் மனதை துள்ளச் செய்யும் துள்ளல் இசை. அதே சமயம் வார்த்தைகளை அழுத்தாத இசை. ராஜாவின் விரலசைவுக்கு வாத்தியங்கள் நம் காதில் புது வெள்ளமாய் நிறைக்கிறது.

பூஞ்சோலையே பெண்ணானதோ - 
இரு பொன்வண்டுகள் கண்ணானதோ 
பூங்கோதையின் நெஞ்சோடு நீ - இனி 
என்னாளுமே கொண்டாடலாம்  

லா ல லா லா லா  குளிர் நிலவின் ஒளி நீயே 
லா ல லா லா லா எனதன்பின் சுடர் நீயே 
சுகம் நூறாக வேண்டும் பா பா ப பா பா 

வாத்தியங்கள் மட்டும் இல்லாமல் குரலை கொண்டு இசைக் கோர்வையாக்கி மனதை வயப்படுத்தும் மாயஜாலம் ராஜாவுக்கு மட்டுமே கைவந்த கலை.
பாடல் தொடர்கிறது....


பேரின்பமே என்றாலென்ன - அதை 
நீயென்னிடம் தந்தாலென்ன 


# பேரின்பமே உன் இசைதானய்யா - அதை 
   மக்களிடம் தந்தாயய்யா...


புதன், 22 மே, 2013

கிளியூருக்கு இவர் தான் ஒளி வீசும் கண்கள் !


“சார், கிளியூர்லருந்து பிளைண்ட் கொளஞ்சிநாதன் பேசறேன் அடிக்கடி செல்லில் கணீரென கேட்கும் குரல். பொதுப் பிரச்சினைகளுக்காக மட்டுமே பேசுபவர், நேரில் வந்தார்.

முற்றிலும் பார்வை இல்லாதவர். அவர் ஊரில் இருக்கும் மண்பாண்ட தொழிலாளர்கள் சேர்ந்து கட்டியிருக்கும் சிறு கோவிலுக்கு மின் இணைப்பு பெறுவதில் இருக்கும் இடர்பாடை நீக்குவது தொடர்பாக சந்தித்தார்.

உடன் அவரது மகன் ஜெகநாதன் வந்திருந்தார், ஒன்பதாம் வகுப்பு படிப்பவர். பொதுப் பிரச்சினைகளுக்கு மனு எழுதுபவர் அவர் தான். சமீபத்தில் ஆங்கிலத்தில் தந்தி எழுதி கொடுத்த மகன் குறித்து பெருமைப்பட்டார். ஈழப்பிரச்சினையில் தலையிடக் கோரி குடியரசு தலைவருக்கு தந்தி அது.

பார்வையில்லாத நிலையில் எப்படி பொதுப் பணிக்கு வந்தீர்கள் எனக் கேட்டேன். பூந்தமல்லி பார்வையற்றோர் பள்ளியில் படித்தப் பிறகு, சென்னையிலேயே பேஸின் பிரிட்ஜ் பகுதியில் டெலிபோன் பூத் நடத்தியிருக்கிறார்.

ஒரு கட்டத்தில் டெலிபோன் பூத்கள் நசிந்துவிட, ஆவடி ரயில் நிலையம் அருகே தெருவோரக் கடை போடுகிறார். புதிய கட்டிடம் கட்ட கடை காலி செய்யப்பட திரும்ப ஊருக்கே வந்துவிட்டார்.

பெரமபலூர் பஸ் ஸ்டாண்டில் கடை வைக்கிறார். தினம் பெரம்பலூர் சென்று வருவதால், ஊரிலிருப்பவர்கள் மனுக்களை இவரிடம் கொடுக்க, மாவட்ட ஆட்சியர் வசம் கொடுத்து, அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க முயற்சி எடுக்கிறார்.

அப்படி மூன்று பேருக்கு முதியோர் உதவித் தொகை கிடைக்க, கிளியூரில் அரசு உதவி பெற வேண்டுமானால் கொளஞ்சிநாதனை தொடர்பு கொள்ளும் நிலை வருகிறது. அந்த நேரத்தில் உள்ளாட்சித் தேர்தல் வருகிறது.

மக்கள் இவரை ஊராட்சிமன்ற உறுப்பினர் பொறுப்பிற்கு நிற்க சொல்ல, செல்வாக்கு மிக்க உறவினர் ஒருவர் எதிர்த்து போட்டியிட்டும் வெற்றி பெறுகிறார். “பார்வையில்லை என்று அனுதாபப் பட்டு வாக்களிக்காதீர்கள், நம்பிக்கையிருந்தால் மட்டும் வாக்களியுங்கள் என்றே வாக்கு கேட்டேன் என்கிறார்.

210 வாக்குகளில் 125 வாக்கு இவருக்கு. ஒன்றரை வருட்த்தில் 60 பேருக்கு முதியோர் உதவி தொகை பெற்று தந்திருக்கிறார். தாலுக்கா அலுவலகத்தில் சான்றிதழ் பெற ஒருவரும் அலுவலகம் போவதில்லை, அனைத்தும் இவர் தான்.

எப்பொழுது வேண்டுமானாலும் இடியக் கூடிய நிலையில் வீடு, முழு நேரமும் தொழிலில் ஈடுபட முடியவில்லை, தினக்கூலி வேலைக்கு செல்லும் மனைவி, மூன்று பிள்ளைகள் இவை எதுவும் இவரது பொதுப்பணிக்கு தடையில்லை.

“வேறு என்ன செய்ய வேண்டும் ? என நான் கேட்க, “எனக்கு எதுவும் வேண்டாம் சார், ஊர் பிரச்சினைகள் சொல்வதை மட்டும் செஞ்சு கொடுங்க என்கிறார் கொளஞ்சிநாதன்.

“ போன வாரம் சென்னை சென்று போக்குவரத்துத் துறை அமைச்சரை பார்த்தேன். பக்கத்து ஊருக்கு வரும் பேருந்தை ஒரு கி.மீ நீட்டித்து எங்கள் ஊர்வரை விட மனு கொடுத்தேன். அது தொடர்பாக துறை அதிகாரிகளை சந்திக்க நாளை திருச்சி செல்கிறேன் என விடை பெற்றார்.

# கிளியூருக்கு இவர் தான் ஒளி வீசும் கண்கள் !


திங்கள், 20 மே, 2013

இந்த நெருப்பு விடாது....

அனைத்து குடிசை வீடுகளையும் கான்கிரீட்டு வீடுகளாக மாற்றும் “கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தை“ நீக்கிய ஜெயலலிதா, எங்கள் மக்களின் வயிற்றெரிச்சலுக்கு பதில் சொல்லியே தீரவேண்டும்.

12.05.2013 மாலை செந்துறை ஒன்றியம், மருங்கூர் கிராமத்தில் மின்கசிவு காரணமாக ஒரு குடிசை வீடு எரிந்து விட்டது, முற்றிலுமாக. ஒரு சிறு பொருளும் தப்பவில்லை, ரேசன் அட்டையிலிருந்து பிள்ளைகளின் மாற்றுசான்றிதழ், வீட்டு உபயோகப் பொருட்கள், உணவு தானியங்கள் வரை. 

தீயை அணைக்க முயன்றதில் வீட்டுக்காரரின் கையில் தீக்காயம். குடும்பத்தாருக்கு மனக்காயம். இவரது குடும்பம் சகஜ நிலைக்கு திரும்ப ஆண்டுகள் பல ஆகும்.

இன்று நேரில் சென்று, உதவி செய்து ஆறுதல் கூறி வந்தோம். உடன் பொதுக்குழு உறுப்பினர் செல்வராஜ், கவுன்சிலர் கனிமொழி, பொன்னுசாமி, பாஸ்கர், ஜெயராமன், வாசு.

“கலைஞர் வீடு வழங்கும் திட்டம்“ நீக்கப்படாமல் தொடர்ந்திருந்தால் இந்த வீடு, கான்கிரீட்டு வீடாக மாறியிருக்கும். எங்கள் பகுதியில், இன்னும் பல வீடுகள் குடிசை வீடுகளாகவே இருக்கின்றன.

கோடை முடியும் வரை அனைவரும் நெருப்பை வயிற்றில் கட்டிக் கொண்டு தான் இருக்க வேண்டும். 


ஜெயலலிதாவின் அரசியல் காழ்ப்புணர்ச்சிக்கு  பலியாவது பொதுமக்களே...

வியாழன், 16 மே, 2013

அரசியலில் உழைக்கும் வர்க்கமான, மீடியாக்களின் பார்வையில் அவுட் ஆப் ஃபோகஸில் இருக்கும்அரசியலில் உழைக்கும் வர்க்கமான, மீடியாக்களின் பார்வையில் அவுட் ஆப் ஃபோகஸில் இருக்கும், ஆனால் கட்சிகளின் ரத்த நாளங்களாக விளங்கும் வட்ட செயலாளர்கள் குறித்து விவாதத்திற்கு எடுத்துக் கொண்டமைக்கு விஜய் டிவிக்கு பாராட்டுக்கள். 12.05.2013 அன்று ஒளிபரப்பானது.

ஆனால் எதிர்தரப்பில் அமர்த்தப்பட்டவர்கள் தான் வேறு வகையறா. அய்.டியில் பணிபுரியும் அவர்கள் பார்வை வேறாகத் தான் இருக்கும், அவர்களையும் குறை சொல்ல முடியாது.

கோட்-சூட் போட்டிருக்க வேண்டும், லேப்டாப் தெரிந்திருக்க வேண்டும், சீனாவை போன்று, அமெரிக்காவை போன்று என்ற அவர்களது எதிர்பார்ப்புகளை எம்.எல்.ஏக்களே பூர்த்தி செய்ய முடியாது. இதை எம்.பிக்களிடம் எதிர்பார்ப்பதே பொருத்தமாக இருக்கும்.

வட்ட செயலாளர்கள் போல் களத்தில் அவர்களுக்கு இணையாக பணியாற்றும் வேறொரு பிரிவை அழைத்திருக்கலாம். பங்கேற்ற இணைய நண்பர்கள் அண்ணன் ஜெயின் கூபி, சிவானந்த அரசன், பாபு சாந்தி, நவநீதகிருஷ்ணன் மற்றும் நமக்கு அறிமுகமில்லாத சிலர் ( முருகானந்தம், நகராட்சி தலைவர்) சிறப்பாக பேசினார்கள்.

சிறப்பு விருந்தினராக பேசிய எழுத்தாளர் இமையம் மிக யதார்த்தமாக பேசினார், வலுவான வாதம். ஆழி செந்தில்நாதன் சொன்ன கருத்து , "அரசியல் வர்க்கம்" என்பது கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டியது.

மிக்ஸிக்கு போராடிய அய்.டி பணியாளரின் அறிவார்ந்த வாதமும், லைசன்ஸ் இல்லாத நபரை போலீஸிலிருந்து விடுவிக்கும் செல்வாக்கான வட்டத்தின் பேச்சும், கட்டப்பஞ்சாயத்தை லைவாக நடித்துக் காட்டிய இன்னொரு வட்டத்தின் பாடி லாங்க்வேஜும் ரசிக்கப்பட வேண்டியவை.

# கோபிக்கு வேர்த்து களைக்கும் அளவுக்கு செம ஹாட் ( காய்ச்சல்) 


கண்கள் ஒத்துழைக்காமலே ஒளிரும் கல்விமணி, கலைமணி“மார்க்கு எவ்வளவும்மா ? “
“வரலாறுல 200 சார். மாநிலத்தில இரண்டாமிடம்.”
“மத்த பாடத்தில எல்லாம் ? “
“காமர்ஸ் 200, எக்கனாமிக்ஸ் 198, அக்கவுண்டன்சி 186, தமிழ் 185, ஆங்கிலம் 179, மொத்தம் 1148 சார் “

பெயர் கலைமணி, குடும்பத்தின் கண்மணி, கண்கள் ஒத்துழைக்காமலே ஒளிரும் கல்விமணி, 90% பார்வை குறைப்பாட்டோடு இன்று சாதனைமணி.
அரியலூர் மாவட்டத்தின் உள்ளடங்கிய பரணம் கிராமத்தை சேர்ந்தவர். உள்ளூர் அரசு துவக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளியில் ஏழாம் வகுப்பு வரை பயின்றார்.

புத்தகத்தை கண்ணின் மிகஅருகே வைத்து படிக்க வேண்டிய சூழலில், படிப்பே சுமையானது. பத்து வருடத்திற்கு முன்பே தந்தையை இழந்த சூழலில் தாத்தா, பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்தார் கலைமணி.

பாட்டி சரஸ்வதிக்கு பெருமிதம் “ இங்க படிக்க கஷ்டப்பட்டுச்சி, பெரம்பலூர் ஸ்கூல்ல சேர்த்தோம். அவிங்க புள்ளைங்க மாதிரியே பார்த்துக்கிட்டாங்க. இப்போ மாநிலத்தில இரண்டாமிடமாம். அதுவும் இதுமாதிரி பசங்கள்ள முதலிடமாம்”.

அது பெரம்பலூரில் உள்ள அன்னை ஈவாமேரி ஹாக் பெண்கள் மேல்நிலைப்பள்ளி. அங்கிருக்கும் பயிற்றுனர்களே அன்னையராக திகழ்ந்திருக்கிறார்கள். அவர்கள் பாடங்களை கேசட்டில் பதிந்து கொடுத்ததை கேட்டு இந்தத் தேர்ச்சி.

ஹெலன் ஜெயராணி, ஹேமா ஆரோக்கிய மேரி, ஜெயா மேரி, பெல்சி என நான்கு ஆசிரியத் தாய்களையும் நன்றி பாராட்டுகிறார். தேர்விலும் கலைமணி சொல்வதை கேட்டு எழுதிய ஆசிரியர் அப்போதே பாராட்டியிருக்கிறார், “ நீ சாதிக்கப் போகிறாய்”.

இன்று சென்று பாராட்டி வந்தேன் மண்ணின் பெருமைக்குரிய மகளை. மேலே படிப்பது எதுவரை முடியுமோ, அதுவரை படிக்க வலியுறுத்தி, உதவிட நாங்களிருக்கிறோம் என்று தைரியமளித்து வந்தேன்.

# கலைமணி நீ எங்கள் பொன்மணி !