பிரபலமான இடுகைகள்

வியாழன், 29 நவம்பர், 2012

எம் இனிய பாரதிராஜா அவர்களே

எம் இனிய பாரதிராஜா அவர்களே, 

உங்கள் பாசத்திற்குரிய ரசிகன் பேசுகிறேன்.

முதல் மரியாதை பார்த்து உங்கள் மீது அதிக மரியாதை கொண்டவன், கிராமத்தை கிராமமாக காட்டியதற்காக, நடிகர் திலகத்தின் இன்னொரு பரிமாணத்தை காட்டியதற்காக.

பல இயல்பான இயக்குனர்களை தமிழ் திரைக்கு, வாரி வழங்கிய குரு நீங்கள். வாழைக் கன்றுகளாக உங்களை ஒட்டி வளர்ந்து, நல்ல படங்களை வழங்கி உங்களுக்கு பேர் வாங்கி தந்து வருகிறார்கள்.

புராண படங்களில் சிக்கித் தவித்த தமிழ் திரையுலகை, சமூகத் தளத்திற்கு இழுத்து வந்து புரட்சிகர
சிந்தனைகளை மலரச் செய்ய, திராவிட இயக்கம் ஆற்றியது பெரும் பணி.

அதே போல பாலச்சந்தர் போன்றோரின் பராமரிப்பில் மேடை நாடகங்களின் ஜெராக்ஸ் காப்பியாக வெளிவந்துக் கொண்டிருந்த தமிழ் சினிமாவை, கிராமத்து வயல்வெளிகளில் அட்மிட் செய்து இயற்கை ஆக்சிஜன் ஏற்றியது நீங்கள் தான்.

காலச்சக்கரத்தின் ஓட்டத்தில், உங்களுக்கு வயதானது போல், உங்களுக்குள் இருக்கும் கலைஞனுக்கும் வயதாகிவிட்டது. அதனால் தான் சமீப காலமாக உங்கள் படங்கள் தடுமாற துவங்கிவிட்டன, உங்களை போல.

இளையத் தலைமுறைக்கு ஈடுகொடுத்து, உங்கள் படமும் ஓட வேண்டுமென ஆசைப்படுவது நியாயமே. ஆனால் அதற்காக மன்சூர் அலிகான் போல கிறுக்குப் பேட்டி கொடுத்தால், அந்தப் பரபரப்பில் படம் ஓடிவிடும் என நினைப்பது என்ன நியாயம் ?

அல்லி நகரத்து, ஹெல்த் இன்ஸ்பெக்டர் சின்னசாமி, புகழ் பெற்ற இயக்குனர் பாரதிராஜாவாக வந்தப் பாதையை திரும்பிப் பாருங்கள். திராவிட இயக்கம் செப்பனிட்டப் பாதையில் தான் உங்கள் திரைத் தேர் பவனி வருகிறது.

வைகோ மீது ஏதும் தனிப்பட்ட கோபம் என்றால், திராவிட இயக்கத்தின் மீது பாய்வது ஏன் ?

திராவிட இயக்கம் தான், தமிழ்நாடு என்று பெயர் சூட்டியதே. தமிழனா மாறுங்கன்னு அறிவுரை சொல்ல வந்துட்டிங்க...
திராவிடனா இருந்து நாங்க தமிழுக்கு செய்வதை, நீங்க தமிழனா இருந்தே செய்யுங்களேன். ஒன்னும் செயலில் முடியாது உங்களால்.... வாய்ச் சொல்வீரர்.

பார்ப்பன எதிர்ப்புனு சொல்லி ஊரை ஏமாத்துறதா சொல்றீங்க... மாலை நேரத்தில், கிளப் நண்பர்களிடத்தில், திரை உலகில் பார்ப்பன ஆதிக்கம்னு புலம்பியது யார் ? பாரதிராஜா தானே.

ஆனந்த விகடனில் பேட்டி ஹைலைட்டா வரனும், உங்கள் அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்திற்கு கவரேஜ் கிடைக்கனும்னு திடீர்னு பிராமண ஆதரவு அவதாரமா ?

ஏற்கனவே கலைஞர் மீது பாய்ந்ததும், பிறகு காலில் விழுந்ததும், ரஜினியை குதறியதையும் பிறகு கொஞ்சியதையும் நாடு கண்டது தானே.

நீங்கள் நல்ல இயக்குநர் மட்டுமல்ல, சிறந்த நடிகரும் என்பதை நாடறியும், "கல்லுக்குள் ஈரம்" பார்த்தோமே !

அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்தை சிறப்பா எடுங்க. பார்த்து, நல்லாயிருந்தா பாராட்டுறோம். வேலையப் பாருங்க...

" இதுவரை தென்றலின் விரல் பிடித்து வலம் வந்த பாரதிராஜா, புயலின் கரம் பிடித்து வருகிறேன்" , அப்படின்னு கொடிப் பறக்குது படத்துக்கு நீங்கள் பேசிய முன்னோட்ட வசனம் தான் நினைவுக்கு வருகிறது.

# இப்போ எந்தக் கைய பிடிச்சிருக்கீங்க.....?

சனி, 24 நவம்பர், 2012

இனி ஒரு வீரபாண்டியார் சேலத்திற்கு கிடைப்பது அரிது


அமைச்சர் வீரபாண்டியாரை சந்திக்க காத்திருந்தோம், ஒரு திருமணத்திற்கு தலைமை ஏற்க அழைப்பதற்கு. சேலம் விருந்தினர் மாளிகை. அது எப்போதும் பரபரப்பாகவே இருக்கும், மினி அமைச்சர் அலுவலகமாக. 1996-2001 ஆட்சிக் காலம்.

மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், நெடுஞ்சாலைத் துறை பொறியாளர் அவரை சந்திக்க வருகிறார்கள். சேலம் நகரில் அழகாபுரம் பகுதியில் சாலை அகலப்படுத்தும் பணி தாமதப்படுவது தொடர்பாக, அமைச்சருடன் விவாதிக்கிறார்கள்.

எந்தெந்த இடங்களில் பிரச்சினை என்று அமைச்சர் கேட்டார். வரைப்படத்தை காட்டி விளக்கினார்கள். தனியார் இடங்களுக்கு அரசு இழப்பீடு வழங்கியாகிவிட்டது. ஒரு கோவிலும், ஒரு பள்ளி வாசலும் இடையூறாக இருக்கின்றன. சட்டம் ஒழுங்கு பிரச்சினை வரும் எனத் தயங்கினர்.

வாருங்கள் என அவர்களை அழைத்துக் கொண்டு கிளம்பினார். நேராக சம்பந்தப்பட்டவர்களை சந்தித்தார். அவர்களிடம் விளக்கி நகர வளர்ச்சிக்கு உதவிடுங்கள் எனக் கேட்டு ஒத்துழைப்பை பெற்றார்.

பெரும்பாலான அரசியல்வாதிகள் இது போன்ற பிரச்சினைகளில் ஈடுபட தயங்குவார்கள், ஓட்டு பாதிப்பு வரும் என. இது நான் நேரடியாகக் கண்ட காட்சி.

மத்திய அரசின் Super Speciality  Hospital அமைப்பதற்கு இடம் ஒரு தடையாக இருந்தது. அரசு இடம் கிடைக்கவில்லை. சேலத்தில் மத்தியக் கூட்டுறவு வங்கி வளாகத்தில் காலி இடம் இருந்ததை மாவட்ட ஆட்சியர் மூலம் கண்டறிந்தார்.
அரசின் ஒரு துறைக்கு சொந்தமான இட்த்தை, இன்னொரு துறைக்கு பெறுவது மிகச் சிரமமான காரியம். கடிதம் மூலம் கேட்டால் ஆண்டுக் கணக்காக இழுத்தடிப்பார்கள்.  

கூட்டுறவுத் துறை அமைச்சர், வருவாய்துறை அமைச்சர், மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மூவரையும் அழைத்து ஒரு சந்திப்பு நடத்தினார். கோப்புகள் அங்கேயே கையெழுத்தாகின. முதல்வர் ஒப்புதலுக்கு சென்று ஒரே நாளில் இடம் தயார்.

இது வீரபாண்டியாரால் மட்டுமே செய்யக் கூடியக் காரியம். இது பகுதி வளர்ச்சியில் தனிப்பட்ட ஆர்வம் இல்லாவிட்டால் செய்யக் கூடியதல்ல. புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம், பெரியார் பல்கலைக் கழகம் போன்றவை வீரபாண்டியார் இல்லாவிட்டால் சேலத்திற்கு கிடைத்திருக்காது.

ஆனால் மக்கள் பார்வைக்கு இவைகளை கொண்டு சென்றதை விட, பத்திரிக்கைகள் அவரைப் பற்றி நடத்திய துர்பிரச்சாரமே அதிகம். பனையளவு நல்லவைகளை மறைத்து, தினையளவு  அல்லவைகளை பூதாகரப்படுத்தின.

இன்று அவருக்கு இறுதி மரியாதை செலுத்த திரண்டவர்களால் சேலம் திணறியது. அவருடைய செயல்பாடுகள் தான் அதற்குக் காரணம்.

தலைமையிடம் செல்வாக்கு மிக்கவராகவும், அதிகாரிகளை லாகவமாகக் கையாளக்கூடியவராகவும், இதனைப் பகுதி வளர்ச்சிக்கு பயன்படுத்தும் ஆர்வம் உள்ளவராக இருந்தால் மட்டுமே இந்த அளவிற்கு சேலம் மாவட்டத்தில் வளர்ச்சிப் பணிகள் நடைபெற்றுள்ளன.


ஆயிரம் விமர்சனங்கள் செய்யலாம். இனி ஒரு வீரபாண்டியார் சேலத்திற்கு கிடைப்பது அரிது. இத்தகைய நீண்ட வரலாற்றோடு, சக்தி வாய்ந்த தலைவராக, செயல்வீரராக ஒருவர் உருவெடுப்பது கடினம்.

# விமர்சகர்கள் வரலாற்றில் நிலைப்பதில்லை. செயல்வீரர்களே நிலைக்கிறார்கள்....

ஞாயிறு, 18 நவம்பர், 2012

2G ; இன்னும் என்ன குழப்பம் ?



செல்போன் ஆப்ரேட்டர்கள் இணைந்து சிண்டிகேட் அமைத்து ஏலம் இல்லாமல் தவிர்க்கப் பார்க்கிறார்கள், அதற்கு அரசே மறைமுக உதவி என கூக்குரலிடுகின்றனர்.

இதை தான்யா அன்றைக்கே அண்ணன் ஆ.ராசா சொன்னார். சிண்டிகேட்டை உடைப்பதற்கே புதிய நிறுவனங்களுக்கு வாய்ப்பு வழங்கினேன் என்று சொன்னார்.

ஊரில் சாதாரண கருவேலமரத்தை ஏலம் விட்டால் கூட , குறைந்த விலைக்கு எடுக்க சிண்டிகேட் அமைப்பது நாட்டு வழக்கம்.

பழைய நிறுவனங்களின் கூட்டு களவானித்தனத்தை முறியடித்தார். அவர்களது கைகூலியே சி.ஏ.ஜி.

******************                     *******************

2G, 3G, 4G  என்ற குழப்பம்...

3G, 4G வந்து விட்டதால் தான் 2G ஏலத்தில் தேக்கம் என்ற செய்தி.

3G ,4G  மட்டுமல்ல அதன் அப்பன் வந்தாலும் 2G தான் அடிப்படை. 2G யே அலைபேசிக்கு அவசியமானது. மற்றவையெல்லாம் அடுத்தக் கட்ட தொழில்நுட்ப வளர்ச்சிக்கு தேவையானவை.

எனவே எந்த காலத்திற்கும் இந்த தொழில் நுட்பமே கோலோச்சும். இதனால் ஏலம் போகவில்லை என்பது அர்த்தமற்ற வாதம்.

**************************                *************************

மற்ற உரிமங்களும் ஏலம் போனால் நட்டம் ஏற்படாது...

122 உரிமத்தில் 22 உரிமமே ஏலம் போயுள்ளது. இதிலேயே 9,400 கோடி வருமானம் வந்துள்ளது, மீதி உரிமங்கள் ஏலம் போனால் கிட்டத்தட்ட 50,000 கோடி கிடைக்கும் என நிகழ்தகவு கணக்கு போடுகிறார்கள்.

எல்லாப் பகுதிக்கும் ஒரே அளவு ஏலம் போகாது. வாய்ப்பு உள்ளப் பகுதிக்கு ஏலம் போயுள்ளது. மற்றப் பகுதிகள் நிலவரம் அப்படி.

அடுத்து அண்ணன் ராசா அவர்கள் காலத்தில், வருவாய் பகிர்வு அடிப்படையில் வந்த வருமானம் 10,400 கோடி. இந்த 50,000 கோடி ஐந்து வருடத்தில் எட்டப்படும்.

அதற்கு பிறகும் வருமானம் தொடரும். அலைபேசி எண்ணிக்கை கூட கூட வருமானம் உயரும்.  

******************                       ****************************

புரிந்தே குழப்புகிற கூட்டத்திற்கு இது அத்தனையும் தெரியும்.

# சிறைப்பட்ட காலத்திற்கு பதில் சொல்லப் போகிறவன் எவன் ?

சனி, 17 நவம்பர், 2012

சாட்டை – நல்ல ஆசிரியரின் பிரம்பு...

சாட்டை – நல்ல ஆசிரியரின் பிரம்பு...

சட்டமன்ற உறுப்பினர் சினிமாவை பற்றி எழுதுவதா என பதற வேண்டாம். சமூகத்திற்கு அவசியமான கருத்துகள் கொண்ட படம் எனக் கேள்விப்பட்டு பார்க்க முயற்சித்தேன்.

ஒரு நாள் இத்திரைப்படத்தின் இயக்குநருக்கு பாராட்டுவிழா என சுவரொட்டி பார்த்தேன். இயக்குநர் அன்பழகன், எங்கள் தொகுதியின் மருவத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் என்று அறிந்து மிகுந்த மகிழ்ச்சி.

எங்கள் பகுதியிலிருந்து முதல் திரைப்பட இயக்குநர் என்பது முக்கிய செய்தி. அதிலும் முதல் படத்தில் சிறந்த இயக்குநராக பரிணமித்துள்ளார். படத்தைப் பார்க்க முனைந்தேன். தண்டையார்பேட்டையில் தான் பார்க்க முடிந்தது.

அழுத்தமானக் கருத்துகளை திருத்தமாக படமெடுத்துள்ளார். கமர்ஷியல் ஹிட் குறித்து கவலைக் கொள்ளாமல், முதல் படமாக இந்தக் கதையை எடுக்க துணிந்தமைக்கு இயக்குநர் அன்பழகனுக்கு பாராட்டுக்கள். தயாரிப்பாளர் பிரபு சாலமனையும் வாழ்த்த வேண்டும்.

படம் துவக்கத்திலேயே ஜெட் வேகத்தில் கிளம்புகிறது. மாறுதலில் வரும் ஆசிரியர் தயாளன், பள்ளியில் நுழையும் போதே, அவர் பார்வையிலேயே அரசு பள்ளியின் அவலங்களை பட்டியலிடுவது அருமை, அதுவும் சில காட்சிகளிலேயே.

சிங்கப்பெருமாளின் ஆதிக்கத்தை பள்ளி அறிவிப்பு பலகையில் வெளியிட்டுள்ள வட்டி அறிவிப்பின் மூலம் வெளிப்படுத்துவது அழுத்தமான பதிவு. இதை போன்று ஆசிரியர்கள் பலர் உள்ளனர்.

ஆசிரியர் கூட்டத்தில் நடைபெறும் அரசியல் மிகையாகத் தோன்றினாலும் அது முற்றிலும் நடைமுறை உண்மையே. சிங்கப்பெருமாளின் ஆதிக்கம் தகருகையில் ‘சாக்ஸ்பறந்து மரத்தில் தொங்குவது நல்ல இடுகுறி காட்சி.

ஆசிரியர்கள் மீது குற்றங்களாக அடுக்காமல், அதனை களைவதற்கான வழிமுறைகளை சொல்லுவது பாஸிடிவ் அப்ரோச். தயாளன் வகுப்புக்குள் நுழைவதிலிருந்தே இது துவங்குகிறது.

தான் நினைத்ததை மட்டும் திணிக்காமல், மாணவர்களிடம் ஆலோசனைக் கேட்கும் ‘ஆலோசனை பெட்டி நல்ல உத்தி. ஆலோசனைகளையும் விளக்கிக் கொண்டிராமல், cut shots-ல் சொல்வது ‘நச்’.

கிராமப்புற மாணவர்களுக்கு ஆங்கிலம் அவசியம் என்பதை நேரடியாக உணர்ந்த கிராமப்புற மாணவர், இயக்குனர் என்பதால் அனுபவப்பூர்வமானக் காட்சிகள்.



மாணவர்கள் மற்ற ஆசிரியர்களால், தண்டிக்கப்படும் போது அதனை பக்குவமாகக் கையாளக் கற்றுக் கொடுப்பது சிறப்பு, உதாரணம்- பெண்கள் கழிப்பறையை எட்டிப் பார்த்த மாணவன்.  

வறட்டு அறிவுரையாக இல்லாமல், “ உன்னை மாதிரி தான் நானும் என பழனியிடம் இயல்பாக பேசுகிறக் காட்சியில் தயா பாத்திரம் விஸ்வருபம் எடுக்கிறது.

சமுத்திரக்கனி ஆசிரியர் தயா-வாக மிகக் கச்சிதம். நவீன யுகத்தின் ஆசிரியராக மிடுக்கான உடை, அழுத்தமான உடல் மொழி, தீர்க்கமானப் பார்வை, ஈர்க்கின்ற குரல் என நம்மை பாதிக்கிறார். ஆசிரியர் தயாளனாகவே வாழ்ந்திருக்கிறார்.



அடடா, சிங்கப்பெருமாளாக தம்பிராமையா, பலே. அந்த நக்கல் பார்வையும், எகத்தாளப் பேச்சும் பிச்சு உதறுகிறார். இடைவேளை விடும் நேரம் பள்ளிபடிக்கட்டில் துள்ளி ஏறும் லாகவம். “ தெங்க் யூ என்ற ஸ்டைலான  டையலாக் டெலிவரி. படத்தின் இன்னொரு கதாநாயகன்.

கிராமத்துப் பெண் அறிவழகியாக மகிமா, சிறு முகச்சுளிப்புகள், வெடுக் பேச்சு என ஸ்கோர் செய்து, பாலியல் கொடுமைக்கு ஆளானதை சொல்லும் காட்சி, பழனியிடம் காதலை சொல்லும் காட்சிகளில் மிளிர்கிறார்.

பழனியாக பதின் வயது மாணவனின் உணர்வுகளை முரட்டுத்தனமாக பிரதிபலிக்கிறார் யுவன். தலைமை ஆசிரியராக நடிக்கும் ஜூனியர் பாலையாவுக்கு இது தான் முதல் படம் திறமையை வெளிப்படுத்த.

இசை இமான், தேவையான இடங்களில் தேவைப்பட்டதை கொடுத்திருக்கிறார். சிங்கப்பெருமாள் வரும் காட்சிகளில் நகைச்சுவையான இசை, தயாளன் காட்சிகளுக்கு எழுச்சியான இசை, காதல் காட்சிகளுக்கு மனதை வருடும் இசை என வாய்ப்பு கிடைத்த இடங்களில் ஃபோர் அடித்தவர், “ ராங்கி ராங்கி”,” சகாயனே பாடல்களில் சிக்ஸர் அடிக்கிறார். "சகாயனே சகாயனே நெஞ்சுக்குள் நீ முளைத்தாய்" என யுகபாரதி பாடல்வரிகளில் முளைத்து மலர்கிறார்.

“ போட்டியில் தோற்பது வெட்கம்தான், ஆனால் வெளியில் உட்கார்ந்து விமர்சனம் பேசுவது அதைவிட வெட்கமானது”,   ஏணிய கூறை மேல போடாதீங்க, வானத்தை நோக்கி போட்டு ஏறுங்க “ என கூர்மையான வசனங்கள்.


படத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் மனதில் நிற்கிறார்கள். அடி வாங்கினாலும் மகிழ்ச்சியாக இருக்கும் மாணவன் புளிமூட்டை முருகன், அறிவழகியின் பென்ச் தோழி, புத்தகத்தை தலைகீழாய் படிக்கும் திக்குவாய் மாணவி என அடுக்கலாம்.

சிங்கப்பெருமாளின் ஜால்ராக்களான சுரைக்காய் வாத்தியார், செவிட்டு மெஷின் வாத்தியார், சத்துணவு அமைப்பாளர், ஒவ்வொரு காட்சியிலும் முறைப்பை வெளிப்படுத்தும் பி.டி.ஆசிரியை.

ஒரிருக் காட்சிகளிலே வரும் காவல்துறை SI, அறிவழகியின் அப்பா, அம்மா, அண்ணன், மாமா என அனைவருக்கும் முத்திரை பதிக்க வாய்ப்பு. இயக்குநர் உழைப்பு தெரிகிறது.

சமுத்திரக்கனியின் மனைவியாக முன்னணி கதாநாயகியை போட்டு, பாடல் காட்சிகளை வைத்து சோதிக்காத இயக்குநருக்கு வணக்கம்.

தயாளனின் ஹீரோயிசத்தை வெளிப்படுத்த வாய்ப்புகள் இருந்தும், அடக்கி வாசித்திருப்பது சிறப்பு. சிங்கப்பெருமாளை மூடிய கதவுக்குப் பின் கையாள்வதாக காட்டியதும் பாராட்டுக்குரியது.

கிளைமாக்ஸ் காட்சிகள் சற்றே நாடகத் தன்மையாகத் தோன்றினாலும், வேறு காட்சி சித்தரிப்புகளுக்கு வழியில்லை. ஏற்றுக் கொள்ளக் கூடியதாகவே காட்சிகள் அமைந்துள்ளன.

பாடல்காட்சியில், இளையராஜா படம் தாங்கிய பாட்டுப்புத்தகம் இயக்குநரின் இசை ஆர்வத்தையும், “ குற்றம் சொல்லும்போது தேவையில்லாமல் ஏன் ஜாதிய சொல்றீங்க “ எனும் வசனம் இயக்குநரின் மனவலியையும், அடிப்பட்டு வரும் சிங்கப்பெருமாள்  கோழியின் முனகலை கேட்டு சிலுப்புவது இயக்குநரின் ரசனையையும் சொல்கிறது.

இப்படி ஒவ்வொரு காட்சியையும் விவரித்து கொண்டே செல்லலாம். அந்த அளவிற்கு ஒவ்வொரு காட்சியும் மேம்போக்காக இல்லாமல், பார்த்து பார்த்து செதுக்கப்பட்டிருக்கின்றன.

சற்று பிசகினாலும் பிரச்சார நெடி வந்துவிடக் கூடியக் கதை. ஆனால் மிக ஜாக்கிரதையாக பள்ளி பிரச்சினையை சரியான தீர்வுகளோடு, காதலையும் நகைச்சுவையையும் கலந்து, தேர்ந்த நடிப்போடும் சுருக் வசனங்களோடும் கொடுத்திருப்பது இயக்குநரின் திறமை.



ஆய்வு செய்து, பி.எச்.டி-க்கு கட்டுரை சமர்பிக்கிற அளவிற்கு ஒவ்வொரு காட்சியிலும் நுணுக்கம். நிச்சயம் இந்தக் கதை, இயக்குநரின் மனதில் நீண்ட வருடங்களாக ஊறி ஊறி, வடிவெடுத்ததாக இருக்க வேண்டும். கதை இயக்குநருக்குள் வாழ்ந்திருக்கிறது, இயக்குநர் கதைக்குள் வாழ்ந்திருக்கிறார்.

அழகிய வண்ணப் பட்டுச் சேலையை நெய்யும் லாகவத்துடன் எல்லோரையும், எல்லாவற்றையும் ஒருங்கிணைத்து படத்தை சிறப்பாக வடிவமைத்திருக்கிறார். இயக்குநரின் படம்.

இது ஆசிரியர்களுக்கான படம் மட்டுமல்ல. ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள், மொத்தத்தில் சமூகத்திறகான படம் மற்றும் பாடம்.

ஜாக்கிசான் படம் பார்த்துவிட்டு வெளியே வரும் போது, தியேட்டர் கேட்டில் ஏறி தாண்டுவது போல, ரஜினி படம் பார்த்து விட்டு வரும் போது தலைமுடியை கோதுவது போல, இந்தப் படம் முடிந்து வெளி வரும் போது, நம்மை அறியாமல் சமுத்திரக்கனியை போல தீர்க்கமானப் பார்வையோடு, நிதான நடை நடக்க வைப்பது தான் படத்தின், இயக்குநரின் வெற்றி.

# இயக்குநர் அன்பழகனுக்கு “ நல்லாசிரியர் விருது  !



2G : வானத்திற்கும் பூமிக்கும் குதித்த PG-க்களே....

2010 ஆம் ஆண்டு... சிஏஜி அறிக்கை வெளியாகியிருந்த நேரம். இணையத்தில் பொழுதுபோக்கிற்கு உலவுகிற முகமற்ற விமர்சகர்கள் முதல் இந்தியாவின் உயர்ந்த அமைப்பு என்று சொல்லிக் கொள்ளக் கூடிய உச்ச நீதிமன்றம் வரை வானத்திற்கும் பூமிக்கும் குதித்த குதி....

அந்த அறிக்கை முறைப்படி வெளியிடப்பட்டதா ? திருட்டுத் தனமாக வெளியிடப்பட்டது ஏன் ? அதில் சொல்லப்பட்டிருக்கிறக் கண
க்கிற்கு அடிப்படை என்ன ? சொல்லப்பட்ட அளவிற்கு விலை வைத்தால் மக்கள் தலையில் சுமை ஏறாதா ?

இது போன்ற கேள்விகளை சிந்திக்க யாருக்கும் நேரம் இல்லை. ஊடகங்களுக்கு டி.ஆர்.பி ரேட்டிங் மட்டுமே குறி. அதிகாரிகளுக்கும், நீதியாளர்களுக்கும் ஊடகங்களை கண்டு பயம். குற்றம் சுமத்திய சில உத்தமர்களுக்கு ஊடக வெளிச்ச வெறி.

அன்று பதில் சொன்ன எங்களை போன்றவர்களை கண்டால் ஏளனம், அம்மணமாக அலைகிறவன் ஊரில் கோவணம் கட்டியவன் பைத்தியக்காரன் என்பது போல.

அம்மணக் கும்பல் ஆவலாக எதிபார்த்த 2G ஏலம் வந்தது. பல பகுதிகளுக்கு ஏலம் எடுக்கவே யாரும் துணியவில்லை.

ஏற்கனவே இவர்கள் சொன்ன குற்றம், அண்ணன் ஆ.ராசா காலத்தில் வசூலான தொகை 10,400 கோடி. இழப்பு 1,76,000 கோடி என்றார்கள்.

இப்போது 9,400 கோடிக்கு ஏலம் போயுள்ளது. இது ஒரு முறை மட்டுமே வசூலாகிறத் தொகை.

கவனத்தில் கொள்ள வேண்டிய செய்தி : அண்ணன் ராசா காலத்தில் வந்த தொகை, ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து அரசுக்கு வந்து கொண்டே இருக்கும் வருவாய், வருமானப் பகிர்வு என்ற அடிப்படையில்.

இப்போது சொல்லுங்கள்... ஒரு முறை வருகிற வருமானம் 9400 கோடி லாபமா ? ஆண்டு தோறும் வரக்கூடிய 10,400 கோடியா ? ( இணைப்பு அதிகரிக்க, அதிகரிக்க இந்தத் தொகையும் அதிகரிக்கும் )

ஏலத்திற்கு பிறகு நாடெங்கும் சி.ஏ.ஜி வினோத் ராய் இதற்கு பதிலளிக்க வேண்டுமென்ற குரல் வலுக்க ஆரம்பித்துவிட்ட்து. அம்மணக் குமபலை காணவில்லை.

ஓய்வு பெற்ற சி.ஏ.ஜி டி.என்.சதுர்வேதி சொல்கிறார், “ அந்த அறிக்கை, அந்த நேரத்தில் பரிசோதித்து அளித்த அறிக்கை. அதற்கு இந்த நேரத்தில் , சி.ஏ.ஜி பொறுப்பேற்க முடியாது “. அடப் பாவீகளா...

நீங்கள் குற்றம் சுமத்துவீர்கள், குற்றவாளி என்பீர்கள், வருடக் கணக்கில் சிறையில் அடைப்பீர்கள், ஆனால் ஆதாரம் கேட்டால் தடுமாறுவீர்கள். பொறுப்பேற்க அவசியம் இல்லை என்பீர்கள். இது என்ன மனுநீதியா ? உனக்கு ஓர் சட்டம், எங்களுக்கு ஓர் சட்டமா ?

# இது சதுர்வேதி குரல் அல்ல, சதுர்வேதத்தின் குரல், சதிவேதத்தின் குரல். உணர்வீர்களா PG- க்களே ?





2G - Second generation ; PG - பிரபல(மாக ஆசைப்படும்) generation 

அதிமுக ஒன்றிய செயலாளர் பன்னீர்செல்வம்

அண்ணன் பன்னீர்செல்வம்....

அ.திமு.க-வின் ஆண்டிமடம் ஒன்றிய செயலாளர். 1996-லிருந்து தொடர்ந்து பதினாறு ஆண்டுகள் ஒன்றிய செயலாளர். அதே போல 1996-லிருந்து அரசியல் களத்தின் எதிர் எதிர் முனைகளில் நாங்கள் இருவரும்.

அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில், யாரும் இவரைப் போல் தொடர்ந்து ஒன்றிய செயலாளராக நீடித்ததில்லை. அ.தி.மு.கவின் தலைமையை குறித்து தெரிந்தவர்களுக்கு, இது எவ்வளவு சிரமமான காரியம் என்பது தெரியும்.

உள்ளாட்சி தேர்தல்களில் இருமுறையும், சட்டமன்ற தேர்தலில் ஒரு முறையும் வெற்றி வா
ய்ப்பை இழந்து, இந்த முறை தான் உள்ளாட்சித் தேர்தலில் ஒன்றியக்குழு உறுப்பினராக வெற்றி பெற்றார்.

ஆனால் தொடர்ந்து பணியாற்ற இயலாமல் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. சிறுநீரகம் செயலிழந்ததால் கடந்த வாரம் இயற்கை எய்திவிட்டார்.

நாற்பத்தெட்டு வயதில் மரணம் என்பது மிகுந்த வருத்தமான செய்தி. தனது உடல் நிலையை கருத்தில் கொண்டு, திருமணம் செய்து கொள்ளவில்லை, இன்னொருவர் வாழ்க்கையை பாழ்படுத்திவிடக் கூடாதே என.

எளிமையான மனிதர். தனக்கென தொண்டர்கள் பலம் கொண்டவர். பொது வாழ்விற்கு தன்னை அர்பணித்துக் கொண்டவர். அதனால் இறுதி ஊர்வலம் மக்கள் வெள்ளத்தில் மிதந்தது.

என்னிடம் கட்சி கடந்து அன்பு கொண்டவர். அரசியலை தாண்டி பகுதி பிரச்சினைகள் குறித்து கருத்துகளை பகிர்ந்து கொள்வோம். ஆனால் அரசியல் ரீதியான விமர்சனங்களும் மேடைகளில் ஒலிக்கும்.

1996ல் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் தேர்தலில், நாங்கள் இருவரும் எதிரெதிர் வேட்பாளர்கள். ஒரு நாள் இரவு பிரச்சாரம் முடிந்து, ஒரே ஹோட்டலில் உணவருந்தக் கூடிய சூழல், அங்கு எவ்வாறு தேர்தல் பணியாற்றுவது என அறிவுரைக் கூறினார்.

2006 சட்டமன்றத் தேர்தல், மீண்டும் இருவரும் களத்தில் வேட்பாளர்களாக எதிர்முனைகளில். நான் வெற்றி பெற்றாலும், வாழ்த்துக் கூறினார்.

இரங்கல் தெரிவிக்க, அவர் இல்லம் சென்ற போது, “ தலைவா, வாழ்த்துக்கள். ஆளுங்கட்சியாக தொகுதிக்கு நிறைய செய்ய முடியும். சிறப்பாக பணியாற்றுங்கள். “ என தொலைபேசியில் அவர் வாழ்த்தியதே காதில் ஒலித்துக் கொண்டிருந்தது

# மக்கள் மனதில் “ பன்னீர் “ தூவி மறைந்துவிட்டார்...

சனி, 10 நவம்பர், 2012

திராவிட இயக்கத்தின் அடுத்த தலைமுறை


அண்ணாவும் கலைஞரும் திராவிட இயக்கத்தின் இரண்டு முக்கிய அத்தியாயங்கள்என்று அந்த சிறுவன் துவங்கிய போது எல்லோருடைய கவனமும் அங்கு திரும்பியது. அடுத்த பத்து நிமிடங்கள் அனைவரும் அவன் வசம். கருத்து மழை.

பேசிய தோரணை, குரல் ஏற்ற இறக்கம், முக்கியக் கருத்துகளை சொல்லும் போது வெளிப்படுத்திய உடல் மொழி.... அருமை, அருமை. அரியலூர் அரசு மேல் நிலைப்பள்ளியின் ஒன்பதாம் வகுப்பு மாணவன் தமிழ்செல்வன். முதல் இடம் பெற்றான்.

பேச்சுப் போட்டியில் கலந்துக் கொண்டவர்களின் பேச்சுகளை கேட்டப் பொழுது, பேச்சாளர்களை மிஞ்சக் கூடிய அளவுக்கு இருந்தது. பல புதிய கருத்துகள் வெளிப்பட்டன.

கட்டுரைப் போட்டியில் கலந்துக் கொண்ட மாணவர்கள் எழுதிய கருத்துக் கோவைகளை படித்து நடுவர்கள் பாராட்டினார்கள்.

பேரறிஞர் அண்ணா அவர்களின் 104 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, தளபதி அவர்களின் வழிகாட்டுதல் படி இளைஞரணி சார்பாக பள்ளி மாணவர்களுக்கு, பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதை ஒப்புவித்தல் போட்டி  நடைபெற்றது.

தளபதி அவர்களால் நேரிடையாக தேர்வு செய்யப்பட்ட இளைஞரணியின் புதிய நிர்வாகிகள் ஏற்பாடு செய்த நிகழ்ச்சி. சிறப்பான முறையில் போட்டிகளை நடத்தினர்.

 
# திராவிட இயக்கக் கொள்கைகளை தூக்கிப் பிடிக்க அடுத்த தலைமுறையும் தயார்....

வியாழன், 8 நவம்பர், 2012

நூறாண்டு கண்ட கழக இளைஞர் !


கழகத்தில் ஒன்றிய செயலாளர் என்ற பொறுப்பு ஏற்படுத்தப் பட்ட போது, அரியலூர் மாவட்டம், செந்துறை ஒன்றியத்தின் முதல் ஒன்றிய கழக செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் திரு. மு.கந்தசாமி. தொடர்ந்து நான்கு முறை ஒ.செ-வாக பணியாற்றியவர்.

6.10.2012 அன்று நூறாவது பிறந்தநாளை கொண்டாடினார். 1913 ஆம் ஆண்டு பிறந்தவர். ஆனால் இன்றைக்கும் இளைஞராக செயல்படுபவர்...


பள்ளிப்பருவத்திலேயே அரசியல் மீது ஆர்வம் திரும்பியது. பெரியார் பாதையை ஏற்றார்.

வீட்டில் திருமணப் பேச்சுதுவங்கியதும், ஒரே ஒரு நிபந்தனை மட்டும் விதித்தார், “தனது திருமணம் சுயமரியாதை திருமணமாக இருக்க வேண்டும் .

அதன்படி 1936 ஆம் ஆண்டு, திருச்சி மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் வேதாச்சலனார் தலைமையில் சுயமரியாதை திருமணமாக நடைபெற்றது. சுயமரியாதை திருமணத்திற்கு கடும் எதிர்ப்பு நிலவிய நேரம் அது.

1943 ஆம் ஆண்டு பெரியாரை அழைத்து வந்து, பகுத்தறிவு விழிப்புணர்வு பிரச்சாரமாக 51 பேர் பங்கேற்ற “ தீமிதிப்பு “ நிகழ்ச்சியை நடத்தினார். அதில் கரகம் சுமந்து, பகுத்தறிவு பூசாரியாக தலைமையேற்றார்.

1948 ஆம் ஆண்டு சொந்தமாக வீடு கட்டிய போது, முகப்பில் தந்தைப் பெரியார் படத்தை வரைந்து, “ திராவிடநாடு திராவிடருக்கே; தமிழ் வெல்க என்ற முழக்கத்தை செதுக்கியுள்ளார்.

அரியலூர் மாவட்டம், நக்கம்பாடி என்னும் கிராமத்தில் ஊராட்சிமன்ற உறுப்பினராக தனது பொது வாழ்வை துவக்கியவர். மூன்று முறை ஊராட்சி மன்ற உறுப்பினர். தொடர்ந்து மூன்று முறை ஊராட்சி மன்ற தலைவர்.

40 ஆண்டுகளாக, இன்றும் செந்துறை அரசு மேல்நிலைப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர். அதன் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றி வருபவர்.

இன்றும் கழக நிகழ்ச்சி என்றால் ஆர்வத்தோடு பங்கேற்பவர், அது பொதுக்கூட்டம் என்றாலும், போராட்டம் என்றாலும். நேற்று உறுப்பினர் உரிமைச் சீட்டு வழங்கும் நிகழ்ச்சியில் முதல் நபராக வந்து பெற்றுக் கொண்டார்.





நூறாவது பிறந்த நாளை தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா சிலைகளுக்கு மாலை அணிவித்துக் கொண்டாடினார்.கழகத் தோழர்கள் கலந்துக் கொண்டு, அவரது கழகப் பணிக்கு நன்றி தெரிவித்தோம். வாழ்த்தினோம்.

அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து விட்டு படிகளில் இறங்கும் பொழுது, தோழர்கள் அவரைப் பார்த்து, “ சாக்கிரதை, மெதுவாக இறங்கவும் என பதட்ட்த்தோடு சொல்ல,

“ பயப்படாதீர்கள், எதற்கு பயப்படுகிறீர்கள் ? “ என்று சொல்லிவிட்டு கையை உயர்த்தி ஓங்கிய குரலில் பாட ஆரம்பித்தார், (நிஜமாகவே) .... (  படத்தை காணவும் )




# அச்சம் என்பது மடமையடா, அஞ்சாமை திராவிடர் உடமையடா...
    ஆறிலும் சாவு, நூறிலும் சாவு; தாயகம் காப்பது கடமையடா....



செவ்வாய், 6 நவம்பர், 2012

முந்திரிக்காட்டு வீரப் பெண்மணி...



இன்று கழகத் தோழர் ஒருவரது தாயார் மறைவையொட்டி படத்திறப்பு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. கழகத் தோழர் இல்ல நிகழ்ச்சி என்ற அளவிலே கலந்துக் கொண்டு படத்தை திறந்து வைத்தேன். உள்ளூர்காரர்கள் பேசும் பொழுது தான் அவரது பெருமை புரிந்தது.

அது ஆண்டிமடம் அருகில் இருக்கும் வல்லம் கிராமம். ஒரு காலத்தில் தமிழ் தேசிய இயக்கத்தின் தலைமையகம். அந்த கிராமத்தை சுற்றியுள்ள முந்திரிக் காடுகளை உள்ளூர் மக்களுக்கு பயனில்லாமல், அரசு வனத் துறை அதிகாரிகள் சுரண்டித் தின்னக் காலம்.

உள்ளூர் மக்கள் பயன் பெறும் வகையில் நடைமுறை மாற்றியமைக்கப் பட வேண்டும் என மக்கள் குரல் கொடுக்கத் துவங்கினர். அதற்கான போராட்ட்த்திற்கு இயக்கத்தினர் வியூகம் வகுத்து தந்தனர்.

காவல்துறை இதை காரணம் காட்டி ஊரில் உள்ள அனைவரையும் “ நக்சலைட்டுகள் “ என முத்திரை குத்தத் துவங்கினர். வழக்குகள் புனையப்பட்டன. அந்த ஊருக்கு மட்டும் அறிவிக்கப் படாத நெருக்கடி நிலை.

ஒரு கட்டத்தில் ஊரிலுள்ள ஆண்கள் தலைமறைவாக வேண்டிய சூழல். பெண்கள் தான் குடும்பப் பொறுப்பையும் சுமக்க வேண்டும், தலைமறைவாக இருக்கிறவர்களுக்கும் உதவ வேண்டும்,காவல்துறையையும் எதிர் கொள்ள வேண்டிய நிலை.

அந்த நேரத்தில் தலைமறைவாக இருந்த முண்ணனித் தோழர்களுக்கு, தாய் பாசத்தோடு உணவு சமைத்து கொடுத்தவர் இந்த “ சின்னப் பிள்ளை அம்மாள் .

காவல்துறைக்கு பயப்படாமல், உணவு தயாரித்து, முந்திரி காட்டுக்குள் கொண்டு போய் கொடுத்து, அவர் காட்டிய பாசத்தை, அந்தப் போராட்டத்தில் ஈடுபட்டு, இன்று மிச்சம் இருக்கின்ற தோழர்கள் பதிவு செய்தனர்.

சித்தாந்தம் புரிந்தவரல்ல, இயக்கத்தில் இருந்தவரல்ல, ஆயுதம் ஏந்தியவரல்ல, வழக்கில் சிக்கியவரல்ல ஆனால் அவர் நூறு சதவீதம் “ போராளி “. உரிமைக்கு போராடியவர்களுக்கு உயிர் கொடுத்த போராளி !

அவரது மகன் இயக்கப் பணியாற்றியவர், இன்று கழகத் தோழர்.


# “ சின்னப் பிள்ளை அம்மாள் படத்தை திறக்கக் கிடைத்த வாய்ப்பிற்கு பெருமைப் பட்டேன். இந்த மண்ணில் பிறந்ததற்கு கர்வப்பட்டேன்.

ஞாயிறு, 4 நவம்பர், 2012

சாண்டி புயலும், நீலம் புயலும்.....


சாண்டிப் புயல் அமெரிக்காவை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இன்னொருபுறம் அதிபர் தேர்தலுக்கான உச்சக் கட்ட பிரச்சாரம். தற்போதைய அதிபர் ஒபாமா உச்சக் கட்ட தேர்தல் பிரச்சாரத்தில்...

தனது தேர்தல் பிரச்சாரத்தை ஒத்தி வைத்து விட்டு, சாண்டி புயலை எதிர் கொள்ள அமெரிக்க மக்களை தயார் செய்யும் பணியில் இறங்குகிறார் ஒபாமா. புயல் முடிந்தப் பின்னும் மீட்புப் பணிகளில் தீவிரம் காட்டுகிறார்.

மீட்புப் பணிகளை முடித்து , நேற்று சனிக்கிழமை தான் பிரச்சாரத்திற்கு திரும்பியுள்ளார்....

********     ****** *****

நீலம் புயல் சென்னையை நெருங்குகிறது...

சென்னையில் சட்டமன்றத்தில் தமிழக முதல்வருக்கு லட்சார்ச்சனை. அம்மா மனம் மகிழ்ந்து, உளம் நெகிழ்ந்து, முகம் மலர்ந்து ரசித்துக் கொண்டிருக்கிறார். மின் வெட்டுக்கு கடந்த திமுக அரசே காரணம் என ருத்ர தாண்டவம் ஆடுகிறார்.

புயலைத் தொடர்ந்து புதியதலைமுறை ஓடி கொண்டிருக்கிறது. புரட்சித் தலைவி ஓய்வெடுக்க சென்று விடுகிறார்.

புயல் அடித்து ஓய்ந்து, இரண்டு நாள் கழித்து, புரட்சியின் நிதி ஓ.பி.எஸ் உரிய நேரத்தில், உரிய தொகை நிவாரணத்திற்கு ஒதுக்கப்படும் என மின்னல் வேகத்தில் அறிவித்திருக்கிறார்.

 **********   ************************

2011 டிசம்பர், தானே புயல்....

கடலூர் மாவட்டமே இயற்கையின் கோரத் தாண்டவத்தில் சிக்கி சின்னாபின்னமாகி கிடக்கிறது. முதல்வர் ஜெயலலிதா, சேதத்தை பார்வையிட செல்கிறார். ஹெலிகாப்டரில், நேரடியாக கடலூர் செல்கிறார். 5 நிமிடம் மட்டுமே நிவாரணம் வழங்கிவிட்டு கிளம்புகிறார்.

தலைவர் கலைஞர் கார் மூலம், சென்னையிலிருந்து திருவாரூர் வரை, கடலூர் மாவட்டம் வழியாக பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு, விவசாயிகளை சந்தித்து ஆறுதல் கூறுகிறார்.

கடலூர் மக்கள் ஒன்பது தொகுதிகளையும் அம்மா கூட்டணிக்கு வாரி வழங்கி ஆறு மாதங்களே ஆகியிருந்த நேரம்.
******** ******************

கடந்த திமுக ஆட்சி...

கடும் மழையால், வெள்ளம் பெருக்கெடுத்து, செங்குன்றம் புழல் ஏரி நிரம்புகிறது. கரையின் ஒரு இடத்தில் நீர் கசிவு ஏற்பட்டு, உடைப்பு ஏற்படும் அபாயம். நள்ளிரவு நேரம் , முதல்வர் இல்லத்திற்கு தகவல் வருகிறது. முதல்வருக்கு தெரிவிக்கப் படுகிறது.

பொதுப்பணி துறையின் அமைச்சர் துரைமுருகனின் மாமனார் இறந்து துக்க நிகழ்ச்சியில் இருப்பதை அறிந்து, அவரை வரவேண்டாம் என்று சொல்லிவிட்டு முதலவர் தலைமைச் செயலகம் நோக்கி விரைகிறார். அதிகாலை 2.30 மணி.

அதிகாரிகளுடன் ஆலோசித்துவிட்டு புழல் ஏரிக்கு செல்கிறார். மணி 4.00. முதல்வர் வருகையை அறிந்த அதிகாரிகள் அங்கே குவிகின்றனர். உடைப்பை அடைக்கும் பணி தீவிரப் படுத்தப் படுகிறது.

அந்த நேரத்தில் சீர் செய்யப் பட்டிருக்காவிட்டால், சென்னையில் பெருத்த நாசம் ஏற்பட்டிருக்கும். சென்னை காப்பற்றப்பட்டது. உடைப்பு முழுவதும் அடைத்து முடித்த பிறகு, காலை தான் வீடு திரும்புகிறார் கலைஞர்.

# நீங்கள் தான் நீதிபதி. நீங்களே ஒப்பிட்டுக் கொள்ளுங்கள்....

சனி, 3 நவம்பர், 2012

2012 - 2013 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் எனது உரை


மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே ,
                                        இந்த அவையிலே நான் பேசுவதற்கு காரணமாக இருந்த-நான் மட்டுமல்ல, உங்களை உள்ளடக்கிய பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்கள், சமூகத்தில் தலை நிமிர்ந்து நடப்பதற்கும், கல்வி கற்பதற்கும், இந்த அவைக்கு வருவதற்கும் காரணமாக இருந்த-அடிப்படையாக இருந்த தந்தை பெரியார் அவர்களை நினைவு கூறுவது காலத்தின் கட்டாயம்.

காரணம் இன்றைக்கு ...(அமைச்சர்கள் குறுக்கீடு)

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,
எதை, எதைப் பேசவேண்டும், எதை எதை பேசக்கூடாது என்று நீங்கள் முன்னாலேயே முன்னுதாரணத்தைக் கொடுத்துவிட்டால்... (குறுக்கீடுகள் )

திராவிடத்தால் பயன்பெற்று வாழ்வுபெற்று முகவரி பெற்றவர்கள் இன்றைக்கு திராவிடத்தை மறந்தாலும், அந்தத் திராவிடத்தின் தந்தை இனப் பகலவன் பெரியாரை நினைவு கூறுவது எங்கள் கடமை.
அவர்தம் வழி தோன்றலாய் போராடும்.... (தொடர்ந்து குறுக்கீடுகள்)

பெரியாரைப் பற்றி பேசுகிறேன். நான் தந்தை பெரியார் அவர்களைப் பற்றி பேசக் கூடாதா ?

புறநானூற்று வரிகளாம்
 " என்றும் உள்ள இந்நகர் கலியுகத்தில்
இலங்குவேற் கரிகாற் பெருவளத்தோன்
வன்திறற் புலி  இமயமால் வரை மேல்
வைக்க ஏகுவோன் தனக்கிதன் வளமை "
என்ற வரிகளுக்கேற்ப விளங்குகின்ற எங்கள் தலைவர் முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் அவர்களை வணங்குகிறேன். (மேசையைத் தட்டும் ஒலி)

ஒல்காப் புகழ் வள்ளுவர் வாக்கிக்கேற்ப
  " வீறு எய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன் கண்
    ஊறு எய்தி உள்ளப்படும் "
என்ற குறளுக்கேற்ப ' செயல்திறனால் பெருமைப் பெற்று, உயர்ந்த வினைத் திட்பத்தால் நாட்டரசால் மதிக்கப்படுவான் என்கின்ற வாக்கியத்திற்கேற்ப தம் செயல் திறத்தால், திறமையால், தியாகத்தால் படிப்படியாக உயர்ந்த நிலைக்கு எங்கள் தளபதி வந்தாலும், தொடர்ந்து பணியாற்றுகின்ற அவருடைய பணியை இறைக்கு அமெரிக்க நாட்டு, கெண்டகி மாநில அரசு மதித்திருக்கிறது. கெண்டகி கர்னல் விருது வழங்கியிருக்கிறது. அவரை வணங்குகிறேன்.

தலைவர் கலைஞர் வழங்கிய திட்டங்கள் ;
எங்களது அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள் ஒரு காலத்தில் வறண்ட மாவட்டங்கள். அவற்றை முன்னேற்றப் பாதையில் அடிபோட வைத்தவர் எங்கள் தலைவர் கலைஞர். அரியலூருக்கென்று தனி மாவட்டம், மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம், குன்னத்திலே அரசு மருத்துவக் கல்லூரி, அரியலூரிலே அரசு பொறியியல் கல்லூரி, பெரம்பலூரில் அரசு கலைக் கல்லூரி, பெரம்பலூரிலே பாலிடெக்னிக், அரசு ஐ.டி.ஐ.கள் இரண்டு என்ற கல்விக்கான நிறுவனங்களையெல்லாம் வழங்கி, அதே போல மதனத்தூர்- நீலத்தநல்லூர் பாலத்தை எங்களுக்கு வழங்கி, பருத்திக்கு ஒரு ஆராய்ச்சி நிலையம். இப்படி வறண்ட மாவட்டத்தை உயர்த்துவதற்கு தலைவர் கலைஞர் அவர்கள், அவர்களுடைய ஆட்சிக் காலத்தில் வழங்கிய திட்டங்களுக்கு இந்த நேரத்திலே நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன்.
(உறுப்பினர் எஸ்.எஸ்.சிவசங்கரை பேசவிடாமல் அமைச்சர்கள் குறுக்கீடுகள்).

நன்றியை மறக்கிறவர்கள் நாங்கள் கிடையாது. வரலாற்றை மறைக்கிறவர்கள் நாங்கள் கிடையாது. இந்தத் திட்டங்களையெல்லாம் தலைவர் கலைஞர் அவர்கள் எங்களுக்கு தருவதற்கு உற்ற உறுதுணையாக இருந்து எங்கள் மாவட்டம் முன்னேறுவதற்கு காரணமாக இருந்த முன்னாள் மத்திய அமைச்சர் அண்ணன் ஆ.இராசா அவர்களுக்கும் இந்த நேரத்தில் என்னுடைய வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த அவையிலே இரண்டாம் முறையாக பணியாற்ற வாக்களித்து. வெற்றி பெற செய்த குன்னம் தொகுதி எம் மக்களுக்கு எனது பணிவாக நன்றியை இந்த நேரத்திலே சமர்ப்பிக்கிறேன். 

கலைஞர் ஆட்சியின் நிதி நிலை அறிக்கை, ஒரு நிதிநிலை அறிக்கை எப்படியிருக்க வேண்டும் என்பதற்கு உதாரணம், 2006ஆம் ஆண்டு முதல் 2011-ஆம் ஆண்டு வரை தலைவர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்த காலத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நிதிநிலை அறிக்கைகள். அந்த அறிக்கைகளிலே புதிய அறிவிப்புகள் இருக்கும் (அமைச்சர்கள் தொடர்ந்து குறுக்கீடு செய்தனர்)
*  ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சிறந்த திட்டங்கள் இருக்கும்.
* எதிர்கால தலைமுறைக்கான தொலை நோக்குத் திட்டங்கள் இருக்கும்.
* அந்தந்த ஆண்டுக்குத் தேவையான வளர்ச்சிப் பணிகள் இருக்கும்.
* புதிய கல்லூரி பற்றிய அறிவிப்புகள் இருக்கும்.
* பழைய திட்டங்களை விரிவு படுத்துகின்ற அறிவிப்புகள் இருக்கும்.
அப்படி அறிவிக்கின்ற திட்டங்களையெல்லாம் செயல்படுத்துகின்ற திறன் இருக்கும்.

அப்படி அறிவிக்கப்பட்ட திட்டங்கள் தான் தமிழகத்திலே இருந்த குடிசை வீடுகளையெல்லாம் கான்கிரீட் வீடுகளாக மாற்றுகின்ற கலைஞர் வீடு வழங்கும் திட்டம். (மேசையை தட்டும் ஒலி) அந்தத் திட்டத்திலே ஆறு இலட்சம் வீடுகள் கட்டப்பட்டிருக்கின்றன... (குறுக்கீடுகள் )

எங்களது தளபதி அவர்கள் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த போது, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டடம் செயல்படுத்தப்பட்டு, தமிழகத்தில் இருக்கின்ற அத்தனை ஊராட்சிகளுக்கும் நிதி வழங்கப்பட்டு, அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டன.
இதே போன்றுதான் உயர் கல்வித் துறையாக இருந்தாலும், விவசாயத்துறையாக இருந்தாலும், மக்கள் நல்வாழ்வுத் துறையாக இருந்தாலும், பல்வேறு திட்டங்கள் அந்த நிதிநிலை அறிக்கையிலே வழங்கப்பட்டது.

அந்த நிதிநிலை அறிக்கைகளை இன்றை நிதி அமைச்சர் அவர்கள் மீண்டும் ஒரு முறை புரட்டிப் பார்த்தால் நன்றாக இருக்கும் என்பது தான் எங்களுடைய கோரிக்கை. ( குறுக்கீடு )

அது நாங்கள் கொண்டு வந்த திட்டம், எங்களுடைய அண்ணன் தங்கம் தென்னரசு அவர்களுடைய தொகுதிக்கு வழங்கப்பட்ட நிதி அது...(குறுக்கீடு).

குன்னத்திலே கொடுக்கப்பட்ட மருத்துவக் கல்லூரியை நீக்கி, 100 கோடி ரூபாய்க்கு டெண்டர் விட்டதை நிறுத்தியிருக்கின்றீர்கள்....(குறுக்கீடுகள்).

குற்றம் சொன்னால் மட்டும்... (அமைச்சர்கள் குறுக்கீடு).

மார்க்சும், ஏங்கெல்சும் இங்கிலாந்தில் கூடி கம்யூனிஸ்ட் கட்சிக்கான அறிக்கையை தயாரித்தார்கள். அதுதான் Manifesto of communism . ஆனால் அந்த அறிக்கை உயிர் பெற்றது 70 ஆண்டுகளுக்குப் பிறகு, ரஷ்யாவிலே கம்யூனிஸ்டு ஆட்சிக்கு வந்த பிறகுதான்.
ஆனால் தலைவர் கலைஞர் அவர்கள் 2006-லே கொடுத்த தேர்தல் அறிக்கைதான் மற்ற கட்சிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, அதை ஒட்டிய அறிவிப்புகள் வழங்கப்பட்டன. அதே போன்றுதான், தலைவர் கலைஞர் அவர்கள் தமிழகத்திற்குக் கொடுத்த திட்டங்களை விரிவுபடுத்துவதும்.
அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்திற்கு "தாய்" என்று பெயர் மாற்றுவதுமாக. ஆனால் தலைவர் கலைஞர் அவர்கள்தான் இந்த திட்டத்திற்கெல்லாம் "தாயாக" இருக்கிறார். எனவே அவரை மறந்து விடக்கூடாது.

இந்த நிதிநிலை அறிக்கையிலே..... - ( குறுக்கீடு )
சரி உங்களுக்குப் பிடித்த மாதிரி பேசுகிறேன். பணிவின் உருவாய், கனிவின் மறுவாய், அன்பின் இருப்பாய், பண்பின் உறுப்பாய், விசுவாசத்தின் வடிவாய் விளங்கும், தலைவர் கலைஞர் அவர்களால் பச்சைத் தமிழர் என்று அழைக்கப்பட்ட அன்பிற்குரிய அண்ணன் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள்-பிடித்திருக்கிறதா? (சிரிப்பு)
தனது தலைமையிடம் காட்டும் விசுவாசத்தை.... (குறுக்கீடு).... (சிரிப்பு).

( ஓ.பி.எஸ் விளக்கம் ) 
 இல்லை நான் தவறாக சொல்லவில்லை. பணிவின் உருவாய், கனிவின் மறுவாய், அன்பின் இருப்பாய் - அப்படித்தான் சொன்னேன். அதுபோல காட்டுகின்ற விசுவாசத்தை மக்களுக்கும் காட்ட வேண்டும் என்றுதான் மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

அதன்படி அவர் போட்டிருக்கின்ற அந்த நிதிநிலை அறிக்கை வெற்றிக்களிப்பிலே ஒரு வெண் குதிரையாக வரும் என்று மக்கள் எதிர்பார்த்தார்கள்.
நாங்கள்கூட எதிர்பார்த்தோம்,  கடந்த முறை போட்டதைப் போன்று வெள்ளை நிறத்தைப் பூசிய ஒரு குதிரையாகவாவது வரும் என்று பார்த்தோம். அப்படியும் இல்லை. இப்படியும் இல்லை.
தறிகெட்ட வரிக் குதிரையாக இந்த நிதி நிலை அறிக்கை இன்று ஓடிக் கொண்டிருக்கிறது.

நாட்டு மக்கள் இந்த நிதிநிலை அறிக்கையைப் பார்த்து வருத்தத்தில் தான் இருக்கிறார்கள். எனவே அந்த நிதிநிலை அறிக்கையிலே இருக்கின்ற குற்றத்ததைச் சொன்னால் உடனே தவறு என்று சொல்கிறீர்கள். இந்த நிதிநிலை அறிக்கையிலே மட்டுமல்ல.... (குறுக்கீடு).

உங்கள் முதலமைச்சர் சொன்ன கருத்துக்கு எங்கள் உறுப்பினர்கள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று சொன்னதற்கு, பேசுகின்ற உறுப்பினர் சொல்லட்டும் என்று சொன்னீர்கள். அந்த விளக்கத்தினைச் சொல்லவாவது எங்களை விடுங்கள்."
இவ்வாறு உறுப்பினர் எஸ்.எஸ். சிவசங்கர் பேசினார். தொடர்ந்து அவர் பேசும்போது அதிமுக அமைச்சர்கள் எழுந்து பேசவிடாமல் குறிக்கீடு செய்து கொண்டு இருந்தனர். பேரவைத் தலைவரும் உறுப்பினர் சிவசங்கருக்கு பேச அனுமதி மறுத்ததால் தமது பேச்சினை முழுமையாக நிறைவு செய்ய முடியவில்லை.

( நன்றி - முரசொலி )
20 நிமிடங்கள் எனக்கு ஒதுக்கப்பட்ட நேரம். 8 நிமிடம் தான் நான் பேச அனுமதிக்கப்பட்டேன். 
கூடுதலாக 16 நிமிடங்களை குறுக்கிடவும், எனக்கு பதில் அளிக்கவும் அமைச்சர்கள் ஆக்கிரமித்துக் கொண்டனர்.  
எங்கெங்கு குறுக்கீடு இருக்கிறதோ அங்கெல்லாம் கற்பனை செய்து கொள்ளுங்கள்.....

வெள்ளி, 2 நவம்பர், 2012

வானளாவிய அதிகாரம்...

01.11.2012 அன்று சட்டமன்றத்தில் கேள்வி நேரம் முடிந்தவுடன், அனைத்து எதிர்கட்சிகளும் அவசர பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் குறித்து விவாதிக்க குரல் எழுப்பினர்.


தி.மு.க சார்பாக சேது சமுத்திரத்திட்டம் குறித்து விவாதிக்கக் கோரப்பட்டது. ஆனால் சபா அனுமதிக்க மறுத்தார். இது தென் தமிழ்நாட்டின் வாழ்வாதாரப் பிரச்சினை, துவக்கப்பட்டு, முடிவுறும் நிலையில் தடைபோடுவது தமிழக மக்களுக்கு செய்யும் துரோகம் என்று குரல் எழுப்பினார் அண்ணன் துரைமுருகன்.


சபா தொடர்ந்து மறுக்க தி.மு.க உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்றோம், இணைந்து குரல் கொடுத்தோம். அண்ணன் துரைமுருகனை பார்த்து சபா உட்காருங்கள், உட்காருங்கள் என்றார்.


சபாநாயகர் எழுந்து நின்று அனைவரும் உட்காருங்கள் என்று கூறினார். சபாநாயகரின் வார்த்தையை மதித்து அண்ணன் துரைமுருகன் அமர்ந்தார்.


ஆனால், நேற்று போலவே அனுமதி வழங்க மனம் இன்றி சபா இருப்பது தெரிந்து, மற்ற கழக உறுப்பினர்கள் அனைவரும் சபா இருக்கையை நோக்கி முன்னேறி குரல் கொடுத்தோம்.


அனுமதி வழங்குவதும், வழங்காததும் எனது உரிமை என்றார் சபாநாயகர். “ எதையுமே அனுமதிக்க முடியாது என்று நீங்கள் சொல்வீர்கள், அதை ஒப்புக் கொள்ள முடியாது. இங்கே பேசுவது சட்டமன்ற உறுப்பினர்களுக்கு உரிமை. எங்கள் உரிமை காக்கப் பட வேண்டும்” என சபாநாயகரை பார்த்து நான் கூற, அவர் காதில் வாங்கவே மறுத்தார்.


சபைக் காவலர்களை அழைத்து எங்களை வெளியேற்ற உத்தரவிட்டார். முழக்கம் எழுப்பியவாறே வெளியேறினோம்.


விவாதிக்க அனுமதித்தால், அ.தி.மு.க தேர்தல் அறிக்கையில் “சேது சமுத்திர திட்ட்த்தை செயல்படுத்துவோம் , மணல் திட்டுகளை அகற்றுவோம்” என்று உறுதி அளித்திருந்தது வெளிப்படுத்தப்படும், குற்றச்சாட்டுகளுக்கு ஜெ-வால், பதில் அளிக்க இயலாத சூழல் ஏற்படும் என்பதே சபா-வின் மறுப்புக்கு காரணம்.


இரண்டு நாட்கள் தி.மு.க உறுப்பினர்களை காவலர்களை கொண்டு வெளியேற்றி, அதையே காரணமாகக் கூறி மூன்றாவது நாளும் கூட்ட்த்தில் கலந்துக் கொள்ளக் கூடாது என உத்தரவிட்டிருக்கிறார் சபா.


ஒரு பேட்டி அளித்ததை சபையின் உரிமையை பாதிக்கிறது எனக் கூறி தே.மு.தி.க உறுப்பினர்கள் மீது உரிமைப்பிரச்சினை கொண்டு வந்திருக்கிறார் சபா.


சபாநாயகர் பதவியேற்ற முதல் வாரத்திலேயே, தனது முழு அதிகாரத்தையும் பிரயோகப்படுத்த முயல்கிறார். அவர் என்ன செய்வார் பாவம், கைப்பாவைதானே... ஆட்சி அதிகாரம் கையிலிருக்கிற காரணத்தால், எல்லோரையும் கேவலப்படுத்தி மகிழ்கிறார்கள்.




# அதிகாரம் வானளாவி செல்லலாம். ஆனால் புவியீர்ப்பு (மக்கள்) விசையும் உண்டு...