பிரபலமான இடுகைகள்

திங்கள், 16 பிப்ரவரி, 2015

திருவரங்கம் என்றால் வித்தியாசம் தான்...

திருவரங்கம் வித்தியாசமானது. அது ஒரு தீவு. சுற்றி இருக்கிற நிலப்பகுதி போல திருவரங்கம் இருக்காது. அது முற்றிலும் வித்தியாசமானது. நிலப்பரப்பு மட்டுமல்ல, ஊரே சற்று வித்தியாசம் தான்.

      

தீவு என்றாலும் வித்தியாசம் தான். தீவு வழக்கமாக கடலுக்கு நடுவில் இருக்கும். இந்தத் திருவரங்கத் தீவு கடலுக்கு நடுவில் அல்ல, ஆற்றுக்கு நடுவில் இருப்பது. கர்நாடகத்தில் உருவாகும், காவிரி நீண்ட தொலைவு பயணம் செய்து திருச்சியை அடைகிறது.

அங்கு பிளவுபட்டு காவிரி, கொள்ளிடம் என இரண்டு நீரோட்டங்களாக பாய்கிறது. இவை இரண்டிற்கும் இடைப்பட்டப் பகுதி தான், திருவரங்கத் தீவு.

இந்தத் திருவரங்கத் தீவில் எழுந்தருளியிருப்பவர், மன்னிக்க பள்ளி கொண்டருளியிருப்பவர் தான் ஸ்ரீரங்கநாதர். வழக்கமா, எல்லா இடத்திலும் எழுந்தருளி இருக்கும் கடவுள், இங்கு மாத்திரம் பள்ளிக் கொண்டிருக்கிறார்.

இப்படி ஸ்ரீரங்கநாதரின் இந்த வரலாறே இவ்வளவு வித்தியாசம்னா, ஸ்ரீரங்கத்தின் வரலாற்று வீரியத்தை அளவிட்டுக் கொள்ளலாம். இப்படி ஒன்றிலும் ஒட்டாமல் இருப்பது தான் திருவரங்கம்.

வழக்கமாக சோழர்கள் சிவனுக்கு பெரிய, பெரிய ஆலயங்களை எழுப்பிய நிலையில், திருவரங்கத்தில் மாத்திரம் தர்மவரச் சோழனால் விஷ்ணுவிற்கு இந்தப் பெரிய ஆலயம் எடுக்கப்பட்டது. இதிலும் வித்தியாசம் தான்.

மற்ற ஆலயங்களில், கோபுரங்கள் ஆலயங்களோடு கட்டப்பட்டவை. இங்கு ராஜ கோபுரத்தை ஆலயம் கட்டிய பல் நூறு ஆண்டுகளுக்குப் பிறகு தான் எழுப்பினார்கள். இப்படியும் வித்தியாசம் தான்.

அதே போல இந்த ரங்கநாதரின் வரலாறும் வித்தியாசமானது. ராமன் வீபிஷணனுக்கு இந்த விஷ்ணுவின் சிலையை பரிசளிக்கிறான். விபீஷணன் இந்த சிலையுடன் இலங்கை நோக்கி பயணிக்கிறான். ஸ்ரீரங்கம் வரும் போது, காவிரிக்கரையில் ரங்கநாதருக்கு ‘உற்சவம்’ செய்ய வேண்டி வருகிறது.

உற்சவம் முடிந்து ரங்கநாதர் நகர மறுத்து விடுகிறார். அதனால் ரங்கநாதருக்கு அங்கேயே ஆலயம் எடுப்பிக்கப்பட்டது. இப்படியும் வித்தியாசமான முறையில் அமைந்தது தான் இந்த ஆலயம்.

இந்தப் பெருமாள் ரங்கநாதர் தெற்கு நோக்கி இருப்பாராம். மற்றோர் வடக்கு நோக்கி இருப்பராம்.

   

எனவே திருவரங்க முடிவும் வித்தியாசமாகத் தான் அமையும், அமைந்திருக்கிறது. ரங்கநாதர் 2000 அழுத்தத்தால் நகர மறுக்கிறார். கர்ப்பகிரக இருட்டில் இருக்கிறார். திருவரங்கத்தான் அங்கேயே இருக்கட்டும்.

# எஞ்சியத் தமிழகம் வேறு திசை நோக்கி தான், வெளிச்சத்தை நோக்கி !

சனி, 14 பிப்ரவரி, 2015

தெளித்தாற் போல் தேன் வரும்

 தும்பை செடி முன்பெல்லாம் எங்கும் காணப்படும். வயல்வெளிகளில், சாலை ஓரங்களில் என நீக்கமற நிறைந்திருக்கும். இப்போது எங்கள் பகுதியில் அரிதாகி விட்டது.

      

திருவரங்கம் இடைத்தேர்தல் போது, மணப்பாறை பகுதியில் தும்பையை கண்ட போது மிகவும் மகிழ்ச்சியாகி விட்டது. பால்ய நினைவுகள் வந்து விட்டன. ஓடி சென்று பறித்தேன்.

இதற்கே மணப்பாறை பகுதி கடும் வறட்சியான பகுதி. நிலத்தடி நீர் குறைவு. இதனால் விவசாயம் செய்யப்படும் வயல்கள் மிகக்குறைவு. பெரும்பாலும் கூலி வேலைக்கு நகரத்திற்கு செல்கிறார்கள்.

பெரும் நிலப்பரப்பு காய்ந்தே கிடக்கின்றன. ஒரு போகம் விவசாயம், வானம் பொய்க்காவிட்டால் இருக்கும். இப்படிப்பட்ட பகுதியில் எங்கு பார்த்தாலும் கருவேலம் மரம் தழைத்திருக்கிறது.

அதே போல மற்ற பகுதிகளில் அருகிவிட்ட கிளுவை முள், சூறை செடி, சப்பாத்திக் கள்ளி, எருக்கை போன்றவை இங்கு இன்னும் இருக்கின்றன. பூச்சி மருந்துகள் இங்கு பயன்படுத்தப்படாததால், இவை தப்பியிருக்கின்றன போலும்.

அதே போல் புற்கள் நன்றாக வளர்ந்திருக்கின்றன. இதனால் தான் இந்தப் பகுதியில் பால்வளம் மிகுந்திருக்கிறது என நினைக்கிறேன். மொத்தத்தில் இயற்கை சீரழிக்கப்படாமல் இருக்கிறது.

மீண்டும் தும்பைக்கு போவோம். தும்பை சிறு வயது தோழன். அப்போதைய பொழுதுபோக்குகளில் ஒன்று பட்டாம்பூச்சி, தட்டான் பிடிப்பது. அவற்றை பிடிப்பதற்கு தும்பை செடியை தான் பிடுங்கிக் கொண்டு துரத்துவோம்.

அப்புறம் தும்பைப் பூவில் இருக்கும் தேன், சிறு பிராயத்தில் மனம் கவர்ந்தது. அரை அடி உயரத்திற்கு தும்பை செடி சுற்றி தழைத்து வளர்ந்திருக்கும். அதன் மேல் வெண் நிற போர்வையை போர்த்தது போன்று பூ பூத்திருக்கும். வெண்மைக்கு சான்று கொடுக்க, “தும்பைப் பூ” போல என்ற வாக்கியம் பயன்படுத்தப்படும்.

பச்சை நிறத்தில் கோள வடிவில் இருக்கும் அமைப்பில் செருகியது போல தும்பை பூ இருக்கும். பூ இறகு போன்ற வடிவில் இருக்கும். அதை மெல்ல உருவி, அடிப் பாகத்தை வாயில் வைத்து உறிஞ்சினால், லேசாக நாக்கு நுனியில் தெளித்தாற் போல் தேன் வரும்.

       

மிகச் சிறு அளவு தான். ஆனால் அந்தத் தேனை ருசிப்பது ஒரு தனி ரசனை அந்த வயதில். அந்த ஞாபகத்தில் அன்றும் தும்பைத் தேனை ருசித்தேன்.

# தும்பை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலே !

      

வெள்ளி, 13 பிப்ரவரி, 2015

கையில கறை, தொகுதிக்கும்...

“கையில் மை வச்சாச்சி, இனி நிம்மதி திரும்பிடும் திருவரங்க மக்கள் மைண்ட் வாய்ஸ்.

       

திருவரங்க தேர்தல் திருவிழா இன்று மாலையோடு நிறைவுற்றது. இன்று தொகுதி மக்கள் நிம்மதியாக உறங்கப் போவார்கள்.

தொகுதி மக்கள் கடந்த ஒரு மாதமாய் காலையில் கண் விழித்ததே அரசியல்வாதிகள் முகத்தில் தான். வாக்கு கேட்டு வந்தோரின் குரல் காதில் ரீங்கரிக்கத் தான் இரவில் தூங்கப் போனார்கள்.

ஒரு கட்டத்தில் அவர்கள் உதட்டில் புன்னகை உறைந்தே போயிற்று. யாரைப் பார்த்தாலும் இன்முகம் காட்டி, “உங்களுக்கு தான் ஓட்டுஎன சொல்ல பழகிப் போனார்கள்.

ஒரு காலத்தில் அரசியல்வாதிகள் தான் இப்படி சொல்லிப் பழகியவர்கள் என்பது பொதுப் பார்வை. இப்போது மக்கள் இப்படி சொல்லிப் பழகி, தேர்ந்த அரசியல்வாதி ஆகிப் போனார்கள்.

அவர்களுக்கும் வேறு வழியில்லை. இவர்கள் ஆளுங்கட்சி, ஊருக்கும் நமக்கும் நல்லது நடக்க வேண்டும். அவர்கள் எதிர்கட்சி தான், ஆனால் அடுத்தத் தேர்தல் என்னாகுமோ ? அதனால் யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம் என்றாகிப் போனார்கள்.

இன்றைக்கு ஓட்டும் போட்டாச்சு. நாளை முதல் இயல்பு வாழ்க்கை திரும்பிடும். ஊருக்குள் திரிந்துக் கொண்டிருந்த கார்கள் நாளை முதல் இருக்காது.

தெரு முக்கில் கொட்டகை போட்டு, அலுவலகத்தில் உட்கார்ந்திருந்த கூட்டம் கிளம்பியிருக்கும். காலை டீ குடிக்கப் போனால், டீ தீர்ந்து போச்சி என்ற குரல் நாளை முதல் கேட்காது.

சாலையோரம் குவிந்துக் கொண்டிருந்த குவார்ட்டர் பாட்டில்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்தே போகும். முடிச்சு முடிச்சாய் கிடந்த, பரோட்டாவுக்கு சால்னா கட்டிய பாலித்தீன் பைகள் அராஜகம் ஒழியும்.

கதற கதற மைக்கை அலற விட்டு டர், புர்ரென்று சுற்றி வந்த ஆட்டோக்கள் நகருக்கு திரும்பி விடும். கொத்து கொத்தாய் மக்களை அள்ளித்  திரிந்த குட்டி யானைகள், மூட்டை சுமக்க போய் விடும்.

        

மைக்கும், கேமராவுமாய் சுற்றி வந்த ஊடகங்கள் அடுத்த “அவசர செய்திக்கு பறந்து விடும். இரவு பகல் இல்லாமல் உலா வந்த காவல்துறை மாமூல் வாழ்க்கைக்கு திரும்பி விடும்.

இனி காலை நேர வழக்கமான பணிகளுக்கு தைரியமாய் செல்லலாம். நிம்மதியாய் நடந்து ஊரை அளக்கலாம். பொருட்கள் எல்லாம் வழக்கமான விலைக்கு திரும்பி விடும். குழந்தைகள் விளையாட்டுக்கு திரும்புவர். அமைதியான இரவு நிலைக்கும்.

      

திருவரங்கத்து ரங்கநாதரே இன்று அமைதியாய் பள்ளி கொள்வார்.

“ஆரம்பத்தில் இந்த தேர்தல் திருவிழா வேடிக்கையாய் இருந்திருக்கும். ஒரு கட்டத்தில் வெறுப்பே மிகுந்திருக்கும். அதனால் இனி இது நடக்கக் கூடாது என்ற மன ஓட்டமே இப்போது மக்களிடத்தில் மிஞ்சியிருக்கும்.

இப்படித் தான் நினைப்பார்கள்... “அப்போ அந்தம்மா ஒழுங்கா கையடக்கமா இருந்திருந்தா, இந்தத் தொல்லை எல்லாம் வந்திருக்காது


# அந்தம்மாவால தான் கையில் இந்தக் கறை !

வியாழன், 12 பிப்ரவரி, 2015

ஆக்சன் ஹீரோ காமெடியன் ஆனார் !          

நாடாளுமன்றத் தேர்தலில் உச்சத்துக்கு போன மோடி கிராஃப், டெல்லித் தேர்தலில் தரைக்கு வந்து விட்டது. கடந்த காங்கிரஸ் ஆட்சியின் மீது மக்களுக்கு ஏற்பட்ட வெறுப்பே மோடிக்கு அறுவடையானது.

காங்கிரஸின் தொடர் ஆட்சியும், அதன் மீதான ஊடகங்களின் விமர்சனமும் மக்கள் மனதில் மெல்ல மெல்ல சேர்ந்து வந்த நேரம். அதற்கு மாற்று வழியாக பா.ஜ.க சித்தரிக்கப்பட்டது ஊடகங்களால்.

அப்போது தான் மோடி களத்தில் குதிக்க ஆயத்தமானார். முதலில் கட்சிக்குள் தன்னை நிலை நிறுத்தி, கட்சி மீதான தன் பிடியை இறுக வைக்க திட்டம் தீட்டினார். குஜராத மாநிலத்தில் அவரது தொடர் வெற்றி அவரது இமேஜுக்கு வலுவூட்டியது. அப்படி வலுவூட்டுவதற்கான பணியை விளம்பர நிறுவனங்கள் முலம் மேற்கொண்டார்.

அதே பா.ஜ.க-வில் இன்னும் சில முதல்வர்கள் மூன்று முறையாக தொடர் வெற்றி பெறுகிறவர்களும் உண்டு, அவர்கள் மத்திய பிரதேசத்தின் சிவராஜ் சவுகான், சட்டீஸ்கரின் ராமன்சிங். இவர்கள் மீது மோடி போன்று கரையும் கிடையாது.

இவர்கள் தான் உண்டு, தன் மாநிலம் உண்டு என்றிருப்பவர்கள். ஆனால் மோடி அப்போதே திட்டமிட்டு தேசிய அரசியலில் தன்னை திணித்துக் கொண்டவர். அதற்காக கார்ப்போரேட்டுகள் துணையோடு, விளம்பர நிறுவன “வெளிச்சத்தில்” உலா வந்தார்.

திட்டமிட்டபடி காங்கிரஸின் பலவீனத்தை, தனது பலமாக மாற்றிக் கொண்டார். “வளர்ச்சி” என்ற மந்திரத்தை பிடித்துக் கொண்டு தொங்கினார். காங்கிரஸுக்கு மாற்று கிடைக்காமல் தடுமாறிக் கொண்டிருந்த மக்கள், ஒரு “கதாநாயகன்” கிடைத்ததாக எண்ணி விட்டார்கள். இப்படி தான் ஒரு காமெடியன், “கதாநாயகன்” ஆனார்.

மெகா மெஜாரிட்டியை கொடுத்தார்கள் மக்கள். இது அவரே எதிபாராத ட்விஸ்ட். “கதா” ஆன பிறகு அற்புத விளக்கை தேய்த்து வளர்ச்சி பூதத்தை வெளியில் கொண்டு வருவார் எனக் காத்திருந்தார்கள். கடைசியில் அது “சத்த”பூதம் தான் என்பது தெரிந்து போனது. மைக் மன்னாருவாக மாறி, காதை கிழிக்க ஆரம்பித்தார். வெறும் பேச்சு தான் வந்தது.

மைக் இல்லை என்றால் அடுத்த விமானத்தை பிடித்து வெளிநாட்டில் குதிக்க ஆரம்பித்தார். பிரதமரா, வெளியுறவுத் துறை அமைச்சரா என்று கார்ட்டூன் வந்தது.

இதை தாண்டி அதிக நேரம் ஒதுக்கியது காஸ்ட்யூம் டிசைனுக்கு தான். தினம் ஒரு டிசைன் உடை என ஆரம்பித்தவர், மணிக்கொரு டிசைன் உடைக்கு மாறி ரேம்ப் மாடலானார். ஒபாமா வந்த அன்று அவர் போட்ட “பத்து லட்ச ரூபாய்” உடை தான் அவரது காமெடியை உணர எல்லோருக்கும் வாய்ப்பு கொடுத்தது.

“வளர்ச்சி” ஓவர் கோட்டை கழட்டி விட்டு, காக்கி டிரவுசருடன் வலம் வந்ததற்கு விலை தான் டெல்லி ரிசல்ட். இந்துத்துவா, ஹிந்தி, சமஸ்கிருதம், மதமாற்ற தடைச்சட்டம், குறை சொன்ன காங்கிரஸ் கொள்கைகளையே தொடர்ந்து பின்பற்றியது என மக்களின் எதிர்பார்ப்புகளை ஏமாற்றினார்.

அமித்ஷாவை வைத்துக் கொண்டு கட்சியின் சீனியர்களை ஓரம் கட்டினார். மெகா மெஜாரிட்டி கிடைத்த தெம்பில் கூட்டணிக் கட்சிகளை கழட்டி விட்டார். “உலக நாயகன்” கனவில், வெளிநாடு சுற்ற ஆரம்பித்து உள்ளூர் மக்களையும் மறக்க ஆரம்பித்தார்.

மற்ற மாநிலங்களில் வந்த தேர்தல் முடிவுகள் தனக்காக கிடைத்ததாக மயக்கத்தில் இருந்தவருக்கு டெல்லி மக்கள் கொடுத்த “தெளிவு மருந்து” தான் இது.

மற்ற மாநிலங்களில் நடத்திய பிள்ளை பிடிக்கும் வேலையை டெல்லியிலும் நடத்தினார்கள். உச்சகட்டமாக முதல் நாள் கட்சியில் சேர்ந்த கிரண் பேடியை “முதல்வர்” வேட்பாளராக்கினார்கள். மோடி-அமித்ஷா கெமிஸ்ட்ரி டெல்லி லேபில் ஓர்க் அவுட் ஆகவில்லை.

டெல்லி மக்கள் நரேந்திர மோடியை, கிரண்பேடி வடிவில் ஒதுக்கித் தள்ளியுள்ளார்கள்.

# ஆடம்பரக் குப்பையை சின்ன துடைப்பத்தால் ஒதுக்கித் தள்ளியுள்ளனர் டெல்லி மக்கள் !

          !

திங்கள், 9 பிப்ரவரி, 2015

போர்களமான மணல்குவாரி

அலைபேசியில் பேசிய தனவேல் "நேரில் சந்திக்க வேண்டும், மணல் குவாரி போராட்டத்தில் கலந்து கொள்ள அனுமதி பெறுவதற்காக" என்றார். " நான் அவசியம் கலந்து கொள்கிறேன். அனுமதி பெறுவதற்காக அலைய வேண்டாம்." என்று நான் சொல்லிய போதும், என்னை சந்திக்க வந்தனர், தனவேல் தலைமையில் பாமக-வினரும், நன்னன் தலைமையில் திமுக-வினரும்.

    Displaying IMG-20150204-WA0040_1.jpg

பிப்ரவரி 4 போராட்ட தேதி என்று முடிவு செய்யப்பட்டது. திருவரங்கம் இடைத்தேர்தல் பணி இருப்பினும், வந்து விடுவதாக உறுதியளித்தேன். துண்டறிக்கை அச்சிட்டு வெளியிட்டனர் ஊர் பொதுமக்கள்.

அவ்வளவு தான் எனது அலைபேசி ஓயாமல் அலற ஆரம்பித்தது. முதலில் பேசியவர் கடலூர் மாவட்ட காவல்நிலையம் ஒன்றின் இன்ஸ்பெக்டர். ஒரு வகையில் தெரிந்தவர். நட்பு முறையில் பேசியவர், நான் வருவது உறுதி தானா என்று கேட்டுக் கொண்டார்.

அடுத்து அரியலூர் மாவட்ட இன்ஸ்பெக்டர் ஒருவர். பிறகு உளவுத்துறையை சேர்ந்த ஒருவர். அடுத்து பேசிய கடலூர் மாவட்ட இன்ஸ்பெக்டர்,”அதில் ஒன்றும் பிரச்சினை இல்லை. ஊர் மக்கள் தேவையில்லாமல் பெரிது படுத்துகிறார்கள். உங்களுக்கு இடைத்தேர்தல் பணி இருக்குமே, அதை பாருங்கள்” என்றார்.

அடுத்து பேசிய ஒரு காவல்துறை மேலதிகாரி சொன்ன ஒரு வார்த்தையால், சிறு வாக்குவாதமானது. கைதானாலும், நான் வருவது உறுதி என்று தெரிவித்தேன். மொத்தம் அய்ந்து இன்ஸ்பெக்டர்கள் மற்றும் அந்த மேலதிகாரி பேசியது தான். ஆனால் மணல் அள்ளும் பொதுப்பணித் துறை அதிகாரிகளோ, வருவாய் துறை அதிகாரிகளோ பேசவில்லை.

இடைத்தேர்தல் பணி முடித்து 9.30க்கு கிளம்பினேன். காவல்துறை மிரட்டல் மூலம் போராட்டத்தை குலைக்க நடந்த முயற்சி, கடைசி வரை கைவிடப்படவில்லை. கைது செய்யப்படலாம் என்று தெரிவித்தனர். போராட்ட இடத்தை நான் அடையும் வரை போன் வந்த வண்ணமே இருந்தது. சன்னாசிநல்லூரை அடைந்த போது மணி 11.30.

வெள்ளாற்றின் இக்கரையில் அரியலூர் காவல்துறை, அக்கரையில் கடலூர் மாவட்டக் காவல்துறை. காத்திருந்த மக்களோ ஆயிரத்தை தொடுவர். சரிபாதி பெண்கள். அவர்கள் முகங்களை பார்த்த யாருக்குமே பாதிப்பின் விளக்கத்தை தனியாக சொல்லத் தேவை இருக்காது. அவ்வளவு உணர்ச்சிக் கொந்தளிப்பில் இருந்தனர்.

       

ஊர் மக்கள் சார்பில் மணல் கொள்ளையால் ஏற்படும் பாதிப்பை விளக்கி பேசினார்கள். தேமுதிக சார்பில் இளைஞரணி ராஜா, மாவட்ட பொருளாளர் மணிமாறன், விசிக சார்பில் வழக்கறிஞர் செல்வநம்பி, மாவட்ட செயலாளர் அன்பானந்தம், திமுக சார்பில் ஒன்றிய செயலாளர் ஞானமூர்த்தி, கொள்கை பரப்பு அணி துணை செயலாளர் பெருநற்கிள்ளி ஆகியோர் கண்டன உரை ஆற்றினர்.

       

முடிவில் நான் உரை ஆற்றிய பிறகு, மணல் குவாரியை நோக்கி முற்றுகையிட நடக்க ஆரம்பித்தோம். கூட்டம் நடந்த இடத்தில் இருந்து 10 மீட்டர் தொலைவிலேயே ஆறு ஆரம்பித்து விடும். ஆற்றில் இறங்கினோம். ஆற்றின் மையத்தில் குவாரி. பத்துக்கும் மேற்பட்ட பொக்லைன்கள் இயங்குவதை பார்த்த மக்கள் ஆவேசமாயினர்.

           

          


         Displaying 20150204_123300.jpg
பெண்களும், இளைஞர்களும் ஓட ஆரம்பித்தனர். நாங்களும் வேகமாக நடக்க ஆரம்பித்தோம். கிட்டத்தட்ட ஒன்றரை கிலோமீட்டர் தூரம். முன்பாக சென்றடைந்த இளைஞர்களும், பெண்களும் பொக்லைன் எந்திரத்தை சுற்றி நின்று முற்றுகையிட்டனர்.

           
போலீசார் லத்தியோடு முன்னேறுவதை பார்த்த நாங்கள் வேகமாக நடக்க ஆரம்பித்தோம். மணலில் நடந்து பழக்கப்பட்டவர்கள் என்பதால் உள்ளூர் மக்கள் வேகமாக சென்று விட்டனர். எங்களால் அவர்களுக்கு ஈடு கொடுக்க முடியவில்லை.

         

போலீசார் லத்தியால் தாக்க, பெண்களிடமிருந்து அழுகுரல். இளைஞர்கள் சிதறி ஓடுவதை காண முடிந்தது. இங்கும் அங்குமாக அனைவரும் ஓடியதில் மணல் புழுதியாக பறந்தது. போர்களம் போல் தோன்றியது. நாங்கள் வேகமாக சென்று அந்த இடத்தை அடைந்தோம்.

        

ஆனால் அதற்குள் அய்ம்பது பேருக்கு மேலானோர் காவல்துறையின் கண்மூடித் தாக்குதலுக்கு உள்ளாகி விட்டனர். இருதரப்புக்கும் இடையில் நாங்கள் போய் நின்றோம். நாங்கள் போனதும் போலீசார் தாக்குதலை நிறுத்தி ஒதுங்கி நின்றுக் கொண்டனர்.

      

இந்தப் பக்கம் நின்ற பெண்கள், கோபத்தில் கடுமையாக காவல்துறையினரை பேச, போலீசார் முறைக்க, சூழ்நிலை மீண்டும் சூடாக ஆரம்பித்தது. மீண்டும் பிரச்சினையானால் அப்பாவி பொதுமக்கள் தாக்கப்படும் நிலை. யோசித்த நான் அந்த இடத்திலேயே மணலில் உட்கார்ந்து, உடன் வந்தவர்களையும் அமர வைத்தேன்.
        
     

    
போலீசார் நடவடிக்கையை கண்டித்தும், அதற்கு தக்க பதிலளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி தர்ணா போராட்டமாக அமர்ந்தோம். உச்சி வெயில். சிறிது நேரம் போராட்டத்திலே கழிந்தது. காவல்துறையினர் மிரட்டும் தோரணையில் அணிவகுத்து நின்றனர். இதற்குள் அடிபட்ட பெண்களை எங்களுக்கு முன்பு கொண்டு வந்து படுக்க வைத்தனர்.

    

பெரும்பாலும் முதியோர். நடக்கவே இயலாமல் துவண்டு போயிருந்தனர். இளைஞர்கள் முதுகைக் காட்டினர். லத்தியால் அடித்ததில் பட்டை பட்டையாக சிவந்து, வீங்கி இருந்தது. பார்க்கவே மிகப் பாவமாக இருந்தனர். 108 வரவழைக்க ஏற்பாடு செய்தோம்.

    

அவர்கள் வலியால் துடிக்க, மீண்டும் பதட்ட சூழல். அப்போது திட்டக்குடி டி.எஸ்.பி பேச விரும்புவதாக தெரிவித்தனர். சென்று கேட்டேன். “விருத்தாசலம் ஆர்.டி.ஓ வந்திருக்கிறார். நீங்கள் ஒப்புக் கொண்டால் பேச தயாராக இருக்கிறார்” என்றார் டி.எஸ்.பி.

      

“முதலில் அடிபட்டவர்களை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல ஏற்பாடு செய்யுங்கள்” என்றேன். அதற்குள் ஏற்கனவே அழைக்கப்பட்டதால் ஒரு 108 ஊர்தி வந்த்து. அதில் சிலர் ஏற்றப்பட்டனர். அங்கே நின்ற அரசு ஜீப் ஒன்றையும் டி.எஸ்.பி ஏற்பாடு செய்து கொடுத்தார். அவர்கள் செந்துறை மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.

     Displaying 20150204_135111.jpg

இதற்கிடையில் ஆர்.டி.ஓ வந்தார். இளைஞர். நடந்த சம்பவத்திற்கு சங்கடப்பட்டார். அவர் காலையிலேயே பேசுவதற்கு தான் தயாராக இருப்பதாக தெரிவித்திருந்தும், அரியலூர் மாவட்ட வருவாய் துறையினரோ, காவல் துறையினரோ அதனை எங்களிடம் தெரிவிக்கவில்லை என்பது தெரிய வந்தது.

    

“எப்போது சொல்கிறீர்களோ, அப்போது பேசி பிரச்சினையை தீர்க்கலாம்” என்றார் ஆர்.டி.ஓ. ஊர்காரர்களை கலந்தே சொல்ல முடியும் என்று சொல்லி விட்டு, ஊர்காரர்களிடம் “என்னக் கோரிக்கைகளை வலியுறுத்த வேண்டும், எப்போது வைத்துக் கொள்ளலாம்” என்று கேட்டேன்.

    

கிராமத்தை சேர்ந்தவர்கள் கலந்து பேசி வந்தனர். “பதினைந்து நாட்கள் கழித்து பேச்சு வார்த்தை வைத்துக் கொள்வது. இரு தரப்பும் அங்கு ஆதாரங்களோடு வந்து, குவாரி குறித்த பிரச்சினைகள் பேசுவது” என டி.ஆர்.ஓ-விடம் பேசி தீர்மானிக்கப்பட்டது.

     

அங்கிருந்து மக்களை அழைத்துக் கொண்டு மீண்டும் ஊரை நோக்கி நடக்கத் துவங்கிய போது மணி மூன்றை நெருங்கிக் கொண்டிருந்தது. கிட்டத்தட்ட மூன்று மணி நேர போர் முடிவுக்கு வந்தது போல் இருந்தது.

    

ஜெயங்கொண்டம் சென்று, தளபதி அவர்கள் வருகைக்கான ஏற்பாடுகளை பார்வையிட்டு விட்டு, சென்னையிலிருந்து பெரம்பலூர் வரும் தளபதி அவர்களை வரவேற்க மாவட்ட எல்லையான தொழுதூர் டோல்கேட்டிற்கு செல்ல வேண்டிய அவசரம்.

       

இருப்பினும் கரையை அடைந்த பின், மீண்டும் மக்களிடம் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து பேசி விட்டு கிளம்பினேன்.

     

காவல்துறையை கொண்டு மக்களை மிரட்ட நினைக்கும் அதிமுக அரசு அடிபட்டவர்கள் சிந்திய ரத்தத்திற்கும், அவர்களது பாதிப்பிற்கும் பதில் சொல்லியே ஆக வேண்டும்.

# வெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயின்
ஒருவந்தம் ஒல்லைக் கெடும் - திருக்குறள்

ஞாயிறு, 8 பிப்ரவரி, 2015

அரசின் மணல் மஃபியா

சன்னாசிநல்லூரிலிருந்து தொடர்ந்து அலைபேசியில் அழைப்பு. "இதோ கிளம்பி விட்டேன்". "திருச்சி தாண்டுகிறேன்". "பெரம்பலூர் தாண்டிவிட்டேன்". "இப்போ அங்கனூர்" என்றவாறு சென்றடைந்த போது மணி காலை 11.30.

10.30-க்கு முற்றுகை போராட்டம் என அறிவிக்கப்பட்டிருந்தது. தாமதமாகி விட்டதே என்ற சங்கடத்தோடு போனேன். ஆனால் மக்கள் கசப்பில்லாமல் காத்திருந்தனர். காவலர்கள் ஐம்பது பேரோடு இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ என காவல்துறையினரும் காத்திருந்தனர். இது இக்கரையில்.

          

சன்னாசி நல்லூர் கிராமம், அரியலூர் மாவட்டத்தின், செந்துறை ஒன்றியத்தின் கடைகோடி கிராமம். வெள்ளாற்று கரை மீது அமைந்துள்ளது. எப்போதும் உரிமைக்காக போராடக் கூடிய கிராமம்.

வெள்ளாற்றில் இயங்கும் மணல் குவாரி தான் பிரச்சினைக்கு காரணம். இந்த கிராமத்து எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கணக்கு வழக்கில்லாமல் மணல் எடுத்துள்ளனர்.

ஆழம் அதிகமாக மணலை எடுத்த பகுதியில் ஆடு, மாடுகள் விழுந்து இறந்துள்ளன. மனிதர்கள் இருவர் இறந்து விட்டதாகவும் ஊர் மக்கள் தெரிவிக்கின்றனர். இத்னால் மக்களுக்கு மணல் குவாரிக்கு எதிரான மன நிலை ஏற்பட ஆரம்பித்தது.

இந்த கிராமத்து மக்கள் பயன்படுத்தும் ஆற்றில் இருந்த சுடுகாட்டை கூட விட்டு வைக்காமல் தோண்டி மணல் எடுக்க ஆரம்பித்த போது பிரச்சினை வெடிக்க ஆரம்பித்தது.

இதனால் மணல் குவாரி நடத்தும் நபர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே பிரச்சினை மூள ஆரம்பித்தது. உடனே ஆற்றின் அக்கரையில் இருக்கும் கடலூர் மாவட்டத்து நபர்கள சிலரை விலைக்கு வாங்கினர்.

அவர்களை கொண்டு இதை இரண்டு ஊர்களுக்கு இடையேயான பிரச்சினையாக திசை திருப்பினர் மணல் குவாரி நடத்தும் நபர்கள். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவத் துவங்கியது.

இதற்கிடையில் பத்து நாட்களுக்கு முன்பாக, கொதிப்படைந்த மக்கள் குவாரி உள் புகுந்தனர். அங்கே அளவில்லாமல் மணலை அள்ளிக் கொண்டிருந்த ஆறு பொக்லைன்கள், டிப்பர் லாரிகளை சிறை பிடித்து ஊருக்குள் கொண்டு வந்து நிறுத்தி விட்டனர் பொதுமக்கள்.

அப்போது பேச்சு வார்த்தைக்கு வந்த அரசு அதிகாரிகள், மக்களோடு சமாதானப் பேச்சுவார்த்தை நடத்திய பிறகே மீண்டும் குவாரியை இயக்குவோம் என எழுதிக் கொடுத்து விட்டு, வாகனங்களை மீட்டுக் கொண்டு சென்றுள்ளனர்.

ஆனால் மறுநாளே போலீஸ் பாதுகாப்புடன் குவாரியை தொடர்ந்து நடத்த ஆரம்பித்து விட்டனர்.

இந்தக் கட்டத்தில் தான் ஊர் பொதுமக்கள் என்னைத் தொடர்பு கொண்டனர்.
(தொடரும்...)

ஞாயிறு, 1 பிப்ரவரி, 2015

உதவி மகிழ்வோம், இயலாதோர்க்கு

எல்லாவற்றிற்கும் அரசாங்கத்தை எதிர்பார்க்க முடியாது. எதிர்கட்சி சட்டமன்ற உறுப்பினர், அதனால் அரசு ஒத்துழைக்கவில்லை என சும்மா இருக்கவும் முடியாது.

             

எனது கல்லூரி நண்பர் செல்வம் அவர்களால், எங்களது தொகுதியில் உள்ள மாற்றுதிறனாளிகளுக்கு உதவும் வாய்ப்பு கிடைத்தது. ஏற்கனவே ஒரு வருடத்திற்கு முன்பு குன்னம் பகுதியில் உள்ளவர்களுக்கு அந்த வாய்ப்பு.

இந்த முறை செந்துறை பகுதியில் அந்த வாய்ப்பு. செயற்கை கை, கால், உபகரணங்கள் தேவையானவர்களை கண்டறியும் முகாம் ஏற்கனவே நடத்தப்பட்டிருந்தது. அதில் அளவுகள் எடுக்கப்பட்டிருந்தன.

அளவுகள் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட செயற்கை கை, கால்கள் மற்றும் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி கடந்த 28.01.2015 அன்று செந்துறையில் நடைபெற்றது. 45 பேர் பயனாளிகள் கலந்து கொண்டனர்.

எனது நண்பர் செல்வம், தஞ்சாவூர் பவர் கம்பெனியில் துணை பொது மேலாளராகப் பணியாற்றுகிறார். அவர்களது நிறுவனத்தின் சமூகப் பணிகள் செய்வதற்கான நிறுவனம் லேன்கோ பவுண்டேஷன்.

அந்த லேன்கோ பவுண்டேஷன் தான் இந்த பொருட்களை இலவசமாக வழங்கினார்கள். பயனாளிகளுக்கு கடிதம் அனுப்பி, தொலைபேசியில் தகவல் சொல்லி, கழக நிர்வாகிகள் மூலம் அழைத்து வர ஏற்பாடு செய்திருந்தோம்.

அவர்களுக்கு உபகரணங்கள் வழங்கிய பிறகு உணவு வழங்கி, திரும்பி செல்ல ஏற்பாடு செய்திருந்தோம். சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் அரசை எதிர்பார்க்காமல், இதை செய்ய முடிந்தது ஒரு ஆத்ம திருப்தி.

இந்த நிகழ்ச்சியின் நேரத்தில் எனது மலேசிய நண்பர் ஷரீன் தமிழகம் வருகை தந்திருந்தார். ஷரீன் மொகம்மது ஜமாலுதீன் மலேசிய ஆளுங்கட்சியின் இளைஞர் பிரிவு தலைவர். பாசிங்குடா பகுதி கவுன்சிலர். நமது கிராமப் பகுதிகளையும், மக்கள் வாழ்நிலையையும் பார்க்க விரும்பினார்.

அவரை இந்த நிகழ்ச்சிக்கு அழைத்திருந்தேன். அவரது பங்களிப்பாக செந்துறையில் ஒரு துவக்கப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு உதவிட விரும்பினார். அதே போல நோட்டு, பேனா, பென்சில் வழங்கி மகிழ்ந்தார்.

பிறகு செயற்கை கை, கால் வழங்கும் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். வந்திருந்தோரை பார்த்து நெகிழ்ந்து போன ஷரீன், அடுத்த வருடம் இந்தப் பகுதி மக்களுக்கு தன்னாலான ஏதேனும் ஒரு உதவியை செய்வதாக, நிகழ்ச்சியில் பேசும் போது உறுதி அளித்தார்.

எம் மக்களுக்கு உதவிய லேன்கோ பவுண்டேஷனுக்கும், நண்பர் செல்வம் அவர்களுக்கும், நண்பர் ஷரீன் அவர்களுக்கும் நன்றி பல.


# உதவி மகிழ்வோம், இயலாதோர்க்கு !