பிரபலமான இடுகைகள்

வியாழன், 31 ஜூலை, 2014

மாமன்னன் இராஜேந்திர சோழன் - மேலாண்மை தலைவன் !

                   Rajendra Chola I

மாமன்னன் இராசேந்திரனின் எழுச்சிமிகு வரலாறு குறித்த கருத்தரங்கில் இல.தியாகராசன் அவர்களை கடைசியாக பேச அழைத்தார்கள். எழுத்தாளர் பாலகுமாரன், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் ஆகியோர் பேசிய பிறகு இவரை பேச விடுகிறார்களே என இவரை அறியாதவர்கள் பார்த்தனர்.

பேச ஆரம்பித்தார். முழுதும் நிரம்பிய மேட்டூர் அணையை திடீரென திறந்து விட்டால் எப்படி நீர் பீரிட்டு வெளியேறுமோ, அப்படி கருத்துகள் வந்து விழுந்தன. ஒரு செகண்ட் தவறினாலும் முக்கிய செய்தியை தவற விட்டுவிடுவோமோ என கூர்ந்து கவனிக்க வேண்டியதாயிற்று.

“’மண்ணின் மேல் வான் புகழ் நட்டானும், மாசு இல் சீர்ப்
பெண்ணினுள் கற்புடையாள் பெற்றானும், உண்ணு நீர்க்
கூவல் குறை இன்றித் தொட்டானும், இம் மூவர்
சாவா உடம்பு எய்தினார்’ என்று திருகடிகம் கூறியது. இதில் மூவர் என்று கூறப்பட்டது”

“ஆனால் இந்த மூன்று வாய்ப்புகளை பெற்ற ஒருவன் யாரென்றால் அது இராஜேந்திரன் தான். தன் தந்தை பெற முடியாத வெற்றிகளை பெற்று மண்ணில் வான் புகழ் நட்டான். தான் இறந்த போது உடன்கட்டை ஏறிய வீரமாதேவியை பெற்றான். நீர்வளத்தை சோழகங்கம் மூலம் பெருக்கி குறை இன்றி தொட்டான்”

“அப்போதே முதன்முதலாக, Transfer of Capital என்ற முறையை கையிலெடுத்து வறண்ட பகுதிக்கு தலைநகரை மாற்றி 86 ஊர்களை தோற்றுவித்து, இந்தப் பகுதி வளர்ச்சிக்கு வித்திட்டவன்”

“240 ஆண்டுகளுக்கு இராஜேந்திரன் உருவாக்கிய கங்கைகொண்ட சோழபுரம் தமிழ்நாட்டிற்கு தலைநகராக இருந்தது. அதைத் தாண்டி தென்னிந்தியாவிற்கு தலைநகராக இருந்தது. அதையும் தாண்டி தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு தலைநகராக விளங்கியது”

“அரியலூர் பகுதியில் ஓடும் மருதையாற்றில் வாய்கால்களை வெட்டி பாசன வசதியை பெருக்கினான். மருதையாற்றில் சிறப்பாக கலுங்கு, மதகுகளை கட்டி பெருமை பெற்றான்.”

“கடலூர் மாவட்டத்தில், திட்டக்குடி அருகே பாசன வசதிகளை பெரிய அளவில் தருகிற ‘வெலிங்டன் ஏரி’ இராஜேந்திரன் வெட்டிய ‘உத்தம சோழ பேரேரி’ ஆகும்”

( நான் ஏற்கனவே அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஊர் பெயர்கள் குறித்து பதிவிட்ட தகவலில் இல்லாத இன்னும் பல ஊர் பெயர்களுக்கு விளக்கம் சொன்னார். அப்போது கூடியிருந்தோர் அனைவரும் வியந்து போயினர்)

“இன்று இருக்கும் ‘செட்டித் திருகோணம்’ கிராமம் இராஜேந்திரன் உருவாக்கிய ‘மதுராந்தக சோழபுரம்’. விக்கிரம சோழபுரம் இன்று ‘விக்கிரமங்கலம்’. ‘வஞ்சினபுரம்’ இவை எல்லாம் வியாபார நகரங்களாக விளங்கின”

“வானவன் மாதேவி சதுர்மங்கலம் என்று உருவாக்கப்பட்ட நகர் இன்று ‘நாகமங்கலம்’ ஆகிவிட்டது. சேத்தியாத்தோப்பு அருகே உள்ள சோழதரம் ஏற்கனவே ‘சோழ உத்தமபுரம்’ என்பதாகும்”

“இலங்கை வரை படையெடுத்து பெற்ற வெற்றியையும், பாண்டியன் மணிமுடியை கைப்பற்றியதையும் இராஜேந்திரன் மிக முக்கியமானதாகக் கருதினான். அதைக் கொண்டாட 86 இடங்களுக்கு ‘முடிகொண்ட’ என துவங்குகிற பெயர்களை சூட்டினான். அவனும் ‘முடிகொண்ட சோழன்’ என புகழப்பட்டான்”

“ராஜேந்திரன் மனைவி லட்சுமிக்கு ‘சுத்தமல்லி’ என்ற பெயரும் உண்டு. அவள் பெயரால் அயன்சுத்தமல்லி, ஜெமீன்சுத்தமல்லி என ஊர்கள் உருவாக்கப்பட்டன.”

“சோழர்களின் சம்பந்திகள் பழவேட்டரையர்கள். இவர்கள் தலை நகர் ‘மேலப்பழவூர்’ ஆகும். இதற்கு அருகில் பவித்திரமாணிக்க பேரேரி என்று வெட்டப்பட்டது இப்போது ‘மலத்தான் குளம்’ ஆகும்”

“கங்கை வரை சென்று கங்கை நீரை கொண்டு வந்த வெற்றியை கொண்டாடும் விதமாக இரண்டு ஊர்களை அமைத்தான். அவை விழுப்புரம் அருகிலுள்ள ‘எண்ணாயிரம் கோவில்’, இன்னொன்று குத்தாலம் அருகேயுள்ள 'திரைலோக்கி”

“திருவாரூர் கோவிலை கற்றளியாக்க வேண்டிய ராஜேந்திரனின் ‘அணுக்கி’ பரவை நினைவாக அமைந்த ஊர் குன்னம் அருகேயுள்ள பரவாய். இதே போல பரவைபுரம் என்ற ஊரும் உருவாக்கப்பட்டது”

“படைவீரர்களுக்கு நிலங்களை தானமாக அளித்தான் ராஜேந்திரன். ‘குலோத்துங்க நல்லூர்’ உள்ளிட்ட ஊர்கள், வீரர்கள் அனுபவிக்க ‘வீரபோகமாக’ அளிக்கப்பட்டது”

“ராஜேந்திரனின் மகன் ராஜாதிராஜன் பெயரில் ஜெயங்கொண்ட சோழபுரம் என்ற நகரம் அமைக்கப்பட்டது. ஜெயங்கொண்ட சோழபுரம் முன்னர் நெம்மேலி என்ற கிராமம். இது அதிகம் நெல் விளையும் ஊர் என்பதால் ஏற்பட்ட பெயர்.”

“வாரியங்காவல் கேரளாவில் உள்ள ஆரியங்காவு பெயரில் ஏற்படுத்தப்பட்டது. வெளிநாடுகளில் இருந்து வரும் பொருட்கள் கேரளா துறைமுகங்களில் இறங்கி கங்கைகொண்ட சோழபுரம் வரும் வணிகப்பாதையில் (trade route) இந்த ஊர்கள் அமைந்தன“

கங்கைகொண்ட சோழபுரத்திலிருந்து ஜெயங்கொண்டம், வாரியங்காவல், செந்துறை, ராயம்புரம், அரியலூர், பழவூர், திருமழப்பாடி வரையிலான பாதை பெருவழிப் பாதை என அழைக்கப்பட்டது. அந்த நினைவாக அமைக்கப்பட்ட கோவில் ‘பெருவழியப்பா கோவில்’ உஞ்சினி கிராமத்தில் தற்போது உள்ளது”

“மாமன்னன் இராஜேந்திர சோழன், வணிக மேலாண்மை, நீர் மேலாண்மை, உள்ளாட்சி மேலாண்மை, நுண்கலை மேலாண்மை என ஆட்சியை சிறப்பாக நடத்தியதால் தான் மிகுந்த புகழ் பெற்று விளங்குகிறான்”

இப்படி இன்னும் பல அரிய, அறியாதத் தகவல்களை அள்ளிக் கொட்டினார். சுருக்கெழுத்து தெரியாததால் இவ்வளவு தான் குறிப்பெடுத்ததைக் கொண்டும், நினைவில் இருத்தியவையைக் கொண்டும் பதிவிட்டுள்ளேன்.

இந்த உரையை வழங்கிய பேராசிரியர் இல.தியாகராஜன், தொல்பொருள் ஆய்வாளர். அரியலூர் அரசுக் கலைக் கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

இவர் கொடுத்த தகவல்களை பார்த்தால் மாமன்னன் இராஜேந்திரனோடே, கங்கைகொண்ட சோழபுரத்தில் வாழ்ந்திருப்பாரோ என்ற சந்தேகம் எழுகிறது.

# அவன் அந்த சிறப்புப் பெயருக்கு முழுக்கத் தகுதியானவன் – அதிசய சோழன் !

புதன், 30 ஜூலை, 2014

தாங்கள் ராஜேந்திரனின் போர்படை என்ற உணர்வோடு ...

அரசு நடத்தியிருக்க வேண்டிய விழா. ஊர் மக்கள், ஆர்வலர்கள் கூடி நடத்தினார்கள். ஆனாலும் அரசு நடத்தியிருந்தாலும், இவ்வளவு சிறப்பாக இருந்திருக்காது என்பதே உண்மை.

தஞ்சையிலிருந்து தீபச்சுடர் ஏந்திய ஓட்டம், மாளிகை மேட்டிலிருந்து தமிழறிஞர்கள் ஊர்வலம், வரலாற்று ஆய்வாளர்கள் கருத்தரங்கம், ஆயிரம் தீபமேற்றும் நிகழ்ச்சி, நாட்டியாஞ்சலி என இரண்டு நாட்கள் களைகட்டிய விழாவிற்கு "மாமன்னன் இராஜேந்திரனின் எழுச்சிமிகு வரலாற்றை" குறித்து அறிஞர்கள் ஆற்றிய உரை மணிமகுடம்.

           

சென்னை பல்கலைகழகத்தின் முன்னை துணைவேந்தர் பொற்கோ மண்ணின் மைந்தராக இராஜேந்திரனின் பெருமைகளை விவரிக்கையில் உணர்ச்சி வசப்பட்டார். 


             

அடுத்து பேசிய எழுத்தாளர் பாலகுமாரன், “ பரவை என்கிற தாசிக்குல பெண்ணின் வேண்டுகோளை ஏற்று செங்கல்லால் கட்டப்பட்ட திருவாரூர் கோவிலை கற்றளியாக்கினான் இராஜேந்திரன்” என்று துவங்கி

“கம்மாளர்கள் பிராமணர்கள் போல் பூணூல் அணிந்து கொள்ள அனுமதி கேட்டப் போது, 'நீங்கள் வடித்துக் கொடுக்கும் வாளால் தான் நான் வெற்றி பெறுகிறேன். நீங்கள் காலில் செருப்பு அணியவும், திருநீர் அணியவும், சிவிகையில் செல்லவும், பூணூல் அணியவும் அனுமதி கொடுக்கிறேன்' என கொடுத்தான்.”எனற வரலாற்றை சொல்லி


           

“தேன்நிலவுக்கு ஊட்டிக்கு போகாதீங்கைய்யா. கங்கை கொண்ட சோழபுரம் வாங்க! என்ன அற்புதமான நகரமையா, வாங்கய்யா இங்க, வரலாறு தெரிஞ்சுக்கங்க, ஓவியங்கள் இருக்கு பார்த்து தெரிஞ்சுக்கங்க. தமிழ் படிக்கச்சொல்லி கொடுத்தால் மட்டும் போதாது, தமிழ் எழுத்ச்சொல்லி கொடுத்தால் மட்டும் போதாது, தமிழரின் சரித்திரம் தெரியாது நீங்கள் குழ்ந்தைகளை வள்ர்த்தீர்கள் என்றால் நீங்க்ள் தமிழர் அல்ல! நீங்கள் ராஜராஜன், ராஜேந்திரனின் வரலாற்றையும் உங்கள் குழந்தைகளுக்கு சொல்லித்தரவேண்டுமென்ற விண்ணப்பத்தையும் இந்த மகாசபை முன் வைக்கின்றேன்” என்று வேண்டுகோள் வைத்து முடித்தார்.

          

அடுத்து தமிழக அரசின் வேளாண்துறை செயலர் இராஜேந்திரன் ஐ.ஏ.எஸ் பேசினார். “இங்கு கூடியிருக்கிற மக்கள் தாங்கள் ராஜேந்திரனின் போர்படை என்ற உணர்வோடு தாங்களாகவே கூடியிருக்கிறார்கள்” என்று செண்டிமென்ட் டச் கொடுத்தார்.

“தஞ்சை 150 ஆண்டுகள் தான் தலைநகராக இருந்தது. ஆனால் கங்கைகொண்ட சோழபுரம் 240 ஆண்டுகள் தலைநகராக இருந்தது. ஏரி, கோவில்கள் அமைத்தல், மதங்களை சமமாக பேணியமை, நில அளவி, பஞ்சாயத்து ஆட்சி, நுண்கலை வளர்ப்பு என பணியாற்றியதால் தான் சோழர்கள் புகழோடு திகழ்ந்தார்கள்”

“ராஜேந்திரனின் இயற்பெயர் மதுராந்தகன். அதன் அர்த்தம், மதுரைக்கு ஆந்தகன் அதாவது எமன். பாண்டியர்களை வீழ்த்தியவன். ஆனால் அதே மதுரையிலிருந்து ராஜேந்திரன் என்ற பெயரோடே வந்து அவனை பாராட்டுகிறேன் என்றால் அது தான் ராஜேந்திரன்.” என்று புகழ்ந்தார்.

அடுத்து பேசிய அரசு செயலர் தனவேல் ஐ.ஏ.எஸ் “அரசர்களின் தலைநகர்கள் நகரங்களாகி விட்டன. கங்கைகொண்ட சோழபுரம் மட்டும் தான் கிராமமாக இருக்கிறது என்று வருத்தப்பட்டேன். ஆனால் கிராமமாக இருப்பதால் தான் மக்கள் பண்பாட்டோடு, உணர்வோடு இருக்கிறீர்கள். அதனால் தான் இந்த விழாவை நடத்திக் கொண்டிருக்கிறீர்கள்” என்று பெருமிதப்பட்டார்.

“ஐரோப்பாவில் மாவட்ட தலைநகரங்களில் ஒரு மியூசியம் இருக்கும். இங்கு ஒவ்வொரு கோவிலுமே ஒரு மியூசியம் தான். பிரிட்டானிக்காவில் ‘தமிழர்கள் கோவில் கட்டுவதில் வல்லவர்கள்’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.”

“பெருவுடையார் கோவிலின் மூலஸ்தானத்திற்குள் நுழையுமுன் இடது பக்கமிருக்கும் துவாரபாலகரை கவனியுங்கள். அவன் ஒரு காலை கதாயுதம் மீது வைத்திருப்பான். கதை மீது ஒரு மலைப்பாம்பு படர்ந்திருக்கும். மலைப்பாம்பு வாயில் பாதி யானை சிக்கியிருக்கும். யானையை விட மலைப்பாம்பு பெரிது, அதை விட கதை பெரிது, அதை கையில் பிடித்திருக்கும் துவாரபாலகன் எத்தகையவனாக இருப்பான். ஆனால் அவன் ஒரு கையால் உள்ளே காட்டுவான்,”என்னை விடப் பெரியவர் உள்ளே இருக்கிறார்” என பெருவுடையாரை நோக்கி. இதன் அர்த்தத்தை பார்க்க வேண்டாம். சிற்பி எவ்வளவு எளிதாக் ஒரு சிற்பத்தில் இவ்வளவு செய்திகளை நுணுக்கமாக கொடுக்கிறார் என கவனியுங்கள். இது தான் சர்ரியலிஸம். இது சோழற்கால சிற்ப சிறப்பு” என்று விளக்கமளித்தார்.

கவிஞர் அறிவுமதி “வேட்டிக் கட்டியவர்களை வெளியேற்றுகிற இந்த நாட்டிலிருந்து தான் வேட்டிக் கட்டி போய் உலக நாடுகளை வென்று உலகப் பெருமை பெற்றான்.” என்று துவங்கியவர் “ஆனால் ராஜராஜனும், ராஜேந்திரனும் என்னைப் பொறுத்தவரை குற்றவாளிகள்” என்று நிறுத்தினார்.

“பூணூல் போட அனுமதி கொடுத்த ராஜேந்திரனுக்கு என்ன தைரியம் என்று கேட்டீர்களே பாலகுமாரன், நீங்கள் செருப்பையே அரியணையில் ஏற்றி ஆளவைத்தவர்கள். நாங்கள் செருப்பு போடவே 2000 ஆண்டுகள் ஆகிவிட்டன” என்று கர்ஜித்தார்.

“இன்று இந்தி,சமஸ்கிருதம் உள்ளே வர வேலை நடக்கிறது. நீங்களும் பிள்ளைகளுக்கு அப்படி தான் பெயர் வைக்கிறீர்கள். சமீபத்தில் நோயுற்ற தன் பிள்ளையை கருணை கொலை செய்ய கோரிக்கை வைத்தாளே ஒரு தாய், அவளைப் போல என் தாய் தமிழை கருணை கொலை செய்து விடுங்கள்” என்று சபையை அதிரடித்தார்.

அடுத்து கல்வெட்டு ஆய்வாளர் குடவாயில் பாலசுப்ரமணியன் “ஆடித் திருவாதிரை தான் மாமன்னன் இராஜேந்திரனின் உண்மையானப் பிறந்தநாள். இதை திருவாருர் கோவில் கல்வெட்டிலே ராஜேந்திரனே பொறித்து வைத்திருக்கிறான்” என சர்ச்சைக்கு பதிலளித்து, “இந்த மன்னனுக்கு விழா எடுத்தீர்களே உங்கள் திருவடியை வரலாற்று ஆய்வாளர் என்ற முறையில் வணங்குகிறேன்” என்று உருகினார்.


             

அடுத்து பேசிய அரியலூர் இல.தியாகராசன் உரை அனைவரையும் கட்டிப் போட்டது. அது தனிப் பதிவாகப் போட வேண்டிய அளவு பெரிது.

செவ்வாய், 29 ஜூலை, 2014

இராஜேந்திர சோழன் பராக், பராக் !

இரவு இரண்டாம் ஜாமம் துவங்கியிருந்தது. ஒளிவெள்ளத்தில் நனைந்து கொண்டிருந்தது பெருவுடையார் ஆலயம். ஆடித் திருவாதிரைத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஆலயத்தினுள் மக்கள் வெள்ளம். ஆலயத்திற்கு வெளியில் மக்கள் கடல்.

                             

ஆலயத்தின் வெளிப்புறத்தில் வரிசையாக விளக்குகள். எண்ணெய் ஊற்றி, திரி போட்டு மக்கள் விளக்கை ஏற்றி வழிபட்டுக் கொண்டிருந்தனர். பின்னால் வரிசையில் நின்று தங்கள் பங்கிற்கு எண்ணெய் ஊற்றிக் கொண்டிருந்தனர் சோழவள நாட்டு மக்கள்.

மெய்காவலர்கள் விழிப்பாக மக்களை ஊடுருவிப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். இங்கும் அங்கும் உலவி கூட்டத்தை நகர்த்தி, புதிதாக வருகிறவர்களுக்கு வழி ஏற்படுத்திக் கொண்டிருந்தார்கள். தளபதிகள் அவர்கள் பணியை கண்காணித்துக் கொண்டிருந்தார்கள்.

திருமதிலுக்குள் தரையில் பாவியிருந்த புல்வெளியில் நடந்து, கிழக்கு கோபுர வாயிலைக் கடந்து வெளிப்புறமிருந்த ஆலமரத்தை அடைந்தால், வடக்கு மூலையில் எழில் கொஞ்சும் மேடை அமைக்கப்பட்டிருந்தது. மேடையின் முன்பும் ஜனத்திரள்.

மேடையில் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி. ஆடல் பெண்டிர் முத்திரைப் பிடித்து நாட்டியம் ஆடிக் கொண்டிருந்தனர். மெய்மறந்த மக்கள் இசையில் லயித்து தொடையில் தட்டி, தலையை ஆட்டி ரசித்துக் கொண்டிருந்தனர். இது இரண்டாம் நிகழ்ச்சியாக இருக்க வேண்டும்.

மூன்றாம் ஜாமம் தாண்டும் போலத் தோன்றியது. மெல்ல நழுவி வாயிலுக்கு வந்தேன். வெண்புரவி நெருங்கி வந்தது. தாவி ஏறினேன். மீண்டும் ஒரு முறை ஆலயத்தின் கோபுரத்தைப் பார்த்தேன். கலசம் மின்னிக் கொண்டிருந்தது. மனமின்றி நகர்ந்தது புரவி.

பெருவழியை அடைந்து இடப்புறம் திருப்பினேன். அங்கும் சோழகங்கம் தளும்புவது போல் ஜனக் கடல் தளும்பியது. கூட்டத்தை ஊடுருவி கடந்து, வேகம் பிடித்தேன். இப்போதும் பெருவழியின் இருபுறமும் மக்கள் நடந்துக் கொண்டிருந்தார்கள்.

ஒருபுறம் கோவிலை நோக்கி, இன்னொருபுறம் தரிசனம் கண்டு முடித்தவர்கள் கிராமம் நோக்கியும் நடைப் போட்டுக் கொண்டிருந்தார்கள். ஒரு கல் தொலைவு கடந்தவுடன் குருவாலப்பர் கோவில் கண்ணில் பட்டது. விளக்கொளியில் அமைதியாகக் காட்சியளித்தது.

அடுத்த ஒரு கல் தொலைவு கடந்ததும் பெருவழி மேடேறியது. மேட்டில் ஏறும் போது திரும்பிப் பார்த்தேன். ஆலயத்தின் இடது மூலையில் இருந்து வானவேடிக்கை. வண்ண வண்ண ஒளியில் ஜொலித்தது உயர்ந்து நின்ற ஆலயம். மேடேறி இறங்கியது புரவி.

சோழகங்கம். சாலையை தொடும் தண்ணீர். நீரின் சலசலப்பு காதை வருடியது. நீரைத் தட்டி வந்த ஆடிக் காற்று அங்கேயே படுக்கத் தூண்டியது. புரவியும் சாரல் இதத்தில் வேகத்தைக் குறைத்தது. இருட்டிலும் மீன்கள் துள்ளுவது தெரிந்தது.

எதிரில் வந்த லாரியின் உச்ச ஹாரன் சத்தத்தில் சுய நினைவுக்கு வந்தேன். புரவியை பார்த்தேன், டாடா சபாரி கார். ஆம், நேற்றைய மாமன்னன் இராசேந்திரனின் அரியணை ஏறிய ஆயிரமாவது ஆண்டு விழாவிற்கு வந்தவர்கள், நிகழ்வு முடிந்து செல்லும் போது தங்களை இராஜேந்திரனாகவே உணரும் மனநிலைக்கு வந்துவிட்டார்கள், அவன் தம் பெருமைகள் கேட்டு. அந்த கால நினைவுகளுக்கே போயாயிற்று.

# இராஜேந்திரனாய் உணர்வோம், மண்ணின் பெருமை காத்திடுவோம் !

திங்கள், 28 ஜூலை, 2014

மாமன்னன் இராசேந்திரனின் திட்டமிடலும், உருவாக்கமும்

ராசேந்திர சோழன் பெருவுடையார் கோவிலையையும், சோழகங்கம் ஏரியையும் மாத்திரம் திட்டமிட்டு அமைக்கவில்லை. தஞ்சையில் இருந்து தலைநகரை மாற்றுவது என்று முடிவெடுத்த பிறகு, திட்டமிட்டு அமைத்த நகரம் தான் கங்கை கொண்ட சோழபுரமும் அதனை சுற்றியுள்ள கிராமங்களும். 

              

அரியலூர் மாவட்டத்தில் உள்ள நகரங்கள் மற்றும் கிராமங்கள், கிட்டத்தட்ட மாமன்னன் இராசேந்திரனின் காலத்தில் உருவாகியவை என்பதே வரலாற்று ஆய்வுகளை கொண்டு இறுதி செய்ய முடியும்.

தனது கோட்டையை அமைத்த பகுதி “உட்கோட்டை”. இன்றும் அதே பெயரோடு இருக்கிறது கிராமம். இதன் அருகில் தான் அரண்மனை அமைந்த மாளிகைமேடு. பிறகு படையெடுத்த பாண்டிய மன்னர்களால் அரண்மனை இடிக்கப்பட்டு விட்ட்து. இது இப்போது தொல்லியல் ஆராய்ச்சி பகுதி.

ராசேந்திரன் வருவதற்கு முன் இது காட்டுப் பகுதி. காட்டை திருத்த ஆரம்பித்த இடம் தான் “காடுவெட்டி”. இதற்கு அருகில் தான் படை நிலை கொண்ட இடம், “படைநிலை”. அருகில் "பாப்பாக்குடி" உள்ளது. இது பார்ப்பனர்குடியாக இருந்திருக்க வேண்டும்.

கோவிலை கட்டுவதற்கு சுண்ணாம்பு அரைத்த இடம் தான் “சுண்ணாம்புக்குழி”. மன்னனின் அரண்மனை, கோட்டை கட்டுவதற்கு செங்கல் தயாரித்த இடம் தான் “கீழ செங்கல்மேடு”, “மேல செங்கல்மேடு”. அடுத்த ஊர் ‘தழுதாழைமேடு”..

இதற்கு அருகில் உள்ள கிராமம் “ஆயுதகளம்”. ஆயுதங்கள் தயாரிக்கப்பட்ட பகுதி. அடுத்து “மெய்காவல் புத்தூர்”. மன்னனின் மெய்காவலர்கள் மற்றும் தலைநகரை காவல்புரிந்த வீரர்கள் தங்கியிருந்த பகுதி. கோவிலுக்கு வருவோர் தங்குவதற்கு “சத்திரம்” கிராமம்.

வீரசோழன் பெயரில் “வீரசோழபுரம்’. அரசி பெயரில் “சோழமாதேவி”. இவைகள் இன்றும் இருக்கிற ஊர்கள். “நாயகனைப்பிரியாள்” இதுவும் ஒரு அரசி பெயரால் இருக்க வேண்டும். கடாரம் வென்ற நினைவாக “கடாரம் கொண்டான்”.

ராஜராஜ சோழன் பெயரில் “அருள்மொழி”, “தேவமங்கலம்”. ராசேந்திரனின் அரசி கட்டிய கோவில் “குருவாலப்பர்கோவில்”. தளபதிகள் பெயரால் “வானதிரையன் குப்பம்”, “வானதிரையன் பட்டிணம்”.

சோழ வீரர்கள் குடிகொண்ட “சோழன்குடிகாடு”, “நந்தியன்குடிகாடு”, “உகந்தநாயங்குடிகாடு”, “படைவெட்டிக் குடிகாடு”. இவை எல்லாம் செந்துறை ஒன்றியத்தில் வருபவை.

இதல்லாமல் பரவலாக பல இடங்களில் “செயங்கொண்ட சோழபுரம்”, “சோழங்குறிச்சி”, “சோழன்பட்டி”, “வால சௌந்திர சோழபுரம்”, "ராஜேந்திரபட்டிணம்" என்று சோழன் பெயர் தாங்கிய ஊர்கள் மாவட்டம் முழுதும் விரவிக் கிடக்கின்றன. எங்கும் சோழமயம்.
# சோழன் சோர்விலன், இன்றும் வாழ்கிறான் மக்கள் மனம் நிறைந்து !

ஞாயிறு, 27 ஜூலை, 2014

சோழகங்கம் - சலமயமான சயத்தம்பம்

கங்கை கொண்ட சோழபுரம் பெருவுடையார் கோவிலை கட்டியதும், கடாரம், ஈழம் என வென்றதும் மாத்திரம் மாமன்னன் ராஜேந்திரனின் சாதனையாகக் கருதக் கூடாது. அவனால் வெட்டப்பட்ட "சோழகங்கம்" ஏரியானது அவனது முத்திரை அடையாளமாகும்.

            

கங்கை வரை படையெடுத்து வெற்றிக் கொண்டதை கொண்டாட, தான் வெட்டிய ஏரிக்கு "சோழகங்கம்" என்று பெயரிட்டான்.

கடந்தப் பதிவில் பார்த்தது போல், எப்படி கங்கை கொண்ட சோழபுரம் ஆலயம் இரு பயன்பாட்டுக்கு உபயோகமோ, அப்படியே சோழகங்கம் வெட்டப்பட்டதும். ஒரு செயலில் இரு பயன்பாடு.

அவ்வளவு உயரமான கோவிலை கட்ட சாரம் அமைப்பது என்பது ஆகாதக் கதை. கீழேயிருந்து சுவர்களை கட்ட கட்ட சுற்றி மண்ணை நிரப்பி, அதன் வழியாக கற்களைக் கொண்டு சென்று, மறுபடியும் சுவர் எழுப்பி, மீண்டும் மண்ணை நிரப்பி என்று தான் கோவில் கட்டப்பட்டிருக்கும் என்பது ஆய்வாளர்கள் பார்வை.

இதற்கு தேவையான மண்ணை எடுப்பதற்கு வெறுமனே நிலத்தை வெட்டாமல், அதனை ஏரியாக அமைக்கத் திட்டமிட்டு, எங்கு மண் வெட்டுவதற்கு ஏதுவாக இருக்கிறது என்று ஆய்ந்து அமைத்ததே சோழகங்கம்.

அதுவும் எங்கோ அமைத்து விட்டால் அதற்கான நீர் ஆதாரம் என்ன செய்வது என யோசித்து, தெற்கே கொள்ளிடத்தில் இருந்து நீர் கொண்டு வந்தால் எங்கு ஏரி அமைய வேண்டும் என திட்டமிட்டு, இன்னொரு புறம் வடக்கே வெள்ளாற்றில் இருந்தும் நீர் வர திட்டமிட்டு, மலைக்க வைக்கும் திட்டம்.

வழக்கமாக அணை கட்டுவதானால், இரண்டு மலைகளுக்கு இடையே கட்டுவது தான் இன்றைய காலம் வரை கடைபிடிக்கப்படும் தொழில் நுட்பம். ஆனால் கரிகால் சோழன் அமைத்த கல்லணை அப்படி இல்லாமல் சமதளத்தில், மணற்பரப்பில் கட்டினான். சிந்தித்து பார்க்க முடியாத தொழில் நுட்பம்.

அது போல் ஏரி வெட்டுவது ஆற்றை ஒட்டியோ, வாய்கால்களை ஒட்டியோ வெட்டப்படும். இங்கே ஏரி அமைப்பதற்காக வாய்கால்கள் வெட்டப்பட்டன. தமிழகத்தில் பெரும்பாலும் ஆறுகளும், அதிலிருந்து வெட்டப்படும் வாய்கால்களும் கிழக்கு, மேற்காகத் தான் இருக்கும். இங்கு வடக்கு, தெற்கு.

இப்படி எல்லாமே பிரத்தியேகமாக, வித்தியாசமாக சிந்தித்து அமைக்கப்பட்டதே சோழகங்கம். ராஜேந்திரனால் பல நூறு ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்ட இந்த ஏரி காலப் போக்கில் ஆக்கிரமிப்புகளால் குறுகிவிட்டது. இப்போது பல மாதங்களுக்கு நீரின்றி வறண்டும் காணப்படுகிறது.


           

இப்போதும் ஏரி, ஒரு கி.மீ அகலத்திற்கு, நான்கைந்து கி.மீ நீளத்திற்கு இருக்கிறது, அப்போதைய தோற்றத்தை நினைத்தால் சிலிர்க்கிறது. இந்த ஏரி பாசனத்தால் சுற்றி இருந்த வயல்கள் பொன் விளையும் பூமியாக மாறியதால் தான் இந்த ஏரி "பொன்னேரி" என்றழைப்படுகிறது.

எங்கள் பகுதியில் சிமெண்ட் ஆலைகளுக்காக, சுண்ணாம்பு கல் சுரங்கங்கள் உண்டு. பெரிய இயந்திரங்களையும், டிப்பர் லாரிகளையும் கொண்டு அமைக்கிறார்கள். அதனோடு ஒப்பிடும் போது, வெறும் மனித சக்தியை கொண்டு இவ்வளவு பெரிய ஏரியை வெட்டியது பிரமிப்பானது.

திருவாலங்காடு செப்பேட்டில் சோழகங்கத்தை "சலமயமான சயத்தம்பம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது கங்கை வரை சென்று வென்றதற்காக அமைக்கப்பட்ட, "நீர் மயமான வெற்றித் தூண்" என்று.

அவன் தன் வெற்றியை கொண்டாட இந்த நீராலான வெற்றித் தூணை அமைத்திருக்கலாம். ஆனால் இந்த நீர்நிலை தான் இந்தப் பகுதியின் வளத்தைப் பெருக்கியது. இந்த நீர்நிலையை அமைத்தது தான் பெரு வெற்றி. இது தான் பயனுள்ளது. இந்த வெற்றிக்கான தூண் நீராலனாதல்ல, மக்கள் மனதாலானது.

# மனமயமான சயத்தம்பம் !

வெள்ளி, 25 ஜூலை, 2014

கங்கை கொண்ட சோழபுரம் - ஆலயம் மட்டுமல்ல...

ஆன்மீகவாதிகளுக்கு அது சிறப்பானதொரு ஆலயம். உள்ளே உள்ள பெருவுடையார் என அழைக்கப்படுகிற சிவலிங்கம் தஞ்சாவூர் பெரியகோவிலில் உள்ள பெருவுடையாரை விட அளவில் பெரிது என மகிழ்வோரும் உளர்.

             

ஆனால் கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள ஆலயம் கட்டப்பட்ட போது, மாமன்னன் ராசேந்திரன் மனதில் என்ன எண்ணம் இருந்திருக்கும் என்பது புரியவில்லை.

அரச குடும்பம் தங்குவதற்கு மாளிகைமேடு பகுதியில் அமைக்கப்பட்ட அரண்மனை அகழ்வாராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது. மைசூர் போன்ற மற்ற அரண்மனைகளை ஒப்பிடும் போது இது சிறிய அளவிலேயே உள்ளது.

அரண்மனையை ஒப்பிடும் போது கோவிலுக்கு ராஜேந்திரசோழன் கொடுத்த முக்கியத்துவம் கூடுதலாகவே தெரிகிறது. பாதுகாப்புக்கு அமைக்கப்பட்ட சுற்று சுவரானது வழக்கமான சோழர் கால ஆலயத்தை போலவே அமைக்கப்பட்டிருந்தாலும் தனித்துவம் தெரிகிறது.

கோவில் உள் நந்தியை தாண்டி நுழைந்தால் பெரிய மண்டபம். நூற்றுக்கும் மேல் தூண்களை கொண்ட மண்டபம் உள்ளது. இது மகாமண்டபம் என அழைக்கப்பட்டுள்ளது. மற்ற கோவில்களில் மண்டபம் தனியாக இருக்கும் அல்லது கர்ப்பகிரகத்தை சுற்றி அமைக்கப்பட்டிருக்கும்.

மற்றக் கோவில்களில் இந்த மண்டபங்கள் ஆயிரங்கால் மண்டபம், மணிமண்டபம் என அழைக்கப்படும். இது நடன நிகழ்ச்சிகள் மற்றும் ஆன்மிக கூட்டங்களுக்காக அமைக்கப்பட்டிருந்தாலும், இங்குள்ள அமைப்பு சமயங்களில் அரசவை கூடுவதற்காகவும் அமைக்கப்பட்டுள்ளது. அதனால் தான் மகாமண்டபமோ.


            

கர்ப்பகிரகத்திற்கு முன்புறமுள்ள படிக்கட்டுகளில் ஏறினால், கர்ப்பகிரகத்திற்கு மேலுள்ள அறைகளுக்கு செல்ல முடியும். இது கோபுரத்திற்கு கீழுள்ள பகுதி. இந்தப் பகுதி பொருட்களை சேகரித்து வைக்கக்கூடிய இடமாகவும் பயன்பட்டிருக்கிறது.

போர்காலங்களிலோ அல்லது மற்ற காலங்களிலோ அரசாங்கத்தின் களஞ்சியமாக இருந்திருக்கக்கூடும். ரகசியமாக மற்றோர் பார்வைக்கு படாமல் இருக்கக்கூடிய வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது.

அதே போல, இந்த மேலே உள்ள அறை சுற்றி மூடப்பட்டிருந்தாலும் காற்று அருமையாக வருகிறது, குளிர்ச்சியாகவும் இருக்கிறது. அவசரகாலங்களில் ஒளிந்து கொள்ளவும் வசதியாக இருக்கும். மேலேயுள்ள கோபுர அடுக்கின் மேல் ஏறினால் பல கிலோமீட்டர் தூரத்திற்கு பார்க்க முடியும், கண்காணிப்பு கோபுரமாக பயன்பட்டிருக்கிறது.


            

கீழே கர்ப்பகிரகத்திலும் இதே போன்று குளிர்ச்சியாகத் தான் இருக்கும். சிறப்பான கட்டிடக்கலை. கோபுரம் அமைக்கப்பட்டுள்ள முறையும் யோசித்துப் பார்க்க முடியாத கட்டிடக் கலை. அதிலும் தஞ்சை கோவிலிலிருந்து வித்தியாசப்படுத்தி நிறைய அம்சங்கள்.

இவ்வளவு தொழில்நுட்பம் முன்னேறியுள்ள இந்தக் காலத்தில் இந்த கோவிலுக்கு வரைபடம் வரைவதென்றாலும், பொருட்களை சேகரிப்பதென்றாலும், கட்டிமுடிப்பதென்றாலும் நினைத்து பார்க்க முடியாத விஷயம்.

ஆனால் அந்த காலத்தில் போக்குவரத்து வசதியில்லாமல், எந்திரங்கள் இல்லாமல், தொழில் நுட்ப வசதியில்லாமல் இத்தகைய பிரம்மாண்ட கோயிலை கட்டியது அசாத்திய சாதனை.

நுணுக்கமான திட்டமிடல், துல்லியமான ஒருங்கிணைப்பு, பெரும் மனித உழைப்பு என இத்தனையையும் கொண்டு வெறும் ஆலயமாக மாத்திரம் அமைத்திடாமல் அது பல கண்ணோட்டத்தோடே அமைக்கப்பட்டுள்ளதாகவே தோன்றுகிறது.

கண்காணிப்புக் கோபுரம், ரகசிய பாதுகாப்பிடம், களஞ்சியம், கூட்ட அரங்கம் என பலவகையில் பயன்படும் முறையில் ஆட்சியையும் கணக்கில் கொண்டு இக் கோவிலை அமைத்துள்ளான் மாமன்னன் ராஜேந்திரன். அதனால் தான் வித்தியாசப்பட்டு உயர்ந்து நிற்கிறான்.

                        

# அரியணை ஏறி ஆயிரம் ஆண்டு, வரலாறாய் இருப்பாய் கணக்கில்லா ஆண்டு !

புதன், 23 ஜூலை, 2014

எதிரணி இல்லாத மைதானத்தில் கோல் போட...

போலீஸ் துறை மான்யத்தில் அம்மா, எதிரணி இல்லாத மைதானத்தில் ஓங்கி ஓங்கி அடித்து “கோல்” போடுவார்கள். அதற்காகவே ஏற்கனவே நான் சொன்னபடி சட்டமன்றத்தில் இருந்து திமுக உறுப்பினர்கள் ஒட்டு மொத்தமாக சஸ்பெண்ட் செய்யப்பட்டு விட்டார்கள்.

   Photo: போலீஸ் துறை மான்யத்தில் அம்மா ஆள் இல்லாத மைதானத்தில் ஓங்கி ஓங்கி அடித்து “கோல்” போடுவார்கள். அதற்காகவே ஏற்கனவே நான் சொன்னபடி சட்டமன்றத்தில் இருந்து திமுக உறுப்பினர்கள் ஒட்டு மொத்தமாக சஸ்பெண்ட் செய்யப்பட்டு விட்டார்கள்.

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 50க்கு மேற்பட்ட கற்பழிப்பு சம்பவங்கள், எண்ணற்ற கொலைகள், கொள்ளைகள் என்று மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு மிக திருப்திகரமாக இருப்பதை திமுக உறுப்பினர்கள் “பாராட்டுவார்கள்”, அதை விடக் கூடாது என்பதே அவர்கள் எண்ணம்.

நேற்றைய முன்தினம் மின்துறை மானியத்தில் பேச ஆரம்பித்த ஐ.பெரியசாமி அவர்களை பேச விடாமல், எழுந்து எழுந்து வம்பிழுத்தார் அமைச்சர் நத்தம். ஒரு மணி நேரம் இந்த இழுபறி நடந்தது. இதில் பத்து நிமிடம் தான் ஐ.பி பேசியிருப்பார். மீதி நேரம் முழுதும் நத்தத்தின் மின்தடை தத்துவம் தான்.

எப்போதாவது தான் தளபதி அவர்கள் குறுக்கிட்டு விளக்கம் அளிப்பார்கள். மிகுந்த ஜெண்டிலாக நடந்து கொள்கிறார் என்பது அதிமுக உறுப்பினர்களே சொல்வது. அவர் இன்று ஒரு விளக்கம் அளிக்க பத்து நிமிடம் முயன்றும் சபா அனுமதிக்கவில்லை.

இன்று வறட்சி குறித்து விளக்கம் அளிக்க வேண்டிய மந்திரி உதயகுமார் தேவை இல்லாமல் தலைவர் கலைஞரை விமர்சனம் செய்தது திமுக உறுப்பினர்களை வம்புக்கு இழுத்து வெளியே அனுப்ப தான். அனுப்பியாயிற்று.

தளபதி அவர்கள் கீழ்கண்டவாறு கண்டித்திருக்கிறார்கள்
“அமைச்சர் சொல்வதையும் ஒழுங்காக சொல்லாமல் வேண்டுமென்றே எங்களை கோபப்படுத்த வேண்டும், நாங்கள் எழும்பி கேள்வி கேட்க வேண்டும், அதன் பிறகு அவையிலே பிரச்சனை எழுப்பப்பட வேண்டும், அந்த பிரச்சனையால் நாங்கள் எல்லாம் அவையிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும். 

அதாவது இந்த அவைக்கு வருவதை ஆளுங்கட்சியில் இருக்கக் கூடிய அமைச்சர்களுக்கும் பிடிக்கவில்லை, முதலமைச்சருக்கும் பிடிக்கவில்லை, குறிப்பாக சபாநாயகருக்கும் பிடிக்கவில்லை. ஆக திட்டமிட்டு வேண்டுமென்றே எங்களை வெளியேற்றுவதிலேயே குறியாக இருந்து அந்தப் பணியை சபாநாயகர் முறையாக செய்து கொண்டிருக்கிறார். 

ஆகவே சர்வாதிகார சபாநாயகருடைய இந்த போக்கை திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம். தொடர்ந்து இன்றைக்கும் வெளியேற்றியிருக்கிறாரகள். அது தான் மிக கொடுமையான ஒரு நடவடிக்கை. 

அப்படிப்பட்ட நடவடிக்கை எடுக்ககூடிய சர்வாதிகாரி சபாநாயகரை திராவிட முன்னேற்ற கழகத்தின் சட்டமன்ற உறுப்பினராக இருக்கக்கூடிய நாங்கள் அனைவரும் கண்டிக்கிறோம்.”

# இங்கே இருந்து தான் வெளியேற்றி இருக்கிறீர்கள். மக்களை சந்திக்கப் போகிறோம்...

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 50க்கு மேற்பட்ட கற்பழிப்பு சம்பவங்கள், எண்ணற்ற கொலைகள், கொள்ளைகள் என்று மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு மிக திருப்திகரமாக இருப்பதை திமுக உறுப்பினர்கள் “பாராட்டுவார்கள்”, அதை விடக் கூடாது என்பதே அவர்கள் எண்ணம்.

நேற்றைய முன்தினம் மின்துறை மானியத்தில் பேச ஆரம்பித்த ஐ.பெரியசாமி அவர்களை பேச விடாமல், எழுந்து எழுந்து வம்பிழுத்தார் அமைச்சர் நத்தம். ஒரு மணி நேரம் இந்த இழுபறி நடந்தது. இதில் பத்து நிமிடம் தான் ஐ.பி பேசியிருப்பார். மீதி நேரம் முழுதும் நத்தத்தின் மின்தடை தத்துவம் தான்.

எப்போதாவது தான் தளபதி அவர்கள் குறுக்கிட்டு விளக்கம் அளிப்பார்கள். மிகுந்த ஜெண்டிலாக நடந்து கொள்கிறார் என்பது அதிமுக உறுப்பினர்களே சொல்வது. அவர் இன்று ஒரு விளக்கம் அளிக்க பத்து நிமிடம் முயன்றும் சபா அனுமதிக்கவில்லை.

இன்று வறட்சி குறித்து விளக்கம் அளிக்க வேண்டிய மந்திரி உதயகுமார் தேவை இல்லாமல் தலைவர் கலைஞரை விமர்சனம் செய்தது திமுக உறுப்பினர்களை வம்புக்கு இழுத்து வெளியே அனுப்ப தான். அனுப்பியாயிற்று.

தளபதி அவர்கள் கீழ்கண்டவாறு கண்டித்திருக்கிறார்கள்
“அமைச்சர் சொல்வதையும் ஒழுங்காக சொல்லாமல் வேண்டுமென்றே எங்களை கோபப்படுத்த வேண்டும், நாங்கள் எழும்பி கேள்வி கேட்க வேண்டும், அதன் பிறகு அவையிலே பிரச்சனை எழுப்பப்பட வேண்டும், அந்த பிரச்சனையால் நாங்கள் எல்லாம் அவையிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும்.

அதாவது இந்த அவைக்கு வருவதை ஆளுங்கட்சியில் இருக்கக் கூடிய அமைச்சர்களுக்கும் பிடிக்கவில்லை, முதலமைச்சருக்கும் பிடிக்கவில்லை, குறிப்பாக சபாநாயகருக்கும் பிடிக்கவில்லை. ஆக திட்டமிட்டு வேண்டுமென்றே எங்களை வெளியேற்றுவதிலேயே குறியாக இருந்து அந்தப் பணியை சபாநாயகர் முறையாக செய்து கொண்டிருக்கிறார்.

ஆகவே சர்வாதிகார சபாநாயகருடைய இந்த போக்கை திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம். தொடர்ந்து இன்றைக்கும் வெளியேற்றியிருக்கிறாரகள். அது தான் மிக கொடுமையான ஒரு நடவடிக்கை.

அப்படிப்பட்ட நடவடிக்கை எடுக்ககூடிய சர்வாதிகாரி சபாநாயகரை திராவிட முன்னேற்ற கழகத்தின் சட்டமன்ற உறுப்பினராக இருக்கக்கூடிய நாங்கள் அனைவரும் கண்டிக்கிறோம்.”

# இங்கே இருந்து தான் வெளியேற்றி இருக்கிறீர்கள். மக்களை சந்திக்கப் போகிறோம்...

செவ்வாய், 22 ஜூலை, 2014

மக்கள் மனம் கொண்ட சோழன் !

                   

எங்கள் அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தின் எந்த கிராமத்திற்கு போனாலும் சில பெயர்கள் அதிகமாக இருக்கும். சில கிராமங்களில் குலதெய்வங்களின் பெயர்களும், சில ஊர்களில் திணிக்கப்பட்ட சாமிகளின் பெயரும், சில கிராமங்களில் நல்ல தமிழ் இலக்கியப் பெயர்களும் இருக்கும்.

ஆனால் எல்லா கிராமங்களிலும் ஒரு பெயர் நீக்கமற நிறைந்திருக்கும். முதலில் இதை நான் விளையாட்டாகத் தான் கவனித்தேன். ஆனால் கூர்ந்து கவனித்தப் போது தான் ஒவ்வொரு ஊருக்கும் பத்து பேருக்காவது இந்தப் பெயர் இருந்ததை கவனித்தேன்.

சில பெயர்கள் சில தலைமுறைகளோடு நின்று விடும். சில பெயர்கள் ஒவ்வொரு சமுதாயத்துக்குள், சாதிக்குள் முடங்கிவிடும். சில பெயர்கள் ஏழை, பணக்காரன் வித்தியாசத்தைக் காட்டிவிடும்.

ஆனால் இந்தப் பெயர் எல்லா வித்தியாசங்களையும் உடைத்து, எல்லைகள் கடந்து பரவி இருக்கிறது. பிறகு மற்ற மாவட்டங்களையும் சற்றே கவனித்துப் பார்த்ததில் அங்கும் இந்தப் பெயர் ஊடுவியிருப்பதை உணர முடிந்தது. அந்தப் பெயர்….

“ராஜேந்திரன்”

இந்தப் பெயர் எங்கள் மண்ணில் பரவியிருப்பதில் அர்த்தம் இருக்கிறது. எங்கள் மண்ணின் பெருமையான கங்கை கொண்ட சோழபுரத்தை அமைத்தவன். அதனையே தலைநகராகக் கொண்டு ஆண்டவன். அங்கே புகழ் பெற்ற “கற்றளி”யை அமைத்தவன்.

இங்கிருந்து போர் நடத்தி, கங்கைகொண்டவன், கடாரம்வென்றவன், ஈழம் ஆணடவன் என்ற பல கீர்த்திகளுக்கு சொந்தக்காரன். இதன் காரணமாக இந்த மண்ணுக்கு பெருமை சேர்த்தவன் என்ற வகையில் அவன் பெயர் வழங்கப்படலாம்.

ஆனால் வரலாற்றலாளர்களால் அதிகம் கொண்டாடப்படும் ராஜராஜசோழன் பெயரை விட ராஜேந்திரன் பெயரே அதிகம் புழங்குகிறது, அவன் ஆண்ட தஞ்சைப் பகுதியிலும், தமிழகத்திலும்.

தமிழகம் முழுதும் பல்வேறு மன்னர்களால் ஆளப்பட்டிருக்கிறது. ஆனால் அவர்கள் பெயர் இந்த அளவிற்கு பெயரிடப்படுவதாகத் தெரியவில்லை. தென்மாவட்டங்களை எடுத்துக் கொண்டால் “பாண்டியன்” நிறைந்திருக்கும். ஆனால் அது ஒரு பரம்பரையின் பெயர்.

கங்கை கொண்ட சோழபுரம் கோவிலின் உயரம், தஞ்சை பெரியக் கோவிலின் உயரத்தை தாண்டினால் தந்தையை விஞ்சியதாக ஆகிவிடும் என்று, கட்டுமானத்தில் மாற்றம் செய்து உயரத்தை குறைத்து அமைத்தான்.

கூடுதல் உயரத்தை கணக்கிட்டு அடித்தளம் அமைக்கப்பட்டு, அதனடிப்படையில் கர்ப்பகிரகமும் அமைக்கப்பட்டு, மேல் தளம் வந்தவுடன் திடீரென கூரை குறுக்கப்பட்டிருக்கும். மேல் தளம் ஏறிப் பார்த்தால் தெரியும்.

ஆனால் பெயரிடப்படுவதில் தந்தையை விஞ்சும் அளவிற்கு மக்கள் மனதில் இடம் பிடித்து விட்டான் “இராஜேந்திர சோழன்”

வருகிற 24.07.2014 இராஜேந்திரசோழன் அரியணை ஏறிய ஆயிரமாவது ஆண்டு விழா.


                        

ராஜேந்திரனுக்கு பல்வேறு சிறப்புப் பெயர்கள் உண்டு. கங்கைகொண்ட சோழன், கடாரம் கொண்ட சோழன், முடிகொண்ட சோழன், மண்ணை கொண்ட சோழன். இனி இதையும் சேர்த்துக் கொள்ளலாம்.

# மக்கள் மனம் கொண்ட சோழன் !

ஞாயிறு, 20 ஜூலை, 2014

சட்டசபை உள்ளே, வெளியே...

“எங்கள் உறுப்பினர் எஸ்.எஸ்.சிவசங்கர் மீதான நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும். அவர் தன் தொகுதிக்காக சட்டமன்றத்தில் பணியாற்ற அனுமதிக்க வேண்டும். சஸ்பெண்ட் நடவடிக்கையை உடனடியாக திரும்ப்ப் பெற்றுக் கொள்ள வேண்டும்”

அண்ணன் துரைமுருகன் அவர்கள் சட்டமன்றத்தில் திங்கட்கிழமை, 14-ந் தேதி கோரிக்கை வைத்தார்கள். ஆனால் சபாநாயகர் செவிசாய்க்கவில்லை. இப்படி ஒரு கோரிக்கை வைத்ததே தெரியாத மாதிரி இருந்து விட்டாராம்.

மீண்டும் செவ்வாய்கிழமை, 15-ந் இதே கோரிக்கையை வலியுறுத்தியிருக்கிறார். ஆனாலும் சபாநாயகர் மனம் இரங்கவில்லை அல்லது அவருக்கு சமிங்ஞை வரவில்லை.

இதே கடந்த தலைவர் கலைஞர் ஆட்சிக்காலத்தில் இரண்டு நாட்களுக்கு மேல் நடவடிக்கையை நீடிக்க விடமாட்டார். கம்யூனிஸ்ட்கள் அது குறித்து கோரிக்கை எழுப்புவார்கள். உடனே நடவடிக்கை நீக்கப்படும்.

ஒரு முறை அதிமுக வெளிநடப்பு செய்து அறைக்கு போய் விட்டார்கள். தலைவர் அன்றைய துணை முதல்வரான தளபதி அவர்களை உடனே அவர்களது அலுவலக அறைக்கே அனுப்பி அழைத்து வர செய்தார்கள். தளபதி அவர்களும் சென்று பேசி வந்தார்கள்.

அதிமுக-விடமிருந்தோ, ஜெ-விடமிருந்தோ இது போன்ற நடவடிக்கையை எதிர்பார்க்க முடியாது, எதிர்பார்க்கவுமில்லை. இதைவிட மோசமாக தான் எதிர்பார்க்க முடியும்.

நாட்டையே உலுக்கியிருக்கிற மவுலிவாக்கம் 61-பேரை காவு கொண்ட கொடூர சம்பவத்தை விவாதிக்க வேண்டும் என்று கோரியதால், ஓடுகாலிகள் என்ற தரம் கெட்ட வார்த்தையை பயன்படுத்தினார் அமைச்சர் வைத்திலிங்கம்.

மறுநாள் அந்த வார்த்தையை நீக்க வேண்டுமென திமுக உறுப்பினர்கள் குரல் எழுப்பியதை அனுமதிக்காத சபாநாயகர் திமுக உறுப்பினர்களை அவையை விட்டு வெளியேற்றினார்.

இன்று கல்வி மானியக் கோரிக்கையில் பேசிய மயிலாப்பூர் சட்டமன்ற அதிமுக உறுப்பினர், தேவையில்லாமல் எதிர்கட்சிகளை விமர்சித்து தரக்குறைவாக பேசுகிறார்.

அதை கண்டிக்காத சபாநாயகர், இன்றைக்கும் அமைச்சர் வைத்திலிங்கம் “தகுதி இருக்கிறதா?” என்று பேச அனுமதிக்கிறார். நீக்கக் கோரிய திமுக உறுப்பினர்களை சர்வாதிகாரமாக வெளியேற்றி இருக்கிறார். இது இரண்டாம் முறை. மூன்றாவது முறையும் வெளியேற்றி, கூட்டத் தொடர் முழுவதற்கும் நீக்கலாம் என்பது தான் அதிமுக திட்டம்.

காரணம், காவல் மானியக் கோரிக்கையின் போது, ஜெயலலிதா அரசின் சட்டம் ஒழுங்கு சீர்குலைவை, நிர்வாக சீர்கேட்டை திமுக கடுமையாக விமர்சிக்கும் என்பதால் தான்.

சட்டமன்றத்தில் எங்கள் குரலை ஒலிக்கவிடாமல் தடுக்கலாம். ஆனால் மக்கள் மன்றத்தில் உங்களால் தடுக்க முடியாது. சபையில் எதிர்கட்சியே இல்லாமல் மகிழ்ச்சியாக இருங்கள்.

# இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்....

சனி, 19 ஜூலை, 2014

அண்ணாதாவுத், கொள்கையில் நீ ‘மன்னா’ தாவுத் !

துடிப்பான நடை, மிடுக்கான உடை, பிடரி சிலிர்க்கும் முடி, மூக்கை துளைக்கும் பொடி, அனல் தெறிக்கும் வார்த்தை, கனல் நெறிக்கும் பார்வை, நெஞ்சம் நெகிழும் அன்பு, தஞ்சம் தரும் பண்பு.

                                              Photo: துடிப்பான நடை, மிடுக்கான உடை, பிடரி சிலிர்க்கும் முடி, மூக்கை துளைக்கும் பொடி, அனல் தெறிக்கும் வார்த்தை, கனல் நெறிக்கும் பார்வை,  நெஞ்சம் நெகிழும் அன்பு, தஞ்சம் தரும் பண்பு.

அவர் தான் அண்ணா தாவுத். பணியால் அவர் ஆசிரியர். கொள்கையால் பேராசிரியர். ஆசிரியர் பணியாற்றும் போது, வெறும் பாடத்தை நடத்தாமல் திராவிடத்தையும் போதித்தவர்.

மதம் இசுலாமாக இருக்கலாம், ஆனால் பகுத்தறிவு பகலவனின் சீடர். அண்ணாவின் எழுத்துக்களை மனதில் உள் வாங்கியவர், கலைஞரின் படைப்புகளை கரைத்துக் குடித்தவர்.

இவை எல்லாம் தாண்டி புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் தாசர் இவர். அவர் பாடல் வரிகளை இவர் உச்சரித்தால், இவர் தான் எழுதினாரோ என சந்தேகம் வரும், அல்லது பாரதிதாசனே இவர் உருவில் வந்திருக்கிறாரோ என சந்தேகம் வரும்.

“ கொலை வாளினை எடடா, மிகு கொடியோர் செயல் அறவே” என்று அவர் பிடரி முடி குலுங்க முழங்கினால் நமக்கு நாடி நரம்பு முறுக்கேறும், வாள் பிடிக்க கரம் துடிக்கும். அது தான் அய்யா அண்ணாதாவுத்.

அண்ணா காலத்தில், தலைவர் கலைஞர் காலத்தில் அயராமல் கழகப் பணியாற்றியவர் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட போதும் மாறவில்லை. கழகப் பணி தொடர்ந்தார் பள்ளியிலும், இயக்கத்திலும்.

ஆட்சி மாற்றம், கழகப்பணிக்காக பணியிட மாற்றத்தை பரிசாக தந்தது. ஆனாலும் அயரவில்லை. கழக உணர்வில் திளைத்தவருக்கு எம்.ஜி.ஆர் ஆட்சியை எதிர்த்து குரல் கொடுப்பது முதல் பணியாக அமைந்தது.

அண்ணன் ஆ.ராசா அவர்களின் தேர்தல் பணிகளுக்கெல்லாம் உடனிருந்தவர். 1998 தேர்தல் தோல்வியின் போது, பொடி டப்பாவை தட்டிக் கொண்டு சொல்வார் அண்ணாதாவுத்,”இந்தத் தோல்வி எல்லாம் நமக்கு கால் தூசு. எழுக, புறப்படுக”. அவர் வார்த்தைகள் உணர்வை தூண்டும்.

காலமெல்லாம் பேசியவர், உடல் நலம் குலைந்து பேச இயலாமல் போனார். மருத்துவமனையில் நீண்ட சிகிச்சை. அய்ந்துக்கு மேற்பட்ட முறை அண்ணன் ராசா அவர்கள் வந்து ஆறுதல் கூறினார். சிகிச்சைக்கு முழு பொறுப்பேற்றுக் கொண்டார்,

ஆனாலும் சிகிச்சை பலனளிக்கவில்லை, இயற்கை வென்று விட்டது. அவர் பிரிந்தாலும், அவர் ஊட்டிய உணர்வு என்றும் குன்றாது.

# அண்ணாதாவுத், கொள்கையில் நீ ‘மன்னா’ தாவுத் !

அவர் தான் அண்ணா தாவுத். பணியால் அவர் ஆசிரியர். கொள்கையால் பேராசிரியர். ஆசிரியர் பணியாற்றும் போது, வெறும் பாடத்தை நடத்தாமல் திராவிடத்தையும் போதித்தவர்.

மதம் இசுலாமாக இருக்கலாம், ஆனால் பகுத்தறிவு பகலவனின் சீடர். அண்ணாவின் எழுத்துக்களை மனதில் உள் வாங்கியவர், கலைஞரின் படைப்புகளை கரைத்துக் குடித்தவர்.

இவை எல்லாம் தாண்டி புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் தாசர் இவர். அவர் பாடல் வரிகளை இவர் உச்சரித்தால், இவர் தான் எழுதினாரோ என சந்தேகம் வரும், அல்லது பாரதிதாசனே இவர் உருவில் வந்திருக்கிறாரோ என சந்தேகம் வரும்.

“ கொலை வாளினை எடடா, மிகு கொடியோர் செயல் அறவே” என்று அவர் பிடரி முடி குலுங்க முழங்கினால் நமக்கு நாடி நரம்பு முறுக்கேறும், வாள் பிடிக்க கரம் துடிக்கும். அது தான் அய்யா அண்ணாதாவுத்.

அண்ணா காலத்தில், தலைவர் கலைஞர் காலத்தில் அயராமல் கழகப் பணியாற்றியவர் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட போதும் மாறவில்லை. கழகப் பணி தொடர்ந்தார் பள்ளியிலும், இயக்கத்திலும்.

ஆட்சி மாற்றம், கழகப்பணிக்காக பணியிட மாற்றத்தை பரிசாக தந்தது. ஆனாலும் அயரவில்லை. கழக உணர்வில் திளைத்தவருக்கு எம்.ஜி.ஆர் ஆட்சியை எதிர்த்து குரல் கொடுப்பது முதல் பணியாக அமைந்தது.

அண்ணன் ஆ.ராசா அவர்களின் தேர்தல் பணிகளுக்கெல்லாம் உடனிருந்தவர். 1998 தேர்தல் தோல்வியின் போது, பொடி டப்பாவை தட்டிக் கொண்டு சொல்வார் அண்ணாதாவுத்,”இந்தத் தோல்வி எல்லாம் நமக்கு கால் தூசு. எழுக, புறப்படுக”. அவர் வார்த்தைகள் உணர்வை தூண்டும்.

காலமெல்லாம் பேசியவர், உடல் நலம் குலைந்து பேச இயலாமல் போனார். மருத்துவமனையில் நீண்ட சிகிச்சை. அய்ந்துக்கு மேற்பட்ட முறை அண்ணன் ராசா அவர்கள் வந்து ஆறுதல் கூறினார். சிகிச்சைக்கு முழு பொறுப்பேற்றுக் கொண்டார்,

ஆனாலும் சிகிச்சை பலனளிக்கவில்லை, இயற்கை வென்று விட்டது. அவர் பிரிந்தாலும், அவர் ஊட்டிய உணர்வு என்றும் குன்றாது.

# அண்ணாதாவுத், கொள்கையில் நீ ‘மன்னா’ தாவுத் !

வெள்ளி, 18 ஜூலை, 2014

அஞ்சு ரூவா ஒரு பிரச்சினையா ?

மூணு மணிக்கு அலாரம் அடிச்சுது, ஆனா தூக்கம் கலையல. ஆனா என்ன செய்யறது, 4.30க்கு டிரெயின் வந்துடுமாம். ராத்திரியே மகன் உத்தரவு போட்டிருந்தார்.

“அப்பா, சரியா வந்துடுங்க. வழக்கம் போல லேட் பண்ணிடாதீங்க. அப்புறம் நான் மட்டும் ஸ்டேஷன்ல தனியா நிக்கனும்.” பள்ளி சுற்றுலா முடிந்து வர்றார். 

                    

காரை கிளப்பினேன். அதிகாலையும் நல்லாத் தான் இருக்கு. டிராபிக்கே இல்லை. நேரமிருந்ததால், இளையராஜாவை இழைய விட்டு மெல்ல ஊர்ந்தேன். வழியில் நின்ற டிராபிக் போலீஸ் தூக்கக் கலக்கத்தில் கை நீட்டினார். லைசென்ஸ் காட்டி நகர்ந்தேன்.

பீச் ரோட். சாலையோரம் பிளாட்பார்மில், மக்கள் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார்கள், உலகக் கவலைகள் துறந்து. ஆங்காங்கே பிளாட்பார்மில் ஆட்டோக்களும்.

போர் வீரர் நினைவுச் சின்னம். துறைமுகம் செல்லும் ராட்சத கண்டெய்னர்கள் சாலையை ஆக்ரமித்திருந்தன. ஊடே நுழைய முயன்றேன். முடியவில்லை. நேரம் ஆக ஆரம்பித்தது. லேசாக டென்ஷன்.

முன்னேறும் வாய்ப்பு இருப்பதாக தோன்றவில்லை. வேறு வழி இல்லை என்று ரிவர்ஸ் எடுத்தேன். யு-டர்ன். நேப்பியர் பாலத்தில் திரும்பி அண்ணா சாலையை பிடித்தேன்.

அதிகாலை பஸ்கள் அணிவகுக்க ஆரம்பித்திருந்தன. வால் பிடித்து ஒரு வழியாக சென்ட்ரலை அடைந்தேன். பார்க்கிங்கில் காரை விட்டேன். கட்டணம் கொடுத்தேன். பாக்கி ஐந்து ரூபாய் சில்லறை இல்லாமல் தடுமாறினார்.

நேரம் பார்த்தேன். “சரி பரவாயில்லை, டோக்கன் கொடுங்க”. நகர்ந்தேன். காரை நிறுத்திவிட்டு சென்ட்ரல் உள், பக்கவாட்டு வழியில் நுழைந்தேன். தூக்கம் கலைப்போம் என காபி வாங்க போனேன். அதே ஐந்து ரூபாய் பிரச்சினை. இங்கும் சில்லறை இல்லை.
“விடுங்க” என்று, காபியை வாங்கிக் கொண்டு ரயில் வருகை அறிவிப்புப் பலகை நோக்கி நகர்ந்தேன். காபி குடித்துக் கொண்டே சுற்றி நோட்டம் விட்டேன். வெளியேறும் வழியில் ரயில்வே காவல் துறையினர் மிடுக்காக நின்றுக் கொண்டிருந்தனர்.

இந்த அதிகாலையிலும் ப்ரெஷாக இருந்தனர். பயணிகளை உன்னிப்பாக பார்த்தவாறு இருந்தனர். ரயில் வரும் அறிவிப்பு ஒலித்தது. பாதி காபியில் குப்பைத் தொட்டியில் போட்டேன்.

அப்போது தான் ஞாபகம் வந்தது. பிளாட்பார்ம் டிக்கெட் வாங்கவில்லை. மாட்டினா அசிங்கமாயிற்றே. முன்பக்கம் விரைந்தேன். டிக்கெட் கவுண்டர். பணம் கொடுத்தேன். டிக்கெட் கொடுத்தார். அதே ஐந்து ரூபாய் பிரச்சினை.

இனியும் முடியாது. எத்தனை ஐந்து ரூபாய்? என்ன செய்வது? ரயில், ஸ்டேஷனுள் நுழையும் சத்தம். யோசித்தேன், “இன்னொரு டிக்கெட் கொடுங்க”. ஐந்து ரூபாய் பிராப்ளம் சால்வ்ட். ரெண்டு டிக்கெட்டையும் வாங்கிக் கொண்டு ரயிலை நோக்கி ஓடினேன். யாருகிட்ட ?

# ஆக்ச்சுவலி, இந்தியப் பொருளாதாரம்...

வியாழன், 17 ஜூலை, 2014

ஓடிப் போன 'ஜெ'வும், ஓடுகாலியும்...

சட்டமன்றத்தில் அமைச்சர் வைத்தி “ஓடுகாலியை” பயன்படுத்தியது ஒரு திசை திருப்பும் உத்தி. ஜெ-வின் மூளையில் உதித்தது. 11 மாடி பிரச்சினையை திசை திருப்புவதற்கு கையாண்ட உத்தி.

              

10-ந் தேதி சட்டமன்றம் கூடிய அன்று, எதிர்கட்சிகள் 61 பேர் உயிர் பலியான பிரச்சினையை எழுப்பி, நீதி கேட்பார்கள், பிரளயம் நிகழும் என்று ஜெயலலிதாவிற்கு தெரியும்.

அன்று வழக்கத்திற்கு மாறாக சபாநாயகர் வருவதற்கு முன்பாக, தான் எப்பொழுதும் வரும் நேரத்திற்கு முன்பாகவே அவையில் வந்து அமர்ந்தார். இரங்கல் தீர்மானங்கள் நிறைவேறின. அவை அரை மணி நேரம் ஒத்தி வைக்கப்பட்டது.

அப்போது தலைமை செயலக வளாகத்தில் உள்ள, மராமத்து வேலைகள் முடிந்த நாமக்கல் கவிஞர் மாளிகையை, புதியக் கட்டிடத்தை போல், நேரில் போய் திறந்து வைத்தார் ஜெ.

அதற்கு பிறகு சட்டமன்றம் வந்தவர் சிறிது நேரம் அமர்ந்திருக்கிறார். கேள்வி நேரத்தில் அமைச்சர்கள் பதிலளித்துக் கொண்டிருக்கிறார்கள். கேள்வி நேரம் முடிந்ததும் ஸீரோ ஹவர் வரும்.

அதில் 11 மாடிக் கட்டிடப் பிரச்சினை எழுப்ப எதிர்கட்சிகள் காத்திருப்பது ஜெ-வுக்கு தெரியும். கேள்வி நேரத்தின் இடையிலேயே எழுந்து கிளம்புகிறார். அறைக்கு சென்று திரும்புவார் என எதிர்கட்சி உறுப்பினர்கள் நினைத்திருக்கிறார்கள், ஆளும் கட்சி உறுப்பினர்களும்.

சில அமைச்சர்கள் பின்னால் செல்கிறார்கள். சிறிது நேரத்தில் சட்டமன்ற வளாகம் பரப்பரப்படைகிறது. முதல்வர் கான்வாய் கிளம்புகிறது. ஜெ வீட்டிற்கு கிளம்பி விட்டார்.

அப்புறம் தான் அவர் ஆலோசனையை பெற்றிருந்த அமைச்சர் வைத்தி “ஓடுகாலி” என எகிறி குதித்தது, எதிர்கட்சிகளை பேச விடாமல் சபா துள்ளிக் குதித்தது எல்லாம்.

சின்னப் பிரச்சினைகளுக்கு எல்லாம் ஆணித்தரமாக(அப்படி நினைத்துக் கொண்டு) பதில் சொல்லும் முதல்வர் ஜெயலலிதா 61 பேர் இறந்த கோர விபத்தில் அரசின் கொடூர முகத்திரை கிழிந்து விடும் என்பதால் தான் ஓடிப் போனார்.
அப்படி செய்தால், மக்கள் கவனத்தில் இருந்து அந்தப் பிரச்சினையை தவிர்த்து விடலாம், திசை திருப்பி விடலாம் என்பது ஜெயலலிதாவின் எண்ணம்.

ஜெயலலிதாவை தாங்கி பிடித்துக் கொண்டிருக்கும் பத்திரிக்கைகள் அந்த வழியில் தான், இது போன்ற அரசுக்கு சிக்கல் தரும் செய்திகளை வெளியிடாமல், திமுக குறித்து அவதூறு எழுதுவதையே வேலையாகக் கொண்டுள்ளனர்.

அதன் அட்வான்ஸ் லெவல் தான் குமுதம் ரிப்போர்ட்டர். தமிழகத்தின் வார இதழ்கள் 11 மாடிப் பிரச்சினையை எழுதி வரும் நிலையில் குமுதம் ரிப்போர்ட்டர் இதழின் திசை திருப்பும் உத்தியே அந்த கவர் ஸ்டோரி.

இப்படியான செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருந்தால், மக்கள் இவர்களை மஞ்சள் பத்திரிக்கையாகத் தான் பார்ப்பார்கள் என்பதை உணரவில்லை. இவர்களுக்கும் குடும்பம் உண்டு என்பதை உணர்வதில்லை.

# எந்த ஆயுதம் எடுக்கிறாயோ, அந்த ஆயுதத்தால் தான் அழிவாய் !

புதன், 16 ஜூலை, 2014

தமிழர்களாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள், ஆந்திராவில் !

இது தான் நகரிக்கு செல்வது முதல் முறை. திருப்பதி செல்லும் வழியில் இருக்கும் அதே நகரி தான். கல்லூரி கால அறை நண்பர் பாலகிருஷ்ணனின் தந்தை மறைந்த செய்தி கேட்டு நண்பர்கள் விரைந்தோம்.

பாலா யு.எஸ்ஸிலிருந்து காலை தான் வந்து இறங்கியிருந்தார். நாங்கள் மதியம் போய் சேர்ந்தோம். திருப்பதி செல்லும் சாலையில் தடக்கென இடதுபுறம் திரும்புகிறது. நகரி, சிறு நகரம்.

உள்ளே நுழைந்தவுடன் பிரம்மாண்ட சிலை. 10 அடி உயரத்தில் மறைந்த முதல்வர் ராஜசேகர ரெட்டி கம்பீரமாக. நாலுரோட்டில் நாலாப்புறமும் டிஜிட்டல் தட்டி. எல்லாத் தட்டியிலும், அட “நடிகை ரோஜா”. அவர் தான் இப்போ நகரி எம்.எல்.ஏ.

கடைகளில் ஜாங்கிரியை பிய்த்து போட்டது போல் தெலுகு போர்டுகள். மூளையில் லாங்குவேஜ் ஆப்சனில் ‘தெலுகை’ ஆக்டிவேட் செய்து வழி கேட்க தயாரானேன். கண்ணீர் அஞ்சலி நோட்டீஸ் கண்ணில் பட்டது,”தாமோதரம் மறைவு”.

அதை காட்டிக் கேட்க முனைந்த நண்பருக்கு பதில் வந்தது தமிழில், “அந்த ரோட்டில் போனீங்கன்னா ரெண்டாவது சந்து”. இறங்கி அவர் காட்டிய ரோட்டில் நுழைந்தோம். “கடக், கடக்” முதல் வீட்டில் இருந்து சத்தம் வந்தது.

ஒவ்வொரு வீட்டிலிருந்தும் அதே சத்தம். பவர்லூம் தறி சத்தம். காது நிரம்பியது. இந்த கடக்கை தாண்டுவதற்குள் அடுத்த வீட்டு “கடக்”. இதில் ஒரு வீட்டில் உச்சஸ்தாயியில் ரேடியோ அலறியது, “பொன்னெழில் பூத்தது”

நண்பர் வீட்டை அடைந்தோம். பறை இசை முழங்கிக் கொண்டிருந்தது. உடலை குளிப்பாட்டி இறுதிக் கட்ட சாங்கியங்கள். பெண்கள் சுற்றி வந்து அழுது கொண்டிருந்தார்கள்.


               (படம் - ஓவியர் மணிவர்மா)

பூ அலங்காரத்துடன் எளிய பாடை. அப்படியே தமிழ்நாட்டு கிராமத்து சடங்குகள். ‘கோவிந்தா, கோவிந்தா” என்று முழங்கி இறுதி ஊர்வலம் கிளம்பியது. நண்பனுக்கு ஆறுதல் கூறியவாறு உடன் நடந்தோம்.

அரை கிலோ மீட்டர் தூர பயணம். வழியில் ஒரு நூலகம் கண்ணில் பட்டது. தமிழ்மக்கள் நிதியளித்து கட்டியது போல. தமிழிலேயே கல்வெட்டுகள், நிதியளித்தோர், திறப்பாளர் விபரங்களுடன்.

வழியெங்கும் வீடுகள் முன் கோலங்கள். சுவர்களில் சுபாரி பாக்கு விளம்பரம் மட்டும் தெலுகில் இருந்தது. மற்றபடி தமிழ் போஸ்டர்கள், நோட்டீஸ்கள். சன் டைரக்ட் டிஷ் ஆண்டெனாக்கள்.

ஊரில் நுழைந்ததிலிருந்து கிளம்பும் வரை ஒரு போஸ்டர் நீக்கமற நிறைந்திருந்தது, “விஜய் பிறந்தநாள் போஸ்டர்” சித்தூர் மாவட்ட ரசிகர்கள் சார்பாக.

இடுகாட்டை அடைந்தோம். பாடையுடன் இடுகாட்டை மூன்று சுற்று, விறகு அடுக்கி, மேலே விராட்டி அடுக்கி, மேலே வைக்கோல் போட்டு உடலைக் கிடத்தி அப்படியே நம் கிராம நடைமுறைகள்.

இடுகாட்டை சூழ்ந்திருந்த சிறு குன்றுகளுக்கு அப்புறமிருந்து ஸ்பீக்கரில் தொடர்ந்து தமிழ் சினிமாப் பாடல்கள், கல்யாண வீடு போலும். வந்திருந்த உறவினர்கள் செல்லிலும் தமிழ் ரிங் டோன்.

சடங்குகள் தொடர்ந்தன. “வாய்க்கரிசி போடறவங்க வரலாம்”. ஆங்காங்கே பேசிக் கொண்டிருந்தவர்கள் நூறு வார்த்தை பேசினால் இரண்டு வார்த்தைகள் தெலுகில், மற்றபடி முழுதும் தமிழ் தான். தமிழ்நாட்டு பார்டரில் இருப்பதால் இப்படி இருக்கலாம்.

ஆனால் அடுத்து என் கண்ணில் பட்டது தான் ஹைலைட். அங்கே அரசு சார்பில் கட்டிக் கொடுத்திருந்த இறுதி காரியங்களுக்கான பொதுநல சமுதாயக் கூடம். அதன் திறப்பு விழா கல்வெட்டு.

2005-ல் திறக்கப்பட்ட போது அன்றைய நகரி எம்,எல்.ஏ செங்கா ரெட்டி, திருப்பதி எம்.பி சிந்தாமோகன் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டது குறித்த கல்வெட்டு, தமிழில்.

ஒரு எழுத்துக் கூட தெலுகில் இல்லை, அனைத்தும் தமிழில். ஆந்திர அரசாங்கம் அமைத்தது.

# நகரி மக்கள் தமிழோடும், தமிழ் உணர்வோடும் தமிழர்களாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள், ஆந்திராவில் !

திங்கள், 14 ஜூலை, 2014

இது ஒரு பொன்மாலைப் பொழுது...

சொல்லும் வார்த்தையை சுவைபட சொல்வதில் தலைவர் கலைஞருக்கு நிகர் அவர் தான். ஆனால் அவரே ரசிக்கும் அளவிற்கு வார்த்தையை கையாள ஒருவர் உண்டு. அவரால் கவிப்பேரரசு என்றழைக்கப்படும் “வைரமுத்து”.

                                           

1980. தமிழ் திரை இசையை இசைஞானி இளையராஜா புரட்டிப் போட்டிருந்த நேரம். பாரதிராஜாவும் இளையராஜாவும் ரசிகர்களின் காதுகளை மண்ணின் இசை மூலம் இழைத்துக் கொண்டிருந்த நேரம்.

தமிழ் மேடைகளிலும், கவியரங்குகளிலும் முத்திரைப் பதித்துக் கொண்டிருந்தார் அந்த வைகை மண்ணின் மைந்தன். பாரதிராஜாவை சந்திக்கிறார். தன் கவிதையைக் கொடுக்கிறார். அது, “இது ஒரு பொன்மாலைப் பொழுது”

அதற்கு பிறகு அவருக்கு மட்டுமல்ல, தமிழ் திரைப்படப் பாடலுக்கே “பொன் வாழ்வுப் பொழுதானது”.

எத்தனையோ முறை கேட்டப் பாடல் தான். ஆனால் இப்போது கேட்டாலும் இனிக்கும் தமிழ்.

“பொன்மாலை பொழுது...
இது ஒரு பொன்மாலை பொழுது...
வானமகள் நாணுகிறாள்...
வேறு உடை பூணுகிறாள்...”

வானமகள் மட்டுமல்ல, தமிழ்தாயே வேறு உடை பூண்டாள்.

‘’ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும்...
ராத்திரி வாசலில் கோலமிடும்...
வானம் இரவுக்கு பாலமிடும்...
பாடும் பறவைகள் தாளமிடும்...”

இந்த வரிகளை படித்துவிட்டு, இன்றைய இரவை இந்தப் பாடலுடன் கழியுங்கள். இருட்டில் கண் மூடுங்கள், ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும். லேசாக காது திறங்கள், பாடும் பறவைகள் தாளமிடும்.

வெறும் மண்ணுக்கு அரசன் என்றால் பணிப்பெண்கள் சாமரம் வீசினால் போதும். இவரோ கவிச்சக்கரவர்த்தி அதனால், “பூமரங்கள், சாமரங்கள்... வீசாதோ...”

“வானம் எனக்கொரு போதி மரம்...
நாளும் எனக்கது சேதி தரும்...
ஒரு நாள் உலகம் நீதி பெறும்...
திருநாள் நிகழும் தேதி வரும்...”

எவ்வளவு எளிமையான வார்த்தைகள். ஆனால் வலிமையான செய்தி. புத்தனுக்கு ஒரு சிறு ஆலமரம் போதுமானதாக இருந்தது. கவிஞருக்கோ பரந்த வானம் தான் போதிமரம்.

“கேள்விகளால், வேள்விகளை... நான் செய்தேன்...” கவிஞரின் கேள்விகளும், வேள்விகளும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன, தொடரவேண்டும், தொடரும்.

கவிஞருக்கு பிறந்தநாளில் வாழ்த்துக்களும், வணக்கமும்.

# உன் வார்த்தைகள் எமக்கு உணர்வு தரும், உச்சரிக்கும் உதடுகள் வாசம் பெறும் !

ஞாயிறு, 13 ஜூலை, 2014

ஓடுகாலி, நாறவாயன், தட்டுவாணி, முடிச்சவிக்கி - நல்ல தமிழ் வார்த்தைகள் !

"ஓடுகாலி" என்பதற்கான அர்த்தத்தை முதலில் தெரிந்து கொள்ளல் நலம். ஓடுகாலி என்பதற்கு க்ரியா தமிழ் அகராதியில் கொடுக்கப்பட்டிருக்கும் பொருள் – (முறைகேடாக) வீட்டைவிட்டு சென்று விடும் பெண். 

“ஓடுகாலி” என்ற வார்த்தையை நான் பயன்படுத்தியதில் தவறில்லை” என்று அமைச்சர் வைத்திலிங்கம் சொல்ல, “இது அவையில் குறிப்பிடக்கூடாத வார்த்தை அல்ல” என்று சபாநாயகர் மெல்ல, அதற்கு முதல்வர் ஜெயலலிதா சிரித்துக் கொல்ல, அட அட. 

                   

இதை தொடர்ந்து சபையில் பயன்படுத்த மேலும் சில வார்த்தைகளை பரிந்துரைக்க விரும்புகிறேன்.

நாறவாயன் – அம்மாவை வாய் மணக்க, மணக்க புகழும் அமைச்சர் பெருமக்களை இனி நாறவாயன்கள் என அழைக்கலாம். நற்றமிழில் நாற்றம் என்பது மணத்தையே குறிக்கும்.

தட்டுவாணி – அம்மாவை புகழும் போதெல்லாம், சட்டசபை மேசையை தட்டி மகிழும் ஆளுங்கட்சி ச.ம.உக்களை ‘தட்டு’வாணிகள் என்று சொன்னால், மிகவும் சந்தோசப்படுவார்கள்.

முடிச்சவிக்கி – ஆளுங்கட்சிக்கு இக்கட்டு வரும் போதெல்லாம் சப்பைக்கட்டு கட்டி எதிரிகளின் முடிச்சை அவிழ்ப்பதால், கூட்டணிக் கட்சி தலைவர்களை முடிச்சவிக்கி என்று அன்போடு அழைக்கலாம்.

மொள்ளமாறி – எதிரணியில் வெற்றி பெற்று மெள்ள மெள்ள, மாறி மாறி உங்கள் பக்கம் வந்திருப்பவர்களை ஆசையாய் மொள்ளமாறி என்று அழைக்கலாம்.

காண்டு – எதிர்கட்சியினரை காது கொடுத்து கேட்கமுடியாத “கொடூர” வார்த்தைகளால் “காண்டாய்” அர்ச்சிக்கும் சில வல்லவராயர்களை காண்டு என்று கூப்பிட்டால் சிறப்பு.

இவர்களை எல்லாம் வைத்து கட்டி மேய்க்கும் தலைமையையும், சபையை பாங்காய் நடத்தும் சபாவையும் விளிக்க அவர்களே சிறப்பான வார்த்தைகளை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

“அம்மாவை சென்னை பாஷையில்...”
"யாருப்பா குறுக்க பேசறது, அதெல்லாம் அவுங்க பார்த்துப்பாங்க".

# ஒரு ஓடுகாலி இது போன்ற வார்த்தைகளை தானே பரிந்துரைக்க முடியும் !

வியாழன், 10 ஜூலை, 2014

அய்யனார்கள் ஆட்சியாளராகனும்....

மதுரைக்கு மீனாட்சி ஆலயம் அடையாளம் என்பது தெரிந்ததே. இன்னொரு அடையாளம் உணவு. இன்றைய சென்னையின் முருகன் இட்லி கடையின் பூர்வீகம் மதுரை.

அது போல பல இட்லி கடைகள், மெஸ்கள், ரெஸ்டாரண்ட்கள் என கணக்கற்ற உணவகங்கள். அதில் இட்லி கடைக்கு போனால் பத்துக்கும் மேற்பட்ட சட்னி வகைகள் கொடுத்து அசத்துவார்கள்.

அன்று ஒரு நண்பர் ஒரு மெஸ்ஸை பரிந்துரைத்தார். “இல்லை, சைவம் தான். எங்கு போகலாம் ?” என்றோம். “வடக்கு மாசி வீதி தாண்டி போனால் வடக்கு வடம் போக்கி தெருவும், கிருஷ்ண தெப்பகுளம் தெருவும் சந்திக்கிற சிக்னல் வரும்.” வந்தது.

“எதிரில் போனால் புதிய நாயக்கர் தெரு. அதில் சக்தி சிவன் தியேட்டர்” என்றார். இருந்தது. அதிலும் “சைவம்” திரைப்படம் தான். “எதிரில் நிற்கிற தள்ளுவண்டிக்கு போய் பாருங்கள். அப்புறம் நீங்களே சொல்வீர்கள்” என்றார்.

போனோம். தள்ளுவண்டி இருந்தது, இரவு நேரக் கடைக்கான அத்தனை அடையாளங்களோடும். மூன்று டைனிங் டேபிள்கள். காத்திருந்து இடம் கிடைத்தது. அடுத்த மேசையில் பரிமாறிய சிறுவன் வந்தான். “என்ன இருக்கிறது ?”


“இட்லி, தோசை, தோசையில் பொடி தோசை, பூண்டுப் பொடி தோசை, பருப்புப் பொடி தோசை, மிளகுப் பொடி தோசை, புதினா தோசை, கருவேப்பிலை தோசை, கொத்தமல்லி பொடி, எள்ளு பொடி தோசை என எட்டு வகை தோசைகள்”என்றான். சற்றே மிரண்டோம்.

“இட்லி, அப்புறம் பூண்டுப் பொடி தோசை”. சிறுவன் பம்பரமாக சுழன்றான். இலை வைத்ததும் தெரியவில்லை, இட்லி வைத்ததும் தெரியவில்லை. ஒரு பெரியவர் சட்னி எடுத்துக் கொடுத்தார். இன்னொருவர் தோசைகல்லை கையாண்டார்.

அடுத்த டேபிளுக்கு புதிதாக வந்தவர்கள் தோசை கேட்க, “முதலில் இரண்டு இட்லி சாப்பிடுங்க. சூடா இருக்கு” என்றான். அவர்களும் மறுக்கவில்லை. பெரியவரிடம்,”அரை ஈடு இட்லி தான் இருக்கு, முடிச்சிடுறேன்” என்றான் கிசுகிசுப்பாக.

கவனம் ஈர்த்தான். பூண்டு பொடி தோசை வைத்தான். “அடுத்து புதினா தோசை கொடுக்கவா ?” என்றான். “பெயர் என்ன?”என்றேன். “அய்யனார்” என்றான். “என்ன படிச்சிருக்க?” என் வழக்கமான கேள்வியை கேட்டேன். “படிக்கிறேன்” என்றான்.

நிமிர்ந்து உட்கார்ந்தேன்,”என்ன படிக்கிறப்பா?”. “டி.எம்.இ”. “எங்கே?“. “கல்லுப்பட்டியில் இருக்கும் பாலிடெக்னிக்கில்”.இதற்கிடையில் பக்கத்து மேசைகளுக்கும் தவறாமல் பரிமாறிக் கொண்டிருந்தான். இடையிடையே பெரியவருக்கும், இன்னொருவருக்கும் உத்தரவு போட்டுக் கொண்டிருந்தான்.


                              Photo: தானே உழைத்து, கல்வி கற்கும் அய்யனார்.

எனது ஜூலை-7ம் தேதிய நிலைத்தகவலில் இடம் பெற்ற அய்யனாரை சந்தித்து புகைப்படத்தை கமெண்ட்டில் இடம் பெற செய்த அண்ணன் மாடக்குளம் பிரபாகரன் அவர்களுக்கு நன்றி.

# வெள்ளந்தி சிரிப்புடன் வெல்வாய் அய்யனார் !

“முதலாளி யார்?”என்றேன். பெரியவரை காட்டினான், இன்னொருவரைக் காட்டி,“அவர் மகன்” என்றான். “நான் பகலில் காலேஜ் போயிட்டு இங்க இரவு வேலைக்கு வரேன்” என்றான். சொன்னவன் அடுத்த மேசைக்கு தோசையோடு சென்றான். உணவு முடிந்தது.

கிளம்பும் போது பெரியவரைப் பார்த்து சொன்னேன், “தம்பி படிப்ப தொடரணும். பார்த்துக்கங்க”. “கண்டிப்பாக பார்த்துக்கறேன். அவன் பெரியாளா வருவான்ங்க”என்றார். உயர்ந்த உள்ளம்.

# இந்த அய்யனார்கள் கல்வியிலும், வாழ்விலும் உயர வேண்டும் !

ஞாயிறு, 6 ஜூலை, 2014

அன்பிற்குரிய பிரதமர் மோடி...

அன்பிற்குரிய பிரதமர் மோடி,

                    A Ahmedabad court has asked the Ahmedabad Crime Branch to submit a report in a complaint against Prime Minister Narendra Modi of violating the model code of conduct during the polling period. File photo

உங்கள் சகாக்கள் இந்தியை தேசிய பாஷையாக்க அவசரக் கோலத்தில் முயற்சிப்பதாக அச்சமுறுகிறோம். இந்தியா ஒரு தேசமல்ல, பல மாநிலங்களின் கூட்டமைப்பு. இது பல மதங்களை உள்ளடக்கியது, பல இனங்களை உள்ளடக்கியது, அது போல பல மொழிகளை கொண்டது.

நடுவணரசின் பல அமைச்சகங்களின் சமீபத்திய அறிவிப்புகளினால் ஏற்பட்ட விளைவால் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன், ஹிந்தி பேசாத மாநிலங்களின் கோடிக்கணக்கான மக்களுக்கு ஏற்பட்டுள்ள கொடூர சங்கடத்தை உங்களுக்கு தெரியப்படுத்துவதற்காக.

நான் ஒரு தமிழன் என்பதை போல், நீங்கள் ஒரு குஜராத்தி. உங்கள் இல்லத்தில் குஜராத்தி மட்டுமே பேசுவீர்கள் என நினைக்கிறேன், எங்கள் இல்லத்தில் நாங்கள் தமிழ் பேசுவது போல. எனவே எங்கள் துடிப்பை நீங்கள் அவசியம் அறிவீர்கள், உணர்வீர்கள்.

அரசு மொழிகளுக்கான சட்டம் ஹிந்திக்கும், ஆங்கிலத்திற்கும் ஒரு உயர் இடத்தை வழங்கியுள்ளது, அரசின் இணைப்பு மொழியாக. இந்திய அரசின் இந்தியை பரப்புவதற்கான வேகமான நடவடிக்கைகளால், இந்தி அல்லாத மற்ற மொழிகள் அரசு மற்று ஆட்சி அதிகாரத்தில் இருந்து ஓரங்கட்டப்படும் நிலை ஏற்படுகிறது, குறிப்பாக இந்தி பேசாத மாநிலங்களிலேயே.

இந்திய அரசின் "இந்தி மற்றும் ஆங்கிலம் மட்டுமே" என்ற கொள்கை இந்தி பேசாத கோடிக்கணக்கான மக்களை பின்னோக்கி தள்ளுகிறது அதே போல, இந்தி பேசாதோரிடம் ஒதுக்கப்படுவதான எண்ணத்தை ஏற்படுத்துகிறது.

சமூக அநீதியான இந்த மொழிக் கொள்கை இந்தி பேசாதோரை இணைப்பதை காட்டிலும் பிரிப்பதற்கே வழிவகுக்கும். "ரஷ்யா" நமக்கு ஒரு உதாரணமாக விளங்குகிறது. மொழிக் கொள்கையே ரஷ்யா பல நாடுகளாக பிரிந்ததற்கான முக்கிய காரணம் என்பதை நீங்கள் அறிவீர்கள்.

எங்களது முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள், உங்கள் ஆட்கள் தங்கள் பணியை துவங்கிய உடனேயே எதிர்குரலை எழுப்பினார், உங்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார். முதல்வர் ஜெயலலிதா அவர்களும் அனைத்துக் கட்சித் தலைவர்களும் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.

உங்களது பேச்சுக்களில் இருந்து மக்கள், நீங்கள் மக்களின் பிரச்சினையில் கவனமாக இருப்பீர்கள் என்ற மனநிலையில் உள்ளனர். இந்த அபாயகரமான அநீதியை கணக்கில் கொள்வீர்கள் மற்றும் இந்தி அல்லாத மற்ற மொழிகளை காக்கவும், இந்தி மற்றும் ஆங்கிலத்திற்கு இணையாக வளர்க்கவும் துணை நிற்பீர்கள் என எண்ணுகிறோம். மொழி சமநிலையானது பல மொழி பேசுகிற இந்திய மக்களிடையே ஒற்றுமை உணர்வை ஏற்படுத்தும்.

1. அரசு அதிகாரப்பூர்வ மொழி சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து, 8-வது பட்டியலில் உள்ள அனைத்து மொழிகளையும் இந்தியாவின் அரசு மொழியாக அறிவியுங்கள்.
2. உங்கள் சகாக்களை சமூக வலைதளங்கள் மூலமாக இந்தியை திணிக்கிற முயற்சியை நிறுத்த சொல்லுங்கள்.


அன்புடன்
இந்தியாவில் வசிக்கும் தமிழன்.

The Prime Minister of India: Make all Indian Languages as Official Languages - Sign the Petition!
சிவசங்கர் just signed this petition on Change.org.
99 signatures are still needed!