பிரபலமான இடுகைகள்

செவ்வாய், 28 அக்டோபர், 2014

ஜா.லலிதா-விடம் கிருகதாஸ் சூடான பேட்டி !!!

“புத்தி” படத்தை தொடர்ந்து, நாம நாட்டுக்கு இன்னும் நிறைய கருத்து சொல்லனும்னு இயக்குநர் கிருகதாஸுக்கு ஆச வந்திடுச்சி. டீ.வி ஆரம்பிக்க முடிவெடுத்தாங்க. ஆரம்பிச்சாச்சி. இங்க ஹிட் அடிக்க என்ன பண்ணலாம்னு யோசிச்சாங்க.

           

புதிய தலைமுறை பேட்டியை பார்த்தவுடன் “புத்தி டீ.வி” டீமுக்கு ஒரு ஆசை வந்தது. இவங்க முன்னாள் துணை முதல்வர தான பேட்டி கண்டாங்க, நாம முன்னாள் முதல்வரையே பேட்டி காணுவோம்னு முடிவெடுத்தாங்க. ஜா.லலிதாவை சந்தித்தார்கள்.

போற வழியில பார்த்தா தான், கேள்வி தாள் மிஸ்ஸிங். என்ன பண்றதுன்னு தெரியல. பார்த்தாங்க, புதிய தலைமுறை பேட்டிய வச்சி கேள்வி தயார் பண்ண சொல்லி அசிஸ்டெண்ட் டைரக்டர் கிட்ட சொன்னார். அத வச்சி பேட்டிய ஆரம்பிச்சாங்க. அப்படீயே கேட்டா, என்னாகும்னு தெரியும்ங்கிறதால, பட்டி, டிங்கரிங் பார்த்து கேட்டாங்க.

கிருகதாஸ் ஆரம்பிச்சார்.
கி.தா: நீங்க ஒரு முன்னாள் முதல்வர், சென்னையில ஏற்பட்டிருக்கிற மழை, வெள்ள பாதிப்பை பார்த்து என்ன தோணிச்சி ?
ஜா.ல: மழை பெய்தா நிறைய தண்ணீர் வரத்தான் செய்யும். அப்படி வந்தா வெள்ளமாகத் தான் உருவெடுக்கும். அதனால பாதிப்பு ஏற்படத் தான் செய்யும். இதுல சொல்ல என்ன இருக்கு?. நெக்ஸ்ட்…

கி.தா: பெங்களூரு நீதிமன்ற தீர்ப்பை பற்றி நீங்கள் எந்தக் கருத்தும் சொல்லவில்லை. ஏன் தயக்கம் ?
ஜா.ல: பெங்களூரு எங்க இருக்கு? என்ன நீதிமன்றம்? என்ன கருத்து? 230 பேர் செத்தது மட்டும் தான் எனக்கு தெரியும். நான் வழிநடத்துவேன்.

கி.தா: அரசியல் வாழ்வு முடிந்துவிட்டதாக நினைக்கிறீர்களா ?
ஜா.ல: அரசியலே முடிஞ்சிடுச்சி. அப்புறம் எங்க வாழ்வு? கண்ணுக்கு எட்டிய வரை எதிரிகளை காணவில்லையே.

அப்ப தான் அணிலன் உள்ள வந்தார். கிருக காதுல கிசுகிசுத்தார். “ண்ணா. வெளியில செங்க்ஸ் குரூப் பெட்ஷீட் விரிச்சு போட்டு உக்காந்திருக்கு. பனீர் குரூப் சேர் போட்டு உக்காந்திருக்கு. கையில கட்டையும் கழியும் இருக்கு. நீங்க கேக்குற கேள்வி விவரம் வெளியில போகுது போல”

கிருகதாஸுக்கு லேசா வேர்க்க ஆரம்பிச்சுது. சமாளிச்சு தொடர்ந்தார்.

கி.தா: தமிழகத்தில் வெற்றிடம் ஏற்பட்டிருக்கு, அதை பாஜக நிரப்பும்னு சொல்றாங்களே
ஜா.ல: பாஜக-வையே நாங்கள் நிரப்புவோம்

கி.தா: நீங்க இல்லாம கட்சியில குரூப் பாலிடிக்ஸ் வந்திடுச்சின்னு பேசிக்கறாங்களே
ஜா.ல: நான் வந்துட்டன்ல.

மீண்டும் அணில் வந்தார் “ண்ணா. பண்ருட்டி வாள்முருகன் வந்துட்டாருங்கண்ணா. நம்மள தாண்டி சவுண்ட் விடுவாருங்கண்ணா. போதும்ணா”

“எப்படியாவது இன்னும் கொஞ்சம் சமாளிப்போம்” என்று கிசுகிசுத்த கிருகதாஸ் பேப்பர புரட்டினாரு. பதட்டத்தில் பேப்பர் கை நழுவியது. குனிந்து பொறுக்க ஆரம்பித்தார்.

ஜா.ல: “என்ன கிருக்குதாஸ், பேப்பர் இல்லாம கேள்வி கேக்கத் தெரியாதா? நீங்க கஜினியா மறக்கறதுக்கு? இன்னும் ரெண்டு கேள்வி தான் முடிங்க”

கி.தா: ஜெயில்ல எப்படி பொழுது போச்சி?
ஜா.ல: (கண்கள் பழுத்தன. விரலகள் முறித்தன) வாட் மேன்? ஹவ் டேர் யூ?

கி.தா: (அழும் குரலில்) “சரிங்க அம்மா. நாட்டு மக்களுக்கு என்ன செய்தி சொல்ல விரும்புறீங்க?"
ஜா.ல: “நாசமாப் போங்க….”

அணிலன் ஓட, கேமராவோடு கிருகதாஸ் தலைதெறிக்க ஓட்டமெடுக்கிறார். புத்தி டீவியின் ஓ.பி வேன் தாக்கப்பட்டு கண்ணாடி உடைகிறது. அணிலன் வேனை கிளப்ப ஏணியை பிடித்து தொற்றிக் கொள்கிறார் கிருகதாஸ்.

கிருகதாஸ் சட்டையை பிடித்து தொங்குகிறார் வாள்,”என் பேட்டிய எடுய்யா. அம்மா பாக்கணும்” “யோவ். நீ வேற நேரம் காலம் தெரியாம. உன் பேட்டிய எடுக்கறதுக்குள்ள என் போட்டிய எடுத்துடுவாங்கய்யா. விடுய்யா”

புத்தி டீவியில் பிளாஷ் நியூஸ் “பால் விலை ரூ.10 உயர்வு”

# வாலு போயி புத்தி வந்தது டும் டும் டும்…

திங்கள், 27 அக்டோபர், 2014

பெரம்பலூரை, “பெரும்” ஊராக்கியவர்...

அப்போது அடிக்கடி பெரம்பலூர் செல்கிற சந்தர்ப்பம் வந்தது, காரணம் பெரம்பலூர் மாவட்டத் தலைநகராகியது. திருச்சியிலிருந்து பிரித்து உருவாக்கப்பட்டிருந்தது. அப்போதிலிருந்து பெரம்பலூரை கவனித்து வருகிறேன். மேப்பிலே ஒரு புள்ளியாக இருப்பது போல் தான் மற்றவர்களால் பார்க்கப்பட்டது.

               

1996-ல் பெரம்பலூர் மாவட்ட ஊராட்சி துணைத் தலைவராக தேர்வு பெற்ற பிறகு வாரம் இரு முறை செல்லக் கூடிய சூழல் ஏற்பட்டது. அரியலூரிலிருந்து பெரம்பலூர் செல்லும் சாலையே கிராமச் சாலை போலத் தான் இருக்கும்.

பெரம்பலூர் உள்ளே நான்கு ரோடு வழியாக நுழைந்தாலும், துறைமங்கலம் வழியாக நுழைந்தாலும் கிராமத்திற்கான அடையாளத் தோடு தான் இருக்கும். அப்போது ஒரு மாவட்ட தலைநகருக்கான தோற்றத்தோடு விளங்காது.

பாலக்கரையில் இருந்து பழையப் பேருந்து நிலையம் செல்வதற்குள் டிராபிக் படுத்தி விடும். நெருக்கடியான சாலை. ஆக்கிரமிப்புகள். பழையப் பேருந்து நிலையத்திற்குள் போய் வெளியே வருவது என்பது சர்க்கஸ் போன்றது. பேருந்துகள் நெருக்கியடித்துக் கொண்டு நகரும்.

அப்போது சாப்பிடுவதற்கு கூட சுந்தரம் மெஸ் தான் சொல்லிக் கொள்வது போல இருக்கும். ரோவர் பள்ளி ஒரு அடையாளம். பெரிய அளவில் வியாபாரங்கள் இருந்தாலும் ஊர் வளர்ச்சி அடைந்தது போல் தெரியாது.

1996-ல் அண்ணன் ஆ.ராசா எம்.பியாக வெற்றி பெற்று ஒரு வருடத்தில் மத்திய அரசு கவிழ்ந்து மீண்டும் தேர்தல். வெற்றி வாய்ப்பு நழுவியது. 1999-ல் மீண்டும் வெற்றி பெற்று மத்திய இணை அமைச்சரானார்.

2004-ல் வெற்றி பெற்று மத்திய கேபினட் அமைச்சரானார். 2006-ல் கழகம் வெற்றி பெற்று தலைவர் கலைஞர் முதல்வரானார். அவ்வளவு தான் பெரம்பலூரின் வளர்ச்சி ராக்கெட் வேகத்தை மிஞ்சியது.

திட்டமிட்டு பணிகளை மேற்கொண்டார் அண்ணன் ராசா. பத்து வருடம் கழித்து யாராவது பெரம்பலூருக்குள் இப்போது வந்தால் அந்த வளர்ச்சியை உணர்வார்கள். நகருக்குள் சாலைகள் அகலப்படுத்தப்பட்டு சென்டர் மீடியன் அமைக்கப்பட்டு நகருக்கான தோற்றம் ஏற்படுத்தப்பட்டது.

துறையூர் சாலையில் அரசு கலைக் கல்லூரி, சென்னை சாலையில் ஐ.டி.ஐ, செட்டிக்குளம் சாலையில் பாலிடெக்னிக், ஆத்தூர் சாலையில் பருத்தி ஆராய்ச்சி நிலையம், திருச்சி சாலையில் எம்.ஆர்.எஃப் டயர் தொழிற்சாலை என அமைக்கப்பட்டதால் பரவலான, சீரான வளர்ச்சி.

அவர் பெற்று தந்த அரசு மருத்துவக்கல்லூரியும் ஜெயலலிதா அரசால் தடுக்கப்படாமல் இருந்திருந்தால் அரியலூர் சாலையில் குன்னம் அருகே அமைந்திருக்கும்.

இதன் தொடர்ச்சியாக தனியார் கல்லூரிகள் பெரம்பலூரை சுற்றி அமைந்தன. கணக்கற்ற ஹோட்டல்கள் தரமாக அமைந்துவிட்டன. இதனால் தேசிய நெடுஞ்சாலையில் செல்கிறவர்கள் கூட பெரம்பலூருக்குள் நுழைந்து சாப்பிட்டுவிட்டு செல்கிற அளவுக்கு வளர்ச்சி.

பெரம்பலூர்-தஞ்சை சாலையை அண்ணன் டி.ஆர்.பாலு அவர்களிடம் பரிந்துரைத்து தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தி சாலை அகலப்படுத்தப்பட்டு விட்டது.

தலைவர் கலைஞரிடத்திலும், தளபதி அவர்களிடத்திலும் அவர் பெற்றிருந்த அன்பு பெரம்பலூரின் வளர்ச்சியில் பிரதிபலித்தது.

இந்த வளர்ச்சியின் காரணகர்த்தா அண்ணன் ஆ.ராசா அவர்கள் தான். வழக்கமாக வரலாறுகள் தான் தலைவர்களால் படைக்கப்படும். இங்கு இவரால் வரலாற்றோடு பூகோளமும் சீராக உருவாக்கப்பட்டுள்ளது.

(அரியலூருக்கு செய்த சாதனைகளை இன்னொரு சந்தர்ப்பத்தில் பதிகிறேன்)

அண்ணன் ஆ.ராசா அவர்களுக்கு இன்று பிறந்தநாள்.

# பெரம்பலூரை, “பெரும்” ஊராக்கியவர் வாழ்க !

                 

புதன், 22 அக்டோபர், 2014

ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும்....

மகராஷ்டிர தேர்தல் முடிவுகளை ஒட்டி  தமிழ் நாளிதழ்கள் ஒரு “பெரிய சாதனையை” பாராட்டி எழுதியுள்ளார்கள். சாதனை தான். மகிழ்ச்சி தான்.

19.10.2014 அன்று மகாராஷ்டிர மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகின. அதில் தான் அந்த சாதனை. இதில் சங்கோலா என்ற தொகுதியில் இருந்து கண்பத் ராவ் தேஷ்முக் 11 முறையாக தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார். சாதனை தான்.

      

ஆனால் இன்னொருவர் சாதனையை மறந்து விட்டார்கள், வசதியாக. காரணம் அவர் தமிழர். அதிலும் திமுக-வின் தலைவர். கலைஞர் என்றால் சாதனை கூட மறந்து போகிறதே. மக்கள் வாக்களித்து வெற்றி பெற வைத்தது கூட கண்ணுக்கு படாமல் போகிறது.

1957-ல் அந்த வெற்றி சரித்திரம் துவங்கியது. முதல்முறையாக குளித்தலையில் 8,296 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அடுத்து 1962-ல் தஞ்சாவூரில் பெரும் பணக்காரரை வீழ்த்தி வெற்றி பெற்றார்.

1967 தேர்தலில் சைதாப்பேட்டை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாகை சூடி திமுகவின் முதல் அமைச்சரவையில், அண்ணா தலைமையில் அமைச்சரானார். மீண்டும் 1971-ல் மீண்டும் சைதாப்பேட்டையில் போட்டியிட்டு வென்று முதலமைச்சரானார்.

1977, 1980 தேர்தல்களில் சென்னை-அண்ணாநகர் தொகுதியை கைப்பற்றினார். எம்.ஜி.ஆர் முதலமைச்சர், தலைவர் கலைஞர் எதிர்கட்சி தலைவராக பணியாற்றினார். சட்டசபை பயிற்சி வகுப்பாக ஆனது.

1989 தேர்தலில் துறைமுகம் தொகுதியில் வெற்றி பெற்று, 13 ஆண்டுகள் கழித்து மீண்டும் முதலமைச்சரானார். 1991 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் சமயத்தில் ராஜீவ்காந்தி கொலையால், திமுக பெரும் தோல்வியடைந்தது. அப்போது வெற்றி பெற்ற ஒரே திமுக வேட்பாளர் கலைஞர்.

1996-ல் சேப்பாக்கம் தொகுதியில் வெற்றி பெற்று நான்காம் முறையாக முதலமைச்சரானார். 2001 தேர்தலில் மீண்டும் சேப்பாக்கத்தில் வெற்றி. 2006-ல் மீண்டும் சேப்பாக்கத்தில் வெற்றி பெற்று அய்ந்தாம் முறையாக முதல்வர் ஆனார்.

2011-ல் தன் மனம் கவர்ந்த சொந்த மண்ணான, திருவாரூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இது 12-வது முறையாக அவர் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட வரலாற்று சாதனை. தேஷ்முக் 11 முறை தான்.

தேஷ்முக் போட்டியிட்ட இரு தேர்தல்களில் தோல்வி கண்டவர். ஆனால் தலைவர் கலைஞர் போட்டியிட்ட அத்தனை தேர்தல்களிலும் வெற்றி மட்டுமே கண்டவர்.

தமிழகத்தின் மற்ற தலைவர்களின் தோல்விகளை சொல்லி சிறுமைப் படுத்தக்கூடாது என்பதால் பட்டியலிடவில்லை, இவரின் வெற்றிகளை மட்டுமே பட்டியலிட்டுள்ளேன்.

அவரின் இந்த சாதனையை சொல்லக் கூட பயந்து கொண்டு பத்திரிக்கை நடத்தினால் அது பத்திரிக்கைத் துறைக்கே அவமானம்.

# கலைஞரை வென்றவருமில்லை, வரலாற்றை மறைத்து வாழ்ந்தவருமில்லை !

திங்கள், 20 அக்டோபர், 2014

மூன்றும் முத்தான நிகழ்ச்சிகள்

கடந்த மாதத்தில் ஒரு நாளில் நடந்த மூன்று நிகழ்ச்சிகள் கவனிக்கத் தக்கவையாக அமைந்தன.

***********************************************

பெரம்பலூர் அண்ணன் செல்வநாயகம் அவர்களது மகன் டாக்டர்.வளவன் திருமணம். அண்ணன் ஆ.ராசா அவர்கள் தலைமையில் சுயமரியாதைத் திருமணமாக நடந்தது. மங்கல நாணை எடுத்துக் கொடுக்கும் போது தான் கவனித்தேன், வித்தியாசமாக இருந்தது.

வழக்கமான தாலி வடிவில் இல்லாமல் இதய வடிவில் டாலர். அதில் மணமகன் மற்றும் மணமகள் ஆகியோரின் இனிஷியல் பொறிக்கப்பட்டிருந்தது. அடிமைச் சின்னமாக இல்லாமல், அடையாள சின்னமாக அமைத்ததற்கு அண்ணன் செல்வநாயகத்திடம் மகிழ்ச்சி தெரிவித்தேன்.

*************************************************

பூவாணிப்பட்டு முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் சகோதரர் பி.கே.கண்ணன் புதிய இல்லம் கட்டித் திறப்புவிழா மேற்கொண்டார். மதியம் அவரது மகனின் முதலாம் ஆண்டு பிறந்த நாள் விழா.

அந்த இடைவெளியை சிறப்பான முறையில் ஒரு பட்டிமன்றத்தைக் கொண்டு நிரப்பினார். “குடும்ப மகிழ்ச்சிக்கு துணையிருப்பது உறவுகளா? சடங்குகளா?” என்ற தலைப்பு. கல்லூரிப் பேராசிரியர்கள் பங்கேற்க, கருத்து செறிவானப் பட்டிமன்றமாக அமைந்தது.

நடுவர் உட்பட பங்கேற்ற ஏழு பேரில் ஆறு பேர் பெண்கள். நடுவர் சென்னை செல்லம்மாள் கல்லூரி தமிழ்த்துறை தலைவர் விமலா அண்ணாதுரை. கிராமத்து மக்கள் கலையாமல் அமர்ந்து கேட்டனர். பயனுள்ள நிகழ்ச்சி. தன் குடும்ப நிகழ்ச்சி, மற்றோருக்கும் பயனுள்ளதாக அமைய வேண்டும் என்று நினைப்பது வாழ்த்துக்குறியது.

*****************************************************

கழக சொற்பொழிவாளர் அண்ணன் பெருநற்கிள்ளி அவர்களது மகள் டாக்டர் கோப்பெருந்தேவியின் திருமண நாள் உறுதி செய்யும் நிகழ்ச்சி. புரோகிதர் இல்லாத நிகழ்ச்சி. முழுதும் தமிழ் முறைப்படி நடந்தது. மணமகன் தந்தையும், மணமகள் தந்தையும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்து பேசினார்கள்.

மணமகனும் மணமகளும் திருமணம் செய்து கொள்ள உறுதி கொடுத்தார்கள். நிகழ்ச்சிக்கு வந்திருந்தோருக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. அண்ணன் ஆ.ராசா உள்ளிட்ட எங்களை மேடைக்கு அழைத்து தினத்தந்தி வெளியீடான “ இலங்கை தமிழர் வரலாறு“ புத்தகம் வழங்கப்பட்டது. புத்தகமாக வழங்கியது சிறப்பு.

மணமகனின் தந்தை உரையாற்றும் போது, சொன்னது தான் ஹைலைட். “மற்ற இடங்களில் பெண் பார்க்கும் போது, நாங்கள் எதிர்பார்த்தது போல் அமையவில்லை. பெருநற்கிள்ளி அவர்களிடம் பேசிய போது, “என் மகளுக்கு ஜாதகம் கிடையாது” என்று அவர் சொன்னது தான் உடனே சம்மதிக்க வைத்தது.”

அண்ணன் பெருநற்கிள்ளி பெரியாரின் கொள்கைகளை பேசுவது மாத்திரமில்லாமல் தன் வாழ்க்கையில் நடைமுறைப் படுத்துபவர். நிகழ்ச்சி அழைப்பிதழில் மனைவி பெயரை முதலில் போட்டு தன் பெயரை பின்னால் அச்சிட்டார். அய்யா பெரியார் படம் தாங்கிய அழைப்பிதழ்.

அதே போல ஜாதகம் எழுதாமலே, மகளுக்கு ஒத்தக் கருத்துள்ள இல்லத்தில் மணம் நிச்சயித்து, தனது கொள்கையை நிலை நிறுத்திவிட்டார்.

# மனதில் நிற்கும் நிகழ்வுகள், நடைமுறைப்படுத்தவும் தேவையானவை !

கம்பப் பெருமானே போற்றி; மங்கான் கண்டவனே போற்றி

அன்று முருகேசன் தொடர்ந்து ஒரு கோரிக்கை வைத்தார், ஒரு கோவிலுக்கு வந்து அன்னதானத்தை துவங்கி வைக்க வேண்டுமென. நானும் மறுத்து பார்த்து, ஒரு கட்டத்தில் ஒப்புக் கொண்டேன். 

அரியலூர் நகர கழக செயலாளர், நகர் மன்றத் தலைவர் முருகேசன் எங்கள் மாவட்டத்து பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன். எப்போதும் நெற்றியில் குங்குமம் பிரகாசிக்க இருப்பார். 

               

அவர் அழைத்தது கல்லங்குறிச்சி கோவிலுக்கு. இப்படித் தான் அந்தக் கோவில் வெகுஜனங்களால் அழைக்கப்படும். இன்னும் பரம்பரை ஆதினகர்த்தர்களால் நிர்வகிக்கப்படுவது.

அந்த ஆதினகர்த்தர் ராமச்சந்திரன் பலமுறை அழைத்தும், “வருகிறேன்” என்பதோடு இருந்தேன். கடந்த முறை ஆண்டிமடம் சட்டமன்ற உறுப்பினராக இருந்த போது, ஒரு ச.ம.உறுப்பினர்கள் குழுவில் சென்று வெளியோடு வந்து விட்டேன்.

கோவில் கூடாது என்பதல்ல, எளிய மக்களின் சிறுதெய்வ கோவில்களுக்கு அவர்கள் அழைபின் பேரில் செல்வது உண்டு. திணிக்கப்படும் தெய்வங்களின் கோவில்களை விபரம் தெரிந்த பிறகு தவிர்த்து விடுவது வழக்கம்.

ஆனால் சிறுவயதில் சென்ற நினைவு பஞ்சு மிட்டாய் இனிப்பாக மனதில் நிறைந்திருக்கிறது. ஏப்ரல் மாதங்களில் அங்கு தேர் திருவிழா மிகப்பிரபலம். அப்போது இரவுகளில் திண்டுக்கல் “அங்கிங்கு புகையிலை” குழுவினரின் ஆர்கெஸ்ட்ரா செம ஹிட். கூட்டம் திமிரும்.

அப்போது அரியலூரில் இருந்து ஐந்து, ஆறு கிலோமீட்டர் நடந்து சென்று பங்கேற்பது மக்கள் வழக்கம். இப்போது அரசின் ஸ்பெஷல் பஸ் டிரிப் உண்டு. இப்போதும் கூட்டம் தொடர்கிறது. ஏழை மக்கள் கூடி மகிழும் கோவில்.

கோவிலுக்கு போனோம். அன்னதானத்தை தொடங்கி வைத்தோம். தரிசனத்திற்கு வந்த ஏழை மக்கள் வந்து உணவருந்தினர். கோவில் நிர்வாகத்தார் வந்து வரவேற்றனர். தரிசிக்க அழைத்தனர். எங்கும் கூட்டம். மாடுகள், மக்களால் தானமாக வழங்கப்பட்டுக் கொண்டிருந்தன.

சரி என்று உள்ளே சென்றேன். வித்தியாச அனுபவம். கர்ப்பகிரகத்திற்கு அழைத்து சென்றனர். உள்ளே நுழையும் போதே “கம்பப் பெருமானே போற்றி; மங்கான் கண்டவனே போற்றி” என தமிழில் அர்ச்சனை. பூணூல் இல்லா பூசாரி.

தீபாரதனை காட்டினர். விக்கிரகத்தை உற்று பார்த்தேன், உருவம் இல்லை. கண்களை விரித்துப் பார்த்தேன். நாமம் தெரிந்தது, ஆனால் உருவம் இல்லை. தீர்த்தம், துளசி கொடுத்தனர். பின்புறம் அழைத்து சென்றனர்.

ஒரு கம்ப உருவமே தெரிந்தது. பூசாரியாரை பார்த்தேன். “ஆமாம், இங்கு பெருமாள் கம்ப உருவில் தான் இருக்கிறார்” என்றார். அடுத்த அடி எடுத்து வைத்தால் சிறு கற்சிலைகள் இரண்டு. பார்த்தேன். “இந்தக் கோவிலை எடுப்பித்த மங்கான் படையாட்சி மற்றும் அவர் மனைவி சிலைகள் இவை” என்றார்.

மங்கான் படையாட்சியால் 1751-ல் கட்டப்பட்ட கோவில் என வரலாறு தெரிவிக்கிறது. சோழர் கால கோவில்களின் வழியில். ஸ்தல விருடசத்தை காட்டினர். நானூறு வயதான மகாலிங்க மரம், இன்னும் உயிரோடு.

கோவில் அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர். பெருந்தலைவர் காமராஜர், சி.சுப்ரமணியன், நாவலர் நெடுஞ்செழியன், பேராசிரியர் அன்பழகன் என மூத்தத் தலைவர்கள் கோவிலுக்கும், கோவில் நிர்வாகத்தால் நடத்தப்படும் பள்ளிக்கும் வருகை தந்த போது எடுத்தப் புகைப்படங்கள் நிறைந்திருந்தன.

மடப்பள்ளியிலிருந்து புளியோதரை வந்தது. நல்ல ருசி. வெளியில் வந்தோம். நல்ல மழை. மக்கள் உணவருந்தி கிளம்பிக் கொண்டிருந்தனர். உறவினர் ஒருவர் மொட்டையடித்து அமர்ந்திருந்தார். “வேண்டுதல்” என்றார்.

முக்கியமான செய்தி. எங்கள் மாவட்டத்தில் குழந்தைகளுக்கு, மாமன்னன் “ராஜேந்திரன்” பெயருக்கு பிறகு அதிகம் வைக்கப்படும் பெயர் “கலியபெருமாள்”. "கலியுக வரதராஜப் பெருமாள்" என்பதன் மருவு தான் இது. அவர் தான் இந்தக் கம்பப் பெருமாள்.

உள்ளிருந்து அர்ச்சனைக் குரல் தமிழில் வந்துக் கொண்டிருந்தது...

# ஏழைப் பங்காளா போற்றி !

ஞாயிறு, 19 அக்டோபர், 2014

மக்களின் முதல்வரை வரவேற்கிறேன் !

மாண்புமிகு மக்களின் முதல்வர் அவர்களை வருக, வருக என வரவேற்கிறேன்...எப்படி பார்த்தாலும் நம் முதல்வராக இருந்தவர் அல்லவா, 153 எம்.எல்.ஏக்கள், 37 எம்.பிக்கள் கொண்ட, கோடிக்கணக்கான உறுப்பினர்களை கொண்ட அகில இந்தியக் கட்சியின் தலைவர் அல்லவா, அதனால் வரவேற்கலாம்.

தமிழகத்தை ஆளுகின்ற முதலமைச்சர் ஒ.பி.எஸ் தலைமையிலான அமைச்சரவை பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறைக்கே சென்று தாள் பணிந்து, தண்டனிட்டு வரவேற்கும் போது சாமானியனான நானும் வரவேற்கலாம்.

தமிழகத்தை அறிவுப்படுத்துகின்ற பத்திரிக்கைகளான, நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்ட தினத்தந்தி, தினமலர், தினமணி என இன்னும் பல பத்திரிக்கைகள் பூங்கொத்தோடு வரிசையில் நிற்கும் போது நானும் வரவேற்கலாம்.

ஊழலுக்கு எதிர்ப்பான, நேர்மைக்கு பாடுபடுகின்ற மக்களின் ஆயுதமான ஊடக ஜாம்பவான்கள் தந்தி டீ,வி-யும், புதிய தலைமுறை தொலைக்காட்சியுமே நேரலை ஒளிபரப்பி, மண்டியிட்டு வரவேற்பு அளிக்கும் போது நானும் வரவேற்கலாம்.

தமிழகத்தை நல்வழிப்படுத்தி திசைகாட்டியாக இருக்கின்ற திரையுலகமே பூச்சொரிந்து வரவேற்கும் போது, அந்நியன்களும், சிங்கங்களும் உண்ணாவிரதம் இருந்து வரவேற்க்கும் போது, நான் பச்சைக் கொடி பிடித்து வரவேற்கலாம்.

தமிழகத்தின் அறிவுஜீவிக்களான, இந்தியாவுக்கே வழிக்காட்டுகின்ற சோ, ஆவடி குமார் ஆகியோரே புகழ்மாலை பாடி சிவப்புக் கம்பளம் விரிக்கும் போது, நான் ரத்தினக் கம்பளம் விரித்து வரவேற்கலாம்.

மக்களுக்காகவே பாடுபடுகின்ற, மக்களுக்காகவே குரல் கொடுக்கின்ற, மக்கள் தலைவர்கள் சரத்குமார், பண்ருட்டி வேல்முருகன், செ.கு.தமிழரசன், மதுரை ஆதினம் போன்றோர் ஆரவாரித்து ஆதரிக்கும் போது, நான் கைத்தட்டி வரவேற்கலாம்.

நீதிமன்றத்தால் ஏ.ஒன் அக்யூஸ்ட் என்று குற்றம் சாட்டப்பட்டிருக்கலாம், கடும் கண்டிஷன்களோடு ஜாமீன் கொடுக்கப்பட்டிருக்கலாம், மீண்டும் விசாரணையை எதிர் நோக்கலாம், மீண்டும் தண்டனை உறுதிப்படுத்தப்படலாம். ஆனாலும் வரவேற்கிறேன்.

ஆயிரம் இருந்தாலும், முதல்வராக இருக்கும் போதே குற்றவாளி என குற்றம்சாட்டப்பட்டு கைதானாலும், அது குறித்து கவலைக் கொள்ளாமல், நீதித் துறையையே மிரள வைத்து, பரப்பன அக்ரஹாரத்தில் இருந்து போயஸ் அக்ரஹாரத்திற்கு வருகை தரும் மக்களின் முதல்வரே...

# நானும் வரவேற்கிறேன் !

வெள்ளி, 17 அக்டோபர், 2014

சௌதாலா கேஸ்ல நம்ம வக்கில்

வழக்கம் போல் வழக்கறிஞர் அண்ணன் துரைராஜ் அறைக்கு போயிருந்தேன். அவர் தான் எனது வழக்குகளுக்கு ஆஜராகிறவர். எனக்கு மட்டுமல்ல, அரியலூரில் பல வி.ஐ.பி-களுக்கும் அவர் தான் வழக்கறிஞர். சிக்கலான வழக்குகளை பிரித்து மேய்வார், வாதத்தால்.

அன்று மிகுந்த சிந்தனையில் இருந்தார். “என்னண்ணே சிந்தனை ?” என்றேன். “குமணன் காலேஜ்-ல சேரனும். என்ன படிக்க வைக்கிறதுன்னு குழப்பமா இருக்கு” என்றார். குமணன் அவரது மகன்.

                 

“குமணன் என்ன சொல்றாப்ல?” என்று கேட்டேன். “எஞ்சினியரிங் படிக்க விருப்பப் படறான்” என்றார். “வேண்டாம்ணே. வேற கோர்ஸ் யோசிங்க” என்றேன். “என்ன நீங்க எஞ்சினியரிங் படிச்சிட்டு, நீங்களே வேண்டாம்னு சொல்றீங்க?”

“ஆமாம்ணே. அதனால தான் சொல்றன். வக்கீலுக்கு படிக்க வைக்கலாமே. நீங்களும் வக்கீல். குமணன ஹைக்கோர்ட்டுக்கு அனுப்பலாமே” என்றேன். “எனக்கும் அந்த யோசனை இருக்கு. ஹைக்கோர்ட் என்ன, சுப்ரீம் கோர்ட்டுக்கே அனுப்பலாம். ஆனா குமணன் ஒத்துக்கனுமே” என்றார்.

“வர சொல்லுங்க அண்ணே. பேசி கன்வீன்ஸ் செய்வோம்”. வந்த குமணனை கன்வீன்ஸ் செய்தோம். அது 2003.

சட்டம் படித்தார் குமணன். 2008, சொன்னபடி சுப்ரீம் கோர்ட் வக்கீல் ஆக்க, அண்ணன் துரைராஜ், குமணனை டெல்லிக்கு அனுப்பினார். அண்ணன் ஆ.ராசா, பார் கவுன்சில் தலைவர் சந்திரமோகன் ஆகியோர் வழிகாட்டுதல்.

உச்சநீதிமன்ற சீனியர் வழக்கறிஞர் டங்கா அவர்களிடம் ஜூனியராக பணியாற்றத் துவங்கினார். நாங்கள் டெல்லி செல்லும் போதெல்லாம் சந்திப்போம். 2ஜி வழக்கின் விபரங்களை எங்களுக்கு எளிதாக எடுத்துக் கூறி புரிய வைப்பார்.

வழக்கின் அவ்வப்போதைய அப்டேட்கள் குமணனிடமிருந்து எங்களுக்கு கிடைக்கும். புதிதாக வரும் நண்பர்களிடம் அவரை அறிமுகப்படுத்தினால் வட இந்தியர் என்றே நினைப்பார்கள். தோற்றமும், நிறமும் இயற்கையாக அப்படி. பெயரை கேட்டு தான் நம்ம ஆள் என்று உணர்வார்கள்.

சமீபத்தில் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த ஹரியானா முன்னாள் முதல்வர் சௌடாலாவின் ஜாமீன் ரத்து செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட செய்தியை தொலைக்காட்சியில் பார்த்தேன். வழக்கமான செய்தியாக விட்டு விட்டேன்.

ஊழல் வழக்கில் 10 ஆண்டுகள் தண்டனை வழங்கப்பட்ட சௌதாலா வயோதிகம் மற்றும் உடல் நலக்குறைவைக் காரணம் காட்டி நிபந்தனை ஜாமீனில் வெளிவந்திருந்தார். நிபந்தனையை மீறி தேர்தல் பிரச்சாரம் செய்தார். அதை ஆட்சேபித்து ஹேமந்த் சர்மா என்பவர் வழக்கு தொடுத்தார்.

வழக்கு நீதிபதி சித்தார்த் மிருதுளா முன் வந்தது. ஹேமந்த் சர்மாவிற்காக இரு இளம் வழக்கறிஞர்கள் ஆஜரானார்கள். சௌதாலாவிற்கு பிரபல வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி ஆஜரானார். ஆவேசமாக வாதாடினார். தன் வழக்கப்படி கோர்ட் மீது குற்றம் சுமத்தி வாதாடினார்.

இளம் வழக்கறிஞர்கள் மென்மையாக ஆனால் அழுத்தமாக தங்கள் வாதங்களை வைத்தார்கள். இவர்களது வாதங்களை கேட்ட நீதிபதி, ஜாமீனை ரத்து செய்து சௌதாலாவை திகார் சிறையில் சரணடைய உத்தரவிட்டார்.

இளம் வழக்கறிஞர்களில் முதன்மையானவர் நம்ம குமணன். அண்ணன் ஜெத்மலானி புலி, சிங்கம் என்று பில்டப் கொடுக்கப்படும் வேளையில் அவரது வாதங்களை முறியடித்திருக்கிறார் குமணன். இப்போது லைம் லைட்டில் குமணன். தமிழனாக பெருமை.

# வாழ்த்துக்கள் சகோதரர் குமணன், டெல்லியை வெல்ல !

புதன், 15 அக்டோபர், 2014

ஜெயலலிதாவுக்கு வந்த தீர்ப்பு

ஜெயலலிதா ஆட்சிக்கு வந்து 45 நாட்களே ஆயிருந்தன. அது 2001 ஆம் ஆண்டு. ஜூன் 29-ம் தேதி. மாலையிலிருந்தே காவல்துறை தலைமையிடத்தில் ஒரு இனம் புரியாத பதட்டம்.

                

நேரம் ஆக, ஆக கீழ்மட்ட அதிகாரிகளுக்கு ஆணைகள் பறக்கின்றன. ஏதோ ஒரு நெருக்கடி போல தோற்றம். சென்னை மாநகரம் மெல்ல மெல்ல காவல்துறையின் கட்டுபாட்டுக்குள் வந்து கொண்டிருந்தது.

என்ன நடக்கப் போகிறது என்பது யாருக்கும் புரியவில்லை. மேலிடத்தின் உத்தரவுக்காக காத்திருந்தனர். இரவு வளர்ந்துக் கொண்டிருந்தது. மர்ம நாவலின் காட்சிகள் போல் திக்திக் என காவல்துறை அதிகாரிகள் காத்திருந்தனர்.

சென்னை மாநகராட்சியின் ஆணையர் ஆச்சர்யாலு ரகசியமாக சி.பி.சி.ஐ.டி அலுவலகம் செல்கிறார். ஒரு புகார் கொடுக்கிறார். காவல்துறை தலைமையிடத்தில் இருந்து உத்தரவு வருகிறது. உடனே எப்.ஐ.ஆர் போடப்படுகிறது. மணி இரவு 9.00.

பத்து மணிக்கு மேல் எல்லா நடமாட்டங்களும் கிட்டத்தட்ட நிறுத்தப்பட்டுவிட்டன. காவல்துறை உயரதிகாரிகள் கூடிக் கூடி பேசிக் கொண்டிருந்தனர். எந்த எந்த இடங்களில் காவல் பலம் அதிகரிக்கப்பட வேண்டுமென திட்டமிட்டனர்.

இரண்டு போலீஸ் படைகள் கிளம்பின. ஒன்று மயிலாப்பூர் நோக்கி விரைந்தது. மற்றொன்று கோபாலபுரம் நோக்கி விரைந்தது. விடியற்காலை மணி 1.30-ஐ தாண்டியது. அப்போது தான் சில போலீஸ் அதிகாரிகளுக்கு ஏதோ விபரீதம் என புரிந்தது.

யாரையும் அனுமதி கோராமல் வீட்டுக்குள் போலீஸ் அத்துமீறி நுழைகிறது. மாடிக்கு ஏறிச் சென்று கதவை உடைத்து உள்ளே நுழைகிறார்கள். கட்டிலில் தூங்கிக் கொண்டிருக்கிறார் தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் கழகத் தலைவருமான தலைவர் கலைஞர். அப்போது அவருக்கு வயது 78.

பதறி எழுகிற அவரை கைது செய்வதாக அறிவிக்கிறார்கள். என்ன வழக்கு, எதற்கு என்றெல்லாம் பதில் இல்லை. மற்றவர்களுக்கு தகவல் சொல்ல அனுமதிக்கவில்லை. அப்படியே பிடித்து தூக்குகிறார்கள். வீட்டில் உள்ளவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.

அப்போது ஒரு காவல்துறை அலுவலருக்கு செல்லில் அழைப்பு வருகிறது. பயந்து பயந்து பேசுகிறார் அதிகாரி. “கைது செய்து விட்டோம். உடனே கொண்டு செல்கிறோம்” என்று பதிலளிக்கிறார். பக்கத்திலிருந்தவருக்கு கண்ணை காட்டுகிறார். உடனே கலைஞரை தரதரவென இழுத்து செல்கிறார்கள்.

               

கைது காட்சியை வீடியோ பார்த்திருப்பீர்கள். செல் லைவில் இருக்கிறது. அந்த முனையில் இருப்பவர் இங்கு நடப்பதை கேட்டு ஆனந்தப்படுகிறார். கலைஞர் அலைகழிக்கப்படுகிறார். போலீஸார் எங்கு அழைத்து செல்கிறார்கள் என்று யாருக்கும் தெரியவில்லை.

ஒரு வழியாக அங்கு இங்கு சுற்றி சி.பி.சி.ஐ.டி அலுவலகத்திற்கு கொண்டு செல்கிறார்கள். நீதிபதியிடம் அழைத்து செல்கிறார்கள். நீதிபதி கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் அரசு வழக்கறிஞரும், காவல்துறை அதிகாரிகளும் தடுமாறுகிறார்கள்.

15 நாட்கள் ரிமாண்ட். “உங்கள் இதயம் தசையாலனதா, இரும்பாலனாதா” என்ற புகழ்ப் பெற்ற கமெண்ட் நீதிபதியிடமிருந்து.

சென்னை நகரில் மேம்பாலம் கட்டியதில் ஊழல் என முதல் தகவல் அறிக்கை போடப்பட்டது 2001 ஜூன் 29. கடும் விசாரணை எல்லாம் செய்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது 2005 ஆம் ஆண்டு. ஜெயலலிதா ஆட்சி எவ்வளவோ முயற்சி செய்தும் வழக்கை ஜோடிக்க முடியவில்லை. வழக்கு என்ன ஆனது என்றே தெரியவில்லை.

காட்சி மாறுகிறது...

2014 செப்டம்பர் 27 சனிக்கிழமை.

பூஜை புனஸ்காரம் முடிந்து ஜெயலலிதா போயஸ் கார்டனில் இருந்து கிளம்புகிறார். மதிய உணவுக்கு வீடு திரும்பி விடுவதாகத் தெரிவிக்கிறார். கிட்டத்தட்ட 14 கி.மீ தூரத்தில் உள்ள விமான நிலையம். பத்தடிக்கு ஒரு போலீஸ் நின்று காவல் காக்கிறார்கள்.

முதல்வர் கான்வாய்க்காக சிக்னல்கள் நிறுத்தப்படுகின்றன். ஆங்காங்கே போக்குவரத்து நிறுத்தப்படுகிறது. முதல்வரின் கான்வாய் பறக்கிறது. சிகப்பு விளக்கு சுழல முதல்வர் கார் கடக்கும் போது, காவலுக்கு நிற்கிற காவலர்கள் இயந்திரகதியில் வணக்கம் வைக்கிறார்கள், காருக்கு.

விமானநிலையம். அரசின் உயரதிகாரிகளும், காவல்துறை அலுவலர்களும் பூங்கொத்து கொடுத்து வணக்கம் வைக்கிறார்கள். வழக்கமான பெருமிதப் புன்னகையோடு எதிர்கொள்கிறார் ஜெயலலிதா. தனி விமானம் காத்திருக்கிறது. சென்னையிலிருந்து கிளம்பிவிட்டார்.

பெங்களூரு. பார்ப்பன அக்ரஹார சிறை வளாகம். விடியற்காலை முதலே அதிமுக தொண்டர்கள் குவிந்துக் கொண்டு இருக்கிறார்கள். இந்திய ஊடகங்கள் குவிந்துக் கொண்டு இருக்கின்றன. அமைச்சர் பெருமக்கள் வரிசையில் நின்று கர்நாடக போலீஸ் அனுமதியோடு கோர்ட் வளாகத்தை நெருங்குகிறார்கள்.

தமிழகத்திலிருந்து சென்றிருந்த காவல்துறை அதிகாரிகளும், காவலர்களும் மப்டியில் இருந்தவாறு சூழ்நிலை குறித்து மேலிடத்திற்கு தகவல் கொடுத்துக் கொண்டிருந்தனர். விமானநிலையத்தில் இருந்து கோர்ட்டிற்கு செல்லும் பாதையை கர்நாடக போலீஸ் ஒருபுறமும், மப்டியில் இருந்த தமிழக போலீஸும் டிரையல் பார்த்துக் கொண்டிருந்தனர்.

ஜெயலலிதாவின் தனிவிமானம் தரை இறங்கியது. ஹெலிக்காப்டர் ஏறினார். தரை இறங்கினார். ஐந்து நிமிடம் ஓய்வு எடுத்தார். தேசியக் கொடி கட்டப்பட்ட காரில் ஏறினார். 23 வாகனங்கள் கொண்ட கான்வாய் கிளம்பியது. பார்ப்பன அஹ்ரகார கோர்ட் வளாகம்.

                

கோர்ட் உள் செல்கிறார் ஜெயலலிதா. நீதிபதி குன்ஹா வருகிறார். “நீங்கள் குற்றவாளி” என தீர்ப்பளிக்கிறார். முகம் இருண்டு போகிறார். ஜெயலலிதா வந்த காரில் பறந்த தேசியக் கொடி அகற்றப்படுகிறது சாதாரண கான்ஸ்டபிளால்.

மாலை தீர்ப்பின் முழு விவரத்தை படித்த நீதிபதி குன்ஹா, காவல்துறை இன்ஸ்பெக்டர் பாதுகாப்பில் ஜெயலலிதாவை குற்றவாளியாக ஒப்படைத்தார். முதல்வராக உள்ளே நுழைந்தவர், நான்காண்டு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளியாக வெளியே வந்தார்.

               

காலை தமிழகக் காவல்துறையின் தலைமையதிகாரியின் சல்யூட்டை அலட்சியமாக ஏற்றுக் கொண்டு வந்தவர், என்.எஸ்.ஜி பாதுகாப்பு படையிடமிருந்து தள்ளுமுள்ளுக்கு பிறகு கர்நாடகக் காவல்துறையின் கடைநிலை காவலர்களால் அழைத்து செல்லப்பட்டார்.

18 ஆண்டுகள் இழுத்தடிக்கப்பட்டு, 160 வாய்தா வாங்கி சாதனை படைத்த வழக்கு முடிவுக்கு வந்தது.

கலைஞர் மீது போடப்பட்ட வழக்கிற்கு காரணமான மேம்பாலங்கள் உறுதியாக நின்று மக்கள் பயன்பாட்டில் உள்ளது. தளபதி அவர்களுக்கு அடையாளமாக திகழ்கிறது. ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கில் கொடநாடு எஸ்டேட் அவரது அடையாளமாக திகழ்கிறது.

# நீதி நின்றும் ஆடுகிறது !

               

செவ்வாய், 14 அக்டோபர், 2014

ஜெயலலிதா ஜெயில்; ஜோசிய பெயில் !

ஜெயலலிதா விடுதலைக்கு ஜோசியர்கள் ஆலோசனை. இதை படிச்ச உடனே எதோ கிண்டல்னு தான் நினைச்சேன். ஆனா அப்புறம் தினமலர் இபேப்பர் பார்த்தா தான் தினமலர் அக்கறை தெரிஞ்சுது.

                                 

ஆனா அந்த ஜோசியருங்க சொன்னது எல்லாம் ஏதோ நோக்கத்தோட சொன்ன மாதிரி இருக்கு. நீங்களே பாருங்க…

ஜோதிடர் ஷெல்வி:
ஜெயலலிதா ஜாதகத்தில் குரு கெட்டு போயிருப்பதாலேயே அவர் இவ்வளவு துன்பங்களை அனுபவிக்க வேண்டியதாகி விட்டது. (எனக்கென்னமோ காடுவெட்டி குருவ ஜெயில்ல வச்சத சொல்லி காட்டற மாதிரியே இருக்கு)

அதிமுகவினர் ஆலங்குடி கோவிலுக்கு சென்று தினந்தோறும் வழிபட வேண்டும். (பக்கத்தில தான் தலைவர் கலைஞர் தொகுதி திருவாரூர், கலைஞர் பிறந்த திருக்குவளை எல்லாம். போங்க, போங்க)

அங்கு அபிஷேகம், அன்னதானம் செய்ய வேண்டும். மஞ்சள் நிறத்தில் வஸ்திரதானம் செய்யலாம். மஞ்சள் நிற உணவை அன்னதானமாக வழங்க வேண்டும். மஞ்சள் நிற சுண்டல், புளி சாதம் போன்றவற்றை அன்னதானமாக வழங்க வேண்டும். (கலைஞரோட மஞ்சள் சால்வையை கிண்டல் செய்யும் அதிமுக கம்பெனிக்கு எல்லாம் மஞ்சள்ல. சபாஷ். இது ஒன்னும் மஞ்சள் கிண்டல் இல்லையே?)

                  

ஜோதிடர் கே.பி.வித்யாதரன்:
மாணவ, மாணவியருக்கு அதிமுகவினர் உதவி செய்யலாம். (எப்புடி, ஹோம் ஒர்க் மட்டுமா? கிளாஸ் ஒர்க்குமா?) நடைமுறை மற்றும் யதார்த்த பரிகாரம் என்றால் அது தேக பரிகாரமேயாகும். உடல் உறுப்பு தானம், ரத்த தானம் செய்ய வேண்டும். ( ஆகா, வடிவேல சின்னபையன் வேனுக்குள்ள கூட்டிக்கிட்டு போற ஸீன் தான ஞாபகம் வருது…)

அதிமுகவினர் சுத்த பத்தமாக இருந்தால் பரிகாரம் முழுபலனைக் கொடுக்கும். அசைவத்தை தவிர்க்கலாம். பசு தானம் செய்யலாம். மொத்தத்தில் யாகம் செய்வதை விட தியாகம் செய்வது நல்லது. (சரத்குமார பார்த்து வடிவேலு சொல்ற அதே “ஆச்சாரம்?”மா)

           

ஜோதிடர் சோமசேகரன், ஆற்காடு:
குரு தோஷம் ஏற்பட்டுள்ளதால், மடாதிபதிகளின் ஆசி, குல ஆச்சார்யர்களின் ஆசி மிக அதிகமாக தேவை. எனவே தமிழகத்தில் உள்ள அனைத்து மடங்களிலும் உள்ள மடாதிபதிகளுக்கு “பிஷாவந்தனம்” செய்ய வேண்டும். (இவன் தான்யா முக்கியமான ஆப்ப வைக்கிறான். காஞ்சி மடத்துக்கு போங்கோ, நடு'வாளும் சின்ன'வாளும் காத்துண்டிருக்கா.)

ஜோதிடர் சிவகுரு ரவி, விழுப்புரம்:
(போட்டான்யா ஒரே போடு) ராம ஜன்ம வனத்திலே, சீதை சிறை வைத்ததும், தீதில்லாதோர் மூன்றிலே, துரியோதனன் படை மாண்டதும், தருமபுத்திரன் நாலிலே, வனம் வாசம்பாடி போனதும், இமையெட்டினில் வாலி பட்டம் இழந்து, மேம்பாடி ஆனதும், ஈசனார் ஒரு பத்திலே, தலையேட்டிலே இருந்துண்டு, ராவணன் முடி, 12ல் விழுந்தது' என, ஜோதிட நுால் கூறுகிறது

தற்போது ஜெயலலிதாவிற்கு, சந்திர கிரகணத்தால், 90 நாட்கள் ஆகாது; ஆபத்தை சந்திக்கணும். உடனிருப்போர் துரோகியாக மாறுவர்; அரசில் குளறுபடி நடக்கும். ( ஜோசியர் அண்ணே, அம்மா தினமலர் தான் படிக்கிறாங்களாம்)

ஜோதிடர் ஆர்.கே.வரத ராஜ், காஞ்சிபுரம்:
ஜெயலலிதாவின் ஜாதகத்தில், சுக்கிரன் இருக்கும் இடத்தில், கேது இருப்பதால், சட்ட சிக்கல் ஏற்பட்டுள்ளது.சுக்கிரன் உச்ச மாக இருக்கும் காரணத்தாலும், கேது சட்ட நெருக்கடியை கொடுக்கும் கிரகம் என்பதாலும், இந்த நிலை ஏற்பட்டுள்ளது.மேலும், பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்ற நேரம், கட்சி தலைவர்களாக இருக்கும் பெண்களுக்கு, பாதிப்பை ஏற்படுத்தி தரும். ( அந்த ஆள் மோடி இங்க எங்கய்யா வந்தாரு. நாஞ்சில் சம்பத் சொல்றது சரி தான் போல “சர்வதேச சதி”)

ஜோதிடர் பாலசேகர், சென்னை:
விதிப்படி எது நடக்கணுமோ, அது நடக்கும். பரிகாரம் எதுவும் கிடையாது. சிலரின் மன திருப்திக்காகவே, பரிகாரம் சொல்லப்படுகிறது.( அவ்ளோ தான். சிம்பிள்)

# அம்மா, உங்களுக்கும் இப்படியேத் தான் தோணுச்சா ?

புதன், 8 அக்டோபர், 2014

தேத்தண்ணி, தேத்தாரை; மலேசியப் பயணம் - 3

மலேசியாவில் ஜோகுர். அம்மா உணவகம். 02.09.2014, காலை உணவு. உணவு ஆர்டர் கொடுத்து முடிந்தவுடன் உணவக சிப்பந்தி கேட்டார், "drinks என்ன சாப்பிடுறீங்க?"

ஒரு நிமிடம் புரியவில்லை, வெறும் உணவகம் தானே. பக்கத்திலிருந்த செல்வத்தை பார்த்தேன். அதற்குள் அலன் "தேத்தண்ணி" என்று சொல்லிவிட்டு எங்களை பார்த்தார். "டீ தான். சொல்லலாம்ல" என்றார் செல்வம்.

       

"சாப்பிட்டு முடிச்சிட்டு குடிக்கத்தானே?" என்று கேட்டேன். "இங்கு இப்படி தான். சாப்பிடும் போதே டீ குடிப்பார்கள்" என்றார். எல்லோருக்கும் தேத்தண்ணி சொன்னார். உணவு வந்தது. நல்ல ருசி. தேத்தண்ணி ஒரு பெரிய கிளாஸில் வந்தது.

அப்போது தான் நினைவுக்கு வந்தது. சென்னை வந்த மலேசியக் குழுவினருடன் மதிய உணவு அருந்திய போது, அவர்கள் மாதுளை ஜூஸ் ஆர்டர் செய்து உணவுடனே சாப்பிட்டது. அவர்கள் தண்ணீரே அருந்தவில்லை.

இங்கு மலேசியாவிலும் யாரும் தண்ணீர் அருந்தவில்லை. எல்லா மேசைகளிலும் தேத்தண்ணி. அரிதாக காஃப்பியும் இருந்தது. "போகும் இடமெல்லாம் இதே குரல் தான் கேட்கும்" என்றார் செல்வம். அதே போல் சென்ற இடங்களில் எல்லாம் தேத்தண்ணி கிடைத்தது.

அலன் அவர்கள் இல்லத்திற்கு சென்ற போது, "என்ன சாப்பிடறீங்க?" என்று கேட்ட போது, "தண்ணீர்" என்றேன். "தேத்தண்ணியா?" என்ற கேள்வி தான் வந்தது. அவர்களை பொறுத்தவரை தண்ணீரை குடிக்க பயன்படுத்தும் வழக்கம் பெரிதாக இருப்பதாக தெரியவில்லை.

அலன் அவர்களது தொழிற்சாலைக்கு சென்றிருந்த போது குடிக்க நீர் கேட்ட போதும், பிளாஸ்டிக் டம்ளரில் பேக் செய்யப்பட்ட நீரையே கொடுத்தார்கள். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து அருந்தும் முறையே கண்ணில் படவில்லை.

நம்மை போல் அதிகம் நீர் அருந்த வேண்டிய தட்பவெப்ப நிலை அவர்களுக்கு இல்லை. நானே, அங்கே இருந்த போது அதிகம் நீர் அருந்தவில்லை என்பதை இதையெல்லாம் கூர்ந்து கவனித்த போது தான் உணர்ந்தேன்.

காற்றில் ஈரப்பதம் சென்னையில் 70% என்றால் அங்கே 83% சதவீதத்திற்கு மேல். அவ்வப்போது மழை வந்து விடுகிறது.அதனால் தண்ணீர் அருந்தி உடல் வெப்பத்தை சீராக வைக்கும் தேவை இல்லை.

நாங்கள் சென்ற முதல் நாள் மழையை பார்க்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அவர்களிடம் கேட்டேன், "மழை பெய்யுமா?". "என்ன இவ்வளவு ஆர்வம்?" என்று கேட்டார்கள்.

சமீபத்தில் கவியரசு வைரமுத்து பேட்டியில் சொல்லியிருந்தார்,"உலகிலேயே எனக்கு பிடித்த மழை மலேசிய மழை. அவ்வளவு தூய்மையானது" என்று. அதனால் தான் அந்த ஆர்வம். இரண்டாம் நாளே அந்த வாய்ப்பு கிடைத்தது. திடீரென பொத்துக் கொண்டு ஊற்ற ஆரம்பித்தது. ஒரு மணி நேரம். கன மழை. உட்கார்ந்து பார்த்து ரசித்தேன்.

அடடா, அந்த மழையை ரசிக்க தேத்தண்ணி அவசியம் தான். தேத்தண்ணியை போல் தேத்தாரே என்ற வார்த்தையும் புழங்கியது. என்ன என்றேன். நம்மூர் டீக்கடையில் சில டீமாஸ்டர்கள், டீயை உயரத் தூக்கி ஆற்றுவார்கள். அப்படி ஆற்றினால் தேத்தாரே. அதற்கு போட்டி வைத்து பரிசு கொடுப்பார்களாம், அதிக உயரம் டீ தூக்கி ஆற்றுகிறவருக்கு.

நம்மை போலவே டீ'கலாச்சாரம். கொடுக்கும் அளவு மிகக் கூடுதல். நம்மூர் ஆறு டீ அளவு.

# தேத்தண்ணி குடித்து வாழ்வோரே வாழ்வார் !

செவ்வாய், 7 அக்டோபர், 2014

மலேசியாவில் அம்மா உணவகம்; மலேசியப் பயணம் - 2

சிங்கப்பூரிலிருந்து நாங்கள் பயணித்தது மலேசியாவில் உள்ள ஜோகுர் பாஹ்ரு மாநிலத்திற்கு. மொத்தம் 13 மாநிலங்களை கொண்டது மலேசியா. இந்த ஜோகுர் பாஹ்ரு மாநிலம் சிங்கப்பூரை ஒட்டியுள்ள பகுதி. அன்று 02.09.2014

                

முக்கால் மணி நேரப் பிரயாணம். சாலை தரத்தால் பயண சிரமம் தெரியவில்லை. இன்னொரு புறம் தூக்கக் கலக்கம். காரணம் சென்னையில் புறப்பட்டப் போது இரவு 1.30. பயண நேரம் கிட்டத்தட்ட நான்கு மணி நேரம். அது இந்திய நேரப்படி அதிகாலை 5.30.

சிங்கப்பூரையும் மலேசியாவையும் பிரிப்பது கடலின் சிறு பகுதி. கடல் மேல் ஒரு பாலம் கட்டி இணைத்திருக்கிறார்கள். அவ்வளவு நெருக்கம். பாலம் தாண்டும் போது போக்குவரத்து வேகம் குறைய ஆரம்பித்தது.

கார்கள் நின்று, நின்று செல்ல ஆரம்பித்தன. "டோல்கேட்டா?" என்று கேட்டேன். "இல்லை. கஸ்டம்ஸ் மற்றும் இமிகிரேஷன்" என்றார்கள். சென்னை விமான நிலைய கஸ்டம்ஸ் அனுபவத்தை வைத்து நேரம் ஆகும் என்று நினைத்தேன்.

தொழிற்சாலைகளுக்கு அமைப்பது போல் பெரிய, பெரிய ஷெட்கள் அமைக்கப்பட்டிருந்தன். அதனுள் சாலைகள் பிரிந்து சென்றன. நம் டோல்கேட்களில் அமர்ந்திருப்பது போல் ஒருவர் அமர்ந்திருந்தார். அவர் தான் கஸ்டம்ஸ் அதிகாரி.

அவர் அருகில் காரை நிறுத்தி எங்கள் பாஸ்போர்ட்களை வாங்கி அவரிடம் கொடுத்தார். பரிசோதித்து திருப்பிக் கொடுத்தார். இரண்டு நிமிடங்கள் தான். காரை விட்டு இறங்கவில்லை. மிக எளிதான நடைமுறை. சந்தேகம் வந்தால் பரிசோதிப்பார்களாம்.

மலேசியா வந்தாயிற்று. எங்கே சாப்பிடலாம் என செல்வமும், அலனும் விவாதித்தார்கள். தமிழ் ஹோட்டல் என்று முடிவெடுத்தார்கள். "எங்கே சரவணபவனா?" என்று கேட்டேன், வெளிநாடுகளில் இருக்கும் ஹோட்டல் அது தானே என்ற எண்ணத்தில்.

"இல்லை அம்மா உணவகம்" என்றார் செல்வம். "கிண்டல் பண்றீங்களா? இப்போ தான் ஆந்திராவிலேயே பார்த்துட்டு போயிருக்காங்க. அதுக்குள்ள மலேசியாவில அம்மா உணவகம் வந்திடுச்சா?"என்று கேட்டேன். "வந்து பாருங்க' என்றார்.

காரை பார்க்கிங்கில் நிறுத்தி அழைத்து சென்றார்கள். உண்மை தான், அந்த ஹோட்டல் பெயரே 'அம்மா உணவகம்' தமிழ் உணவகம். உள்ளே சுவர்களை எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெயலலிதா என பழைய தமிழ் நடிகர்களின் படங்கள் அலங்கரித்தன. முன்னர் தமிழகத்தின் சிறு நகரங்களில் இது போன்று படங்கள் வைத்திருப்பார்கள்.

நம் தமிழ் குல வழக்கப்படி முதலில் "இட்லி" சொன்னோம். பக்கத்து மேசையில் ஊர்வன, பறப்பன எல்லாம் உணவாக உருவெடுத்திருந்தன. உள்ளூர் மலேய மக்கள் ரசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். "முட்டை பரோட்டாவும், கறிகுழம்பும் சாப்பிடுறீங்களா? அது இங்க ஸ்பெஷல்" என்றார் அலன். ஆர்டர் செய்தோம்.

# மலேசியாவில் அம்மா (அசைவ) உணவகம் !

திங்கள், 6 அக்டோபர், 2014

விமான நிலையத்தில் கப்பல் ; மலேசியப்பயணம்‬-1

சிங்கப்பூர் விமான நிலையத்தில் இறங்கியவுடன் வரவேற்பதற்காக ‘அலன்’ அவர்கள் மலேசியாவிலிருந்து வந்து காத்திருந்தார். மகிழ்ச்சியாக கைக்குலுக்கி வரவேற்றார்.

         

“கப்பல் பயணம் சுகமாயிருந்ததா?”அலன் கேட்டார். ஒரு நிமிடம் எனக்கு தலையை லேசாக சுற்றியது. இவருக்கு என்ன ஆயிற்று?, விமான நிலையத்தில் வந்து நின்று கொண்டு இந்தக் கேள்வியை கேட்கிறார்.

“பயணம் சுகம் தான். கப்பல் சீட்கள் தான் சற்று குறுகல், வசதியாயில்லை” செல்வம் பதிலளித்தார். ‘கிர்’ரடித்தது. நான் திரும்பி ஒரு முறை அறிவிப்புப் பலகையை பார்த்தேன். சிங்கப்பூர் விமான நிலையம் தான்.

இப்போது செல்வம் எங்களை பார்த்து சிரித்தார். “என்ன குழப்பமாயிருக்கா? நானும் மலேசியா முதல்முறை வந்த போது சற்று தடுமாறிப் போனேன். மலேசிய தமிழர்கள் விமானத்தை கப்பல் என்றே குறிப்பிடுவார்கள்.”

சரியாதான் இருக்கோம். கிர் கொஞ்சம் நின்றது. “வேறு என்ன வார்த்தைலாம் இப்படி இருக்கு. கொஞ்சம் சொல்லிடுங்க” என்றேன். “பேசும் போது கவனிங்க. நிறைய வரும்” என்றார் செல்வம்.

“கொஞ்சம் காத்திருங்க. ‘காடி’ எடுத்துகிட்டு வந்துடுறேன்.” சொல்லி சென்றார் அலன். காடி, நாமும் உபயோகப்படுத்தும் வார்த்தை தானே. வாகனம் எடுத்து வரப்போகிறார் என்பது தெரிந்தது. பழைய கார் போலும், அதான் காடி.

ஜம்மென்று லேட்டஸ் பென்ஸ் கார் வந்து நின்றது. கண்ணாடியை இறக்கி அலன் அழைத்தார். ஏறினோம். பேச்சு வழக்கில் தான் புரிந்தது, நிறைய வித்தியாசமான வார்த்தைகளும், தூய தமிழ் வார்த்தைகளும் மலேசியத் தமிழர்களிடத்தில் புழங்குவது.

ஆறு வழிச்சாலைகள். பரந்து விரிந்த சாலைகளில் பாகம் ஒழுங்கு (lane discipline) மிகச் சரியாகக் கடைபிடிக்கப்படுகிறது. நம் சாலைகளில் முடியாத வேகம், ஆனால் ஒரே சீரான வேகத்தில் வாகனங்கள் செலுத்தப்படுகின்றன.

பாதை பிரியுமிடத்தில், கொஞ்சம் தவறினாலும் அடுத்த பிரிவில் போய் ஒரு சுற்று வந்து தான் பாதையை பிடிக்க முடியும். நம்ம ஊர் மாதிரி கொஞ்சம் ரிவர்ஸ் போகலாம், இல்ல கொஞ்சம் ஒன்வே போகலாம் கதை இல்லை.

கார் வேகம் பிடித்து விரைந்தது. மலேசிய பண்பலையில் இளையராஜா காலை பொழுதை இனிமையாக்கிக் கொண்டிருந்தார். இடையிடையே மலேசிய நாட்டுச் செய்திகள்.

இந்தியாவிற்கும் சிங்கப்பூர், மலேசியாவிற்கும் 2.30 மணி நேர வித்தியாசம். அப்போது காலை மணி 7.30. “பசியாறலாமா?” என்றார் அலன். “ஒரு மணி நேரம் தானே. மலேசியா போயிடலாம். அங்க பசியாறிக்கலாம்” என்றார் செல்வம்.

பசியாறுவது, நம்ம தமிழில் சாப்பிடுவது. அந்தத் தமிழே பசியாற்றியது.

# நெஞ்சை அள்ளும் மலேசியத் தமிழ் !

ஞாயிறு, 5 அக்டோபர், 2014

‪வந்தேவிட்டது ; பாஸ்போர்ட்‬ புராணம் (4)

ஆகஸ்ட் 16,17 கடந்து போனது, ஆனால் பாஸ்போர்ட் தான் வரவில்லை. சிங்கப்பூர் விழாவில் கலந்து கொண்டவர்கள் விழா சிறப்பை எடுத்துக் கூறி வெறுப்பேற்றினார்கள். கேட்டு 'மகிழ்ந்தேன்'. உட்கட்சித் தேர்தல் பணிகளில் மூழ்கிப் போனேன். அத்தோடு பாஸ்போர்ட் விஷயம் மறந்தே போனது.

                               

22.08.2014 - மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவிட்டு சென்னை பயணித்தேன். உடன் நண்பர் செல்வம். “நாளை மலேசியாவிலிருந்து ‘அலன்’ வருகிறார். உங்களை சந்திக்க வேண்டுமென்று பலமுறை சொல்லியுள்ளார். நாளை சந்திக்கலாமா?” என்று கேட்டார்.

“சந்திப்போம்” என்றேன். “பாஸ்போர்ட் என்ன ஆயிற்று?” என்றார். உடன் அலைபேசியை எடுத்து பாஸ்போர்ட் அலுவலருக்கு ஒரு நினைவூட்டல் குறுஞ்செய்தி அனுப்பினேன். “இது தான் நிலை” என்றேன்.

23.08.2014 – மலேசியாவிலிருந்து ‘அலன்’ ஒரு குழுவினருடன் வந்திருந்தார். அவர்கள் தொழில் நிமித்தமாக வந்திருந்தார்கள். சந்தித்தேன். குழுவில் ஒரு வளரும் அரசியல்வாதி வந்திருந்தார். அவர் பெயர் ‘சையரின்’. மலாய். பாசிகுடாங் முனிசிபல் கவுன்சிலர்.

இரண்டு நாட்டு ஆட்சி முறைகளை பற்றி விவாதித்தோம். சுவாரஸ்யமாக அமைந்தது சந்திப்பு. அவரோடு வந்திருந்தவர்களும் தோழமையானார்கள். மலேசியாவிற்கு வர அழைப்பு விடுத்தார்கள். வருகிறேன் என்று கூறினேன். செல்வத்திற்கு மட்டும் தான் தெரியும், நம்ம பாஸ்போர்ட் கதை.

பேசிக் கொண்டிருக்கும் போதே அலைபேசிக்கு ஒரு குறுஞ்செய்தி. “Your Passport has been dispatched today”. உங்க கஷ்டம் புரிந்து ஒரு வழியாக கடவுச்சீட்டு தயார். மண்டல அலுவலர் பாலமுருகன் அவர்களுக்கு நன்றி.

24.08.2014 – ஞாயிற்றுக் கிழமை. தபால்துறை விடுமுறை.

25.08.2014 – அரியலூர் முகவரிக்கு பாஸ்போர்ட் வந்து சேர்ந்தது. உடனே ஒருவர் எடுத்துக் கொண்டு சென்னை வந்து சேர்ந்தார். மலேசியக் குழுவினர் அழைப்பின் பேரில் உடன் விசா எடுக்க ஆயத்தமானோம். 01.09.2014-ல் பயணம் என்று முடிவானது, ஒரு வாரப் பயணம்.

26.08.2014 – மலேசியா விசா வழக்கமாக ஒரு நாளில் வழங்கப்படுமாம். சமீபமாக நான்கு நாட்களாகிவிட்டதாம். இதில் புதியக் குழப்பம், நடுவில் 28- மலேசிய தேசியநாள், விடுமுறை. 29-அன்று விநாயகர் சதுர்த்தி, விடுமுறை. குறிப்பிட்ட நாளுக்குள் மலேசியா விசா கிடைப்பது சிரமம் என்றானது.

27.08.2014 - மலேசிய விசா பிரச்சினையால், சிங்கப்பூர் விசா வாங்கிவிடுவோம் என்றார்கள். அது ஒரே நாளில் கிடைக்கக்கூடியதாம். விண்ணப்பித்தோம். இதற்கிடையில் சென்னையில் உள்ள மலேசிய தூதரகத்திற்கு மலேசியாவிலிருந்து ‘அலன்’ பேசினார், எங்கள் விசாவிற்காக. அதற்கும் விண்ணப்பித்தோம்.

28.08.2014 – சிங்கப்பூர், மலேசியா இரண்டு விசாக்களும் வழங்கப்பட்டன. எல்லாமே மேஜிக் போல நடந்தேறிக் கொண்டிருந்தது.

இது இப்படியே போய்கிட்டிருந்தா நல்லாயிருக்காதே. வந்தது அடுத்த ட்விஸ்ட்.

29.08.2014 – அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களுக்கு ஒன்றிய, நகர கழகத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் செப்டம்பர் 05,06 தேதிகளில் பெறப்படும் என அறிவிப்பு. பயணம் போவதா? ஒத்திவைப்பதா? புதுக்குழப்பம்.

29,30,31 ஆகிய தேதிகளில் தேர்தலுக்கான முன் ஏற்பாடு பணிகளை முடித்தேன். செப்டம்பர் 1 மாலை சென்னை கிளம்பினேன். ஒரு மலேசிய வாரப்பயணத்தை மூன்று நாட்களாக சுருக்கினோம்.

விமானம் இரவு 1.30-க்கு. விமானம் கிளம்பும் வரை திக்திக் தான். நமது வழக்கப்படி ஏதாவது தடங்கல் வந்து பயணம் ரத்தாகிவிடுமோ என. விமானம் டேக் ஆப் ஆகியது. ஒரு வழியா வெளிநாடு கிளம்பியாச்சி….

# இந்த சிட்டுக்குருவி தனது சிறிய சிறகை மெல்ல விரித்தது, பரந்த உலகை அளக்க….