பிரபலமான இடுகைகள்

புதன், 29 ஆகஸ்ட், 2012

பார்ப்பனீயம் - பார்ப்பனர் - எதிர்ப்பு


பார்ப்பனீயத்திற்கு எதிராக எனது கருத்துகளை வெளிப்படுத்தும் போது,  நண்பர்கள் சிலர், நான் பார்ப்பனர்களை எதிர்ப்பதாக பொருள் கொள்கின்றனர்.
எனக்கு பிராமண நண்பர்களும் உண்டு.

அன்று நான் மலைக்கோட்டை விரைவு ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தேன் . நான் கீழ்பெர்த்தில் இருந்தேன். எனது கீழ் பெர்த்தை 85 வயது முதியவருக்கு மாற்றிக் கேட்டனர். அவர் ஒரு பிராமணர், மாற்றிக் கொடுத்து விட்டேன்.

அவர் நன்றி கூறிவிட்டு, பக்கத்தில் இருப்பவர்களுக்கு சதுரகிரி மலையின் பெருமைகளை கூறிவிட்டு ,விபூதி , குங்குமம் கொடுத்தார். என்னையும் பார்த்தார், எனக்கு கொடுப்பதற்காக .

நான் மடிக்கணினியில் பதிவு வேலையில் தீவிரமாக இருப்பதாகக் காட்டிக் கொண்டேன். அவர் அதை உணர்ந்துக் கொண்டார். தன்னுடன் வந்தவர்களோடு தனது பிரசங்கத்தை தொடர்ந்தார்.

எங்கள் இரண்டு பேர் நடவடிக்கையையும் உணர்ந்து கொள்ளுங்கள் தோழர்களே..... மனிதாபிமான அடிப்படையில் உதவி, கொள்கையில் உறுதி.....

# தமிழின், தமிழனின் அடையாளத்தை அழிக்கிற ஜெ மற்றும் சோ- வின் பார்ப்பனீயத்தை எதிர்ப்பேன் !

வெளி நடப்பு - வெளியேற்றம்.


கேள்வி நேரம் சுவாரஸ்யமாக போய்க் கொண்டிருந்தது. சுற்றுலாத் துறையில் நிறைய கேள்விகள்  அனுமதிக்கப் பட்டன. கோகுல இந்திராவும் சமாளித்துக் கொண்டிருந்தார். சேத்துப்பட்டு ஏரியில் படகு விட படுமா?, சித்தன்னவாசல் காக்கப் படுமா ?,என  எதை கேட்டாலும் "புரட்சித் தலைவி அம்மாவின் அரசு கவனித்து நடவடிக்கை மேற்க் கொள்ளும்", என திறமையாக பதில் அளித்துக் கொண்டிருந்தார். 

கல்லணையில் சுற்றுலா நடவடிக்கை மேம்படுத்துவது குறித்த கேள்விக்கு துணைக் கேள்வியாக, நமது லால்குடி சட்டமன்ற உறுப்பினர் சவுந்திரபாண்டியன் ஒரு கேள்வி கேட்டார். "கல்லணையில் சுற்றுலா நடவடிக்கைகளை மேம்படுத்த தலைவர் கலைஞர் அவர்கள் ஒரு கோடி ரூபாய் ஒதுக்கினார்கள். தற்போது அமைச்சரும் தொகை ஒதுக்கியுள்ளதாக சொன்னார்கள். கல்லணை இருந்தால் தான் , சுற்றுலாவை மேம்படுத்தமுடியும் . கல்லணையை சுற்றி பல இடங்களில் அளவுக்கு மீறி மணல் அள்ளுவதால், கல்லணைக்கே ஆபத்தாக இருக்கிறது. முதலில் கல்லணையை காத்து , சுற்றுலாவை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப் படுமா ? " , என சாதுர்யமாக கேட்டார்.
 " மணல் அள்ளுவது எனது துறை சம்பந்தமான கேள்வி அல்ல " என பதிலளித்து விட்டு அமர்ந்த அமைச்சர் , சுதாரித்துக் கொண்டு " கேள்வி நேரத்தில் குற்றம் சுமத்துகிறார். அதை நீக்க வேண்டும் " என்றார். உடனே சபாநாயகர், எல்லா மணலையும் நீக்க உத்தரவிட்டார். 

கலகலப்பான கமெண்டுகளுடன் அவை லேசாக இருந்தது. 

இதற்குள், ஜெ வந்துவிட, அதிமுக-வினர் கஞ்சிப் போட்ட காக்கிச் சட்டையாக முறைப்பாக அமர்ந்தனர். சபாவும் சிரீயஸ் ஆனார்.
ஆளுனர் உரைக்கு நன்றி தெரிவித்த தீர்மானத்தின் மீதான விவாதத்தில் , முதல்வர் பதிலளிக்கும் வைபவம்,அவரது பேச்சு அடங்கிய ஸ்பைரல் பைண்டிங் நோட்டை எடுத்துக் கொண்டு எழுந்தார். நோட்டின் கனத்தை பார்த்து , பண்ருட்டியை அசத்தும் முடிவோடு வந்திருக்கிறார் என நினைத்தேன். ஆனால் ஜெ-வின் பதிலால் , அன்றே அசந்து போன பண்ருட்டி ராமச்சந்திரன் இன்று சபைக்கு வரவேயில்லை. அசத்தும் அறிவிப்புகளுக்காக சபை காத்திருக்க, ஜெ -யோ சட்டமன்ற உறுப்பினர்கள் எப்படி செயல்பட வேண்டும் என வகுப்பு எடுக்க ஆரம்பித்தார். " சட்டமன்ற உறுப்பினர்கள் மக்களுக்காக பணியாற்ற வேண்டும். மக்கள் பிச்சினைகளை சபையில் பேச வேண்டும் " என சிறப்பான அறிவுரைகளை வழங்க ஆரம்பித்தார். 
 " இந்த விவாதத்தில் பேசிய பலர் (அவங்க கட்சி) வரவேற்று பேசினார்கள். சிலர் குறை கூறவேண்டுமென குறை பேசினார்கள்" என்று அடுக்கிக் கொண்டே போனவர், தலைவர் மீது பாய ஆரம்பித்தார். " சபையில் பணியாற்ற வேண்டிய மூத்த உறுப்பினர், சபைக்கு வராமலே, வெளியே இருந்துக் கொண்டு குறைகூறுகிறார்" , எனும் போது எழுந்தார் அண்ணன் துரைமுருகன். அதிமுக-வினர் "ஓ" என ஓலமிட ஆரம்பித்தனர். சபாநாயகர்  பாயிண்ட் ஆப் ஆர்டர் கொடுக்க மறுத்தார். 
அறிவுரை சொல்கிறவர் கடந்த கழக ஆட்சி காலத்தில் சபையில் எப்படி பணியாற்றினார், எத்தனை நாள் வந்தார் என்பதை, துரைமுருகன் எடுத்து கூறிவிடுவார் என்பதால், அனுமதி மறுத்தார் சபா. 
அதிமுக அமைச்சர்களும் எழுந்து சத்தம் போட ஆரம்பித்தனர். நாங்களும் எழுந்து துரைமுருகன் அவர்களுக்கு வாய்ப்பு வழங்கக் கேட்டோம்.

சபாநாயகர் எழுந்து நின்றுக் கொண்டார். ( சபாநாயகர் எழுந்தால் அனைவரும் அமர வேண்டும் என்பது மரபு. ) ஆனால் அதிமுகவினர் , அமைச்சர்கள் உட்பட , நின்று கொண்டே இருந்தனர். இதற்கு மேல் இவர்களிடம் நியாயம் கிடைக்காது என அண்ணன் துரைமுருகன் , வெளி நடக்க ஆரம்பித்தார். 
நான் சபாநாயகரை பார்த்து அவரை பேசவிடுங்கள் , ஏன் பயப்படுகிறீர்கள் எனக் கேட்க, அதிமுக தரப்பிலிருந்து லட்ச்சார்ச்சனை. குறிப்பாக மந்திரி முனுசாமி ( பாடிலாங்குவேஜ் ), சாமி வந்தது போல் ஆடிக்கொண்டிருந்தார். போடா, வாடா என வார்த்தைகள் இறைந்தன.

கிட்டதட்ட எல்லோரும் வெளியேறிய நிலையில்  ( நான் எப்போதும் கடைசி, யாருக்கும் இடைஞ்சல் இல்லாமல், குறிப்பாக போட்டோவுக்கும், தொலைக்காட்சிக்கும் ) முன்னாள் அமைச்சர் மைதீன் கானும்  , நானும் வெளியேறிக் கொண்டிருந்தோம். 
சபையில் வைக்கப் பட்டிருந்த ஒரு புத்தகம் ' தொப் ' என்று அவர் அருகில் வந்து விழுந்தது. திரும்பிப் பார்த்தால் , விக்கெட் எடுத்த பவுலருக்கான பெருமையும் ஆவேசமுமாய் வெற்றிவேல். 
சபாநாயகரை பார்த்து, நானும், மாமா மைதீன் கான் அவர்களும் " தாக்குதல் நடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள்" எனக் குரல் எழுப்பினோம். அவர் எழுந்து நின்று ஒரு தீர்ப்பு கொடுத்தார், " சபை நடவடிக்கைக்கு குந்தகம் விளைவிக்கிற இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கிறேன். வெளியேற்ற உத்தரவிடுகிறேன் ".
சபைக் காவலர்கள் எங்கள் இருவரையும் சூழ்ந்தார்கள். நாங்கள் தொடர்ந்து குரலெழுப்பினோம். நெட்டி தள்ளி லாபியில் கொண்டு வந்து விட்டார்கள். 
வெளி நடப்பும், வெளியேற்றமுமாய் வெளியில் வந்தோம்.

( சபையிலிருந்து வெளிவந்து அலைபேசியை செயல் ஊக்கினேன். தொகுதியிலிருந்தும், மாவட்டத்திலிருந்தும் தொடர்ந்து அழைப்புகள்.... 
" சபாஷ். தூக்கிகிட்டு வந்து வெளியே போட்டாங்களா ? விடாதே..."
" அவ்வளவு தானா ? இன்னும் எதிர்பார்க்கிறேன் ..." என..
அடுத்த கூட்டத்தொடர் எப்போது ? ரெடி...)

தளபதி - சோர்வை போக்கும் விசிறி


தளபதியை வாழ்த்த வந்த விசிறி சாமியார்.

தளபதியை சந்திப்பதற்கு, நிர்வாகிகள் வரக் காத்திருந்து , அரங்கத்தை அடைந்த போது மணி 8.45 . 9.00 மணிக்கு வரிசையில் நின்று நகர ஆரம்பித்தோம்.
நல்ல நெரிசல். மூன்று பாதையாக தடுத்து வாடி கட்டப்பட்டுள்ளது. நடு வாடியில் நாங்கள், ஒன்றிய, நகர செயலாளர்கள், இளைஞர் அணி நிர்வாகிகள், கழக முன்னோடிகள் என்று.
ஒரு புறம் மெல்லிசைக் கச்சேரி. மடைதிறந்து ஆடும் நதிகளில் நான் இசைக் கலைஞன்....... இசைஞானியின் உற்சாக கீதம். இங்கே வியர்வை நதி பெருக்கெடுக்க ஆரம்பித்தது.
திருவண்ணாமலை இளைஞர் அணி வழக்கம் போல் அதிர் மேளம் முழங்க உள்ளே நுழைய , நிகழ்ச்சி களைக் கட்ட துவங்கியது.
திடீரென மெல்லிய காற்று வீச ஆரம்பித்தது.

தலைக்கு மேல் ஒரு விசிறி சுழன்று கொண்டிருந்தது. பனைவோலையில் செய்யப்பட்ட விசிறி. யார் வீசுவதென்று பார்த்தால், ஒரு சாமியார். காவித் துண்டு, பச்சை நிறத் துணியில் தலைப்பாகை. நீண்ட தாடி, நெற்றியில் நீரு, உருத்திராட்சக் கொட்டை என்ற கோலம். நான்கு பக்கமும் திரும்பி, எல்லோருக்கும் விசுறுகிறார்.
இயல்பான ஈரோட்டு பார்வையுடன் அவரை நோக்குகிறேன். இருந்தாலும் தளபதியை காண வந்திருக்கிறாரே.....அதற்குள் அவர் என்னை பார்த்து புன்முறுவல் பூக்கிறார். நேரம் 10.00.
அய்யாவுக்கு எந்த ஊர் என்று கேட்டேன். தஞ்சாவூர் என்றார். பக்கத்து ஊர் தான் நாங்கள் எல்லாம் அரியலூர் மாவட்டம் என்றேன். மகிழ்ச்சி என்றவர், எங்களுக்கெல்லாம் மிட்டாய் கொடுத்தார்.
பெயர் என்ன என்றேன். " முருகன் ஆனால் எல்லோரும் விசிறி சாமியார் என்று தான் அழைப்பார்கள்" என்றார்.
திருவண்ணாமலை யோகி சுரத் ராம் குமார், உண்மையான விசிறிசாமியார், நான் டூப்ளிகேட் என்றார். செந்துறை ஒன்றிய செயலாளர் ஞானமூர்த்தி, அவர் யாருக்கு விசிறுவார் என்று கேட்டார். யாருக்கும் விசிற மாட்டார் என்றார். எங்களுக்கெல்லாம் விசுறுகிற நீங்கள் தான் உண்மையான சாமியார், என்றோம்.
சாமியார் சொன்னார்" தொண்டருக்கு தலைவர் அவர், அதனால் வாழ்த்த வந்தேன். நீங்கள் அவரின் தொண்டர்கள். உங்களுக்கு விசுறுவதன் மூலம் நான் சிறு தொண்டு செய்கிறேன் " என்றவர், தொடர்ந்து விசிறிக் கொண்டே வந்தார்.
ஒரு வாடியை நிறுத்தி, மறு பகுதியை அனுப்பினார்கள். சாமியார் எங்களுக்கு முன்பாக மேடையேறினார். மணி 11.00. சாமியார் தளபதி அவர்களை நெருங்கிவிட்டார். கொட்டாங்குச்சியில் வைத்திருந்த கல்கண்டை தளபதிக்கு கொடுத்து வாழ்த்துகிறார். சுற்றிலும் நிற்பவர்கள் மத்தியில் சிரிப்பலை.
இரண்டு மணி நேரம் வரிசையில் காத்திருந்து, துறவு பூண்டவர்களும் வாழ்த்துகின்ற அளவுக்கு தளபதி அவர்களுடைய பணி சிறப்பு, அதனால் தான் அமெரிக்கவும் " மாண்புமிகு தளபதி " என்கிறது.
நாங்கள் தளபதியை நெருங்கிக் கொண்டிருக்கிறோம். மலர்ந்த முகத்தோடு , ஒவ்வொருவருடைய வாழ்த்தையும் பெற்றுக் கொண்டிருக்கிறார். அவரை பார்த்ததில் , இவ்வளவு நேரம் வரிசையில் நின்ற சோர்வு அகன்று, உற்சாகமானோம். அருகில் அழைத்து கைகுலுக்கினார். எனக்கு பிறந்த நாளாய் உணர்ந்தேன். உற்சாகத்தில் பறந்தேன்.


அதே நேரம் சாமியார் மேடையை விட்டு இறங்கிக் கொண்டிருந்தார். அவர் கையில் விசிறி  நிற்காமல், அடுத்தவர்களுக்காக சுழன்றுக் கொண்டே இருந்தது, மற்றவகளுடைய சோர்வைப் போக்கிக் கொண்டே இருந்தது......
 தளபதி அவர்களைப் போல.....

தளபதியின் பக்குவம் - சட்டசபையில்


ஜெயலலிதா- விஜயகாந்த்  ஆக்ரோஷ சட்டசபை சினிமா காட்சியை நினைவில் நிறுத்திக் கொண்டு இதை படியுங்கள் .

காலையில் கேள்வி நேரத்திலேயே கழகத்தை வம்புக்கு இழுக்கும் அதிமுக வின் வேலை நடந்தது . தனது தொகுதி குறித்து கேள்வி கேட்க வேண்டிய உறுப்பினர் சம்பந்தமில்லாமல் ' மைனாரிட்டி திமுக ஆட்சி ' என்று ஆரம்பித்தார். கழக உறுப்பினர்கள் எழுந்து கடும் எதிர்ப்பு தெரிவித்தோம் . கேள்வி நேரத்தில் குற்றச்சாட்டு,விமர்சனம் இருக்க கூடாது என்பது விதி , அதை சுட்டிக் காட்டினோம் .

தளபதி அவர்கள் எங்களை அமர சொல்லி அமைதி படுத்தினார்.
குறுக்கிட்டு எழுந்த அமைச்சர்களும் ' மைனாரிட்டி அரசு தானே ' என ஏகடியம் செய்ய , மீண்டும் எழுந்த அதிமுக உறுப்பினர் சக்தி , அதையே திரும்பவும் சொல்ல , கழக உறுப்பினர்களிடம் கொந்தளிப்பு ...

சபாநாயகர் இது என்ன  unparliamentary word ஆ எனக் கேட்க சூடு அதிகரித்தது .
அமைதியாக எழுந்த தளபதி அவர்கள் , " அது unparliamentary word அல்ல தான். எங்களுடைய அரசும் மைனாரிட்டி எண்ணிக்கை கொண்ட அரசாகத் தான் இருந்தது . ஆனால் ஐந்து வருடம் ஆட்சி செய்தோம் . அதை கணக்கிலெடுத்துக் கொள்ளுங்கள் " என்று அழுத்தமாக சொல்லி விட்டு அமர்ந்தார்.

வேண்டுமென்றால் பெரிய பிரச்சினையாக்கி இருக்கமுடியும்....

சபையில் மூன்று தலைவர்களும் ( தளபதி, ஜெயலலிதா, விஜயகாந்த் ) நடந்த விதத்தை ஒப்பிட்டு பார்த்துக் கொள்ளுங்கள், நீங்களே ......

சட்டசபை ----சுட்டுசபை


சட்டசபையில் அம்மாவும், கேப்டனும் சுட்டு விரலை நீட்டி நீட்டி ஆவேச வசனம் பேசி சட்டசபையை சுட்டுசபையாக்கி விட்டார்கள். அம்மா குமுற , கேப்டன் எகிற அடடா... அடடா. ....

அவர்கள் பேசியதை எல்லாம் தொலைகாட்சியில் பார்த்திருப்பீர்கள். தேமுதிக கொறடா சந்திரக்குமார் விலைவாசி உயர்வை குறித்து பேச ஆரம்பித்ததும் பிரச்சினை துவங்கிவிட்டது.

நேற்று பண்ருட்டி ராமச்சந்திரனை ஜெ துவைத்து காய வைத்ததை பார்த்திருப்பீர்கள். அப்போது பண்ருட்டி அடங்கி போய்விட்டார்.
அதேபோன்று இன்றும் அடக்கி விடலாம் என்று அமைச்சர்கள் எகத்தாளமாக பதில் சொன்னார்கள். ஆனால் சந்திரக்குமார் விடாமல் குற்றம் சாட்ட , அம்மாவுக்கு BP ஏற ஆரம்பித்துவிட்டது. முகம் தணலாய் கொதித்ததை நேரில் பார்த்திருக்க வேண்டும். 

"திராணி இருந்தால் சங்கரன்கோவிலில் நின்று பாருங்கள் "என ஜெ சொல்ல, "பெண்ணாகரத்தில் அதிமுக டெபாசிட் இழந்ததை" வி- சொல்ல, ஏகமாய் தகிக்க ஆரமித்தது சபை.....

அதிமுக உறுப்பினர்கள் ஒட்டு மொத்தமாய் எழுந்து விஜயகாந்தை பார்த்து குரலெழுப்ப..... விஜயகாந்த் சுட்டுவிரல் நீட்ட...... சினிமா தோற்றது.
அதற்கு பிறகு காவலர்களை விட்டு தேமுதிக-வினரை வெளியேற்றிவிட்டு, " ஆளில்லாத கடையில் அம்மா டீ ஆற்றியதை " டீவியில் பார்த்து மகிழ்ந்திருப்பீர்கள்........

அதற்கு பிறகு 'தேமுதிக இல்லாவிட்டாலும் அதிமுக இதைதாண்டி வெற்றி பெற்றிருக்கும் , இதை அவர்களுக்கும் சொல்லிக் கொள்கிறேன்; " அனைவருக்கும் சொல்லிக் கொள்கிறேன் " என்று ஜெ சொன்னப் போது, தாப்பா & வாப்பா கம்யூனிஸ்ட்கள் வாலை சுருட்டி வாயை அடைத்துக் கொண்டிருந்தது 


தனி காமெடி ட்ராக்......

செவ்வாய், 28 ஆகஸ்ட், 2012

அன்பில் பொய்யாமொழி - தளபதியின் நிழல்

அண்ணன் அன்பில் பொய்யாமொழி நினைவு நாள் ( 28.08.2012).

நமது தளபதி அவர்களின் உற்ற நண்பர். இறக்கும் வரை அவரது உடன் இருந்து கழகப் பணியாற்றியவர். அவரது மனசாட்சியாக செயல்பட்டவர்.. இளைஞர் அணி துவக்கப்பட்ட நாள் முதல் அதன் வளர்ச்சிக்காக உழைத்தவர்.

என்னை போன்றவர
்களுக்கு மனங்கவர்ந்த அண்ணன். இளைய சமுதாயத்தை தளபதி பின் அணிவகுக்க செய்யவேண்டும் என அயராது பாடுபட்டவர். இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக, இளைஞரணியின் பல்வேறு மட்ட பொறுப்புகளில் பணியாற்றியவராக, தளபதி அவர்களுடனே பயணிக்கிறவராக இருந்தவர். ஆனால் அதன் தாக்கம் சிறிதும் இல்லாமல், எளிமையாக பழகக் கூடியவர்.அனைவரையும் பெயர் சொல்லி அழைத்து, தோளிலே கைப்போட்டு அணைத்து அன்பை வெளிப்படுத்தக் கூடியவர். உதவி என்று செல்பவர்களுக்கு தயங்காமல் உதவக்கூடியவர்.

ஒரு தலைவரோடு இருக்கக்கூடிய இரண்டாம் நிலைத் தலைவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமானவர். 


யார் தளபதி அவர்களை சந்திக்க வந்தாலும், பெயர் சொல்லி அறிமுகப்படுத்துவார், ஏற்கனவே அறிமுகமானவர்களாக இருந்தாலும். காரணம் தளபதி அவர்களுக்கு இருக்கக்கூடிய வேலைப்பளுவில் மறந்திருந்தாலும், அவர்கள் விடுபட்டு போய்விடக்கூடாது எனபதற்காக.( இதில் எனக்கே நேரடி அனுபவம் உண்டு.)

யாரையவது தளபதி அவர்கள் கண்டிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டால், பிறகு அவர்களை அழைத்து பேசி சமாதானப்படுத்திவிடுவார். இளைஞர் அணியில் ஏற்படும் சிறு பிரச்சினைகளையும் தீர்த்துவைத்து, தளபதி அவரகளின் சிந்தனைக்கேற்ப செயல்பட்டவர்.
இளம் வயதில் அவரது மறைவு இளைஞரணிக்கும், தளபதி அவர்களுக்கும் மிகப்பெரிய இழப்பு.


# என்றும் எங்கள் நினைவில்.... நீங்கள் !

திங்கள், 27 ஆகஸ்ட், 2012

" கலைஞர் ஒழிக " என்போரே......


தலைவர் கலைஞர் வாக்கு சேகரிப்பு சுற்றுப்பயணத்தில், குடிசைமாற்று வாரியப்பகுதிக்கு செண்றார். கலைஞர் கொண்டு வந்த குடிசைமாற்று வீடுகள் திட்டத்தில் கட்டப் பட்டவீடுகள். 

ஒரு வீட்டில் குடியிருந்தவன் " கலைஞர் ஒழிக " என்று எழுதி வைத்திருந்தானாம். அதை பார்த்த கலைஞர் , வருத்தப்படாமல் சொன்னாராம் " எப்படியோ என் பெயர் தானே அந்த நபருக்கு நினைவிருக்கிறது. மகிழ்ச்சி "ஹிந்தி எதிர்ப்பால் ஆங்கிலம் கற்றதால் IT படித்தவனும்,


கலைஞர் கொடுத்த இடஒதுக்கீட்டால் படிப்பு பெற்றவனும், 


தல
ைமுறை மாணவனுக்கு கொடுத்த இட ஒதுக்கீட்டால் கற்றவனும், 


முதல் தலைமுறை மாணவனுக்கு கல்விகட்டணத்தை இலவசமாக பெற்றவனும்....... இணையத்தில் " கலைஞர் ஒழிக " என்று எழுதுவதும் அப்படியே...


இவனைப் பார்த்தும் கலைஞர் மகிழ்ச்சிதான் அடைவார்....

குறையுங்கள், குரையுங்கள், ஒழிக ஒழிக என்று கூவுங்கள்...

அவர் வாழ்வார்.... 


உன் தலைமுறை வாழ்வதற்கு, 


உன் சந்ததியும் வாழ்வதற்கு....

# தலைவர் கலைஞர் வாழ்க !
 

பேராசிரியர் பெருந்தகை - மாண்பு

மறைந்த அலைகடல் வெற்றிகொண்டான் அவர்களின் நினைவு நாளில் கலந்து கொள்ள தேதி கேட்டு பேராசிரியர் அவர்களை நேற்று சந்தித்தோம் , நானும் வெற்றிகொண்டான் அவர்களது மகனும் - வெ.கொ.கருணாநிதி , ஜெயங்கொண்டம் நகர செயலாளர் .

" இரண்டு நாட்களில் தேதியை சொல்கிறேன் , என்னுடைய வயதை கவனத்தில் கொள்ளுங்கள். தேதி கொடுத்தால் , வெற்றிகொண்டான் உழைப்பிற்கு அவசியம் தவறக்கூடாது , மற்றவர்கள் தவறாக நினைத்து விடக்கூடாது " என்றார் . இதிலேயே அவரது பண்பு விளங்கியிருக்கும் . ஆனால் சொல்ல வந்தது அதுவல்ல .
உள்ளே நுழைந்தவுடன் எனது தந்தையாரின் நலம் விசாரித்தவர் , கிளம்புபோது வெற்றிகொண்டான் மகன் கருணாவை பார்த்து கேட்டார்

" என்ன தொழில் செய்கிறீர்கள் ? உனது தந்தையார் ஊர் ஊராக சென்று பேசினார் , இந்த காலத்தில் உன்னால் முடியாது. ஒரு தொழிலும் செய்து குடும்பத்தையும் கவனி " என்றார். உடன் வந்தவர்கள் மெய் சிலிர்த்துவிட்டார்கள். அவர் வயதுக்கு, தகுதிக்கு, பதவிக்கு இந்த அளவுக்கு அக்கறையோடு கேட்பார் என்று எதிர்பர்க்கவில்லை.

வழக்கமான அரசியல்வாதிகள் போல் இல்லாமல் , குடும்ப உணர்வோடு , அக்கறையோடு உறவாடுகிற காரணத்தால் தான் தலைவர் கலைஞர் அவர்களும் , பேராசிரியர் அவர்களும் இந்த வயதிலும் மிளிர்கிறார்கள் . இது தான் பேராசிரியர் பெருந்தகை அவர்களின் ........ மாண்பு.

சிறு நிகழ்வுகள் தான் .... அவை தாம் வரலாறு.


திராவிடர் கழக மாணவரணியின் மாநிலத் துணை செயலாளர் சென்னியப்பன் அவர்களது திருமணம் , பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரது பூமியான ஈரோடு மாவட்டம், நம்பியூரில் நடைபெற்றது.
தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யா அவர்களது தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. விழாவில் நடைபெற்ற இரு நிகழ்வுகளை குறிப்பிட்டாக வேண்டும்.அதற்கு முன்பாக பெரியாரது வெற்றியை இங்கு பதிந்தாக வேண்டும். திருமணத்தில் காவி சேலையை உடையாக உடுத்திய ஒரு சாமியார் கலந்துக் கொண்டார். அவரை வாழ்த்த அழைத்தார்கள். குனிந்த முதுகுகளை நிமிர்த்திய பெரியார் என்று ஆரம்பித்தார். தமிழர்களுக்கு இன்று எல்லா இடத்திலும் பிரச்சினை, அதற்கு உடன் குரல் கொடுப்பவர் ஆசிரியர் அவர்கள் தான் என திராவிடர் கழகத்தின் அவசியத்தை வலியுறுத்தி வாழ்த்துரை வழங்கினார்.பள்ளி மாணவர்கள் திராவிடர்கழக வெளியிடுகளை வாங்கிக் கொண்டு வந்து ஆசிரியர் அவர்களிடம் கையொப்பம் பெற்று மகிழ்ந்தார்கள். அந்த பிள்ளைச் செல்வங்களை அன்போடு , பெயர் என்ன ?, என்ன படிக்கிறீர்கள் ?, என்னவாகப் போகிறீர்கள் ? என வினவிக் கொண்டிருந்தார்கள். 50 பிள்ளைகளுக்கு மேல் வந்தார்கள். மாவட்ட ஆட்சியர், மருத்துவர், பொறிஞர் என பதில் வந்தது. அப்போது அஸ்வின் என்ற சிறுவன் வந்தான். அவனிடம் பேசிய அய்யா, சிறுவன் கையிலிருந்த காவி நிற கயிற்றை கவனித்து விட்டார். நீ தினமும் குளிப்பாயா ? என்று கேட்டார். குளிப்பேன் என்றான். இவ்வளவு சுத்தமான பிள்ளை கையில் இந்த கயிற்றை அணிந்துருக்கிறாயே, ஈரமாகும் போது இதில் கிருமிகள் உருவாகுமே, உடல் நலத்திற்கு கேடானதாயிற்றே, எனவே யோசனை செய்து முடிவெடு என பெரியவர்களிடத்தில் பேசுவது போல மிகப் பக்குவமாக சொன்னார். தலையாட்டிவிட்டு தனது பெற்றோரிடம் சென்று நடந்ததை விளக்கிக் கொண்டிருந்தான். இதற்கிடையில் வாழ்த்துபவரது பேச்சில் எனது கவனம் சென்று விட்டது. அய்ந்து நிமிடம் கழித்து அஸ்வின் திரும்ப மேடைக்கு வந்தான், கையில் அறுத்த கயிற்றோடு. அய்யா நெகிழ்ந்து அவனை தட்டிக் கொடுத்து,பாராட்டி அனுப்பினார். பேச்சிலும் வாழ்த்தினார். அடுத்த தலைமுறையும் தயாராகிறது, தயார் படுத்தப்படுகிறது.அடுத்த நிகழ்வு. வாழ்த்துரைகளுக்கு பிறகு, மணவிழா. மணமக்களின் பெற்றொர்கள் அழைக்கப்பட்டு பெருமை படுத்தப்பட்டார்கள். மணமக்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டார்கள். ஆசிரியர் அவர்கள் மலர் மாலையை மணமக்கள் கையில் கொடுத்து மாற்றிக் கொள்ள சொன்னார். மாற்றிக் கொண்டார்கள். மேடையில் நின்றுக் கொண்டிருந்தவர்களை அமரச் சொன்னார் ஆசிரியர் அவர்கள். நாங்கள் மங்கல நாண் அணிவிக்கிற நிகழ்ச்சிக்காக நின்று கொண்டிருந்தோம். அய்யா " மலர் மாலை மாற்றியதோடு மணவிழா நிறைவுற்றது. அடிமை சின்னமாம் தாலி தேவையில்லை என மணமக்கள் சொல்லிவிட்டார்கள் " என்றபோது தான் நாங்கள் உணர்ந்தோம்.சிறிய கிராமத்திலிருந்து, ஏழ்மை சூழ் நிலையிலிருந்து, ஒடுக்கப்பட்ட குடும்பத்திலிருந்து வந்திருந்தாலும், பெரியார் திடலில் வளர்கிற பிள்ளை என்பதை சென்னியப்பன் நிருபித்து விட்டார். இதில் குறிப்பிட வேண்டிய செய்தி, மணமகளின் பெற்றோர் துவக்கத்தில் திருமணத்திற்காக கோவிலிலே குறி கேட்டு, சாமியாரிடம் குறி கேட்டு , சரியான ஒப்புதல் இல்லை என திருமணத்திற்கு தயங்கியிருக்கிறார்கள். அவர்களை தாலியே இல்லாத திருமணத்திற்கு ஒப்புக் கொள்ள வைத்தது தான், பெரியாரின் புரட்சியின் வெற்றி.( # திகார் சிறையிலிருந்து மணமக்களுக்கு அண்ணன் ஆ.ராசா அவர்கள் அனுப்பிய வாழ்த்து செய்தியை டிஜிட்டல் பேனராக , மண்டபத்து வாயிலிலே மணவீட்டார் கட்டியிருந்தது, அவர் மீது அவர்கள் கொண்டிருக்கின்ற அன்பை காட்டியது )
 

சுஜாதா....

" சுஜாதா " - பெரிதும் வியக்க வைக்கிற பன்முகத் திறமையாளர் .

இவர் குடும்பத்தோடு செலவிட்ட நேரத்தைவிட புத்தகங்களோடும், கணினியோடும் தான் அதிகம் இருந்திருப்பார் என எண்ணுகிறேன். இவர் தொடாத துறைகள் எது ? கதை, கவிதை, கட்டுரை, அறிவியல், சினிமா, அடடா....

புறநானூற்றை எளிமையாகத் தருவார். கமலோடு கதை விவாதம். ஷங்கர் படத்துக்கு வசனம். ஹைகூ கவிதையை தமிழுக்கு அறிமுகம். இளமைக்காலத்தை ரசனை சொட்ட ஸ்ரீரங்கத்து தேவதைகள்.
கணேஷூம் வசந்தும் நம்மோடே வசிக்கிறார்கள். மெக்சிகோ சலவைக்காரி மர்மம் நீடிக்கிறது. ஜீனோ-வின் ஆட்சி தொடர்கிறது.( ஜீனோ தான் எந்திரன் சிட்டியின் முன்னோடி).

 பல விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால் அவரது ஆளுமை நீடிக்கிறது. சுஜாதா பதில்களாக, விமர்சனங்களாக, கற்றதும் பெற்றதுமாக அள்ளி தந்தது ஏராளம்.
வாக்களிக்க செல்லும் போது, மின்ணனு வாக்கு எந்திரத்தில் நினைவூட்டுகிறார். ஒரு காலத்தில் இவரது பெயரை போட்டே விற்பனை எகிறிய வாரப் பத்திரிக்கைகள் உண்டு. 
பள்ளி பருவத்தில், அவரது எழுத்தை சுவாசிக்க வாரப் பத்திரிக்கைகளுக்காக காத்திருந்த காலம்.....

# இளமை துள்ளும் எழுத்தாக ...... என்றும் நினைவில்.....

தேசத் தந்தை அம்பேத்கர்

" தேசத் தந்தை " 

உன் பிறப்பே
தேசத்தின் விழிப்பு

உன் அறிவே
தேசத்தின் சொத்து

உன் எழுதுகோலே
தேசச்சக்கரத்தின் அச்சாணி

உன் எழுத்தே
தேசத்தின் சட்டம்

தேச சுதந்திரம் கேட்டார்கள் அவர்கள்  - நீ தான்
தேசத்தானுக்கு கேட்டாய்

தேசத்தானுக்கு தந்தை - நீ தான்
" தேசத்துக்கும் தந்தை "......

வடக்கே சூலம், தெற்கே மூலம்...

அரியலூர் துவங்கி குன்னம் வரை நேற்று நல்ல மழை. அதன் காரணமாக, விவசாய பணிகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. சோளம் விதைக்கும் பணி.

அஷ்டமி, நவமி பார்க்காமல் மழை பெய்து விட்டது. அந்த நாட்கள் சரியில்லையே என்று மழை ஒதுக்கவில்லை. நாமும் ஒதுங்கவில்லை. சோறு போடும் விவசாயத்திற்கே நல்ல நாளை நிர்ணயிப்பது இயற்கை, மழை.

மற்றவற்றிற்கு மாத்திரம் நல்ல நேரம் பார்க்க பஞ்சாங்கம் .... என்ன நியாயம் இது ? வீட்டை விட்டு வெளியே கிளம்பவே அஷ்டமி, நவமி, ராகுகாலம், சூலம், மூலம்.

#   உழைப்பை நம்புவோம் !

சனி, 25 ஆகஸ்ட், 2012

அண்ணா மறைவு கவிதாஞ்சலி - தலைவர் கலைஞர்

பூவிதழின் மென்மையினும் மென்மையான
புனித உள்ளம்- - அன்பு உள்ளம்
அரவணைக்கும் அன்னை உள்ளம்! - அவர்
மலர் இதழ்கள் தமிழ் பேசும்
மா, பலா, வாழையெனும் முக்கனியும் தோற்றுவிடும்-!
விழிமலர்கள் வேலாகும் - வாளாகும்
தீங்கொன்று தமிழ்த் தாய்க்கு வருகுதென்றால்!
கால் மலர்கள் வாடிடினும் அவர் கடும் பயணம் நிற்காது;

கைமலர்கள் பிணைத்து நிற்கும், தம்பியரை, கழகத்தை
அம் மலரே எதிரிகளை மன்னித்து
நெற்கதிர் போல் தலை நாணச் செய்துவிடும்
மக்களாட்சி மலர் குலுங்க
சமதர்மப்பூ மணக்க
தாய்மொழித் தமிழே வாழ்வுப் பொழிலாக
ஆடிவரும் தென்றல்
நாடிவரும் பூமுடியே! புகழ் முடியே! உமைத்
தேடிவரும் வாழ்த்துக் குவியலிலே - தினம்,
பாடிவரும் வண்டாக நான் பறப்பேன்
உனைக் காக்க எனைத் துறப்பேன்-என், -
ஒரு கோடி தமிழ் இளைஞர்
பாடிநின்ற பாட்டுக்குப் பெருந்தலைவன்.

முடுகிற் செறிந்த தமிழார்வம்
முதிரா இளைஞர் ஆருயிராய்ப்
பெருகச் செய்த செயல் மறவர்
சிறப்பைப் பாடக் கேண்மினோ!
தங்கு கண் வேல் செய்த புண்களை
அன்பெனும் வேது கொண்டொற்றியுஞ்
செங்கனி வாய் மருந்தூட்டுவார்
சீர்மையைப் பாடக் கேண்மினோ!
பொரு தடக்கை வாளெங்கே; மணிமார் பெங்கே;
போர் முகத்தின் எவர் வரினும் புறங்கொடாத
பருவயிரத் தோளெங்கே யெங்கேயென்று
தம்பியரைக் கேட்டானைக் கேண்மின்! கேண்மின்!
காஞ்சியிருக்கக் கலிங்கம் குலைந்த
கலவி மடவீர் கழற் சென்னி
காஞ்சியிருக்கக் கலிங்கம் குலைந்த
களப்போர் பாடத் திறமினோ என்று

மையல் கொண்ட மாதர் தமைத் துயில் எழுப்பச்
செயங்கொண்டார் பாடினார்,
களப்பரணி.. கலிங்கத்துப் பரணி -
அளப்பரிய வீரத்தின் புகழ்ப்பரணி -- யான்
கவிப் பரணியேறி, காஞ்சிபுரப் பரணி பாடி நின்றேன்
அவலப் பரணி பாடுகின்றேன் இன்று...!

கவியினில் பொருளெனக் கரும்பினில் சுவையெனக்
கதிரினில் ஒளியெனக் காவினில் மலரென
நிலவினில் குளிரென நிலமிசை வளமென
குலவிடும் அருவி குழறிடும் மொழியென
உலவிடும் காற்றில் ஏறிடும் இசையென
அலையெழுங் கடலில் ஆடிடும் நுரையென
கலைமணங் கமழக் கூடிய கவிஞர்
தலைமகன் அண்ணா திருப்புகழ் பாடிட
நிலமகள் வடிக்கும் கண்ணீர் அந்தோ! வெள்ளம்! வெள்ளம்! மாபெரும் வெள்ளம்!
ஆயிரத்துத் தொள்ளாயிரத்து முப்பத்து எட்டாம்
தாயகத்தில் மொழிப்புரட்சி தோன்றுதற்கு
வித்திட்டார் சிலபேர் என்றால், ஈரோட்டு
நாயகத்தின் இணையில்லாத் தலைமை வீரர்
எங்களண்ணன் களம் புகுந்தார் காஞ்சிபூண்டு!
இருமூன்று திங்கள் வரை சிறையில் வாடி,
தரும் ஊன்று கோலாகத் தமிழைத் தந்து
அருமூன்று எழுத்தாலே அண்ணா வானார்!
அன்றொரு நாள் அய்ம்பத்திரண்டுதனில்
சென்னையிலே சொன்னேனே நினைவுண்டா உங்களுக்கு?
மூன்றெழுத்திலே ஒரு சிறப்புண்டு, முத்தமிழ் மணமுண்டு!
மூவேந்தர் முக்கொடி முக்கனியென
மும்முர சார்த்தவர் தமிழர் -- அவர் வாழ்ந்த
தமிழ் வாழ்வுக்கு மூன்றெழுத்து -- அந்த
வாழ்வுக்கு அடிப்படையாம் அன்புக்கு மூன்றெழுத்து..
அன்புக்குத் துணை நிற்கும் அறிவுக்கு மூன்றெழுத்து
அறிவார்ந்தோர் இடையிலெழும், காதலுக்கு மூன்றெழுத்து..
காதலர்கள் போற்றி நின்ற கடும் வீரமோ மூன்றெழுத்து..
வீரம் விளைக்கின்ற களம் மூன்றெழுத்து...
களம் சென்று காணுகின்ற வெற்றி மூன்றெழுத்து
அந்த வெற்றிக்கு நமையெலாம் ஊக்குவிக்கும்
அமைதி மிகு அண்ணா மூன்றெழுத்து அறிந்திடுவீர் எனச் சொன்னேன்!

திக்கெட்டும் தமிழ் முழக்கம்
திசையெங்கும் சொன் மாரி
வக்கற்றோர் வகையற்றோர்
வாழ்வதற்குத் திட்டம் கோரி
வண்டாகச் சுற்றுகின்றார் மேடையேறி!
எழுதுகின்றார் அண்ணா ஏடெல்லாம் வீடெல்லாம் தமிழ்
நாடெல்லாம்... புதுமை மணக்குதங்கே...
ஏடா தம்பி! எடுடா பேனா
எத்தனை உணர்ச்சி! எத்தனை எழுச்சி!
'கத்தியைத் தீட்டாதே புத்தியைத் தீட்டு'
கருத்துப் பேழை--கற்பூரப் பெட்டகம்!
மரக்கிளையிலே பிணம் --
வெந்த புண்ணிலே வேல்!
மறந்திடப் போமோ; மனங்கவர் வாசகம்?
சாலை யோரத்திலே வேலையற்றதுகள் -
வேலையற்றதுகளின் உள்ளத்தில் விபரீத எண்ணங்கள் -
வேந்தே! அதுதான் காலக்குறி!
அண்ணனுக்கன்றி யாருக்கு வரும் இந்த அழகு நடை?
அறிவு நடை?
கோடு உயர்ந்தது குன்றம் தாழ்ந்தது
தமிழகம் மறவாத் தலையங்கமன்றோ?
இப்படை தோற்கின் எப்படை ஜெயிக்கும்?
தம்பியுடையான் படைக்கஞ்சான்
ஒப்பில்லா வரிகள் உரைத்திடும் பனுவல்
மனோன்மணீயம் எனினும் -- --நம்
மனதில் பதித்தவர் அண்ணா வன்றோ!

மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும்
அரசியல் பண்பினை போதிக்கும் அழகே!
மறப்போம் -- மன்னிப்போம்
மாற்றார் ஏசல் தாங்கிடும் மாண்பே!
எவர் கற்றுத் தந்தார் இதனை?
சுவர் வைத்துச் சித்திரம் எழுதுதல்போல்
நயமிகு பண்புடன் அரசியல் நடாத்தல்
நன்றென்றார் அண்ணா -அதை மறுத்து
நாலைந்து பேர் குதித்திட்டார் என்றால்
அவர் கண்டு சிரித்திட்டார் அண்ணா - அனைவரையும் ஓர் அன்னை பெற்றெடுக்க
வயிறு தாங்காக் காரணத்தால்
தனித்தனித் தாய் ஈன்றெடுத்த தம்பிகளே!
என அழைத்து கனிச் சுவையாய்க் கற்கண்டாய்த் தேன் பாகாய் அன்பு காட்டி
பனிமலர் வீழ் தும்பியதாய்த் தழுவிக்கொண்டார்;
சொலல் வல்லார் சேதுப்பிள்ளைதனை
சோமசுந்தர பாரதியைச் சொற் போரில்
சொக்க வைத்தார் --- பாவம்; சிக்க வைத்தார்!
நீதிக் கட்சியென்று நெடியமதில் சுவருக்குள்ளே --- பணச்
சாதிக்குக் கட்சியாய் இருத்தலாகாதெனும் கொள்கையாலே அதனை
வீதிக்குக் கொண்டு வந்தார்;
வீசிடுக வெள்ளையர்கள் பட்டத்தையென்று
சேலத்து மாநாட்டில் தீர்மானம் போட்டுவிட்டார் --
- அண்ணாவின் போர்க்
கோலத்தை எதிர்க்க மாட்டாமல்,
கோலற்ற குருடர்போலக் கொள்கையற்றோர் வீழ்ந்துபோனார்!
தீரர் அண்ணா திராவிடர் கழகமெனும் பெயர் மாற்றத் தீர்மானம்
வீரர் கூடிய மாநாட்டில் கொண்டு வந்தார்
அண்ணல் காந்தியார் அறவழி கண்டு
ஆங்கில ஆட்சியை அகற்றிய போது
துன்ப நாளெனும் பெரியார் அறிக்கையை மறுத்துத்
தொடங்கினார் போரை!
இன்ப நாளிது! இனிய நாளிது!
என்பு தோலாய் ஆன இந்தியர்
அன்புறு காந்தியின் அருளால் இன்று
எழுந்தனர் அடிமைத் தளையினை அறுத்து
முழங்குவோம் விடுதலை முரசினை எடுத்து
என்றே அண்ணா, அன்றே சொன்னார்...
அன்று முதல் அண்ணன் - அய்யா - உறவினிலே கீறல் விழ
அது நாற்பத்தொன்பதாம் ஆண்டினிலே பிரிவாய் மாறி
முகில் கிழித்து வெளிக்கிளம்பும் முழுமதியாய்
முன்னேற்றக்கழகத்தை முகிழ்க்கச் செய்தார்.
தலைவருடன் கூடி வாழ முடியாமல்
பெரும்பான்மைத் தோழருடன் வெளியே வந்தும்,
நிலைகுலையா நம் அண்ணன் அன்று சொன்னார்
அது, -
நேற்று சொன்னது போல் இருக்குதம்மா!
தலைவரில்லை முன்னேற்றக் கழகத்துக்கு - என்
தலைவர் இருந்த நாற்காலி காலியாக இருக்கும் அதில்
தலைவர் அவர் என்றேனும் வந்தமர்வார்
அதுவரையில் காத்திருப்பேன் என்றார்.
பூத்திருக்கும் மலர்த் தோட்டம்
காலைப் பனிநீர் வடிப்பது போல்
காத்திருந்து கூட்டம் கேட்டோர்
கண்ணீர் வடித்தார்
கண்ணீர்த் துளிகளே! நாட்டின் கண்மணிகளே! என அழைத்துச்
செந்நீர் சிந்துதற்கு அணிவகுத்தார்.

யாரேனும் பகர்ந்ததுண்டா?
யாரேனும் கேட்டதுண்டா?
பதினெட்டு ஆண்டுக்குள் ஓர் இயக்கம்
பதுங்கிப் பாயும் வேங்கையெனப் --- -பாராள வந்த கதை?
ஈராண்டு முடியவில்லை எம் அண்ணா ஆட்சியேற்று -
சீரார்ந்த செயல் பலவும் செய்தலுற்றார்,
ஏராந்த உழவர்க்கெல்லாம் ஏற்றம் தந்து
எழில் வாழ்வு குவிப்பதற்கு எடுத்தார் முயற்சி
உலகத் தமிழ் மாநாடு துவக்க வந்த
ஓங்கு புகழ்க் குடியரசுத் தலைவரவர்
இணையற்ற காட்சி கண்டேன் மாட்சி கண்டேன்.
இதுபோல வாழ்வில் என்றும் கண்டதில்லை யென
ஊர் மெச்சப் புகழ்ந்துரைத்தார் அண்ணன் கீர்த்தி!
ஆந்திரத்துப் பிரும்மானந்த ரெட்டிகாரும்
ஆகா - -நீதானே அசல் காந்தீய வாதியென்று
ஆராதனை செய்திட்டார் -- ஆண்டொன்று கழியவில்லை!

மதுவிலக்கைத் தீவிரமாய் ஆக்குகின்றீர் பல
மாநிலத்தில் கை கழுவி கலயம் கட்டிவிட்டார் மரங்களிலே!
மகாத்மாவின் தோன்றல் நீர்தான் என்று!
கிரியென்றால் மலையன்றோ -- அந்த
மலை தழுவும் முகிலானார் நம் அண்ணா!
வி.வி. கிரி தந்த வாழ்த்துக்கு விளக்கமிது.
பன்னாட்டுப் பேரறிஞர் வாழ்த்தி நின்றார் -- அன்று
தென்னாட்டுச் சிகரமாக இருந்திட்டோர் அண்ணன் பற்றி
என்ன சொன்னார்?
பழந்தமிழ் வித்தகர் பல்லாவரத்தார் -- அண்ணா,
பழந்தமிழ்ப் பேச்சால் மயங்கி நின்றார். - அந்த
மறைமலை தந்த புகழ்மொழி ஆயிரம்
பசுமலை பாரதி -- பாண்டியன் தோற்றம் -- அவரை
நாவலர் என்று நாடே அழைக்கும் -- அவர்
சழக்கரால் வீழ்ந்த தமிழ்நிலம் காக்க -- மன
அழுக்கில்லாத் தலைவன் கிடைத்தான் என்றே
அண்ணன் பெருமை சொன்னார் அன்று!
ஈராயிரம் ஆண்டின் முன்னும் இன்றுபோல்
இளையவளாய் இருந்திட்ட தமிழாம் அன்னை
நூறாயிரம் கோடி என ஆண்டு பல வாழ்வதற்கு
நூலாயிரம் செய்திட்ட புலவர்களை ஈன்றாள் எனினும்;
கலைமகளாம் நம் அன்னை வள்ளுவனைத்
தலைமகனாய்ப் பெற்றெடுத்தாள்.

மலர் என்றால் தாமரை தான்
மன்னன் என்றால் கரிகாலன்
நூல் என்றால் திருக்குறளே அளித்திட்டான் எனப்போற்றும் அறப்பனுவல்
அளித்திட்டான் --- மாந்தரெல்லாம் களித்திட்டார்!
விண்முட்டும் மலையோரம் --- நம்
கண் பட்டும் படாமலும் எழுகின்ற நச்சுமரம் போல
பண்பட்ட தமிழர் வாழ்வில் --- முதுகில்
புண்பட்ட கொள்கையெல்லாம் மூண்டதந்தோ
சாதிகளைக் காணாது குறள் ஒலித்த தமிழ் மண்ணில் பாதியிலே வந்ததம்மா பலகோடி சாதிகளும்!
அறிவு மணங் கமழுகின்ற ஆலயங்கள் அற்றுப் போய் ஆயிரம் தெய்வங்கள் உறைகின்ற கோவில்கள் கண்டுவிட்டார்.
மொழியுணர்வே இல்லாத வாயுணர்வின் மாக்கள் --- தமிழ்
அழியினும் வாழினும் என்னென்று இருந்திட்டார்
அறநெறியே குறிக் கோளாய்த் திகழ்ந்திட்ட பெரு நிலத்தில்
பிறநெறிகள் பயிர் செய்தார் பிழை குவித்தார்.
மழையற்றுப் போன வயல் போல மாறிற்றுத் தமிழர் மனம்;
அழுக்காறு --- அவா --- வெகுளி --- இன்னாச் சொல் நான்குமின்றி
நடக்காது வேலையென்று நடந்திட்டார் சில தமிழர்;
பொருளில்லார்க்கு இவ்வுலகமில்லையென்று
பொருள் குவித்து வளம் செழித்த நாட்டில்- -- இன்று
இருள் கவிந்து வாட்டம் கோடி போட்டதங்கே.
வாடினாள் தமிழன்னை -- சோகப் பாட்டுப்
பாடினாள் தமிழன்னை - அடு நெருப்பில்
ஆடினாள் தமிழன்னை
ஓடினாள் - ஓடினாள் - ஒரு வழியும் கிடைக்கவில்லை!
புவியூர் விட்டுப் புகழூரில் வாழுகின்றான்
கவியூரின் பெருவேந்தன் குறளாசான்
ஆண்டு சென்று, அருமை மகனே
வேண்டுகோள் ஒன்று விடுத்தேன் என்றாள்.
என்னம்மா? என்றான் குறளோன்.
தோண்டுகின்ற இடமெல்லாம் தங்கம் வரும் தமிழகத்தில்
மீண்டும் நீ பிறந்திட வேண்டுமென்றாள்.

தங்கம் எடுக்கவா என்றான்
தமிழர் மனம் வாழ்வெல்லாம்
தங்கமாக ஆக்க என்றாள்
இன்றென்ன ஆயிற் றென்றான்.
குன்றனைய மொழிக்கு ஆபத்தென்றாள்;
சென்றடையக் குடிலில்லை ஏழைக்கென்றாள்;
கடிதோச்சி மெல்ல எறியத் தெரியாமல் கொன்றெறியும் கோல் ஓங்கிற்றென்றாள்; அறிவில்
கன்றனையோர் வீணில் கதைக்கின்ற கதையும் சொன்னாள்.
அழுதகண்ணைத் துடைத்தவாறு
அமுதமொழி வள்ளுவனும்
அம்மா நான் எங்கே பிறப்பதென்றான்?
தொழுத மகன் உச்சி மோந்து - ஆல
விழுதனைய கைகளாலே.. அணைத்துக்கொண்டு
உழுத வயல் நாற்றின்றிக் காயாது இனிமேலே என மகிழும்
உழவன் போல் உள்ளமெல்லாம் பூரிப்புத் துள்ளி எழ
காய்ந்த வயிற்றுக்குக் கஞ்சி வார்த்திடவே
கற்கண்டே! தேன்பாகே! திருக்குறளே!
நீ காஞ்சியிலே பிறந்திடுக! என்றாள்.

பிறந்திட்டான் நம் அண்ணனாக;
அறிவு மன்னனாக
பொதிகை மலைத் தென்றலாய் போதாகி மலர்கின்ற தமிழ் உணர்வின் புதுமணமாய்
பதிகத்துப் பொருளாய்ப் பழந்தமிழர் புறப்பாட்டாய்
வந்துதித்தான் அண்ணன் -- கீழ்
வானுதித்த கதிர் போல
புரியாதார்க்கு ஒரு புதிர் போல -
அவன் புகழைப் பாடுதற்கு
அவன் வளர்த்த தம்பி நானும்
அவன் தந்த தமிழ் எடுத்து
இவண் வந்தேன் இதுதான் உண்மை. -
தலைவரென்பார், தத்துவ மேதை என்பார்,
நடிகரென்பார், நாடக வேந்தரென்பார்
சொல்லாற்றல் சுவைமிக்க எழுத்தாற்றல் பெற்றார் என்பார்

மனிதரென்பார் மாணிக்கமென்பார் மாநிலத்து அமைச்சரென்பார்.
அன்னையென்பார், அருள் மொழிக் காவல் என்பார்
அரசியல் வாதி என்பார் -- அத்தனையும்
தனித்தனியே சொல்வதற்கு நேரமற்றோர் -நெஞ்சத்து அன்பாலே
அண்ணா என்ற ஒரு சொல்லால்
அழைக்கட்டும் என்றே -- அவர் அன்னை
பெயரும் தந்தார்.
அந்த அன்னைக் குலம் போற்றுதற்கு
ஔவைக்கோர் சிலை
அறம் வளர்த்த கண்ணகிக்கோர் சிலை
வளையாத நெஞ்சப் பாரதிக்கும்
வணங்காமுடி பாரதிதாசருக்கும் சிலை
வீரமா முனிவருக்கும் சிலை
கால்டுவெல் போப்புக்கும் சிலை கம்பர்க்கும் சிலை
தீரமாய்க் கப்பலோட்டிய தமிழர்க்கும் சிலை
திக்கெட்டும் குறள் பரப்ப திருவள்ளுவர்க்கும் சிலை
பத்துச் சிலை வைத்ததினால் -- அண்ணன் தமிழின் பால் வைத்துள்ள
பற்றுதலை உலகறிய அண்ணனுக்கோர் சிலை
சென்னையிலே வைத்தபோது..
ஆட்காட்டி விரல் மட்டும் காட்டி நின்றார்.
ஆணையிடுகிறார் எம் அண்ணா என்றிருந்தோம்

அய்யகோ; இன்னும்
ஓராண்டே வாழப்போகின்றேன் என்று அவர்
ஒர் விரல் காட்டியது இன்றன்றோ புரிகிறது!

எம் அண்ணா... இதயமன்னா...
படைக் கஞ்சாத் தம்பியுண்டென்று
பகர்ந்தாயே;
எமை விடுத்துப் பெரும் பயணத்தை ஏன் தொடர்ந்தாய்
உன் கண்ணொளியின் கதகதப்பிலே வளர்ந்தோமே;
எம் கண்ணெல்லாம் குளமாக ஏன் மாற்றிவிட்டாய்?
நிழல் நீதான் என்றிருந்தோம்; நீ கடல்
நிலத்துக்குள் நிழல் தேடப்போய் விட்டாய்: நியாயந்தானா?
நான்தானடா நன்முத்து எனச் சொல்லி
கடற் கரையில் உறங்குதியோ?...
நாத இசை கொட்டுகின்ற
நாவை ஏன் சுருட்டிக் கொண்டாய்?
விரல் அசைத்து எழுத்துலகில்
விந்தைகளைச் செய்தாயே; அந்த
விரலை ஏன் மடக்கிக் கொண்டாய்?
கண்மூடிக் கொண்டு நீ சிந்திக்கும்
பேரழகைப் பார்த்துள்ளேன்.. இன்று
மண் மூடிக் கொண்டுன்னைப் பார்க்காமல்
தடுப்பதென்ன கொடுமை,
கொடுமைக்கு முடிவுகண்டாய்; எமைக்
கொடுமைக்கு ஆளாக்கி ஏன் சென்றாய்?
எதையும் தாங்கும் இதயம் வேண்டுமென்றாய்:
இதையும் தாங்க ஏதண்ணா எமக்கிதயம்?
கடற்கரையில் காற்று
வாங்கியது போதுமண்ணா

எழுந்து வா எம் அண்ணா
வரமாட்டாய்; வரமாட்டாய்,
இயற்கையின் சதி எமக்குத் தெரியும் அண்ணா நீ
இருக்குமிடந்தேடி யான்வரும் வரையில்
இரவலாக உன் இதயத்தை தந்திடண்ணா..
நான்வரும் போது கையோடு கொணர்ந்து அதை
உன் கால் மலரில் வைப்பேன் அண்ணா...