பிரபலமான இடுகைகள்

சட்டமன்ற உறுப்பினர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சட்டமன்ற உறுப்பினர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 3 செப்டம்பர், 2013

“ Workshop on Creating Jobs”


“ Workshop on Creating Jobs” - தலைப்பே கலந்து கொள்ள தூண்டியது. PRS நடத்தும் மற்ற வகுப்புகளில் இருந்து வேறுபட்டதாக, குறிப்பிட்ட ஒரு தலைப்பிலான வகுப்பு. மிகவும் பின்தங்கிய மாவட்டத்தை சேர்ந்தவன் என்ற முறையில் நம் பகுதிக்கு பயன்படாதா என்ற எண்ணம் தான் தூண்டியது.

Workshop நடந்த இடமும் கவனிக்கத் தக்க இடமாகும். அய்.ஏ.எஸ் போன்ற இந்திய ஆட்சிப் பணியில் இருக்கும் அதிகாரிகளுக்கு பொது நிர்வாகம் குறித்த பயிற்சி அளிக்கும் நிறுவனம் “Indian Institute of Public Administration”. 1954-ல் ஜவகர்லால் நேரு அவர்களால் திறந்து வைக்கப்பட்ட கல்வெட்டு நிறுவனத்தின் வரலாற்றை கூறியது.

17
மாநிலங்களிலிருந்து 60க்கு மேற்பட்ட எம்.எல்.ஏக்கள், நாங்கள் தமிழ்நாட்டிலிருந்து 6 எம்.எல்.ஏக்கள் கலந்து கொண்டோம். தேமுதிகவின் ச.ம.உ-க்கள் ஆரணி-பாபுமுருகவேல், கும்மிடிப்பூண்டி-சி.எச்.சேகர், தர்மபுரி-பாஸ்கர், விருத்தாசலம்-முத்துக்குமார், பா.ம.கவின் செஞ்சி-கணேஷ்குமார் உடன் நானும்.

ஜூலை 29, 30, 31 ஆகிய தேதிகளில் இந்தக் கருத்தரங்கம் நடைபெற்றது. மத்திய அரசின் பல்வேறு துறை நிபுணர்கள், தனியார் துறையை சேர்ந்தவர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டு கருத்துகளை வழங்கினார்கள். 

திட்டக்குழுவின் “Institute of Applied Manpower Research” , “ Centre for Policy Research”, “National Skill Development Corporation ( அரசு மற்றும் தனியார் கூட்டு நிறுவனம்)”, போன்ற அரசு துறை நிறுவனங்களை சேர்ந்தவர்கள் பேச வந்த போதுதான் மத்திய அரசின் பல திட்டங்கள் யாருக்கும் தெரியாமலே இருப்பது தெரிய வந்தது.

திட்டக்குழு உறுப்பினர் அருண் மைரா வந்திருந்து புதிய உற்பத்திக் கொள்கைகுறித்து பேசினார். அதே போல ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் இணை செயலாளர் Dr.சந்தோஷ் மேத்யூ கிராமப்பகுதிகளில் திறன் வளர்ப்புஎன்ற தலைப்பில் பேசினார். வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் DG ஷிகார் அகர்வால் திறவின் வளர்ப்பில் அரசின் முன்முயற்சிகுறித்து பேசினார்.

இப்படி தனிமனிதனின் திறனை மேம்படுத்துவதன் மூலம் வேலை வாய்ப்புகளை எளிதாக அனைவரும் பெறுவதறகான வாய்ப்புகள் குறித்தும், புதிய தொழில் வாய்ப்புகள் குறித்தும் பேசப்பட்டு, விவாதிக்கப்பட்டது. 

எல்லாம் சரி, பயன் என்ன அப்படிங்கறது உங்க கேள்வி ? என்னுதும் அதே கேள்விதாங்க.

பல புதிய தொடர்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பல புதிய நிறுவனங்கள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. பல வாய்ப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. அனைத்தும் நடைமுறைப் படுத்தி பார்த்தால் தான் தெரியும்.

செவ்வாய், 26 பிப்ரவரி, 2013

பொதுவாழ்வு - ஒரு நாள் பணி


இது எல்லோருக்குமான தகவல் அல்ல...

இவர் எம்.எல்.ஏ வேலை பார்க்கிறாரா, இல்லையா என்று எண்ணும் தோழர்களுக்கானது...

எம்.எல்.ஏ பணியோடு சேர்த்து எனக்கு மாவட்ட செயலாளர் பணியும் இருக்கு.

களத்தில் இருக்கும் அரசியல்வாதிகளின் பணியை தெரியப்படுத்துவதற்காக எனது ஒரு நாள் சுற்றுப்பயண விவரத்தை மட்டும் இணைத்துள்ளேன்.

சுய விளம்பரம் அல்ல. பெரும்பாலான மக்கள் பிரதிநிதிகளின் பணி இப்படிதான் அமையும். 

16.02.2013
சனிக்கிழமை...
காலை 8.30 – இல்லத்தில் பார்வையாளர்கள் சந்திப்பு.

9.00
மணி அரியலூர் நகரம்
சபரி டிஜிட்டல் சபரிஸ்வரன் திருமணம் விசாரிப்பு
தொ.மு.ச தோழர் கருப்பையா புதுமனைப் புகுவிழா
மாவட்ட மாணவரணி அமைப்பாளர் எழில்மாறன் திருமணம் விசாரிப்பு (காலை உணவு )


10.30
அரியலூர் ஒன்றியம், அய்க்கால் கிராமம்
*
கழகத் தோழர் அழகுதுரை இல்ல காதணி விழா விசாரிப்பு

11.30
செந்துறை ஒன்றியம்
*
தெற்கு பரணம் கிளை பிரதிநிதி விஸ்வநாதன் தந்தை மறைவு விசாரிப்பு
*
பரணம் ஆதிதிராவிடர்காலனி செயலாளர் கோவிந்தன் மறைவு விசாரிப்பு
*
வடக்கு பரணம் கழகத் தோழர் விஸ்வநாதன் தந்தை மறைவு விசாரிப்பு

பகல் 12.30 ஆண்டிமடம் ஒன்றியம், குவாகம் கிராமம்
*
குவாகம் கிளை பிரதிநிதி அன்பழகன் திருமணம் விசாரிப்பு
*
கீழகுவாகம் கழக முன்னோடி ரத்தினசாமி மறைவு விசாரிப்பு

1.15
கு.வல்லம் கிராமம்
*
வல்லம் கிளை கழக செயலாளர் முருகேசன் புதுமனைப் புகுவிழா விசாரிப்பு
*
வல்லம் கழகத் தோழர் கண்ணன் புதுமனைப் புகுவிழா ( மதிய உணவு )
*
வல்லம் கிளை பிரதிநிதி பொய்யாமொழி மகன் திருமணம் விசாரிப்பு

3.00
மணி இடையக்குறிச்சி கிராமம்
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ( அதிமுக ) அண்ணன் கிருஷ்ணமூர்த்தி மறைவு விசாரிப்பு
கழக தோழர் செல்வராசு தந்தை மறைவு விசாரிப்பு


மாலை 4.30 ஜெயங்கொண்டம் நகரம்
மறைந்த கொள்கை முரசு அலைகடல் வெற்றிகொண்டான் இல்லம்- இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி

5.30
தா.பழூர் ஒன்றியம்
*
ஒன்றிய கழக செயல்வீரர்கள் கூட்டம் ( 6.00- 8.00)

8.30
ஜெயங்கொண்டம் நகரம்
*
மறைந்த மருத்துவர் விஜயன் உடலுக்கு இறுதி அஞ்சலி

9.15
உடையார்பாளையம் பேரூர்
*
மறைந்த கழகப் பேச்சாளர் சி.ஆர்.மாரிமுத்து உடலுக்கு இறுதி அஞ்சலி

10.00
ஜெயங்கொண்டம் ஒன்றியம்
*
வளவெட்டி குப்பம் கழக முன்னோடி முருகேசன் மறைவு அஞ்சலி

இரவு 10.45 அரியலூர் வீடு இரவு உணவு.
(
கிட்டத்தட்ட 160 கி.மீ சுற்றுப்பயணம், 14,15,16,17 அனைத்து நாட்களுமே இப்படிதான் )

இது என்ன கல்யாணத்திற்கு, சாவிற்கு போனதெல்லாம் கணக்கான்னு ஆரம்பிச்சுடாதீங்க... எங்கு போனாலும் பொதுமக்கள் சந்திப்பு தான், பொதுப் பணியின் அங்கம் தான். நோக்கம் அதுதான்.

#
இயக்கப்பணியும், பொதுப்பணியும் முடித்துதான், இணையப்பணி. அதுவே அவர்களுக்கு பிடிக்கலைன்னா, நான் என்ன செய்ய ?

திங்கள், 31 டிசம்பர், 2012

மக்கள் சந்திப்பு - 3 ; பென்னகோணம் ஊராட்சி.

மழைத் தூறலுக்கிடையே ஊருக்குள் நுழைந்தோம். ஆனாலும் மக்கள் கூட்டம், குறிப்பாக பெண்கள் திரண்டிருந்தனர்.



கூட்ட நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் அண்ணன் குன்னம் இராஜேந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் VGM. வெங்கடாசலம் முன்னிலை வகித்தார். பெரம்பலூர் மாவட்ட செயலாளர் துரைசாமி உரையாற்றினார். 





பொதுமக்கள் மனுக்களை அளித்தனர். பெற்றுக் கொண்டு, அதில் முக்கியமான சில கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்துள்ளேன்.

விடைபெறும் போது, நெருங்கிவந்த பெண்கள் தனிப்பட்ட முறையில், ஒரு கோரிக்கை வைத்தனர். பொதுசுகாதார வளாகம் அமைத்து தரக் கோரினர்.

ஆளுங்கட்சியினர் மக்களை நெருங்காத காரணத்தால் தான், மக்கள் அனைத்து கோரிக்கைகளையும், எதிர்கட்சி சட்டமன்ற உறுப்பினரிடம் வைப்பதாக கருதுகிறேன்.

பெண்கள் திரண்டு வந்ததும், சிறு பிள்ளைகள் அளித்த வரவேற்பும், தேர்தல் வந்துவிட்டதோ என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது.


சட்டமன்ற உறுப்பினருக்கான பயிற்சி பட்டறை IIMB - 5


வகுப்புகளையும் பாடங்களையும் பற்றி சொல்வதற்கு இடையில் IIM –ன் கட்டிட வடிவமைப்பு குறித்து சொல்லியே ஆக வேண்டும்.

பெங்களூருக்கு மத்தியில், நூறு ஏக்கர் சோலைவனமாக திகழ்கிறது இந்த வளாகம். எந்தப் பக்கம் திரும்பினாலும் உயர்ந்து வளர்ந்த மரங்களும், செடிகளும், கொடிகளும் என பசுமை வனம்.

நேர்த்தியான புல்வெளியும், வெட்டிவிடப்பட்ட செடிகளும், சீராக பாய்ச்சப்படுகின்ற நீரும் என பராமரிக்கப்படுகின்றது இயற்கை. ஆட்கள் பணியாற்றியபடியே இருக்கிறார்கள்.



IIM-ன் கட்டிடங்கள், கட்டிடக் கலையின் உச்சம் என்று சொல்லலாம்.

எங்கு நோக்கினும் கருங்கல் பாறைகளாலான சுவர்களும், வர்ணம் பூசப்படாத கான்கிரீட் சுவர்களும், அதில் பசுங்கொடிகள் படர்ந்த அழகுமாக மிளிர்கிறது.

நீண்ட நீண்ட நடைபாதைகளே அந்த கட்டிட வடிவமைப்பின் சிறப்பம்சம். ஒவ்வொரு நடைபாதையும் ஒரு பர்லாங்க் தொலைவு இருக்கும். நடைபாதையுடைய மேற்கூறையின் (roof) உயரம் தான் பிரமிக்கவைத்தது.

ஒரு கட்டிடத்தின் மூன்றாவது மாடியின் கூறை என்ன உயரமோ, அந்த உயரத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது நடைபாதையின் கூறை. கூறையும் முழுவதுமாக மூடப்பட்டதாக அமைக்கப்படவில்லை.


சில இடங்களில் மூடப்பட்டும், சில இடங்களில் திறந்த வெளியாகவும், சில இடங்களில் சிறுசிறு திறப்புமாக, சில இடங்களில் கொடிகள் படர்ந்ததாகவும் அமைக்கப்பட்டிருக்கிறது கூறை.

இப்படி கொடி போல் படர்ந்திருக்கிற நடைபாதையின் இருபுறமும், வகுப்பறைகளும், அலுவலக அறைகளும், நூலகமும், அங்காடியும், வங்கியுமாக சீரான இடைவெளியில் கிளைத்திருக்கின்றன.


கட்டிடக் கலை பயில்கிற மாணவர்கள் இந்த வளாகத்திற்கு வந்து, தங்களது இறுதியாண்டிற்கான ஆய்வறிக்கைகளை தயார் செய்கிற அளவிற்கு, சிறப்பான வடிவமைப்பு.

எந்த சூழலிலும் இயற்கையான ஒளியும், காற்றும் நிறைந்திருக்கின்ற கட்டிட வடிவமைப்பு.

அந்த நடைபாதையில் நடந்துக் கொண்டிருந்தோம் ச.ம.உ கணேஷ் மற்றும் சேகர் உடன் நானும். பயிற்சி இடம் Central Pergola என போடப்பட்டிருக்கிறதே, என்ன அர்த்தம் என்ற விவாதம் வந்தது.


சற்று விவாதத்திற்கு பிறகு விடை காணப்பட்டது. மூன்று பேரும் பொறியியல் படித்தவர்கள் தான். இருப்பினும் சரியான விடையை சொன்னவர் கணேஷ்.

அவர்கள் இருவரும் இயந்திரவியல் படித்தவர்கள், நானோ மின்னியல் மற்றும் மின்ண்ணுவியல். அந்த வார்த்தையோ கட்டிடப் பொறியியல் தொடர்புடையது. கொடிகள் படர்ந்த தொங்கும் தோட்டம் போன்ற மேற்கூறை என்பதே அதன் அர்த்தம்.

இந்த இயற்கை சூழலில் படிக்கின்ற மாணவர்கள், கொடுத்து வைத்தவர்கள் என்றே சொல்ல வேண்டும்...

( தொடரும்... )

வெள்ளி, 28 டிசம்பர், 2012

சட்டமன்ற உறுப்பினருக்கான பயிற்சி பட்டறை IIMB - 3

மாறி வரும் இந்திய சூழலும், சட்டமன்ற உறுப்பினர்களும் என்ற தலைப்பில் IIMB-ல் பணிபுரியும் பேராசிரியர் ராஜிவ் கௌடாவின் உரை புதிய தகவல்களை தந்தது.

இந்த வகுப்பில் கிடைத்த தகவல்கள் நேரடியாக பயன்படாது என்றாலும், இந்தியாவில் ஏற்பட்டிருக்கிற மாற்றங்களையும், ஏற்படப்போகும் மாற்றங்களையும் விளக்குவதாக இருந்தது.

உலக பொருளாதாரத்தை கணக்கில் கொண்டால், நான்காம் இடத்தில் இருக்கும் இந்தியா, ஜப்பானை முந்திக் கொண்டு 2040-ல் மூன்றாம் இடத்திற்கு செல்லும்.

அதே நேரத்தில், தற்போது இந்தியாவில் 5 கோடியாக இருக்கிற நடுத்தர வர்க்கம்,  2025ல் 58 கோடியாக உயரும். இந்தியாவில் வாழ்வோரில் ஒவ்வொரு மூன்றாவது நபரும் ஏழையாக இருப்பார்கள்.

இந்திய GDP-ல் 1950-51ல் விவசாயத்தின் பங்கு 57%, 2008-2009ஆம் ஆண்டு 18% ஆக குறைந்திறது. தொழிற்துறை 14% லிருந்து 26% ஆக உயர்ந்திருக்கிறது. சேவை பிரிவு 29% லிருந்து 56% ஆக உயர்ந்திருக்கிறது.

இந்தப் புள்ளி விபரம் விவசாயத்தின் அவல நிலையை உணர்த்துகிறது. அதுவும் “ விவசாயிகள் வேறு தொழிலை கற்றுக் கொள்ள வேண்டும் என்ற மன்மோகன்சிங்கின் காமெடி தத்துவம் வெளிப்பட்டிருக்கிற வேளையில்.

·         நகரமயமாதலின் விளைவுகள்
·         குறையும் நெண் குழந்தைகள் விகிதம்
·         மாநிலங்களுக்கிடையேயான ஏற்றத்தாழ்வு
·         கிராம- நகர ஏற்றத்தாழ்வு
·         அரசியலில் பெண்கள்
·         கொள்கைகளின் வீழ்ச்சியும் கூட்டணி அரசியலின் ஏற்றமும்
·         நக்சலிசம்
·         அரசியல் சார்பான ஊடகங்கள்
·         கலவரங்களுக்கு ஊடக வெளிச்சம்
·         சமீபத்திய குடிமக்கள் எழுச்சி
இதை போன்று மக்கள் பிரதிநிதிகள் கவனத்தில் கொள்ள வேண்டிய செய்திகள் விவாதிக்கப்பட்டன.

·         சட்டமன்ற செயல்பாடு ( அதிகாரிகளின் ஆதிக்கம் தாண்டி செயல்பட வேண்டும் )
·         தொகுதியின் தலைமை நிர்வாகி ( CEO ) ( வளர்ச்சிப்பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்)
·         தலைமை பிரச்சினை தீர்வாளர் ( மக்களுக்காக அரசு அதிகாரிகள், தனியார் நிறுவன்ங்கள், காவல்துறை, கல்விக்கூட சேர்க்கை... )
·         அரசியல் செயல்பாடு ( எதிர்கட்சிகளை எதிர் கொள்ளுதல், ஆதரவுதளத்தை வலுப்படுத்துதல் )
என சட்டமன்ற உறுப்பினர்கள் மாறி வரும் சூழலுக்கு ஏற்ப தங்களை தயார் செய்து கொள்ள வேண்டும்.

மக்கள் பிரதிநிதிகளை தற்போது ஊடகமும், தொண்டு நிறுவனங்களும் உற்று நோக்க ஆரம்பித்துள்ளன. மும்பையில் ஒரு தொண்டு நிறுவனம் எம்.பி, எம்.எல்.ஏ, மாநகராட்சி உறுப்பினர்களுக்கு மதிப்பெண் அளித்து வருகிறது.

ஆக தொழில்நுட்பங்களை கையாண்டு மக்கள் பிரதிநிதிகள் சிறப்பாக செயல்பட வேண்டும்.

( தொடரும்... )

சட்டமன்ற உறுப்பினருக்கான பயிற்சி பட்டறை IIMB - 2

வகுப்பின் துவக்கமாக, பயிற்சிக்கு புதிதாக வந்திருந்த ச.ம.உ-க்களுக்கு, பயிற்சி பட்டறையின் நோக்கம் மற்றும் PRS –ன் பணிகள் குறித்து விளக்கப்பட்டது.


பத்துக்கும் மேற்பட்ட மாநிலங்களில் இருந்து 32 ச.ம.உ-க்கள் வந்திருந்தனர். புதுச்சேரியிலிருந்து 11 பேர் வந்திருந்தனர், பாண்டி மினி சட்டசபை போல் இருந்தது.

அடுத்ததாக ச.ம.உ-க்களின் பொறுப்பு மற்றும் செயற்பாடு குறித்த வகுப்பு. இது நாங்கள் கடந்த பயிற்சியிலேயே கேட்ட பாடம் தான், இருந்தாலும் சில புதிய தகவல்கள் சேர்க்கப்பட்டிருந்தன.

வகுப்பெடுத்தவர் PRS நிறுவனத்தின் இயக்குநர் திரு.மதுக்கர். உலக வங்கியில் பணிபுரிந்து, உலக பொருளாதார அமைப்பால், 2008-ஆம் ஆண்டுக்கன Young Global Leader ஆக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

“ பொதுவாக சட்டமன்ற உறுப்பினர்கள் என்றால், மக்கள் நினைப்பது, அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்க வேண்டும் என்பது தான். ஆனால் அரசியலமைப்புப்படி சட்டமன்ற உறுப்பினரின் கடமை, இயற்றப் படுகிற சட்டங்களை விவாதிப்பது தான்.

தற்போதைய அரசியல் சூழலில், எந்த மாநில சட்டமன்றத்திலும் விவாதங்கள் இல்லாமலே, ஆளுங்கட்சியின் விருப்பத்திற்கேற்ப சட்டங்கள் நிறைவேற்றப் படுகின்றன.

பதவி உயர்வில், ஆதிதிராவிடர்களுக்கான இடஒதுக்கீடு சட்டம் நிறைவேற்றப் படுவதற்கு முன்பு பாராளுமன்ற மக்களவையில் மூன்றரை மணி நேரம் விவாதம் நடைபெற்றது. இது போன்ற வாய்ப்பு சட்டமன்றத்தில் மறுக்கப்படுகிறது.

பாராளுமன்றத்தில் சிறப்பான முறையில் உரையாற்றும் உறுப்பினர்களுக்கு பிரதமர் வாழ்த்துக் கடிதம் எழுதுகிறார் என்ற தகவலை சொன்னபோது, நானே சிரித்துக் கொண்டேன்.

தமிழக சட்டப்பேரவையில், எங்களுக்கு பேசவே வாய்ப்பு தரப்படுவதில்லை, மீறி பேச முயன்றால் தூக்கி வெளியேற்றப்படுவதை எங்கே சொல்லி அழ...

இதை போன்ற விவாதங்களில் பங்கேற்பது குறித்தான வழிமுறைகள் ஆராயப்பட்டன. அவ்வப்போது அனுப்பும் ஆய்வறிக்கைகளை பயன்படுத்திக் கொள்ள கூறினர்.

( தேசிய உணவு பாதுகாப்பு சட்டம், நிலம் கையகப்படுத்துவது தொடர்பான சட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் குறித்த ஆய்வறிக்கைகளை, கடந்த பயிற்சியில் கலந்து கொண்டவர்களுக்கு அனுப்பி வருகின்றனர். )

விவசாயக் கடன் தள்ளுபடி, தகவல் அறியும் உரிமைச் சட்டம் போன்றவற்றின் நோக்கம், அதன் பயன்பாடு, தேவையானவர்களை சென்றடைந்த்தா போன்ற விவாதங்கள் நட்த்தப்பட வேண்டும்.

ஆனால் நமது சட்டமன்றங்களில் அதற்கான வாய்ப்புகள் இல்லை. விவாதங்களுக்கான தயாரிப்புகளுக்கான நேரம் இல்லை, சட்டமன்றத்தில் சிறப்பாக பணியாற்றினாலும் பாராட்டு இல்லை என்ற நிலை தான் நிலவுகிறது.

* சட்டமன்றம் செயல்பட்டாலும், நம் திறனுக்கேற்ப பங்களித்திருக்கிறோமா ?

* எவ்வாறு சிறந்த தலைவர்கள் விவாதத்தை ஏற்படுத்தினார்கள் ?

* நமது கருத்துகளை பதிவு செய்ய வேறு தளம் இருக்கிறதா ?

போன்ற கேள்விகளோடு வகுப்பு முடிவுக்கு வந்தது.

கிடைக்கின்ற வாய்ப்புகளை எவ்வாறு பயன்படுத்தி சட்டமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் பிரகாசிப்பது என மற்ற உறுப்பினர்களின் கருத்துகள் பகிர்ந்துக் கொள்ளப்பட்டது.






( தொடரும்...)

புதன், 26 டிசம்பர், 2012

சட்டமன்ற உறுப்பினருக்கான பயிற்சி பட்டறை IIMB - 1


ஓசூர் போக்குவரத்து நெரிசலை கடந்து, மெல்ல மெல்ல முன்னேறி பெங்களூரில் எங்கள் கார் நுழைந்தது. மறுநாள்(19.12.2012) துவங்க இருந்த India Policy Workshop for MLAs-ல் பங்கேற்பதற்காக.

காலை அதிமுக அரசின் தொடர் மின்வெட்டை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுவிட்டு கிளம்பியதால், காரிலேயே பயணம்.

Google maps-ல் தேடி தேடி IIM Bangalore-அய் அடைந்தோம். Management  Development Centre-ல் அறை என்றார்கள். அங்கே சென்றால், பயிற்சியை  வழங்கும் PRS Legislative Research-ன் அனில் நாயர் காத்திருந்தார்.

மணி இரவு 11.30. எங்களை வரவேற்று, அறை ஒதுக்கி, காலை உணவு நேரத்திற்கு வர சொல்லி அறைக்கு அனுப்பினார்.

இது தான் PRSன் அர்ப்பணிப்பு உணர்வு. நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பயிற்சி பெற வேண்டும், சிறப்பாக செயல்பட வேண்டும் என தொடர்ந்து செயல்படுகிறார்கள்.

மிதமான குளிர். அருமையாக இருந்தது. ஒதுக்கப்பட்ட அறை சிறப்பாக இருந்தது. அரசு கல்லூரியில் இந்த அளவிற்கு நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இது Executive Program வகுப்புகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கான அறை.

மாணவர்கள் என நினைத்திட வேண்டாம். ONGC, BHEL , ICICI போன்ற நிறுவங்களில் பணிபுரியும் உயர் அதிகாரிகளுக்கான பயிற்சி வகுப்பு அந்தExecutive  Program. குறுகிய காலப் பயிற்சி.




அறை மூன்று நட்சத்திர அறை அளவுக்கு இருந்தது. சுத்தமாகவும் இருந்தது. வெளி குளிர் உள்ளே தாக்காத அளவிற்கு கதகதப்பாக இருந்தது.

காலை எழுந்து சன்னல் திரையை விலக்கி பார்த்தால், காட்டுக்குள் இருப்பது போன்ற ஓர் உணர்வு. சுற்றிலும் மரங்கள், செடிகள், கொடிகள், புல்வெளிகள். காட்டுப் பறவைகளின் இனிய குரல்கள்.

இனிமையாக புலர்ந்தது காலைப் பொழுது. காலைப் பணிகள் முடிந்து, சாப்பிட சென்றோம். பஃபே முறையில் உணவு. கர்நாடகாவின் பிரசித்தி பெற்ற உப்பிட்டு, அது தாங்க நம்ம ஊர் உப்புமா.

பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்திருந்த சட்டமன்ற உறுப்பினர்கள், உணவிற்கு வர ஆரம்பித்தனர்.

நானும் கும்மிடிப்பூண்டி ச.ம.உ சி.ஹெச்.சேகரும ஏற்கனவே ஹைதராபாத் பயிற்சியில் கலந்து கொண்டவர்கள் என்பதால், ஏற்கனவே பயிற்சிக்கு வந்தவர்கள் அடையாளம் கண்டு புன்னகைத்தனர்.

மூன்று பயிற்சிகளிலும் கலந்து கொண்ட சம்பத் சிங் வந்திருந்தார். இவர் ஹரியானா மாநிலத்தை சேர்ந்த எம்.எல்.ஏ. இப்போது ஆறாவது முறை MLA.

உள்(காவல்) துறை அமைச்சர் ஆக இருந்து, இருபதுக்கும் மேற்பட்ட  துறைகளை கையாண்ட அமைச்சர். அவர் பயிற்சிக்கு தொடர்ந்து வருவது,  பயிற்சியின் அவசியத்தை என உணர்த்தியது.

காலை 9.00 மணிக்கு வகுப்பு துவங்கியது...
( தொடரும்... )



சனி, 8 டிசம்பர், 2012

மக்கள் சந்திப்பு 2 – அந்தூர் ஊராட்சி....





அந்தூர் ஊராட்சி சற்றேறக்குறைய 3000 மக்கள் தொகை கொண்ட கிராமம். குன்னம் தொகுதியின், வேப்பூர் ஒன்றியத்தில் உள்ளது. இங்கு ஒரு காலத்தில், மக்கள் ஏரித் தண்ணீரை குடித்து வந்தார்கள்.

தற்போதும் மின்சாரம் இல்லாவிட்டாலோ, மோட்டார் பழுதானாலோ சில நாட்கள் அதே ஏரி தண்ணீர் தான் வழி. மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி மூலம் விநியோகமாகிற நீரும் உள்ளூர் தண்ணீர் கிடையாது. உள்ளூர் தண்ணீர் உப்புத் தண்ணீர், குடிப்பதற்கு சரி வராது.

13 கி.மீ தூரத்தில் உள்ள வெண்மணி கிராமத்தில் ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டு, அங்கிருந்து தான் தண்ணீர் வருகிறது. 13 கி,மீ தூரம் வருகிற நீர் நேரடியாக மேல்நிலை நீர் தேக்கத் தொட்டியில் ஏற்ற முடியாமல், பல நாட்கள் தண்ணீர் தட்டுப்பாடு.


இது குறித்த கோரிக்கை தொடர்ந்து வந்த வண்ணம் இருந்தது. இந்த வருடம் இது வரை மழை இல்லை. இதே நிலை நீடித்தால், கோடையில் மிக கடுமையான குடிநீர் பஞ்சம் வரும். இதை எந்த வகையில் தீர்ப்பது, என்பதை மக்கள் கருத்து அறிந்து தீர்க்க தான் இன்றைய மக்கள் சந்திப்பு.

மக்கள் சந்திப்பில்,ஊர் மக்கள் கூடியிருந்தனர்.  பொதுமக்களிடம் நேரடியாக விவாதித்தோம். தரை மட்ட நீர் தேக்கத் தொட்டி அமைத்தால் தான், இந்த பிரச்சினையை தீர்க்க முடியும் என்ற முடிவு எட்டப்பட்டது. அதனை கட்டுவதற்கான இடத்தை பார்வையிட்டோம்.


குடிநீர் வடிகால் வாரிய பொறியாளர்களிடம் அலைபேசியில் பேசி, எவ்வளவு தொகை தேவைப்படும் என்பதை கேட்டுக் கொண்டு, கூட்டத்திலேயே, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, ஏழு லட்ச ரூபாய் ஒதுக்குவதாக அறிவித்தேன்.

குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு கிடைத்ததில், மக்கள் சந்திப்புக்கு வந்த பொதுமக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி. எங்களுக்கும் ஆத்ம திருப்தி, நீண்ட நாள் பிரச்சினையை தீர்ப்பதில். இன்றே மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் அனுப்பிவிட்டேன்.

அந்தூரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கிராமப்புற நூலகத்திற்கு பெரியார் களஞ்சியம் 15 பாகங்கள் உடபட 31 புத்தகங்கள் அன்பளிப்பாக, நான் நிர்வகிக்கிற பெரியார் அறிவு மய்யத்தின் சார்பாக வழங்கினேன். புரவலர் நிதியாக ரூபாய் ஆயிரமும் வழங்கினேன்.



#  அடிப்படை பணியோடு, அறிவுப் பணியும்...