பிரபலமான இடுகைகள்

ஞாயிறு, 29 மார்ச், 2015

பைக் என்ப ஏனை சைக்கிள் என்ப...

அப்போ தான் பைக் மெல்ல பரவலாகிகிட்டு இருந்த நேரம். நாங்க இரண்டாம் வருஷம் இன்ஞினியரிங். புரொபசர்லாம் ஸ்கூட்டர். அது ஒரு அந்தஸ்து போல. கண்ணியமான தோற்றத்திகாக, அதுல கம்பீரமா வந்து இறங்குவாங்க. பெரும்பாலும் சேட்டக்.

              

மேத்ஸ் வைரமாணிக்கம் சார், லேசாக சந்தனக் கீற்றோடு, கண்ணாடி போட்டுக்கிட்டு பாந்தமா வந்து இறங்குவாரு. ஸ்ட்ரக்சுரல் செந்தாமரை சார் ஒல்லியான உடம்போட இன் பண்ணிக்கிட்டு ஸ்கூட்டர்ல வருவாரு.

எலெக்ட்ரிகல் வி.சி.பழனி சார், சொல்லவே வேண்டாம், நேவி ஆபிஸர் அப்படிங்கறதால கனகம்பீரமா பிளைட்ல வர்ற மாதிரியே வருவாரு. இவங்கள்ல வித்தியாசம்னா, ஷா சார் தான். அவர் அப்படியே இளைஞரா கவாசகி பஜாஜ்ல வருவாரு.

           

பசங்க பெரும்பாலும் நடராஜா தான். காரணம் ஹாஸ்டல்ல எழுந்து பார்த்தா, காலேஜ் பில்டிங் முகத்துல தான் முழிக்கனும். அதனால பைக் அவசியமில்லை. முதல் வருஷம் ஹாஸ்டல் தூரங்கிறதால, அப்போ வாங்கின சைக்கிள் பலரிடம் இருக்கும்.

அதனால சைக்கிள் தான். அங்கொன்றும், இங்கொன்றுமா யாராவது ஒருத்தர்கிட்ட பைக் இருக்கும். அந்த ஒரு பைக்கையே, தினம் ஒருத்தர் எடுத்துகிட்டு சுத்தி, அது யாரு பைக்குன்னு குழப்பமே வந்துடும். பெட்ரோல் யார் போடுவாங்கன்னே தெரியாது.

பெண்கள் சிம்பிளா லேடீஸ் சைக்கிள். அவங்க ஹாஸ்டல்ல இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் காலேஜூக்கு ‘பொடி நடையா’ வர்ற மாதிரி வந்துடுவாங்க. சிலர் ஸ்போர்ட்ஸ் சைக்கிள் வச்சிக்கிட்டு பறப்பாங்க. டிவிஎஸ் அதிகபட்சமா, ஓரிருவரிடம்.

ஹாஸ்டல் இல்லாம மாரியப்பா நகர்ல தங்கியிருந்தவங்க்கிட்ட தான் பைக் அதிகம் இருக்கும். அது பெரும்பாலும் இண்ட்-ஸுசூகியா இருக்கும். கொஞ்சம் கவாசகி பஜாஜூம் உண்டு. அப்போ டிவியில ஒரு விளம்பரம் பிரசித்தம். ஒரு வேங்கை ஓட, ஓட கவாசகி பைக்கா மாறும். வண்டியும் அப்படியே சீறும்.

யமாஹா தான் ஹாட். ஒரு மேன்லி லுக் பைக் அப்படிங்கிற தோற்றம். சத்தமும் வித்தியாசமாக திரும்பி பார்க்க வைக்கும். அதுல நாகலாந்து மாணவர்கள் யமஹா, அவங்க ஓட்டுறதுலேயே ஃபேமஸ். சர்க்கஸ்ல இருந்து இங்க வந்துட்டாங்களோன்னு தோணும்.

       

புரொடக்சன் இன்ஞினியரிங் பையன் ஒருத்தன் டோனின்னு நினைக்கிறேன், அவன் பைக் ஸ்டார்ட் பண்ணா கண் கொள்ளா காட்சி தான். ஸ்டார்ட் ஆனது தான் தெரியும், பைக்க அப்படியே படுக்கற மாதிரி சாய்ப்பான், வண்டி அரைவட்டம் அடித்து, 180 டிகிரி திரும்பி, எதிர்புறத்தில் போகும். போய்கிட்டு இருக்கும் போதே ப்ரண்ட் வீலை தூக்கி “வீலிங்” செய்வான்.

சில நம்ம மக்க இத டிரை பண்றேன்னு, ரோட்ல புரண்டு, சில்லறை பொறுக்கறதும் சகஜம். சைக்கிள்லேயே ‘வீலிங்’ விட்டு திருப்தி பட்டுக்கறவங்களும் உண்டு. ஏழைக்கேத்த எள்ளுருண்டை சைக்கிள்.

எங்க கேங்ல முத்துஎழிலன் லோக்கல். அவங்க அப்பாகிட்ட கவசாகி பஜாஜ் உண்டு. முத்துகிட்ட ஸ்போர்ட்ஸ் வண்டி உண்டு. செமத்தையா போகும். அப்போ அப்போ ரெண்டையும் எடுத்துகிட்டு நைட்ல ரவுண்ட் அடிப்போம். பிரபு ஸ்கூட்டர்.

நான், முத்து, டாக்டர் செந்தில், மெக்கானிக்கல் சங்கர்லாம் டவுனுக்கு போனா தான் வண்டி எடுக்கிறது. அதுவும் முத்து வண்டி, ஸ்போர்ட்ஸ் வண்டிங்கிறதால வித்தியாசமான லுக். எல்லாரும் திரும்பிப் பார்ப்பாங்க. எங்களுது சாதாரண வண்டி தான்.

பார்க்கிங்ல போடும் போது தான் காமெடியா இருக்கும். யமஹா, இண்ட்-ஸூசூகி, கவசாகிக்கு நடுவுல கம்பீரமா முத்துவோட ‘ஒடுக்கு’ ஸ்போர்ட் சைக்கிள், எங்க அட்லஸ், ஹெர்குலஸ் நிக்கும்.

# பைக் என்ப ஏனை சைக்கிள் என்ப இவ்விரண்டும் கண் என்ப மாணவர்க்கு !

சனி, 28 மார்ச், 2015

தோசைக்கல் மேல் குவியலாக இறால்

சிதம்பரம் போறதுன்னு முடிவெடுத்தோம். அப்போ எனக்கு தெரியாது, அவங்க போட்டிருந்த திட்டம். கிளம்பினோம் சென்னையிலிருந்து.

நாங்கள் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் படித்து 25 ஆண்டுகள் ஆனதை கொண்டாடும் விழாவிற்கு, சிறப்பு விருந்தினர்களாக, எங்கள் ஆசிரியர்களை அழைக்கத் தான் பயணம்.

     

சட்டமன்றம் விடுமுறையானது வசதியாகப் போனது. சென்னையிலிருந்து ஸ்ரீதர், ஆவிச்சி, நான். பாண்டியிலிருந்து ரமேஷ்பாபு, சேலத்திலிருந்து ராம்ஸ்.

மதிய உணவுக்கு புத்தூர் என்றனர். புத்தூர் ஜெயராம் ஹோட்டலை அடைந்தோம். நாங்கள் படிக்கும் போது அந்த ஹோட்டல் குறித்து அறிந்ததில்லை. காரணம் எங்கள் பல்கலைக்கழக உணவகம் அவ்வளவு சிறப்பானது.

கூரை வேயப்பட்ட முன்புறம். முன்புறமே அடுப்பு. அதன் மேல் அகன்ற தோசைக்கல். தோசைக்கல் மேல் குவியலாக இறால்.

ஒரு பெரியவர் அதனைக் கிண்டிக் கொண்டிருக்கிறார், நறுவிசாக. இன்னொரு புறம் மீன் வறுவல் நடந்துக் கொண்டிருந்தது. மீன் அழகாக நறுக்கப்பட்டிருந்தது.

உள்ளே சென்றோம். காத்திருந்து, மேசை பிடித்தோம். செய்தித்தாள் விரித்து, அதன் மீது இலை விரித்தார்கள். சோறு கொண்டு வந்தத் தம்பி, தள்ளினார் பாதி இலைக்கு.

அடுத்து ஒரு கிண்ணம் நிறைய மீன் குழம்பு கொண்டு வந்து வைத்தார் குமார். சின்ன சுவையான மீன்கள். எடுக்க, எடுக்க வந்தது.

ஆர்டர் செய்த இறாலும், வறுவல் மீனும் வந்தது. ஒரு பிளேட் இறாலை மூன்று பேர் சாப்பிடலாம். சுவை அருமை.

மீன் வறுவல் பிரம்மாதம். "மீன் குழம்பு அப்படியே இருக்கு. சாப்பிடுங்க" குமார் வற்புறுத்தினார். கோழி குழம்பு கொண்டு வந்து வைத்தார்.

தயிர் கேட்ட ஸ்ரீதரை, அதட்டினார் குமார் அன்பாக, "ரசம் கொஞ்சமாவது சாப்பிட்டா தான் தயிர் தருவேன்". ரசம் சாப்பிட்டவர் எங்களுக்கும் பரிந்துரைத்தார். அடடா, சூப்பர்.

தயிர் கொண்டு வந்தார். வீட்டு தயிர் போல கெட்டியாக. "சாப்பிடுங்க" என்று சொல்லி கையில் ஊற்றினார். உறிஞ்சிக் குடித்தோம். சுவை . பிறகு சாப்பாட்டிலும் ஊற்றினார்.

அடுத்து ஒரு கிண்ணத்தில் ஊறுகாய் கொண்டு வந்து வைத்தார். என்ன சொல்ல, அதுவும் டாப். ஒன்றுக்கொன்று சுவையில் போட்டி.

அதை விட, உபசரிப்பு அவ்வளவு சிறப்பு, உறவினர் வீடு போல.

கைகழுவும் இடம், இருக்கை ஆகியவற்றை மேம்படுத்தினால் சிறப்பாக இருக்கும்.

சாப்பிட்டு வெளியே வந்தோம். "காரம் ஜாஸ்தி" என்ற ஆவிச்சி கடலை மிட்டாய் தேடினார். "காரம் கம்மி தான்" என்ற ராம்ஸ் பீடா கடைக்கு நகர்ந்தார்.

பெரியவர் இன்னும் சின்சியராக இறால் வறுத்துக் கொண்டிருந்தார். குமார் தோழமையாக விடைக் கொடுத்தார்.

    

பெரியவர் தான் கடையின் முதலாளியாம். குமார் அங்கு பணிபுரியும் ஊழியர்.

# வருவிருந்து வைகலும் ஓம்புவோர் !

செவ்வாய், 24 மார்ச், 2015

சிங்கம் நீ, சிங்கப்பூரே நீ !

தமிழகத்திலேயே அதிகம் குடிசை வீடுகள் உள்ள மாவட்டங்கள் எங்கள் அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்கள். இது கடந்த தலைவர் கலைஞர் ஆட்சியின் போது குடிசை வீடுகளுக்கு மாற்றாக “கான்கிரீட் வீடுகள்” கட்டித் தருவற்காக “கலைஞர் வீடு வழங்கும் திட்டம்” கொண்டு வந்த போது, திரட்டப்பட்ட புள்ளிவிபரத்தால் அறிந்தது.

இதில் செந்துறை, வேப்பூர், ஆண்டிமடம் ஒன்றியங்கள் சற்று கூடுதல். இந்த குடிசை வீடுகளில் ஒரு குறிப்பிட்ட சதவீதம், கான்கிரீட் வீடுகளாக மாறியதற்கு காரணமானவர் லீ குவான் யூ. வீடுகள் மட்டும் உயரவில்லை. அவர்கள் வாழ்வாதாரமே உயர்ந்திருக்கிறது. அவரை நான் வணங்குகிறேன்.

             

ஆம் மறைந்த சிங்கப்பூரின் பிரதமர் லீ குவான் யூ தான். அவர் வெறும் பிரதமர் மாத்திரமல்ல சிங்கப்பூரை நிர்மாணித்த சிற்பி. தனி ஒரு மனிதனாய் அந்த தேசத்தையே நிர்மாணித்தவன்.

ஒரு சுண்டைக்காய் அளவிலான தீவை, உலக பொருளாதார வரைபடத்தில் இடம் பெற செய்தது அவரது கடுமையான உழைப்பு தான். அந்த பொருளாதார வளர்ச்சிக் காரணமாக, அங்கு வேலைவாய்ப்பு பெருக, தமிழகத்தில் இருந்து நம் மக்கள் பயணப்பட்டார்கள், பயன்பட்டார்கள்.

இது பொருளாதார வளர்ச்சிக்கு பிறகு. ஆனால் அதற்கு முன்பே அங்கு தமிழர்கள் வாழ்ந்து வந்தார்கள். சீனர்கள், மலாய் மக்கள், தமிழர்கள் என்று பல்வேறு தேசிய இனங்களை உள்ளடக்கியதாக இருந்தது சிங்கப்பூர். ஆனால் அனைவரையும் ஒருங்கிணைத்து சிங்கப்பூரை முன்னேற்றினார் லீ.

பிரிட்டிஷ் காலனி நாடாக இருந்த நேரத்தில் அரசியலில் நுழைந்து கட்சி ஆரம்பித்தவர், அப்போதே பிரதமரானார். இடையில் சிறிது காலம் சிங்கப்பூர் மலேசியாவோடு இணைந்திருந்தது. பிறகு பேதம் ஏற்பட்டு பிரிய நேர்ந்தது. பிரியாமல் இருக்க வேண்டுமென லீ விரும்பினார்.

காரணம் சின்னத் தீவான சிங்கப்பூர் குடிக்கிற தண்ணீர் முதற்கொண்டு அனைத்திற்கும் மலேசியாவை நம்பித் தான் இருக்க வேண்டும். அதனால் அந்த நாட்டோடே இணைந்திருந்தால், மக்கள் வளம் பெறுவார்கள் என்பது அவர் எண்ணம். ஆனால் பிரிந்து விட்டது. அதனால் ஓய்ந்துவிட வில்லை அவர்.

சிங்கப்பூரை பொருளாதார வளம் கொழிக்கும் நாடாக மாற்ற வேண்டுமென உறுதி பூண்டார். செய்துகாட்டி விட்டார். பல்வேறு நாடுகளுக்கு வணிக மையப் புள்ளியாக திகழ்கிறது. இன்னும் பல காலத்திற்கு திகழும், அவர் போட்டு கொடுத்திருக்கிற அஸ்திவாரத்தின் மேல்.

ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு முழு முதற் காரணமாக இருந்ததாக, இவருக்கு ஒப்பாக, வேறு எந்த நாட்டுத் தலைவரையும் காட்ட முடியாது.

அந்த நாட்டின் வளர்ச்சி மட்டுமல்லாமல், தமிழகத்தை போல் பல்வேறு நாடுகளில் இருந்து அங்கு சென்று பணியாற்றுவோர் குடும்பத்தின் வளர்ச்சிக்கும் அவரே காரணம், அதன் மூலம் அந்த நாடுகளின் வருமானத்திற்கும் அவரே காரணம்.

சர்வாதிகாரம் சில நேரங்களில் தலைதூக்கியது என்றக் குற்றச்சாட்டு இருந்தாலும், அதுவும் அந்த நாட்டின் வளர்ச்சிக்கான அவரது செயல்பாடாகவே அமைந்தது. ஒரு தலைவனாக, இப்படி தான் இருக்க வேண்டுமென ரோல்மாடலாக வாழ்ந்துக் காட்டி விட்டார்.

இதை எல்லாம் தாண்டி அவர் மீது கூடுதல் அபிமானம் ஏற்படுவதற்கு காரணம், தமிழுக்கு அவர் கொடுத்த மரியாதை. தமிழை ஆட்சி மொழியாக்கினார். சிங்கப்பூர் பணத்தில் இடம் பெற்றிருக்கும் நான்கு மொழிகளில் தமிழும் ஒன்று.

தமிழகத்தில் இருந்து சென்ற தலைவர்கள் பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர் ஆகியோரை வாஞ்சையோடு வரவேற்றவர், அன்பு பாராட்டியவர்.

அவர் மறைந்து விடவில்லை. சிங்கப்பூர் நாட்டினரின், அங்கு பணியாற்றும் வெளிநாட்டினரின் ஒவ்வொருவரது வீட்டிலும் எரிகிற அடுப்புத் தீயாக, “அணையா தீபமாக” அவர் என்றும் இருப்பார்.

சிங்கப்பூரில் ஓங்கி உயர்ந்து நிற்கிற கட்டிடங்களில் அவர் மூச்சுக் காற்று உலவிக் கொண்டிக்கும். புதிதாக ஏற்படுத்தப்பட்ட நீர்நிலைகளில் அவரது உதிரம் கலந்திருக்கும். நாட்டின் உள்கட்டமைப்பில் அவரது உடல் மறைந்திருக்கும். புழங்கும் நாணயங்களில் அவரே நிறைந்திருப்பார்.

# சிங்கம் நீ, சிங்கப்பூரே நீ !


                    

பிறந்தநாள் துவங்கியது நெகிழ்ச்சியாக

மெயில் பார்ப்பதற்காக அலைபேசியை எடுக்க கை வைத்தேன். இடம் காலியாக இருந்தது. பின் சீட்டில் தேடினேன் , அங்கும் காணோம். ராம்கோ சிமெண்ட் ஆலை அருகே வந்திருந்தோம்.

காரை நிறுத்த சொல்லி இறங்கி, கார் முழுதும் தேடினேன். அலுவலக மேசையில் இருக்கிறதா என ராஜவேலுவை பார்க்க சொன்னேன். அங்கும் இல்லை.

சற்று சிந்தித்து பார்த்தேன். அலுவலகத்தில் இருந்து வெளியே வந்து, பின்புறம் சென்று புகைப்படம் எடுத்துக் கொண்டேன். பிறகு கார் ஏறினேன்.

சற்றே குழப்பமாக இருந்தது. நடந்த நிகழ்வுகளை ஒவ்வொரு நொடியாக கட் செய்து, நினைத்துப் பார்த்தேன். அலுவலகத்தில் இருந்து வெளியே வரும் போது, வழக்கம் போல் குறிப்பேடு மற்றும் இரண்டு மொபைல்களையும் எடுத்துக் கொண்டு வந்தேன்.

ஆனால் குறிப்பேடு மட்டும் காரில் இருந்தது. புகைப்படம் எடுத்துக் கொள்வதற்காக செல்லும் போது, குறிப்பேட்டை உள்ளே வைத்து விட்டு சென்றேன்.

அப்போது தான் நினைவு வந்தது, புகைப்படம் எடுக்க ஒரு அலைப்பேசியை கையில் வைத்துக் கொண்டு, மற்றொன்றை கார் மீது வைத்தேன். ஸ்விப்ட் கார்.

எடுத்தப் புகைப்படங்களை மெயில் அனுப்பும் போது, ராமதுரை வந்தார், கூட்ட அழைப்பிதழ் கொடுக்க. அவரிடம் பேசிக் கொண்டே, காரை கதவுக்கு வெளியில் கொண்டு வரச்  சொல்லி, ஏறியது நினைவுக்கு வந்தது.

கார் மீது இருந்த மொபைல் எந்த இடத்தில் விழுந்திருக்கும் என அனுமானிக்க முடியவில்லை. வீட்டிலிருந்து இறங்கி, சாலையில் ஏறினால் சிறிது தூரத்தில் ஒரு வேகத் தடை. அடுத்து கல்லூரி அருகே ஒரு திருப்பம்.

சாலை ஏற்றம், வேகத்தடை, திருப்பம் இந்த இடங்களில் விழுந்திருக்க வாய்ப்பு உண்டு. ராஜவேலுவை மறுபடியும் அழைத்து, கல்லூரி வரை பார்க்க சொன்னோம்.

நாங்களும் காரை திருப்பினோம், வந்த வழியில் தேடுவோம் என. 4 கி.மீ தூரம் இருக்கும். அப்போது தான் சிந்தனை, அந்த அலைப்பேசியை அழைக்கலாமே .

அந்த அலைப்பேசியை அது வரை இணைய பயன்பாட்டுக்கு மட்டுமே பயன்படுத்தி இருந்ததால், அதை பேச பயன்படுத்தியது இல்லை. எண் தெரியவில்லை. ரீசார்ஜ் செய்ய குறித்து வைத்திருந்ததை தேடி எடுத்தேன்.

நேரம் பறந்துக் கொண்டிருந்தது. ரிங் போனது, யாரும் எடுக்கவில்லை. இதற்குள் கல்லூரி வரை தேடிய ராஜவேலு, காணவில்லை என தகவல் கொடுத்தார். மறுநாள் பிறந்தநாள். அவ்வளவு தான்.

நம்பிக்கை குறைய ஆரம்பித்தது. இதற்குள் கார் செந்துறை பைபாஸ் ரவுண்ட்டானாவை நெருங்கியது. மீண்டும் அழைத்து பார்ப்போமே, அழைத்தேன். யாரும் எடுத்து சிம்மை கழற்றி விடுவார்களோ என்ற குழப்பம்.

ரிங் போனது போய் கொண்டே இருந்தது. இதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்தது. "என்ன இப்படி பண்ணிட்டீங்களே?" என்று வருத்தப்படுவார் துணைவியார்.

ஆனால்"ஹாஹா. அப்பவே சொன்னோம், இரண்டு ஸ்மார்ட் போன்லாம் உங்களுக்கு ஓவர்னு. தொலைச்சுட்டிங்களா",மகன்கள் கலாய்க்கப் போவதை நினைத்து தான் வேர்த்தது.

எப்படி தொலைந்தது என்று கேட்டால், அதற்கு என்ன சொல்வது என்று நினைத்தால், தலை வேகமாக சுற்ற ஆரம்பித்தது.

ரிங் துண்டிக்க ஒரு நொடியில் யாரோ எடுத்தார்கள். "ஹலோ, யார் பேசறீங்க". "நான் சிவசங்கர் பேசறேன். நீங்க?"."அண்ணா, நான் வினோத், மணியங்குட்டை ஏரியா. வரும் போது ராஜவேலு தேடிக்கிட்டிருந்தார்"

"நான் பைக்குல வரும் போது, ஒரு சின்னப் பையன் கீழே கிடந்தத எடுத்தான். வாங்கிப் பார்த்தேன், மொபைல். ராஜவேலு சொன்னத வச்சி, உங்களதா இருக்கும்னு நினைச்சேன். நீங்க கூப்பிட்டுட்டீங்க"

கல்லூரி தாண்டி, அடுத்த திருப்பம் தாண்டி கார் மீதே பயணித்திருக்கிறது மொபைல். அங்கு ஒரு குழியில் விழுந்து எழும் போது துள்ளி விழுந்திருக்கிறது.

நாங்கள் இருந்த இடம் வந்து கொடுத்தார். நன்றி சொன்னேன், மனம் நெகிழ்ந்து. கடமையை செய்த உணர்வுடன் விடை பெற்றார். இப்படியும் வாழ்கிறார்கள்.

சாம்சங் நோட் _3. சிங்கப்பூரில் ரூ 30,000.

பிறந்தநாள் பரிசு வினோத் கொடுத்து விட்டார். நன்றி சகோதரா.

மெயிலை திறந்து, புகைப்படத்தை இறக்கி, முகநூல் முகப்பு படமாக வைத்தேன், அதே சாம்சங்கில்.

அதற்கு ஒரு கமெண்ட், சபா திலீபன் போட்டிருந்தார்.  "வெறும்10ரூபாய் தவறினால் கூட மீளப்பெற முடியாத சமகாலத்தில் நேற்று மாலை உங்கள் கார் முன்புறத்தில் வைத்து கீழே விழுந்து மீண்டும் உங்கள் கையில் வந்து சேர்ந்த போதே இன்று உங்கள் பிறந்தநாள் என்பது தெரியாமலே நான் சொன்னேன்."இது அவரின் உழைப்பு.பிறர் பொருளுக்கு துளிகூட ஆசைப்படாமல் பிறருக்காக வாழும் நல்ல மனத்திற்கான அங்கீகாரம்.' என்றேன்.உயர்ந்த விடயங்கள் ஆயிரம் நீங்கள் அடைந்து வாழி நலங்கள் யாவும் சூழ.!!!"

இவருக்கு விஷயம் எப்படி தெரிந்தது என்று தெரியவில்லை. இவர் பின்னூட்டம் பார்த்தப் பிறகு பகிர்ந்து கொள்ள தோன்றியது.

# ஆண்டு (பிறந்தநாள்) துவங்கியது மகிழ்ச்சியாக, நெகிழ்ச்சியாக !

சனி, 21 மார்ச், 2015

எஞ்சினியரிங் மாணவர்களுக்கு அது இரண்டாம் வீடு

அது சிதம்பரத்து மக்களுக்கு வேண்டுமானால் ரயில்வே ஸ்டேஷனாக இருக்கலாம். ஆனால் (அண்ணாமலை பல்கலைகழக) எஞ்சினியரிங் மாணவர்களுக்கு அது இரண்டாம் வீடு, ஹாஸ்டல் முதல் வீடு என்றால். (அவ்வளவு பக்கம்).

        

இன்னும் சிலருக்கு அதுவே முதல் வீடாகவும் இருந்தது உண்டு. அவர்கள் ஹாஸ்டலில் தங்குகிறார்களா, இல்லை ஸ்டேஷனிலேவா என்ற சந்தேகமே வந்து விடும். எப்போ பார்த்தாலும் அங்கு தான் இருப்பார்கள்.

இன்னும் சிலர் சற்று வித்தியாசம். விடியற்காலை மூன்று மணிக்கு கடைசி ரயிலை அனுப்பி விட்டு, ஹாஸ்டலுக்கு பத்திரமாக வந்து படுத்து விடுவார்கள். மறுபடி காலை ஆறு மணிக்குத் தான், திரும்ப டீ குடிக்க செல்வார்கள்.

சிலர் பொறுப்பாக மாலை நேரத்தில் மாத்திரம் வந்து, எல்லா ரயிலும் சரியான நேரத்திற்கு வருகிறதா, எல்லோரும் சரியாக டிரெயினை பிடித்தார்களா என்று பார்த்து விட்டு கிளம்பி விடுவார்கள்.

இன்னும் ஒரு கோஷ்டி உண்டு. வெள்ளிக்கிழமை நடராஜர் கோவிலுக்கு போகிறார்களோ இல்லையோ, இங்கு வந்து விடுவார்கள். சென்னை ரயிலை வழி அனுப்ப. எங்க போனா என்ன, தரிசனம் காணும் பக்தர்கள்.

ரயிலின் ஹாரன், நீராவி எஞ்சினின் பெருமூச்சு, முன் அறிவிப்பு மணி, மைக் அறிவிப்புக் குரல் போன்றவற்றை கேட்காத நாட்களில், காது கேட்கிறதா என்ற சந்தேகம் வந்து விடும்.

சிலருக்கு ஸ்டேஷனில் இருக்கும் புக் ஸ்டாலுக்கு வந்து காத்திருந்து, சுடசுட பிரிக்கப்படும் புத்தகக் கட்டில் முதல் புத்தகத்தை வாங்கிப் படித்தால் தான் திருப்தி. சிலர் புது புத்தக வாசத்துக்கு வாங்குவார்களோ என்னவோ.

அது ஆனந்தவிகடனாகவும் இருக்கலாம், ப்ரண்ட்லைனாகவும் இருக்கலாம், ஜூவியாகவும் இருக்கலாம், ஸ்போர்ட்ஸ் ஸ்டாராகவும் இருக்கலாம், பாக்கெட் நாவலாகவும் இருக்கலாம். கையில் இருந்தால் அது ஒரு பந்தா.

சில நண்பர்கள் இங்கிருக்கும் பெஞ்சை ஆக்கிரமித்து, படிக்கிறேன் பேர்வழி என புத்தகத்தை விரித்து வைத்துக் கொள்வார்கள். ஆனால் கண்கள் புத்தகத்தில் இருக்காது.

உண்மையாகவே இங்கிருக்கும் பெஞ்சில் உட்கார்ந்து படித்தே டிஸ்டிங்ஷன் தட்டியவர்களும் உண்டு. அவர்கள் கருமமே கண்ணானவர்கள், நம்ம பாஷையில் பழம்ஸ்.

இன்னும் சிலர் ஸ்டடி ஹாலிடேஸை இங்கு கழிப்பார்கள். சிலர் ஹாஸ்டலில் நைட் ஸ்டடி போடுவதே, இங்கு இரவு 1.00 மணிக்குவந்து முட்டை பரோட்டா, ஆம்லெட், டீ சாப்பிடுவதற்காகவே இருக்கும். என்.வி.எல்.ஆரின் சுவை ரசிகர்கள்.

சினிமா செகண்ட் ஷோ பார்த்து விட்டு வரும் போது, இங்கு ஒரு டீ போட்டால் தான் சிலருக்கு நிம்மதியாக தூக்கம் வரும். சிலருக்கு தினமும்.

எது எப்படியோ, அது வெறும் ரயில்வே ஸ்டேஷன் அல்ல, அது ஒரு வாசஸ்தலம், பொழுதுபோக்கு மையம், போதிமரம், அதுவே ஒரு பல்கலைக்கழகம்.

# ரயிலும், ரயில்வே ஸ்டேஷனுமாய் வாழ்ந்த காலம் !
(1990-ல் பொறியியல் முடித்த மாணவர்கள் ஜூனில் சந்திக்க இருக்கிறோம். அதற்கு நண்பர்களை வார்ம்-அப் செய்ய, அடித்த வாட்ஸ்-அப் பதிவு. )

வெள்ளி, 20 மார்ச், 2015

இவர்கள் பொருட்டே இன்னும் மழை !

“எதிர்கட்சி எம்.எல்.ஏ பேசி, அதிகாரிகள் செய்யப் போகிறார்களா?. ஆளுங்கட்சியினர் மூலம் பேசிப் பாருங்கள்” என்று சொன்னேன். “ஆளுங்கட்சி சார்பில் யாரும் பேச முன் வரமாட்டேங்கிறாங்க. என்ன ஆனாலும் பரவாயில்லை. நீங்க பேசிப் பாருங்க” என்றனர்.

இவர்கள் ஜெயங்கொண்டம் தொகுதி, ஆண்டிமடம் ஒன்றியத்தை சேர்ந்தவர்கள். சொந்தமாக டயர் மாட்டு வண்டி வைத்திருப்பவர்கள். மாலையில் தங்கள் டயர் மாட்டு வண்டியை ஓட்டிச் சென்று, இரவு ஆற்றை அடைந்து, அவர்களே மணல் ஏற்றினால், ஊருக்கு திரும்ப வந்து சேரும் போது விடிந்து விடும்.

            

சிலர் சொந்த வீடு கட்ட மணல் அள்ளி வருபவர்கள். சிலர் சிறு விவசாயிகள், விவசாய வருமானம் போதாமல், அவ்வப் போது மணல் அள்ளி பிழைப்பவர்கள். சிலருக்கு ஜீவிதமே இது தான். ஆனால் ஒரு நாள், ஒரு நடை மணலுக்கே போய் விடும்.

இப்படி திருமுட்டம் அருகே, ஆற்றில் மணல் அள்ளிய 25 டயர் மாட்டு வண்டிகளை, காட்டுமன்னார்கோவில் வட்டாட்சியர் பிடித்து, காவல்துறையிடம் ஒப்படைத்தார். டயர் வண்டியில் மணல் அள்ளினால் வழக்கு. பக்கத்து ஊரில், லாரி வைத்து மணல் அள்ளும் தனியாருக்கு அரசு பாதுகாப்பு தருகிறது. நல்ல அரசு.

வழக்கு மட்டும் போட்டால் கூட பரவாயில்லை. வருவாய் துறைப் போடும் அபராதம் தான் கொடூரமானது. ஒரு வண்டிக்கு ரூபாய் 25,000 அபராதம். டயர் வண்டியின் விலையே 10,000 தான் வரும்.

இந்த அபராதத்தைக் கட்டினால், அவர்களது ஒரு வருட உழைப்பை மீண்டும் செலவிட்டால் கூட இந்தத் தொகையை ஈடு கட்ட இயலாது. அதனால் தான் தாசில்தாரை சந்திக்க வருகிறேன் என உறுதி அளித்திருந்தேன்.

செவ்வாய் கிழமை, முந்திரி விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் முடித்து, நேராக கார் ஏறினோம் காட்டுமன்னார்குடிக்கு. உடன் மாநில இளைஞரணி துணை செயலாளர் அண்ணன் சுபா.சந்திரசேகர், கொள்கைபரப்பு துணை செயலாளர் அண்ணன் பெருநற்கிள்ளி, ஆண்டிமடம் ஒன்றிய செயலாளர் அண்ணன் தர்மதுரை மற்றும் கழகத் தோழர்கள்.

காட்டுமன்னார்குடியை நெருங்கும் போது அலைபேசி அழைப்பு. “அபராத கோப்பு மேல் நடவடிக்கைக்காக சிதம்பரம் ஆர்.டி.ஓ-விடம் போய் விட்டது. நாங்கள் சிதம்பரத்தில் இருக்கிறோம்” என்றனர் மாட்டுவண்டித் தோழர்கள். சரி, இவ்வளவு தூரம் வந்து விட்டோம், சிதம்பரம் போய் விடுவோம் என்று பயணித்தோம்.

“ஆர்.டி.ஓ எப்படி?” என்று உள்ளூர் நண்பர்களிடம் விசாரித்தேன். “டெரர். சிறுவயது. அரசியல்வாதிகளுக்கு அவ்வளவு இணக்கம் கிடையாது. மணல் கொள்ளைக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்து வருபவர். அவரது மாறுதலுக்கு உள்ளூர் ஆளுங்கட்சியினர் முயற்சித்து வருகின்றனர்” கிடைத்தத் தகவல்கள்.

சிதம்பரம் அடைந்தோம். கைலி, பனியன், காய்ந்த தலை என நம் மாட்டுவண்டித் தோழர்கள். தைரியம் சொல்லி, சார் ஆட்சியர் உதவியாளரை அணுகினோம். சார் ஆட்சியரை சந்தித்தோம். நான், அண்ணன் சுபா, அண்ணன் கிள்ளி, அண்ணன் தர்மதுரை.

இளைஞர். அழுத்தமானவர் என்பது பார்வையிலேயே தெரிந்தது. அறிமுகப்படுத்திக் கொண்டோம். “அபராதத் தொகை அளவுக்கு கூட வண்டியின் மதிப்பு கிடையாது. அவர்கள் ஏழைகள். நீங்கள் தான் உதவிட வேண்டும்” என்றேன்.

“வழக்கு போடப்பட்டு விட்டது. இனி என்ன செய்வது?”என்றார். “அபராதத்தை குறைத்து உதவுங்கள்” என்றேன். “இதற்காகவா இவ்வளவு தூரம் வந்தீர்கள், போனில் பேசி இருக்கலாமே?” என சற்றே ஆச்சரியத்துடன் கேட்டார். “இதற்காகவே வந்தோம். அப்போது தான் அதன் வீரியம் புரியும் என்பதால்” என்றேன்.

“சரி, அபராதத்தை குறைத்து விதிக்க ஆவண செய்கிறேன்” என்றார். “நாளையே அதை செய்தால் உதவியாக இருக்கும். ஏற்கனவே ஒரு வாரமாக பிழைப்பும் இல்லை. செலவு செய்து அலைகிறார்கள்” என்றேன். ஏற்றுக் கொண்டார். நன்றி சொல்லி வெளியே வந்தோம்.

   

தோழர்களிடம் சொன்னோம், அவர்களுக்கு அளவில்லா ஆனந்தம். கார் ஏறினோம். அண்ணன் சுபா,”இன்னும் குறைச்சு கேட்பீங்கன்னு பார்த்தேன். ஆனால் வண்டிக்காரர்கள் இதற்கே இவ்வளவு ஆனந்தப்படுவதை பார்த்தப் பின்தான், அவ்வளவு குறைத்ததே பெரிது என்பது தெரிந்தது.” என்றார். “இதுவரை அபராதத்தை குறைத்து நான் கேள்விப்பட்டதில்லை” என்றேன்.

அரியலூர் வந்தடைந்தேன். மாலை “வாட்ஸ்அப்” நோட்டிபிக்கேஷன் காட்டியது. திறந்தால் பத்திரிக்கை நண்பரின் செய்தி. “அரசு அலுவலர்கள் மாற்றம் – பட்டியல்”. முதற் பெயர், அரவிந்த், சார் ஆட்சியர், சிதம்பரம். பதறிப் போனோம்.

ஆனால், அடுத்த நாளே மாடுவண்டித் தோழர்களை வர செய்து ரூபாய் 4,000 அபராதம் விதித்து, தொகையை கட்ட செய்து, வண்டிகளை விடுவிக்க ஆணையிட்டார், மாறுதலுக்கு முன்பாக. மாட்டுவண்டித் தோழர்கள் தொடர்பு கொண்டு நன்றி 
தெரிவித்தனர்.

எங்களது நன்றிகள் சார் ஆட்சியருக்கு. ‘கடிதோச்சி மெல்ல வெறிக’, குறள் படி ஆட்சியர்.

# இவர்கள் பொருட்டே இன்னும் மழை !

மாட்டுவண்டியில் சென்று தேர்தலை சந்தித்தவர்

அவர், தலைவர் கலைஞரை பார்த்து சொன்ன பதிலை கேட்டு நாங்கள் எல்லாம் திகைத்துப் போனோம். ஆனால் அவர் கேஷூவலாக சொன்னார்.


“தலைவரே, நான் 18 வருசமா ஒன்றிய செயலாளார இருந்து, மினிட் நோட்ட சரியா வச்சிருந்தப்ப எல்லாம் நீங்க கேக்கலை. இப்ப நான் மெயிண்டெயின் பண்ணாதப்ப கேட்டா, நான் எங்க போறது?”

தலைவர் சிரித்து விட்டார், தலைவர் மட்டுமல்ல, உடன் இருந்த தலைமைக் கழக நிர்வாகிகளும். 

இது 2004 ஆம் ஆண்டு ஒவ்வொரு ஒன்றியக் கழகமாக, தலைவர் கலைஞர் அவர்கள் தலைமையில், தலைமைக் கழக நிர்வாகிகள், அண்ணா அறிவாலயத்தில் ஆய்வு மேற்கொண்ட போது நடைபெற்ற சம்பவம்.

இந்த பதிலை சொன்னவர் அன்றைய செந்துறை ஒன்றிய செயலாளர் அண்ணன் செல்லக்கண்ணு அவர்கள். 17.03.2015 அன்று மறைந்து விட்டார்.

1986-ல் உள்ளாட்சி மன்றத் தேர்தல். மூன்றாவது முறையாக முதலமைச்சராகிய எம்.ஜி.ஆர். அப்போது உள்ளாட்சியிலும் அதிமுகவே ஜெயிக்கும் என்று பேச்சு. ஆண்டிமடம் ஒன்றியத்தில் எனது தந்தை எஸ்.சிவசுப்ரமணியன் ஒன்றியப் பெருந்தலைவர் வேட்பாளர்.

செந்துறை ஒன்றியத்தில் அண்ணன் செல்லக்கண்ணு வேட்பாளர். எனது தந்தையார் சைக்கிளில் சென்று ஓட்டு கேட்டார். அண்ணன் செல்லக்கண்ணு மாட்டுவண்டியில் சென்று ஓட்டு கேட்டார். இருவரும் வெற்றி பெற்றார்கள், ஆளுங்கட்சியை எதிர்த்து, எம்.ஜி.ஆரின் “வெற்றி” பிம்பத்தை எதிர்த்து.

மிகச் சாதாரணக் குடும்பத்தில் பிறந்து, கழகத்தில் ஒன்றிய செயலாளர் ஆனதே பெரிய செய்தி. அதைத் தாண்டி மக்கள் வாக்களித்து ஒன்றியப் பெருந்தலைவர் ஆனது அவரது உழைப்பின் பலன். இந்தப் பதவிக்கு முன்பாக அவர் பட்ட அவஸ்தைகளே அதிகம்.

அப்போது நான் ஜெயங்கொண்டம் நகரத்தில் இரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். பள்ளி முடிந்து, ஆண்டிமடம் பஸ் பிடிக்கும் முன் வழக்கமாக எனது தந்தையாரின் வழக்கறிஞர் அலுவலகம் செல்வேன்.

அப்போது இரும்புலிக்குறிச்சி கிராமத்து திமுக தோழர்கள் அங்கு இருப்பார்கள். கண்டிஷன் பெயிலில் கையெழுத்து போடுவதற்காக வந்திருப்பார்கள். அவர்கள் ஒரு அண்டாவில் புளிசாதம் கிண்டி எடுத்து வந்திருப்பார்கள், ஹோட்டலில் சாப்பிடும் பொருளாதாரம் இல்லாததால். அந்தப் புளி சாதம் எனக்கு மிகவும் பிடித்தமானது. அவர்களின் தலைவர் அண்ணன் செல்லக்கண்ணு.

இரும்புலிக்குறிச்சியில் இருந்து, அதிமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளரை எதிர்த்து, எனது தந்தையாருக்காக தேர்தல் பணியாற்றியமைக்காக, அதே ஊரிலிருந்து பணியாற்றியதால், அண்ணன் செல்லக்கண்ணு தலைமையில் 50 பேர் மீது பொய் வழக்கு தொடர்ந்தது அன்றைய அதிமுக எம்.ஜி.ஆர் அரசு. அது 1977.

ஒரு வழக்கல்ல, இரு வழக்கல்ல மொத்தம் 15 வழக்குகள். அனைத்தையும் சந்தித்து கழகத்தின் தூணாக நின்றவர் அண்ணன் செல்லக்கண்ணு. அதனால் தான், அவர் ஒன்றிய செயலாளர், ஒன்றியப் பெருந்தலைவர், தலைமை செயற்குழு உறுப்பினர்.

இது மட்டுமே அவர் பெருமையல்ல. எத்தகைய சங்கடமான சூழ்நிலையாக இருந்தாலும், அங்கு அண்ணன் செல்லக்கண்ணு இருந்தால், அந்த இடம் லைவ்வாக இருக்கும். அவ்வளவு நகைச்சுவை, நக்கல் நிறைந்திருக்கும். யார், எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும் அவரது கண்ணுக்கு தப்ப முடியாது.

கூட்டணிக் கட்சிகள் டாமினேட் செய்தால் அவருக்கு பிடிக்காது, அதனை மிக அழகான வார்த்தைகளில் வெளிப்படுத்துவார்,”வாங்க, உங்க கட்சி இல்லாம நாங்க நடக்க முடியாது”. அவர்களே சங்கடப்படுவார்கள். பிடிக்காதவர்களை பார்க்க சொன்னால் சொல்வார்,”குட்டரோகிய கட்டிப்பிடிக்கனுமா?” அவ்வளவு வலிமையான வார்த்தைகள்.

அதே போல திருமணங்களுக்கு வாழ்த்துரை வழங்கினால் பாடல்களை "பாடித் தான்" வாழ்த்துவார். இரண்டு பாடல்கள். “நேற்று வரை நீ யாரோ, நான் யாரோ, இன்று முதல் நீ வேறோ, நான் வேறோ”. “விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே”.

சிறு வயதில் மேடை நாடகங்களில் நடித்தவர். அதன் தாக்கம் அவரிடத்தில் இருக்கும். வெளிப்படும் வார்த்தைகள் சுற்றி இருப்போரை சிரிக்க வைக்கும். கலகலப்பாக வைத்திருப்பார். 

தலைவர் கலைஞர், தளபதி ஆகியோரின் அன்பை பெற்றவர். செய்தி கேட்டவுடன் டெல்லியில் இருந்த, அண்ணன் ஆ.ராசா துடித்துப் போனார், வர முடியவில்லை என்று. அண்ணன் கே.என்.நேரு பல்வேறு பணிகளுக்கு இடையில் வந்து அஞ்சலி செலுத்தினார். நாங்கள் நாள் முழுதும் அங்கேயே இருந்து இறுதி மரியாதை செலுத்தினோம்.

அண்ணன் செல்லக்கண்ணு அவர்களது மகன் இளஞ்செழியன். இப்போது ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர். ஊராட்சிமன்றத் தலைவர். என்றும் துணை நிற்போம் செழியனுக்கு .

‪#‎விண்ணோடும்‬, முகிலோடும் விளையாட சென்றாரோ அண்ணன் செல்லக்கண்ணு !

புதன், 18 மார்ச், 2015

போராடித் தான் ஆகணும்...

போராட்டம்லாம் வேஸ்ட், சும்மா விளம்பரதுக்கு பண்றது, அரசியல் ஸ்டண்ட் இப்படின்னு பலருக்கு எண்ணம்.

அவர்கள் கவனத்திற்கு...

05.03.2015 அன்று அரியலூரில், பள்ளிக் குழந்தைகள் சென்ற வேன் மீது, சுண்ணாம்புக்கல் ஏற்றிய லாரி மோதியதில் இரண்டு குழந்தைகள் உட்பட நான்கு பேர் உயிரிழந்தனர்.


06.03.2015. இறந்த குழந்தைகள் பெற்றோருக்கு ஆறுதல் சொல்ல சென்றோம். அப்போது அங்கு குழுமிய இளைஞர்கள், திமுக இதற்கான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்கள்.

07.03.2015. ஏற்கனவே முந்திரிக்கு வறட்சி நிவாரணம் வழங்க வலியுறுத்தி 10.03.2015 தேதி ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்ததால், சாலை விபத்துகளை தடுக்க வலியுறுத்தி 12.03.2015 அன்று ஆர்ப்பாட்டம் நடத்த காவல்துறையிடம் அனுமதி கோரப்பட்டது.

08.03.2015. அரியலூரில் இருந்து கைக்காட்டி செல்லும் சாலையில் விளாங்குடி அருகே சிமெண்ட் பல்க் லோடர் லாரி மோதி, டாடா 407 தலைக்குப்புற கவிழ்ந்தது. ஓட்டுனர் மருத்துவமனையில். நானே நேராக பார்த்தேன்.


09.03.2015. ஆர்ப்பாட்டத்திற்கான கோரிக்கைகளை பட்டியலிட்டு, துண்டறிக்கை வெளியிடப்பட்டது. மாவட்ட நிர்வாகத்திற்கு வழங்கப்பட்டது.

         

10.03.2015. ஆண்டிமடம் கடைவீதியில், சிமெண்ட் லாரி மோதி, பைக்கில் சென்ற 25 வயது இளைஞர் பலி.

10.03.2015. தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம்.

11.03.2015. பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம்.

12.03.2015. காலை 11.00 மணி. அரியலூரில் ஆயிரக்கணக்கான கழகத் தோழர்களுடன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. துண்டறிக்கையில் உள்ள கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கம் எழுப்பப்பட்டது.

   

"இதுவரை நடவடிக்கை எடுக்க முன்வராத மாவட்டம் நிர்வாகம் இனியும் தூங்கினால், நாங்களே நடவடிக்கையில் இறங்க வேண்டியிருக்கும்" என மாவட்ட திமுக சார்பாக எச்சரித்தேன்.

நண்பகல் 01.30 மணி. அரியலூர் புறவழிச்சாலையில் நின்று, அரியலூர் சப்-கலெக்டர் சுண்ணாம்புக்கல் ஏற்றி வந்த லாரிகளை ஆய்வு செய்ய ஆரம்பித்தார்.

13.03.2015. சுண்ணாம்புக்கல் சுரங்கங்களை சப்-கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்தார்.


இதற்கு பிறகு தான், மாவட்ட ஆட்சித் தலைவர் நடவடிக்கை எடுக்கும் எண்ணத்திற்கு வந்தார். பத்திரிக்கையாளர்களிடம் கருத்து கேட்டிருக்கிறார்.

இரவு 11.55. தா.பழூர் பொதுக்கூட்டம் முடித்து வந்தோம். அரியலூர் புறவழிச்சாலையில் கல்லங்குறிச்சி பிரிவில், ஜே.சி.பி இயந்திரம் வைத்துத் தோண்டிக் கொண்டிருந்தனர்.

14.03.2015. "அரியலூர் புறவழிச்சாலையில் செந்துறை பிரிவில் செட்டிநாடு சிமெண்ட்ஸ் நிறுவனம் நிரந்தர ரவுண்டானா அமைக்கிறது, கல்லங்குறிச்சி பிரிவில் டால்மியா சிமெண்ட்ஸ் நிறுவனம் நிரந்தர ரவுண்டானா அமைக்கிறது. மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு." தி இந்து பத்திரிகை செய்தி.

முதல் கோரிக்கையில் இரண்டு ரவுண்டானா நிறைவேறி இருக்கிறது.

"ஒரு மாதத்திற்கு சுண்ணாம்புக்கல் ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு தடை. உரிமங்கள் ரத்து. ஆய்வு செய்யப்படும். மாவட்ட ஆட்சித்தலைவர் அறிக்கை"

எண் 2 மற்றும் எண் 3 ஆகியக் கோரிக்கைகளுக்கு, இதன் மூலம் தீர்வு காணப்படும் என எண்ணுகிறேன்.

இறந்த பச்சிளம் குழந்தைகளின் குடும்பத்திற்கு நிவாரணம் அறிவிக்க இத்தனை நாட்கள் கடந்தும் அரசுக்கு மனம் வராதது தான் வேதனையாக உள்ளது.

கடந்த ஆண்டு 13 பேரை கொன்ற ஓட்டக்கோவில் கிராமத்தில், அரசு பேருந்து மீது சிமெண்ட் லாரி மோதி ஏற்பட்ட விபத்திற்கு பிறகு நடவடிக்கை எடுத்திருந்தால் கூட, அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு உயிரிழப்புகள் தடுக்கப்பட்டிருக்கும்.

மெல்ல கண் விழித்திருக்கிறது மாவட்ட நிர்வாகம் . இன்னும் அரசுக்கு தூக்கம் கலைய வேண்டும்.

ஆடிக் கறக்கிற மாட்டை ஆடிக் கறக்கனும், பாடிக் கறக்கிற மாட்டை பாடிக் கறக்கனும் - பழமொழி.

இந்த மாட்டை அடித்து தான் கறக்கனும். போராட்டமே தீர்வு !