பிரபலமான இடுகைகள்

பெரியார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பெரியார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 18 செப்டம்பர், 2014

1928-லேயே அய்ரோப்பா பார்லிமெண்டில் பேசப்பட்டவர்...

“ திரு. நாயக்கரைப் பற்றி நான் அதிகம் சொல்ல வேண்டியதில்லை. அவரைப் பற்றி அய்ரோப்பாவிலே உள்ள பார்லிமெண்டில் பேசப்படுகிறது என்றால், நாயக்கரின் புகழைப் பற்றி நான் என்ன சொல்வது?

திரு. நாயக்கரிடத்திலுள்ள விசேஷ குணம் என்னவென்றால், மனதிற்குபடும் உண்மைகளை ஒளிக்காமல் சொல்லும் ஓர் உத்தம குணந்தான். அவரை எனக்கு 20 வருடமாய் தெரியும்.

அவரும் நானும் ஒரே இயக்கத்தில் சேர்ந்து வேலை செய்து வந்தோம். அந்த  இயக்கத்தில் (காங்கிரஸ்) நேர்மையற்றவர்கள் சிலர் வந்து புகுந்த பின், நானும் அவரும் விலகிவிட்டோம்.

பிறகு நாயக்கர் அவர்களால் ஆரம்பித்து நட்த்தப் பெறும் சுயமரியாதை இயக்கத்தைப் பார்த்து, இது எல்லா இயக்கத்திலும் நல்ல இயக்கமாயிருப்பதால், நானும் என்னாலான உதவியை அவ்வியக்கத்திற்கு செய்து வருகிறேன்.

சுருங்கச் சொல்லின், நாயக்கரவர்கள் தமிழ்நாட்டின் எல்லாத் தலைவர்களையும் விடப் பெரிய தியாகி என்று தான் சொல்ல வேண்டும்.

மேலே குறிப்பிடப்படும் நாயக்கர் யார் என்று கண்டுபிடித்திருப்பீர்கள். பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் தான், நாயக்கர் என்று அன்னியோன்யமாக குறிப்பிடப்பட்டுள்ளார்.

இவ்வளவு அன்போடு குறிப்பிட்டவர் கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரம் அவர்கள். இந்தக் கருத்தை வெளிப்படுத்திய ஆண்டு 1928.

1928-லேயே அய்ரோப்பாவில் உள்ள பார்லிமெண்டில் பிரிட்டிஷின் அடிமை தேசமான இந்தியாவின் ஒரு கடைகோடியில் இருக்கிற தமிழகத்தின் பிரமுகரைப் பற்றி பேசியிருக்கிறார்கள் என்றால் அவர் ஏற்படுத்திய அதிர்வு எத்தகையதாக இருந்திருக்கும்?

அது வரை காங்கிரஸ் இயக்கத்தில் பணியாற்றி வந்தவர், 1925 காஞ்சி காங்கிரஸ் மாநாட்டிலேயே “இனி காங்கிரஸை ஒழிப்பதே என் முதல் வேலை என்று முரசறிவித்து வெளியேறினார்.

பின் குடியரசு பத்திரிக்கையை துவங்கி சுயமரியாதைக் கொள்கையை வலியுறுத்தி எழுத ஆரம்பித்தார். வருணாசிரமக் கொள்கையை கடுமையாக எதிர்க்க ஆரம்பித்தார். இந்த ஆரம்பக் கட்ட்த்தில் தான் வ.உ.சி, பெரியாரை மேற்கண்டவாறு பாராட்டினார்.

1928-க்கு பிறகு பெரியார் ஆற்றிய பணி அளவிட இயலாதது. அவற்றை எல்லாம் படித்தால் தான் பெரியாரின் பெருமையை உணர முடியும். 1928-லேயே அய்ரோப்பா பார்லிமெண்டில் பேசப்பட்ட அவரது வரலாற்றை நாம் 2015-லாவது படித்திருக்க வேண்டும்.


# தந்தை பெரியார் 136-வது பிறந்தநாள் ! 

திங்கள், 18 பிப்ரவரி, 2013

சர்நேம் ( surname ) ஏமி ?

ஹைதராபாத் Croma showroom சென்றேன், மடிக்கணினிக்கு இணைப்பு சரடு வாங்கினேன்.

பணம் செலுத்துமிடம் வந்தேன். காசாளர் தொகையை சொன்னார், கொடுத்தேன்.

கணினியை தட்டியபடியே கேட்டார், " பேரு செப்பண்டி ? "

" சிவசங்கர் " என்றேன்.

" சர்நேம் ( surname ) ஏமி ? " 

( சர்நேம் - சாதி பெயர், ஆந்திராவில் எல்லோருடைய பெயருக்கும் பின்னால் கண்டிப்பாக சாதி பெயர் இருக்கும் )

" சர்நேம் லேது "

" எந்த ஊர் ?"

" தமிழ்நாடு "

" அங்க யாருக்கும் சர்நேம் கிடையாதா ? " என்று கேட்டார்.

" மிகக் குறைந்த பேருக்கு உண்டு "

" அப்போ உங்களுக்கு கிடையாதா ? "

" உண்டு. பெரியார் "

புரியாமல் பார்த்தார்...


திங்கள், 4 பிப்ரவரி, 2013

அன்பிற்குரிய இஸ்லாமிய சகோதரர்களே...


அன்பிற்குரிய ( விஸ்வரூபத்தால் மனவலிக்கு உள்ளாகியிருக்கும்) சகோதரர்களே,

அஸ்சலாமு அலைக்கும் ( சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக )..

விஸ்வரூபம் பிரச்சினையின் "உண்மைரூபத்தை" தற்போது அறிந்திருப்பீர்கள்.

நீதிமன்ற நடவடிக்கைகளை கவனித்தவர்களுக்கு அரசின் உள் நோக்கம் புரிந்திருக்க வேண்டும்.

விஸ்வரூபம் திரைப்படத்தை ஜெ தொலைக்காட்சி விலை பேசிய போது அரசின் தலைமைக்கு இந்தப் படத்தின் கருவும் காட்சியமைப்பும் தெரியாதா ?

அரசின் தலைமை வேறு, ஜெ டிவியின் தலைமை வேறா ?

அப்போதே தடை செய்யும் எண்ணம் வரவில்லையே, ஏன் ?

திரையரங்க உரிமையாளர்களோடு கமலஹாசனுக்கு பிணக்கு ஏற்பட்ட போதும் அமைதி காத்தார்களே...

டி.டி.ஹெச் மூலமாக வெளியிட முயற்சி நடந்த போது தானே பிரச்சினை வெடித்தது. காரணம், கை நழுவி போகும் என தானே ?

அதற்கு பிறகு இஸ்லாமிய அமைப்புகளின் போராட்டத்தை லாகவாகமாக சுயநலத்திற்கு பயன்படுத்திக் கொண்டது யார் ?

நீங்கள் போராடியதால் இந்த அரசு தடை விதித்ததா என சிந்தியுங்கள்....

நீங்கள் போராடிய மற்ற எந்த விசயத்தில் இந்த அரசு காது கொடுத்து கேட்டது ?

" இன்னொஸன்ஸ் ஆப் முஸ்லிம்" என்ற ஆங்கில திரைப்படத்தை எதிர்த்து அண்ணா சாலையில் போராட்டம் நடத்திய போது இந்த அரசு எப்படி கையாண்டது ?

நீங்கள் போராடியதற்காக இந்த அரசு தடை விதிக்கவில்லை.

ஆட்சியாளர்களின் தனிப்பட்ட வெறுப்புகளின் வெளிப்பாடு அது.

ஜெயா தொலைக்காட்சியின் லாப நட்டக் கணக்கு அது.

நடந்தது உங்களுக்கும் கமலுக்குமான பிரச்சினை அல்ல,

ஜெயா தொலைக்காட்சிக்கும் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்திற்குமான பிரச்சினை.

இதில் கருத்து தெரிவித்த எங்களையொத்த நண்பர்களின் கருத்தை நீங்கள் மதத்திற்கு எதிரான கருத்தாகக் கொண்டீர்கள்.

இதை போன்ற பல படங்கள் ஏற்கனவே வந்துவிட்டன, இனியும் வரத்தான் செய்யும்.

தன்னை மனிதனுக்குரிய அடையாளம் பெற வைத்த பெரியாரையே, விமர்சனம் செய்கிற புத்திசாலிகளும் நடமாடிக் கொண்டிருக்கின்ற காலம் இது.

விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் என யாரும் கிடையாது.

இது போன்ற படங்கள் வந்த போதும், கோவை போன்ற சம்பவங்கள் நடந்த பிறகும் சகோதரத்துவம் எங்கும் குலைந்து விடவில்லை.

அனைவருக்கும் தெரியும், ஒரிருவர் செய்கிற காரியங்களுக்கு, ஒட்டுமொத்தமாக எல்லோரும் குற்றவாளியாகிவிடமாட்டார்கள்.

அதேபோல ஒரு திரைப்படம் சொல்வதால், அனைவரையும் தீவிரவாதியாக பார்த்துவிடமாட்டார்கள்.

இப்போதும் சொல்கிறோம், எப்போதும் சொல்வோம் நாங்கள் உங்களின் சகோதரர்கள்,

உண்மையானவர்களை உணருங்கள். ஒரிரு இடத்திற்காக குரலை மாற்றி ஒலிக்க தயங்காதவர்களின் குரலை எதிரொலிக்காதீர்கள்.

நடந்த அத்தனை திடுக்கிடும் திருப்பங்கள் நிறைந்த நாடகக் காட்சிகளை பார்த்து ரசித்திருப்பீர்கள்.

கலையின் பெயராலோ, கருத்து சுதந்திரத்தின் பெயராலோ காவி நுழைய இடம் கொடுத்துவிடாதீர்கள்.

ஜெ, ஜெ-வாகத் தான் இருப்பார். கமல், கமலாகத் தான் இருப்பார். நாம் என்றும் நாமாக இருப்போம்.

மீண்டும் சொல்கிறேன், எதிர் கருத்தை எதிர்க்கவில்லை. அதை யார் பயன்படுத்திக் கொள்வார்கள் என்பதை உணருங்கள் எனத்தான் சொல்கிறோம்.

அன்போடு...
பெரியாரின் பேரன்
சிவசங்கர்.

வியாழன், 8 நவம்பர், 2012

நூறாண்டு கண்ட கழக இளைஞர் !


கழகத்தில் ஒன்றிய செயலாளர் என்ற பொறுப்பு ஏற்படுத்தப் பட்ட போது, அரியலூர் மாவட்டம், செந்துறை ஒன்றியத்தின் முதல் ஒன்றிய கழக செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் திரு. மு.கந்தசாமி. தொடர்ந்து நான்கு முறை ஒ.செ-வாக பணியாற்றியவர்.

6.10.2012 அன்று நூறாவது பிறந்தநாளை கொண்டாடினார். 1913 ஆம் ஆண்டு பிறந்தவர். ஆனால் இன்றைக்கும் இளைஞராக செயல்படுபவர்...


பள்ளிப்பருவத்திலேயே அரசியல் மீது ஆர்வம் திரும்பியது. பெரியார் பாதையை ஏற்றார்.

வீட்டில் திருமணப் பேச்சுதுவங்கியதும், ஒரே ஒரு நிபந்தனை மட்டும் விதித்தார், “தனது திருமணம் சுயமரியாதை திருமணமாக இருக்க வேண்டும் .

அதன்படி 1936 ஆம் ஆண்டு, திருச்சி மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் வேதாச்சலனார் தலைமையில் சுயமரியாதை திருமணமாக நடைபெற்றது. சுயமரியாதை திருமணத்திற்கு கடும் எதிர்ப்பு நிலவிய நேரம் அது.

1943 ஆம் ஆண்டு பெரியாரை அழைத்து வந்து, பகுத்தறிவு விழிப்புணர்வு பிரச்சாரமாக 51 பேர் பங்கேற்ற “ தீமிதிப்பு “ நிகழ்ச்சியை நடத்தினார். அதில் கரகம் சுமந்து, பகுத்தறிவு பூசாரியாக தலைமையேற்றார்.

1948 ஆம் ஆண்டு சொந்தமாக வீடு கட்டிய போது, முகப்பில் தந்தைப் பெரியார் படத்தை வரைந்து, “ திராவிடநாடு திராவிடருக்கே; தமிழ் வெல்க என்ற முழக்கத்தை செதுக்கியுள்ளார்.

அரியலூர் மாவட்டம், நக்கம்பாடி என்னும் கிராமத்தில் ஊராட்சிமன்ற உறுப்பினராக தனது பொது வாழ்வை துவக்கியவர். மூன்று முறை ஊராட்சி மன்ற உறுப்பினர். தொடர்ந்து மூன்று முறை ஊராட்சி மன்ற தலைவர்.

40 ஆண்டுகளாக, இன்றும் செந்துறை அரசு மேல்நிலைப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர். அதன் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றி வருபவர்.

இன்றும் கழக நிகழ்ச்சி என்றால் ஆர்வத்தோடு பங்கேற்பவர், அது பொதுக்கூட்டம் என்றாலும், போராட்டம் என்றாலும். நேற்று உறுப்பினர் உரிமைச் சீட்டு வழங்கும் நிகழ்ச்சியில் முதல் நபராக வந்து பெற்றுக் கொண்டார்.





நூறாவது பிறந்த நாளை தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா சிலைகளுக்கு மாலை அணிவித்துக் கொண்டாடினார்.கழகத் தோழர்கள் கலந்துக் கொண்டு, அவரது கழகப் பணிக்கு நன்றி தெரிவித்தோம். வாழ்த்தினோம்.

அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து விட்டு படிகளில் இறங்கும் பொழுது, தோழர்கள் அவரைப் பார்த்து, “ சாக்கிரதை, மெதுவாக இறங்கவும் என பதட்ட்த்தோடு சொல்ல,

“ பயப்படாதீர்கள், எதற்கு பயப்படுகிறீர்கள் ? “ என்று சொல்லிவிட்டு கையை உயர்த்தி ஓங்கிய குரலில் பாட ஆரம்பித்தார், (நிஜமாகவே) .... (  படத்தை காணவும் )




# அச்சம் என்பது மடமையடா, அஞ்சாமை திராவிடர் உடமையடா...
    ஆறிலும் சாவு, நூறிலும் சாவு; தாயகம் காப்பது கடமையடா....