பிரபலமான இடுகைகள்

செவ்வாய், 23 ஜூலை, 2013

கொத்தமல்லி தழை நறுக்கிய M.E மாணவ்ர்

"சூடான மிளகு ரசம் ரெடி" என்ற அறிவிப்பு கண்ணில் பட்டது. முன்புறம் சிறிய கீற்றுக் கொட்டகையுடன் கூடிய கடையாக இருந்தது. ஒருவர் இரண்டு டம்ளர்களை வைத்து ஆற்றிக் கொண்டிருந்தார்."வித்தியாசமாக இருக்கிறதே, நம் ஊரில் மிளகு ரசம் வியாபாரமாகுமா?" என்று காரில் இருந்தவர்களிடம் கேட்டேன். "நல்ல வியாபாரம், நல்லா இருக்கும். ஏற்கனவே ஒரு முறை இங்கிருந்து தான் உங்களுக்கு, உளுத்தங்கஞ்சி வாங்கிக் கொடுத்தோம்" என்றார் பொதுக்குழு செல்வராஜ்.

தாலுக்கா தலைநகரான சிறு நகரமான செந்துறையில் இது போன்ற வித்தியாசமான கடையை எதிர்பார்க்கவில்லை. ரயில் நிலையம் செல்லும் வழியில் அமைந்திருக்கிறது.

சரி, சாப்பிட்டு தான் பார்ப்போம் என்று இறங்கினோம். 10x7 அளவேயுள்ள கடையில் மூன்று பேர் தீவிரமாக இயங்கிக் கொண்டிருந்தனர். சூப் ஆற்றிக் கொண்டிருந்தவரின் மனைவி பகோடா மாவு தயார் செய்ய, ஒரு இளைஞர் கொத்தமல்லி தழை நறுக்கிக் கொண்டிருந்தார். சொற்பொழிவாளர் பெருநற்கிள்ளி "சூடா ரசம் கொடுங்க" என ஆர்டர் செய்தார். "இப்போ சூடா கொள்ளு சூப்பு ரெடியாயிட்டு இருக்கு. சாப்பிடறீங்களா ?" என்றார். "அதுவும் உடம்புக்கு நல்லது தானே, கொடுங்க" என்றார் ஒன்றிய செயலாளர் ஞானமூர்த்தி. 

"ஆமாம், உடம்புக்கு நல்லது. கொள்ளை முளக்க வைத்து, வேக வைத்து சூப் தயார் செய்கிறோம்" என்றார். "வேறு என்ன சூப் இருக்கிறது ?" "தினம் ஒரு சூப் சார். காளான் சூப், முருங்கைக்கீரை சூப் என" 

"காலை, மாலை சூப்பும், மதியம் குஸ்காவும், மாலையில் முட்டைகோஸ், காலிஃப்ளவர் பகோடா என குறிப்பிட்ட ஐட்டம் மட்டுமே போடுகிறோம்" என்றார். உடன் வந்தவர்கள் "அதுவும் குறிப்பிட்ட நேரத்திற்குள் முடிந்துவிடும். தேடி வந்து சாப்பிட்டுகின்றனர்" என்றார்கள்.பெருநற்கிள்ளி அவரை உற்றுப்பார்த்து "மருதமுத்து தானே" என்று கேட்டார். "ஆமாம் வெளிநாடு சென்று வந்த பிறகு இந்தக் கடை திறந்து ஒரு வருடமாகிறது" என்றார் மருதமுத்து. "இவர் என் மகன்" என அறிமுகப்படுத்தினார் கொத்தமல்லித்தழை நறுக்கிய இளைஞரை.

"என்ன செய்யறீங்க ?"என்றேன். "M.E படிக்கிறேன் சார்." "எங்கே படிக்கிறீங்க" "காரைக்குடி அழகப்பா". அவர் கரம் பற்றிக் குலுக்கினேன்."இது M.E படிப்பதற்காக அல்ல, M.E படித்தாலும் அப்பாவிற்கு உதவியாக இந்தப் பணி செய்வதற்காக". எல்லோரும் பாராட்டினார்கள். "சார், +2ல் அதிக மதிப்பெண் வாங்கிய போது நீங்க பரிசு கொடுத்தீங்க" என நினைவு கூர்ந்தார் செந்தமிழன்.

வழக்கமான தொழில் செய்து உழலாமல் வித்தியாசமான வியாபாரம் செய்து முன்னேறும் தந்தை, தொழிலில் பங்கேற்று உழைக்கும் தாய், படிக்கும் படிப்பை பாராமல் பெற்றோருக்கு உதவியாய் உழைக்கும் மகன்....

# நல்லதொரு குடும்பம் !


ஞாயிறு, 21 ஜூலை, 2013

வாலி ஓய்ந்திருக்கலாம்...

"நீங்க நல்லாயிருக்கோணும் நாடு முன்னேற இந்த
நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற
என்றும் நல்லவங்க எல்லாரும் ஒங்க பின்னாலே நீங்க
நெனச்சதெல்லாம் நடக்குமுங்க கண்ணு முன்னாலே"

எம்.ஜி.ஆரின் பொதுவாழ்வை உச்சத்தில் தூக்கி வைத்தப் பாடல் இது தான். பட...்டுக்கோட்டை, கண்ணதாசன் போன்றோர் எம்.ஜி.ஆருக்கு கொள்கைப் பாடல்கள் எழுதி அவரது பிம்பத்தை தொடர்ந்து கட்டமைத்து வந்தார்கள்.

ஆனால் எம்.ஜி.ஆர் என்ற தனி மனிதரின் மீது ஈர்ப்பு வருகிற அளவிற்கான பாடல்களை எழுதியவர் வாலி தான். பிற்கால எம்.ஜி.ஆர் பாடல்கள் எளிய தமிழில், கேட்கும் போதே துள்ளலை ஏற்படுத்தி ரசிகனை இழுத்து உள்ளே போட்டதற்கு காரணம் வாலியின் வார்த்தைப் பிரயோகம் தான்.

பல போட்டியாளர்கள் வந்த போதும், சிறிதும் தம் இடத்தை நழுவ விடாமல் இன்றைய தேதி வரை இளமை குன்றாமல் சீனில் இருந்தவர். சினிமா பாடல்கள் மட்டும் இல்லாமல் கவிதையிலும் களை கட்டியவர். அதிலும் அவரது எதுகை-மோனை மிகவும் ரசனைக்குரியது. அட நாமும் இது போல எழுதலாமே என தோண வைக்கும், ஆனால் முடியாது. அதுவே அவரது தனித்தன்மை.

ஆங்கிலமும், தமிழையும் கலந்துகட்டி விலாசும் பாங்கு, என்ன என்றே புரியாத வார்த்தைகளை போட்டு அதையும் ஹிட்டாக்கியது என ஒரு வித்தியாசமான பாடலாசிரியர்.

அவரது புகழ்பெற்ற “லாலாக்கு டோல் டப்பிமா” அர்த்தம் புரியாமலே மெகா ஹிட். .எம்.எஸ்.விஸ்வநாதன் முதல் இன்றைய தலைமுறை இசையமைப்பாளர்கள் ஏ.ஆர்.ரகுமான் வரை யாருடைய இசைக்கும் பொருந்திய வார்த்தைகள் அருவியாய் கொட்டியது.

எப்படி எல்லா இசை அமைப்பாளர்களோடும் பொருந்திப் போனாரோ, அப்படி அனைத்து அரசியல்வாதிகளுடன் அலாதியான நட்பு கொண்டவர். கலைஞருடனான நட்பை சிலாகிப்பவர். கடந்த முறை உடல்நலம் குன்றிய போது, கலைஞரின் உதவியை மறவாமல் குறிப்பிடுபவர்.

சமீபகால பாடல்களில், தசவாதாரம் படத்தில் இடம் பெற்ற "முகுந்தா, முகுந்தாவும், கல்லை மட்டும்" பாடல்களின் ஹிட் அவரது தமிழின் வலிமையையும், இளமையும் உறுதி செய்தது.

# வாலி ஓய்ந்திருக்கலாம், இறைத்து ஊற்றிய தமிழ் நதியாய் ஓடிக்கொண்டேயிருக்கும்....


மூன்று முறை எம்.எல்.ஏ, அமைதியாகவே இருப்பார்...

இந்த மாதம் 5-ம் தேதி தான் அவரோடு பேசும் வாய்ப்புக் கிடைத்தது. அதற்குள் அவர் மறைவு செய்தி கிடைக்கும் என நினைக்கவில்லை. ஏற்காடு சட்டமன்ற உறுப்பினர் பெருமாள் மாரடைப்பால் காலமாகியிருக்கிறார்.

4-ந் தேதி சட்டமன்றக் குழுவான, பொது நிறுவனங்கள் குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ள ஏற்காடு சென்ற போது, பெருமாள் அவர்கள் கலந்துக் கொள்ளவில்லை. மறுநாள் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு தான் வந்தார்.

"உங்க ஊருக்கு நாங்கள் வந்தப்போது, எங்கே போனீர்கள்" என்று அவரது சக அதிமுக எம்.எல்.ஏக்கள் கிண்டல் செய்த போது, புன்னகையோடு "அவசரமா சென்னை போய் வந்தேன்" என பதிலளித்தார். கூட்டம் முடிந்தவுடன் கிளம்பும் போது எனக்கும் வணக்கம் சொல்லி விடைபெற்றார்.

"சாப்பிடலையாண்ணே ?" என்று கேட்டேன். "ஒரு நிகழ்ச்சிக்கு போகனும்" என்று விடைபெற்றார். இப்போது தான் தெரிகிறது, மூன்று முறை எம்.எல்.ஏ. எளிமையாகவே பழகினார். அமைதியாகவே இருப்பார்.

# ஆழ்ந்த இரங்கல்கள்.
 
 

செவ்வாய், 16 ஜூலை, 2013

குழந்த அண்ணன் அழறாரு...

நிறைய பேரு நான் அண்ணன்னு கூப்பிட்டா வயசு குறைவுன்னு பதறுறாங்க.... ஒரு மரியாதை தான்.

எங்க அண்ணன் ஒருத்தர் இருக்கார், அவர பத்தி சொன்னா தான் இவங்க சரியா வருவாங்க...
 அவர் பேர் கிருஷ்ணமூர்த்தி. குன்னம் தொகுதியில் உள்ள ஆலத்தூர் ஒன்றிய கழக செயலாளர். ஏழு முறை ஒன்றிய செயலாளர். உள்ளாட்சி நிர்வாகத்தில் தொடர்ந்து மக்கள் பிரதிநிதி. மக்களின் அன்பை பெற்றவர்.

அவர் எல்லோரையும் அண்ணன்னு தான் கூப்பிடுவாரு, தன்னை விட வயது குறைந்தவர்களையும். முன்னாள் அமைச்சர் அண்ணன் கே.என்.நேரு அவர்களின் மச்சினர்.

ஒரு முறை மீன்வளத் துறை அமைச்சராக இருந்த கே.பி.பி.சாமி எங்கள் பகுதியில் சுற்றுப்பயணத்தில் இருந்தாரு. அவரை வரவேற்று அண்ணன் கிருஷ்ணமூர்த்தி சால்வை அணிவித்து, “ வாங்க அண்ணே” அப்படின்னாரு. அவரு நெளிஞ்சிகிட்டே “என்னண்ணே உங்க வயசுக்கு என்னை அண்ணன்னு கூப்புடறிங்க”ன்னாரு. “அது பழக்கமாயிடுச்சிண்ணே” அப்படின்னாரு நம்ம அண்ணன்.

சாமி ”என்னை அப்படி கூப்புடாதீங்கண்ணே”ன்னு சொல்ல, நம்ம அண்ணன் அதுக்கும் “சரிண்ணே”ன்னு பதில் சொல்ல, அமைச்சர் சாமியால சிரிப்ப அடக்க முடியல. அண்ணனும் சிரிச்சிட்டாரு. அப்ப நம்ம அண்ணன் கிருஷ்ணமூர்த்தி பத்தி ஒரு செய்தி எங்க பக்கத்தில உண்டுன்னு சொல்லி “அதை” சொன்னேன். மந்திரியும் கூட வந்தவங்களும் சிரிச்சு சிரிச்சு ஓய்ஞ்சு போனாங்க.

அப்புறம் திராவிடர் கழகத் தலைவர் சுற்றுபயணம் வந்த போது, “கிருஷ்ணமூர்த்தி ரொம்ப மரியாதையானவரா இருக்காரே’ன்னு கேட்க, அய்யாகிட்டயும் “அந்த செய்தி”யை சொன்னேன். “இனி கிருஷ்ணமூர்த்திய மறக்க முடியாதுய்யா” அப்படின்னு அய்யா சொல்லி சிரிச்சாங்க.

பத்து மாதங்களுக்கு முன்பு நம்ம அண்ணன் கிருஷ்ணமூர்த்தி மகள் திருமணம் தளபதி ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடந்தது. வாழ்த்துரை வழங்கிய எல்லோரும் கிருஷ்ணமூத்தி அண்ணனை பெருமையா சொல்லி “வயதில் குறைந்தவர்களையும் அண்ணன்னு கூப்பிடுவாரு”ன்னு பாரட்டினாங்க.

நான் வாழ்த்தும் போது “அந்த செய்தியை” சொல்லி வாழ்த்தினேன். திருமணத்தில் இருந்த எல்லோரும், தளபதி உள்பட சிரிக்க, நம்ம அண்ணனும் கண்ணில் தண்ணி வர சிரிச்சாரு.

“ அண்ணன் கிருஷ்ணமூர்த்தி எல்லோரையும் அண்ணன்னு கூப்பிடுவாருங்கறது தெரிஞ்ச விஷயம். அவர் பத்தி எங்க பக்கம் ஒரு செய்தி உண்டு. ஒரு நாள் அண்ணன் கார்ல போயிகிட்டிருந்தாரு. ஒரு இடத்துல வயல்ல நிறைய பேரு வேலை செஞ்சிக்கிட்டிருந்தாங்க.

வயல் ஓரமா ஒரு மரத்துல தூளி கட்டி ஒரு குழந்தைய படுக்க வச்சிருந்தாங்க. அந்த இடத்த அண்ணன் கார் கிராஸ் பண்றப்ப, அந்தக் குழந்த அழுதுகிட்டுருந்துது. உடனே அண்ணன் வண்டிய நிறுத்த சொல்லி இறங்கினாரு.

வயல்ல வேலை செஞ்சிக்கிட்டு இருந்தவங்கள பார்த்து, ”ஏம்மா, அண்ணன் அழுதுகிட்டு இருக்காரு, வந்து தூக்குங்கம்மா” அப்படின்னு சொல்ல, அந்த குழந்த அண்ணனே அழுகைய நிறுத்திட்டு சிரிக்க ஆரம்பிச்சிட்டாரு”

# இப்ப சொல்லுங்கண்ணே, அண்ணேன்னு நான் கூப்பிடறது சரிதானேண்ணே ?

திங்கள், 15 ஜூலை, 2013

ஆணும் பெண்ணும் சமம்...

அது எனக்கு திருமண மேடையாகத் தோன்றவில்லை. திராவிடர் கழகத்தின் நிர்வாகக் குழு கூட்டம் போலவே இருந்தது. திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, செயலவைத் தலைவர் அறிவுக்கரசு, பொதுச்செயலாளர்கள் துரை.சந்திரசேகர், செயக்குமார் மற்றும் பல நிர்வாகிகள் என மேடை நிறைந்திருந்தது.

சகோதரர் எழிலரசன் திருமண மேடை. தி.க மாணவரணியின் நிர்வாகி. அவரது தந்தையார் திருச்சி மண்டல தி.க செயலாளர் அண்ணன் காமராஜ் அவர்கள். எங்கள் பகுதியில் தொய்வின்றி பணியாற்றி வருபவர். ஒரு முறை ஊராட்சி மன்ற தலைவராக பணியாற்றியவர்.

இவர்களது சமூகப்பணியின் சான்றாகத்தான், திருமண விழா மேடை திராவிடர் கழக நிர்வாகிகளாலும், விழாக் கூடம் தொண்டர்களாலும் பொதுமக்களாலும் நிரம்பியிருந்தது.

வேறு சில திருமணங்களில் பங்கேற்று சென்றதால், தாமதமாகத் தான் சென்றேன். அய்யா வீரமணி அவர்கள் வாழ்த்துரை வழங்கிக் கொண்டிருந்தார்கள். அமர்தியசென் தன் புத்தகத்தில் தந்தை பெரியார் அவர்களை மேற்கோள் காட்டியிருப்பதை எடுத்துக் கூறி, பெரியாரின் கொள்கைகள் உலகலாவி சென்றுள்ளதை எடுத்துரைத்தார்.

வாழ்க்கை இணையேற்பு நிகழ்வினை நடத்தி வைத்தார். மங்கலநாணுக்கு பதில் சங்கிலி மாத்திரம் அணிவித்து திருமணம். ( இதுவும் பெண் வீட்டார் விருப்பத்திற்காக இருக்கும் என நினைக்கிறேன்.) சங்கிலியில் ஒரு டாலர், அதில் இருவர் பெயரும் பொறித்து.

அடுத்து நடந்தது தான் ஹைலைட். இப்போது மணமகள் ஒரு சங்கிலியை மணமகனுக்கு அணிவித்தார்.

ஆணும் பெண்ணும் சமம் என்ற தத்துவப் பேராசான் பெரியாரின் கொள்கை அங்கே நிலைநிறுத்தப்பட்டது. மணமகன், மணமகள் உறுதிமொழி ஏற்க வாழ்க்கை இணையேற்பு நிகழ்ச்சி இனிதே நடந்தேரியது.

மணவிழாத் தலைவர் அய்யா என்னை வாழ்த்துரைக்க பணித்தார். ஒரு தலைவர் நிறைவுரை ஆற்றிய பிறகு, தாமதமாக வந்த எனக்கு வாய்ப்பு வழங்கியது ஆசிரியரின் பெருந்தன்மையை காட்டியது. "அண்ணன் காமராஜ் அவர்கள் என் தந்தையாரோடு இணைந்து பணியாற்றியதை நினைவு கூர்ந்து, மணமகன் எழிலரசனின் எழுத்திற்கு நான் ரசிகன் என்பதை பதிவு செய்து வாழ்த்தினேன்.

எழிலரசன் பொறியியல் படித்திருந்தாலும் பத்திரிக்கைத் துறை மீது காதல் கொண்டு, ஆங்கிலப் பத்திரிக்கையில் பணிபுரிபவர். ஆனால் சுயமரியாதைக் கொள்கையில் அணுவளவும் நழுவாமல் இருப்பவர். ஆங்கிலத்திலும், தமிழிலும் நல்ல எழுத்தாற்றல் உள்ளவர். பொது நலனில் மிகுந்த அக்கறை கொண்டவர். மணமகள் சிந்து மேலாண்மை பயின்றுள்ளார்.

# இல்லற வாழ்விலும் சிறந்து மணமக்கள் வாழ்க !

புதன், 10 ஜூலை, 2013

தழுவும் குளிர் தென்றலும், உரசும் உப்புக் காற்றும்....


சிலு சிலுவென்று மெல்லியக் காற்று. 23 டிகிரி வெப்பநிலை. அவ்வப்போது லேசான தூறல். சில நேரங்களில் வலுத்த மழை. அந்த நேரங்களில் வெப்பநிலை குளிர்ந்து, குளிர் காற்று. எங்கு நோக்கினும் பசுமைக் காட்சி. மலையும் பள்ளத்தாக்குமாய் மனதை மயக்குகிறது. 

சரசரக்கும் உப்புக்காற்று. 33 டிகிரி வெப்பநிலை. காலையில் லேசான வெயில். நேரம் செல்ல செல்ல வெம்மை கூடுகிறது. சூரியனின் தகிப்பிற்க்கேற்ப அனல்காற்றாய் மாறுகிறது. சுற்றிலும் மணல் வெளியாய் கடற்கரை.

மலையில் தவழும் மேகப் பொதி மெல்ல தலையை வருடுகிறது. குளிர் சில்லென உடல் முழுதும் ஊடுருவிகிறது. சூரியன் அவ்வப்போது தலைக்காட்ட ஒத்தடம் கொடுக்கும் இளம் வெயில். தூறலால் நனைந்த பூமி. நெடிது வளர்ந்து மழை தாங்கி பின் பொழியும் மரங்கள்.

உச்சி வெயில் தலையை உருக்குகிறது. அனல் காற்று தாக்கி உடலை வாட்டுகிறது. பெய்ய வேண்டிய மழை பொய்த்து மரங்கள் எல்லாம் மொட்டைத் தலையாய். சூரியன் முழு சக்தியையும் காட்ட உப்பேறிய அனல் காற்று தோலை கீறுகிறது.

பசுமைப் பள்ளத்தாக்காய் தேயிலைத் தோட்டம். ஊடுறுவிச் செல்லும் மலைப்பாதை. சரிந்த மலைமுகட்டில் தனியாய் அரண்மனை. நூற்றுக்கும் மேல் அறைகள். எங்கும் வளைய வரும் பணிவானப் பணியாளர்கள். ராணுவ கட்டுப்பாட்டோடு திணிக்கப்பட்ட அமைதி.


கான்கிரீட் காடாய் நகரம். நகரத்தின் மத்தியில் அதுவும் ஒரு வீதி. வீதியில் இருக்கும் வீடுகளில் அதுவும் ஒன்று. மத்தியதரக் குடும்பத்தின் வழக்கமான வீடு. குவியும் பார்வையாளர்களை தாளாமல் திணறும் வீடு. சாலை இரைச்சலோடு இவர்கள் பேச்சும் சேர ஜனசந்தடி.

தேயிலைத் தோட்ட அரண்மனையில் ஒய்யாரமாய் தமிழ்நாட்டின் அரசி. ஓய்வில் இருக்கிறார். "உஷ் அமைதி".

தெருவோர வீட்டிலிருந்து கிளம்புகிறது வாகனம். போராட்டக் களம். மேடையேறுகிறார் மக்கள் தலைவர், மக்கள் பிரச்சினைக்காய். உச்சியில் தகிக்கும் சூரியன். மேடையில் உதயசூரியன். சேது கால்வாய் திட்டத்திற்கான முட்டுக்கட்டைகளை விலக்கி நடைமுறைப் படுத்த வலியுறுத்தி முழக்கம்.

# 90 வயதிலும் சுழலும் சூரியன் !

ஞாயிறு, 7 ஜூலை, 2013

நாடகக் காதலா ?

இளவரசாகாதலை நேசித்தாய்
சாதலை சுவாசித்தாய்

சாதலை தழுவினாய்
காதலை நிறுவினாய்

சா'தீ'யை தொட்டாய்
பாதியை பிரிந்தாய்

பாதியில் கருகினாய்
சாதி தீக்கிரையாக்கினாய்

கண்ணீரில் கரைந்தாய்
மண்ணில் நிலைப்பாய்...ஒரு நாள் செத்தாய்
என்றும் வாழ்வாய்
சாதி மறுப்பின் சொத்தாய்...