பிரபலமான இடுகைகள்

வியாழன், 28 மே, 2015

எங்கே தேடுவேன் 'பூரி - விண்டலை'

இரண்டாவது மாடியில் இருந்து இறங்கும் போதே, முதல் மாடியில் நிற்கும் மீனாட்சி என்கிற மீனாட்சிசுந்தரத்திடம்  இருந்து குரல் வரும், "மாப்புள்ள, எங்க கூட்டமா, டீ கடைக்கா ?"

"மெஸ்ஸுக்கு". "என்னா, மெஸ்ஸுக்கு ஆறரைக்கேவா?". "ஆமாண்டா. ஆறரைக்கே தான். இன்னைக்கு கிழமை என்ன? மறந்துட்டியா?"

"ஆஹா, வியாழக்கிழமையா. இதோ ரூம பூட்டிட்டு பின்னாடியே வந்துடறன். எடம் போட்டு வை மாப்புள்ள". வியாழக்கிழமைன்னா அப்படி தான்.

இரவு மெஸ் ஏழரைக்கு ஆரம்பிக்கும். அப்போ வழக்கமா முதல் இரு வரிசை தான் நிரம்பி இருக்கும். மத்த வரிசைங்க கொஞ்சம், கொஞ்சமா தான் நிரம்பும்.

ஆனா வியாழக்கிழம, ஆறரை வாக்கிலேயே முதல் ரெண்டு  வரிசையில் ஆள் இருக்கும். ஏழரைக்கெல்லாம் மெஸ் நிறைஞ்சிடும். கல்யாண வீடு மாதிரி ஜேஜே-ன்னு இருக்கும். சில நேரங்களில் காத்திருந்து இடம் பிடிக்க வேண்டியதாகி விடும்.

அது அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் பொறியியல் புலத்தின் இரண்டு, மூன்று மற்றும் நான்காம் ஆண்டு மாணவர்களுக்கான நியு பிளாக், ஆர்.எம்.ஹெச், ஆர்.எஸ்.ஹெச்  ஹாஸ்டல்களின் மெஸ்.

அந்த வியாழக்கிழமை விசேஷம், அன்றைய உணவான "பூரி-விண்டல்".

பொறியியல் மாணவர்களை கட்டிப் போட்ட உணவு அது. அன்று எந்த வேலை இருந்தாலும் சீக்கிரம் முடித்துக் கொண்டு வந்து விடுவார்கள்.  யாரும்' ட்ரீட் கொடுத்தாலும் 'கட்' தான்.

அப்படி ஒரு காம்பினேஷன் "பூரி-விண்டல்". அந்த விண்டல் தான் ஸ்பெஷல். அதை வேறு எங்கும் சாப்பிட்டது கிடையாது. வேறு இடத்தில் கேள்வி பட்டதும் கிடையாது.

அந்த அளவிற்கு ஒரு பிரத்யேகமான தயாரிப்பு . மட்டனில் செய்யப்படும் உணவு வகை அது. மட்டனை மிக சிறு சிறு துண்டுகளாக வெட்டி போட்டிருப்பார்கள். பூரிக்கு தொட்டுக் கொள்ளும் வகையில் தடதடப்பாகவும் இல்லாமல், நீர்த்தும் இல்லாமல் சரியான பதத்தில் இருக்கும்.

கொஞ்சம் பிங்க் நிறமாக இருக்கும். காரம் இல்லாமல், லேசான இனிப்புடன் அது ஒரு தனி சுவை. பூரியை சிறிதாகக் கிள்ளி, விண்டலை தொட்டு வாயில் போட்டால் கரைந்தே போகும்.

சில சைவர்கள், பூரி-விண்டலை  மட்டும் சுவைப்பதும் உண்டு.  மூன்றாம் வருடம் வெளியில் அறை எடுத்து தங்கிய என்னைப் போன்ற விண்டல் ரசிகர்களுக்கு பார்சல் வாங்கி வந்துக் கொடுத்து, நாக்கை உயிர்ப்புடன் விளங்கச் செய்த மாம்ஸ் சங்கர் போன்ற கொடை வள்ளல்களும் உண்டு.

இன்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் மாணவர்கள் சந்தித்தால், மலரும் நினைவுகளில்  இடம் பிடிக்கிற டாப் 5-ல் பூரி-விண்டல் கட்டாயம் இருக்கும். சிலர் அந்த ரெசிபி குறித்த ஆராய்ச்சியில் இறங்கி இருப்பதாகவும் செய்தி உண்டு.

# எங்கே தேடுவேன், பூரி-விண்டலை எங்கே தேடுவேன்...

(அண்ணாமலைப் பல்கலைக்கழக 1990 பொறியியல் மாணவர்கள் சந்திப்புக்காக எழுதியது)

சனி, 23 மே, 2015

பாரதிராஜா, கல்வி வென்றான், புகழ் கொண்டான் !

பரணம் ஒரு சிறு கிராமம். ஒரு ஊராட்சியாக இருந்தாலும்கூட சின்ன ஊர் தான். அரியலூர் மாவட்டத்தில் இருப்பவர்களே பெரிதும் அறியாத ஊர். ஆனால்  இன்று தமிழ்நாடு அறிந்த ஊர்.

அறிய வைத்தவர் பாரதிராஜா. பத்தாம் வகுப்பு தேர்வில் மாநில முதல் மதிப்பெண் 499 எடுத்து ஒரே நாளில் உலகறியச் செய்து விட்டார்.

பத்தாம் வகுப்பில் மாநிலத்தில் முதல் மதிப்பெண் எடுத்த 41 பேரில் பாரதிராஜா ஒருவர்.

அதைத் தாண்டி அரசுப் பள்ளிகளில் படித்து, மாநில அளவில் முதல் மதிப்பெண் பெற்றவர்கள் மூன்று பேர். இந்த மூவரில் ஒருவர் பாரதிராஜா.

அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் யாரும் இதுவரை +2 மற்றும் 10-ம் வகுப்பில் மாநில அளவில் முதல் மதிப்பெண் எடுத்ததில்லை. இப்போது இதை முறியடித்து வரலாற்று சாதனை செய்திருக்கிறார் பாரதிராஜா.

+2-ல் தேர்ச்சி விகிதத்தில் மாநில அளவில் கடைசி இடத்திற்கு சென்று விட்ட அரியலூர் மாவட்டத்திற்கு ஆறுதல் அளித்திருக்கிறார் பாரதிராஜா.

அவரை பாராட்டுவது கடமையல்லவா? இன்று அவர் இல்லம் சென்றோம். உள்ளே நுழைந்தவுடன் சால்வையை பாரதிராஜா கையில் கொடுத்தார் அவர் அம்மா கவிதா.

"நாங்க தான் பாராட்ட வந்தோம். நான் தான் அணிவிப்பேன்" என்று கூறி, நான் டவல் அணிவித்தேன். பரிசுத் தொகையை அளித்தேன். கொள்கைபரப்பு துணைசெயலாளர் பெருநற்கிள்ளி, ஒன்றிய செயலாளர் ஞானமூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் செல்வராஜ், வி.கே.ராஜேந்திரன்  ஆகியோர் சால்வை அணிவித்து வாழ்த்தினர்.

அப்பா சேகர், அம்மா கவிதா என வெள்ளந்தியான கிராமத்து பெற்றோர். பொறியியல் படிக்கும் அண்ணன், பள்ளியில் படிக்கும் தம்பி என எளிய விவசாயக்  குடும்பம்.

வீட்டினுள் அழைத்து அமர்த்தி, குளிர்பானம் அளித்தார்கள். நிமிர்ந்து பார்த்தேன். வெள்ளை அடித்து பல வருடங்கள் ஆகியிருக்கும். நடுவிலே 20க்கு 15 அளவிலே மெத்தைக்  கட்டிடம். அதை ஒட்டி மீதி ஓட்டுக் கட்டிடம்.

அந்த அறை தான் வரவேற்பறை, சாப்பாட்டு அறை, தங்கும் அறை, தூங்கும் அறை, பொருட்கள் வைக்கும் அறை. அதைத் தாணடி வேறு அறை கிடையாது.  உட்கார்ந்து படிப்பதற்கு கூட சரியான இடம் இல்லை.

குடும்ப சூழ்நிலையால் பின்தங்கி விடாமல், பொருளாதார சுழ்நிலைக்காக சுணங்கி விடாமல் படிப்பையே குறிக்கோளாக கொண்டு படித்திருக்கிறார் பாரதிராஜா. சாதித்தும் விட்டார்.

தன் சாதனைக்கு ஆசிரியர்களை காரணமாகக் கொண்டாடுகிறார் பாரதிராஜா. அவர் மட்டுமல்ல, அவரது பெற்றோர், கூடியிருந்த ஊர் பெரியவர்கள் எல்லோருமே ஆசிரியர்களை மெச்சினார்கள்.

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தங்கள் வேலை நேரம் தாண்டி உழைத்திருக்கிறார்கள். சிறப்பு வகுப்பு எடுத்திருக்கிறார்கள். பாராட்டுக்குரியவார்கள்.

மாமன்னன்  ராஜேந்திர சோழன், கங்கைகொண்ட சோழபுரத்தில் திருக்கோவிலை எடுப்பித்தப் போது, கோவிலின் உச்சியில் உள்ள கல்லை ஏற்றுவதற்கு, பரணம் கிராமத்தில் இருந்து பரண் அமைத்ததாக செவி வழி செய்தி உண்டு.

பாரதிராஜா கல்வி பரண் அமைத்து, பரணத்தின் புகழை உச்சியில் ஏற்றி விட்டார்.

# பாரதிராஜா, கல்வி வென்றான், புகழ் கொண்டான் !

செவ்வாய், 12 மே, 2015

கண்களில் துளிர்த்திருந்த நீர்துளிகள்

இடப்புறம் அமர்ந்திருந்தவரை கவனித்தேன். கை கன்னத்தில் இருந்தது. கையில் கைக்குட்டை இருந்தது. கவனிக்க முடியாத தருணத்தில் கைக்குட்டை கன்னத்தை ஒற்றியது.

          

வலப்புறம் மெல்லத் திரும்பினேன். அங்கிருந்தவரின் முகவாயை கை தாங்கியிருந்தது. விரல்கள் கன்னத்தில் இருந்தன. விரல்கள் மாத்திரம் மேலும் கீழுமாய் அசைந்தன.

மகன் வீசிய பந்தைப் பிடிக்க கமல் தடுமாறினார், அவ்வளவு வேகம், அவ்வளவு விசை. திருப்பி கமல் வீசிய பந்தை மகன் எளிதாய் பிடித்தார்.

மகன் வீசியப் பந்து அவருக்கு கமல் மீதான கோபத்தையும், கமல் வீசியப் பந்து அவருக்கு மகன் மீதான அன்பையும் வெளிப்படுத்தியது.

உத்தம வில்லன்.

வாழ்வின் இறுதிக் கட்டத்தில் இருக்கும் ஒரு மனிதன், அதனை தன் குடும்பத்தினரிடம் வெளிப்படுத்த திணறும் அந்தக் காட்சிகள் நம்மை திண்றடிக்கின்றன.

தன் மீது கடும் வெறுப்பில் இருக்கும் மகனிடம் தன் நிலையை பக்குவமாக சொல்ல, கமல் கையாளும் முறை ஒரு நிமிடம் கலங்க வைத்து விடுகிறது .

தந்தை சொல்ல வந்ததை புரிந்து, தந்தையின் நிலை உணர்ந்து மகன் வெடிக்க, சமாதானப்படுத்தும் விதமாக அவனது தலையை தன் கை இடுக்கில் அழுத்தி, அணைத்து கமல் தடுமாற...

நடிகரான கமலின் ரசிகர்கள், தடுப்புக்கு அந்தப்பக்கம் நின்று, அவர் நிலைமை தெரியாமல், மகிழ்ச்சிக் குரல் எழுப்ப, அவர்களையும் தவிர்த்து, மகனையும் சமாதானப்படுத்தி...

அந்த இடத்தில் கமலின் நடிப்பும், துடிப்பும், வசன உச்சரிப்பும். ம்.

இந்தக் காட்சிகளில் இயக்குநர் ரமேஷ் அரவிந்தையே, கமல் தான் இயக்கியிருப்பார் எனத் தோன்றுகிறது, தனது நடிப்பால்.

நமது வில்லுப்பாட்டையும், மலையாளக் கலையான தையத்தையும் குழைத்து தந்ததையும், இயக்குநர் பாலச்சந்தரை நடிக்க வைத்ததையும் , எடுக்கும் திரைப்படத்தையும் நிஜக் கதையையும் நறுக்காக தைத்து கொடுத்திருப்பதையும் குறிப்பிடலாம்.

ஆனால் அந்த ஒரு காட்சி மனதில் நிலைத்து விட்டது.

ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தாலும், கமல், கமல், கமல் தான். ஆனால் மற்றவர்களும் நிறைவாய் நடித்திருப்பதையும் குறிப்பிட வேண்டும்.

தீவிர திரை விமர்சகர்கள் கண்டித்தாலும், வரிசையாக துரித உணவு ரக திரைப்படங்களாக வந்துக் கொண்டிருக்கும் கால சூழ்நிலையில், தலைவாழை இலை போட்டு ஒரு "கமல் மீல்ஸ் ".

ஒன்றை சொல்ல விட்டுவிட்டேன். கமல் மகனை சமாதானப்படுத்திக் கொண்டிருந்த அந்த நேரத்தில், என் கண்களில் துளிர்த்திருந்த நீர்துளிகளை யாரும் அறியாமல் அழித்ததாக நான் நினைத்தேன். ஆனால் என்னை போல் யாராவது என்னையும் கவனித்திருக்கக் கூடும்.

# உத்தம வில்ல கதாநாயக கமல்ஹாசன் !

திங்கள், 11 மே, 2015

அல்லாருக்குமே விடுதல தான் பாஸு

விடுதல, விடுதல, விடுதல...

               

மொதல்ல அண்ணன் கொமரசாமிக்கு விடுதல. சிரிக்கவும் முடியாம, மொறைக்கவும் முடியாம மூணு மாசமா பட்டப்பாட்டுலேருந்து விடுதல.

ஒரு நாளு இவங்கள மொறச்சி, மறுநாளு அவங்கள மொறச்சி, நட்ட நடு செண்டர் ஆக்ட் குடுக்க அவுரு பட்ட கஷ்டம் அவுருக்கு தான் தெரியும். அதிலேருந்து விடுதல.

அடுத்து அண்ணன் ஓ.பி.எஸ்க்கு விடுதல. மொதலமைச்சராவும் இருக்கனும், ஆனா மொதலமைச்சரா நடந்துக்கக் கூடாது. எவ்ளோ கஷ்டம் பாஸு , அனுபவிச்சவுனுக்கு தான் தெரியும். ஆள உடுங்கடா...

கரூர்ல இருக்கற சாமிக்கெல்லாம் விடுதல. தினம் ஒரு கோயிலா, சாமியா கண்டுபிடிச்சி போக்குரத்து அமச்சர் செந்தில்பாலாஜி, தீச்சட்டி, இளநீ காவடி, அங்கப்பிரதச்சனம்னு படுத்துன பாட்டுலருந்து விடுதல.

மந்திரி செந்திலுக்கும் விடுதல. செவன் கோயில்லருந்து கருப்பு கோயில் வரைக்கும் கும்புட்டு முடிச்சாச்சு. இனிமே எங்க போறது, எங்க கோயில கண்டுபிடிக்கறதுன்னு தவிச்ச செந்திலுக்கும் விடுதல.

செந்திலாவது பரவாயில்ல, தாடிய டிரிம் பண்ணி ஓட்டுறாரு. மந்திரி உதயகுமாரு நெலம ரொம்ப கஷ்டம். டிரிம் பண்ணாம திருவள்ளுவரு கணக்கா நீண்டுகிட்டே போச்சு. அத ஷாம்பு போட்டு மெயிண்டெயின் பண்ற கொடுமைலருந்து அவுருக்கு விடுதல.

இதவிட சபாநாயகரு அண்ணன் தனபால் பட்ட பாடு இருக்கே. ஆள் இல்லாத நாற்காலிய பாத்து, அம்மா இருக்கற மாதிரியே வணக்கம் வச்சி, வளஞ்சு நெளிஞ்ச கஷ்டம் போயே போச்சி.

எந்த சீன்ல சிரிக்கனும் , எந்த சீன்ல அழறதுன்னு தெரியாம கேக்கு வெட்டும் போது அழுதுகிட்டே சிரிச்சு, சிரிச்சுகிட்டே அழுது அவதி பட்ட வளருமதி, கோகுல இந்திரா அக்காவுக்கெல்லாம் விடுதல.

ஒலக வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு பதவியேற்பு விழாவயே அழுகாச்சி காவியமா பாத்து நொந்து கிடந்த ரோசையாவுக்கு விடுதல.

தலைக்கு மேல இருக்கற படம் யாருன்னு கேட்டா மொல்லவும் முடியாம, முழுங்கவும் முடியாம இருந்த கலெக்டருக்கெல்லாம் விடுதல.

தெனம் தெனம், மக்களின் மொதல்வர், மாக்களின் மொதல்வருன்னு நீட்டி மொழங்கி கஷ்டப்பட்ட ஜெயா டிவி ஆளுங்களுக்கெல்லாம் விடுதல.

புதுசு புதுசா சேதி தேடி அலையும் பிரச்சினைலருந்து மீடியாவுக்கெல்லாம் விடுதல. இனிமே அம்மா அறிவிப்புகளை போடவே எடம் பத்தாதே.

அம்மா இல்லாத கிரவுண்டுல, நானும் ரவுடி தான்னு சுத்திகிட்டு இருந்த குரூப்புங்க கிட்ட மாட்டி அவஸ்த பட்ட தமிழக மக்களுக்கும் விடுதல.

அனுதாப அலையா, ஆன்மிக உலையான்னு புரியாம இருண்டு கெடந்த களம் இப்ப கிளியர். செயலிழந்த ஆட்சி, லஞ்ச லாவண்யம், அமைச்சர்களின் அராஜகம்னு களமிறங்க வாய்ப்பு, திமுகவுக்கும் விடுதல.

# டேங்ஸ் கொமரசாமி ஃபார் யுவர் மிஸ்டு அண்டு டஸ்ட்டு ஜட்ஜுமண்ட் !

சனி, 9 மே, 2015

அன்பின் உருவம் அன்பில் பொய்யாமொழி !

1989. கழகம் நீண்ட இடைவெளிக்கு பிறகு ஆட்சிக் கட்டிலில் ஏறுகிறது. தலைவர் கலைஞர் மூன்றாவது முறையாக முதல்வர்.

         

என் தந்தையார் எஸ்.சிவசுப்பிரமணியம் ஆண்டிமடம் சட்டமன்ற உறுப்பினர். தலைவர் கலைஞர் அவர்களால் சட்டமன்றக் குழுக்களில் ஒன்றான, பொது நிறுவனங்கள் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

குழுவில் ஆயிரம்விளக்கு சட்டமன்ற உறுப்பினர் தளபதி அவர்கள் உறுப்பினர். குழு வட இந்திய சுற்றுப் பயணம் மேற் கொண்டது. அப்பா, அம்மா, தம்பி போன பயணத்தில் கல்லூரி மாணவனாக, வேலை நாட்கள் என்பதால் நான் பங்கேற்க இயலவில்லை.

குழுவில் தளபதி அவர்களோடு அண்ணன் அன்பில் பொய்யாமொழி அவர்களும் பயணித்தார். அதில் இருந்து என்னை எங்கு பார்த்தாலும் , "டெல்லி வராமல் போயிட்டியே "என்று வருத்தப்படுவார்.

"சங்கர், அடுத்து எங்கக் கூட வர்ற" என்று உரிமையோடு சொல்லுவார். காலங்கள் கடந்தது. 1996-ல் மீண்டும் கழக ஆட்சி. அப்போது அண்ணன் பொய்யாமொழி திருச்சி-2 சட்டமன்ற உறுப்பினர். நான் பெரம்பலூர் மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர்.

கூட்டுறவு சங்கத் தேர்தல்கள் ஆரம்பித்தன. திருச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தான் பெரம்பலூர் மாவட்டத்திற்கும். அதன் இயக்குனர் தேர்தல் அறிவிக்கப்பட்டது.

அண்ணன் பொய்யாமொழி அவர்களும் போட்டியிட்டார்கள். வாக்களிக்கும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளின் தலைவர்களை அரியலூர் பகுதியில் இருந்து அழைத்து சென்றிருந்தேன்.

பிறகு அண்ணன் பொய்யாமொழி அவர்கள் தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். என்னை அழைத்தவர், "உன் பகுதிக்கு வங்கி மூலம் என்ன வேலை ஆக வேண்டுமோ சொல். உடனே நடக்கும்" என்றார்.

உரிய அதிகாரியை அழைத்து "தம்பி வந்தால் என்னிடம் வர வேண்டாம், வேண்டியதை முடித்துக் கொடுங்கள்" என்று ஸ்டேண்டிங் இன்ஸ்ட்ரக்‌ஷன் கொடுத்தார். எப்போது வந்தாலும் வங்கி விருந்தினர் இல்லத்தில் அறை வழங்கவும் உத்தரவிட்டார்.

அண்ணன் அமைச்சர் ஆவார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. அப்படியானால் எங்களை போன்ற இளையோருக்கு உதவிகரமாக இருக்கும் என்பது எங்களது எண்ணம்.

அண்ணன் இளையவர்களை ஊக்குவித்து, தளபதி அவர்களிடம் கொண்டு சேர்ப்பார் . அவரால் ஏற்றம் பெற்றோர் எண்ணற்றோர்.

ஆனால் உழைப்புக்கு உரிய உயரம் அடைவதற்குள் காலம் முந்திக் கொண்டது. அவரைப் பறித்துக் கொண்டது. எனை போன்றோருக்கு பேரிழப்பு . கழகத்திற்கும், தளபதி அவர்களுக்கும் அளவிட முடியா இழப்பு. இன்று அண்ணன் பிறந்தநாள் .

# மறைந்தாலும் வாழ்கிறார், மறையாமல் நம் மனதில் !

செவ்வாய், 5 மே, 2015

ஜெ எக்ஸ்பிரஸ், ரோலர் கோஸ்டர் ஆனது....

ஜெயலலிதா, 2013 டிசம்பர் அதிமுக பொதுக்குழுவில் பேசும்போது தான் பொளந்து கட்டினார்,”அதிமுக எக்ஸ்பிரஸ், டெல்லி செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயிலாக மாறும்”.

ஆனால் அவரது வழக்குப் பயணம் தான் ரோலர் கோஸ்டர் பயணமாக, வானுக்கும் பூமிக்கும், தெற்கிற்கும் வடக்கிற்கும், கிழக்கிற்கும் மேற்கிற்கும் என தவ்வி தாவி தலை சுற்ற வைக்கிறது. எப்போது வேகமெடுக்கிறது, எப்போது படுக்கிறது, எந்த திசையில் பயணிக்கிறது என அவருக்கே புரியவில்லை.

              

18 ஆண்டுகள் ஸ்டேஷன், ஸ்டேஷனாக நிறுத்தி பல டிரைவர்களை ஓட விட்டு, சில டிரைவர்களை ஓட்ட வைத்து பாசஞ்சர் ரயில் போல் கூட அல்ல, குட்ஸ் ரயில் போல் தன் சவுகரியத்திற்கு ஓட வைத்தார் சொத்துக் குவிப்பு வழக்கை.

வழக்கு திசை மாறி பயணிப்பதை உணர்ந்த திமுகழகம் சிகப்புக் கொடியைக் காட்டி எச்சரித்த பிறகே பெங்களூரு நிலையம் நோக்கி கொண்டு வரப்பட்டது. அனாலும் அங்கேயும் அதனை தடம்புரட்ட, செயலிழக்க வைக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

ஒரு வழியாக மைக்கேல் டி குன்ஹா கையில் ஸ்டியரிங் வந்த பிறகே ரயில் வேகம் பிடித்தது நாடறிந்த விஷயம். குன்ஹா ரயிலை சரியான பாதையில், சரியான வேகத்தில் செலுத்தி பார்ப்பன அக்ரஹாரா நிறுத்தத்தில் கொண்டு போய் நிறுத்திய பிறகு தான் மக்களுக்கு நம்பிக்கை பிறந்தது, நீதித்துறை மீது.

இப்போது என்ன வழி என்று பார்த்தார்கள். அப்போது தான் செங்கோட்டை ஸ்டேஷனில் அவர் கண்ணில் பட்டார், “தத்தி” திரிந்துக் கொண்டிருந்தவர். பேசினார்கள். மனு போட்டார்கள். ரயில் இழுத்து செல்ல பணிக்கப்பட்டது, பெங்களுரு கண்டோன்மெண்ட்க்கு.

அங்கே பாய்ண்ட் மேனாக பவானிசிங் அமர்த்தப்பட்டார். ஏற்கனவே பழக்கப்படுத்தப் பட்டவர். அதனால் வசதியாக இருந்தது. நினைக்கும் திசையில் எல்லாம் டிராக்கை திருப்பினார். இப்போது வசதியாக ரயிலை கவிழ்த்து விடலாம் என நினைத்தார்கள்.

குமரசாமி, வண்டியை ஓட்ட வந்தவர். அவர் ஓட்டுகிறாரா அல்லது ஒதுக்குகிறாரா என “எல்லோருக்குமே” குழப்பம். தினம் ஒரு விதமாக நடந்துக் கொண்டார். தினம் ஒரு “விதமாகவே” நடந்து கொண்டார்.

அப்போது தான் பேராசிரியர் ரீ-என்ட்ரி கொடுத்தார். பாயிண்ட் மேன் பவானிசிங்-கை மாற்றக் கோரினார். லோகூர், பானு பார்வைக்கு போனது. லோகூர் நெத்தியடி கொடுத்தார். பானு, “மதி”யை காட்டினார், சூரியன் வராதென நினைத்து. ஆனால் வந்ததே...

எதிரெதிர் முடிவுகளால், மேலே போனது. இருவர் அல்ல மூவர் என முடிவானது. “தத்தி” குதித்தவர் அவசரம் காட்டினார். நாள் குறித்தார். நெருக்கினார். நாடே வியந்தது, “நீதிக்கு இவ்வளவு அவசரமா, அக்கறையா?”

ஆனால் மூவரில் எவரும் அசரவில்லை, அசையவில்லை. வந்த தீர்ப்பு நெருப்பை அள்ளி வீசியது. பவானியின் “பவனி” செல்லாது என முடிவானது. இப்போது தான் மீண்டும் நம்பிக்கை நீதி மீது மக்களுக்கு, “தத்தி” தாவாது என.

போனவர் போனது தான், என்றிருந்த நிலையில் வந்தார் “ஆச்சார்யா”. அது ஆச்சரியம் தான், ஆனால் அதிசயம். நடந்து விட்டது, நடந்தே விட்டது.

இனி சரியாக “பாய்ண்ட்” அடிக்கப்படும், என நாடு நம்புகிறது.

# செங்கோட்டை எக்ஸ்பிரஸ், மண் கோட்டையை நோக்கி பயணிக்கட்டும் !

இசையோடு இசைந்து வாழ்வோம்

இசை கேட்டால் வயப்படுவது இயற்கை. அதிலும் பறை இசை என்றால் கட்டுப்படாமல் கால்கள் ஆடும். தன்னை அறியாமல் தாளம் இடும்.

இசைஞானம் எல்லாம் துளியும் கிடையாது. ராகங்கள் என்றில்லை, திரைப்பட பாடல்களை கேட்கும் போது, சில வாத்தியங்களை அடையாளம் கொள்ளவே சிரமப்படுவேன்.

ஆனால் டிரம்ஸ், கீபோர்டு, கிடார் இசைகளை கேட்கும் போது, அந்தக் கருவிகளை இசைக்கத் தெரிந்தவன் போல் கைகளை ஆட்டி மகிழ்வது வாடிக்கை. பாடல் வரிகள் தெரியாமலே கூட சேர்ந்து பாடுவது வேறு.

இன்னும் சில நேரங்களில் இசைக்குழுக்களை ஆட்டுவிக்கும் ஒருங்கிணைப்பாளர்களாக நினைத்துக் கொண்டு கையை அசைத்து அப்படியே மூழ்கி விடுவதும் உண்டு.

சில நேரங்களில் "இது கொஞ்சம் ஓவரோ" என்று கூட தோன்றும். ஆனால் இசைஞானி அப்படி பழக்கி விட்டார், சிறுவயதிலிருந்தே. நாம் தான் இப்படியா என்ற சந்தேகமும் அவ்வப்போது வரும்.

போன வாரம் ஒரு சிறு சந்தர்ப்பத்தில், விஜய் டிவி பார்க்கும் வாய்ப்பு. "சூப்பர் சிங்கர்" நிகழ்ச்சி. அது தான் முதல்முறையாக பார்க்கிறேன். பத்திரிக்கைகளில் பெரிய அளவில் எழுதப்படும் நிகழ்ச்சி என்பதால் கவனித்தேன்.

இருவர் பாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது ஒரு ஃபிளாஷ். நடுவர் ஒருவர் காற்றில் டிரம்ஸ் வாசித்தார். பாடல் தொடர்ந்தது . அடுத்த இசை இடைவெளி. இப்போது கீபோர்டு வாசித்தார் லயித்து.

அட நம்மாளு. நாம் செய்வதை செய்யும் ஒருவர் என்பதால் மகிழ்ச்சி. மொட்டை அடித்து, லேசாக வளர்ந்த முடி. ஷேவ் செய்யப்படாத முகம். இசையிலேயே கவனமாக எஸ்.பி.பி.சரண்.

மற்றவைகளை கவனிப்பதை விட சரணை கவனிப்பதே முக்கியமானது . பாடுவோர் பாடும்போது உடன் வாயசைப்பதும், கருவிகள் இசைக்கப்படும் போது இசைப்பதுமாக மூழ்கிப் போகிறார்.

பாடுவோர் சிறப்பிக்கும் போது தனக்குத்தானே புன்னகைத்துக் கொள்வதும், தவறினால் ஜெர்க் கொடுப்பதுமாக தனி உலகத்தில் சஞ்சாரிக்கிறார்.

"ஒவர் ஆக்‌ஷனோ?" என்று கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தேன். அப்படி தெரியவில்லை. ரசித்து மூழ்கிப் போய் தான் காணப்படுகிறார். யூடியூப்பில் இந்த நிகழ்ச்சிகளை காணத் தூண்டுகிறார்.

          

நாடி நரம்பு ரத்தம் எல்லாம் இசையால் வெறி ஏறிப் போனவர் ஒருவரால் தான் இப்படி நடந்துக் கொள்ள முடியும் எனத் தோன்றுகிறது. எஸ்.பி.பி மகனல்லவா.

# இசையால், இசையாய் , இசையும் மனிதன் !

திங்கள், 4 மே, 2015

படிச்ச துறையில் தான் இருக்கனும்னு அவசியமா?

"சத்யா எங்க இருக்கற, என்ன செய்யற?"
"டெல்லியில் ஒரு ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் காலேஜில் லெக்சரரா இருக்கேன்"
"என்ன எஞ்சினியரிங் படிச்சிட்டு ஆர்ட்ஸ் காலேஜிலா ?"
"ஆமாம்பா. கம்ப்யூட்டர் டிபார்ட்மெண்ட் லெக்சரர்"
"எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ் படிச்சுட்டு, கம்ப்யூட்டர் டிபார்ட்மெண்ட்டா?"
"படிச்ச துறையில் தான் இருக்கனும்னு அவசியமா?"

இது தான் சத்தியசீலன். எனது நண்பர். ஓராண்டு பள்ளித் தோழர். அப்புறம் தொடர்பு இல்லை. மீண்டும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சந்தித்தோம்.

இப்போது ஒரே வகுப்பு, மின்னியல் மற்றும் மின்னணுவியல். நான்கு ஆண்டுகள் ஒன்றாக திரிந்தோம். பொறியியல் படித்ததை விட கலையை சுவாசித்தார்.

மேடை ஏறினால் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நேரில் வந்ததாகவே இருக்கும். லயித்து, ஒன்றிப் பாடுவார். பென்சில் கையில் எடுத்துவிட்டால், நாம் காகிதத்தில் உயிர் பெறுவோம்.

கல்லூரி முடிந்து மறுபடி காணாமல் போனார். அப்புறம் தான், டெல்லியில் இருந்து இந்தப் பிரசன்னம்.

மறுபடியும் ஜூட். நீண்ட இடைவெளிக்கு பிறகு சந்தித்தேன். வித்தியாசமான கெட்டப். நீண்ட தலைமுடி. பிரெஞ்சு தாடி. சயின்டிஸ்ட் போல இருந்தார்.

"இப்போ எந்த டிபார்ட்மெண்ட் சத்யா?"
"ஆட்டோமொபைல் டிசையினிங்"
"அட அதையும் விடலையா ?"
" புது ஆட்டோ ஒன்னு டிசைன் பண்ணினேன். இப்போ கார்"
"எந்தக் கம்பெனி?"
"அசோக் லேலாண்ட் நிறுவனத்தில் டி.ஜி.எம்"

மிகுந்த மகிழ்ச்சி. என் ஊர், பள்ளி, கல்லூரித் தோழனின் உயர்வு. இரண்டு, மூன்று முறை சந்தித்தோம். அவ்வப்போது அலைபேசி தொடர்பு. ரெண்டு பேரும் அவ்வளவு பிஸி. ஒரு நாள் ஒரு மெயில் அனுப்பினார்.

ஒரு ஓவியம். விமானத்திற்கு காத்திருந்த நேரத்தில், என் நினைவு. என்னை அலைபேசியில் ஓவியமாய் தீட்டியிருக்கிறார். என் முகநூல் முகப்புப்படத் தொகுப்பில் இருக்கிறது.

         

கடந்த வாரம் ஜூனியர் விகடன் பத்திரிக்கையை புரட்டும் போது கடைசி பக்கத்தில் சத்யா முகம். மோட்டார் விகடன் பத்திரிகை நடத்தும் "ஆட்டோமொபைல் டிசைன் மற்றும் வேலைவாய்ப்புக் கருத்தரங்கம், கோவையில்"

க.சத்தியசீலன் , டிசைன் பிரிவுத் தலைவர், பொது மேலாளர், அசோக் லேலாண்ட். பதவி உயர்வு பெற்ற பிறகு, இப்போ வேற கெட்டப். வெளுத்த தலையுடன் புரொபசர் போல.

     

கருத்தரங்க பேச்சை கேட்க முடியவில்லையே என்ற வருத்தம் இருந்தது. வருத்தத்தை போக்கியது மோட்டார் விகடன். தொலைபேசி சேவையில் அவரது கருத்துக்களை வழங்குகிறது. நான் கேட்டு மகிழ்கிறேன். நீங்களும் கேட்டு மகிழ : 044-66802916.
பயனுள்ள தகவல்கள், எளிமையாக. என்ன படிக்கலாம் என்பன குறித்தும். நேரில் பேசுவது போல, சகஜமான, நட்பானக் குரலில்.
# இன்னும் பல உயரங்கள் எட்டுவாய் சத்யா ! 

                

வெள்ளி, 1 மே, 2015

எல்லோருமே தொழிலாளிங்க தான்

தொழிலாளர்கள் தினம்னா வேற யாருக்கோன்னு நிறைய பேர் நினைச்சிகுறாங்க. உழைக்கும் எல்லோருமே தொழிலாளர்கள் தான். நாமும் தாங்க
.

சிகாகோ நகரில் நடந்த போராட்டம் யாருக்காக நடந்தது ?. தொழிலாளர்களுக்காக. அவர்களது வேலை நேரத்தை வரையறுக்க வேண்டும் அப்படிங்கறது தான் கோரிக்கை.

அப்போலாம் 12 மணி நேரத்துக்கும் அதற்கு மேலவும் வேலை பார்க்க நிர்பந்திக்கப்பட்டார்கள் தொழிலாளர்கள், முதலாளிகளால். அதக் கண்டிச்சு போராட்டம்.

8 மணி நேரம் வேலை, 8 மணி நேரம் ஓய்வு, 8 மணி நேரம் உறக்கம், இது தான் வலியுறுத்தப்பட்ட கோரிக்கை. அந்தப் போராட்டத்திற்கு பின்னாடி தான் படிப்படியா விடிவு.

எல்லோருமே தொழிலாளர்கள் தான். இப்ப இந்தியாவில் உச்ச அதிகாரம் வாய்ந்தவர் யார், பிரதமர். ஆனால் அவரும் தொழிலாளி தான், வாக்களித்த மக்களுக்கு.

ஆனா நம்ம செல்ஃபி அண்ணன் மோடிய நினைச்சுக்காதீங்க. அவர் கதை வேற. அண்ணன் கார்ப்போரேட் தொழிலாளி. கொஞ்சம் ஹை ஸ்டேண்டர்ட்.

தொழிலாளி ரத்தத்தை எல்லாம் உறிஞ்சுறானே முதலாளி, அவன் எப்படி தொழிலாளி ஆகிறான்னு கேப்பீங்க. அவன் பணத்துக்கு தொழிலாளி. அம்பானி, அதானி வகையறா.

இந்த சின்னப் பிள்ளைங்க எல்லாம் எப்புடி தொழிலாளியாக முடியும். அவங்க தான் சார் மோசமான தொழிலாளிகள். பள்ளிக்கூடம் போகும் போது பாருங்க, மூட்டைத் தூக்கும் தொழிலாளர்கள்.

பெண்கள எடுத்துக்குங்க. இந்த வேலை நேர வறைமுறைய எல்லாம் தாண்டி குடும்பத்துக்காக உழைக்கிறாங்க. அதும் வேலைக்கு போறவங்கன்னா, டபுள் டியூட்டி. வேலையும், குடும்பமும்.

இப்படி ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு வகையில தொழிலாளி தான். மே தினம் எல்லாருக்குமானது தான். எல்லோரும் வாழ்த்துக்கு உரியவர்கள் தான்.

சரி, முக்கியமான ஆட்கள விட்டுட்டனே. நாம தான் சார். எந்தப் பிரதிபலனும் எதிர்பார்க்காம, இப்படி மாங்கு மாங்குன்னு  உழைக்கிறோமே, இது தான் சார் டாப்பு.

காலையில ஏந்திரிச்சா, மொபைல்ல கண்ணு விழிச்சி, லைக்கு, கமெண்ட்டு, ஷேருன்னு இவ்வளவு உழைக்குறோமே, நாமும் உழைப்பாளிகள் தான் சார்.

# மே தினம், உழைப்பவர் லைக் தினம். வாழ்த்துக்கள் !