பிரபலமான இடுகைகள்

சிவசங்கர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிவசங்கர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 6 நவம்பர், 2013

சட்டமன்ற விமர்சனம் (28,29-10.2013) - நக்கீரனில் எனது கட்டுரை

28.10.2013 திங்கட்கிழமை, சபை ஆரம்பிக்கும் போதே அமர்களமாய் ஆரம்பித்தது. முதல் ஓவர் முழுதும் சிக்ஸராய் அடிக்கும் பேட்ஸ்மேன் கணக்காய் சுழற்றினார் ஆண்டிபட்டி ச.ம.உ தங்க.தமிழ்செல்வன் .

அரிய’தாய்’, பெரிய’தாய்’, வலிய’தாய்’ என்று ராகம் போட ஆரம்பித்தார்.


இப்படியாக சபை போய் கொண்டிருந்த போது தான் எழுந்தார் செ.கு.தமிழரசன். எந்த விதிமுறையும் இல்லை. அவருக்கு பேச அனுமதி கொடுத்தார் சபாநாயகர். ஏதோ வம்பு என்று மட்டும் உணர்ந்தோம்,  செ.கு.த ஒரு குறீயீடு. ஆளுங்கட்சி நேராக பேச முடியாததை பேசக் கூடியவர். எதையும் பேசுவார், எப்படியும் பேசுவார், அது தனிக் கலை.

"சென்னையில் சில நாட்களுக்கு முன்பு அம்மா சிறிய பேருந்துகளை துவக்கி வைத்தார். அந்த பஸ்ஸின் படங்களை சபையில் தூக்கிக் காட்டி அரசு பஸ்ஸா ? அதிமுக பஸ்ஸா ? என்று திமுக உறுப்பினர்கள் குரல் எழுப்பினார்கள்" என்று துவங்கினார். ஜெ.அன்பழகன் எழுந்து "சபையில் எங்களை பேச விடவேயில்லை. அது குறித்து எப்படி இவர் பேசலாம் ?" என்று கேட்டார். சபாநாயகர்,"தமிழரசனை நான் அனுமதித்திருக்கிறேன். நீங்க உக்காருங்க" என்று உட்கார வைத்தார்.

"பஸ்ஸில் இரட்டை இலை இருப்பதாக சொல்கிறார்கள், அது நான்கு இலை. சின்னம் என்று பார்த்தால் பஸ்ஸே சின்னம் தான். கை சின்னம் இருக்கிறது. மாம்பழம் இருக்கிறது. இலைக்கு தமிழ்நாட்டில் பாரம்பரியம் உண்டு. பச்சிலை உயிர் காக்கும் மருந்து." என்ற போது பின் வரிசை திமுக உறுப்பினர்களிடமிருந்து தொடர்ந்து குரல் வந்து கொண்டு இருந்தது. "தமிழ்நாட்டில் இலைக்கு அமோக வரவேற்பு உள்ளது. டெல்லியிலும் பெரும் வரவேற்பு உள்ளது" என்று தொடர்ந்து பேசிக் கொண்டே போனார். நாங்கள் அனைவரும் எழுந்தோம். "விளக்கமளிக்க எங்கள் கட்சிக்கு வாய்ப்பு தர வேண்டும்" என்றோம். அப்போது முன்னாள் அமைச்சர் வேலு குரல் கொடுத்தார்.

உடனே துள்ளி எழுந்த அமைச்சர் கே.பி.முனுசாமி,"இரட்டை இலை பற்றி பேச ஏ.வ.வேலுக்கு தகுதியில்லை. அவர் எம்.ஜி.ஆரால் அரசியலுக்கு வந்தார். வேண்டுமானால் மு.க.ஸ்டாலின் பேசலாம், அவருக்கு தகுதி உள்ளது." என்று சொல்ல, எங்கள் தரப்பில் கோபம் அதிகமானது. ‘தேவையில்லாத வார்த்தைகளை அமைச்சர் பேசுகிறார்’ என குரல் கொடுத்தோம். இந்த நேரத்தில் செ.கு.தமிழரசன் தொடர்ந்து ஏதோ பேசிக் கொண்டிருந்தார். 

மறுபடியும் முனுசாமி பேச எழ, அனைவரும் ஒட்டு மொத்தமாக எழுந்து எதிர்ப்பு தெரிவிக்க, முனுசாமி ஆவேசமாக அருள் வந்தவர் போல் சிலுப்பினார். " வேலு, அரசியல் அநாதை, கேவலம், பஸ் கண்டக்டர், அ.தி.மு.க, வியர்வை" என்று குரல் உயர்த்தி ஏதேதோ பேசிக் கொண்டே போனார். இவை அத்தனையையும் அமைதியின் உருவமாக ஜெ ரசித்துக் கொண்டிருந்தார். மற்ற சப்ஜெக்ட்டாக இருந்தால் முந்தி வந்து பதில் சொல்லக் கூடியவர், "ஸ்மால் பஸ்" மேட்டரில் ஏனோ ரிவர்ஸ் கியர் தான். 


இருபத்தைந்து நிமிடத்திற்கும் மேலாக இதே வாக்குவாதமான நிலவரமே நீடித்துக் கொண்டிருந்தது. சபாநாயகர் நிலை மாறவேயில்லை. ஐந்து நிமிடத்திற்கு மேலாக தளபதி அவர்கள் நின்று கொண்டு வாதாடிக் கொண்டிருந்தார். அவர் இயல்பை தாண்டி குரல் உயர்த்தி பேசினார். ஒரு கட்டத்தில் லால்குடி சௌந்தரபாண்டியன், கூடலூர் திராவிடமணி, நான் மூவரும் சபாநாயகர் இருக்கைக்கு முன் சென்று நியாயம் கேட்டோம். அவர் எங்களை எச்சரிப்பதில் தான் குறியாக இருந்தார், எங்கள் கோரிக்கைகளுக்கு காது கொடுக்க தயாராக இல்லை. மூவரும் தரையில் அமர்ந்து கோஷம் போட்டோம். மற்றவர்களும் எங்களை வந்து சூழ்ந்து நின்று கோஷம் போட்டனர். இதை தொடர்ந்து தி,மு.க உறுப்பினர்கள் அனைவரையும் அவையை விட்டு வெளியேற்ற உத்தரவிட்டார். எங்களை குண்டுகட்டாக தூக்கி கொண்டு வந்து வெளியில் விட்டனர். 

பேட்டியளித்த தளபதி அழகாக சொன்னார்," செ.கு.தமிழரசனுக்கு நன்றி. நாங்கள் பதிவு செய்ய நினைத்ததை எளிதாக அவையில் பதிவு செய்து விட்டார். சிற்றுந்துகளில் அதிமுக சின்னம் இருக்கிறது என்று நாங்கள் பேசியதை சபாநாயகர் நேற்று அனுமதிக்கவிலலை. இன்று அதை அவர் பேசி விட்டார்". "முனுசாமி, ஏ.வ.வேலு அவர்களை கேவலம் கண்டக்டராக இருந்தவர் என்று குறிப்பிட்டார். கண்டக்டர் என்றால் கேவலமா ? சூப்பர் ஸ்டார் ரஜினியே கண்டக்டராக இருந்து வந்தவர் தானே' என்று பன்ச் வைத்தார்.

முனுசாமி புலி வாலை பிடித்ததை போல், கண்டக்டர் விசிலை பிடித்திருக்கிறார்......

29.10.2013 செவ்வாய் கிழமை. உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர் பதில் சொல்லிக் கொண்டிருந்தார்.

கே.பி.முனுசாமி," நான் நேற்றைய தினம் பேசியதை பேட்டியில் மாற்றி கூறி என்னுடைய உரிமையை மீறி இருக்கிறார்கள் மு.க.ஸ்டாலினும், துரைமுருகனும். உரிமைக்குழுவிற்கு அனுப்ப வேண்டும்" எனக் கோர, அதனை அனுமதித்தார் சபாநாயகர். அதனை ஆட்சேபித்து தி.மு.க உறுப்பினர்கள் எழுந்தோம். ஆனால் தளபதி அமைதிப்படுத்தி, அமர சொல்லி விட்டார்.

விவாதம் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தபோது திடீரென அ.தி.மு.க சார்பாக விராலிமலை ச.ம.உ விஜயபாஸ்கர் எழும் போதே தெரிந்து விட்டது, இன்றும் திட்டத்தோடு தான் வந்திருக்கிறார்கள். கடந்தக் கூட்டத் தொடரிலும் இவரை கொண்டு எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சிக்க வைத்தனர் ஆளுங்கட்சியினர்.

"வடக்கு வாகை சூட்ட காத்திருக்கும் வரலாற்றுத் தாயே, தமிழகத்தின் வளம் காக்கும், நலம் காக்கும் பேரோளியே, உயிர்பிக்க வந்த பரம்பொருளே, எம்பாட்டுடைத் தலைவியே" என ஜெ-வுக்கு 5 நிமிடம் அர்ச்சனை மேற்கொண்டவர் சர்ச்சைக்கு வந்தார். "முன்னர் பேசிய தே.மு.தி.க உறுப்பினர் தவறாக பேசினார். காரணம் அவர் வந்த வழி அப்படி. துக்க வீட்டிற்கு சென்று "ஆழ்ந்த இரங்கல்" என்று சொல்ல வேண்டிய இடத்தில் "ஆழ்ந்த நன்றிகள்" என்று சொன்னவர் தானே" என்றவுடன் தே.மு.தி.க உறுப்பினர்கள் எழுந்து நின்று குரல் எழுப்பினர். முதலமைச்சர் ஜெயலலிதா குலுங்கி,குலுங்கி சிரித்து ரசித்துக் கொண்டிருந்தார். அந்த வார்த்தைகளை நீக்க வேண்டும் என்று கோரினர். ஆனால் சபாநாயகர் எழுந்து நின்று அவர்களை அமர சொல்லி சொன்னார். ஐந்து நிமிடம் போராடிப் பார்த்தவர்கள் உட்கார்ந்தனர். 

அடுத்து தி.மு.க பக்கம் வந்தார். "புத்தூர் ஆப்பரேஷன் செய்த காவலர்களுக்கு பரிசுகளை வாரி வழங்கினார் அம்மா. ஆனால் முந்தைய ஆட்சியாளர்கள் அப்படி இல்லை. ஒரு தள்ளுவண்டிக்கு இதில்...." என்றவுடன் தி.மு.க உறுப்பினர்கள் வெகுண்டு எழுந்தோம். தகாத வார்த்தைகள் பேச அனுமதிக்க முடியாது என்றோம். கிருஷ்ணகிரி செங்குட்டுவன்,"உங்களுக்கும் இது போல தள்ளுவண்டி காலம் வராமல் போய்விடுமா ?" என்று கோபமாக குரல் கொடுத்தார். தி.மு.க உறுப்பினர்கள் ஆட்சேபித்துக் கொண்டிருக்கும் போதே, ஈழப்பிரச்சினையை இழுத்து இன்னும் கடுமையான வார்த்தைகளை சொன்னார். 

இந்த நேரத்தில் தளபதி ஸ்டாலின், துரைமுருகன் ஆகியோரும் எழுந்தனர். அவர் யாரை குறிப்பிட்டு பேசுகிறார் என்பதை சொல்லுங்கள் என்று கேட்டனர். சபாநாயகர் எழுந்து நின்று கொண்டார். மறுபடியும் "அவர் யாரையும் பெயரை குறிப்பிட்டு சொல்லவில்லையே, யாரையும் சொல்லவில்லையே" என்று திரும்ப திரும்ப கூறிக் கொண்டிருந்தார்.

பதினைந்து நிமிடத்திற்கும் மேலாக இந்த நிலையே நீடித்தது. சபாநாயகர் நின்று கொண்டே,"உட்காருங்க, உட்காருங்க" என்று சொல்லிய படியே இருந்தாரே ஒழிய, பிரச்சினையை தீர்க்க முனையவில்லை. விஜயபாஸ்கரின் தரக்குறைவான வார்த்தைகளை நீக்கி இருக்க வேண்டும், குறைந்தப் பட்சம் தி.மு.க சட்டமன்ற தலைவர் என்ற முறையில் தளபதி ஸ்டாலின் அவர்களுக்கு மறுக்க வாய்ப்பளித்திருக்கலாம் சபாநாயகர். ஆனால் எதிர்கட்சிகள் வாய் திறக்கக் கூடாது, ஆளுங்கட்சியினர் எவ்வளவு தரக்குறைவாகவும் பேசலாம் என்பதிலேயே பிடிவாதமாக இருந்தார். ஒரு கட்டத்தில் சபாநாயகரை நோக்கி ஜெ.அன்பழகன் முன்னேற, அனைவரும் முன்புறம் வந்தோம். சபாநாயகரிடம் வாதிட்டு பார்த்தோம். 

எங்கள் கருத்தை கேட்க தயாராக இல்லாத அவர் சபைக் காவலர்களை அழைத்தார். முன்னாள் அமைச்சர் மைதீன்கானும் நானும் தரையில் அமர்ந்து கோஷமிட்டோம். எங்களை வெளியேற்ற உத்தரவிட்டார். எங்களை தூக்கி அவையிலிருந்து வெளியேற்றினர்.  அனைத்து தி.மு.க உறுப்பினர்களும் வெளியேற்றப்பட்டோம். " நியாயம் வழங்கு, நியாயம் வழங்கு, ஜனநாயகத்தை காப்பாற்று" என லாபியில் கோஷம் எழுப்பியவாறு வெளியேறினோம். "ஏற்கனவே இவர்கள் 2 முறை வெளியேற்றப்பட்டு விட்டனர். தற்போது 3வது முறையாக வெளியேற்றப்பட்டுள்ளதால் இந்த தொடர் முடிய கூட்டத்தில் பங்கேற்க முடியாது" என்று சபாநாயகர் அறிவித்திருக்கிறார். 


எங்களுக்கு பின்னாலேயே தே.மு.தி.க-வினர் கோஷம் எழுப்பிக் கொண்டு வந்தனர். திமுக உறுப்பினர்களை வெளியேற்றிய பிறகும், விஜயபாஸ்கர் தனது தாக்குதலை நிறுத்தவில்லையாம். விஜயகாந்த் குறித்தும் பர்சனலாக தாக்கி பேச தே.மு.தி.கவினர் சபாநாயகரை முற்றுகையிட்டு நியாயம் கேட்டிருக்கின்றனர். அவர்களையும் காவலர்களை விட்டு வெளியேற்றி இருக்கிறார் சபாநாயகர். 

ஒலிப்பெருக்கியில் சபை நடவடிக்கைகள் ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது. விஜயபாஸ்கர் தொடர்ந்து கொண்டிருந்தார். " டைம்ஸ் நவ் தொலைக்காட்சியின் அர்னாப் கோஸ்வாமிக்கு அம்மா கொடுத்த பேட்டியில் சொன்னார்கள்,"எனக்கு தேசிய அளவில் இலக்கு கிடையாது, ஆனால் இந்தியாவிற்கு இருக்கிறது. அதை நிறைவேற்றும் கடமை இருக்கிறது." 


ஜெயலலிதாவுக்கு கடமை இருக்கிறது, விஜயபாஸ்கருக்கு இலக்கு இருக்கிறது. ஆனால் சட்டப்பேரவையில் தான் ஜனநாயகமும் இல்லை, நாகரிகமும் இல்லை.

திங்கள், 4 நவம்பர், 2013

அப்போ விட்ட டிரெயின இப்போ தான்...

“நேர்முக பேட்டி தொலைவிலிருந்து !”

“ 1991ஆம் ஆண்டு தேர்தல் முடிவுகள் வெளியாகின்ற வேளை. நிபுணர் பிரணாய்ராய் டெல்லியில் தொலைக்காட்சியின் அரங்கத்தில் அமர்ந்துக் கொண்டு சென்னை, பம்பாய், கல்கத்தாவில் இருந்த தலைவர்களுடன் தொலைக்காட்சி மூலம் நேர்முகமாக பேட்டி கண்டு தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பாகியது. அதுவே தொலைக்காட்சி கருத்தரங்கு.

இத்தகைய விதத்தில் இது தொலைக்காட்சி தொழிலின் வளர்ச்சிக்கு உதவுகிறது. தொலைக்காட்சியோ உற்பத்தியாகும் பொருட்களின் விளம்பரத்திற்கு பெரிதும் உதவுகிறது. உபயோகிப்பாளர் மார்க்கெட்டை நிர்ணயிப்பதே TV தான்.”

என்ன இது பழையக் கதை எல்லாம் இப்போன்னு பார்க்கிறீங்களா ? பழையக் கதை தான்....

தீபாவளியன்னைக்கு பொழுது போகாம பழைய பைலை புரட்டிக்கிட்டு இருந்தேன். அப்போ ஒரு பேப்பர் கட்டிங் கிடைச்சிது. 1993-ல் தினகரன் பத்திரிக்கை ஒரு கட்டுரைப் போட்டி வச்சிருந்தாங்க. அதுல நானும் பங்கேற்றேன்.

“தொழில் வளர்ச்சியில் நவீன தகவல் தொடர்பு சாதனங்களின் பங்கு என்ன ?” என்றத் தலைப்பில் நான் எழுதிய கட்டுரை பரிசு பெற்றிருக்கிறது. 28.10.1993 அன்று பத்திரிக்கையில் பிரசுரமாகியிருக்கிறது.

அப்புறம் இந்த வேலைக்கே போகல....

அப்போ விட்ட டிரெயின இப்போ தான் பிடிச்சிருக்கேன், நக்கீரன்ல வந்த சட்டமன்ற விமர்சனக் கட்டுரை மூலமாக.... அதுக்கான தளம் முகநூல் தான்.

# அப்பவே....





வெள்ளி, 1 நவம்பர், 2013

சட்டமன்ற விமர்சனம் (25-10.2013) - நக்கீரனில் எனது கட்டுரை

இரண்டு நாள் "அமைதியாக" கலைந்த சபை, மூன்றாம் நாளும் அமைதியாக துவங்கியது. திருக்குறளுக்கு பிறகு கேள்வி நேரம். 

வழக்கம் போல் மின்துறை, உள்ளாட்சித் துறை கடந்து மற்ற துறைகள் வந்தன. போக்குவரத்து துறை. சேந்தமங்கலம் ச.ம.உ சாந்தி (அதிருப்தி தே.மு.தி.க) எழுந்தார். "மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கு வணக்கம்" என்ற உடன் எழுந்த பென்ச்தட்டல் நிற்க ஒரு நிமிடம் ஆனது. என் தொகுதிக்கு பேருந்துகள் வழங்கிய அம்மாவுக்கு நன்றி, மறுபடியும் பென்ச்தட்டல். அமைச்சர் வளர்மதி மலர்ந்த முகத்தோடு ஒவ்வொரு முறையும் தட்டலை துவக்கி வைத்து தே.மு.தி.க-வினரை பெருமிதமாக பார்ப்பார், அவர்களை வென்றது போல்.

உணவுத்துறையில் கேள்வி கேட்ட மேலூர் தொகுதி ச.ம.உ சாமி (அ.தி.மு.க) தன் தொகுதியில் சில ஊர்களில் புதிதாக ரேஷன்கடைகள் திறக்க வேண்டும் என கேட்டார். அமைச்சர் காமராஜ் எப்போதும் போல ஓரு பேப்பரை எடுத்துக் கொண்டு சட்டதிட்டங்களை வாசித்து, அனுமதி அளிக்க வாய்ப்பில்லை என்றார். சற்றே சூடான சாமி "இப்படியே பேசி தட்டிக் கழிக்காமல், அம்மாவின் பார்வைக்கு எடுத்து சென்று அனுமதி பெறுவீர்களா ?" என்றவர் வைத்த அடுத்த கேள்வி சபாநாயகரை பதற வைத்தது. 

" நடமாடும் ரேஷன் கடை திறக்க வாய்ப்பு இருக்கிறதா ?" இது விஜயகாந்த சொன்ன யோசனை அல்லவா. அதனால் பதறிய சபாநாயகர்,"சாமி கேள்வி கேளுங்க. அதவிட்டுட்டு பேசிகிட்டே போறீங்க" என்றவர் சாமியை உட்கார வைத்தார். பதில் சொன்ன அமைச்சர் காமராஜ் இந்த கேள்விகள் எதற்கும் பதில் சொல்லாமல் கையில் இருந்த குறிப்பை படிக்க ஆரம்பித்தார். பின் "சாமியின் கோரிக்கைகள் அம்மாவின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும்" என்ற பதிலை கம்ப்யுட்டரைஸ்டு வாய்ஸில் சொல்லி அமர்ந்தார். சாமி முகத்தில் ஏமாற்றம்.

உணவுத்துறை அமைச்சர் காமராஜ் எதை கேட்டாலும் சட்டப்படி வாய்ப்பில்லை என்று தான் சொல்வார். பொதுப்பணித்துறை அமைச்சர் கே.வி.இராமலிங்கத்தை தூக்கத்தில் கேள்வி கேட்டாலும் அசராமல் " செய்து தரப்படும்" என்று சொல்லிவிடுவார். 

மதுரை -செல்லூர் கண்மாய் தூர்வாரப்படுமா ? என்ற கேள்வியை அ.தி.மு.க போஸும், மா.கம்யூ அண்ணாதுரையும் கேட்டிருந்தனர். பதிலளித்த அமைச்சர் அதற்கு ஒதுக்கப்பட்ட நிதி விவரத்தை சொன்னார். மீண்டும் போஸ் அடுத்த பகுதியை தூர் வார நிதி கேட்டார். ‘ஒதுக்கப்படும்’ என்றார் அமைச்சர். அடுத்து எழுந்த அண்ணாதுரை புள்ளிவிபரங்களோடு "கண்மாயின் அடுத்த பகுதி பாசனத்திற்கு உதவாது. குடிநீருக்கு தான் பயன்படும். அதனை மாநகராட்சி வசம் ஒப்படைத்து நிதி ஒதுக்க வேண்டும்" எனக் கேட்டார். புள்ளிவிபரங்களை கேட்ட அமைச்சர் புரியாத மாதிரி உட்கார்ந்திருந்தவர்," மாநகராட்சி வசம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு நிதி ஒதுக்கப்படும் " என சொல்ல சபையில் சிரிப்பலை. காரணம் இந்த பதிகளுக்கு எந்த உத்தரவாதமும் கிடையாது என்பதால். 

இதற்கிடையில் ஜெயலலிதா வந்துவிட்டார். கால்நடைத்துறையில் கேள்வி கேட்ட கிருஷ்ணராயபுரம் காமராஜ் (அ.தி.மு.க) "மனிதர்களை காப்பது போலவே, அம்மா, அம்மா என்றழைக்கும் கால்நடைகளையும் காக்கும் தாயே ! என் தொகுதிக்கு ஒரு கால்நடை மருத்துவமனை கொடுத்து காத்திட வேண்டும்" என இறைஞ்ச ஜெ முகத்தில் அபார சிரிப்பு. "அம்மா, அம்மா" என்று துதித்த கால்நடைத்துறை அமைச்சர் சின்னையா "அங்கிருக்கும் கால்நடைகள் எண்ணிக்கை போதாது. மருத்துவமனை அமைக்க இயலாது" என்று பதிலளித்தார்.

அடுத்து முன்னாள் அமைச்சர் அக்ரி.கிருஷ்ணமூர்த்தி "மலை சூழும் இடமெல்லாம், இலை சூழும் இடமாகும்" என்று துவங்கி ஒரே வரியை இரண்டு,இரண்டு முறையாகப் படித்து ஜெ மீது கவிச்சாரல் தூவினார். "வெற்றி மலர்களை தர இருக்கும் ஏற்காடு மலையை ஒட்டிய ஜவ்வாது மலையான என் தொகுதியில் ஒரு சர்க்கரை ஆலை அமைக்கப்படுமா ?"எனக் கேட்க, தொழில்துறை அமைச்சர் தங்கமணி "இல்லை" என்றார்.

தன் முயற்சியில் தளராத அக்ரி,"ஈரடியில் உலகளந்த இறைவன் ஈரிலையில் இமயம் ஆள படைத்திட்ட அம்மாவின் ஆட்சியில் தொழிற்துறை மூலம் முடியாவிட்டாலும், கூட்டுறவுத்துறை அல்லது தனியார் துறை மூலமாவது அமைக்க அமைச்சர் முன்வருவாரா ?"எனக் கேட்க, அதற்கும் மறுப்பு தான். பின்புறமிருந்து ஒரு குரல்,"இவ்வளவு கவிதை பாடுகிறாரே. ஆலை கேட்கிறாரா, திரும்ப அமைச்சர் பதவி கேட்கிறாரா ?" 


நடிகர் அருண்பாண்டியன் (அதிருப்தி தே.மு.தி.க) "முதலில் என் அம்மாவுக்கு (ஜெ தான்) நன்றி" என்று ஆரம்பித்தவர், இருபது செகண்ட் பேசவில்லை. தொண்டையை சரி செய்து கொண்டு மீண்டும் ஆரம்பித்தார். கலங்கினாரா, இளகினாரா என்று தெரியவில்லை. "அம்மா என் தொகுதிக்கு கல்லூரி கொடுத்து, அதை ஆறு மாதத்தில் திறந்து வைத்ததை பொலிட்டிக்கல் மிராக்கிள் என்று பலரும் சொன்னார்கள். நான் சொன்னேன், 2014 டெல்லியில் கூட இந்த மிராக்கிளை பார்ப்பீர்கள் என" என்று நிறுத்த ஜெ முகம் ரோஸ் நிறமானது, மகிழ்ச்சிப் புன்னகை.

அடுத்து கடம்பூர் ராஜூ(அ.தி.மு.க) தன் பங்கிற்கு பன்ச் வைத்தார், " இன்று கோரிக்கை வைக்கிற இடத்திலும், நாளை பாராளுமன்றத்தில் அதை நிறைவேற்றுபவராகவும் போகின்ற அம்மாவே". எல்லோரும் அம்மாவுக்கு டெல்லி விசா வாங்குவதிலேயே இன்று குறியாக இருந்தனர்.

கேள்வி நேரம் முடிந்தது. சட்டபேரவை தி.மு.கவின் துணைத் தலைவர் துரைமுருகன் அவர்கள் எழுந்து ஒரு கவன ஈர்ப்புத் தீர்மானம் குறித்து பேச முனைந்தார். சபாநாயகர் "உட்காருங்க, உட்காருங்க" என்றார். ஆனால் துரைமுருகன் தொடர்ந்து பேச முயன்றார். "நீங்க கொடுத்திருக்கிற ஒரு கவன ஈர்ப்பு" என்று சபாநாயகர் ஆரம்பிக்க, தி.மு.க உறுப்பினர்கள் எழுந்து நின்றோம். "பேச வாய்ப்பு கொடுங்க" என்றோம். சபா தயங்கி, தயங்கி மைக் கொடுத்தார். 

"இரண்டு நாட்களுக்கு முன்பு முதலமைச்சர் புதிய பேருந்துகளை துவக்கி வைத்தார். அதில் மினி பேருந்துகளில் அ.தி.மு.கவின் தேர்தல் சின்னமான இரட்டைஇலை வரையப்பட்டிருக்கிறது" என்று அண்ணன் துரைமுருகன் அவர்கள் ஆரம்பித்தவுடன், சபா பேச அனுமதி மறுத்தார். மைக் கட் செய்யப்பட்டது. 

தொடர்ந்து பேச முயன்றார், அனுமதி கிடைக்கவில்லை. தி.மு.க உறுப்பினர்கள் எழுந்து அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்தோம். "இங்க பேசாமல், எங்கு பேசுவது ?" என்றோம். என் அருகிலிருந்த கும்பகோணம் அன்பழகன் சட்டைப்பையில் இருந்து ஒரு புகைப்படத்தை எடுத்து, கையில் தூக்கி பிடித்தார். நான் ஒரு புத்தகத்தின் இடையில் இருந்து ஒரு புகைப்படத்தை எடுத்தேன். முன்னாள் அமைச்சர் தங்கம்.தென்னரசு சட்டையின் உள்ளிருந்து அதே புகைப்படத்தை எடுத்தார். இப்படி ஒவ்வொருவராக அந்தப் புகைப்படத்தை கையில் எடுத்தனர். சபாநாயகர் முகத்தில் குழப்பம். ஒரே நேரத்தில் எல்லோரும் ஒரு புகைப்படத்தை தூக்கிக் காட்டினோம். "அரசு பேருந்தில் இலை வரையப்பட்டிருக்கும்" புகைப்படம் தான் அது.

ஜெயலலிதாவுக்கு என்ன நடக்கிறது, என்னப் படத்தை காட்டுகிறார்கள் என்று புரியாமல் ஓ.பி.எஸ்சை அழைத்து கேட்க, அவர் விளக்கினார். ஜெ முகம் நெருப்பாய் தகித்து, செந்நிறமாக மாறியது. சபாநாயகர் "உட்காருங்க, உட்காருங்க. இதை நான் அனுமதிக்க முடியாது. அது என் ஆய்வில் இருக்கிறது. அரசிடம் அறிக்கை கேட்டிருக்கிறேன்" என்றார்.

" அரசு பஸ்ஸா ? அ.தி.மு.க பஸ்ஸா ?" என்று நாங்கள் கோஷம் எழுப்ப, சபாநாயகர் எழுந்து நின்றுக் கொண்டார். சபாநாயகர் எழுந்து நின்றால், உறுப்பினர்கள் உட்கார வேண்டும் என்ற மரபின்படி எங்களை உட்கார வைக்க முயன்றார். "உங்களை வெளியேற்ற வேண்டி வரும். எச்சரிக்கிறேன்" என்றார். சைடில் பார்த்தார், சமிங்ஞை கிடைத்ததும், சபைக் காவலர்களை அழைத்து எங்களை வெளியேற்ற உத்தரவிட்டார்.

"அனுமதியில்லாமல் சபையில் புகைப்படத்தை காட்டுகிறீர்கள்" என்றார். "நாடே ரோட்ல இந்த காட்சிய பார்க்குது, இங்க காட்ட தான் அனுமதி வேண்டுமா ?" என்று குரல் எழுப்பினோம். காவலர்கள் திபுதிபுவென உள்ளே நுழைந்தனர். எங்களை நெருக்கி தள்ளினார்கள், வெளியேற்றப்பட்டோம். 

சபையின் வராண்டாவில் கோஷம் எழுப்பியவாறு நடந்தோம். சபாநாயகர் எச்சரிக்கை கொடுத்தவாறு இருந்தார். "ஆட்சி நடத்துவது கட்சியாக இருக்கலாம். ஆனால் அதற்காக ஆட்சியையே கட்சியாக மாற்ற முயற்சிக்க கூடாது. எங்களை வெளியேற்றியவர்களை மக்கள் வெளியேற்றும் காலம் வரும்" என்று காட்டமாக பேட்டியளித்தார் துரைமுருகன். பின்னாடியே புதியதமிழகம் கட்சி தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி வந்தார். வெங்காய விலையேற்றம் குறித்து பேச வாய்ப்பு கேட்டு மறுக்கப்பட்டதால் வெளிநடப்பு செய்திருக்கிறார்.

"அமைதியாக" துவங்கிய சபை "பிரேக் இல்லா ஸ்மால் பஸ்ஸாய்" தடுமாறியது....

                                       

திங்கள், 28 அக்டோபர், 2013

சட்டமன்ற விமர்சனம் (23,24-10.2013) - நக்கீரனில் எனது கட்டுரை

தமிழக சட்டப்பேரவையின் குளிர்காலக் கூட்டத்தொடர் துவங்குகிறது என்ற உடனே தமிழக அரசியல் அரங்கில் ஆர்வம் மிகுந்தது.

                                

இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்ற தமிழ்மக்களின் குரலை சட்டசபை எதிரொலிக்குமா என்ற எண்ணம் தான் புதிய ஆர்வத்திற்கு காரணம். தி.மு.க தலைவர் கலைஞர் இதனை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என அறிக்கை விடுக்க ஆவல் கூடியது.

சட்டப்பேரவை கூடிய 23- ந் தேதி காலை ச.ம.உ-க்களுக்கு வழங்கப்பட்ட கடிதத்தில் இருக்கை மாற்றம் குறித்த அறிவிப்பு இடம் பெற்றது. தே.மு.தி.க அதிருப்தி அணியை சேர்ந்த மாஃபா.பாண்டியராஜன், சாந்தி ஆகியோருக்கு தனியாக இடம் ஒதுக்குவதற்காக தி.மு.க, கம்யூனிஸ்ட் உறுப்பினர்களின் இடம் மாற்றப்பட்டிருந்தது. அதை பார்த்த முன்னாள் அமைச்சர் தங்கம்.தென்னரசு "குருபெயர்ச்சிக்கும் சனிப்பெயர்ச்சிக்கும் நடுவில் ஒரு இடப்பெயர்ச்சி" என கமெண்ட அடிக்க சிரிப்பலை படர்ந்தது.

மறைந்த முன்னாள் ச.ம.உறுப்பினர்கள் 11 பேருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இடைத்தேர்தல் காண்கிற ஏற்காடு தொகுதியின் மறைந்த ச.ம.உ பெருமாள் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அஞ்சலி செலுத்தியதோடு சபை ஒத்திவைக்கப்பட்டது. பதவியில் இருக்கும் ச.ம.உ மறைந்தால் வேறு அலுவல்கள் மேற்கொள்ளாமல் அவை ஒத்திவைக்கப்படுவது மரபு.

இரண்டாம் நாளாக 24-ந் தேதி. உறுப்பினர்களுக்கு இரவு வழங்கப்பட்ட நிகழ்ச்சி நிரலில் காமன்வெல்த் குறித்த தீர்மானம் இல்லை. காலையில் இதை கண்ட பத்திரிக்கையாளர்கள் மத்தியில் பரபரப்பு. எதிர்கட்சிகள் என்ன நடவடிக்கை மேற்கொள்ள போகிறார்கள் என்ற கேள்வியோடு பத்திரிக்கையாளர்கள் எதிர் கட்சிகளின் அலுவலகங்களில் ஆய்ந்து கொண்டிருந்தனர். சபை உள்ளே வழங்கப்பட்ட நிகழ்ச்சி நிரலில் காமன்வெல்த் குறித்த அரசினர் தனித் தீர்மானம் தனி இணைப்பாக புதிதாக சேர்க்கப்பட்டு வழங்கப்பட்டது.

10 மணிக்கு அவை துவங்கியது முதலில் கேள்வி நேரம். மின்துறை முடிந்து உள்ளாட்சித்துறை. பெண்ணாகரம் (இ.கம்யூ) ச.ம.உ நஞ்சப்பன் "தாகம் தீர்க்கும் ஒக்கனேக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தை துவங்கி வைத்த முதலமைச்சருக்கு நன்றி" என்று விசுவாசத்தை காண்பித்து கேள்வியை துவங்கினார். "இன்னும் பல கிராமங்களுக்கு இந்த தண்ணீர் வந்து சேரவில்லை" என்று சொல்ல, உள்ளாட்சி அமைச்சர் "பொத்தாம் பொதுவாக குற்றம் சுமத்தாமல் குறிப்பிட்டு சொன்னால் நடவடிக்கை எடுக்கப்படும்" என விசுவாசத்தை பொருட்படுத்தாமல் பதிலளித்தார்.

கேள்வி நேரத்தில் புகழ்வது, குற்றம் சுமத்துவது கூடாது என்பது மரபு. ஆனால் அ.தி.மு.க உறுப்பினர்கள் விராலிமலை விஜயபாஸ்கரில் துவங்கி, யார் முதல்வரை அதிகம் புகழ்வது என்ற போட்டி துவங்கியது. சீர்காழி ச.ம.உ சக்தி "பார் வியக்கும் புதுமைப் பெண்ணே, இனி பாரதம் உங்கள் பின்னே" எனக் கவிதை சொல்லி இன்று முதலிடம் பிடித்தார்.

இவர்களை விஞ்சினார் தே.மு.தி.க அதிருப்தி மாஃபா பாண்டியராஜன். "வாக்கினில் உண்மை ஒளி, வாழ்வினில் தெய்வ ஒளி உடைய அம்மாவுக்கு வணக்கம்" என வணங்க, ஜெ திரும்பி வணங்க, பாண்டியராஜன் முகத்தில் சிவகாசி மத்தாப்பூ வெளிச்சம். (காலையில் அ.தி.மு.க கொடி கட்டிய காரில் தான் வந்தார் என்பது கூடுதல் தகவல்)

அடுத்து எல்லோராலும் ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட காமன்வெல்த் குறித்த அரசினர் தனித் தீர்மானத்தை முதல்வர் ஜெயலலிதா முன் மொழிந்து பேசினார்.

தீர்மானத்தை வரவேற்று பேச அனைத்துக் கட்சிகளுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது. செ.கு.தமிழரசன் துவங்கினார். வழக்கம் போல் முதல்வரை புகழ்ந்து வரவேற்றார்.

கொங்கு இளைஞர் பேரவையின் தனியரசு தீர்மானம் குறித்து நீட்டி முழக்கி பேசிக் கொண்டே போக சபா சைகை காட்டி முடிக்க சொன்னார். பார்வர்ட் பிளாக் கதிரவன் முதல்வருக்கு நன்றி சொல்லி தீர்மானத்தை வரவேற்றார். அதிசயமாக சரத்குமார் ஒரே வரியில் தீர்மானத்தை ஆதரித்து பேசி அமர்ந்தார். டாக்டர்.கிருஷ்ணசாமி ஈழத்தின் பாதிப்பை விளக்கி தீர்மானத்தை வரவேற்றார்.

ஜவாஹிருல்லா பேச்சு உணர்ச்சி வேக்தோடு இருந்தது. மனித உரிமை ஆர்வலர்கள் 10 பேர் தூக்கிலிடப்பட்டதற்காக, நைஜிரீயா நாடு காமன்வெல்த் அமைப்பிலிருந்து நீக்கப் பட்டது போல இலங்கை நீக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார். காங்கிரஸ் சார்பில் பேச கோபிநாத் எழுந்தபோது, எல்லோரும் ஆவலோடு பார்த்தார்கள். "சிலோன் மக்களுக்காக பாடுபட்டவர் எங்கள் தலைவர் ராஜீவ்.  இலங்கைக்கு 4000 கோடி ஒதுக்கி மத்திய அரசு தமிழர்களுக்கு அத்தனை உதவிகளையும் செய்கிறது" என்று ஆரம்பித்தவர் தீர்மானத்தை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை குழு சார்பாக வரவேற்கிறேன் என்றார்.

இந்திய கம்யுனிஸ்ட் சார்பாக பேசிய ஆறுமுகம் முதல்வரை புகழ்ந்து தீர்மானத்தை ஆதரித்து பேசினார். மார்க்சிஸ்ட் கம்யூனிட் சார்பாக பேசிய சௌந்தர்ராஜன்"காமன்வெல்த் அமைப்பு என்பது இந்தியா பிரிட்டிஷ்க்கு அடிமைப்பட்டு கிடந்ததை நினைவுப் படுத்துகிறது. இந்த அமைப்பே தேவை இல்லை என்பது எங்கள் நிலைப்பாடு, இந்தியா இலங்கை தமிழர் நலனுக்காக ராஜ்ஜிய அழுத்தம் கொடுக்க வலியுறுத்துகிறோம்" என பேசி அமர்ந்தார். தீர்மானத்தை ஆதரிக்கிறார்களா, இல்லையா என்பதை சாதுரியமாக குறிப்பிடவில்லை.

தி.மு.க சார்பாக பேசிய மு.க. ஸ்டாலின் அவர்கள் பேச்சு மிக நிதானமாக, கச்சிதமாக அமைந்தது. "கலைஞர் கொடுத்த அறிக்கை, தி.மு.க செயற்குழு தீர்மானம், டெசோ தீர்மானம், பிரதமருக்கு கலைஞரின் விரிவான கடிதம் என தி.னு.க எடுத்த நடவடிக்கைகளை குறிப்பிட்டு, ஜெயலலிதா பிரதமருக்கு எழுதிய கடிதத்தையும் குறிப்பிட்டார். காமன்வெல்த் மாநாடு குறித்து கனடா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து நாடுகளின் நிலைப்பாடுகளை எடுத்துக் கூறி, தமிழகத்தில் அனைத்துக் கட்சிகளும் ஒன்றுபட்ட குரலாக ஒலிப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்றார். மாநாட்டை புறக்கணிக்க இந்திய அரசை வலியுறுத்தி, தீர்மானத்தை வரவேற்றார்.

தே.மு.தி.க சார்பில் பேசிய பண்ருட்டி "முதல்பாதி எதிர்பார்த்தது, பின்பாதி எதிர்பாராதது" என்ற பன்ச் டயலாக்கோடு ஆரம்பித்து தீர்மானத்தை வரவேற்க, சபா ஐந்து நிமிடம் ஜெ' வாழ்த்துப்பா பாடினார்.

மீண்டும் முதல்வரின் வேண்டுகோளுக்கு பிறகு தீர்மானம் சபையால் ஒரு மனதாக நிறைவேறப்பட்டது.

சட்ட அமைச்சர் கொண்டு வந்த சட்ட முன்வடிவை நிதி அமைச்சர் முன்மொழிய சபையில் நிறைவேற்றி இன்றைய நிகழ்வுகள் இத்தோடு முடிந்தது அமைதியாக.

ஞாயிறு, 27 அக்டோபர், 2013

திடீரென மின்சாரம் தாக்கியது, கைகள் துண்டிக்கப்பட்டது....

சிவநேசன், உடையவர்தீயனூர் கிராமத்தை சேர்ந்தவர். சுமார் ஒரு வருடத்திற்கு முன் ஒரு சம்பவம். வீட்டில் ஃபியூஸ் போனது. அதனை சீர் செய்யும் போது திடீரென மின்சாரம் தாக்கியது. தூக்கி அடிக்கப்பட்டார்.

நினைவு வரும் போது திருச்சியில் மருத்துவமனையில் இருந்தார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் பலனளிக்கவில்லை. இரண்டு கைகளும் முட்டிக்கு மேல் துண்டிக்கப்பட்டு விட்டது.

தற்போது 34 வயதாகிறது. திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது. கைகள் இல்லாமல் அடுத்தவர்கள் உதவியோடு ஒவ்வொரு நிமிடத்தையும் நகர்த்திக் கொண்டிருந்தார்.

ஜூன் 25 வெள்ளி அன்று தஞ்சாவூர் பவர் கம்பெனியின் லேன்கோ பவுண்டேஷன் மூலம் குன்னம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடத்தப் பட்ட முகாமில் இவருக்கு கை அளவு எடுக்கப்பட்டது.

18.10.2013 அன்று இவரைப் போன்று அளவு எடுக்கப்பட்டவர்களுக்கு உபகரணங்கள் குன்னம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடந்த விழாவில் வழங்கப்பட்டன.


                        mail3.jpg


விழாவில் தஞ்சாவூர் பவர் கம்பெனியின் Deputy General Manager செல்வம் கலந்து கொண்டு வழங்கினார். இவர் எனது கல்லூரி நண்பர். இவர் கொடுத்த ஒத்துழைப்பின் அடிப்படையிலேயே இந்த வாய்ப்பு கிடைத்தது.

சிவநேசனுக்கு லேன்கோ நிறுவனத்தின் மூலம் செயற்கை கைகள் வழங்கப்பட்டன. இப்போது அவரால் தனது செல்போனை தானாக உபயோகிக்க முடிகிறது. கையெழுத்திடுகிறார். டம்ளரை தூக்கி நீர் அருந்துகிறார். மீண்டும் சகஜ வாழ்க்கை.

இதே போன்று 39 பேருக்கு செயற்கை கை, கால்கள், ஊன்றுகோல்கள் வழங்கப்பட்டன. இதன் மொத்த மதிப்பு மூன்று லட்சம். மதிப்பு முக்கியமில்லை. கிராமத்தை சேர்ந்த இவர்கள் எங்கு சென்று இந்த செயற்கை கை,கால்களை வாங்குவது என்று தெரியாதவர்கள்.

இவர்களுக்கு இருக்கும் இடம் தேடி வந்து உதவி செய்த லேன்கோ நிறுவனத்திற்கும், நண்பர் செல்வம் அவர்களுக்கும் தொகுதி மக்கள் சார்பாக நன்றி. அளவுகள் எடுத்து செயற்கை அவயங்களை பொருத்திய ஜெகன் மற்றும் நண்பர்களுக்கு நன்றி.

13 வயதான வயலூர் பாரதிராஜாவுக்கு செயற்கை கால் பொறுத்தப்பட்டு நடக்க பழக்கிய போது அவரது தந்தையின் கண்களில் ஆன்ந்த கண்ணீர். வரும் போது தூக்கி வரப்பட்ட பிள்ளை போகும் போது தத்தி தத்தி நடந்து சென்றது அழகு.

# வாழ்வின் மகிழ்வான தருணங்கள் !


                         mail1.jpg

சனி, 14 செப்டம்பர், 2013

எம்.எல்.ஏ-வே 16 ரூட்டு கேக்கறார்...( தொடர்ச்சி )

அந்தத் திட்டம்....(தொடர்ச்சி)

வழக்கமாக  அரசு பேருந்துகளுக்கு புதிய ரூட் போடும் போது, டெப்போவில் இருந்து கிளம்பும் பேருந்துகள் எந்த ஊருக்கு செல்கிறதோ, அங்கிருந்து திரும்ப டெப்போ இருக்கும் ஊர் வரை வந்து செல்வது போல ரூட் போடுவது வழக்கம். அப்போது தான் டைம்கீப்பர் மூலம் கண்காணிக்க முடியும், டெப்போவிற்கு வந்து பராமரிக்க முடியும் என்பது அதிகாரிகள் மனப்பான்மை.

நான் கேட்ட ரூட்கள், செந்துறை ஒன்றியத்தில் உள்ள சன்னாசிநல்லூர், வாளரக்குறிச்சி ஆகிய கிராமங்களுக்கு புதிய வழி தடம். வீராக்கன், நாகல்குழி கிராமங்களுக்கு டவுன் பஸ்ஸே கிடையாது, அதற்கு டவுன் பஸ் கேட்டிருந்தேன். செந்துறையை திட்டக்குடி மெயின் ரோடிற்கு  இணைக்க வேப்பூர் ஒன்றியத்தில் உள்ள துங்கபுரம் கிராமத்திற்கு நக்கம்பாடி, நமங்குணம் வழியாக டவுன் பஸ் கேட்டிருந்தேன். (ஒவ்வொரு ரூட்டிற்கும் தனி விளக்கம் எழுதலாம்.)

இதற்கு தனித் தனியாக ரூட் போட்டு பஸ் ஒதுக்கினால், 4 பஸ்கள் தேவை. அப்போது தான், வழக்கப்படி அரியலூருக்கும் அந்த கிராமங்களுக்கும் இடையில் பேருந்து இயக்க முடியும். இதை நான் ஒரே பேருந்தை கொண்டு அனைத்து ஊருக்கும் ரூட் போட்டுக் கொடுத்தேன்.

நான் அரியலூர் டெப்போவிலிருந்து கிளம்பும் பேருந்தை செந்துறையை மையமாக கொண்டு நான்கு கிராமங்களுக்கு சென்று வருவது போல ரூட் போட்டேன். மதியம் ஓட்டுனர், நடத்துனர் டியூட்டி மாற்ற ஒரு முறையும், மெயிண்டெனன்ஸுக்கு இரவு ஒரு முறையும் டெப்போவிற்கு செல்லவும் மட்டும் அரியலூர் செல்வது திட்டம்.

இதே போல் ஜெயங்கொண்டம் டெப்போவிலிருந்து ஆண்டிமடம் ஒன்றிய 4 கிராமங்களுக்கு ஒரு பேருந்து. முள்ளுக்குறிச்சி, காடுவெட்டி, மாத்தூர், நாகம்பந்தல்(தற்போது இந்த ஊர் இயங்கவில்லை) ஆகிய  ஊர்களுக்கு.
  
அரியலூரிலிருந்து செந்துறை வரும் பேருந்து, 1.செந்துறை – சன்னாசிநல்லூர் – செந்துறை, 2.செந்துறை – துங்கபுரம் – செந்துறை, 3.செந்துறை – வாளரக்குறிச்சி – செந்துறை, 4.செந்துறை – நாகல்குழி – ஜெயங்கொண்டம் – நாகல்குழி – செந்துறை என நான்கு வழி தடங்களில் சென்று வரும்.



மதியம் அரியலூர் சென்று வந்து மீண்டும் இதே வழித் தடங்களில் பயணிக்க திட்டம். அவர்கள் வழக்கப்படி விட்டால் ஒவ்வொரு முறையும் செந்துறையிலிருந்து அரியலூர் சென்று வர வேண்டும். அதை அப்படி சேர்த்து படித்துப் பாருங்கள்.

இது அவர்கள் நடைமுறையில் இல்லாததால் தயங்கினார்கள். “இது நம்ம கார்ப்பரேஷனில் டிரை பண்ணதில்ல. பிராஞ்சிற்கு வந்து போவது போல ரூட் போடறது வழக்கம்”. “வேற பிராஞ்சில் இருக்கா ?”. “தெரியலிங்க சார்”.

“சென்னை போன்ற லாங் ரூட் போற பஸ்லாம் ஒரு நாளைக்கு ஒரு நடை தானே டெப்போவுக்கு வரும் ?” எனக் கேட்டேன். “ஆம்”என்றார்கள். “இதுவும் அது மாதிரி தான்” என்றேன். பதில் இல்லை.



மறுநாள் அந்த கிராமங்களில் புதிய பேருந்து இயக்க விழா.

# ரூட் கிளியர் !

வெள்ளி, 13 செப்டம்பர், 2013

எம்.எல்.ஏ-வே 16 ரூட்டு கேக்கறார்...

போக்குவரத்து துறை அமைச்சர் அப்போது அண்ணன் கே.என்.நேரு அவர்கள். தலைமை செயலகத்தில் அவரது அறையில் நுழையும் போதே நல்லக் கூட்டம், ஆளுக்கொரு மனுவோடு.

நானும் என் பங்குக்கு மனுக்களோடு சென்றிருந்தேன். அரசியலில் அவர் என் தந்தையின் சம காலத்தவர். இருந்தாலும் எல்லோருடனும் எளிமையாக பழகக் கூடியவர். “என்னப்பா ?” என்றார். “அண்ணே, பஸ் தான்” என்று இழுத்தேன். காரணம், கையில் கணக்கில்லா புது ரூட்டுகள் கேட்டு அத்தனை மனு.

K. N. Nehru In Office

மனுக்களை வாங்கிப் பார்த்தார். பக்கத்தில் இருந்த போக்குவரத்து துறையின் உயர் அதிகாரியிடம் கொடுத்தார். “எஸ்.எஸ் பையன்யா, சீக்கிரம் சர்வே பண்ணி குடுங்க” என்றார். மனுக்களை படித்த அதிகாரி “சார், மொத்தமே 200 பஸ் தான் வருது. எம்.எல்.ஏ-வே 16 ரூட்டு கேக்கறார் ” என்றார்.

“என்னப்பா பண்றது” என்றார். “சரிங்க அண்ணே, முக்கியமான பஸ் போகாத கிராமத்துக்கு மட்டும் இந்த வருஷம் கொடுங்க. மிச்சத்தை அடுத்த வருடம் கொடுங்க” என்றேன். “ டிவிஷ்னல் மேனேஜர சர்வே பண்ணிட்டு, எம்.எல்.ஏ-வ பார்க்க சொல்லுங்க” என்றார் அதிகாரியிடம்.

ஊருக்கு வந்த பிறகு, சர்வே செய்த டிவிஷ்னல் மேனேஜர் சந்தித்தார். “சார் 8 ரூட்கள் வருது. அத்தனை பஸ் தருவாங்களா ?” என்றார். அது அரியலூர் டெப்போவில் 4 பஸ் செந்துறை ஒன்றியத்திற்கும், ஜெயங்கொண்டம் டெப்போவில் 4 பஸ் ஆண்டிமடம் ஒன்றியத்திற்கும் என வந்தது.

நான் அதற்கு ஒரு தீர்வு கொடுத்தேன். டி.எம் “சார், இது போல இதுவரை செய்ததில்லை” என்றார். நான் என் லெட்டர்பேடில் நான் சொன்ன வகையில் புது ரூட்களை எழுதி கொடுத்தேன். “நீங்க ஒங்க சர்வே படியும் அனுப்புங்க, என் திட்டப்படியும் அனுப்புங்க” என்றேன்.

மீண்டும் கோட்டை, அமைச்சரிடம். என் திட்டத்தை பார்த்த அதிகாரி அமைச்சரிடம் “சார், இது புது மாதிரியா கொடுத்திருக்கிறார்” என்றார். “ அண்ணே, 8 பஸ் வேண்டும். ஆனால் நான் 2 பஸ்ல அந்த ரூட் எல்லாம் போகிற மாதிரி கொடுத்திருக்கிறேன்” என்றேன்.

“சார், அவன் வேலைக்கு போயிருந்தா, உங்கள மாதிரி அதிகாரியா வந்திருக்க வேண்டிய ஆள், எஞ்சினியர். சரியா தான் இருக்கும். அனுப்புங்க” என்று அதிகாரியிடம் சொல்லி மனுவை வாங்கி கையெழுத்து போட்டுக் கொடுத்தார்.


அந்தத் திட்டம்.... (தொடரும்)

ஞாயிறு, 8 செப்டம்பர், 2013

லைப்ரரி கேட்ட 'செம்பருத்தி'



கொளப்பாடி கிராமத்தில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை முடித்து காரில் ஏறினோம்...

"சார்" ஒரு சிறு குரல்.

திரும்பிப் பார்த்தால், கார் கதவு ஓரம் ஒரு சிறு பெண், பள்ளி யூனிஃபார்மோடு. சுற்றிலும் வயதில் மூத்தவர்கள், இளைஞர்கள். 

" என்னம்மா ?" என்றேன். " லைப்ரரியை திறக்கமாட்டேங்கறாங்க சார்". காரை விட்டு இறங்கி விட்டேன்.

" ஏன் திறக்கலை, என்ன காரணம்னு தெரியுமா ?" "அது தெரியலிங்க சார்" சுற்றிலும் நின்ற பெரியவர்களிடம் கேட்டேன் "என்ன காரணம் தெரியுமா ?". அவர்களுக்கு லைப்ரரி என்று ஒன்று இருப்பதே தெரியுமா என்ற அளவுக்கு எக்ஸ்பிரஷன்.

சிறுமியிடமே திரும்பினேன், "சாவி யாருகிட்டமா இருக்கு ?" "அது யாரோ வெளியூர் ஆள் கிட்ட இருக்குதாம் சார்" "எந்தக் கட்டிடத்தில் இருக்கு" "ஊராட்சிமன்ற அலுவலகத்துக்கு பின்னாடி இருக்கு சார்" "சரிம்மா, நான் விசாரிச்சி திறக்க ஏற்பாடு பண்றேம்மா"

காரில் ஏறினேன். "எங்கம்மா படிக்கிற ?" "பக்கத்தில வெண்மணி கிராமத்தில படிக்கிறேன் சார்" "எத்தனாவதும்மா?" "எட்டாவது சார்" "பேர் என்னம்மா ?"

"செம்பருத்தி சார்"

அடுத்த தெருவிற்கு சென்று, கொடியேற்றி வைத்து விட்டு கார் ஏற வருகையில் மீண்டும் செம்பருத்தி, தோழிகளோடு. சாக்லேட் கொடுத்தார். "எதுக்கும்மா ?" "நாளைக்கு எனக்கு பிறந்தநாள் சார்" "மகிழ்ச்சிம்மா, நல்லா படி" வாழ்த்தினேன். "சார் லைப்ரரிய மறந்துடாதீங்க”

இன்று ஊராட்சி மன்றத் தலைவரை தொடர்பு கொண்டு விசாரித்ததில், நூலகத்திற்கு தனிக் கட்டிடம் இல்லை என்பது தெரிய வந்தது, வேறு கட்டிடத்தில் இயங்குகிறது.



நூலகக் கட்டிடம் அமைக்க நிதி ஒதுக்க உள்ளேன்...

# கொளப்பாடியின் அறிவுக் கண் திறக்கும் “செம்பருத்தி” !

சனி, 7 செப்டம்பர், 2013

தி.மு.க இணையப் பயிற்சி பாசறை - பாகம் 3

புதுக்கோட்டை இணையப் பயிற்சி பாசறை (தொடர்ச்சி 3)

ஆனால் அவரை நினைத்து தைரியமாக பேசினேன்....யாரவர், தலைவர் கலைஞர் தான். 

"திராவிட இயக்க துவக்க காலத்தில் 40க்கு மேற்பட்ட சிறு பத்திரிக்கைகள் மூலமாக கழகத்தின் கொள்கைகளை கொண்டு சேர்த்தார்கள் (பின்னர் அய்யா சுப.வீ பேசும் போது திராவிட இயக்க பத்திரிக்கைகள் 134 என பட்டியலிட்டு பிரமிக்க வைத்தார்). திராவிடநாடு, முரசொலி, மன்றம், தென்றல், பகுத்தறிவு என பல பத்திரிக்கைகள். பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர், பேராசிரியர், நாவலர், கண்ணதாசன், சத்தியவாணிமுத்து என ஒவ்வொருவரும் ஒரு பத்திரிக்கை நடத்தி வந்தனர். இப்போது நாம் அதே போல் ஒரு பேஸ்புக் பக்கம் எழுதி வருகிறோம்"

இந்த இடத்தில் தலைவர் கலைஞரை குறிப்பிடும் போது தான் "காலத்தால் மாறி வரும் களப்பணிகள்" என்பதற்கு அவரே வாழும் உதாரணம் என்பது தோன்றியது, லைனை பிடித்தேன். "இப்படி சிறு பத்திரிக்கையை களமாக கொண்டிருந்த தலைவர், மேடை பேச்சு களத்தை கையில் எடுத்தார். அடுத்து நாடகம், திரைப்படம், ஊடகம் என்று மாறி வரும் சூழலுக்கு ஏற்ப களம் அமைத்தவர், இன்று இன்றைய சூழலுக்கு ஃபேஸ்புக் வரை தன்னை அப்டேட் செய்து கொண்டுள்ளார். அவரை பின்பற்றினாலே போதும்."


                          

நான் என் கல்லூரி நண்பர்களின் அழைப்பை ஏற்றே முகநூல் கணக்கை துவக்கினேன். இதன் மூலம் இவ்வளவு சிறப்பான களம் கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை. மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு வெண்மணி என்ற கிராமத்திற்கு சென்ற போது கட்சிக்கு தொடர்பில்லாத ஒரு இளைஞர் (ராம்குமார்) வரவேற்றார். நிர்வாகிகள் இவரை எப்படி தெரியும் என்று ஆச்சரியம் அடைந்தார்கள். முகநூல் மூலமாக என்றேன்.

இன்னும் வேடிக்கை, அவர் கல்லூரி இருக்கும் தெருவில் தான் என் வீடு இருக்கிறது. ஆனால் என்னை அவர் சந்தித்ததில்லை. முகநூல் நட்புக்கு பிறகே சந்தித்தார். முகநூல் இல்லையென்றால் எனக்கும் அவருக்கும் தொடர்பு ஏற்பட்டிருக்காது. இப்போது அவர் அந்தப் பகுதியின் பிரச்சினையை என் கவனத்திற்கு எடுத்து வருகிறார். இப்படி கல்லூரியில் படிக்கும், வெளியூரில் பணியிலிருக்கும் இளைஞர்கள் என்னோடு நிறைய பேர் தொடர்பில் இருக்கிறார்கள் என்றால் முகநூல் தான் காரணம்.

எங்கள் செந்துறை ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் இளஞ்செழியன் சிறப்பாக கவிதை எழுதக்கூடியவர் என்பது முகநூல் மூலமாகத் தான் தெரியும். கழகத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் எஸ்.பி.மகேந்திரன், அரங்கன்.தமிழ் போன்ற தோழர்கள், எம்.எல்.ஏ என்ற கண்ணோட்டத்தில் கிட்ட வந்தே இருக்க மாட்டார்கள். ஆனால் இப்போது முகநூலால் என்னோடு தொடர்பில் இருப்பது மாத்திரமல்லாமல் இங்கே நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறார்கள்."

"எனவே முகநூலை நாம் எப்படி பயன்படுத்துகிறோம் என்பதை பொறுத்தே. என்னை ஒரு காலத்தில் Ipadம் கையுமாக அலைகிறேன் என்று கிண்டல் செய்த ரசூல், மலர்வண்ணன் ஆகியோர் தான் இன்று நாங்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியை முதலில் அப்டேட் செய்பவர்கள். இங்கே வந்திருக்கிறார்கள்."

முகநூலில் இயங்குகின்ற கழகத் தோழர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு தளத்தில் இயங்குபவர்கள். நானும் அபிஅப்பாவும் நீண்ட ஸ்டேடஸ் போடுபவர்கள். சித்தன் ஆனந்த் சுருக்கமாக நச் என்று போடுவார், நாட்டு நடப்பை சுவையாக விமர்சிப்பார். டான் அசோக் எந்த செய்தியையும் வித்தியாசமான கண்ணோட்டத்தில் அணுகக்கூடியவர்.

மயிலைநாதனும், நிக்கோலஸ் கோபர்நிக்கஸ்சும் நகைச்சுவையாக சொல்லி திணறடிப்பார்கள். தினகரன் அரசு, இளவரசன் அரைமணிக்கொரு பதிவு போட்டு அசரடிப்பர். ரா.அசோக் ரெண்டு வரி பாட்டு போட்டு அப்புறம் அரசியல் பேசுவார். அன்சாரி அதிரடியாக களம் இறங்குவார். நாகூர் ஜலால் போட்டோக்கள் கலக்கல். (எல்லோருடைய சிறப்பையும் குறிப்பிட நேரம் ஒத்துழைக்கவில்லை) இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு தளத்தில் இயங்கினால் சிறப்பாக இருக்கும்.

அண்ணன் பெரியண்ணன் அரசு சரியான நேரத்தில் களம் அமைத்திருக்கிறார். நாடாளுமன்ற தேர்தல் வரப் போகிறது. ஜெயலலிதா ஆட்சி அமைந்து இரண்டு ஆண்டுகள் தாண்டி விட்டது. இந்த ஆட்சியின் தவறுகளை நாம் தான் தட்டிக் கேட்க வேண்டும். பொதுவான பிரச்சினையிலேயே எல்லோரும் கவனம் செலுத்த வேண்டாம். உள்ளூர் பிரச்சினைகளை கையில் எடுங்கள். நான் எங்கள் பகுதி மக்கள் பிரச்சினையான முந்திரி விவசாயிகள் பிரச்சினையை கையில் எடுத்து கவனம் செலுத்துகிறேன்." என ஒருவாறாக பேசி முடித்தேன்.

(தொடரும்)....