பிரபலமான இடுகைகள்

புதன், 24 ஆகஸ்ட், 2016

விருதுகளுக்கு கட்டுப்படாத...

ராஜபார்வை. பார்த்தவர்கள் மனதில் ஒரு பாதிப்பை ஏற்படுத்திய படம். சிங்கீதம் சீனிவாச ராவின் இயக்கமும், ராஜாவின் இசையும், கமல் நடிப்பும்  ராஜபார்வையின் கம்பீரத்தைக் கூட்டின. ராஜபார்வை "அந்திமழையை பொழிந்து, ஒவ்வொரு துளியிலும் கமல் முகத்தைக் கொண்டிருந்தது". கமல் மீது இருந்த பார்வையை மாற்றிய படம்.

'பதினாறு வயதினிலே' திரைப்படம் கமலின் திறமையை அழுத்தமாக வெளிக் காட்டியிருந்தது ஏற்கனவே. அந்த 'சப்பாணி', ரசிகர்கள் மனதில் சிம்மாசனம் இட்டு அமர்ந்திருக்கிறான் இன்றும். அதுவரை நகரத்து நாகரீக இளைஞனாகவே அறியப்பட்டிருந்த கமல், கிராமத்து அப்பாவி இளைஞன் வேடத்தில் சிறப்பு. மற்ற கதாநாயகர்கள் தயங்குகிற கெட் அப் அந்தப் படத்தில். கோவணமே உடையாக, இழுத்து நடக்கிற நடையோடு, வெள்ளந்தி மனதாக வாழும் கனமான பாத்திரம்.

அடுத்து வந்த சகலகலாவல்லவன் கமல் மீதான பிம்பத்தை மாற்றியமைத்தது, கமர்ஷியல் ஹீரோவானார். "கடையாணி கழலாத கட்டை வண்டியாக" ஓடி, வசூலை அள்ளிக் குவித்து, பாக்ஸ் ஆபிஸ் ஹிட் ஆனது இந்தப் படம். யதார்த்தம் குறித்தக் கவலை இல்லாமல் வணிகரீதியான வெற்றியை குறித்து வைத்து அடித்தப் படம். இதற்கு பிறகு கமலின் பாதை திட்டமிட்டதை போல் சென்றது. ஒரு படம் வித்தியாசமானது என்றால் அடுத்து ஒரு கமர்ஷியல் படம்.

பாலுமகேந்திரா இயக்கத்தில் 'மூன்றாம் பிறை' திரைப்படம் கமலுக்கு ஒரு மைல்கல். ஸ்ரீதேவியும் கமலும் போட்டிப் போட்டுக் கொண்டு நடித்தப் படம். கடைசி காட்சியில் "ஆடுறா ராமா, ஆடுறா ராமா" என்று தலையில் ஒரு பாத்திரத்தை வைத்துக் கொண்டு ரயில்வே பிளாட்பாஃர்மில் கமல் உருண்டு பிறண்ட போது, ரசிகர்கள் தாமே உருண்டு பிறண்டதாக உணர்ந்தனர்.

'சலங்கை ஒலி' கமலின் பன்முகத்தன்மையை வெளிப்படுத்திய ஒரு முக்கியமானப் படம். நடனத் திறமையை வெளிப்படுத்துபவர், ஜெயப்பிரதாவிடம் காட்டும் நேசம், வயதானவனாக கோபங் கொண்டு கிணற்றின் மீது ஆடும் நடனம் என கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் ஸ்கோர் செய்திருப்பார் இத் திரைப்படத்தில்.

எழுத்தாளர் சுஜாதாவோடு இணைந்து அளித்த 'விக்ரம்'. கமல் நடிப்பில் ஒரு ஸ்டைல் மிளிரும். இசை, கதைக்களம், திரைக்கதை, படமாக்கம் என எல்லாவற்றிலும் ஒரு வித்தியாசத்தோடு இருக்கும் படம் இது.  வழக்கமான மசாலாவை டெக்னிக்கல் கலந்து கொடுத்தப் படம். இப்படி தமிழ் திரையுலகில் புது முயற்சிகளை தொடர்ந்து செய்பவர் கமல்.

1986ல் இருந்து ஒரு ஒவ்வொரு படத்தையும் குறிப்பிடத் தக்கதாக அமைத்துக் கொண்டார் கமல்.

'புன்னகைமன்னன்' திரைப்படத்தில் காதல் இளவரசன் பட்டத்தை வலுப்படுத்த ஒரு வேடம், சார்லிசாப்ளின் போல ஒரு வேடம் என வெளுத்துக் கட்டினார். நடனத்திலும் இப்படத்தில் முத்திரை பதித்திருப்பார். அந்த "கன்னத்தில் முத்தத்தின் ஈரம் இன்னும் காயவுமில்லை, சத்தமும் ஓயவில்லை".

அடுத்து " நாயகன்". மணிரத்தினத்தின் இயக்கம், இசைஞானியின் இசை, கமலின் ஈடு இணையற்ற நடிப்பு ஒன்றுக்கொன்று போட்டி தான். ஆனால் இயக்கமும், இசையும் உயிர்பெற்றது கமலால் என்றால், அவர்களிருவரும் ஒப்புக் கொள்வார்கள். மனிதனின் ஒவ்வொரு காலகட்டத்திற்கும் கமலின் நடிப்பு அபாரம். வரதாபாயாக வாழ்ந்து காட்டியிருப்பார், வரதாபாய் ராஜ்ஜியம் இன்றும் நீடித்திருக்கிறது.

எதிர்மறை, கோபக்கார இளைஞனாக சமூகத்தை எதிர்கொள்ளும் 'சத்யா'விலும், சாத்வீகமாக நன்முறையில் சமூகத்தை திருத்தும் இளைஞனாக 'உன்னால் முடியும் தம்பி'யிலும் வித்தியாசம் காட்டியிருப்பார்.

'அபூர்வ சகோதரர்கள்' திரைப்படத்தில் அப்புவாக நடிக்க அவர் எடுத்த சிரத்தையும், அதற்காக அவரது உழைப்பும், உடலை வருத்திக் கொண்டதும் வேறு நடிகர் நினைத்துப் பார்த்திராதது. 'ராஜா கைய வச்சி ராங்கா போகவில்லை' படத்தின் வெற்றியிலும்.

காமெடிக்கு இலக்கணம் எழுதுமளவு 'மைக்கேல் மதனகாமராஜன்' படத்தில் கமலின் நடிப்பு. ஸ்டைலான பணக்கார இளைஞன், பாலக்காட்டு அய்யங்கார், ஃபயர்மேன், முரட்டு ரவுடி என நான்கு வேடங்கள் ஏற்று நம் வயிற்றை பதம் பார்த்தார். "சுந்தரன் நானும் சுந்தரி நீயும்" இன்றும் கொடிகட்டிப் பறக்கிறார்கள்.

"குணா" வில் அபிராமியை பார்த்து கமல் உருகியதைவிட, அவரைப் பார்த்து ரசிகர்கள் கொண்ட காதல் கூடுதலானது, அதையும் தாண்டி புனிதமானது. 'தேவர் மகன்'ல் நடிகர் திலகத்தின் மகனாக வன்முறையை வெறுத்து ஒதுக்கும் இளைஞனாக இருந்து, தவிர்க்க இயலாமல் வன்முறைப் பாதையில் திரும்பி பொருமுவது 'மறக்க மனம் கூடுதில்லையே'.

'அவ்வை சண்முகி'யில் கமலின் பெண் வேட நளினத்தைக் கண்டு கவிழ்ந்து போனது காதல் மன்னன் ஜெமினிகணேசனும், மணிவண்ணனும் மாத்திரமல்ல, தமிழ் ரசிகர்களும் தான். இப்படி கமலின் ஒவ்வொருப் படத்தையும் விவரித்துக் கொண்டே போகலாம்.

'விருமாண்டி' என்னைப் பொறுத்தவரை கமலின் உச்சம் . எழுதி, இயக்கி, நடித்தது மாத்திரமல்ல விருமாண்டியாகவே மாறியிருப்பார் இத்திரைப்படத்தில். தன் பகுதி மண்ணின் இசையை இசைஞானியிடம் பிழிந்து எடுத்திருப்பார். எப்போதும் வெளிப்படுத்தும் சண்டித்தனமும், நாயகியிடம் காட்டும் கனிவும், பின்பாதியில் காட்டும் முரட்டுத்தனமும் இன்னும் கண்களில் நிற்கிறது.

ஆறு வயதில் 'களத்தூர் கண்ணம்மா'வில் நடித்து, முதல் படத்திற்கே குடியரசு தலைவரின் தங்கப்பதக்கத்தை பெற்றவருக்கு, முப்பது வயதில் தேசிய விருது, அறுபத்திரெண்டு வயதில் செவாலியே விருது.

# கமல், விருதுகளுக்கு கட்டுப்படாத விஸ்வரூபம் !

செவ்வாய், 23 ஆகஸ்ட், 2016

சிங்கப்பூரின் தலைமகன்

அது ஒரு ஷெல் பெட்ரோல் சுத்திகரிப்பு ஆலை. ஆயுதம் தாங்கிய நான்கு பேர் அந்த ரிபைனரி உள்ளே நுழைந்தனர். ஜப்பான் சிகப்புப் படை என்ற தீவிரவாதக் குழுவினர். அங்கிருந்து மற்ற நாடுகளுக்கு எண்ணெய் செல்வதை தடுப்பதை நோக்கமாகக் கொண்டு வந்தவர்கள். பணி முடித்து, அங்கிருந்த ஒரு படகை திருடிக் கொண்டு கிளம்பியவர்கள்,   தப்பிப்பதற்கு வசதியாக படகின் பணியாளர்கள் அய்ந்து பேரை பணயக் கைதியாக பிடித்துக் கொண்டு தப்பித்தனர். அது 1974ஆம் ஆண்டு.

பணயக் கைதிகளை விடுவிக்க சிங்கப்பூர் அரசு அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தியது. அவர்களுக்கு மத்திய கிழக்கு நாடுகளுக்கு தப்பிப்பது திட்டம். அதற்கு பணயக் கைதிகளுக்கு பதிலாக வேறு சிலரை அனுப்ப வேண்டும் என்று நிபந்தனை விதித்தனர். அரசு ஊழியர்கள் சிலர் தாங்கள் பணயக் கைதியாக செல்ல முன் வந்தனர். அவர்களில் ஒருவர் பாதுகாப்பு துறையில் பணியாற்றிய நாதன்.

எஸ்.ஆர்.நாதன். மறைந்த சிங்கப்பூர் ஜனாதிபதி. இன்னொரு தமிழர் இவர் போல் சிங்கப்பூர் அரசியல் வானில் புகழ் பெறுவது இனி சிரமம். தன் பணியின் மூலமாக வாழ்க்கையில் படிப்படியாக உயர்ந்து, மக்கள் மனதிலும் உயர்ந்து, உயர்ந்த மனிதராக, சிங்கப்பூரின் அனைத்துத் தரப்பு மனிதர்களும் பாராட்டும் மனிதராக வாழ்ந்து மறைந்திருக்கிறார்.

மிகக் கொடூரமான சிறுப்பிராய  வாழ்விலிருந்து இந்த உயரத்தை அவர் அடைந்திருப்பது பிரமிக்க வைக்கிறது. செல்லப்பன் மகன் ராமநாதன் தான் எஸ்.ஆர்.நாதன். செல்லப்பன் மலேசியாவின் ஜொகுர் மாநிலத்தில் ஒரு ரப்பர் தோட்டத்தின் வழக்கறிஞர் அலுவலகத்தில் பணிபுரிகிறார். 1930 வாக்கில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியில் செல்லப்பன் குடும்பம் சிக்கி சீரழிந்தது.

பெரும் கடன் சுமையால் செல்லப்பன் தற்கொலை செய்து கொண்டுவிட்டார். அப்போது ராமநாதனுக்கு வயது எட்டு. குடும்பம் சிங்கப்பூர் திரும்பியது. பள்ளி காலத்திலேயே வேலைக்கு சென்றார் நாதன். அப்போது சிங்கப்பூர் ஜப்பானின் ஆக்கிரமிப்பில் இருந்த நேரம். ஜப்பான் காவல் துறைக்கு மொழிபெயர்ப்பாளராகவும் பணிபுரிந்தார்.

இப்படி கஷ்டமான சூழலிலும் கல்வியை விடவில்லை. பள்ளிப் படிப்பை முடித்து, பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றார்.  1954ல் மலேயப் பல்கலைக்கழகத்தில் சமூகக் கல்வியில் பட்டயம் பெற்றார். 1955ல் சிங்கப்பூர் அரசின் ஆட்சித்துறையில் மருத்துவ சமூகப் பணியாளராக துவங்கினார் தன் நீண்டப் பயணத்தை. பிறகு தொழிலாளர் துறையில் பணியாற்றினார்.

உதவி செயலாளர், துணை செயலாளர் என உயர்ந்தார் பணியில். வெளி விவாகரத்துறை, உள்துறை என மாறி ராணுவத்துறையிலும் பணியாற்றினார். அங்கு பாதுகாப்பு மற்றும் உளவுத்துறையின் இயக்குனர் ஆகப் பணிபுரிந்தார். சிங்கப்பூர் அரசின் முக்கிய இடத்தைப் பிடித்தார். மீண்டும் வெளிவிவாகரத்துறைக்கு வந்த அவர் மலேசியாவின் சிங்கப்பூர் தூதரகத்தின் ஆணையர் ஆனார். பிறகு அமெரிக்காவிற்கு சிங்கப்பூரின் தூதராகப் பணியாற்றினார்.

1999ல் பொதுவாழ்விற்கு வந்தார். சிங்கப்பூர் ஜனாதிபதி தேர்தலில் களம் இறங்கினார். எதிர்த்து மனு செய்திருந்தவர்களின் மனுக்கள் முறைப்படி இல்லாததால் தள்ளுபடியாக, போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். சிங்கப்பூரின் சிற்பி லீ க்வான் க்யூ இவருக்கு ஆதரவு. சிங்கப்பூரின் ஆறாவது ஜனாதிபதியாக பொறுப்பேற்றார்.  2000ல் பொது சேவைக்கான நிதி திரட்டுவதற்கு ஒரு முன்னெடுப்பை துவங்கினார்.

தற்போது 160 மில்லியன் சிங்கப்பூர் டாலர் சேர்ந்துள்ளது, இந்த நிதிக்கு. இது போன்ற பணிகளால், "மக்களின் ஜனாதிபதி" என மக்களால் பாராட்டப் பெற்றார். 2005 தேர்தலில் மீண்டும் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப் பட்டார். இவர் தான் நீண்டகாலம் பணிபுரிந்த சிங்கப்பூர் குடியரசுத் தலைவர் ஆவார்.

சிங்கப்பூரில்  ஒரு எளிய குடும்பத்தில் பிறந்த தமிழர், தன் தொடர் உழைப்பு மூலம் சிங்கப்பூரின்
குடியரசுத் தலைவர் ஆனது ஒரு வரலாற்றுச் சாதனை.

# எஸ்.ஆர்.நாதன், சிங்கப்பூரின் சிறந்த தலைமகன் !

சனி, 13 ஆகஸ்ட், 2016

அம்மா சற்குண பாண்டியன்

67 வருடங்களாக ஓங்கி ஒலித்தக் குரல், இன்று அடங்கி விட்டது. 8 வயதிலேயே கழக மேடையில் ஒலிக்க ஆரம்பித்தக் குரல் அது. அடங்கும் வரையில் அயராமல் ஒலித்தது, கழகத்திற்காக. என்ன பிரதிபலன் என்று பாராமல் உழைத்தவர் அவர். கடைசி காலம் வரை கழகம் மட்டுமே உலகம் என்று வாழ்ந்து மறைந்து விட்டார்.

எட்டு வயதில் சின்னஞ்சிறு சிறுமியாகத் தான் அவர் அரசியலில் கால் எடுத்து வைத்தார். அதுவும் பாவாடை,சட்டை அணிந்த சிறுமியாக அவர் கூட்டத்திற்கு வந்தப் போது, வேடிக்கை பார்க்க வந்த சிறுமி என்று தான் நினைத்தார்கள் பார்வையாளர்கள். அவர் மேடை ஏறிய போது, எல்லோருக்கும் ஆச்சரியம் தான்.

அந்த சிறுமி உயரத்திற்கு ஒலிவாங்கி (மைக்) எட்டவில்லை. ஒரு நாற்காலி மீது ஏற்றி நிற்க வைத்தார்கள். அவ்வளவு தான், பொங்கி எழுந்த கடலாக, வெடிக்கும் எரிமலையாக உணர்வுப்பூர்வமாக பேச கொள்கை ஆரம்பித்தார். அதுவரை அப்படி ஒரு பேச்சை அங்கு யாரும் கேட்டதில்லை. மெய்மறந்து போனார்கள் மக்கள்.

சிறுமியாக பள்ளிப் படிப்பை படித்ததை விட, திராவிடத்தைப் படித்தது தான் அதிகம். மூன்றாம் வகுப்பு தான் அப்போது அவர் படித்திருப்பார். தந்தையின் வழியில் கொள்கை உணர்வு பெற்றார். அப்போது ஆரம்பித்த அவரது கொள்கை முழக்கம் 75 வயதில் மறையும் வரை ஓயவில்லை. அந்த சிறுமி தான், மறைந்த அம்மா சற்குண பாண்டியன்.

கழக கொள்கை முழக்கப் "பேச்சாளராக", மகளிரணியின் தளகர்த்தராக, சட்டமன்ற உறுப்பினராக, தமிழக அமைச்சராக, கழகத்தின் "துணைப் பொதுச் செயலாளராக" படிப்படியாக உழைப்பில் முன்னேறி வந்தவர் அம்மா. 67 வருட உழைப்பு. ஆனால் அதை வைத்து சிறிதும் சுய லாபம் பார்க்காதவர். கழக வளர்ச்சி மாத்திரமே அவர் குறிக்கோள் என்பது புலன்.

அவரை அமைச்சராக இருந்த போதும் பார்த்திருக்கிறேன், இல்லாத போதும் பார்த்திருக்கிறேன். எப்போதும் ஒரே மாதிரி தான், கழகத்தின் அடிப்படை தொண்டர் போல தான் நடந்து கொள்வார். கழகத் துணை பொது செயலாளர் என்ற முறையில் பொதுக் கூட்டங்களுக்கு வருவார். யாருக்கும் சிறு தொந்தரவு இருக்காது. அதிராத குரலில்," தம்பி, இரண்டு இட்லி மட்டும் போதும்" என்பார்.

பொதுக் கூட்ட மேடை ஏறி விட்டால், அதே குரல் வலுப் பெற்று விடும். யாருக்கும் அஞ்சாத குரலாக ஒலிக்கும். மடியில் கனமில்லா காரணத்தால், ஆட்சியாளர்களிடம் பயமில்லை. முன்னாள் அமைச்சர் என்ற பகட்டு இருக்காது. ஒரு பழைய இண்டிகா காரில், மருமகள் சிம்லாமுத்துசோழன் ஓட்ட, அம்மா சற்குணம் அமர்ந்து அண்ணா அறிவாலயம் வரும் காட்சி இன்னும்  மனதில் நிழலாடுகிறது.

அவர் வெற்றி பெற்ற தொகுதி, டாக்டர் இராதாகிருஷ்ண நகர். 1989லும், 1996லும் வெற்றி பெற்றார். 1996ல் தலைவர் கலைஞர் அமைச்சரவையில் இடம் பெற்றார். ஆனால் இந்த இரண்டு வெற்றிகளை பெறுவதற்கு முன், அந்தத் தொகுதியில் பல தோல்விகளை சந்தித்தார் அம்மா சற்குணம். அதிமுகவிற்கு சாதகமான தொகுதி அது. எளிதான வெற்றிக்காக, ஜெயலலிதாவே தேடி சென்ற தொகுதி. அதில் தான் பல முறை எதிர் நீச்சல் அடித்தார் அம்மா.

கழகத்தில் ஒரு பிளவுக்காக எதிரிகள் முயற்சித்த நேரத்தில், இவரை சாதி சொல்லி இழுக்க ஒரு பத்திரிக்கை அதிபர் முயற்ச்சித்தார். ஆனால் அம்மா சற்குணம் அசையவில்லை. "எனக்கு கழகம் தான் உயிர். கலைஞர் தான் தலைவர்", என்று அழுத்தமாக சொல்லி விட்டார். அதில் கடைசி வரை உறுதியாகவும் இருந்து விட்டார். சாதிக்கும், பணத்திற்கும் அசையவில்லை, கொள்கை தான் உயிர் என்று மெய்பித்து மறைந்து விட்டார்.

# அம்மா சற்குணம், பின்பற்ற வேண்டிய பொற்குணம் !

சனி, 6 ஆகஸ்ட், 2016

மலேசியாவில் தமிழ் பாடம்

மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில்  இருக்கும் போது வெளிநாட்டில் இருக்கும் உணர்வே ஏற்படாது. எங்கு சென்றாலும் தமிழ் முகங்கள் நீக்கமற நிறைந்திருக்கும். கடைகளில் இருக்கும் அறிவிப்புப் பலகைகளில் மலாய், ஆங்கிலத்திற்கு அடுத்தது தமிழ் இருக்கும். டாக்சி பிடித்தால் பாதி ஓட்டுனர்கள் தமிழராக இருப்பார்கள்.

கடைவீதியில் இரண்டு சீன ஹோட்டல் இருந்தால், மூன்றாவதாக அவசியம் இருப்பது தமிழ் உணவுக் கடையாக இருக்கும். தமிழர்கள் நடத்தும் ஹோட்டலுக்கு சாப்பிட சென்றால் சமைப்பவர், பரிமாறுபவர் தமிழ்நாட்டுக்காரராக இருப்பார்கள். இன்னும் ஆழ்ந்து விசாரித்தால் புதுக்கோட்டை மாவட்டமாக இருப்பார்கள். அதற்கடுத்தப் படியாக பெரம்பலூர், அரியலூர், ராமநாதபுரம் மாவட்டத்துக்காரர்கள்.

இது கோலாலம்பூரில் மாத்திரமல்ல மலேசியாவின் பாதிப் பகுதியில் இதே நிலை தான். எங்கெல்லாம் தொழிற்சாலை பகுதி இருக்கிறதோ அங்கும் தமிழ்நாட்டுக்காரர்கள் நிறைந்திருப்பார்கள். ஜொகூர், மலாக்கா, க்ளாங், பினாங், சிலாங்கூர் என எந்தப் பகுதிக்கு சென்றாலும் இதே நிலை தான்.

மலாய்க்காரர்கள், சீனர்கள், மலேசிய தமிழர்கள் என மலேசியா ஒற்றுமையாக வாழ்கிறது. இதல்லாமல் தமிழகத்து தமிழர்கள்.

மலேசியாவின் தேசிய மொழி 'மலாய்' ஆக இருந்தாலும், அதை அறியாமலே அங்கு வாழ்ந்திட முடியும். சென்னை பெரம்பூரை சேர்ந்த ராஜ் மலேசியத் தமிழராகவே மாறி விட்டார். அவரது துணைவியார் மலேசிய தமிழர். எட்டாண்டுகளாக அங்கு வாழும் ராஜிடம் "மலாய் தெரியுமா ?" என்றுக் கேட்டேன். "தெரியாது சார். ஆங்கிலம், தமிழ் ஆகியவை போதுமானதாக இருக்கிறது",என்றார்.

ஆனால் மலேசியத் தமிழர்கள் மலாய் பேசக் கூடியவர்கள். அங்கேயே பிறந்து, வளர்ந்து, படித்தவர்கள் என்பதால். அவர்கள் சரளமாக மலாய் பேசுகிறார்கள். மலாய் பேசுவது நமக்கு சற்று வேடிக்கையாகத் தான் இருக்கிறது, மூக்கால் பேசுவது போல. அதை விட வேடிக்கை மலேசிய தமிழர்கள் பேசும் தமிழ் தான்.

மேம்போக்காக கேட்டால் வித்தியாசமாக தெரியாது. தொடர்ந்து உரையாடும் போது தான் உணர்வோம். இதைச் சொன்னால்,"ஆமாவா?" என்றுக் கேட்டார் ஷான். 'அப்படியா' என்றப் பதத்திற்கு பதிலாக 'ஆமாவா' என்கிறார்கள். இரண்டு தலைமுறைக்கு முன்பாக மலேசியா சென்றவர்கள் ஷான் முன்னோர்கள். சண்முகம் செட்டியார் தான் 'ஷான்' ஆகி விட்டார் , மலாய்க்காரர்கள் அழைக்க வசதியாக. ஜொகூரில் புகழ்பெற்ற "சக்ரா ஹோட்டலின்'' உரிமையாளர்.

ஆங்கிலத்தில் 'T'  வரும் இடத்தில் நாம் 'ட' பயன் படுத்துவோம். உதாரணத்திற்கு Saturdayவை 'சட்டர் டே' என்போம். மலேசியத் தமிழர்களுக்கு அது "சத்தர் தே". டொயோட்டோ அவர்களுக்கு 'தொயொத்தோ'. பேச்சு வழக்கில் இதைக் கேட்கும் போது, சிறிது நேரமாகும் நமக்கு விளங்க. போகப் போகத் தான் பழகும்.

நான் சரா என்கிற சரவணன் இடம் கேட்டேன். "பள்ளிக் கூடத்துல உங்களுக்கு  தமிழ் பாடம் உண்டா? ?" என்றுக் கேட்டேன். சரா, மலேசிய தமிழ் இளைஞர். ஒரு வகையில் உறவினர். அவரது காடி தான் எங்களுக்கு மலேசியாவை சுற்றிக் காட்டியது. வாகனத்திற்கு மலேசிய தமிழ் தான் 'காடி'. அவர் தான் எங்கள் சாரதி. அங்கு ஓட்டுனர் எல்லாம் தனியாகக் கிடையாது. அவர்கள் வாகனத்தை அவர்களே ஓட்டுகிறார்கள்.

"" என்ன பாஸ் இப்புடி . ஆறாவது வரை தமிழ் உண்டுல்ல" என்றார் சரா. "உங்க தமிழ்ல 'ட' உண்டா, இல்லியா? இங்கிலீஷ் Tய இப்படி உச்சரிக்கிறீங்களே ?", என்றுக் கேட்டேன். வாய் விட்டு சிரித்தார். சிரிக்கும் போது, சாலையில் லேன் பிரிக்கும் கோட்டைத் தாண்டினார். உடன் இருந்த செல்வம் கேட்டார்,"இந்த லேன்ல போலாமா?". "இது டக்ஸி, பஸ் போறது தான். சும்மா போவோமே"என்றார் சரா. அது கோலாலம்பூரின் மையப் பகுதியான ப்ரிக்பீல்ட்.

"சட்டம், கட்டம். இத சொல்லு சரா. ட அப்ப தான் 'ட' ஒழுங்கா வரும்" என்றேன். எங்கள் காடி ஒரு திருப்பத்தை கடந்தது. அந்த இடத்தில்  போலீஸ்காரர்கள் நின்று காடியை மறித்தார்கள். அபராதம் விதிப்பதாக கடுமைக் காட்டினார் போலீஸ்காரர். சிறிது நேரம் போக்குக் காட்டிய போலீஸ்காரர் அய்ம்பது வெள்ளியை கையூட்டாகப் பெற்றுக் கொண்டு அனுப்பி வைத்தார்.

"பாஸ் பாடம் நடத்துறன்னு சட்டத்துக்கிட்ட மாட்டி விட்டுட்டீங்களே?" என்றார் சரா. " நீ கட்டம் தாண்டியதால் தான் சட்டம் பாய்ந்தது" என்றேன். "பாஸ், இது தான் ஆகப் பெரியப் பாடம்" என்று ஓங்கி சிரித்தார். 'ட'வை இப்போது மிகச் சரியாகவே உச்சரித்தார்.

("அந்திமழை" ஆகஸ்ட் மாத இதழில் எனது பத்தி)